Skip to main content

ஆக்காட்டி நேர்காணல் - 3



ஆங்கில இலக்கியங்களை நான் பெரிதாக வாசித்தது கிடையாது. ஆனால் அதன் தமிழ் மொழி பெயர்ப்புக்கள் சிலவற்றை வாசித்திருக்கின்றேன். அந்த தமிழ் மொழி பெயர்ப்புகளை எழுத்தாளர்கள் அல்லாத ஆங்கிலம் தெரிந்த மொழிபெயர்ப்பாளர்களே எழுதியிருப்பார்கள். அவர்களின் எழுத்து லாவகம் சாதாரணமாகத்தான் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் ராஜேஸ்குமாரின் எழுத்துக்களை விடவும், ரமணிசந்திரனின் எழுத்துக்களை விடவும் அயர்ச்சி தரக்கூடிய எழுத்துக்கள் தான் அவை. ஆனால் படைப்பை வாசித்து முடித்த பின்பு நல்லதொரு அனுபவத்தை பெறக்கூடியவாறாக உள்ளது. ஒரு திரைப்படத்தினை பார்த்து முடித்தவொரு உணர்வு நமக்குள் ஏற்படுகின்றது. ஆனால் தமிழில் நானறிந்து எந்தவொரு இலக்கியமும் அவ்வாறானதொரு உணர்வினை ஏற்படுத்தியதில்லை. நீங்கள் தமிழ் இலக்கியங்களை மாத்திரமல்லாது, ஆங்கில இலக்கியங்களையும் பெருமளவு வாசித்து வருகின்றீர்கள். மாறுபட்ட உணர்வுகளை இலக்கியங்கள் ஏற்படுத்துகின்றனவா?அல்லது அவ்விலக்கியங்களை எழுதிய எழுத்தாளன் ஏற்படுத்துகின்றானா?


ஒவ்வொரு வாசிப்பும் ஒவ்வொரு தளம். ஒவ்வொரு உலகம். ஆங்கில இலக்கியம் வாசிக்கையில் நாம் உருவாக்குகின்ற உலகமும் தமிழ் இலக்கியம் உருவாக்கும் உலகமும் வேறுபட்டேயிருக்கும். கதை மாந்தர்களும் வேறுபட்டேயிருப்பர். மற்றும்படி அனுபவங்களை எல்லா இலக்கியங்களுமே கொடுத்திருக்கின்றன.

ஜூஹும்பா லாகிரி எழுதிய இரண்டு நாவல்களும் சிறுகதைத்தொகுப்பும் ஆளையே அடித்துப்போடும். ஆகிமிஸ்ட் அப்படி. நோட்ஸ் புரம் அண்டர்கிரவுண்ட் அப்படி. காலித் ஹொசய்னியின் நாவல்கள் வாசித்தால் இப்படியெல்லாம் தமிழில் எழுதமாட்டோமா என்று ஏங்கவைக்கும். ஜோர்ஜ் ஒர்வல் மாதிரி சட்டயரை நாங்கள் எங்கே எழுதுவது. 

ஆங்கில வாசிப்பின் வசதி எதுவென்றால், ஒரு சோபா, ஒரு தலையணையில் உலகம் முழுதும் சுற்றி வாழ்ந்துவிடும் அனுபவத்தை அது கொடுக்கும்.

தமிழ் வாசிப்பு நிறைய மனிதர்களோடு பழகும் அனுபவத்தை கொடுக்கிறது . கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் எழுதப்பட்டது இங்கேதான். கோபல்லகிராமம் இங்கேதான். கடல்கோட்டை இங்கேதான். கண்மணியாள்காதை இங்கேதான். ஒவ்வொரு கதையும் நடந்த களம் மிகப்பரிச்சயமான நம்மூர் மண்தான். ஆனால் மனிதர்களும் சொல்லும் வாழ்க்கையும் வேறு. பொன்னியின்செல்வன் கொடுத்த உணர்வை எப்படி விவரிப்பது? நிறைய வேண்டாம். கம்பராமாயணமோ, சங்க இலக்கியமோ, பொழிப்புரையோடு வாசிக்கத்தொடங்குங்கள். நம்மாட்கள் மிரட்டியிருக்கிறார்கள். “ஒன்றே எனின் ஒன்றேயாம்” என்று ஒரு கம்பராமாயணப்பாடல் மொழி பெயர்க்கவேமுடியாத ஆழமான உணர்வுகளை கொடுக்கும். தமிழ் படித்தே அதனை வாசிக்கமுடியும். முன்முடிபுகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு களத்தில் இறங்கினால் அவற்றின் முழுப்பரிமாணமும் விரியத்தொடங்கும்.

ஆக ஆங்கிலம், தமிழ் எனற பிரிவினைகளில் எனக்கு அவ்வளவு ஆர்வமில்லை. சொல்லப்போனால் எல்லா மொழிகளிலும் படைப்புகள் குவிந்துகிடக்கின்றன. நமக்குத்தெரிந்தது இந்த இரண்டுமொழிகளும் என்பது நம் துரதிர்ஷடம். மடல் தூவா என்ற சிங்கள நாவல், சிறுவயதில் வாசித்தது. அதில் வருகின்ற உப்பாலியொடு பல நாட்கள் வாழைத் தோட்டங்களில் அலைந்திருக்கிறேன். ஆனால் அதை வாசித்தது ஆங்கில இலக்கிய பாடமாக. அதுதான் ஆங்கிலமொழியின் சிறப்பு. நிறைய மொழிபெயர்ப்புகள் அங்கே இருக்கின்றன. தோஸ்தாவஸ்கி, போலா கோயேலா என்று அத்தனை பேரின் இலக்கியங்களும் அங்கே கிடைக்கின்றன. அவ்வளவு ஏன், நான் வாசித்த ஷோபாசக்தியின் முதல் புத்தகம் Traitor ஐ ஆங்கிலத்திலேயே (டெல்லி விமானநிலைய புத்தகக்கடையில் இருந்தது) வாசித்தேன். பின்னர்தான் தமிழில் அவர் நூலகள் என் கைக்கு எட்டியது.

