புதுப்பெயிண்ட் வாசத்தோடு கோயில் மாடப்புறாக்கள்.
வாசகனுக்காக காத்திருக்கும் நூலகங்கள்.
பேசுவதற்கு ஆள் இன்றி தனித்திருக்கும் மரத்தடிகள்.
காற்றுப்போய் பத்தியில் தூங்கும் மிதிவண்டிகள்.
குழைக்க ஆள் இல்லாமல் குழையும் பழஞ்சோறு.
தேங்காய்ப்பூ காய்ந்த அம்மிக்கல்லுகள்.
தார் மெழுகிய உந்துருளி வீதிகள்.
சீருடை காணாத தெருச்சந்திகள்.
ஆறரை இருட்டில் நல்லூர் திருவிழா.
காவல்துறை போலீசாகி
நயினாதீவு நாகதீபவாகி
தண்ணீர்க் கிணறுகள் எண்ணெய்ப்போத்தல்களாகி
எண்ணெய்ப் போத்தல்கள் தண்ணீர் கிணறுகளாகி
மாற்றம் ஒன்றே மாறிலி என்ற
தேற்றத்தை உணர்த்தி நிற்கின்றன.
கசக்கும் புலம்பெயர் உறவுகள்.
இனிக்கும் இருதய தொடர்புகள்.
மதில் சுவர்களில் கிழிந்து தொங்கும்
தன்னாட்சி, தேசிய கோஷங்களுக்கு மேலே
புதிதாய் பசை மணக்கும்
தனி ஒருவன் போஸ்டர்கள்.
வேலிகள் தொலைத்த படலையை திருத்தி
இரும்பு கேற்று போடுகிறது
இன்றைய யாழ்ப்பாணம்.
வெளியே நான்!
Comments
Post a Comment