Skip to main content

காத்திருந்த அற்புதமே

11350643_892693867490860_6937412206620419635_n

ரொபேர்ட் புரோஸ்ட் கவிதைகளை படிக்கும்போது கிடைக்கும் உணர்வுகளை எவரும் இலகுவில் விளக்கிவிட முடியாது. தனித்திருந்து மூழ்கி எழுந்தால் மாத்திரமே அர்த்தம் கொஞ்சம் புரியுமாப்போல இருக்கும். வாசிக்கும்போது நாமும் ரொபேர்ட்டோடு குதிரை வண்டியில் ஏறி உட்காரவேண்டியதுதான். பக்கத்திலேயே அவரும் அமர்ந்திருப்பார்.வண்டியை அமைதியாக ஓட்டுவார்.  பாதை போடுவது மாத்திரமே அவர் வேலை. எதுவுமே பேசமாட்டார். போகும் வழியை ரசிப்பது நம்மோடது. எப்போதாவது திடீரென்று ஒரு வசனம் சொல்லுவார். மற்றும்படி நீயே கவிதையை எழுதிக்கொள் என்று விட்டுவிடுவார். ஒரு நல்ல கவிஞன் வாசகனை கவிஞன் ஆக்குவான். ரொபேர்ட் புரோஸ்ட் தன் அத்தனை கவிதைகளிலும் அதனை செய்திருக்கிறார். தமிழில் நகுலன்அதை நிறையவே செய்திருக்கிறார். 

அது ஒரு இலையுதிர்கால பயணம். அறுவடை செய்யப்பட்ட விளை நிலங்கள், சோம்பலான பறவைகள்,  பச்சோந்திகளாக நிறம்மாறி மரம் பிரியும் பழுப்பு இலைகள் என்று காட்சிகள் விரியும். அவர் அமைதியாக இருப்பார். பயணத்தின்போது ஒரு மரம், தன் அத்தனை இலைகளையும் தொலைத்து, ஒரேயொரு இலையை மட்டும் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தது. என்னை விட்டு போகாதே பிளீஸ் என்று இலையிடம் கெஞ்சியது. இலையுதிர்காலத்தின் இறுதி இலை. இதைவிட்டால் இனி வசந்த காலத்தில்தான்  மரத்தில் இலை துளிர்க்கும். நம் வண்டி வந்த சத்தம். ஒரு கண சலனம். இலை மரத்தைவிட்டு பிரிந்து விழுகிறது.  நாங்கள் அதையும் கவனித்தபடியே தாண்டிப்போகிறோம். மனதுள் நிறைய எண்ண அலைகள். ரொபேர்ட் புரோஸ்ட் இப்போது வாய் திறக்கிறார்.

"I end not far from my going forth"

அவ்வளவுதான். முழுக்கவிதையும் பளாரென்று முகத்தில் நம் அறையும்.

இசை ரசனையும் இப்படித்தான்.  விளக்கமுடியா கவிதை. அனுபவித்தால் மாத்திரமே புரியும். ரொபெர்ட் புரோஸ்ட் வரிகள்போல.

எனக்கு இசை காட்சிப் படிமத்துக் கூடாகவே நடக்கும்.  ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு கற்பனை. ஒவ்வொரு இசைக்கோர்வைக்கும் ஒரு கற்பனை. பொத்திவச்ச மல்லிகை மொட்டு இன்டர்லூடில் ஒவ்வொருவாத்தியமும் மாற மாற இளையராஜா  அருகிலே நின்று கொன்டகட் பண்ணுவார்.  "ஏகன் அநேகன், இறைவனடி வாழ்க" என்று இளையராஜா ஏங்கையில்தான் எனக்கு மணிவாசகர் ரசித்த சிவனை உருவகிக்க முடிந்தது. "தில்சேரே" பாட்டை ரகுமான் எப்படியெல்லாம் ஸ்டூடியோவில் பாடியிருப்பார் என்று யோசிப்பேன். அவர் உச்சஸ்தாயிக்கு போகும்போது நானும் கதிரையில் ஏறி விடுவேன்!  மணீஷாவை ஷாருக் காப்பாற்றி அழைத்துப்போவதுபோல ரகுமான் எமமையும் அழைத்துப்போவார். "என் மனசை மாமன் கிட்ட பத்திரமா கொண்டு செல்வேன்" என்று சித்ரா பாடும்போது ரஜனி மீனாவை சுற்றி இளையராஜா ஒர்கஸ்ட்ராவும் சேர்ந்து டூயட் பாடும். சிலவேளை கற்பனைகள் இசையைத்தாண்டியும் போகும்.  "பூ பூ பூ பூ பூத்த சோலை" பாட்டு மண்ணெண்ணெய் ஊத்தின சாரைப்பாம்பு மாதிரி ஓடித்திரியும் என்று சென்றவாரம் எழுதியிருந்தேன். ஊரில் சல்லிக்குவியலுக்குள் ஒளிந்துகிடக்கும் சாரைப்பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினவனுக்கே அந்த காட்சிப்படிமம் புரியும். ஒரு பாட்டை ரசிக்கும்போது ஏதேதோவெல்லாம் நடக்கும். "தொட தொட மலர்ந்ததென்ன பூவே, தொட்டவனை மறந்ததென்ன" பாட்டு கொடுக்கும் அனுபவத்தை எப்படி புரியவைப்பேன்?

எங்கே எப்போது எந்தப்பாட்டு எம்மை அடித்துப்போடும் என்று சொல்லவேயியலாது.  ஒரு பாடல் எப்படி உருவாகிறது என்பதற்கு சமீபத்தில் மிகச்சிறந்த உதாரணம் ஒன்றை அறியக்கிடைத்தது. 

ஆழக்கடலில் தனிப்படகு.  அதிலே ஒரு புலி. அந்தபுலிக்கு படகை செலுத்தவும் தெரியவில்லை. தான் எங்கே இருக்கிறோம் என்றும் தெரியவில்லை.  எங்கே போகவேண்டும் என்றும் தெரியவில்லை.  பாவம் அதற்கு  தான் வாழத்தேவையான இரையைக்கூட கடலில் தேடத்தெரியவில்லை. குடிக்க தண்ணிகூட இல்லை. திணறுகிறது. உடல் மெலிந்து உருக்குலைந்து கிடக்கும் அந்தப்புலியைக் காக்க கடவுள் வடிவில் "பை" அருகே வருகிறான். இல்லையில்லை “பை” வடிவில் கடவுள் வருகிறார். கடவுள் புலிக்கு மழை நீர் பிடித்துக்கொடுக்கிறார். மீன் பிடித்துக்கொடுக்கிறார்.  படகை கரை சேர்க்க வழி சமைக்கிறார். இந்த "பை" தன்னை எப்படியும் காடேற்றி விடுவான் என்று புலி நம்புகிறது. பாதுகாப்பாக உணர்கிறது. குழந்தையைப்போலே பையின் மடியிலே தலைவைத்து தூங்குகிறது.

இது காட்சிப்படிமம்.

"A child sleeps not because he is sleepy, but because he feels safe."

"Life Of Pi" படத்தின் இசைக்கோர்ப்பின்போது அப்படத்தின் இயக்குனர் அங்க் லீ பாம்பே ஜெயஸ்ரீயிடம் இப்படிச்சொல்லித்தான் பாட்டுக்கேட்டாராம். அதற்கு பாம்பே ஜெயஸ்ரீ கொடுத்தபாட்டுத்தான் "கண்ணே .. கண்மணியே". மேற்சொன்ன அவ்வளவு விசயத்தையும் வைத்து இசையமைக்கப்பட்ட தாலாட்டுப்பாட்டு. பாட்டின் தாயன்பில் சிங்கமே தூங்கிவிடும்.  It can't get any better.

இனி, என்னை இவ்வளவும் எழுத வைத்த பாடலுக்கு வருவோம். 

******************

"மென்மலரே மின்மினியே"

ஒரு வாராமாக என் பிளே லிஸ்டில் ரிப்பீட்டிக்கொண்டிருக்கும் பாடல். கேட்டு "நல்லாயிருக்கே" என்று ஒரு பாராட்டு, லைக், ஷெயாரோடு தாண்டிச்செல்லாதபடி என்னை சில நாட்களாக இழுத்துவைத்துக் “கேளடா” என்று சொல்லும் பாட்டு.  அப்பிடி என்ன இருக்கு இதிலே என்று நானே கேட்டு கேட்டுப் பார்த்ததில்தான் மேற்சொன்ன எல்லாமே எழுதவேண்டிவந்தது. 

ஏதோ இருக்கு. எவ்வளவோ இருக்கு.

 

மெதுவாக .. மிக மெதுவாக ... “உஷ்ஷ் குழந்தை தூங்குகிறான்” என்று சொல்லிக்கொண்டே ஆரம்பிக்கும் ஸ்டிரிங்க்ஸ்.  அப்படியே "தாலேலோ" என்று ஆரம்பிக்கிறார் சிந்தூரி. So meditative. கூடவே கெஞ்சிரா நானும் வரப்போகிறேன் என்று கெஞ்சத்தொடங்கும். இண்டர்லூட் புல்லாங்குழலில் ஆரம்பிக்க வயலின் பின்னர் இணைய,சிம்பிளாக மயக்கத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். பாட்டின் ஹை லைட் அந்த "காத்திருந்த அற்புதமே" ஹார்மனி! பின்னர் ஒரு தாலேலோவுக்குப்பின்னர் வயலின் மீதி தாலேலோவை பார்த்துக்கொள்கிறது. கேட்க கேட்க பாட்டு வசப்படுத்திகொள்கிறது. கொல்கிறது.

They cracked it.

முதலில் இசையமைப்பாளர்கள் அமல் ரோஷன், சதீஷ் ராமதாஸ் மற்றும் இரோஷனுக்கு.

எங்களுக்கு இதுதான் வேண்டும். கேட்டால் திருப்பிக்கேட்க வைக்கவேண்டும். திருப்பிக்கேட்டால் மறுபடியும் திருப்பிக்கேட்க வைக்கவேண்டும். மறுபடியும், மறுபடியும் ... அப்படியே கேட்டுக்கொண்டேயிருப்பதற்கு  ஒரு பாட்டுக்குத்தேவை நல்ல மெட்டு. நல்ல இசை. மீதி எல்லாமே அப்புறம்தான். இந்தப்பாட்டுக்கு நல்ல இசை. நல்ல மெட்டு. வேறென்ன வேணும்? அழகு. மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது.

வாழ்த்தெல்லாம் சொல்லப்போவதில்லை. நன்றி! 

இந்தப்பாட்டில் அதிகம் வித்துவம் காட்டமுடியாது. கூடாது. காட்டினால் பாட்டின் ஜீவன் தொலைந்துவிடும். அது தெரிந்து எல்லைக்குள் நின்று பண்ணிய வேலை. அழகு. இண்டர்லூட் புல்லாங்குழல் அழகு. என்னவொன்று, தீவிர ரகுமான் ரசிகன் சிலதை பிடித்துவிடுவான். எனக்கு புல்லாங்குழல்  ரகுமானின் "ஹவா சுன் ஹவா"வின் இன்டர்லூடை கொஞ்சம் ஞாபகப்படுத்தி பின்னர் "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை"க்கு தாவியது. எல்லாமே வேறு வேறுதான். ஆனால் அங்கங்கே சில விசயங்கள் தட்டுப்பட்டது. அவ்வளவுதான். உங்களுக்கே தெரிந்திருக்காது. இப்போது அந்த இரு பாடல்களையும் கேட்டுப்பாருங்கள். கேட்டுப்பாருங்கள். புரியும். 

ஒரு விஷயம். முதல் பாட்டு. நல்ல மெட்டு. கொஞ்சம் அதிகமாக ஆடிவிட்டீர்களோ என்ற எண்ணம் நூறாவது தடவை கேட்கையில் வருகிறது. இவ்வளவு ஸ்ட்ரிங்ஸ் இந்தப்பாட்டுக்கு கொஞ்சம் அதிகமோ? அதுவும் இறுதியில் கிட்டார் over kill. இரவின் தாலாட்டுக்கு நிசப்தமே ஒரு வாத்தியக்கருவிதான். அதை வைத்தே பல இடங்களை நிரப்பியிருக்கலாம்.  கொஞ்சம் அதிகமான கோர்ட்ஸ் அந்த மெலடிக்கு சின்ன மறு என்பது என் எண்ணம். எப்போது ஒரு "தாலேலோ"வை வயலின் எடுத்துக்கொண்டதோ அதற்குப்பிறகு செந்தூரியையும் கிட்டார்காரனையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு வயலினையும் புல்லாங்குழலையும் வைத்து மிகுதிப்பல்லவியை சஸ்டெயினாக முடித்திருக்கலாம். பாட்டு இப்போதிருக்கும் லெவலை விட மேலும் பத்துமடங்கு மேலே போயிருக்கும். கேட்கும்போது நினைத்தேன். சொல்கிறேன்.

சிந்தூரி மற்றும் கஸ்தூரிக்கு!

இந்த ஸ்கேலுக்கு உகந்த குரல். ரஷ் இல்லாம ரசித்து உணர்ந்து நிதானமாக பாடியிருக்கிறீர்கள். ஆங்காங்கே நகாசுகளும் செய்திருக்கிறீர்கள். செஞ்சுடரெயில் ஒரு குட்டி பிர்கா .. கவனித்தோம். நைஸ். "கன்னலின் சுவை"யேயில் கொஞ்சம் சிரிக்கவும் வருகிறது. "கண் வளராய்" முதல் செட் சங்கதிகள் பக்கா! இரண்டாம்செட் ... வேண்டாம் உங்களுக்கே தெரியும்! துணிந்து ரிஸ்க் எடுத்து முயற்சி செய்யுங்கள்.

பாடல் வரிகள். தவா சஜுதரன். 

ஒரு தாய் பாடும் தாலாட்டு. வரிகள் மிக எளிமையாக இருக்கவேண்டும். கடும் கற்பனைகள், கவிதைப்புரட்சி எல்லாம் செய்யமுடியாது. கையைக்கட்டிப்போட்டு கவிதை எழுது என்கின்ற நிலை. குட்டி குட்டி விஷயங்கள் மாத்திரமே செய்யலாம். செய்திருக்கிறார். குழ்ந்தை என்றால் மென்மை, பூ, தவம், வாசம் என்ற அடையாளங்களுக்குள் கவிதை நிற்கிறது. எளிமையான கற்பனைகளை பழந்தமிழில் கொடுத்திருக்கிறார். பூம்பெயல் துளியே",  "ஆம்பலின் முகையே" , "மென்மலரே" என்று பூந்தோட்டத்துக்குள் கவிதை சுற்றுகிறது.  "புன்னகைத்தவமே" என்பதில் நின்று யோசிக்கவைக்கிறது. தவா சஜிதரனின் ஏனைய கவிதைகள் எப்படி என்று இனித்தான் தேடவேண்டும்.

இறுதியாக மொத்த குக்கூ டீமுக்கும். 

ஒரு வருடத்துக்கு முன்னர் நீங்கள் "Tum Ti Ho" பாடலை தமிழ் ஆக்கியபோது நான் “ஒரிஜினலாக ஒரு பாட்டு வேண்டும்” என்று கேட்டிருந்தேன். தந்ததுக்கும் இப்படி ரசித்து எழுத வைத்ததுக்கும் நன்றி. கலக்கியிருக்கிறீர்கள். சின்ன சின்ன விசயங்களை ரசித்துச்செய்திருக்கிறீர்கள். நீங்கள் எதுவெல்லாம் ரசித்து செய்தீர்களோ அதெல்லாம் கேட்பவனுக்கு போய்ச்சேருகிறது என்பதை சொல்லவேண்டும் என்று தோன்றியது. அதனால்தான் இவ்வளவு பெரிய ஆலாப்! என் வீட்டு முற்றத்திலும் நிலா காய்கிறது. பயப்பிடாமல் அடுத்த கட்டத்துக்கு நகருங்கள்.

சொன்னாலும் இந்தப்பாட்டு ஒரு அண்டர் பிளேதான். தாலாட்டில் ஆளாளுக்கு பின்னியிருக்கிறார்கள். அவற்றின் நீட்சிதான் இது.  இனி கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம்.  சின்ன சின்ன ஆச்சரியங்கள் நிறைந்த இசையை முயலுங்கள்.. இசையில் உங்களை தேட முயலுங்கள். ஏற்கனவே இளையராஜா, ரகுமான் எல்லாம் பின்னியெடுப்பதால் எங்களுக்கு இன்னொரு ராஜாவோ ரகுமானோ வேண்டாம். அமல் ரோஷனும் இரொஷனும் யார் என்று கண்டுபிடியுங்கள். புதுசாக ஏதாவது மாட்டும். யாழ்ப்பாண மொழி வழக்கில் எழுதப்பட்ட நாட்டார் பாட்டை மெலடியில் கொடுத்துப்பார்க்கலாம். விபுலானந்தரின் "வெள்ளை நிற மல்லிகையை" புதுசா டிரை பண்ணலாம். எங்கள் மகாஹவி உருதிராமூர்த்தியின் "கண்மணியாள் காதை"யை தட்டிப்பாருங்கள். சந்தங்களோடு மனுஷன் மெட்டுக்கு எழுதினமாதிரியே செதுக்கி வைத்திருக்கு. அவற்றை முயற்சி செய்யும்போது இயல்பாகவே ஒரு புது அடையாளம் இசைக்கோர்வைக்கு வந்துவிடும்.  செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

மீண்டும் ஒருமுறை "மென்மலரே கேட்டுப்பார்த்தேன்". எவ்வளவு எழுதியும் தீரவில்லை. பேசாமல் அழித்துவிட்டு பாட்டை மட்டும் ஷெயார் பண்ணுவோமா என்றிருக்கிறது. எதுக்கும் இருக்கட்டும்! 

குதிரை வண்டிப்பயணத்தில் நான் பார்த்தது இவ்வளவும்தான். மீண்டும் ஒரு சுற்று வரவேண்டும்.

Comments

  1. இரண்டு தடவை பாட்டை கேட்டேன், நல்லாயிருந்தது. அப்புறம், கோச்சிகாதீங்க சும்மாதான் ஒரு கேள்வி...சௌரியப்பட்டா பதில் சொல்லுங்க: வீட்ல விசேஷமா?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா.. நன்றி மோகம். அப்டியொண்ணும் இல்லீங்கனா :D

      Delete
  2. அருமையான பாட்டை அறிமுகம் செய்த்துக்கு நன்றிகள் § குழுவுக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .