Skip to main content

நெடுங்குருதி

 

nedung_JP.0

மழைக்கு பிந்திய கோவிலின் பிரகார வெளியில் மரங்கள் நீர்கோர்த்துக்கொண்டிருந்தன. பூக்கள் உதிர்வதைப்போல மழைத்துளிகள் உதிர்ந்துகொண்டேயிருந்தன.  திருமால் ஈரக்கல்லை புரட்டி அதனடியில் மண்புழு  ஒளிந்துகொண்டிருக்கிறதா என்று தேடிப்பார்த்தான். மண்ணைத் துளைத்துக்கொண்டு ஒரு புழு எட்டிப்பார்த்தது. அவன் அதோடு பேச விரும்பியவனைப்போல கேட்டான்.

“மண்ணு ருசியாவா இருக்கு. அதைப்போயி திங்குறே?”

மண்புழு சப்தமில்லாமல் ஊர்ந்து திரும்பியது.

அவன் தன விரல்களால் மண்புழுவை தொட்டுப் பார்த்தான். அது உடலை நெளித்தது.

“உன் வீடு எங்கேயிருக்கிறது … அங்கே மழை பெஞ்சதா?”

மண்புழு மண்ணை உமிழ்ந்தபடி சுருண்டது. அவன் ஆத்திரத்துடன் சொன்னான்.

“பதில் சொல்றயா … இல்லை மண்டையைத் திருகிப் போடணுமா?”

மண்புழு எதையும் பொருட்படுத்தாதது போல ஊர்ந்து போகத்துவங்கியது. ஆத்திரத்துடன் மண் புழுவைக் கையில் எடுத்துக்கொண்டுபோய் கோவில் கிணற்றில் போட்டுவிட்டு வந்தான். அதே இடத்தில் இன்னொரு மண்புழு ஊர்ந்துகொண்டிருந்தது. பயத்துடன் அதினிடம் கேட்டான்.

“உனக்கு நீஞ்சத்  தெரியுமா? எப்படி மேலே ஏறி வந்தே?”


எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி.

புத்தகங்கள் எப்போதும் ஆச்சரியங்களையே நமக்கு அளிக்கின்றன. வார இறுதியில், இன்னமும் சில நாட்களில் இழுத்து மூடப்படப்போகும் புத்தகசாலை ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கே எல்லா புத்தகங்களையும் கழிவு விலையில் ஐந்து டொலர்கள் என்று விற்றுக்கொண்டிருந்தார்கள். புத்தக வரிசையில் லாகிரியின் லோ லாண்ட் இருந்தது. கைட் ரன்னர் இருந்தது. லோங்கிடியூட் இருந்தது. டக்ளஸ் அடம்ஸ், டெர்ரி பிரச்சட் என்று ஆதர்சர்கள் அனைவருமே, ஐந்து டொலர்களுக்குள் அடங்கியிருந்தார்கள். ஐநூறு பக்க புத்தகமும் ஐந்து டொலர்தான். ஐம்பது பக்க புத்தகமும் ஐந்து டொலர்தான். சுற்றிவரவிருந்த அலுமாரி பூராக புத்தகங்களோடு நடுவில் நின்றபோது, இன்டர்ஸ்டெல்லரில் கருந்துளைக்குள் நிற்கின்ற நாயகன் நினைவே வந்தது.

