இன்று "உலகம் முழுதும்" ஹார்ப்பர் லீ யின் "Go, Set A Watchman" நாவல் வெளியாகிறது. புத்தகப்பிரியர்களுக்கு ஒரு பக்கம் கொண்டாட்டம். மற்றப்பக்கம் வயிற்றுக்கலக்கம். சில கடைகளில் வரிசையில்கூட மக்கள் நின்று வாங்கக்கூடும். ஹார்ப்பர் லீயின் முதல் நாவலான "To Kill A Mocking Bird" அறுபதுகளில் வெளியானது. வெளியான நாள் முதல் இன்று வரை அந்நாவல் ஏற்படுத்திய, ஏற்படுத்துகின்ற தாக்கம் கொஞ்சம் நஞ்சமில்லை. இப்போது அவருடைய் இன்னொரு நாவல் வெளியாகிறது என்ற ஆவல். ஐம்பத்தைந்து வருட காத்திருப்பு. சும்மாவா?
To Kill A Mocking Bird, அமெரிக்காவின் தென் மாநிலங்களில் ஊறிப்போயிருக்கும் பழமைவாத பால், இன, நிற பேதங்களை ஒரு சிறுமியின் பார்வையில் எளிமையாகச் சொல்லும் நாவல்.
மேகோம்ப் என்கின்ற தென் மாநில சிறு கவுண்டி ஒன்றிலே ஸ்கவுட் எனும் சிறுமி, தன்னுடைய அண்ணன் மற்றும் தந்தையுடன் வாழ்கிறாள். தந்தை அத்திக்கஸ் ஒரு வழக்கறிஞர். கறுப்பினத்தவர் ஒருத்தர் வெள்ளையினப்பெண்ணை வல்லுறவு செய்ததான ஒரு பொய்க்குற்ற வழக்கில், அந்தக்கறுப்பினத்தவர் சார்பாக அத்திக்கஸ் வாதிடுகிறார். இதுதான் நாவலின் இழை. அதை வைத்து, பலவித மனிதர்கள், அவர்களின் குணங்கள், வெள்ளையினத்துக்குள்ளே இருக்கும் உள் சாதிகள், பெண்களை அச்சமூகம் பார்க்கும் விதம், கறுப்பினத்தவரின் சமூக நிலை என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல கதை பல விசயங்களை கவர் பண்ணும். அவர்கள் வீட்டுக்கு அருகே பூ ராட்லி என்று ஒரு "விசரன்". அந்த ஊரில் அவனால் அப்படித்தான் இருக்கமுடியும். பூ ராட்லியை வைத்து ஹார்ப்பர் லீ பண்ணும் நுணுக்கங்கள் அபாரமானவை.
அத்திக்கஸ் தார்மீக நெறிகள் வழுவாத பக்குவப்பட்ட மனிதர். சமூக நீதிக்காக போராடுபவர். ஆனால் மாற்றம் என்பது ஒரு இரவில் வரப்போவதில்லை என்பதை புரிந்தவர். பல நூறு ஆண்டுகளாக புரையோடிப்போயிருக்கும் சிந்தனைகளை ஒரு அத்திக்கஸ் மூலம் மாற்றமுடியாது என்பதையும் தெரிந்து வைத்திருந்தார். அவசரப்பட்டு தாழியை உடைக்கமாட்டார். முரண்டுபண்ணி, எதிர்ப்போரை விலக்கிவைத்துவிட்டு பின் எதிர்ப்போரையே திருத்துவதும் முடியாதது என்பதை அத்திக்கஸ் பிள்ளைகளுக்கு விளங்கவைப்பார். தன் குழந்தைகளுக்கு அவர் நல்லது கெட்டது சொல்லிக்கொடுக்கும் பாணி பார்த்து பயிலவேண்டியது. அத்திக்கஸ் நமக்கெலாம் ஒரு ரோல் மொடல்.
