அன்புள்ள ஜேகே,
சிறு வயதில் எனக்கொரு பழக்கமுண்டு. டைரிமில்க் எனக்கு அலாதி விருப்பம். நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது வீட்டில் ஃப்ரிட்ஜ் வாங்கினார்கள். ஃப்ரீசருக்கு கீழே உள்ள தட்டில் ஒரு டைரிமில்க் அரையாகவோ முக்காலாகவோ இருக்கும். பத்து வில்லைகள் இருக்கும் அதை பத்து நாட்கள் நாளொன்றிற்கு ஒன்றாகத்தான் சாப்பிடுவேன். அவ்வளவுதான் வாங்கியும் தருவார்கள். அத்தனை நாட்கள் நீட்டித்து வைத்து அதனை உண்பதுதான் அதன் சுவை. பள்ளியின் கடைசி ஒரு மணி நேரமும், ரிக்ஷா பயணமும் முழுக்க முழுக்க அந்த ஒரு வில்லையை சுற்றியேத்தான் மனம் ஏங்கிக்கிடக்கும். ஒரு காத்திருப்பை அதில் தேக்கி வைப்பதில் ஒரு குதூகலம். நிதானித்து ருசிக்கும்போது அது வெறும் டைரிமில்க் மட்டுமல்ல. அப்படித்தான் உங்கள் காதலிகளும்.
இதில் வந்துள்ள பெரும்பாலான பக்கங்கள் படலையில் இரண்டாண்டுகளுக்கு முன்பே வாசித்தவையே. அன்றெல்லாம் எனக்கு ஒரு அவசரம் இருந்திருக்கலாம். அதற்கு பிறகு திருமணம் முடித்து, தகப்பனாகி மன ரீதியில் அப்பட்டமாக ஒப்புக்கொள்ளமுடியாவிடினும் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளதுதான். வாசிப்பின் எல்லைகள் கொஞ்சமாய் விரிந்துள்ளதாகவும் நம்புகிறேன். இப்படியான நிலையில் அதே உங்களின் பழைய காதலிகள் இன்று எனக்குள் கிடத்தும் அலைகள் முற்றிலும் வேறானவை. எடுத்த எடுப்பில் 'குட்டி'யைத்தான் வாசித்தேன். இது என் அதே பழைய டைரிமில்க்.
இன்று புத்தகம் வெளியாவதற்கு முன்பே கிளாசிக் எழுதுவதாய் சொல்கிறார்கள், முதல் புத்தகத்தின் முன்னுரை அடிதடியில் ஒருவர் இலக்கியவாதி ஆகிவிடுகிறார். என்னைப்பொருத்தவரை நான் இலக்கியம் என்பதற்கான பொருளாக வைத்துக்கொண்டிருப்பது, அது வாசிப்பவனின் அன்றைய அகத்திலிருந்து விரிந்து அன்றைக்கான பார்வையில் ஒரு உயிர்ப்பைத் தருவதாக இருக்கவேண்டும். அவனே சில ஆண்டுகள் கழித்து வாசிக்கும்போது அவனை வேறொரு களத்தில் நிறுத்தி வேறொரு தேடலைத் தொடங்கிவைக்க முடிந்ததாக இருக்கவேண்டும். ஒரு கால இடைவெளியிலான மறுவாசிப்பில்தான் என்னால் ஒரு எழுத்தின் இலக்கியத்தரத்தை அங்கீகரிக்கமுடிகிறது. அடுத்தவர்கள் எனக்கு பரிந்துரைக்கலாம். என் அங்கீகாரத்திற்கான முத்திரை என்னிடம்தான் இருக்கும். கொ.பு.கா. எனக்கு இப்போது மறுவாசிப்புதான். அன்று மின்னிய வரிகள் இன்று மின்னவில்லை. அன்று இல்லாத புது வரிகள் எங்கிருந்தோ வந்து விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. இலக்கியம் நண்பா.
அங்கொன்றும் இங்கொன்றுமாய் இணையத்தில் நின்ற காதலிகள் இங்கே வரிசைக்கட்டி நிற்கும்போதுதான் உங்கள் உணர்வுகளின் அணிவரிசை நிம்மதியிழக்க செய்கிறது. பங்கருக்குள் ஓடி ஒளிந்து அப்பாவை பார்த்து அலறும் சிறுவன் பொம்மை காமிராவுடன் ரஜினி ஸ்டைல் செய்யும்போது பக்கங்களை முன்னும் பின்னும் புரட்டி அந்த உணர்வுகளைக் கோர்க்கும்போதுதான் உங்களின் ரஜினி என் ரஜினி அல்ல என்பது புரியும். இலங்கை என்றாலே கரும்புகையை மட்டுமே தாள்களில் தடவும் எழுத்தாளர்களுக்கு மத்தியில், உங்கள் காதலிகளெல்லாம் புகைமூட்டத்திற்கு நடுவே வெவ்வேறான வண்ணங்களிலான பிரகாசமான ஓவியங்கள்.
போகன் சங்கர் சமீபத்தில் சாதாரண தனிமனிதர்களின் வாழ்க்கைக்குறிப்புகள் எழுத்தாக்கம் பெறவேண்டும் என்பதை வலியுருத்தும் விதமாக ஒரு கேரளத்து பெண் காவலாளியின் புத்தகத்தை முன்னிறுத்தி ஒரு பதிவு எழுதியிருந்தார். எனக்கு அப்போது ஒரு சந்தேகம் இருந்தது. யாரென்றே தெரியாத ஒருவரின் வாழ்க்கை குறிப்பு எனக்கு எதற்கு? எப்படி அதில் என்னால் ஒன்றமுடியும். அதே சந்தேகம்தான் நீங்கள் இதனை புத்தகமாக வெளியிடப்போவதாக சொன்னப்போதும் எனக்கு தோன்றியது. ஜேகே யாரென்றே தெரியாத ஒருவருக்கு இந்த புத்தகம் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதற்கான பதில் இந்த புத்தகத்தைப் படிக்கும்போதுதான் உணரமுடிந்தது. அத்தகையான இரண்டாம்பட்சமானவர்கள் பார்வையில் இதனை ஒரு புனைவாக எடுத்துக்கொண்டாலும் அவர்களின் வீணையின் நரம்புகள் நிச்சயம் மீட்டப்படும்.
இந்த புத்தகத்தில் வரும் 'குட்டியன்' அத்தியாயம் ஏற்கனவே எனக்கு மனப்பாடம். மீண்டும் விடவில்லை. 'கக்கூஸ்' முன்பு நான் ஒரு அலுவலக நகைச்சுவை கதையாக படித்ததாக நினைவு. இது முற்றிலும் வேறு. இலங்கையின் தமிழர்கள் உண்மையில் இன்று எந்த மாதிரியான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்பது இங்கு பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை. எங்களின் நெடுமாறன்'களும், வைகோ'களும், முருகனின் பேரன்'களும் எங்களுக்கு புரியவிடவும் போவதில்லை. பிரேமதேசா போட்ட பீக்குண்டு உங்களில் மிச்சம் வைத்திருக்கும் வலியை சொல்லும் அந்த கடைசி ஒரு பத்தி சிறுவெளிச்சம்.
இன்று தமிழகத்தில் சில லட்சம் எழுத்தாளர்களும், கிட்டத்தட்ட முக்கால் கோடி திரைவிமர்சகர்களும் சிவந்த கண்களுடன் திரிந்துக்கொண்டிருக்கிறோம். எந்த ஒரு கலைஞனையும் எங்களால் நிர்வாணப்படுத்த முடியும். அப்படி இருக்கையில் இப்போது மீண்டும் உங்களின் மணிரத்னம் அத்தியாயத்தை வாசிக்கும்போதுதான் எனக்குள் இருந்த ரசிகன் செத்துப்போய்விட்டான் என்பதை புரியவைத்தது. அதே மணி'யை நான் ரசித்த நாட்களுக்கு என்னை நான் இப்போது மீட்டெடுக்கவேண்டும். ரசிகப்பார்வை எத்தனை உன்னதமானது. அமைதியானது. பரவசம் நிறைந்தது. இப்போதெல்லாம் அந்த காட்சி காப்பி. இந்த சீன் மொக்கை. ஒரே இழுவை.. இதுதான் விமர்சனம். சுத்த பேத்தல். விமர்சகர்களை விட ரசிகர்களுக்குத்தான் வாழ்க்கை கொண்டாட்டமாய் இருக்கமுடியும். ரசிகர்கள் பாக்கியசாலிகள். அவர்களால்தான் ராஜாவையும் ரஹ்மானையும் சேர்த்தே அணைத்துக்கொள்ளமுடியும். நீங்கள் பாக்கியசாலி ஜேகே.
