நன்றாக இருட்டி விட்டிருந்தது. படகிலே ஒரு நாற்பது ஐம்பது பேர் இருந்திருப்போம். எல்லோரும் கடல் தண்ணீர் தெறிக்காவண்ணம் துவாயையோ சாரத்தையோ சுற்றிக்கொண்டு அமர்ந்திருந்தோம். ஒரு சிலர் ஒல்லிக்கோம்பைகளை இடுப்பில் கட்டியிருந்தனர். சிலர் இடுப்பில் தேங்காய் மட்டைகள். சந்நிதியானுக்கும் அம்மாளுக்கும் அவசர நேர்த்திகள் வைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. குழந்தைகள் அழ ஆரம்பித்திருந்தன. சிறுவர்கள் பாணும் வாழைப்பழமும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். பெரியவர்கள் எவருமே பேசவில்லை. அக்காவும் நானும் அம்மாவின் கைகளை இறுக்கப்பற்றியிருந்தோம். அல்லது அம்மாதான் எங்கள் கைகளை பற்றியிருந்தாரா என்று தெரியவில்லை. எம்மிடம் பேசுவதற்கு எதுவுமே இருக்கவில்லை. வாயைத் திறக்கும்போதெல்லாம் தாடைகள் தம்பாட்டுக்கு அடித்துக்கொண்டன. பயத்தாலும் மார்கழி கடல்காற்றின் குளிராலும் உடல் நடுங்கியது. படகின் ஓரமாக கட்டப்பட்டிருந்த டயர்களில் பட்டுத்தெறிக்கும் கடலலைகளின் சத்தம்மட்டும் அவ்வப்போது உப்புத்தண்ணியோடு காதுகளில் விழுந்துகொண்டிருந்தது. எம் படகுக்குப்பின்னே இரண்டு படகுகள் கட்டி இழுக்கப்பட்டு வந்தன. ஒரு படகு முழுதும் ...