தமிழில் அதிகம் எழுதப்படாத பல நூல் வடிவங்களும்(Genre) ஆங்கிலத்தில் இருக்கின்றன. முக்கியமாக ஜனரஞ்சக கணித, விஞ்ஞான, பொருளாதார நூல்கள். குறிப்பாக Popular Science மற்றும் பெரியவர்களுக்கான Fantasy நூல்களை வாசிப்பதற்கு ஆங்கிலத்தை விட்டால் வேறு வழியில்லை.

சைமன்சிங் என்று Popular Science புத்தகம் எழுதுவதில் ஒரு கிங் இருக்கிறார். அவரின் அத்தனை புத்தகங்களையும் ஒரே மூச்சில் படித்து முடிக்கலாம். Fermat's Last Theorem என்ற ஒரு புத்தகம். கணித நிறுவல் ஒன்றின் வரலாற்றை திரில்லர்மாதிரி விறுவிறுப்பாக எழுதியிருப்பார். லோங்கிடியூட் என்று ஒன்று, நெட்டாங்குகளை எப்படி கணித்தார்கள் என்கின்ற வரலாறு சொல்லும் புத்தகம். அப்படியொரு ஓட்டம். வோல்டர் ஐசக்ஸன் ஐன்ஸ்டீனின் வாழ்க்கை வரலாறு எழுதியிருக்கிறார். அதனை ஒரு எட்டாம் வகுப்பு கெட்டிக்கார மாணவன் படித்தால் அவன் வாழ்க்கையே மாற்றிவிடும். இப்படியெல்லாம் தமிழில் வருவதே இல்லையெனலாம். எழுதினாலும் இது இலக்கியம் இல்லை என்று எழுதியவனின் கன்னத்தில் அறைவோம். ஹார்ப்பர் லீ எழுதிய 'To kill a mockingbird', மிக இலகுவான மொழிநடையில் எழுதப்பட்ட நாவல். நாங்கள் அதனை சிறுவர் இலக்கியம் என்று சொல்லி புறம் தள்ளுவோம். 

நாங்கள் இலக்கியத்துக்கு என்று பத்தடிக்கு பத்தடி பள்ளம் தோண்டி உள்ளேயே உட்கார்ந்துவிட்டோம். பள்ளிக்கூட மாணவன்கூட, வாசிக்கிறானோ இல்லையோ, இலக்கியத்தை அளவிட அடிமட்டத்தோடுஅலைகிறான். சிலர் விமர்சனம் எழுதிவைத்துவிட்டே புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கிறார்கள். எல்லா விமர்சகர்களையும் பிடித்து சிறையுள் போட்டு “வாசியுங்கடா” என்று பத்து வருடம் உள்ளே தள்ளினால்தான் நாம் உருப்படுவோம்.

டக்ளஸ் அடம்ஸ் எழுதியவை ஒரு விஞ்ஞான தலைமுறையையே உருவாக்கியது. இன்றைக்கும் அவர் ஒரு கல்ட் பிகர். சில வாரங்களுக்கு முன்னர் இறந்தாரே டெரி பிரச்சட். ஒரு பிரபஞ்சத்தையே சிருஷ்டித்து புகுந்து விளையாடியிருப்பார். தமிழில் அது இல்லை என்பது பெரும்குறை. சுஜாதா கொஞ்சம் முயன்றார். எண்டமூரி முயன்றார். இப்போது எம். ஜீ. சுரேஷ் எழுதுகிறார். ஆனால் படிக்க ஆள் இல்லை. கொண்டாடவும் ஆள் இல்லை. அடிப்படையில் தமிழ் கலாச்சாரமும் அவ்வகை எழுத்துகளுக்கு இடம் கொடுக்காது. எங்களுக்கு கடும்தமிழில் புரியாமல் புனைந்தால்தான் இலக்கியம். அல்லது பிழிய பிழிய நனைவிடை தோயவேண்டும். வாழ்க்கையை சொல்லும் குடும்பக்கதை எழுதவேண்டும். புருஷன் காரனுக்கு எப்படியும் ஒரு வெளித்தொடர்பு இருக்கும். சுத்தம். ஒன்றிரண்டு ஒகே. ஒவ்வொருநாளும் புட்டும் சம்பலும் என்றால் செமியாக்குத்து வந்து தொலைத்துவிடும். 

ஆக தமிழில் அபரிமிதமான இலக்கியங்கள் இருந்தாலும் அவை ஒருவித ஸ்டீரியோடைப்புக்குள் சிக்கிவிட்டனவோ என்று யோசிக்கத்தோன்றுகிறது. என்னைக்கேட்டால், நிறைய வித்தியாசமாக வாசிப்பதற்கு பல்லைக்கடித்துக்கொண்டு ஆங்கிலம் படிக்கவேண்டும். அது அவ்வளவு சிரமுமில்லை. சேட்டன் பக்கத்திலிருந்து ஆரம்பிக்கலாம். மிக இலகுவாக புரியும். பின்னர் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகரலாம். கொஞ்சம் கொஞ்சமாக அதற்குள் இறங்க அடர்ந்த காடே விரியும். எங்கள் மனமும்தான். அதன்பிறகு தமிழுக்குள் எழுத உட்கார்ந்தால் புதுத்தளங்களை தொடங்கலாம். 

ஏ.ஆர். ரகுமான் இசையில் செய்ததுபோல.

தொடரும்


Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...