ஒவ்வொரு புத்தகங்களையும் திறக்கையில் உள்ளே புதிதாக ஒரு உலகம் உருவாகிறது. ஏலவே இருப்பதில்லை. உருவாகிறது. எழுத்தாளர் சிருஷ்டிப்பதை நான் எப்படிப் பார்க்கிறேன் என்பதை அடிப்படையாகக்கொண்டு அந்த உலகம் கூர்ப்படைகிறது. லாகிரியின் எழுத்துக்களைக்கொண்டு நான் படைக்கும் உலகம், இன்னொருவன் படைப்பதிலிருந்து நிச்சயம் மாறுபடவே செய்யும். நான் அந்தப்புத்தகத்தை திறக்காவிடில் அப்படி ஒரு  உலகம் உருவாகாமலேயே போயிருக்கும். என் மதுமிதாவும் இன்னொருவரின் மதுமிதாவும் வேறு வேறு நபர்கள். ரத்னாவும் வேறு. கீ. ராவின் அண்ணாச்சி என் உலகத்தில் வேட்டியை மடித்துக்கட்டியிருப்பார். வெற்றிலை போடுவார். தலை வழுக்கையாக இருக்கும். உங்கள் அண்ணாச்சிக்கு நிறைய தலைமயிர் இருக்கலாம். புதுமைப்பித்தனின் செல்லம்மாள் எனக்கு நயினாதீவில் வாழும் கொழும்பர்மாமி மாதிரி இருப்பார். உங்களுக்கு வேறொருவராக இருப்பார். ஒரே நாவல். ஒரே பாத்திரங்கள். ஒரே ஊர்கள். ஆனால் உலகம் வேறு.  ஒவ்வொரு நாவலுக்கும் உயிர் கொடுக்க ஒரு வாசகன் வரவேண்டியிருக்கிறான். ஒவ்வொரு வாசிப்பும் ஒவ்வொரு தனி உலகம்.

நெடுங்குருதி. இது என் உலகம். நான் படைத்த உலகம்.  எஸ். ரா மன்னிக்க;

வேம்பலை, காலவெள்ளத்தில் மெல்ல மெல்ல சிதிலமாகிவரும் கள்ளர்கள் வாழும் கிராமம். வெம்மைசூழ் ஊர். ஊரின் குணம் மக்களில் தொனிக்கிறதா  ல்லது மக்களின் குணம் ஊரில் தொனிக்கிறதா  என்று தெரியாதவண்ணம் வேம்பலைக்கும் அம்மக்களுக்குமிடையிலான குணாதிசயங்கள் பின்னிப்பிணைந்திருக்கின்றன. அது வேண்டியபொழுதில் மக்களை உள்ளே இழுக்கிறது. வேண்டாதபோது குடும்பத்தோடு காறித்துப்புகிறது. அந்த மக்கள் ஊர் ஊராக சென்று கொள்ளையடிப்பவர்கள். வேம்பலை அவர்களையே தன்னிஷ்டப்படி கொள்ளையடிக்கிறது.

அப்படி வேம்பலை தன் விருப்பப்படி பந்தாடுகின்ற குடும்பம் நாகுவினுடையது. அவனோடு சேர்ந்த மூன்று தலைமுறைகளை சொல்லுகின்ற நாவல் நெடுங்குருதி. நாகு சிறுவனாக வாழுகின்ற வேம்பலை கிராமம், வாழ்ந்துகெட்ட ஊரின் படிமானங்களோடு காட்சி அளிக்கிறது. வெயிலும் பசியும் தாகமும் ஊரை வாட்டியெடுக்கிறது. கிராமத்துக்குவரும் பரதேசிக்கு குடிக்க தண்ணீர் கிடைப்பது அரிதாகிறது. ஊர் வரட்சியாகும்போது மக்களும் வரட்சியடைகிறார்கள். அவர்களின் மன நிலைகளும் ஈரம் வரண்டு பாலையாகிறது. நீர் வறண்ட கிணற்றில் கிடந்த ஆமையை எடுத்து வருகிறாள் நாகுவின் தமக்கை நிலா. அதையும் களவாடி சமைத்து உண்ணும் நிலையில் ஊரவர் இருக்கிறார்கள். நாகுவின் தகப்பன், சொந்தத்தொழில் செய்வதை அவமானமாக நினைப்பவன். வேற்றூருக்கு வியாபாரம் செய்வதாகச்சென்று அங்கே அப்பாவி பக்கீரை ஏமாற்றி செருப்புகளை திருடிக்கொண்டு வந்துவிடுகிறான். ஆனால் ஊரில் செருப்பு விக்க அவனுக்கு தன்மானம் இடம் கொடுக்கவில்லை. முயல் வேட்டைக்கு செல்கிறான். எலிகளை வேட்டையாடுகிறான். செருப்புகளை தேடி வந்த அப்பாவி பக்கீரை கொல்கிறான். பக்கீரைத்தேடிவரும் மனைவியையும் பிள்ளைகளையும் வேம்பலை கிராமம் சுவீகரிக்கிறது. தனக்குகந்தபடி மாற்றியமைக்கிறது. அயலூரின் குலச்சாமி கரையடி கருப்புவைக்கூட வேம்பலை ஈர்க்கிறது. ஆனால் தன் இயல்புக்கு ஒவ்வாத நாகுவையும் அம்மாவையும் ஊரை விட்டே துரத்துகிறது.

வேம்பர்கள் தெருவின் வடக்கே ஒரு ஊமை வேம்பொன்று நிற்கிறது. பூக்காது. காய்க்காது. காற்றுக்குகூட அசையாத வேம்பு அது. அங்கே நிறைய ஆணிகள் அறைபட்டுக் கிடந்தன. வீரம்மாள் அதில் ஒன்றை பிடுங்கி வீட்டுக்கு கொண்டுவருகிறாள். அன்றிலிருந்து ஆரம்பிக்கிறது அவளுக்கு தரித்திரம். தாளாமல் வீரம்மாள் மீண்டும் அந்த ஆணியை மரத்திலேயே அறைவதற்கு வருகிறாள். அறைகிறாள். ஏறவேயில்லை. அடிக்க அடிக்க ஆணி எப்பன் கூட நுழையவில்லை. வளைகிறது. பலமாக அடித்தால் ஆணி ஒடிந்துவிடுகிறது. ஆனாலும் அந்த வேம்பிலே ஏலவே அடிபட்ட நிறைய ஆணிகள் இருந்தன. அவை, அந்த வேம்பின்மீது ஆணி அறைந்தால் அது என்றோ ஒருநாள் உள்ளே ஏறும் என்கின்ற நம்பிக்கையை அறைபவனுக்கு கொடுக்கிறது. வீரம்மாள் பித்துப்பிடித்து அலைகிறாள்.

வேம்பலை என்ற மொத்த கிராமுமே அந்த ஊமை வேம்புபோலத்தான். அது தன் இயல்புக்கு ஒவ்வாதவர்களை ஏற்றுக்கொள்ளாது. ஆனாலும் அதனைத்தேடி ஆராரோ அவ்வப்போது வந்துகொண்டேயிருக்கிறார்கள். கள்ளர் குடியிருப்பு, கொலை, குடி, கூத்தடிப்பு என்று வாழ்பவர்களிடம் ஏன் மற்றவர்கள் வருகிறார்கள்? எறும்புகள் கூட ஊரைவிட்டு இடம்பெயர்ந்தாலும் வேம்பலை தலைமுறை தாண்டி தப்பிநிற்கிறது. எப்படி? நாகு ஏன் அந்த பாழாய்ப்போன கிராமத்துக்கு மீள வருகிறான்? வசந்தாவுக்கு தான் ஒருநாள்கூட தங்கியிராத வேம்பலைமீதி அப்படி என்ன ஈர்ப்பு?

குடித்துவிட்டு வந்து கலாட்டா பண்ணி கன்னத்தை அடித்த கணவன், விளக்கணைத்தபின்னர் மனைவியின் மடியில் கை போடும்போது அவள் மெல்லிய சிணுங்கலோடு அவனை சுவீகரிப்பாளே. அந்த ஈர்ப்பு அது. புரிதலை, புத்தியை தாண்டிய இயல்பு அது.

வேம்பலையை நிர்மாணிப்பது என்பது கடும் சவாலான காரியமாகவிருந்தது. பரிச்சயமில்லாத கட்டமைப்பு. மனிதர்கள். குணாதிசயங்கள். கதை நடைபெறும் காலமும் குழப்பமானது. நிறைய வெயில், பனை, வேம்பு, வறுமை, வரட்சி என்கிற சில பரிச்சயமான விடயங்கள் போதவில்லை. தண்ணீருக்கு தட்டுப்பாடான கிராமத்தில் சாயக்காரர் தெருவும் இருக்கிறது. அடுத்த கிராமமும், நகரமும் எட்டா தூரத்தில் இருக்கின்றன. ஆச்சரியம் என்னவென்றால், ஊர் ஊராக சென்று களவெடுத்தாலும், வேம்பலை தனியாக குணம் மாறாமல் அப்படியே தலைமுறை தாண்டியும் இருக்கிறது. கள்ளர்கள் கிராமம் இரவில் விழித்திருக்கிறது. பகலில் உறங்குகிறது. நேர்மையில்லாமல் வாழ்தல் இயல்பாகிறது. ஏற்றுக்கோள்ளப்படுகிறது. இவற்றை வைத்து வாசகன் ஒரு ஊரை நிர்மாணிக்கவேண்டும். கொல்லன் பட்டறையில் காய்ச்சி எடுத்து அடி அடியென்று அடித்து இரும்பை கூராக்குவதுபோல எனக்குத்தெரிந்த கிராமத்தையெல்லாம் வேம்பலையாக்க முயன்றேன். முடியவில்லை.

வேம்பலை என்றில்லை. நாவலில் வருகின்ற எந்த ஊரையுமே அதன் முழுமையான வடிவத்துக்கமைய சிருஷ்டிக்க முடியவில்லை. ஒருவாறு  சிருஷ்டித்துவிட்டேன் என்று நினைக்கையில் ஊரின் குணம் அப்படியே மாறிவிடும்.

ஊர் என்றில்லை. மனிதர்களும் அப்படியே. நாகுவும், அவன் தந்தையும், தாத்தாவும், ரத்னாவதியும், மல்லிகாவும், பக்கீரின் மனைவியும் அதனையே செய்கிறார்கள். அடிக்கடி சட்டையை மாற்றுகிறார்கள்.  அதிலும் ரத்னாவதி தனி ரகம். அவள் காதல், அவள் காமம், அவள் எண்ணங்கள் எம் முன்முடிபுகளை எல்லாம் தவிடு பொடியாக்குகின்றன. ஆதிலட்சுமி பேசும்போது அட கதைக்குள்ளேயே இன்னொரு கதை சொல்லியா? என்று ஆச்சரியப்படுத்துவாள். பூபாலனை தேடி ஊர் ஊராக அலைவீர்கள். திருமால் இன்னொரு புரியாத புதிர். எல்லோருமே முரண்பாடுகளோடு திரிகிறார்கள். அதுவே அவர்களின் இயல்பாகிறது. எஸ். ரா, அவர்களை வாழவிட்டு பின்னாலே சென்று எழுதுகின்ற நாவலோ என்னவோ. எந்தப்பாத்திரமும் வடிவமைக்கப்பட்டு எழுதப்பட்டதல்ல. பெற்று விட்டிருக்கிறார். எம்மோடு சேர்ந்து பாத்திரங்களும், ஊர்களும், படிமங்களும் வாசிப்போடு வளர்கின்றன. முடிக்கையில் நெடுங்குருதி வேறெங்கும் ஓடவில்லை, அது நம்முள் ஓடுகின்ற இரத்தமே என்பது புரியும்போது, வெம்மை சும்மா முகத்தில் அடிக்கும்.

கதையை புறவெளியிலிருந்து இப்படி உள்ளுணர்வுக்கு நகர்த்துவதற்கு எஸ். ரா நாவல் பூராவும் இன்னொரு பாத்திரத்தை உலாவவிடுகிறார். படிமம். படிமங்கள் நாவலில் முதல் வரியிலிருந்து கடைசிவரை விரவிக்கிடக்கின்றன.

நாவலின் முதல்வரியே இதுதான்.

ஒரு சாரை எறும்புகள் ஊரை விட்டு விலகிய பாதையில் அவசரமாக சென்றுகொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருந்தபோது நாகுவிற்கு பதினோரு வயது நடந்துகொண்டிருந்தது.

இதுதான் நாவல். திருமால் தவளையோடும் மண் புழுக்களோடும் நடத்தும் உரையாடல்கள். பண்டார மகளின் உள்ளங்கை தேள். ஆதிலட்சுமியின் உலகத்தில் இறந்தவர்கள் வானில் போவார்கள். திடீரென்று புழுக்கள் ஊரை மொய்க்கும். எங்கிருந்தோ கொக்குகள் வந்து அவற்றை கொத்தித்திண்ணும். வேம்பலையில் வாழ்ந்து இறந்தவர்கள் எல்லாம் தாம் வாழ்ந்த ஊரை, அப்படியே பாழடைந்தவண்ணமே உருவாக்கி அங்கே வாழ்ந்துகொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் இறந்தவர்களுக்கு ஒரு வேம்பலை. இருப்பவருக்கு ஒரு வேம்பலை என்று ஊர் இரண்டாகிறது.  காட்சிப்படிமம். காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?

