Skip to main content

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி பாத்திமா நலீம்

அன்பின் ஜேகே,

முதன் முதலாக ஒரு நாவலுக்கு விமர்சனம் எழுதுகிறேன். நேரம் ஒதுக்கி கட்டாயம் எழுத வேண்டும் என்ற வாஞ்சையோடு எழுதுகிறேன். உங்கள் கொல்லைப்புறத்துக் காதலிகள் மீது எனக்கு அதீத காதல். எழுதிய உங்களை விடவும் சில பக்கங்களையும் சில பந்திகளையும் அதிகம் வாசித்திருப்பேன் என்றே நினைக்கிறேன். இலகு தமிழும் பேச்சு நடையும் அலட்டிக்கொள்ளாத ஆங்கிலமும் கலந்து கட்டி விளாசித்தள்ளி இருக்கிறீர்கள். சிம்பிளாய் உங்களின்ட பாஷையில் சொன்னால் கௌரியின் இன்னிங்க்ஸ் போல. எங்களின்ட பாஷையில் சொன்னால் ஜயசூரிய போல. காதலிகளின் கிராமத்து மணமும், அழகான ஓவியங்களும் எக்ஸ்ட்ரா அழகு. கொஞ்ச நாட்களாகவே வேலைச் சுமைக்குள்ளும் இறக்கி வைக்க மனம் வராது போனது இந்தக் காதலிகளை.


" குட்டியன்" எனக்கு மிகவும் பிடித்துப் போன காதலி. நானே குட்டியனை வளர்த்த feeling. வாசிக்க வாசிக்க நான் வளர்த்த குட்டியனை யாரோ சூறையாடிப்போன துயரம். 109 ஆம் பக்கத்துடன் புத்தகத்தை மூடி வைத்து விட்டு நானும் அழுதேன் ஓ என்று. இப்போதும் கண் கலங்குகிறது. தொண்டையில் எச்சில் அடைக்கிறது.

பங்கர் - கேள்வி ஞானம் மட்டுமே நமக்குண்டு. அதனாலோ என்னவோ பங்கரின் விபரிப்பையும் பங்கர் வெட்டுவதன் அனுபவப் பகிர்வையும், அதனுள் குடியேறும் இன்ன பிற விடயங்களையும் சொல்லப்பட்ட விதத்தை மிகவும் ரசித்தேன். பொம்மரின் பயங்கரத்தையும், பாம்புக்கடி சாவுகளையும் போகிற போக்கிலேயே சொல்லி இருப்பது யோசிக்க வைத்தது. அன்னலட்சுமிக் கிழவி மிகவும் சுவாரஸ்யம். முதலில் சிரிப்பை வரவழைத்தாலும் மீண்டும் வாசிக்கையில் ஏனோ சிங்கப்பூரின் Anton Casey சம்பவம் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது.

மனத்தால் நினைந்து தொழுது கொண்டால் முடிந்து விடுகிறது எமது கடவுள் வணக்கம். இத்தனை பூக்களா? இத்தனை சாமிப்படங்களா? அதில் முன்னுரிமை வேறா? எனக்கு வாசிக்க வாசிக்க பெரிய thrill. சாமித்தட்டில் பூ வைக்கும் முன்னுரிமையில் வரிசையாய் வந்து முடிகையில் "கன்னத்தை காட்டினால் ? இயேசுவுக்கு வெறும் நித்திய கல்யாணி இலையே மிஞ்சும். புத்தருக்கு அதுவும் இல்லை. கச்சாமி. அருமை. ஒரு பழைய பகிடியும் ஞாபகம் வருகிறது. கிருஷ்ணரை எக்ஸாம் ஹாலில் கொப்பி அடித்தாராம் ஜீசெஸ். ரிசல்ட் வந்ததாம். ஜீசெஸ் பாஸ். ஏனெண்டா Jesus never fails. அப்போ கிருஷ்ணர்? கோவிந்தா கோவிந்தா! அதே நக்கல். சின்னச் சின்ன வரிகளில் எழுத்துக்கள் பளிச்சிடுகின்றன. அத்தனை விலாவாரியாய் விளக்கம் சொல்லி தொப்பி வாங்கிய பிள்ளையாருக்கு மஞ்சள் கோன் பூ சூட்டினாலும் கூட, ஒரு மெல்லிய பெரியார் பாதிப்பு ஆங்காங்கே தெரியத்தான் செய்கிறது. கடவுள் இருப்பதால் நன்மையே அதிகம் என்பதால் அவர் இருந்து விட்டுப் போகட்டுமே? என்ன குறைந்து விட்டது? அழகிய வரிகள். PK படம் பாத்தனீங்களே? ஒருக்கா பாருங்கோ.

