Skip to main content

ஆக்காட்டி நேர்காணல் - 4


ஜாக் ஓடியா. ஒரு பிரான்ஸ் தேசத்து மனிதர். பிரஞ்சு மொழியை தாய்மொழியாக் கொண்டவர். வேறு இனம், வேறு மதம். இத்தனை தூரமான ஒரு மனிதர் இலங்கைத் தமிழ் அகதியொருவரின் அகச் சிக்கலைப் பற்றி படமெடுத்து கான் திரைப்பட விழாவில் மிக உயரிய விருதான தங்கப் பனை விருதினையும் வென்றிருக்கின்றார். ஆனால் இலங்கையைச் சேர்ந்த எங்களின் படைப்புகள் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றது. சினிமாத்துறைக்கு மாத்திரமல்லாது, இலக்கியத்துறைக்கும் இது பொருந்தும். ஏன் இவ்வாறானதொரு நிலைமை? எங்களால் சர்வதேச விருதினை வென்றிடும் அளவிற்கு இலக்கியமோ அல்லது சினிமாவோ எடுக்க முடியாதா?

முதலில் ஜாக் ஓடியா வென்றது எங்களைப் பொறுத்தவரையிலே ஒரு சர்வதேச விருதே ஒழிய ஒரு பிரான்சு படைப்பாளியைப் பொறுத்தவரையில் அது உள்நாட்டு விருதே. அதே படத்தை ஒரு இலங்கையர் எடுத்திருந்தால் கான்ஸ் விருது கிடைத்திருக்குமா என்பதும் கேள்விக்குறியே. இந்தப்படம் ஒஸ்காரிலோ, பாப்டாவிலோ கவனிக்கப்பட்டால் அப்போது பிரஞ்சியர்களுக்கு அது சர்வதேச விருது. ஓடியாவின் திறமையையோ தகுதியையோ நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் விருதுக்குரிய பின்னணிகளையும் நாம் ஆராயவேண்டியே இருக்கிறது. இதற்குமேல் படத்தைப்பற்றி கருத்துச்சொல்ல ஏதுமில்லை. படம் திரையரங்குகளுக்கு வரட்டும்.



நம்மாட்களில் சர்வதேச தரத்தில் படமெடுக்க ஆட்கள் இல்லையா என்றால், பதில் நாம் இன்னும் தயாரில்லை. நீண்ட வரலாற்றைக்கொண்ட பிரஞ்சு திரைத்துறையோடு நம்மை ஒப்பிடக்கூடாது. நம் திரைப்படத்துறை இப்போதுதான் நடை பயில்கிறது. அது ஒரளவுக்கு நிமிர்ந்து ஓடப்பழகும்வரை கூட்டு முயற்சிகளே அங்கீகாரங்களை கொண்டுவரும். அவ்வகை கூட்டு முயற்சிகள் தமிழ்நாட்டில் சாத்தியமில்லை. அங்கே எதைச்செய்தாலும் ஒருவன் அருவாள் தூக்குவதால் ஒரு நேர்மையான ஈழத்துப்படம் அங்கிருந்து உருவாவதை எதிர்பார்க்கமுடியாது. அப்படியே தப்பித்தவறி வந்தாலும் சென்சர்க்காரன் சீவிவிடுவான். நாங்கள் சமரசமில்லாத கூட்டு முயற்சிகளை ஒரளவுக்கு முன்னேறியிருக்கும் சிங்கள திரைப்படத்துறையோடு செய்யலாம். புலம்பெயர்ந்தவர்கள், மேலைத்தேயரோடு சேர்ந்து செய்யலாம். அதற்கு நல்ல ஸ்கிரிப்ட், லொபியிங், தொடர்புகள் வேண்டும். டானி போயல் "Q and A" நாவலை வாசித்து ஸ்லம்டோக் எடுத்ததுபோல, யார் கண்டார் நாளை "Still Counting The Dead" வாசித்து ஸ்கிரிப்ட் எழுதினாலும் எழுதலாம். “தீபன்” இதற்கான முதல்படியாக அமையட்டும்.

தற்போதுள்ள ஈழத்தோடு தொடர்புபட்ட படைப்பாளிகளுள் கண்ணன் அருணாசலம் எமக்கு சர்வதேச விருதுகளை வென்று தருவார் என்று நம்புகிறேன். சமரசங்கள் இன்றி உட்பொருள், தரம், செய்நேர்த்தியை மாத்திரமே நம்பி எடுக்கப்படும் ஆவணப்படங்கள் அவருடையவை. அவர் அல்ஜசீரா, ஐஆம் மூலம் வெளியிட்ட படைப்புக்கள் உலகத்தரமுடையவை. ஆனால் அவரை நம் தமிழ் மீடியாக்கள் எவையும் சீண்டுவதில்லை. வழமைபோல அவருக்கு ஒரு சர்வதேச விருது கிடைத்தபின்னரே தூக்கிவைத்து கொண்டாடுவார்கள். தலை விதி.