கிராமம் விரிகிறது.

அல்லப்பிட்டி வீதியில், சென்றிப்பொயிண்ட் தாண்டி கொஞ்சத்தூரம் பயணம் செய்தால் வேலணைக்கு திரும்பும் வீதி வரும். அந்த வீதியில் ஒரு நூறு மீட்டர் தாண்டினால் மேற்காலே ஒரு காணியில் சிதிலமடைந்த கூரையற்ற ஒரு கல் வீடு இருக்கும். காணி முழுதும் மாரியில் மழை நீர் முட்டிவிடும். காணியின் தெற்கு எல்லையில் பெரியதொரு எல்லைப்பூவரசு பக்கத்துக்காணிமீது சரிந்து பெரிதாக வளர்ந்திருக்கும். ஒவ்வொருமுறையும் பேரூந்தில் அப்பூவரசைக்கடக்கும்போதும் அதனோடு பேசவேண்டும் என்று மனம் நச்சரவு செய்யும்.

"உனக்கு சின்ன வயசு ஞாபகம் இருக்கா. உன்னை எந்த மரத்திலயிருந்து முறிச்சு இஞ்ச கதிகாலா நட்டாங்கள்?"

பூவரசு எகத்தாளமா பதில் சொல்லும்.

"ஆ... பூவரசு மரத்திலயிருந்து"

"யாரு நட்டாங்கள்?"

"புக்கையிண்ட பெடி ரமேசு... சொத்தியா நட்டிட்டான்"

அதன் இடுப்பிலிருந்த ஆணித்தழும்புகளையும், அதற்குமேலால் கொழுத்து வளர்ந்திருந்த மொக்கு மரத்தையும் தடவியபடி கேட்பேன்.

"முள்ளுக்கம்பி அறையேக்க உனக்கு நோகேலையா?"

"நொந்துதுதான். ஆனா நான் பிடிப்பா நிக்கிறதுக்கு அது தேவையில்லையா? சரிஞ்சு விழுந்திருந்தா இத்தனைக்கு நான் விறகாகியிருப்பனே?"

"யார் வீட்டு வேலி இது?"

"முத்துலிங்கத்தாரிண்ட, செத்துப்போனார். இடுப்புல 'ம' எண்டு கத்தி கிழிச்சிருக்கு பாரு. அது மகேசு கிழிச்சது. இப்ப சுவீடனில இருக்கிறாள். பேரப்பிள்ளையுமாயிற்றுது"

"பெரிய குடும்பமா?"

"எட்டு பிள்ளையள். மூத்ததிண்ட கலியாணத்துக்கு அடைச்சவேலி. தெக்காலக்காணிதான் அவளுக்கு சீதனம் குடுத்தது. அதுகள் கொஞ்சநாள் இருந்திட்டு உத்தியோகம் எண்டு யாழ்ப்பாணம் போயிட்டிதுகள். ஆனா மாரி முடிய வேலி அடைக்க வந்திடுவினம். நான், எல்லைத்தடி எண்டதால தறிக்கயில்ல. ஆனா எண்ட கொப்புகளைத்தான் வெட்டி கதிகால் நடுவினம்"

"வெள்ளம் வராதா?"

"அள்ளிக்கொண்டு போயிடும். ஆனா நான் நிண்டுபிடிப்பன். அவையள் கடும்மழை எண்டால் அஞ்சாம் வட்டாரத்திலயிருந்த யோகன் மாமாவிட்ட போயிடுவினம்"

"இப்பவும் தொடிசல் இருக்கா?"