அத்திக்கஸ் மேகொம்ப் ஊருக்கு செய்ததையே "To Kill A Mocking Bird" நாவல் மொத்த அமெரிக்காவுக்கும் செய்தது என்று நினைக்கிறேன். நோகாமல் சொல்லவேண்டியதை சொல்லும் வித்தை ஹார்ப்பர் லீக்கு நன்றாகவே தெரியும். வாசிக்கும்போது சின்ன சலனம் வரும். நல்லவர்களாகக்கூட மாறிவிட மனம் உந்தும். அதுதான் நாவலின் வெற்றி. இது பதின்ம வயது சிறுவர்கள், பெற்றோர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டிய நாவல். உலகின் மிக முக்கியமான நூறு புத்தகங்களுக்குள் இலகுவாக உட்காரும் இந்நாவலுக்கு பிறகு வேறு எதையும் ஹார்ப்பர் லீ எழுதவில்லை. ஊடகங்களையும் விட்டு விலகியியே இருந்தார். இப்போது மனுஷிக்கு தொண்ணூறு வயது. தானும் தன்பாடுமாக இருப்பவர்.
"To Kill A Mocking Bird" எழுதுவதற்கு முன்னர் வேறு ஒரு நாவலை ஹார்பர் லீ எழுதி பதிப்பாளரிடம் கொடுத்திருக்கிறார். அது பதிப்பாளரை அவ்வளவு கவரவில்லை. அதில் வரும் இளம்பெண் ஸ்கவுட் பிஞ்ச்சின் சிறுவயது பருவத்தை மட்டும் நாவலாக எழுதுங்கள் என்று பதிப்பாளர் ஹார்பருக்கு சொன்னாராம். அதன்பின்னர் எழுதியதுதான் "To Kill A Mocking Bird".
இப்போது அந்த நிராகரிக்கப்பட்ட முதல் நாவலின் கை எழுத்துப்பிரதியை ஹார்ப்பர் லீயின் வழக்கறிஞர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். தங்க முட்டையிடும் வாத்து. தங்க முட்டை குஞ்சு பொரிக்க பயன்படாது, ஆனால் யாருக்கு வேண்டும்? தொண்ணூறு வயசு மனுஷியிடமும் குமுதம் ஜெயகாந்தனிடம் வைரமுத்து சிறுகதைக்கு வாழ்த்து வாங்கியதுபோல எப்படியோ எழுத்து அனுமதி வாங்கிவிட்டார்கள். அதன் விளைவுதான் இன்று வெளியாகப்போகும்,
"Go, Set A Watchman"
இந்த நாவலில் அத்திக்கஸ் பாத்திரம் சிதைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் சொல்லுகின்றன. அவருடைய குணாதிசயம் கூட இதில் வேறு என்கிறார்கள். கொஞ்சம் டென்ஷனாக இருக்கிறது. நாவல் "To Kill A Mocking Bird" கட்டியமைத்திருக்கும் அத்தனை சித்திரங்களையும் கசக்கி எறிந்துவிடும்போல இருக்கிறது. ரகுமான் "முன்பே வா" பாட்டுக்கு ராப், குத்து என்று முதலில் போட்டு, பின்னர் வேண்டாமென்று மெலடியாக்கினார் என்று வையுங்கள். இப்போது அந்த குத்து வேர்ஷன் வெளியானால் எப்படி இருக்கும்?
"Go, Set A Watchman" வாசித்துவிட்டு சொல்கிறேன்!
இப்படியான வெற்றி பெற்ற கதையை நீட்டி எழுதுவது என்பது ஒரு விஷப் பரீட்சை. அது மூலத்தையே (பெரும்பாலும்) சிதைத்து நீர்த்துப் போக வைத்து விடும். ஒரு கதையின் வெற்றிக்குப் பின்னர் அதை வாசிப்பவன் அவனது புரிதலை வைத்து அவனே அந்தக் கதாபாத்திரம்(கள்) குறித்து சில கற்பனைகளைச் செய்து கொள்வான். ஒவ்வொருவரது கற்பனையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். கதாசிரியரே சில ஆண்டுகளுக்கு பிறகு வந்து அதே கதையை நீட்டி எழுதி வாசகனின் பல ஆண்டு கால பிம்பங்களை உடைத்து எறியக் கூடிய செயலை ஏன் செய்ய வேண்டும் என்றே எனக்குப் புரியவில்லை.
ReplyDeleteபாலசந்தர் சஹானா என்று சிந்து பைரவியை நீட்டினார். அது ஒன்றும் மோசமான தொடர் அல்ல. இருந்தாலும் பலரது (ஜே.கே.பி பற்றிய, சிந்து பற்றிய) கற்பனைகளை, அபிப்ப்பிராயங்களைஅது நிச்சயம் சிதைத்து விட்டது. இந்த மாதிரி வேலையை எழுத்தாளர்கள் செய்யாமல் இருப்பது தான் நல்லது.