சுஜாதாவின் நாவல்கள் ஏனோ படித்ததே இல்லை. உங்கள் எழுத்தின் பாதிப்பால் என் இனிய இயந்திராவோடு சுஜாதாவுடனான பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பார்ப்போம்.

கம்பவாரிதி.. பிடித்தது கடைசிப் பக்கம். நீண்ட காலமாய் நாம் வியந்து போற்றுபவர்கள் ஒரு நாள் நம்மை போற்றும் போது வரும் உணர்வு... அடடா... "சில்லிட்டது" என்பதை விடவும் வேறு வார்தைகளால் உணர்த்தி இருக்கவே முடியாது JK. அத்தனை உணர்வு பூர்வமாய் உணர்ந்தேன். வாழ்த்துக்கள்.

அரோகரா! திருவிழா நாட்களும், நல்லூர் கோயிலும், அதற்குள்ளே பொருண்மிய காட்சியும் பூங்காவனத் திருவிழாவும் எனக்கு புதிய தகவல்கள். எமக்கு சாத்வீகம் தரும் இடத்தை கேமரா பிளாஷ்களால் இருட்டடிக்க வேண்டாமே. " நச்" வசனம். கரிசனையையும் விசனத்தையும் ஒன்றாக வெளிப்படுத்துகின்றது. கண்டி பெரஹர பார்க்க தெருவோரம் தவம் கிடந்த நமக்கு ஏன் கோவில் திருவிழா பார்க்க இதுவரை தோணவே இல்லை என்ற கேள்வி எழுகிறது. அனுபவித்துதான் இருக்கிறான் பாவிப் பயல் என்று சிறு பொறாமை கூட எட்டிப் பார்க்கிறது.

"யாழ்ப்பாணத்துக் கிரிக்கெட் "ஆடிய திறமை சாலிகளுக்கு சமர்ப்பணம் ஆகட்டும். தவறிப்போன வாய்ப்புக்களின் வலிகளையேனும் தங்கள் வரிகள் வருடிப் போகட்டும்.

( யாரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் இதை வாசிக்க வேண்டாம். அடுத்த பந்திக்குப் போய் விடுங்கள்) 

என்னை மிகவும் பாதித்தது " கக்கூஸ்." ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. ஒவ்வொரு யன்னல் ஓட்டையில் இருக்கும் விஷயங்கள் தொடங்கி தூங்கும் ஹீரோ தெரிவது வரை.. அதில் இன்னுமொன்று சேர்த்துக் கொள்ளலாம். உட்கார்ந்து இருக்கும் வரை வாளியில் உள்ள நீரை விரல்களால் சுற்றிச் சுற்றி சுழல் வரைவது. அந்த அனுபவங்கள் டைல்ஸ் பதித்து ஈரம் படாமல் rug போட்ட கக்கூஸ்களில் இல்லைதான்.


1996.october. சத்தியமாய் சொல்கிறேன். வாசித்து முடித்த பின் என்ன செய்வது என்றே விளங்கவில்லை. அழுகை என்பதை விடவும் கோபமும் வெறுப்பும் இன்னும் இன்னும் வார்த்தைகளில் புரிய வைக்க முடியாத உணர்வும்... எப்படி முடிந்தது இத்தனை கீழ்த்தரமாய் யோசிக்க? செயற்பட? அந்த கண்றாவியை அனுபவித்த மக்களை நினைக்க நினைக்க..அரசியலும் வரலாறும் பேசும் எழுத்துக்களில் கூட இத்தனை ஆழத்தை அசிங்கத்தை நான் உணர்ந்ததில்லை. "அந்த வியாதிகளை விட அது கொடுத்த அவமானத்தின் நாற்றம் இருபது வருடங்கள் கழித்தும் அடங்கவில்லை. "எப்படி அடங்கும்?

"அன்புள்ள ஆங்கில இலக்கியா"வின் சண்முகநாதன் மிஸ் கறார் பேர்வழி என்றாலும் cho chweet.. " Don't be stupid, you have literature in you" எத்தனை வைரியத்தையும் நம்பிக்கையையும் விதைத்த வார்த்தைகள் என்பதை கதையின் ஒவ்வொரு கவிதைகளிலும் அதன் ஒப்பீட்டிலும் உணரக் கூடியதாய் இருந்தது. வாசித்தால் நிச்சயம் பெருமைப்படுவார். அவாவ கண்டு பிடிக்க யாரும் உதவி செய்ய மாட்டீங்களே?

இசையின் மீதான காதல் ஏகன் அநேகனிலும், என் மேல் விழுந்த மழைத் துளியிலும், இருவரிலும் பொங்கிப் பெருகுவதை சுலபமாய் காணக் கூடியதாய் இருந்தது. சில பாடல்களை கேட்கும் போது அதனுடன் தொடர்பான சில சம்பவங்களை மனசு நினைத்துக் கொள்ளும். இசைப்பக்கங்கள் அத்தனையும் அப்படித்தான். இசையும் அழகு. செலக்ட் பண்ணிய பாடல் வரிகளும் அழகு. நினைவுத் தூறல்களும் கூட. " யாரக்கா இது மியூசிக்? .... வெள்ளைக்காரனா ? " சத்தியமான சந்தேகம். நமக்கு ஒரு சங்கதியும் தெரியாது. சாஸ்திரியமும் தெரியாது. இசை கேட்டால் அப்படியே லயித்துப் போய் விட மட்டுமே தெரியும். ஆகையினால் "இருவரை " விட்டு விடுகிறேன்.

" விறகு" என்ற மேலோட்டமான விஷயத்தையும் தாண்டி அது சார்ந்த வாழ்க்கையில் இருக்கும் சுவாரசியம் அப்போது வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே விளங்கும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. ஒரு கட்டத்தில் .......கொத்தி முடிஞ்ச கையோட விறகுக்கான தேடல் கோழிக் கூட்டில் போய் முடிந்தது என்பதன் முடிவில் " கடைசியில் நாங்களும் அந்த இடத்தில் இருந்து கொத்தி அகற்றப்பட்டோம்." என்ற வரிகள் போகிற போக்கில் மனதை பிய்த்துக் கொண்டு போனது. எவ்வளவு வேதனையான இடம்பெயர்வை இத்தனை சுருக்கமாக வெளிப்படுத்த முடியுமா?

மாஸ்டரின் கதைகள் வாய்விட்டு சிரித்தேன். பக்கா பெடியன்கள் chapter. கூசிழிவு முதலான பல தமிழ் படுத்தல்கள், எப்படி கண்டு பிடித்தார்கள்? ரூம் போட்டு யோசிச்சிருப்பாயின்களோ? அம்மாமார் அக்காமாரிடம் நல்ல பிள்ளையாய் இன்று வரை நாடகமாடும் பசங்களை ஜீன்ஸ் பீத்தல் ரகசியம் சொல்லி மாட்டி விட்டிருக்க வேண்டாம். மாஸ்டரை தெரியாதென்றவங்கள் JK யையும் தெரியாதென்டு சொல்லப் போறாங்கள். கவனம்.

பெண்களையே வகைப்படுத்தி நக்கல் பண்ணி கேட்டுக் கேட்டு வெறுத்துப் போயிருக்கையில் ஆண்களுக்குள்ளுமா என ஆச்சர்யப் பட வைத்தது " கொட்டில்". சாட்சாத் கொட்டில்களை அப்படியே கண் முன் நிறுத்தியது. ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் வார்த்தைப் பிரயோகங்கள் அருமை. "ஷேர்ட் பின்னாலே அடிப்பக்கம் சோழ மன்னனின் ஓலைச்சுவடி போல சுருண்டு போய்க் கிடக்கும்". என்னதொரு கற்பனை வளம். Be blessed.

"சூப்பர் ஸ்டார்" ஏதும் மிச்சம் இருக்குதே சொல்றதுக்கு... தலைவரின் ரசிகர்கள் எல்லோருமே சிங்கப்பாதைப் பிரியர்கள்தான். ரசிகர்கள் பலவிதம். எல்லா ரசிகர்களுக்கும் JK போல காதலை புத்தகமாக்கி வெளியிட தெரியாது. ஒவ்வொரு அடிமட்ட வெறி பிடித்த ரசிகர்களுக்கும் பூ மாரி பொழிவதும் வெடி கொழுத்துவதும் very basic தேவைப்பாடு. சந்தோசம். அவர்களின் அன்பின் வெளிப்பாடு. ( எனக்கு இதில் உடன்பாடு இல்லை என்பது வேறு விஷயம்) நாம் வளர்ந்த சூழலையும் எமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் வைத்துக் கொண்டு அவர்களை " லூசுகள்" என எப்படி திட்ட முடியும்? எனக்கென்னவோ இவர்களுக்கும் வருடங்கள் பல கடந்தும் யாழ்ப்பாண வீட்டின் கிணற்றடியில் அடிடாஸ் சப்பாத்து. டிஎஸ்எல்ஆர் கமெரா. ரே-பான் சன் கிளாசஸ் அணிந்து சிலு சிலு வென குளிரடிக்குது அடிக்குது பாட ட்ரை பண்ணிய JKக்கும் பெரிதாய் வித்தியாசம் ஒன்றும் இல்லை. "மணிரத்தினம் " இயக்குனர் என்பதையும் தாண்டி ஒரு இன்ஸ்பிரேஷன் ஆனதும் இந்த காதலினால்தான். காதலின் தீவிரம். அவ்வளவுதான்.

மகாபாரதம் இராமாயணம் எல்லாம் ஏ லெவல் படித்த காலங்களோடு முடிந்து போயிருந்தது. அதன் பின்னர் வாசிப்பு வேறு துறைகளை நோக்கியதாய் விரியவாரம்பிக்க அப்படியே நின்று போன இலக்கியத் தேடலை கிளறி விட்டிருக்கிறது மகாபாரதமும் கம்பவாரிதியும். அதிலும் கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நடக்கும் கொடை பற்றிய நீதிக்கதை. Simply superb.

பூந்தளிர் அமரர் சித்திரக் கதைகள் படித்த புராதன கட்டிடத்தின் அருமை உணராதவர்கள் எல்லாம் " அப்பாடா... 400 வருசத்து பழசா" வடிவேலு வகையறா. விட்டுவிடுங்கள்.

"குட்டி" மனதை உலுக்கிய சோகம். தமது வாரிசுகளை இயக்கத்துக்குத் தாரை வார்த்த அத்தனை உள்ளங்களையும் ஏன் வாசிக்கும் எம்மையும் கூட கதறி அழ வைக்கும் வலிய படைப்பு. வாசித்து முடித்த பின்னும் கூட "குட்டி கத்திக் கொண்டே பின்னாலே ஓடி வருகிறாள்."

"மணியாள்" கண்களை கசக்கிப் பிழியாமல் நெஞ்சைத் தொட்ட காதல் கதை. சண்டிக்கட்டு கட்டிக் கொண்டு முதல் ஆளாய் பங்கருக்குள் நுழைந்து மைன்ஸ் கிளியர் பண்ணிய காதல். அடித்தும் படித்தும் அரவணைத்தும் ஆளாக்கிய காதல். " "நீயும் வாச்சியானை?" கேட்கும் போது தலை கோதி விடும் சுகம். தீப ஒளியும் சங்கர்லாலும் தாய் மடியும் தாட்டாங் கட்டிலும் கோயில் மணியோசையும் கடலோசையும்... Beautiful writing JK. மணியாளை பார்க்க வேண்டும் போல். ஒரு அழகான குருவி பொம்மை அல்லாட்டா ஒரு புத்தகம் வாங்கி பரிசு குடுக்க வேணும் போல். முன் பின் தெரியாமலேயே மணியாளில் இத்தனை காதல் கொள்ள வைத்த JK யின் எழுத்துக்கள்... ஒரு புத்தகம்அடிச்சிட்டீங்கள் jK. மணியாளுக்கு சொல்லுங்கோ.. உங்கட முதல் பிரசவம் சுகப் பிரசவம் எண்டு.

வாசித்து முடிக்க தோன்றியது எனக்கும் மணியாளைப் போலவே.

" அடச்சிக்.... முடிந்து விட்டதே" .

-- பாத்திமா ஹசானா நலீம்

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...