இலக்கியத்தைப்பொறுத்தவரையில் ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் திறமை மட்டும் விருது வாங்க போதுமானதல்ல. தொடர்புகள் வேண்டும். முதலில் சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் நம்மிடையே உருவாகவேண்டும். சோ. பத்மநாதன் மாத்திரம் போதாது. அடுத்தது விருதுக்குழுவுக்கு கொண்டுபோகுமளவுக்கு லொபி பண்ணக்கூடிய பதிப்பாளர்கள் கிடைக்கவேண்டும். நியூயோர்க்டைம்ஸ், ஏஜ் போன்ற பத்திரிகைகளில் பத்தி வரவேண்டும். போலா கோயல்லாவின் ஆகிமிஸ்ட் நாவல் முதலில் வேலைக்காகாது என்று ஸ்பானிய மொழியிலேயே பதிப்பிக்க தயங்கினார்கள். ஆனால் வெளியானபின்னர் அது ஸ்பானிய மொழியில் சக்கைபோடு போட்டது. பின்னர் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க ஒரு பெரிய பதிப்பு நிறுவனம் அவரை தொடர்புகொண்டது. அதற்குப்பிறகு என்ன நிகழ்ந்தது என்பது வரலாறு.

இங்கே தமிழில் எந்த ஆசிரியரின் புத்தகம் சக்கை போடுகிறது? ஆயிரம் பிரதிகள் விற்பதற்குள் நாக்கு தள்ளிவிடும். எழுத்தாளர்களே ஆங்கிலத்தில் எழுதி பதிப்பாளரை அணுகினால்தான் உண்டு. நம் மத்தியிலிருந்து ஒரு ஆகிமிஸ்ட் உருவாக சாத்தியமே இல்லை. சிலவேளை ஒரு எழுத்தாளர் ஆங்கிலத்திலேயே மூல நூலை எழுதினால் ஒரு காலித் ஹொசெய்னியாக சாத்தியம் உண்டு. குறைந்தபட்சம் சேட்டன் பகத், அரவிந் ஆடிகோவாக கூட வரலாம். புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறையிடமிருந்து ஜூகும்பா லாகிரிமாதிரி ஒரு எழுத்தாளர் உருவாகலாம். 

அதற்கு நாங்கள் தொடர்ந்து இயங்கவேண்டும். அடுத்த தலைமுறை பேஸ்புக்கின் குட்டி சைஸ் ஸ்டேடஸ் கவர்ச்சிகளுக்குள்ளும் லைக்குகளுக்குள்ளும் சிக்காமல் சீரியசாக நாவல், சிறுகதை என்று எழுதவேண்டும். அப்படி எழுதுபவர்களுக்கு நாங்களும் நிறுவனரீதியான சப்போர்டுகளை கொடுக்கவேண்டும். உதாரணத்துக்கு கிரவுட்சோர்சிங் போன்ற கட்டமைப்புகளை நம் படைப்புக்களுக்காக உருவாக்கலாம். எழுநா ஒரளவுக்கு அதனை செய்தது. நின்று பிடிக்கமுடியவில்லை. அடிப்படை பிரச்சனை வாசிப்பு எண்ணிக்கைதான். End of the day, வாசகன் இல்லாவிட்டால் படைப்புகள் எல்லாம் எழுத்தாளனின் டயரியாகிவிடும். 

Comments

  1. ஆக்காட்டி இதழின் அட்டை படத்தில் ஷோபாசக்தி இருப்பதை பார்த்தேன், எனவே அதில் "தீபன்" பற்றி ஏதாவது இருக்கிறதா என்று தெரியாது. நான் ஷோபாசக்தியின் பேட்டியை YouTubeல் பார்த்தேன், அதில் அவர் இயக்குநர் பிரான்ஸில் வசிக்கும் அகதிகளை பின்னணியாக கொண்டு ஒரு காதல் கதையை எடுக்க விரும்பி அதற்காக ஈழத்து அகதிகளை தெரிவு செய்ததாக சொல்லியிருக்கிறார், அதனால் ஈழ மண் சார்ந்த விஷயங்கள் எந்த அளவு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்பது நீங்கள் சொன்னபடி படம் வெளிவந்தபின்தான் தெரியும்.

    ReplyDelete
  2. ஜேகே அண்ணாவின் நேர்காணலில் பல படைப்பாளிகளின் நேர்காணல்கள் உள்ளடங்கியிருக்கின்றனவா என்று தோன்றுமளவிற்கு அருமையான பகிர்வு அண்ணா....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .