ஒரு புத்தகத்திற்கான விமர்சனமென்பது அந்தப் புத்தகத்திற்கான கட்டணமில்லா விளம்பரமென்று எங்கேயோ படித்தேன் ,அது உண்மையும் கூட.ஒரு புத்தகத்திற்கு விளம்பரம் அவசியம் தானா?இதனால் ஒரு மோசமான புத்தகம் கூட அந்தப் புத்தகத்தைப் பற்றிய எதிர்மறையான புரிதலை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் இருக்கிறதல்லவா?
விமர்சனங்கள் இல்லாமல் எப்படி புத்தகங்களை வாசகனிடம் கோண்டுபோய்ச்சேர்ப்பது? எழுதியவனே, “நான் ஒரு உலகப்படைப்பு செய்திருக்கிறேன், வாங்கிவிட்டீர்களா?” என்று கூவமுடியாது. ஒரு படைப்பு எப்படிப்பட்டது, அது எப்படியான அனுபவங்களை கொடுக்கும் என்பதை விமர்சனங்களே கோடிகாட்டும். அதுவும் புது எழுத்தாளர்களுக்கு இப்படியான விமர்சனங்கள் முக்கியமானவை. ஆறாவடுவை நான் ஒரு இணையத்தள விமர்சனத்தை வாசித்தபின்னரே வாங்கினேன். கொலம்பசின் வரைபடத்தைப்பற்றி சயந்தன் எழுதியதைப்பார்த்தே அறிந்துகொண்டேன். நேர்மையான விமர்சனங்களும் வரும். சொம்பு தூக்கும், காறித்துப்பும் விமர்சனங்களும் வரும். நல்ல வாசகன் இரண்டையும் பிரித்துப்பார்க்கக்கூடியவன்.
புத்தகங்களுக்கான புரமோஷன் இங்கே பெரிதாக இல்லை என்றே சொல்வேன். எழுத்தாளரே கூவவேண்டிய இழி நிலையில்தான் இங்கே சூழல் இருக்கின்றன. ஒரு பத்திரிகை, உங்களைப்பற்றியும் உங்கள் புத்தகம் பற்றியும் சிறு குறிப்பு எழுதித்தாருங்கள், வெளியிடுகிறோம் என்கிறார்கள். எப்படி ஆரம்பிப்பது? "ஜே. கே ஈழத்து வாழ்க்கையின் முக்கியமான தருணங்…” என்று நானே எழுதிக்கொடுப்பதா? கேவலமாக இல்லையா?
புத்தகங்களுக்கான புரமோஷன் இங்கே பெரிதாக இல்லை என்றே சொல்வேன். எழுத்தாளரே கூவவேண்டிய இழி நிலையில்தான் இங்கே சூழல் இருக்கின்றன. ஒரு பத்திரிகை, உங்களைப்பற்றியும் உங்கள் புத்தகம் பற்றியும் சிறு குறிப்பு எழுதித்தாருங்கள், வெளியிடுகிறோம் என்கிறார்கள். எப்படி ஆரம்பிப்பது? "ஜே. கே ஈழத்து வாழ்க்கையின் முக்கியமான தருணங்…” என்று நானே எழுதிக்கொடுப்பதா? கேவலமாக இல்லையா?
Harper Lee யின் 'Go Set a Watchman' என்ற நாவல் வெளியாகிறது. சும்மா இதனை இணையத்தில் தேடிப்பாருங்கள். ஆளாலுக்கு எழுதித்தள்ளுகிறார்கள். நியூயோர்க் டைம்சிலிருந்து ஹெரால்ட்சன்வரை இதைப்பற்றி எழுதாத பத்திரிகைகள் இல்லை. இந்த நிலை தமிழில் இல்லை. எஸ்.ராவின் புத்தகம் வெளியானபின்னர் எங்கேயாவது ஒரு மூலையில் குறிப்பிடுவார்கள். ஷோபாசக்தியின் நாவல் வெளியாகிறது எனறு அவரே அறிவிக்கிறார். லைக் பண்ணிவிட்டு எஸ்கேப் ஆகிறார்கள். புத்தகம் எழுதுபவனே வெளியீட்டையும் நடத்தி பல்லிளித்து ஆட்களை அழைக்கிறான். அவனே பத்திரிகைகளுக்கு விமர்சனம் எழுதி அனுப்புகிறான். இப்படியான இழி சூழ் நிலையில் வாசகர்களிடமிருந்து கிடைக்கும் ஒன்றிரண்டு விமர்சனங்களையும் வேண்டாம் என்றால்?
இணையத்தில் எழுதுவதை விட புத்தகம் வெளியிடுவதென்பது செலவு கூடிய விசயம். இருந்தாலும் பல இணைய எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகள் அச்சு வடிவில் வெளிவருவதையே விரும்புகின்றார்கள், அதை ஒரு கெளரவமாகவும் நினைக்கின்றார்கள். இந்தச் சிந்தனையென்பது எதனால் ஏற்படுகின்றது?
இரண்டு காரணங்கள். ஒன்று வலுவானது. மற்றையது வலுவற்றது.
புத்தகவாசிப்பு என்பது ஒரு தனி அனுபவம். எனக்கு அது இணையவாசிப்பு மூலம் கிட்டுவதில்லை. நான் இணையத்தில் சீரியசாக வாசிப்பது குறைவு. அதுவும் வெண்முரசு போன்ற நாவல்களை இணையத்தில் வாசிப்பதற்கு சான்ஸே இல்லை. ஆனால் வெண்முரசுவை புத்தகமாக வாசிக்க முடிகிறது. ஒரளவுக்கு ஜெயமோகனின் எழுத்துநடை மண்டைக்குள் ஏறுகிறது. ஒரு புத்தகத்தோடு பனிக்காலத்தில் ரயிலின் யன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கும் அனுபவத்தை ஐபாட் எனக்கு கொடுப்பதில்லை. ஐபாடில் வாசிக்கும்போது திடீரென்று பேஸ்புக் நோடிபிகேஷன் வரும். நாலு பேரு அடிபடுவாங்கள். மூடே குழம்பிவிடும். அதனாலேயே புத்தகங்களை வாங்கி வாசிக்கிறேன். அங்கே நானும் வாசிப்பும் மட்டுமே. நம்மிடையே எவரும் வரமுடியாது. அதனாலேயே எழுத்தாளர்கள் புத்தகங்களை பதிப்பிடுவதை ஆதரிக்கிறேன். அதற்காகத்தான் அவர்களும் புத்தகங்களை பதிப்பிக்கிறார்கள் என்றால் அது வலுவான காரணமே.
சிலர் புத்தகங்களை கெத்துக்கு வெளியிடுகிறார்கள். நானும் ரவுடிதான், நாலு புத்தகம் வெளியிட்டிருக்கிறேன் என்பதற்காக வெளியிடுகிறார்கள். ஆனால் அவரைத்தனிப்பட்ட ரீதியில் அறியாதவர் எவரும் புத்தகத்தை வாங்கமாட்டார்கள். இங்கே புத்தகம் வெளியிட்டால்தான் எழுத்தாளர் என்று ஏற்றுக்கொள்ளும் நிலைமை வேறு இருக்கிறது. இணையத்தில் எழுதினால் அவரை வெறும் வலைப்பதிவாளர் என்கிறார்கள். இது தலைமுறை இடைவெளியாகவும் இருக்கலாம். பத்துவருடங்களில் இதெல்லாமே அடங்கிவிடும்.
இணையத்தில் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகங்களை அமேசன் போன்ற தளங்களினூடாக ஒன்.டிமாண்ட் மூலம் விற்றுக்கொள்ளலாம். புத்தகவாசிப்பை வேண்டுபவர்கள் அவரிஷ்டப்படி வாங்கிக்கொள்வார்கள். செலவும் குறைவு. சச்சினின் சுயசரிதம் இணையத்தில் வாங்கினேன். இரண்டு நாட்களில் வீட்டுக்கு வந்து சேர்ந்தது. பிரிண்டிங் எல்லாம் அந்தந்த நாடுகளிலேயே ஓர்டர் வர வர செய்கிறார்கள். தபால்செலவு அதிகம் இல்லை. கடைகளுக்கு புத்தகத்தை விநியோகிக்க இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். நூலகங்களும் டிமாண்ட் இருந்தால் தாமாகவே வாங்கிப்போடுகின்றன. ஆங்கிலத்தில் இதுதான் நடக்கிறது. தமிழிலும் நடக்கும். நம்மாளு மெதுவாய்த்தான் வருவாய்ங்க.
இன்னுமோர் முக்கியமான கேள்வி . இலக்கியத்திற்கு சில மரபுகள் இருக்கின்றன. கவிதையென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், நாவலென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கின்ற சில மரபுகள் இருக்கின்றன. ஆனால் சம கால எழுத்தாளர்களோ அந்த மரபினை கட்டுடைக்கின்றார்கள். இது இலக்கியத்திற்கு ஆரோக்கியமானதா?
இப்போது மரபு என்றிருப்பதும் முன்னரிருந்த மரபை கட்டுடைத்து வந்ததுதானே. உரைநடை என்பதே பின்னாளில் உருவானதுதான். இங்கே எதுவுமே சாஸ்வதம் கிடையாது. சங்க இலக்கிய மரபை மீறி வள்ளுவன் குறள் வெண்பா செய்தான். தன் கற்பனை சிருஷ்டிக்கு வெண்பா விதிகள் தடையென்று நினைத்தோ என்னவோ கம்பன் சற்று இலகுவான விருத்தத்துக்கு தாவினான். கடுமையான நீண்ட தமிழ் உரை நடைகள் கோலோச்சிய காலத்தில்தான் புதுமைப்பித்தன் ஒரு புரட்சியையே செய்தார். சுஜாதா அதை இன்னமும் கொஞ்சம் நவீனப்படுத்தினார். கோபல்லகிராமம் எந்த மரபுக்குள் வருகிறது? சிறுகதையா? நாவலா? அனுபவ கட்டுரையா? ஜே. ஜே சில குறிப்புகளை எதற்குள் அடக்க? சீரோ டிக்ரீ வாசிக்கையில் திடீரென்று கேள்வி பதில் அத்தியாயம் எல்லாம் வருகிறது. அதை எதற்குள் அடக்குவது? படைப்பாளிகளை நீ இதைச்செய், அதைச்செய் என்று யாரும் டிக்டேட் பண்ணக்கூடாது. பண்ணவும் முடியாது. உடைப்பதோ, இல்லை மரபுக்குள் நின்று எழுதுவதோ அவனிஷ்டம். அவன் வசதி. காலத்தின் போக்கில் அவற்றுள் எவை தகுமோ அவை நிலைக்கும். மற்றையவை காணாமல் போய்விடும்.
மொழி தன்னைத்தானே புதுப்பிப்பதில்தான் அதன் நீட்சி தங்கியிருக்கிறது. அதற்கு மரபைக்கட்டுடைத்தல் அவசியமாகிறது. ஆனால், இதோபார் நான் ஒரு புரட்சி செய்கிறேன் என்று மரபை உடைப்பது, கோழி நின்றுகொண்டே சீமெந்துத்தளத்தில் முட்டையிடுவதுபோல. உடைந்துவிடும். 'புதியன புகுதல்' என்று சொன்னார்களே ஒழிய 'புதியன புகுவித்தல்' என்று சொல்லவில்லை. இயல்பாக அமையவேண்டும். படைப்புக்கு தேவையானபோது, இருக்கும் மரபு படைப்பாற்றலுக்கு தடையாக இருக்கும்போது, உடைப்பதுதான் நிஜமான கட்டுடைத்தல். அது ஆரோக்கியமானது. தேவையானது.
ஆக்காட்டி நேர்காணல் 1
ஆக்காட்டி நேர்காணல் 2
ஆக்காட்டி நேர்காணல் 3
ஆக்காட்டி நேர்காணல் 4
**************
நாளை முடியும்
ஆக்காட்டி நேர்காணல் 1
ஆக்காட்டி நேர்காணல் 2
ஆக்காட்டி நேர்காணல் 3
ஆக்காட்டி நேர்காணல் 4
Comments
Post a Comment