"யோகன் மாமாவும் செத்துப்போனார். குடும்பம் கனடாவுக்கு. முத்துலிங்கத்தாரிண்ட நேரடிச்சொந்தம் எதுவும் ஊரில இல்லை. சனமே இல்ல. ஆனா கட்டாக்காலி ஆடுகள் அப்பப்போ வந்து போகின்றன”

“உனக்கு அதுகளாவது துணை. நல்லம்தானே”

“அதெப்படி? வீடு முழுக்க ஆட்டுப்பீ. மகேசுண்ட பேரப்பிள்ளைகள் வந்தா கால் வைக்கவேணாமே, ஆரிட்டையாவது காசைக்குடுத்து வேலியை அடைப்பிச்சா நல்லம். இப்பிடியே போனா என்னையும் தறிச்சிடுவாங்கள். கள்ளர் கூட்டம்”

 

s_ramakrishnan

தலைமுறைமாற்றம் புறவியல்புகளையும் தோற்றங்களையும் மாற்றுகின்றன. ஆனால் மனிதர்களும் மாறவில்லை. படிமங்களும் மாறவில்லை. முதல்வரியில் எறும்பை ஊரை விட்டு அகற்றும் வேம்பலை, இறுதிவரியில் வசந்தா குடும்பத்தோடு, கொக்குக்கூட்டத்தையும் உள்ளே இழுக்கிறது. நாவலின் இறுதி வரிகள்.

விரிந்த உள்ளங்கை ரேகைகளைப்போல வேம்பலை தன் சுபாவம் அழியாமல் அப்படியே இருந்தது. கொக்குகள் நிசப்தமாக வானிலிருந்து வேம்பலையில் இறங்கிக்கொண்டிருந்தன. தொலைவில் எங்கோ மயிலின் அகவல் ஓசை விட்டு விட்டு கேட்டுக்கொண்டிருந்தது.

வசந்தாவின் கணவன் சேதுவுக்கும் கிட்ணாவுக்கும் பிறந்த குழந்தைக்கு “நாகு” என்று பெயர் வைக்கலாமா என வசந்தா கேட்க, அவன் சம்மதிக்கிறான். வாசிக்கும்போது சுருக்கென்றது. நாகுவை மீண்டும் வேம்பலை கொல்லப்போகிறது.

நெடுங்குருதி. நள்ளிரவின் வெக்கை.


கதாவிலாசம்

நூல் உபயம் : கேதா 
ஓவியம்:
pinkurippukal.blogspot.com.au

Comments

  1. நெடுங்குருதியை வாசித்தபோது அது முற்றிலும் மாறுபட்ட வாசிப்பு அனுபவத்தை தந்தது. நீங்கள் சொன்னது போல, அந்த ஊர் புதிது, சூழல் புதிது, மக்கள் புதிது, ஆனால் அவை எல்லாவற்றோடும் ஒன்றிப்போய்விட முடிகிறது. எஸ்.ரா. என் ஆதர்ச எழுத்தாளராக தெரியவில்லை. வறண்ட நிலங்களில் வாழும் உயிர்கள் வளங்களை உச்சமாக பயன்படுத்த தெரிந்துவைத்திருக்கின்றன. சேமிப்பு தவிர்க்கமுடியாததாகிறது. சூழல் அவர்கள் மீது கருணை காட்டுவதே இல்லை, ஆனால் வாழ்வை அவர்கள் விட்டுவிடுவதும் இல்லை. மப்பன்றி கால மலை காணா கலட்டியில் மண்வெட்டி போட்டு மரித்த நிலம் ஆக்கும் உழைப்பு அம் மண்ணின் மக்களுக்கு இருக்கிறது. வெயிலைப்போலவே அவர்கள் சினம் சுட்டெரிக்கிறது. கூடவே எரிச்சலும். கள்ளிகள் முதல் பலாப்பழம் வரை முட்களுக்கு நடுவிலேயே இனிமையை பொத்தி வைத்திருக்கின்றன. கோடைக்கனிகள் போல மாரியில் விளையும் கனிகள் சுவைப்பதில்லை. மண்ணை பிரிந்து போகும் மனிதர், போகுமிடமெல்லாம் தாயின் மடிச்சூட்டை தேடும் குழந்தையைப்போல இந்த வெம்மையை தேடிக்கொண்டிருகின்றனர். ஆனால் மீள ஒருநாள் வரும்போது, கவிதையிலும் நினைவிலும் தந்த சுகத்தை வெம்மையும் வேர்வையும் தருவதில்லை. வெம்மையும் பொறுக்காத, குளிரும் தாங்காத ஒன்றாக மாறி விட்டிருக்கிறது உடல்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...