நீர் திரண்டன்ன கோதை பிறக்கிட்டு
ஆய்கோல் அவிர்தொடி விளங்க வீசிப்
போதவிழ் புதுமலர் தெருவுடன் கமழ
மேதகு தகைய மிகுநல மெய்தி
-- மாங்குடி மருதனார், (மதுரைக் காஞ்சி)
பரத்தைப்பெண் ஒருத்தி தெருவிலே தன்னை மிகையாக அலங்கரித்து விண்ணை எட்டும் நறுமணம் தவழ நடந்தாளாம். இந்த சுதந்திரம் சமூகம் அவளுக்குத்தந்த உரிமையாக நினைத்து வளையல்கள் ஒலிக்க கைகள் வீசியபடி நடந்தாளாம். “மேதகு தகைய மிகுநல மெய்தி” க்கு, முன்னர் பலரோடு புணர்ந்ததால் கலைந்த ஒப்பனை கொடுக்கும் அழகு அவளுக்கு மேலும் நீடித்த பெருமை சேர்க்கிறது என்று நச்சினார்க்கினியர் விளக்கம் கொடுக்கிறார். அதில் ஒரு உள்ளார்த்தமும் இருக்கிறது. பாவம், தலைவனின் இன்பத்துக்காகத்தான் அவள் இப்படி அலங்கரிக்கிறாள், அதனாலேயே அவளுக்கு இந்த சுதந்திரம் என்பதைக்கூட அறியாமல் அதனை ஒரு பெருமையாக கருதுகிறாளே இந்தப்பேதை.
***************
ஒன்பது மணி. இது ராமச்சந்திரன் வரும் நேரம்.
டிரெஸ்ஸிங் டேபிளுக்கு முன்னால் அமர்ந்திருந்தபடி அனகாதேவி தன்னையே பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள். ஈரத்தலை சொட்டுகள் சோட்டியெல்லாம் கசிந்திருந்தது. ஒற்றை நரை கூட அற்ற முடி. கண்களுக்கு கீழேயோ, கன்னத்திலோ சுருக்கம் இல்லை. மடிப்பு இல்லை. நாடிக்கு கீழே சதை போடவில்லை.எழுந்து நின்று தன்னையே சுற்றி சுற்றி ரசித்தாள். பரவாயில்லை இன்னமும் அழகாகவே இருக்கிறேன் என்று கூடவே சிரிப்பும் வந்தது. அவளைப்பார்த்த எவரும் அவளுக்கு இன்னமும் இரண்டு வருடங்களில் ஐம்பது வயதாகும் என்று சொல்லிவிடமாட்டார்கள். பின்னே இந்த அழகுக்காகத்தானே அந்த சின்னப்பயல் சுற்றி சுற்றி வருகிறான். வரட்டும் வாத்தியார்.
***************
பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழு முகை
வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு
இருப்பின், இரு மருங்கினமே; கிடப்பின்,
வில்லக விரலின் பொருந்தி; அவன்
நல் அகம் சேரின், ஒரு மருங்கினமே.- வில்லகவிரலினார் (குறுந்தொகை)
காதற்பரத்தையின் கூற்று இது. வழமைபோலவே நாட்டுச்சிறப்புடன் தொடங்கும் பாடல். அவள் தலைவனின் ஊரில் உள்ள குளத்தில் அதிகாலையில் ஆம்பல் மொட்டுக்கள் அரும்பிக்கிடக்குமாம். வண்டுகள் வந்து உட்கார்ந்து அந்த மொட்டுகளின் வாயைத் திறக்குமாம். அத்தகைய ஊரிலிருந்து வந்த தலைவன் அந்த வண்டுகளைப்போலவே என்னருகில் வந்து உட்கார்ந்தால் ஈருயிர் ஈருடலாவோம். ஆனால் நாங்கள் கட்டிலில் கலந்தாலோ ஈருயிர் ஓருடலாவோம். அவனுக்கும் எனக்குமான கட்டில் நெருக்கும் சிறந்த வீரனுடைய விரல்கள் வில்லை பிடித்திருக்கும் இறுக்கத்துக்கு சமானம். அவன் நாணேற்ற நாணேற்ற, பிடிமானம் மேலும் மேலும் இறுக்கும். ஒரு கட்டத்தில் நாணின் இறுக்கம் தாங்காமல் அந்த வில் படீரென்று உடையும். அதேபோல நானும் தலைவனும் ….
***************
வாசலில் ராமச்சந்திரனின் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது.
அனகாதேவி முற்றத்து லைட்டை அணைத்துவிட்டு வீட்டுக்கதவை திறந்தாள். ஸ்கூட்டரை நிறுத்தியபடியே ராமச்சந்திரன் முப்பத்திரண்டு பற்களையும், கூடவே கொண்டுவந்த மல்லிகை சரத்தையும் காட்டிச்சிரித்தான். வாசலில் வைத்தே அவளை அணைக்க முயன்றான். முன்வீட்டு மூடிய யன்னலுக்குள்ளால் வந்துகொண்டிருந்த வெளிச்சம் அதிகமானது. யாரோ பார்க்கிறார்கள். பார்க்கட்டும். அவனுடைய உதடுகள் தன்னுடையதை நெருங்கும்வரை பொறுமைகாத்து பின்னர் சடாலென்று அவனை விலத்தினாள் அனகாதேவி.
