தொண்ணூறுகள் காதல் படங்களில் காலம். முன்னரும் பின்னருமான காலப்பகுதியிலும் காதல் படங்கள வந்தனதான். ஆனால் தொண்ணூறுகளில் காதலை மட்டுமே மையப்படுத்தி, தலைப்பிலிருந்து எண்ட் கார்ட் வரை காதல் காதல் என்று இயக்குனர்கள் உருகினார்கள். எல்லாமே காதல் கோட்டை என்ற ஒரு படம் செய்த அநியாயம். நமக்குவேறு பதின்ம வயதா; சுவலட்சுமி, தேவயாணி, கௌசல்யா என்று வரிசையாக சேலையிலேயே கவுத்தார்கள். பிறகு சிம்ரன் பாஸ்கட் போல் விளையாடிக் கவுத்தார். ரம்பா மின் விசிறிக்கு முன்னாலே நின்றால், கீர்த்தியின் வாயிலிருந்த இலையான்கூட காத்துக்கும் பறக்காமல் ஆவெண்டு பார்க்கும். எல்லாமே காதல் படங்கள் என்பதால், இசையிலும் நிறைய காதல் இருந்தது. தேவாவின் பொற்காலம் அது. அப்போது ராஜா, ரகுமான், வித்யாசாகர் போன்ற இசையமைப்பாளர்கள் போட்ட மெலடிகளின் எண்ணிக்கையை விட தேவா அதிகமாகவே மெலடிப்பாடல்களை தந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. அதுவும் மரண மொக்கைப்படங்களுக்கெல்லாம் அருமையான பாடல்களை கொடுத்திருப்பார். அதற்காகவே சந்திரன் மாஸ்டரிடம் போய்த்தவம் கிடந்த காலங்கள் ஞாபகம் வருகின்றன. இனியவளே என்று ஒரு படம். பாடல்கள் அத்தனையும் செம. அன்பே டயானா ...