உங்களுக்கும் எனக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. விருப்பங்கள் சில, ஒரே திசையில் இருப்பதை அறிவோம். அதை சொல்லவரவில்லை. என்னைப் பொறுத்தவரை நம் இருவருக்குமே ஒரு விதமான hyperthymesia உண்டு. பல இடங்களில் நான் உணர்ந்திருக்கிறேன் அதனை. எப்படி என்னால் பின்னோக்க இயலுமோ அப்படியேதான் நீங்களும். ஆனால் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. உங்களிடம் ஒரு அசாதாரண மொழி உண்டு. நினைத்ததை நினைத்தபடியே எழுதமுடியும் மொழி உங்களது. நகைச்சுவை முடிகிறது. சோகத்தை பத்திப்பத்தியாய் பிழியாமல் சுருக்கென பாய்ச்சமுடிகிறது. நிறுத்தாமல் வாசிக்க வைக்கும் நடை சாத்தியப்படுகிறது. என்னால் தள்ளி நின்று பாராட்டமட்டுமே முடிகிறது. பச்சையாக சொல்லவேண்டுமெனில் பொறாமைமட்டுமே படமுடிகிறது.
நன்றியும், வாழ்த்துகளும். கேதா'விற்கும், ஓவியர்களுக்கும் சேர்த்து.
அன்புடன்,
மயிலன்
http://cmayilan.blogspot.com/
இரசனை என்பது ஒரு செல்வம், அது இலகுவாக எமை விட்டு போய்விடும். ஜேகேயிடம் அது மிகையாகவே இருக்கிறது. எழுதுவது ஒரு கலை என்றால், வாசிப்பது இன்னொரு கலை. வாசித்து இதுபோல் எழுதுவதற்கு திறமை மட்டுமல்ல, பரந்த உள்ளமும் வேண்டும். சக மனிதனை அங்கீகரிப்பது என்பது இன்றைய இணைய உலகில் அரிதான இயல்பு. ஜேகேயின் எழுத்துக்கள் மட்டுமல்ல அவர் வாசகர்களின் வார்த்தைகளிலும் இலக்கிய செழுமை இருக்கிறது. எனக்கெல்லாம் நன்றி சொல்வது மயிலனின் பெரிய மனது. தன் நூலுக்கு என்னை முன்னுரை எழுத சொன்னது ஜேகேயின் மிகை அன்பு, அவ்வளவே.
ReplyDelete.
நன்றி கேதா.
Deleteமுன்னுரை நீங்களே எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டதுக்கு சுயநலமும் ஒரு காரணமாம். படலை ஆரம்பித்ததுமுதல் வரி வரியாக வாசித்து என் எழுத்துக்களை உங்கள் அளவுக்கு உள்வாங்கியவர் வெகு சிலரே. ஒரு வாசகர் முன்னுரையை எழுதும்போது அதிலே நிறைய உயிர் இருக்கும். அதுவே ஒரு படைப்பாகவும் வெளிவரும். உங்கள் முன்னுரையும் அப்படியானதே. அதற்கு மிக்க நன்றி.
@கேதா
Deleteஉங்களுக்கான நன்றி பல காரணங்கள் கொண்டது. அதில் முன்னுரையும் மற்றுமொன்று. அவ்வளவே. ஜேகே'வை வாசிக்கும்போது கேதா கூடவேதான் இருக்கிறார். ரசிகராகவோ, விமர்சகராகவோ, கதாப்பாத்திரமாகவோ, சக படைப்பாளியாகவோ...எப்படியேனும். இன்னமும் 'அந்த தூண்டில் போடும் சிறுவன்' ஹைக்கூ'வில் நீங்கள் செய்த சிறு திருத்தத்தின் அழுத்தம் ஜேகே'வின் வரிகளாய் நினைவிருக்கிறது.