“ஐபாட் வாங்கியோண்டு கொண்டுவந்தியா?”
“உங்களுக்காக ஒண்டு சொல்லி வச்சிருக்கிறன் … நாளைக்குத்தான் ஸ்டொக் வருமெண்டிருக்கிறாங்கள்”
ராமச்சந்திரன் இருமருங்கும் இருக்கும் சமயத்தில் அனகாதேவியை ஒருமையில் அழைக்கமாட்டான். மரியாதை. ஒருமருங்கின் சேர்ந்தாலோ வெறும் “ஓ அனா”.
“அப்ப இண்டைக்கு ஏன் வந்தனி … நாளைக்கே வந்திருக்கவேண்டியதுதானே …”
அனகாதேவி அலட்சியமாக திரும்பி வீட்டுக்குள் செல்ல, அவள் பின்னே குட்டி போட்ட பூனையாக தொடரும் ராமச்சந்திரனுக்கு அவளை விட பத்து வயது குறைவு. திருமணமாகி, இரண்டு வயதில் பெண் குழந்தையும் இருக்கிறது. கெமிஸ்ட்ரி வாத்தி. பகல் முழுதும் ஸ்கூட்டரில் அலையோ அலையென்று அலைந்து டியூஷன் கொடுத்துவிட்டு, இரவு எட்டு மணிக்கு அனகாதேவியிடம் வந்துவிடுவான். பத்து பதினொன்று, எப்போதாவது அனகாதேவியோடு சண்டை என்றால் ஒன்பது மணி என அவன் ஸ்பெஷல் கிளாஸ் முடிந்து தன் வீட்டுக்கு வரும்வரைக்கும் அவன் மனைவி ஜானகி தூங்காமல் காத்திருப்பாள். வெள்ளிக்கிழமை கோயிலுக்குப்போகலாம் என்று சொல்லிவிட்டு போனவன் கோயில் சாத்தியபின்னும் வீடு வரவில்லையே என்று வெம்முவாள். பேசாமல் அனகாதேவி வீட்டுக்குச்சென்று அவளை நாலு சாத்து சாத்திவிட்டு அவனை இழுத்து வருவோமா என்றும் யோசிப்பாள். அவளை நொந்து என்ன பயன். இவனுக்கு மதி இல்லையே. இளம் மனைவி நானிருக்க அந்த கிழத்தியுடன் போனானே. பொருமுவாள். சமயத்தில் பொறாமையும் வரும். கோபம், இயலாமை எல்லாமே கூட வரும்.
***************
வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு
பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி,
மடக் கண் எருமை மாண் நாகு தழீஇ,
படப்பை நண்ணி, பழனத்து அல்கும்கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடுந் தேர்,
ஒள் இழை மகளிர் சேரி, பல் நாள்
இயங்கல் ஆனாதுஆயின்; வயங்கிழை
யார்கொல் அளியள்தானே எம் போல்மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி,
வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரின்
கண்பனி ஆகத்து உறைப்ப, கண் பசந்து,
ஆயமும் அயலும் மருள,
தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டாதோளே?- உவர்க் கண்ணூர்ப் புல்லங்கீரனார் (அகநானூறு)
வலிமையான ஆண் எருமை பகலெல்லாம் சேற்றிலே உழன்று, பின் மென்மையான பெண் எருமையோடு தோட்டத்தில் விளையாடி, வயற்புறமாக கலவிக்கு ஒதுங்குவது போல என் தலைவனின் தேரும்(ஸ்கூட்டர்!) ஒலி எழுப்பியவாறு மகளிர் சேரிப்பக்கம் பழுதாகி ஒதுங்கியிருக்கிறதாமே. போவோமா? எனக்கென்ன குறை? தலைவி. மெல்லிடையாள். அழகி. என்ன குறை? ஆனால் அவனோ பரத்தன் ஆயிற்றே. அதுவும் மாயப்பரத்தன். ஏமாற்றிவிடுவான். படுபாவி.
தலைவனிடம் போவோமா? விடுவோமா? என்று காற்றில் ஆடி மழையில் நனையும் புதுமலர் போல தலைவியின் மனமும் அலை பாயுமாம். அவன் அணைக்காமல் அவள் மார்புகள் குளிர்ந்துபோய்க்கிடக்க, அவனை நினைத்து ஏங்கி ஏங்கி அழுததில் அவளுடைய சூடான கண்ணீர் அந்த குளிர்ந்த மார்புகளில் வீழ்ந்து உறைந்து போயிற்றாம். ஆனால் தலைவி வீட்டிலேயே இருப்பாள். அது அவள் தாய் வளர்ப்பு!
சங்கத்தமிழ் இலக்கியத்தில் பரத்தமை பெண்களுக்கு மாத்திரமே உரித்தான வார்த்தை அல்ல. ஆண்களுக்கும் அதனை பயன்படுத்தியிருக்கிறார்கள். பல பெண்களை அடைபவனை பரத்தன் என்று நேரடியாகவே அகநானூறு சொல்கிறது. பரத்தனாக பல பெண்களை நாடியபின் தன்னிடம் வருகின்ற தலைவனிடம் ஊடல் கொள்ளும் தலைவியின் மருதப்பாடல்கள் சங்கம் முழுதும் விரவிக்கிடக்கின்றன. பொய்கையில் இருந்தால் எருமைக்கடா தன்னை மேய்ந்துவிடும் என்று எண்ணி ஆம்பல் கொடி வயலில் உள்ள நெல்கதிரை பற்றிக்கொள்ளுமாம், அதுபோல பரத்தனிடம் இருந்து தன்னைக்காப்பாற்ற தலைவனை பற்றிக்கொள்கிறாள் தலைவி என்று ஐங்குறுநூறு பாடல் இருக்கிறது.
பின்னாளில் வள்ளுவரும் ஊடலுக்கு பரத்தனை பயன்படுத்துகிறார். அவருடைய தர்மத்தில் தலைவன் பரத்தையரிடம் போவதே தவறு. பொருட்பாலில் “வரைவின் மகளிர்” என்று ஒரு அதிகாரமே செய்து பரத்தையர் சகவாசத்தை கடிந்து எழுதியவர் வள்ளுவர். பின்னர் அதனையே வைத்து காமத்துப்பாலில் ஊடல் செய்தால், பொருட்பால் சொல்லிய அறத்தை காமத்துப்பால் மீறியதாகிவிடுமே. ஆனாலும் ஊடல் இல்லாமல் என்ன காதல்? என்ன காமம்? எப்படி இதனை சமாளிக்கலாம்? வள்ளுவரின் உச்சபட்ச படைப்பாற்றல் இங்கே வெளிப்படுகிறது.
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் – பொது உண்பர்
நண்ணேன் பரத்தனின் மார்புமாலையில் வீடு வரும் தலைவனோடு தலைவி ஊடல் கொள்ளவேண்டும். தலைவனோ எந்தக்குறையும் இல்லாதவன். நேர்மையானவன். இவனோடு என்னத்தை சொல்லி தலைவி சண்டை போடுவாள்?
வயலில் வேலை செய்துவிட்டு, வரும் வழியில் அப்படியே குளத்தில் குளித்துவிட்டு வெற்றுமேலோடு தலைவன் வீதி வழி வருகிறான். அவன் தூரத்தே வரும்போதே வீட்டு வாசலில் நின்ற தலைவி அவனைக் கண்டுவிடுகிறாள். அப்போதுதான் தலைவிக்கு அந்த யோசனை வருகிறது. “அடேய் தலைவா, நீ வீதி வழியே நடந்து வருகையில் அத்தனை பெண்களின் கண்களும் உன் மார்புமீது படர்ந்திருக்குமே. அத்தனை கண்களும் உன் மார்பினை தழுவி உண்டு தீர்த்திருக்குமே. அதனால் உன்னுடைய மார்பும் ஒரு பரத்தனின் மார்புதானே. அதை எப்படி நான் தழுவுவேன், போடா” என்று ஊடலுக்கு நொண்டிச்சாக்கு தேடுகிறாள் தலைவி.
சமயத்தில் நம் இலக்கியங்கள் சொல்லும் பரத்தை வெறும் புனைவோ என்றும் எண்ணத்தோன்றுகின்றது. ஊடலுக்கு பரத்தையையும், விறலியாரையும் பாணரையும் தோழியரையும் தலைவனும் தலைவியுமே தேடியிருப்பர். பரத்தமையை அகத்திணையாக சங்க இலக்கியங்கள் பயன்படுத்தியமைக்கு உள்ளார்த்த காரணம் அறியும்போது நம் இலக்கியங்கள் மீதான ஆச்சரியமும் மதிப்பும் மேலும் விரிகிறது.
***************
அனகாதேவியினுடையது ஒரு பழைய நாச்சார் வீடு. நடுக்கூடத்தில் ராமச்சந்திரன் சாய்மனைக்கதிரை போட்டு அமர்ந்திருக்கிறான். நாச்சார் முற்றத்தின் வலைக்கம்பி கூரைக்கு மேலே நிலவு. ரேடியோவில் “இரவின் மடியில்”. உதயன் வாசித்துக்கொண்டிருந்த ராமச்சந்திரன் குசினிப்பக்கம் சத்தம் வரவே பேப்பரை விலத்தி திரும்பிப்பார்க்கிறான். அனகாதேவி. கையில் மூக்குப்பேணியில் ப்ளேன்ரீ. டிபிக்கல் யாழ்ப்பாணத்து சோட்டி அணிந்து ஈரத்தலையில் கூந்தலோடு துவாயை பின்னலாக பின்னித் தழைய விட்டு தேவதையாக நடந்துவந்தாள். வேண்டுமென்றோ என்னவோ தெரியாது சோட்டி இடுப்பில் சின்னதாக லேஸ் இழுத்துக்கட்டியிருந்ததில் இடை சுருங்கி ஆதியும் அந்தமும் மேலும் மேலும் அகன்று, இவளுக்கா நாற்பத்தெட்டு வயது?
ராமச்சந்திரன் மீண்டுமொருமுறை வாயடைத்து நின்றான்.
***************
கம்பராமாயணம்.
கோதாவரிக்கரையில் ராமனைக் கண்டு காமுற்ற சூர்ப்பனகை அவனை மயக்கவென அழகித்தோற்றம் பூண்டு வருகிறாள். அவள் வரும் அழகைக்கண்டு இராமனே ஒரு கணம் மயங்கிப்போவானாம். அவள் அழகிய மார்புகளின் பாரத்தால் இடை துவள வருவதை இராமன் பார்த்து ரசிப்பதை கம்பனே பொறுக்கமாட்டாமல் இராமனுக்கு அடுத்த வரியில் ஒரு செக் வைப்பான்.
எண் அருளி, ஏழைமை துடைத்து,
எழு மெய்ஞ்ஞானக்
கண் அருள்செய் கண்ணன்
இரு கண்ணின் எதிர் கண்டான்.உள்ளத்தே அருள் கொண்டு அடியவர்களின் அறியாமை என்னும் ஏழ்மையை அகற்றும் மெய்ஞானக் கண் கொண்டு இராமன் சூர்ப்பனகையை பார்த்தான் என்பார் கம்பர். உயர்வு நவிற்சி. கம்பன் ஒரு வம்பன் என்று சும்மாவா சொல்வார்கள். இப்படி இராமனே மயங்கும் வண்ணம் சூர்ப்பனகையிடம் என்னதான் இருக்கிறது? அவள் வரும் அழகை கம்பன் வருணிக்கும் பாடல் இது.
பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடியள் ஆகி
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்செம்பஞ்சும் செவ்வனே வளர்ந்து செழித்த தளிர்களும் பொறாமைப்படும் அளவுக்கு மெல்லிய சிறிய பாதங்களைக்கொண்ட பெண், இனிமையான சொல்லுடைய மயிலையும், அழகிய நடையுடைய அன்னத்தையும் போன்று முன்னே வந்தாள். வஞ்சிக்கொடிபோல துவண்ட நிலையில் வந்தாள். நஞ்சுபோல வஞ்சம் செய்து ராமனை வீழ்த்த அவள் வந்தாள்.
கம்பனின் இன்னொரு வம்பும் இங்கே இருக்கிறது. மயிலின் அழகு அதன் தோகையும் விரித்தாடும் நடனமும்தான். ஆனால் கம்பன் மயிலின் நடையை இங்கே சூர்ப்பனகைக்கு உவமானப்படுத்துகிறான். அன்னத்தின் பெருமை அதன் நடையே. ஆனால் இவனோ அதன் அழகை உவமானப்படுத்துகிறான். தவறான உவமானங்கள். கடைசியில் வஞ்சி என்று கொடியோடு ஒப்பிட்டாலும் அது வஞ்சத்தையே குறிக்கிறது. இந்தப்பாடல்கள் கம்பனின் உயர்வு நவிற்சிகளின் உச்சம்.
***************
அனகாதேவி கொடுத்த பிளேன்ரீயை ஒரு மிடறு குடித்துவிட்டு, மூக்குப்பேணியை ராமச்சந்திரன் கீழே வைத்தான். அனகாதேவி அவன் மடியில் உட்கார்ந்தாள். பேசவில்லை. சாய்மனைக்கதிரை இருவரின் பாரத்தாலும் சத்தம் போட்டது. ராமச்சந்திரன் கைக்கடிகாரத்தை ஒருமுறை பார்த்தான். நேரம் போகிறது. அவனே பேச்சைத்தொடங்கினான். வரவேற்பரையில் வயதுக்கு இன்னமும் மரியாதை இருந்தது.
“என்ன பேசாமல் இருக்கிறீங்கள்?”
“….”
“அனா…”
“ம்..”
“வந்ததிலயிருந்து எதுவுமே சரியா பேசேல்ல நீங்கள்”
“நான் பேசுறதென்றால் உண்ட மனிசி என்னைப்பற்றி கண்டபாட்டுக்கு பேசிறத நிப்பாட்டு”
“என்ன சொன்னவள் அவள்?”
“நமசிவாயம் வாத்திண்ட மனிசிக்கு என்னைப்பத்தி இல்லாததும் பொல்லாததும் வத்தி வச்சு இப்ப அந்த மனிசி என்ன வீட்டை விட்டு எழும்பச்சொல்லுது”
"வீட்டை விட்டு எழும்பச்சொல்லீட்டினமோ.. கடவுளே இனி வீடு எங்க பாக்கிறது?”
