Skip to main content

உதயன் நேர்காணல்

 

1

உங்களைப்பற்றிய சுருக்கமாக வாசகர்களுக்கு அறிமுகம் செய்யுங்களேன்?

பெயர் ஜெயக்குமரன். இடையிடையே போரியல் இடப்பெயர்வுகள் நீங்கலாக, பிறந்து வளர்ந்தது முழுவதும் திருநெல்வேலியில். படித்தது யாழ் பரியோவான் கல்லூரியில். பின்னர் உயர்கல்வியை மொறட்டுவை மற்றும் RMIT பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தேன். தற்போது மென்பொருள் பொறியியலாளராக பணிபுரிகிறேன். தொழில் நிமித்தமாக கொழும்பு, சிங்கப்பூர் நகரங்களில் வசித்து தற்சமயம் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரத்தில் வாழ்ந்து வருகிறேன்.

படைப்புத்துறைக்குள் உங்கள் அடியெடுத்து வைப்பு எவ்வாறு நிகழ்ந்தது?

அக்கா சொல்லும் சம்பவமொன்று. எனக்கு இரண்டு வயதாக இருக்கலாம். அக்கா என்னை மடியில் போட்டு கதை சொல்ல ஆரம்பித்திருக்கிறார். "ஒரு ஊரிலே ஒரு இராஜகுமாரி இருந்தாள், அவளின் பெயர்.." என்கையில் நான் உடனே "சாந்தி" என்றிருக்கிறேன். சாந்தியக்கா பக்கத்துவீட்டுக்காரி!

பாலர் பாடசாலையில் சம்பந்தர் ஞானப்பால் குடித்த பாடத்தை படித்த நாளன்று நானும் நாலு வரி உல்டா "தோடுடைய செவியன்" எழுதி அம்மாவிடம் "கிழி" வாங்கியிருக்கிறேன். இதெல்லாம் சிறுபிள்ளை விளையாட்டுகள்.

கதை என்று உட்கார்ந்து எழுதி மற்றவர்களும் வாசித்தது பதினோரு வயதில் நிகழ்ந்தது. பதின்மூன்று வயதில் நண்பர்களோடு சேர்ந்து ஒரு புத்தகம் வெளியிட எடுத்த முயற்சி கையெழுத்துப்பிரதியொடு கருகிப்போனது. எழுத்து வீட்டிலே தீண்டத்தகாத வஸ்துவாக பார்க்கப்பட்டது. அந்நாட்களில் கவிதை கிறுக்கப்பட்ட தாள்கள் கோழிப்பீ அள்ளவே பயன்பட்டன.

பல்கலைக்கழக காலத்திலும் பல சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். கொஞ்சம் சீரியசாக எழுத ஆரம்பித்தது இணையத்தில்தான். ஆரம்பத்தில் www.iamjk.com என்ற இணையத் தளத்தில் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்தேன். அங்கே ஓரளவுக்கு உருப்படியான சிறுகதைகள் எழுதியிருக்கிறேன் என்று நம்புகிறேன். கடந்த நான்கு வருடங்களாக படலை (www.padalay.com) இணையத்தளத்தில் தமிழில் எழுதி வருகிறேன்.

படைப்புலகில் உங்கள் பிரசவங்களும் அவற்றுக்கான பின்னணிகளும்?

"கந்தசாமியும் கலக்சியும்", "அமுதவாயன்", "வெள்ளி" என மூன்று நாவல்கள், நாற்பது சிறுகதைகள், புத்தக விமர்சனங்கள், கவிதைகள், கட்டுரைகள் என்று படலை என்னை எழுத்து வசமாக்கி கட்டிப்போட்டிருக்கிறது. டக்லஸ் அடம்ஸின் நாவல்களை வாசித்த தாக்கத்தில் எழுதிய விஞ்ஞான சமூகப் புனைவே “கந்தசாமியும் கலக்ஸியும்”. சங்க கால வாழ்வை வைத்து எழுதப்பட்ட நாவல் "வெள்ளி". எக்சிஸ்டன்சலிசத்தை மையமாக வைத்து எழுதியது “அமுதவாயன்”. வாதங்கள், வாதவழுக்களை விளக்கவென எழுதப்பட்ட தொடர் “நாவலோ நாவல்”. இப்படி இணையத்தில் பல பரிசோதனை முயற்சிகளை தயக்கமின்றி செய்ய முடிகிறது. அச்சில் வெளியான என் முதல் புத்தகம் "என் கொல்லைப்புறத்துக் காதலிகள்".

புலம்பெயர் வாழ்வு உங்கள் எழுத்தில் எத்தகைய பாதிப்பை உண்டுபண்ணுகின்றது?

புலம்பெயர் வாழ்வு எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் உகந்த சூழலையும் நேரத்தையும் கொடுக்கிறது. பல்லின கலாசார நகரமான மெல்பேர்னில் வாழ்வதால் பல தரப்பட்ட மனிதர்களோடு பழகும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அது பல கதைக்களங்களை கொடுக்கிறது. தற்போது, வாசிக்கும் நூல்களிலும் அப்பன்முகத்தன்மையை உணர்கிறேன். இது எழுத்திலும் சிந்தனையிலும் தாக்கத்தை உண்டுபண்ணுகிறது.

பொதுவாகவே புலம்பெயர் படைப்பாளிகளிடம் தாயகம் பற்றிய ஏங்குதல், மீளத் திரும்பல் பற்றிய கனவுகள் வெளிப்படும். உங்கள் படைப்புகளிலும் இந்தப் பண்பு வெளிப்படுகின்றது. இது புலம்பெயரிகளின் மன அவசத்தை இறக்கி வைக்கும் சுமைதாங்கிச் செயலா?

“நனைவிடை தோய்தல்” என்று இதற்கு மறைந்த எழுத்தாளர் எஸ்.பொ பெயர் சூட்டியிருப்பார். தாம் வாழ்ந்த வாழ்க்கையை நினைந்து அழுங்கும் ஏக்கங்களின் வடிகாலாக அமையும் எழுத்துக்கள். நனைவிடை தோய்தல் எழுத்துக்களை புலம்பெயர் படைப்பாளிகள்தான் எழுதவேண்டுமென்பதில்லை. காலப்பெயர்வு காரணமாகவும் இவ்வகை எழுத்துக்கள் உருவாகலாம். கீ.ரா எழுதிய கரிசல் காட்டு கடுதாசி பல தசாப்தங்களுக்கு முன்னரிருந்த வாழ்க்கையை நினைந்து எழுதியது. ஈழத்தில் செங்கை ஆழியான் பலதடவை நனைவிடை தோய்ந்திருப்பார். சோ. பத்மநாதனின் நினைவுச்சுவடுகள், சுவடெச்சம் போன்ற நூல்கள்கூட நனைவிடைதோய்தல் வகையே. காலப்பெயர்வில் தாம் வாழ்ந்த, தற்போது கிடைக்கப்பெறாத வாழ்க்கையை நினைந்து புனையும் எழுத்துக்கள். எம்மைப்பொறுத்தவரையில் இவை ஒரு தலைமுறையின் வாழ்வியல். “என் கொல்லைப்புறத்துக் காதலிகள்” கூட நனைவிடை தோய்தல்தான். அது சொல்வது தொண்ணூறுகளில் நாம் கொண்டாடிய வாழ்க்கை. இன்று அது இல்லை. எனவே நான் புலம்பெயராவிட்டாலும் “என் கொல்லைப்புறத்துக் காதலிகள்” எழுதித்தான் இருப்பேன்.

நனவிடை தோய்தல் என்று வெறும் வடிகாலுக்காக இறக்கி வைக்கும் சப்புக்கொட்டு எழுத்துகளின் வாழ்நாள் மிகச்சிறியது. இதற்கூடாக ஒரு வாழ்வியலின் பதிவை புறம் மட்டுமல்லாது அகக்கூறுகளையும் சேர்த்து எழுதப்படும் படைப்புகளே காலத்தால் கொண்டாடப்படும். மற்றையவை மறக்கப்பட்டுவிடும்.

சில வருட காலங்களை கங்காரு தேசத்தில் கழித்துவிட்டு மீண்டும் சொந்த மண்ணில் காலடி வைத்த அனுபவம் எப்படி?

யாழ்ப்பாணத்துக்கு நான் அடிக்கடி வந்துபோகின்றவன். அதனால் மாற்றங்கள் எதுவும் முகத்திலடிக்கவில்லை. தவிர நான் வளர்ந்த யாழ்ப்பாணம் எப்போதோ இடம்பெயர்ந்து போய்விட்டது. எப்போதாவது தனியனாக ஒரு மலைவேம்புக்கு கீழேயோ அல்லது நல்லூர் தேரடியிலோ அமர்ந்திருக்கும்போது மட்டும் என் யாழ்ப்பாணமும் என்னைப்போலவே ஊர் திரும்பி என்னோடு அளவளாவும். அந்தக்கணங்களே ஊர் திரும்புதலுக்கான உந்துதல்கள்.

நீங்கள் புலம்பெயர்தலுக்கு முன்னான யாழ்ப்பாணம்-பின்னான யாழ்ப்பாணம், ஒற்றுமை-வேற்றுமைப் படுத்துக?

புதுப்பெயிண்ட் வாசத்தோடு கோயில் மாடப்புறாக்கள்.
வாசகனுக்காக காத்திருக்கும் நூலகங்கள்.
பேசுவதற்கு ஆள் இன்றி தனித்திருக்கும் மரத்தடிகள்.
காற்றுப்போய் பத்தியில் தூங்கும் மிதிவண்டிகள்.
குழைக்க ஆள் இல்லாமல் குழையும் பழஞ்சோறு.
தேங்காய்ப்பூ காய்ந்த அம்மிக்கல்லுகள்.
தார் மெழுகிய உந்துருளி வீதிகள்.
சீருடை காணாத தெருச்சந்திகள்.
ஆறரை இருட்டில் நல்லூர் திருவிழா.
காவல்துறை போலீசாகி
நயினாதீவு நாகதீபவாகி
தண்ணீர்க் கிணறுகள் எண்ணெய்ப்போத்தல்களாகி
எண்ணெய்ப் போத்தல்கள் தண்ணீர் கிணறுகளாகி
மாற்றம் ஒன்றே மாறிலி என்ற
தேற்றத்தை உணர்த்தி நிற்கின்றன.

கசக்கும் புலம்பெயர் உறவுகள்.
இனிக்கும் இருதய தொடர்புகள்.
மதில் சுவர்களில் கிழிந்து தொங்கும்
தன்னாட்சி, தேசிய கோஷங்களுக்கு மேலே
புதிதாய் பசை மணக்கும்
தனி ஒருவன் போஸ்டர்கள்.
வேலிகள் தொலைத்த படலையை திருத்தி
இரும்பு கேற்று போடுகிறது
இன்றைய யாழ்ப்பாணம்.
வெளியே நான்!

உங்கள் எழுத்தில் விஞ்ஞான பூர்வமும், எள்ளலும் பல இடங்களில் எட்டிப்பார்க்கின்றன, இது எதனால்?

எள்ளல் ஈழத்தமிழனின் வரமும் சாபமும். எழுத்தில் அது எட்டிப்பார்ப்பது இயல்பே. விஞ்ஞானத்தில் ஆர்வம் சுஜாதா போட்ட விதை.

கொல்லைப்புறத்துக் காதலிகளை மீண்டும் சந்தித்தீர்களா?

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் நூலின் பின் அட்டையில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கும்.

"சில காதலிகளை நினைக்கையில் ஏக்கம் வரும்.
சில பெயர்கள் புன்னகையை வரவழைக்கும்.
ஊருக்குத்திரும்புகையில் மனம் அவர்களையேதேடி ஓடும்.
பேசினவற்றை மீட்டிப்பார்க்கும்.
பேச மறந்தவற்றை பேசி முடிக்கும்.
சிலதுக்கு செவிட்டைப்பொத்தி அறையவேண்டும் போல தோன்றும்.
சிலது நமக்கு அறையும். "

சந்தித்தேன். இது எல்லாமே நடந்தது. அறைந்தேன். அறை வாங்கினேன்.

யாழ்ப்பாணத்தில் கொ.பு.கா அறிமுக விழா பற்றிய உங்கள் உணர்வு வெளிப்பாடு எப்படியிருந்தது?

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" நூலை ஆக்கிரமிக்கும் காலப்பகுதியான தொண்ணூறுகளின் முற்பாதியில் தீக்கிரையாகிய யாழ் நூலகம் கம்பீரமாக நிமிர்ந்து காட்சி தந்தது. நூலில் அது ஒரு பாத்திரமாகவும் வருகிறது. இன்றைக்கு அதே நூலகத்தில் இந்த நூல் அறிமுக விழா இடம்பெற்றமை கலவையான உணர்வுகளை கொடுத்தது. இளையோர் முன்வந்து நடத்திய நிகழ்வில் சோ.ப, கருணாகரன் போன்ற மூத்தவர்கள் கலந்துகொண்டமை கொடுத்த உவகை சொல்லி மாளாதது. யாழ்ப்பாணம் என் முதுகில் தட்டி "இன்னும் எழுது, நான் வாசிக்கிறேன்" என்று சொல்லியிருக்கிறது. இனி என் வேலை எழுத்தாகிக்கிடப்பதே!

யாழ்ப்பாணத்துக்கான நிரந்தரத் திரும்புகையா? கங்காருதேச வாசியா? உங்கள் தெரிவு எது? ஏன்?

சொக்கலட் என்ற ஆங்கில நாவலில் வரும் வியான்னே எனும் பெண் ஒவ்வொரு வடக்கு பருவக்காற்றின்போதும் இடம்பெயர்வாள். இடம்பெயர்வதற்கு அவளுக்கு ஏதாவது ஒரு காரணம் அமையும். அம்மாவின் இழப்பு, காதல் தோல்வி, ஊரவர் வெறுப்பு என்று ஏதாவது ஒரு காரணம். என்னதும் அப்படியே. யாழ்ப்பாணம், பளை, வன்னி, கொழும்பு, சிங்கப்பூர், மெல்பேர்ன் என்று ஒவ்வொரு பருவத்துக்கும் ஒவ்வொரு ஊராக இடம்பெயருதல் வாழ்க்கையாகிவிட்டது. சில இடம்பெயர்க்கப்பட்டவை. சிலது விரும்பி இடம்பெயர்ந்தவை. தற்சமயம் மெல்பேர்ன் நகரம் என்னுடைய இயல்புக்கு பொருந்தி வருகிறது. தனித்திருப்பது ஒரு சுகம். இன்றைய யாழ்ப்பாணத்தில் எழுதிக்கொண்டே தனித்திருப்பது என்பது முடியுமா என்பது கேள்விக்குறி. எழுதுவதற்காகவே சிங்கப்பூரிலிருந்து மெல்பேர்னுக்கு குடிபெயர்ந்தவன் நான். நிறைய நேரத்தை வாசிப்புக்கும் எழுத்துக்கும் அங்கே ஒதுக்க முடிகிறது. நாமுண்டு, நம் வேலையுண்டு என்று வாழ முடிகிறது. இப்போதைக்கு கங்காரு தேசமே என் வசிப்பிடம். மீண்டும் நான் யாழ்ப்பாணம் திரும்புவதா இல்லையா என்பதை பருவக்காற்றே தீர்மானிக்கட்டும்.

**************

பேட்டி கண்டவர் : தங்கராஜா பிரபாகரன்

நன்றி : உதயன் 20-09-2015

Comments

  1. முன்-பின் யாழ்ப்பாணம் அசத்தல்! ஒவொரு வரியையும் இருமுறை வசித்து ரசித்-தேன் Uthayan

    ReplyDelete
  2. அன்புள்ள தம்பி ஜே.கே. தங்கள் தாயகப்பயணம் சிறப்பாக நடந்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி. தங்களது உதயன் நேர்காணல் வழக்கம் போன்று தங்கள் தனித்துவமான பாணியில் சுவாரஸ்யமாக இருந்தது. அதிலும் கவிதை வடிவில் நீங்கள் சொன்னவைகள் அபாரம். தொடர்ந்து எழுதுங்கள். படிக்க நாம் இருக்கின்றோம்.
    அன்புடன்
    முருகபூபதி

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா. விரைவில் உங்களை சந்தித்து நிறைய அனுபவங்களை அறிந்துகொள்ளவேணும். வீட்ட வாறன்!

      Delete

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...