எழுத்தின் மூலம் ஆனந்த், நித்யா, கார்த்திக், முருகேசன் போன்ற நல்ல இந்திய நண்பர்கள்/வாசகர்கள் கிடைத்தாலும் இந்தியாவிலேயே வாழும் வாசகர்கள் வெகு அரிதாகத்தான் கிடைத்தார்கள். முருகேசன் ஒருமுறை தொலைபேசியில் அழைத்து, துபாய்க்கு போகும் வழியில் ட்ரான்சிட்டில் கொழும்பில் பல மணிநேரம் நிற்கவேண்டியிருக்கும். யாழ்ப்பாணம் போகலாம் என்றிருக்கிறேன். உங்கள் உதவி வேண்டும் என்று சில வருடங்களுக்கு முன்னர் கேட்டார். நிலைமை அவ்வளவு இலகு அல்ல, தவிருங்கள் என்று புரிய வைக்கவேண்டியிருந்தது. யார், பேர் என்ற முன் விபரமேயில்லாமல் டெல்லியிலிருந்து ஒரு வாசகர் தொடர்புகொண்டு புத்தகத்தை வாங்கிய அனுபவம் கொடுத்த உவகை பெரிதானது.
ReplyDeleteதமிழ்நாட்டில் எழுத்துமூலம் என்னோடு நெருக்கமாகி நண்பரானவர் மயிலன். திருச்சிகாரர். இருவருமே இயலுமானவரை பதிவுலக, எழுத்துலக சர்ச்சைகள் ஏதுமில்லாமல் நம்பாட்டில் எழுதவேண்டும் என்று நினைப்பவர்கள். அடிக்கடி மெசேஜ் பண்ணுவோம். நேரில் கண்டதில்லை. தொலைபேசிகூட இல்லை. ஆனால் தமிழ்நாடு போனால் மயிலன் வீட்டுக்கு போகவேண்டும் என்று மனைவியிடம் சொல்லிவைத்திருக்கிறேன். அவர் ஆஸ்திரேலியா வந்தால் கதையில்லை, என்னோடுதான் தங்கவேண்டும். அனுஷ்யாவும் குழந்தையும் எப்படி என்று நானும் ஜீவிகா சுகமா என்று அவரும் கேட்குமளவுக்கு நெருங்கிய நண்பர்கள். பிடித்த விஷயங்கள் பொதுவானவை. அமுதவாயன் பற்றி எழுதி அடுத்தநாளே அதில் Notes from Underground தாக்கம் இருக்கு என்று சொன்ன ஆச்சரிய நண்பர்.
மயிலன் என் புத்தகத்தை பற்றி எழுதி அனுப்பியது எனக்கு மிகவும் முக்கியமானது.
நன்றி தல
@ஜேகே
Deleteஇந்த
கடிதமே கூட தேய்வழக்காக ஆகிவிடும் என்று முதலில் தயங்கினேன். நீங்களே முன்வந்து ஒரு பிரதியை அனுப்பிவைத்ததெல்லாம் எனக்கு பெருமைக்குரிய விஷயம்.
எழுத்து போட்டிகளுக்கோ, வியாபாரத்திற்கோ உரியது அல்ல என்பது உங்கள் பார்வை. புத்தகமாய் வெளியான பின்னும் உங்களின் காதலிகள் இன்னும் இணையதளத்திலும் இருக்கிறார்கள். இதை துணிச்சல் எனலாம் சிலர். எனக்கு இது உங்களின் 'கலையை அனுகும் முறை'யாகவேதான் தெரிகிறது.
இடையில் நிறைய பணிச்சுமை. நாவலோ நாவல் காலக்கட்டத்தில் நிறைய பதிவுகள் விடுபட்டுப்போயிருக்கிறது. சாவகாசமாக இலையைப்போட்டு ஒவ்வொன்றாக புசிக்கவேண்டும்.
மறுபடியும் சொல்கிறேன். கந்தசாமி'யின் அச்சுப்பிரவேசத்திற்காக காத்திருக்கிறேன்..
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி ஜேகே.