“என்னை அப்பிடி ஈஸியா எழுப்ப ஏலுமே … நமசிவாயத்திண்ட வண்டவாளத்தை வெளிய விட்டன் எண்டால் அவர்ட மனிசி தலையைக் காட்டேலாது”
ராமச்சந்திரன் பேசாமல் அமர்ந்திருந்தான். அனகாதேவி அவன் தலையை கோதிவிட்டாள்.
“ஆனாலும் உண்ட மனிசி ஓவரா ஆடுறா .. அடக்கி வை .. நானே அவளிண்ட புருஷனை இஞ்ச கட்டி வச்சிருக்கிறன்?”
ராமச்சந்திரனின் கை மெதுவாக அனகாதேவியின் முதுகை அளைந்துகொண்டிருந்தது. அவனுக்கு சண்டை பிடிக்க நேரமில்லை. முன்னேறவேண்டும்.
“என்ர மனிசி ஒரு லூசு”
அவள் தொடர்ந்து புறுபுறுத்தபடியிருந்தாள்.
“பேய்க்கதை கதைக்ககூடாது. சும்மா இருந்தவளிட்ட தேடி வந்தது அவளிண்ட புருஷன்தான். இப்ப ஏனோ நான்தான் மடக்கி வச்சிருக்கிறன் மாதிரி … ஏன் வந்து உன்ன ஏலுமெண்டா இழுத்துக்கொண்டு போகட்டும் பார்ப்பம்”
ராமச்சந்திரன் ஒன்றுமே பேசவில்லை. சுவர் மணிக்கூட்டைப் பார்த்தான். கைகள் அவசரப்பட்டன.
***************
அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய்
வாளை நாளிரை பெறூஉ மூரன்
பொற்கோ லவிர்தொடித் தற்கெழு தகுவி
எற்புறங் கூறு மென்ப தெற்றென
வணங்கிறைப் பணைத்தோ ளெல்வளை மகளிர்
துணங்கை நாளும் வந்தன வவ்வரைக்
கண்பொர மற்றதன் கண்ணவர்
மணங்கொளற் கிவரும் மள்ளர் போரே.
- ஔவையார் (குறுந்தொகை)
நீரில் வாழும் நாயானது வாளை மீனை இரையாகப் பெறுகின்ற ஊரைச்சேர்ந்த தலைவன், தனக்குத்தகுதியானவளாக வைத்திருக்கும் பொன் வளையல்களை அணிந்த அந்தப்பெண், என்னைப்பற்றி அவதூறு சொல்லுகிறாள். திருவிழாவிலே ஒருபுறம் பெண்கள் துணங்கைக் கூத்து ஆடுகையில் மறுபுறம் ஆண்கள் மல்யுத்தம் புரிந்துகொண்டிருந்தார்கள். அந்த சந்தடி சாக்கில் அவள் தலைவன் என்னை கண்ணோடு கண் பார்த்து காதல் கொண்டான். இது அவளுக்குத்தெரியுமா?
பரத்தை தன் தோழிக்கு சொல்லும் பாடல் இது. பாடலை எழுதியது ஔவையார். நம் இலக்கியங்களில் மூன்று நான்கு ஒளவையார்கள் இருந்திருக்கிறார்கள். ஒருவர் சிறுவர் இலக்கியம் படைத்திருக்கிறார். இன்னொருவர் கம்பரோடும் ஓட்டக்கூத்தரோடும் மல்லுக்கட்டியிருக்கிறார். ஈழத்திலும் ஒரு ஔவையார் இருக்கிறார். சங்ககாலத்து ஔவையார் பெரும்பாலும் ஊடல் பாடல்களில் விளையாடியிருக்கிறார். அதுவும் பரத்தைக்கூற்றுகளில் அடி பின்னும்.
முதலில் தவறு தன்னது இல்லை, தலைவன் தானாகவே என்னைத்தேடி வந்தவன் என்று சொல்லும் பரத்தை, கொஞ்சம் செல்ல தலைவி மீது கோபம் கொள்கிறாள். தில் இருந்தா நீ அவனை என்னட்டயிருந்து பிரிச்சுக்கொண்டு போ பார்ப்போம் என்று பரத்தை சவாலும் விடுகிறாள்.
- கூந்தல் ஆம்பல் முழு நெறி அடைச்சிப்
பெரும் புனல் வந்த இரு துறை விரும்பி
யாம் அஃது அயர்கம் சேறும் தான் அஃது
அஞ்சுவது உடையள் ஆயின் வெம் போர்
நுகம் படக் கடக்கும் பல்வேல் எழினி
முனை ஆன் பெரு நிரை போலக்
கிளையொடுங் காக்கதற் கொழுநன் மார்பே.
- ஔவையார் (குறுந்தொகை)- கூந்தல் போல ஆம்பல் கொடி பரந்து வளர்ந்திருக்கும் ஆற்றில் பெரு வெள்ளம் வருகிறது. அங்கு நானும் தலைவனும் நீராடப்போகிறோம். தலைவி உனக்கு தைரியம் இருந்தால் உன் கணவனை என்னோடு கூட வராமல் நிறுத்து பார்க்கலாம். ஊரைக் கூட்டியேனும் முயன்றுபார். அதியமானின் மகன் எழினி எப்படி போரில் கவர்ந்துவந்த பசுக்களை காப்பாற்றினானோ அப்படி காப்பாற்ற முயற்சி செய்யேன். உன்னை யார் வேண்டாமென்றது?
***************
ராமச்சந்திரனுக்கு வந்தவேலை முடிந்துவிட்டது.
கட்டிலில் கிடந்து, கால் மேல் கால் போட்டு, விட்டத்தைப் பார்த்தபடி சிகரட் பிடித்துக்கொண்டிருந்தான். பக்கத்தில் அனகாதேவி. ஒருக்களித்து சுருங்கிப்போய் அறை வாசலைப் பார்த்தபடி படுத்திருந்தாள். இருவரும் பேசவில்லை. அறைக்கதவு சாதுவாக திறந்து, வெளிச்சம் உள்ளே கீற்றாக படர்ந்திருந்தது. அவள் அந்த வெளிச்சத்தையே வெறித்துப்பார்த்தபடி இருந்தாள். வெளியே சாய்மனைக் கதிரை வெறுமையாக; சில நிமிடங்களுக்கு முன்னர்தான் அந்தக் கதிரையில் ராமச்சந்திரன் மடியில் அமர்ந்திருந்து பேசியது ஞாபகம் வந்தது. பத்து நிமிடத்தில் போய் விடுவான். கதவில் கழட்டிப்போட்ட சேர்ட் தொங்கியது. கட்டம் போட்ட சேர்ட். பொக்கட்டில் அவன் பர்ஸ் வெளியே எட்டிப்பார்த்தது. அந்தப்பர்சுக்குள் அவன் மனைவி படம் இருக்கும். குழந்தை படம் இருக்கும். அவள் படம் இருக்காது. போனில் நம்பர்கூட சேவ் பண்ணியிருக்கமாட்டான். போகும்போது பர்சிலிருந்து இரண்டாயிரம் ரூபாய் எடுத்து செலவுக்கென்று தருவான். வீடு போய் மனைவியை செல்லம் கொண்டாடுவான்.
அனகாதேவிக்கு தன்மீதே கழிவிரக்கம் தோன்றியது. அடிவயிறு எரிந்தது. ஏனிந்த இழவு வாழ்க்கையை நான் வாழவேண்டும்? சன்னமாக அழத்தொடங்கினாள். ராமச்சந்திரன் அடுத்த சிகரட்டை பற்றவைத்தான். அவசர அவசரமாக பாத்ரூம் சென்று, உடுப்பை போட்டு, இவள் தலையணைக்கடியில் சில நோட்டுகளை திணித்துவிட்டு வேகமாக வெளியேறினான்.
“போயிட்டு வாறன்”
அனகாதேவியின் அழுகை ஒலி அதிகமாக, ஸ்கூட்டர் சத்தம் குறையத்தொடங்கியது.
*************************
-
ஒரே தொழில்
--------------------------
குழைந்த இருட்டு
குதப்பித் துப்பிய வெட்கங்களைத்
தேடத் தொடங்கினாள்
கழற்றி எறிந்த சட்டையுடன்
ஒட்டியபடி கிடந்தது மனது
கட்டில் சட்டத்தில் தொங்கவிட்ட
உணர்ச்சிகள் வரிசைப்பட்டன
மல்லிகைகளால் இவனால்
முழமிடப்பட்டிருந்த முத்தங்கள்
இன்னும் மீதமிருந்தன
கனகாம்பரத்துக்காக அங்கே
அவனால் அளக்கப்படும்
யாருக்குத் தெரியும்
நாளை முத்தச் சுரப்புகள்
சேலையுடன் உரியப்படலாம்
அவளின் உதட்டுச் சாயம் அழித்து
பூவிதழ் தட்டியவனின்
சட்டையின் கட்டங்களிலிருந்து
எம்பிக்கொண்டிருந்தாள்
அவன் மனைவி
அவளின் சாளரத் தாழ்
கயிற்றினால் கட்டப்பட்டிருந்தது
தலையணை தடவி
தாள்கள் எண்ணியவளின்
தேயாத சுவடுகள்
தெருவில் பதிந்தன
அடையாள வேட்கை
அவளை மட்டும் வேசியாக்கியது
விடுதலையாகிய மனைவியுடன்
அதே தொழிலிருந்த
அவனைச் சுட்ட
வார்த்தைகள் தேடுவதை விடுத்து
புணர்தலின் அவசரத்தில்
நிர்வாணப்பட்டிருந்தது
இந்த சமூகம்
-- மயூ மனோ
“நாம் பேசிக்கொண்டிருந்தபோது பெய்திராத மழை” என்கின்ற கவிதைத்தொகுப்பில் கிடைத்த வைரம். மயூ மனோ எழுதியது. மயூ மனோவின் கவிதைகளில் நிறைய தனிமை இருக்கும். கழிவிரக்கம், விரக்தி இருக்கும். ஆங்கிலத்தில் சில்வியா பிளாத் இந்தவகை கவிதைகள் எழுதுவதில் தேர்ந்தவர். தனித்திருக்கும் ஒருவன் எப்போதுமே மௌனமாக இருப்பதில்லை. மூளாத் தீப்போல் உள்ளே கனன்று கொண்டிருப்பான். தனிமையும் ஒரு போதையே. நல்ல தமிழில் அது மோனநிலை. கவிதையில் பலர் அனுபவங்களை படிமம் ஆக்குவர். மயூ மனோ படிமங்களை அனுபவமாக்குகிறார். அதனை சாதாரண மனநிலையில் பிறிதொருவரால் புரிந்துகொள்வது முடியாதது. தவறியும் புரிந்துவிட்டால் நம் வீட்டு முற்றத்திலும் நிலா தெரியும். தெரிந்தது. அதுவே வாசிப்பினதும் எழுத்தினதும் வெற்றி.
மயூ மனோவின் இந்தக் கவிதையில் வரும், பரத்தைப்பெண் தலைவியிடம் பேசுகின்ற பரணர் பாடல் ஒன்று சங்க இலக்கியம் கொடுக்கும் சாட்டைகளில் ஒன்று.
யாந்தன் பகையேம் அல்லேம் சேர்ந்தோர்
திருநுதல் பசப்ப நீங்கும்
கொழுநனுஞ் சாலுந்தன் உடனுறை பகையே.
என்னை ஏன் உன்னுடைய பகையாக நினைத்து வைகிறாய்? உன்னையும் ஏமாற்றி என்னையும் ஏமாற்றும் இந்தப் பரத்தனே நம்முடைய பகை. அதை நீ அறிவாயாக என்கிறாள்.
*******************
நேரம் பத்தரை. ராமச்சந்திரனின் ஸ்கூட்டர் சத்தம் தூரத்தே கேட்கவே ஜானகியின் தூக்கம் கலைந்தது. எட்டிப்பார்த்தாள். திருட்டுப் பூனையாட்டம் ராமச்சந்திரன் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு உள்ளே வந்துகொண்டிருந்தான். அவள் அசையாமல் அப்படியே இருந்தாள். கையில் ஏதோ பார்சல். சந்திக்கடை மிக்சரோ, இனிப்போ ஏதாவது வாங்கிக்கொண்டு வந்திருப்பான். கொஞ்சுவான். உலகின் மொத்த ஆண்களுடைய பாசமும் ஒன்றாக சேரும் நேரம் இதுதான். ஜானகிக்கு அவன் வந்த நிலையைப்பார்த்தே கோபம் பொத்துக்கொண்டு வந்தது. சேர்டு மடிப்பு கலைந்து, தலை வாராமல், பெல்ட்டு பக்கிள் நகர்ந்து, படுபாவி வேண்டுமென்றே இவனை இப்படி அனுப்பியிருப்பாள்.
**********************
-
பகன்றை வான் மலர் மிடைந்த கோட்டை
கரும் தாள் எருமை கன்று வெரூஉம்
பொய்கை ஊரன் மகள் இவள்
பொய்கை பூவினும் நறும் தண்ணியளே.
- ஓரம்போகியார், எருமைப்பத்துஎருமை பொய்கையில் நீராடிவிட்டு வருகையில் அதன் கொம்பில் அந்த பொய்கையில் மலரும் வெள்ளை நிற பகன்றைப் பூக்கொடி சிக்கி இழுபடுமாம். அதைக்கண்டு எருமைக்குட்டி வெருண்டு ஓடுமாம். அந்த பொய்கை உள்ள ஊரைச்சேர்ந்த இத்தலைவி தலைவனின் பிரிவால், நீரில் மலரும் பூக்கள் எப்படி சில நாட்களிலேயே வாடுமோ அப்படி வாடுகிறாள்.
ஐங்குறுநூறு. இதில் மருதத்திணை முழுவதுமே ஓரம்போகியாரால் எழுதப்பட்டது.மருதம் என்றாலே அது ஊடல்தான். அதில் இவரது நூறு பாடல்களுக்கு மேலே. இவர் ஒருவரா பலரா என்பது ஆய்வுக்குரியது. ஓரம்போகியார் ஊடலுக்கு பொதுவாக பயன்படுத்துவது தலைவனின் பரத்தமையை. “ஓரம் போதல் என்றாலே பரத்தையர் பக்கம் ஒதுங்குதல் என்று அர்த்தம். “ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது” என்பதில் யார் ருக்குமணி என்பதற்கும் கொஞ்சம் விடை வெளிக்கிறது. பின்னாளில் பயன்படுத்தப்பட்ட சோரம் போதல் என்ற சொற்பதத்துக்கும் மூலம் இதுவாகவே இருக்கலாம்.
ஓரம்போகியாரின் உவமானங்கள் பல நாமெல்லாம் சிந்திக்கவேமுடியாத லெவலில் இருக்கும். நாட்டுச்சிறப்பு என்று சொல்லி தலைவனின் பரத்தமையை எள்ளி நகையாடி குறை உறுத்தும் பாடல்களே அதிகம். முதலை தன் குட்டியை சாப்பிட்டு வாழும் ஊரைச்செர்ந்தவன் தன் தலைவியை பிரிந்து பரத்தையோடுவாழ்கிறான். ஆமை முதுகில் குட்டிகள் ஏறி விளையாடுவதுபோல தலைவன் மார்பின்மீது பரத்தையர்! பாணன் மகள் தன் வீட்டிலிருந்து வெறும் பொரிச்ச மீன்தான் கொடுத்தனுப்புகிறாள். நீயோ வீட்டு அரிசியையே கொண்டுபோய் கொடுக்கிறாய். இப்படி பல. தலைவனை நண்டுக்கு ஒப்பிடும் “கள்ளன் பத்து”, எருமைக்கு ஒப்பிடும் “எருமைப்பத்து” என்று பல பத்துகள்.
கையிற்றை அறுத்துக்கொண்டு வயலுக்குள் நுழைந்து மேயும் எருமைபோல தலைவனும் ஓரம் போகிறான்!
**********************
ராமச்சந்திரன் இரண்டுதடவை தட்டியும் ஜானகி பார்த்தடியை அகற்றவில்லை. உட்புறமாக கதவோடு சாய்ந்து அமர்ந்திருந்தாள்.
ஜானகி பேசவில்லை.
“அடுத்த மாசம் .. சோதினை, அதான் பாஸ்ட் பேப்பர்ஸ் செய்து .. திருத்தி .. நம்பாட்டி போய்க்கேட்டுப்பார்”
சிரித்தாள். அவனுக்குத்தெரியும் ஜானகி ஒருநாளும் போய்க்கேட்கமாட்டாள் என்று.
“பசிக்குது ஜானகி … நான் வெளியில சாப்பிடேல்ல … உண்ட மீன் குழம்பு இல்லாம எனக்கு புட்டு இறங்குமே?”
ஜானகி எதுவுமே பதிலளிக்காமல் உட்கார்ந்திருந்தாள். பசப்புக்காரன். மயங்காதே. திறக்காதே. நான் ஏன் இப்படி இருக்கிறான். போடா நீயும் நீ கட்டின தாலியும் என்று தூக்கி எறிந்துவிட்டு போகலாமே. எதற்காக எருமை மாடு மாதிரி ஊரெல்லாம் மேய்ந்துவிட்டு வரும் இவனுக்காக நான் காத்திருக்கவேண்டும். ஊர் ஏதும் சொல்லுமென்றா? கண்டறியாத ஊர். இன்றைக்கு ஒரு முடிவு எடுத்தே ஆகவேண்டும்.
“அம்மா .. ஆரது?”
குழந்தை எழுந்து விட்டது. ஓடிப்போய் அவளை தூக்கிக்கொண்டு மீண்டும் வந்து கதவருகில் உட்கார்ந்தாள். குழந்தை விடவில்லை. யாரென்று கேட்டாள். கதவு மறுபடியும் தட்டப்பட்டது.
“தட் … தட்”
“ஆரு?”
“அமுதா .. நான் அப்பாடா…”
“அப்பா”
இதற்குமேலும் தாமதிக்க கூடாது. ஒரு முடிவு எடுத்தவளாய் ஜானகி எழுந்து கதவின் பார்த்தடியை அகற்றினாள்.
***************
கண்டிசிற் பாண பண்புடைத் தம்ம
மாலை விரிந்த பசுவெண் ணிலவிற்
குறுங்கால் கட்டில் நறும்பூஞ் சேக்கைப்
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசையிற்
புதல்வற் றழீஇயினன் விறலவன்
புதல்வன் தாயவன் புறங்கவைஇ யினளே.
- பேயனார் (குறுந்தொகை)மாலை மயங்கிய இரவு நிலவொளியில், குறுகிய கால்களுடைய கட்டிலில், நறுமணம் வீசும் பூக்களுக்கு நடுவே படுத்திருக்கும் தலைவன், தலைவியின் கோபம் காரணமாக யானையைப் போல பெருமூச்சு விட்டான். ஆசையில் தன் புதல்வனை இழுத்து இறுகத்தழுவினான். இதனைக்கண்ட தலைவியோ கோபம் தணிந்து தலைவனை தழுவினாள்.
*********************
கதவு திறக்கவே ராமச்சந்திரன் “அமுதா” என்று அழைத்தபடியே குழந்தையை தூக்கப்போனான். குழந்தையும் அப்பாவிடம் ஓடியது. அதனை தடுத்த ஜானகி, அமுதாவை தூக்கி அணைத்து தன் மடியில் வைத்தபடி ராமச்சந்திரனிடம் அழுத்தமாக சொன்னாள்.
“போடா நாயே”
இது சங்கமருவிய காலம்!
----------------- &&&&&&&&&&&&& ---------------
தீண்டாய் மெய் தீண்டாய் - பாகம் ஒன்று : நாணமில்லா பெருமரம்
தீண்டாய் மெய் தீண்டாய் - பாகம் இரண்டு : உயிரேந்தும் கற்றாளை
Comments
Post a Comment