Skip to main content

நாளை காலை நேரில் வருவாளா?

 

gallery2

தொண்ணூறுகள் காதல் படங்களில் காலம். முன்னரும் பின்னருமான காலப்பகுதியிலும் காதல் படங்கள வந்தனதான். ஆனால் தொண்ணூறுகளில் காதலை மட்டுமே மையப்படுத்தி, தலைப்பிலிருந்து எண்ட் கார்ட் வரை காதல் காதல் என்று இயக்குனர்கள் உருகினார்கள். எல்லாமே காதல் கோட்டை என்ற ஒரு படம் செய்த அநியாயம். நமக்குவேறு பதின்ம வயதா; சுவலட்சுமி, தேவயாணி, கௌசல்யா என்று வரிசையாக சேலையிலேயே கவுத்தார்கள். பிறகு சிம்ரன் பாஸ்கட் போல் விளையாடிக் கவுத்தார். ரம்பா மின் விசிறிக்கு முன்னாலே நின்றால், கீர்த்தியின் வாயிலிருந்த இலையான்கூட காத்துக்கும் பறக்காமல் ஆவெண்டு பார்க்கும்.

எல்லாமே காதல் படங்கள் என்பதால், இசையிலும் நிறைய காதல் இருந்தது. தேவாவின் பொற்காலம் அது. அப்போது ராஜா, ரகுமான், வித்யாசாகர் போன்ற இசையமைப்பாளர்கள் போட்ட மெலடிகளின் எண்ணிக்கையை விட தேவா அதிகமாகவே மெலடிப்பாடல்களை தந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. அதுவும் மரண மொக்கைப்படங்களுக்கெல்லாம் அருமையான பாடல்களை கொடுத்திருப்பார். அதற்காகவே சந்திரன் மாஸ்டரிடம் போய்த்தவம் கிடந்த காலங்கள் ஞாபகம் வருகின்றன. இனியவளே என்று ஒரு படம். பாடல்கள் அத்தனையும் செம. அன்பே டயானா என்று இன்னொன்று. அதிலே “ஒருமுறை சொன்னால் போதுமா” என்று ஹரிகரனும் சுஜாதாவும் பாடின டூயட் இருக்கு. செம. தேவா பாட்டுக்காகவே படம் ஓடிய காலமொன்று இருந்தது. “காலமெலாம் காதல் வாழ்க”, “உன்னுடன்”, “கண்ணெதிரே தோன்றினால்”, “நினைத்தேன் வந்தாய்” போன்ற படங்களில் தேவா மட்டும் இருந்திருக்காவிட்டால் நிலைமை என்ன?

ரகுமான் புதுப்பாடகர்களை அறிமுகப்படுத்துவார். ஆனால் அவரின் படங்கள் வருடத்துக்கு ஐந்தோ ஆறோதான் வெளிவரும். அத்தனை பாடல்களும் சுப்பர் ஹிட்டாக இருக்கும்தான். ஆனால் யாருக்கு காணும்? ராஜா அவ்வப்போது “மீட்டாத ஒரு வீணை” என்பார். வித்யாசாகரை ஏனோ தெரியாது நம்மாட்கள் அதிகம் பயன்படுத்தவில்லை. ஆக நமக்கு தீனி போட்டது தேவாதான். அந்தப்பாடகர்களுக்கு அதிக சந்தர்ப்பம் கொடுத்ததும் தேவாதான். ஹரிஹரன், ஹர்ணி, சுஜாதா, உன்னிமேனன், அனுராதா ஸ்ரீராம் எல்லாம் அதிகம் பாடியது தேவாவுக்கே. தேவா அதிகம் சுதந்திரமும் கொடுப்பார். மனம் விரும்புதேயில் ஹர்ணி அடிக்கிற ஒரு பிர்கா சேர்கஸ் அந்த ரகம்.

ஹரிகரனுக்கும் பாடல்களை அள்ளிக்கொடுத்தது தேவாதான். “ஒருமணி அடித்தால்” ஒரு மரண ஹிட். கொஞ்சநாள் பொறு தலைவா இன்னொன்று. “என் மனதை கொள்ளை அடித்தவளே, வண்ண நிலவே” என்று இன்று முழுக்க லிஸ்ட் பண்ணிக்கொண்டேயிருக்கலாம்.

எங்கள் வகுப்பில் பார்த்தி ஒரு தேவா பக்தன். ப்ரியா ரகுமான் பக்தன். அடிக்கடி இருவருக்குமிடையில் சண்டையே வரும். பார்த்தி தேவாவின் எந்த புது அல்பம் வந்தாலும் சீடி வாங்கி வந்துவிடுவான். நான் என்னிடமிருக்கும் பழைய கே.டி.கே கசட் கொடுத்து அழிச்சு ரெக்கோர்ட் பண்ணித்தாடா என்று கேட்பேன். என்னிடம் பெரிய கசட் ரேடியோ எதுவும் இருக்கவில்லை. ஒரு சின்ன பனசொனிக் மோனோ ரேடியோ. ஒரு டைனமோ சைக்கிள். அவ்வளவுதான். ரிவைண்டு எல்லாம் பேனையால் பண்ணுவதுதான். தொண்ணூறுகளில் பிற்பகுதியில் ஆர்மி கொன்றோலில் யாழ்ப்பாணம் வந்தாலும் இந்த கரண்டுச்சனியன், நல்லபதிவுக்கு கிடைக்கும் லைக்கு போல அவ்வப்போதுதான் வந்து போகும். நம்பமுடியாது.

ஆனால் பார்த்தியிடம் ஒரு கார் பட்டறி இருந்தது. ஒரு ஸ்டீரியோ செட்டும்.இருந்தது. போட்டால் வீடே அதிரும். நகுமோ, தொட தொட மலர்ந்ததென்ன எல்லாம் அவன் செட்டில் கேட்டபோது கிடைத்த மகிழ்ச்சி பின்னாளில் எந்த ஹோம் தியேட்டரிலும் எனக்கு கிடைக்கவில்லை. ஒருமுறை இன்னொரு புதிய ஸ்டீரியோ செட் வாங்கியிருப்பதாக சொல்லி என்னை அவன் வீட்டுக்கு அழைத்துப்போனான். நேருக்கு நேர் வெளிவந்த டைம். எங்கெங்கே எங்கெங்கே என்று ஆஷாவும் ஹரியும் பாடின பாட்டு. புது செட்டிலயும், பழைய செட்டிலயும் மாறி மாறி பாட்டை போட்டுக்காட்டி எதில நல்லாயிருக்கு என்று கேட்டு கடுப்பேற்றினான். பேஸ் முழங்கும் பாட்டு அது. நம்ம வீட்டில் டைனமோ அதனை நார் நாராக கிழிக்கும். நான் கடுப்பில், “பழைய ரேடியோவிலயே நல்லா இருக்கு மச்சான்” என்று சொல்லி அவன் முகம் கோணியதை ரசித்தேன்.

 

 

ஏ. எல் பரீட்சை நெருங்குகிறது.

அஜீத்தின் உன்னைத்தேடி என்றொரு படம் வெளிவருகிறது. சுந்தர் சி படம். கிளாஸ் கட் பண்ணி மாஸ்டரிடம் போகிறோம். மூன்று காரணங்கள். ஒன்று மாளவிகா. மற்றது தேவா. மூன்றாவது ஹரிஹரன். படத்தில் நான்கு பாடல்களை ஹரிஹரன் பாடியிருந்தார். எல்லாமே கிளாஸ். அதிலே ஒன்று “நாளை காலை நேரில் வருவாளா”. பாட்டை பார்த்தி வீட்டிலிருந்து கேட்ட ஞாபகம் இன்னமும் இருக்கிறது. ஹரிஹரன் சலங்கை கட்டி ஆடின பாட்டு. அதுவும் “தாட்சாயிணி” என்று வரும் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு சங்கதி விழும். ஒரு சங்கதியில் ஹரிஹரன் “தயை காட்டு நீ” என்று உச்சம் அடைகையில் பார்த்தி கடுப்பாகிவிட்டான்.

“தேவா பாத்ரூம் போயிருக்கோணும் மச்சான். சைக்கிள் காப்பில ஹரிஹரன் கிடாய் வெட்டிட்டாண்டா!”

பாடல்களுக்கு வயசாவதில்லை.


தொடர்புடைய பதிவுகள்

தேடித்தேடி தேய்ந்தேனே

கொச்சின் மாடப்புறா

Comments

  1. இன்று வரை அவரின் கானா'களுக்கு இணையே இல்லை.. சபேஷ் முரளி தேவா குழுவின் கானா'தான் தரை லோக்கல் குத்துகள். அவ்வகைக்கு அவர் ஒரு கடவுள் மாதிரி..

    மெலடியில் ஆசை'தான் அவரின் உச்சம்..

    ReplyDelete
    Replies
    1. ஆசை, பாண்ட் மாஸ்டர், கருப்பு நிலா பாட்டுள்ள படம், அண்ணாமலை, அப்பு என்று இது விடியா இரவு. தேவா கானா கிங். ஆனால் பலர் அவரை கானா கிங்காக மட்டுமே பார்க்கிறார்கள் என்பதே என்னுடைய சின்ன வருத்தம்.

      Delete
  2. Parthee and keerththee are real name?
    They are from St John college?
    2000 A/L?

    ReplyDelete
  3. அந்தக்காலத்தில்(?!) அவசரத்துக்கு தேவாவிடம் போனால் நேற்று சுட்ட இட்லியை பிச்சுப்போட்டு ஒரு அருமையான உப்புமா [sweet & simple] செய்து தருவார். உங்கள் அவசரத்துக்கும்[mood change?!] அதே தேவாதான் உதவுகிறார்-ஆச்சரியம்!! Uthayan

    ReplyDelete
    Replies
    1. இசை எப்போதுமே ஒரு சிறந்த வடிகால்.

      Delete
  4. "தொண்ணூறுகளில் பிற்பகுதியில் ஆர்மி கொன்றோலில் யாழ்ப்பாணம் வந்தாலும் இந்த கரண்டுச்சனியன், நல்லபதிவுக்கு கிடைக்கும் லைக்கு போல அவ்வப்போதுதான் வந்து போகும். நம்பமுடியாது".
    அதாவது யேகே பாட்டு பக்கம் எப்போது திரும்பி பார்ப்பார் என்று தவம் இருப்பதை போல்.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .