Skip to main content

உனையே மயல் கொண்டு

 

_மயல்_கொண்டு__40494_zoom

சந்திரன் அவுஸ்திரேலியாவிலே விஞ்ஞான முதுமானி ஆராய்ச்சி மாணவனாக இருக்கிறான். மனைவி ஷோபா,  மிக இளம்வயதில் திருமணம் முற்றாக்கப்பட்டு, புகைப்படத்தில் பார்த்த சந்திரனை நம்பி அவுஸ்திரேலியாவுக்கு வந்திறங்கியவள். அவுஸ்திரேலியா வந்து இரண்டாம் வருடமே  குழந்தை.குழந்தைப்பேற்றோடு  ஷோபாவின் தாயும் தந்தையும்  வந்திணைகிறார்கள்.

குழந்தை பிறந்த சில நாட்களிலேயே ஷோபாவின் நடவடிக்கைகளில் மாற்றம் உருவாகிறது. மனம் ஒரு நிலையில் இல்லாமல் திடீரென்று அதி உச்ச கோபத்தையும் சமயத்தில் அதியுச்ச மகிழ்ச்சியையும் காட்டத்தொடங்குகிறாள். இது உடலுறவு வாழ்க்கையிலும் பிரதிபலிக்க ஆரம்பிக்கிறது. ஷோபாவுக்கே தன்னில் ஏற்படும் மாற்றம் புரிகிறது. தன்மீதான கழிவிரக்கம், கோபம் மேலும் அதிகரிக்கிறது.  

இந்தச்சமயத்தில் சந்திரன் ஜூலியா என்கின்ற நடுத்தர வயதுப் பெண்ணை சந்திக்கிறான்.  உதவி செய்கிறான். உறவு ஆரம்பிக்கிறது. ஜூலியா மூன்று முறை திருமணம் செய்து இப்போது தனித்திருப்பவள். இரண்டு பிள்ளைகள். இருவருமே பெரியவர்கள்.வயதுக்கு வந்த மகன் வீட்டில் இருக்கத்தக்கதாகவே ஜூலியா சந்திரனோடு உறவு கொள்கிறாள்.

சந்திர‌ன் ஷோபா, ஜூலியா என்ற இரு உறவுகளாலும் தடுமாறுகிறான். இந்த நிலையில் ஷோபாவுக்கு வந்திருப்பது பைபோலர் டிஸ் ஓர்டர் எனப்படும் மனவியாதி என்பது தெரியவருகிறது. வியாதிக்கு காரணம் ஷோபாவின் இளவயது யுத்த அனுபவங்கள். ஷோபா எண்பத்து மூன்று கலவரத்தின்போது கடுமையாக பாதிக்கப்பட்டவள். பின்னர்  யாழ்ப்பாணத்தில் டெலொவில் இணையும் அவள் தமையனையும் பலி கொடுக்கிறாள். இச்சம்பவங்கள் அவளின் ஆழ்மனதில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் இப்போது நோயாக வெளிப்படுகிறது. அவர்களின் வீட்டிற்கு மீளவும் ஷோபாவுன் பெற்றோர்கள் வந்து சேர்கிறார்கள்.  

ஷோபாவின் வியாதியை எப்படி அவளும் சந்திரனும் எதிர்கொள்கிறார்கள். இது சந்திரன் ஜூலியாவுக்கிடையான உறவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்கின்ற வகையிலான உறவு மற்றும் உணர்வுச்சிக்கல்கள்தான் நாவலின் மீதிக்கதை.

“உனையே மயல் கொண்டு”

நோயல் நடேசன் எழுதிய இரண்டாவது நாவல். அவருடைய முதல் நாவலான வண்ணாத்திக்குளம் மிக எளிமையான வாசிப்பனுபவத்தைக்கொடுக்கக்கூடிய ஒரு நேர்கோட்டு நாவல். அனேகமான ஈழத்து எழுத்தாளர்கள் கடித்துத்துப்பிய, இனக்கலவரத்தை மையப்படுத்திய தமிழ் சிங்கள காதல் கதை. நடேசனுடைய மூன்றாவது நாவலான அசோகனின் வைத்தியசாலை முற்றிலும் புதியகளமான அவுஸ்திரேலிய  மிருக வைத்தியசாலையை  மைதானமாக வைத்து, வேறுபட்ட இனத்து மனித உணர்வுகளோடு விளையாடப்பட்ட ஒரு கிளாசிக் நாவல்.

வண்ணாத்திக்குளத்துக்கும் அசோகனின் வைத்தியசாலைக்கும் நடுவிலே சிக்கிய நாவல்,

"உனையே மயல் கொண்டு'.

இது பாலின்பத்தின் அகச்சிக்கல்களை பேசும் சிறந்த நாவல் என்கிறது எழுத்தாளர் எஸ். ராவின் முன்னுரை. இது பை போலர் திஸ் ஒர்டரை சொல்லும் ஒரு நாவல் என்கிறது ராஜேஸ்வரி சண்முகத்தின் முன்னுரை. எனக்கென்னவோ “உனையே மயல் கொண்டு” நாவல் புலம்பெயர் வாழ்க்கையின் அதிர்ச்சிகளையும் அகச்சிக்கல்களையுமே முதன்மையாக முன் வைக்கிறது என்று நினைக்கத்தோன்றுகிறது. காமத்தையும் பைபோலர் திஸ் ஓர்டர் நோயையும் அதன் கருவிகளாக்கியிருக்கிறார் நடேசன். ஆனால் நாவல் முழுதும் அகச்சிக்கல்தான். சந்திரனின், ஷோபாவின், ஜூலியாவின் என்ற மூன்று பாத்திரங்களின் அகச்சிக்கல்கள். மூவருக்கும் ஏதோ ஒரு தனிமையில் தத்தமது அகநெறிகளுடன் தாமே முரண்பட்டு முண்டியடித்துக்கொள்கின்றார்கள். அந்த முண்டியடிக்கும் புள்ளியாக காமம் இருக்கிறது. இதிலே யார் கெட்டவர், யார் நல்லவர், யார் செய்தது சரி, எது பிழை என்கின்ற வேண்டாத வேலைகளை நடேசன் செய்யவில்லை. அவர்களை அவர்களாகவே உலாவவிட்டு பின்தொடர்கிறார். சந்தர்ப்பங்களை உருவாக்கி அவற்றை அப்பாத்திரங்கள் எப்படி எதிர்கொள்கின்றன என்று பரிசோதிக்கிறார். நாவலில் சந்திரன் பரிசோதிக்கும் ஈகோல் பக்டீரியாபோல. இவற்றை ஒரளவுக்கு தெளிவாக எதிர்கொள்பவள் ஜூலியாதான்.  அவள்தான் தான் என்ன செய்கிறோம் என்பதில் தெளிவாகவே இருக்கிறாள். அதற்கு அவளின் வாழ்க்கை அனுபவங்கள், நாட்டின் கலாச்சாரம் துணைபோகிறது. ஷோபா தனக்கு வியாதி இருக்கிறது என்பதை அறிந்ததும் உடனடியாக தடுமாறினாலும் நாளடைவில் தெளிவாகிறாள். ஒரு புலம்பெயர் குடும்பத்துக்கு, அதுவும் யாழ்ப்பாண வாழ்க்கைப் பின்னனியில், யுத்த பின்னனியில் வளர்ந்த ஒரு " சுத்த யாழ்ப்பாணத்தான்" சந்திரன்தான் இந்த வாழ்க்கையின் அதிர்ச்சிகளை முகம்கொடுக்க திணருகிறான். அதிகமாக தன்னோடு முரண்படுகிறான்.  ஒரு கட்டத்தில் சந்திரனே சொல்லுவான்.

“எனக்கேன் குண்டல்ராவ் போன்று ஒரே நேர்கோட்டில் வாழ்க்கை இல்லை?”

இதுதான் நாவலின் கதை. நேர்கோட்டில் இல்லாமல்போனதால்தான் சந்திரன் நாவலின் முக்கிய பாத்திரம் ஆகினான். இல்லாவிட்டால் குண்டல்ராவ் ஆகியிருப்பான்!

இந்த இடத்திலே இன்னொரு நாவலை குறிப்பிட்டு சில விஷயங்களை அலச ஆர்வமாக இருக்கிறது. “The Immigrant”  என்று மஞ்சு கபூர் எழுதிய ஆங்கில நாவல் ஒன்று இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரே கதைகரு. கனடாவில் பல் வைத்தியனாக தொழில் புரியும் ஒரு இளைஞன் இந்தியாவிலே திருமணம் முடித்து மனைவியை கூட்டி வருகிறான். அவனுக்கு பாலியல் உறவில் ஒரு பலவீனம் இருக்கிறது. அது கொஞ்சம் குற்ற உணர்வாக வெளிவந்து மனைவியுடனான குடும்பவாழ்க்கை கசக்கிறது. அவனுக்கு கிளினிக்கில் வேலைபார்க்கும் இன்னொரு பெண்ணோடு உறவு. மனைவிக்கு புது நாடு. புது இடம். கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருடைய அகச்சிக்கல்களும் விரியும். முடிவில் மனைவிக்கும் ஒரு தொடர்பு ஏற்படுகிறது. காமத்தை வைத்து உள முரண்பாடுகளை மிக நுணுக்கமாக பின்னியிருப்பார் மஞ்சு கபூர். வாசிக்கும்போது “விசர்” பிடிக்கும்.

இன்னொன்று “அனல்காற்று”. அது காமத்தை, அதுவும் சந்திரா என்ற பெண்ணின் காமத்தை வைத்து ஜெயமோகன் எழுதிய நாவல். அருண் சந்திரா சுசி என்று மூன்றுபேரை சுற்றி நிகழும் கதை. சந்திராவுக்கு ஒரு மகன் கூட உண்டு. ஜெயமோகன் சும்மா காமத்தை வைத்து அக முரண்பாடுகளோடு விளையாடியிருக்கும் நாவல். அவர் கொஞ்சம் கொஞ்சமாக நாவலை ஊதி ஊதி ஜூவாலையாக்கி இறுதியில் எரிமலையாக்குவார். எரிமலை பின்னர் சடக்கென்று அடங்கிவிடும். “காமத்தின் அனல்காற்று குளிர்ந்துதான் ஆகவேண்டும் ஆனால், குளிரும் கணத்திற்கு முன்னர் அது செடி கொடிகளுடன் நகரையே கொளுத்திவிடுகிறது” என்பார் ஜெயமோகன்.

“உனையே மயல் கொண்டு” நாவல் “The Immigrant” போன்றோ,  “அனல் காற்று” போன்றோ வரக்கூடிய அத்தனை அடிப்படைக்கூறுகளையும் கொண்டது. நடேசன் அதனை முழுமைப்படுத்தாமல் வெறுமனே ஆங்காங்கே தொட்டுவிட்டுப்போய்விட்டார் என்பது எனக்கு மனவருத்தம். ஜெயமோகன் சொல்லும் அந்த நகர் எரிப்பு உச்சக்கணங்கள் இந்நாவலில் வெறும் அடுப்போடு நின்றுவிட்டது. ஷோபாவின் பை-போலர் டிஸ் ஓர்டர், உடலுறவில் அவளது அணுகுமுறை, அதனூடான புலம்பெயர் தமிழரின் அகச்சிக்கல், ஜூலியா சந்திரன் உறவு என்று அத்தனை புள்ளிகளிலும் மெல்ல மெல்ல நாவலை கட்டி எழுப்பியிருக்கலாம். எழுப்பியிருந்தால் நாவலின் தளமே வேறு. நடேசனுக்கே அந்த நாவலை முழுமைப்படுத்தாத வருத்தம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

நான் முதலாவதாக வாசித்த நடேசனின் நாவல் அசோகனின் வைத்தியசாலை. அப்போதே அவர் எழுத்தின் வாசகனாகிவிட்டேன். உடனடியாகவே வண்ணாத்திக்குளம் வாசித்தேன். சாதாரண கதை என்றாலும் கதை சொல்லும்பாணி உட்கார்த்தி வைத்தது. “உனையே மயல் கொண்டு” நாவலும் அப்படித்தான். ஆரம்பித்தால் நிறுத்தமுடியாது. அதே சமயம் வேகமாகவும் வாசிக்கமுடியாது. நடேசனின் கதை சொல்லும் பாணியில் ஒருவித மோன நிலை இருக்கிறது. நாவல் எறும்புக்கூட்டம்போல சீராகப்போகும். கலைக்க மனம் வராது. கடும் பூச்சுகள் இல்லாமல் உள்ளதை உள்ளபடி raw வாக சொல்லுவார். சமயத்தில் அதை மீறி விவரணங்கள் வரும்போது வாசிப்பு ஒட்டாது. கவனிப்பார் என்று நம்புகிறேன்.

தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர் நடேசன். அவருடைய மூன்று நாவல்களும் ஏதோ ஒரு சலனத்தை எங்கோ ஒரு மூலையில் வாசகனுக்கு ஏற்படுத்தும். அவருடைய சிறுகதைகளில் அது எனக்கு கிடைப்பதில்லை. அவருடைய அரசியலிலும் அது கிடைப்பதில்லை. நடேசன் என்னைப்பொறுத்தவரையில் சிறந்த நவாலாசிரியர். இன்னுமொரு இருபது வருடங்களுக்குப்பின்னரான வாசிப்புலகத்திலும் நடேசனின் இடம் ஒரு நல்ல நாவலாசிரியர் என்ற அந்தஸ்தோடே இருக்கும் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கையை மனதில் வைத்து, நீளத்தைப்பற்றி யோசிக்காமல் ஒரு முழுமையான நாவலை அவர் எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்.  

காத்திருக்கிறேன்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


அசோகனின் வைத்தியசாலை

ஏனைய நூல் வாசிப்பனுபவங்கள்.

Comments

  1. For me, Noel's best literary work was his letter to president MR, thanking him for winning the war. The joy and affection he expressed was not nuanced, but plain and simple. Noel has always been driven by his his loyalty to a certain armed group of 1980s. This is always camouflaged in all of his works, literary or otherwise.

    ReplyDelete
    Replies
    1. It could be true. Well then I haven't read that letter, neither interested. I only read three of his novels and few short stories. Sorry I couldn't read this novel in the same way you did. What he does in his political and personal life doesn't distract me.

      Thank you for your commen

      Delete
  2. It is time for JK to try something like that.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...