ஒரு திரைப்படத்தை பார்த்து முடித்தபின்னர், கிளைமக்ஸுக்கு பிறகு என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கும் கிறுக்கு குணம் எல்லோருக்கும் இருந்திருக்கும்.
காதல்கோட்டை தேவயானியும் அஜித்தும் தாங்கள் தவறவிட்ட சந்திப்புக்களைப்பற்றி எத்தனைதடவை பேசியிருக்கக்கூடும்? யோசித்தால் சுவாரசியமாக இருக்கும். “காதல் கவிதை” படத்தில் கமலிக்கும் சூரியாவுக்கும் கல்யாணம் என்று சின்னி ஜெயந்த் சொல்லுகின்ற காட்சி ஒன்றுகூட இருக்கிறது.
அலைகள் ஓய்வதில்லையில் கார்த்திக்கும் ராதாவும் ஓடிப்போய் சந்தோசமாக குடும்பம் நடத்தியிருக்கமுடியுமா? பள்ளிக்கூட மாணவர்கள். உழைப்பில்லை. பணக்கார வீட்டுப்பெண் ராதாவால் சமாளித்திருக்கமுடியுமா? அலைகள் ஓய்வதில்லை மீதிப்பாகம் “காதல்” படமாகவே மாறியிருக்கும் சாத்தியம் அதிகம். பாவம் அந்தப்பெடி.
“மறுபடியும்” படம் பார்த்துவிட்டு வீட்டிலே சின்ன சண்டை. நிச்சயமாக அரவிந்த்சாமியும் ரேவதியும் பின்னர் சேர்ந்திருப்பார்கள், அது வெகு இயல்பு என்று அக்காவோடு வாதிட்டு இருக்கிறேன். அதன் முடிவே அப்படித்தான் எடுத்திருக்கிறார் பாலுமகேந்திரா என்பது என் நீண்டகால வாதம்.
தளபதியில் அந்த ரஜனியின் “வெறுங்காவல்” டயலாக் தொடர்ந்திருக்க சாத்தியமில்லை. ரஜனிக்கும் பானுப்பிரியாவுக்கும் இயல்பாக காதல் ஒருநாள் மலர்ந்திருக்கும். மழைநாள், இடி, கடுங்குளிர், தூரத்து டீக்கடையில் இளையராஜா பாட்டு "வெறுங்காவலை" உடைத்திருக்கும். புத்தம்புது பூ பூத்ததோ ஷூட்டிங் நடந்திருக்கும்.
இதயம் படத்தில் முரளியும் ஹீராவும் சேர்ந்திருக்கவே சாத்தியம் அதிகம்.
விண்ணைத்தாண்டி வருவாயாவில் நாங்கள் படம் முடிந்து தியேட்டர் வாசலைக்கடக்க முன்னமேயே சிம்பு சமந்தாவை ப்ரொபோஸ் பண்ணியிருக்கக்கூடும். Samantha was too good to miss out.
மூன்றாம்பிறையில் அவ்வளவு உணர்வு பூர்வமாக கிளைமக்ஸை முடித்திருந்தாலும் யோசித்துப்பார்த்தால் அந்த முடிவு ஒரு சப்பைதான். ஸ்ரீதேவி எப்படியும் தனக்கு என்ன நிகழ்ந்தது என்பதை கேட்டுத்தெரிந்திருப்பாள். அவளை கண்டுபிடிப்பது கூட கமலுக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்திருக்காது.
இந்தியன் கமல் சந்தனக்கட்டை வீரப்பன் போல ஒருநாள் அம்புலன்சுக்குள் சுடப்பட்டு கிடந்திருப்பார்.
அந்நியன் சதாவின் நிலை இன்னமும் மோசம். கொல்லப்பட்டிருப்பாள்.
முதல்வன் அர்ஜூன் அடுத்த தேர்தலிலேயே தோற்று காமராஜர் ஆகியிருப்பார்.
இதுதான் யதார்த்தம்.
ஆனால் ரசிகன் இதெல்லாம் யோசிக்கமாட்டான். யோசிக்கவைக்காமல் படம் எடுப்பதுதான் திறமை. சினிமாவே ஒருவித கண்கட்டி வித்தைதானே.
ஒரு சில படங்களில், பின்னர் என்ன நடந்திருக்கும் என்கின்ற காட்சிகளையும் இயக்குனர்கள் வைப்பார்கள். நியூ படத்தின் இறுதிக்காட்சி அப்படிப்பட்டது. அதிலே அப்பா சூர்யாவும் மகன் சூர்யாவும் பேசும் காட்சியில் ஒரு இன்டலிஜென்ஸ் இருக்கும். சூர்யா அகத்தியனுக்கு பிறகு தமிழில் உருவான சிறந்த இயக்குனர். நடிப்பாசையால் நாதாரி தறிகெட்டுப் போயிட்டுது.
இனி கொஞ்சம் நம்ம கற்பனை குதிரையை தூசு தட்டுவோம்.
மௌனராகம். அதில் மோகனும் ரேவதியும் எப்படி குடும்பம் நடத்தியிருப்பார்கள் என்று யோசித்துப்பார்த்தேன்.
படத்தில் இருவருக்குமே செம் ஈகோ. அமுசடக்கிகள். உள்ளே இருக்கும் காதலை சொல்லக்கூட ஈகோ தடுக்கும். எதெற்கெடுத்தாலும் நாய் பிடி. பேய் பிடிதான். அதற்காக பிரிவது வரைக்கும் போய்விட்டு சேருவார்கள். பார்க்க வெகு சுவாரசியமாகவிருக்கும். கடைசியில் இருவரும் கட்டிப்பிடிக்கும்போது, பார்க்கிறவனுக்கு யாரையாவது உடனடியாக காதலித்து சண்டைபிடிக்கவேண்டும்போல தோன்றும். அப்படி ரசிகனை நினைக்கவைத்ததுதான் படத்தின் வெற்றி.
ஆனால் நிஜ வாழ்க்கையில் டங்குவாரு கிழிஞ்சிருக்கும்.
அவர்களின் அந்த குணவியல்புகள் ஆதாரமானவை என்று வைத்துப்பார்த்தால், வாழ்க்கை பூராக இருவரும் சண்டை பிடித்திருக்கவே சாத்தியம் அதிகம். ஒவ்வொருமுறை சண்டையிலும் கூட முதலில் சமாதானமாவதும் ரேவதியாகத்தான் இருக்கும். மோகன் வெளிப்படையாக அன்பைக்கூட காட்டத்தெரியாதவன். Way too much of ego.
இன்றைய தேதியில் டெல்லியில் அதே காலனியில் அவர்கள் வசித்துவந்தால் இந்தக்காட்சி அரங்கேறலாம்.
ஒரு வயதான அம்மாவும் வயதான ஐயாவும் ரயில் நிலையத்துக்கு முன்னாலே இருந்து பம்மிக்கொண்டு நிற்கிறார்கள். ஐயா ஏதோ சில பேப்பர்களை அந்தம்மா கையில் திணிக்கிறார். அம்மாக்காரி அவரைப்பார்த்து அழுதபடி ஏதோ சொல்கிறார். பின்னர் அந்த ஐயா கொடுத்த பேப்பர்களை கிழித்து எறிகிறார்.
திடீரென்று ரயில் ஹோர்ன் அடிக்கிறது. இந்தம்மா மெதுவாக ஓடுது. இப்ப கமரா கோணம் திரும்பி மூலையில் இருந்த பெட்டிக்கடையை காட்டுகிறது. அப்போதுதான் ரயிலில் இருந்து இறங்கிய ஒருவன் பெட்டிக்கடை முதலாளியிடம் பேசும் சீன்.
“என்னண்ணே அந்த அம்மாவுக்கும் ஐயாவுக்கும் இடையிலே ஏதும் சண்டையா?”
”கண்டுக்காதீங்க தம்பி”
”இல்லண்ணே அந்த அம்மா அழுதுகிட்டே ஓடுது..தள்ளாத வயசில. பாவம்”
”பின்னால அந்த ஐயா விக்கித்துப்போய் கிழிஞ்சு போன பேப்பர்களை பார்த்துக்கிட்டு இருப்பாரே!”
”ஆமாண்ணே”
”இப்ப ஏதோ நினைவு வந்தவராய் ரெயிலை நோக்கி திடீரென்று ஓடுவாரே”
”அட ஆமா!”
”இந்தம்மாவும் அழுதுகொண்டே வந்து .. ஒரு சின்ன பிரேக் போட்டு..”
”ரெண்டு பெரிசும் கட்டுப்பிடிக்குதுங்க அண்ணே"
”இதே சீன்தான் தம்பி ...கண்றாவி ..முப்பது வருஷமா நடக்குதாம் .. என்ர அப்பாரு சொல்லியிருக்காரு… முன்னெல்லாம் இதுக பசங்களும் அழுதுகிட்டே பின்னால வருவாங்க .. இப்ப அவிகளுக்கும் அலுத்து போச்சு! ரெண்டு பெரிசுமே களைச்சுப்போய் நம்ம கடையிலதான் டீ குடிக்க வருவாங்க.. பாருங்களேன்”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது கிறீச் என்ற சத்தத்தில் வாகனமொன்று, வீதியை கடந்துகொண்டிருந்த ஒரு நடுத்தரவயதுப் பெண்மணியை இடித்துத் தள்ளியது. இடித்த வாகனம் நிறுத்தாமல் ஓடியது. டீக்கடைக்காரார் சலனமேயில்லாமல் தொடர்ந்தார்.
"என்ன தம்பி, வண்டி நிக்காம ஓடுதேன்னு யோசிக்கறீங்களா? உள்ளே குண்டா ஒரு பெண்மணி, டென்சனா இருந்தாங்களா?"
"ஆமாண்ணே .. யாருன்னு தெரியுமா?"
"மகளிரணி தம்பி, பழைய திமுக பிரபலம் .. இப்ப காங்கிரஸில சேர்ந்துட்டுது, பாவம் புருஷன்காரன் .. நாகர்கோவில் பக்கம் பாதிரியாரா போயிட்டாப்ல"
கூட்டம் கூடிவிட்டது. பயங்கர மழை. எங்கிருந்தோ ஒருவர் யாரையோ தேடிக்கொண்டு வந்தார்.
“தம்பி .. இந்தப்பக்கம் ஒரு அம்மா வந்தாங்களா?”
“அந்தா, சிக்னலுக்கு கீழே நனைஞ்சுகிட்டு நிக்காங்களே, அவுங்களா சார்?”
வந்தவர் சந்தோசத்தில் கத்திக்கொண்டே ஓடினார்.
“தாரா......”
இப்புடி கூட யோசிக்கலாம் போல. எனக்கு இப்படி தோன்றிய ஒரே படம் அலைகள் ஓய்வதில்லை. மகா அபத்தமான முடிவு- மூன்றாம் பிறை போலவே. சரியாக சொன்னீர்கள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி காரிகன்.
Delete