Skip to main content

ஆக்காட்டி நேர்காணல் - 2



சமீபத்தில் எழுத்தாளர் ஷர்மிளா செய்யித் தான் பங்கு பற்றிய ஒரு கூட்டத்தில் இலங்கையில் பாலியல் தொழிலினைச் சட்டபூர்வமாக்க வேண்டும், அப்பொழுதுதான் பெண்கள் மீதான வன்புணர்வுகள் குறைவடையும் என்று குறிப்பிட்டிருப்பார். பின்னர் அது பெரியளவிலான சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது. பாலியல் தொழிலினை சட்டபூர்வமாக்குவதன் மூலம் வன்புணர்வுகள் குறைவடையுமென்பது எவ்வளவு தூரம் உண்மை? உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் எந்தப் பெண்களுமே பாலியல் தொழிலினை அவர்களாகவே தங்கள் சுயவிருப்பின் அடிப்படையில் விரும்பித் தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக ஏதோவொரு தூண்டுதலே அவர்களை அவ்வாறு செய்ய வைக்கின்றது? ஷர்மிளா செய்யித்தின் இந்தக் கூற்று சரியானது தானா? இதை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

ஷர்மிளா செய்யத் சொன்னதிலிருந்து வெறும் மேலோட்டமான வார்த்தைகளை மாத்திரமே எடுத்துக்கொள்ளாமல் அதன் சாரத்தையும், அவர் ஏன் அவ்வாறு சொல்ல நேர்ந்தது என்பதையும் உணர்ச்சிவசப்படாமல் ஆராயவேண்டும். இது சம்பந்தமான திறந்தமனதுடனான கலந்துரையாடல் சமூகத்தின் அத்தனை கட்டங்களிலும் இடம்பெறவேண்டும். வெறுமனே பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது என்பது வெள்ளைக்காரன் நமக்குத் தந்த ஜனநாயகம் போன்று கேலிக்கூத்து ஆகிவிடும்.

இதில் நான் என்ன நினைக்கிறேன் என்பதை சொல்ல முயல்கிறேன்.

இப்போதும் பாலியல் தொழில் சட்டவிரோதமாக இலங்கையில் தாராளமாகவே  இடம்பெறுகிறது. புறக்கோட்டை பஸ் நிலையத்தில் இரவு யாழ்ப்பாண பஸ்ஸுக்கு காத்திருக்கும் இளைஞனிடம் தரகர்கள் எவ்வித பயமுமின்றி நெருங்குவார்கள். பக்கத்திலேயே பொலிஸ் நிற்கும். பிரச்சனையே கிடையாது. ஒரு நிமிட சபலம் போதும். சட்டம் எல்லாம் இயற்றத்தேவையில்லை. பாலியல்தேவையை பூர்த்தி செய்யலாம். அப்படிப்போகிறவனுக்கு அது சட்டரீதியானதா இல்லையா என்பதும் ஒரு பிரச்சனையே கிடையாது. சட்டரீதியாக்கினாலும், செலவு குறைவு என்று அவன் களவாகத்தான் இவ்வேலைகளை செய்வான். 

இங்கே பிரச்சனை சட்டம் இல்லை. நம் சமூக கட்டமைப்பே.

நம் சமூகத்தில் முறையாக நெறிப்படுத்தப்பட்ட பாலியல் கல்விமுறை இல்லை. அறிவு இல்லை. பாலியல் சம்பந்தப்பட்ட மனநிலை மிக மோசமாக விகாரப்பட்டு நிற்கிறது. இது சமூகத்தின் படித்த மக்களிடையேகூட இருக்கிறது. சிறுவயது முதலே பெண்ணை சக மனுஷியாக அணுகமுடியாமல் பாலியல் சார்ந்தே அணுக எம் சமூகம் கற்பித்திருக்கிறது. நம்மில் எத்தனை பேர் பெண்ணோடு நேரே கண்பார்த்து பேசுவோம்? பெண்ணை ஒரு புரியாத புதிராக்கி, ஆண் பெண் என்ற குழு மன நிலையை உருவாக்கி வாழுகின்ற சமூகம் இது. ஆணும் பெண்ணும் பழகுதல் என்பது இங்கே இயல்பு கிடையாது. பெண்ணை இன்னமும் சமூகத்தின் சம மதிப்பு கொண்ட மனுஷியாக பார்க்கும் பக்குவம் நமக்கில்லை. நாங்கள் ஆரம்பக்கல்வியிலிருந்து இதனை ஆரம்பிக்கவேண்டும். நம் கலாச்சார புரிதல்கள் காலத்துக்கமைய மாறவில்லை/மாற்றப்படவில்லை. அதனை நாம் முதலில் ஏற்றுக்கொள்ளவேண்டும். சமூகத்தின் அத்தனை நிலைகளிலும் இது இடம்பெறவேண்டும். அதற்கான பொறிமுறைகளை அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மூலம் உருவாக்கவேண்டும். 

இது நீண்டகால திட்டம் என்பதால் உடனடித்தேவையாக ஊரக விழிப்புக்குழுக்கள் உருவாக்கப்படவேண்டும். விழிப்புக்குழுக்களில் பாடசாலை மாணவர்களும் அங்கம் வகிக்கலாம். அதன்மூலம் மாணவர் மட்டத்தில் இடம்பெறும் மது, போதை, பாலியல் சம்பந்தமான நடவடிக்கைகள் பெரியவர்களை சென்றடையும். முக்கியமாக இதில் ஈடுபடும் பகுதியினரை சீர்திருத்துகின்ற கட்டமைப்பையும் சிந்திக்கவேண்டும். வெறுமனே வெட்டு, கொல்லு என்கின்ற கோசங்கள் எந்த பயனையும் தரா.

உங்கள் பதிலிருந்து நீங்கள் விபச்சாரத்தை ஆதரிக்கின்றீர்கள் என்கின்ற முடிவுக்கு நான் வருகின்றேன். என்னுடைய புரிதல் சரியானதென்றால் உங்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் ஒரு பெண்ணாகப் பிறந்திருந்தால் (விபச்சாரம் புரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் மாத்திரம்)விபச்சாரம் செய்திருப்பீர்களா? அப்படியெனில் நாற்பது வயதுக்குப் பிறகு உங்களுடைய தேவைகளை நீங்கள் எவ்வாறு பூர்த்தி செய்வீர்கள்?
விபச்சாரத்தை நான் ஆதரிக்கிறேன் என்று எங்கே சொன்னேன்? வெறுமனே பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது பிரச்சனைக்கு தீர்வாகாது என்பதையே விளக்க முயன்றேன். இந்தப்பிரச்சனையின் மூலத்தை ஆராயவேண்டுமென்றே குறிப்பிட்டேன். பாலியல் கல்வியையே  ஆதரிப்பதாக சொன்னேன். பாலியல் தொழிலை அல்ல. சர்மிளா செய்யத் என்ன சொல்கிறார் என்பதை உணர்ச்சிவசப்படாமல் விளங்கிக்கொள்ள முயல்வோம் என்கிறேன். ஆதரிக்கவேண்டும் என்று சொல்லவில்லை. நீங்கள் உடனே நான் விபச்சாரத்தை ஆதரிக்கிறேன் என்ற ஒற்றைவரி முடிவுக்கு வருகிறீர்கள். முதலில் கருத்துக்களை முன்முடிபுகள் இல்லாமல் கேட்கப்பழகுவோம். பாலியல் கல்வி வேறு பாலியல் தொழில் வேறு. இரண்டையும் போட்டு குழப்பும் சமூகமாக நாங்கள் இருக்கிறோமென்றால் எங்கள் உடனடித்தேவை பாலியல் கல்வியாகும் . 

உங்கள் கேள்வியின் premise எனக்கு தவறாகப்படுகிறது. நான் பெண்ணாகப் பிறந்து அப்படி ஒரு சூழல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்பதுவும் பெரும் hypothetical கேள்வியாகும். ஆம் விபச்சாரம் செய்துதான் இருப்பேன் என்று சொன்னாலும் அபத்தமே. இல்லை ஒருபோதும் செய்திருக்கமாட்டேன் என்று சொன்னாலும் அபத்தமே. நாற்பது வயதுக்குமேல் நான் என்ன செய்திருப்பேன் என்று கேட்பது கற்பனையின் உச்சம்!

தொடரும் 
நேர்காணல் 1 


Comments

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .