Skip to main content

வேலியே பயிரை மேய்ந்த கதை

 

960

இது அறுபதுகளில் இடம்பெறும் கதை.

ஜீன் லூயிஸ் நியூ யோர்க்கில் வசிப்பவள். விடுமுறைக்கு தன்னுடைய சொந்த ஊரான மேகொம்புக்கு வருகிறாள்.

அமெரிக்காவின் தென்மாநிலமான அலபாமாவில் அமைந்திருக்கும் சிற்றூர் மேகொம்ப். தென்மாநிலங்களுக்கேயுரிய பழமைவாத, கொஞ்சம் பிற்போக்கான சிந்தனைகள் ஊறிய கொன்சர்வேட்டிவ் மனிதர்கள் வசிக்கும் ஊர். அங்கே வெள்ளையினத்தவருகிடையிலேயே சாதிப்பிரிவினைகள் இருக்கிறது. கறுப்பின நிற வேற்றுமையை கேட்கவே வேண்டாம்.

ஜீன் லூயிஸின் தந்தை அத்திக்கஸ் மேகொம்பின் ஒரு பிரபல வழக்கறிஞர். எல்லோராலும் மதிக்கப்படுபவர். அத்திக்கஸுக்கு எழுபது வயதாகிறது. அவரோடு அவருடைய தங்கை அலக்சாந்திராவும் வசிக்கிறார். அலக்சாந்திரா மேகொம்பின் அத்தனை குணாதிசயங்களையும் கொண்ட மேட்டுக்குடிப் பெண்மணி. கறுப்பினத்தவரையும் ஏனைய சாதியினரையும் எந்நேரமும் வெளியே தெரியாமல் நாசூக்காக ஏளனம் செய்துகொண்டிருப்பார். ஊரிலே அவர் வயதை ஒத்த ஏனைய பெண்களையும் சேர்த்து வாரம்தோறும் சந்தித்து ஊர்த்துலாவாரம் பேசுவார். ஜீன் லூயிஸையும் இப்படி உடுப்பு போடு, இப்படி நட, இப்படி பேசாதே என்று நிறைய கட்டுப்பாடுகள் போடுவார்.

ஜீன் லூயிஸின் சிறுவயது நண்பன் ஹென்றி. ஜீன் லூயிஸ் ஒவ்வொருவருடமும் விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது இவன்தான் அவளின் காதலன். ஊர்க் காதலன்! ஒவ்வொருமுறையும் தன்னை திருமணம் முடிக்குமாறு ஜீன் லூயிஸை அவன் வற்புறுத்துவான். அவளோ பிடி கொடுக்கமாட்டாள். ஹென்றியும் ஒரு வழக்கறிஞன்தான். அத்திக்கஸின் உதவியாளனாக பணியாற்றுகிறான். இன்னொருவர் அங்கிள் ஜக். அத்திக்கஸின் சகோதரர். புரிந்துணர்வுள்ள பக்குவப்பட்ட மனிதர்.

இந்த பாத்திரங்களைச்சுற்றித்தான் கதை சுழல்கிறது. 

ஜீன் லூயிஸுக்கு அவளுடைய தந்தை அத்திக்கஸ் ஒரு ஹீரோ. அவளை சிறுவயதுமுதலே எந்த பிற்போக்கு சிந்தனைகளையும் புகட்டாமல் சுதந்திரமாக வளர்த்தவர். பெண் என்று கட்டுப்பெட்டியாகவோ, குடும்ப கெளரவம் என்று சொல்லி கர்வத்தோடோ வளர்க்கவில்லை. சிறுவயதுமுதலே ஜீன் லூயிஸ் ஆண் நண்பர்களோடுதான் விளையாடுவாள். பள்ளியில் ஒருமுறை ஆண் நண்பன் ஒருவன் அவளுக்கு உதட்டு முத்தம் கொடுத்துவிட்டான். இவளுக்கு அந்த உணர்வைப் புரியும் பக்குவம் அப்போது இல்லை. பெண் நண்பி ஒருத்தியிடம் முத்தத்தைப் பற்றி விசாரிக்கிறாள். அவளோ, முத்தம் கொடுத்தால் கர்ப்பம் தரிக்கும் என்கிறாள். இவளுக்கு பயம் பிடித்துவிட்டது. ஒன்பது மாதத்தில் தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று பயந்து நாட்களை எண்ணி எண்ணி யாரோடும் ஒழுங்காக பேசாமல், சரியாக சாப்பிடாமல் திரிகிறாள். சரியாக ஒன்பதாம் மாதம் அவள் கணக்கு வைத்திருந்த நாளிலே பிள்ளை பிறக்கப்போகிறது என்று அன்றைக்கு தற்கொலை செய்ய முடிவெடுக்கிறாள். நல்லகாலம் ஹென்றி காப்பாற்றுகிறான்.

மனிதர்களிடையே எந்தவகை வேற்றுமையும் கிடையாது, எல்லோருக்கும் ஒரே நீதிதான் என்பதை அத்திக்கஸ் பிள்ளைகளுக்கு சிறுவயதுமுதலே வலியுறுத்தி வந்தவர். தாயில்லாப்பிள்ளைகளை வளர்க்கவென கல்பூரினா என்கின்ற கறுப்பினப்பெண்ணை வேலைக்கு அமர்த்தியவர். கல்பூரினா ஜீன் லூயிசுக்கு அம்மாபோல. எல்லா வேலைகளையும் பார்த்துச்செய்தவர். அத்திக்கஸ் தனிமனித ஒழுக்கம் உள்ள மனிதரும்கூட. ஒருமுறை கறுப்பினத்து இளைஞன் ஒருவன் வெள்ளையினப்பெண் ஒருத்தியை பாலியல் வல்லுறவு செய்துவிட்டான் என்ற குற்றச்சாட்டு வழக்கில் கறுப்பினத்தவன் சார்பில் ஆஜராகி அது ஒரு சோடிக்கப்பட்ட பொய் வழக்கு என்பதை ஜூரிக்கு நிரூபித்துக்காட்டியவர்.

இது எல்லாமே சேர்ந்து, அத்திக்கஸ் பற்றிய ஒரு மரியாதைக்குரிய பிம்பத்தை ஜீன் லூயிஸிடம் உருவாக்கிவிட்டிருந்தது.

ஊருக்கு வரும் ஜீன் லூயிஸை புகையிரத நிலையத்தில் ஹென்றி வரவேற்கிறான். காரிலேயே தன்னை திருமணம் முடிக்கிறாயா என்று மீண்டும் கேட்கிறான். பதிலுக்கு முத்தம் மட்டுமே கிடைக்கிறது!

போகும் வழியில் ஒரு கறுப்பினத்து இளைஞன் மிக வேகமாக காரை ஓட்டிச்செல்ல வசை ஆரம்பிக்கிறது.

“அவங்களிட்ட நிறைய காசு வந்திட்டுது. எல்லாரும் கார் வாங்கி வச்சிருக்கிறாங்கள். ஆனால் ஓடத்தெரியாது. கண் மண் தெரியாம பறக்கிறது. லைஸன்சும் இருக்காது. இன்சூரன்சும் இருக்காது. தட்டிக்கேக்க ஆள் இல்லை”

நியூ யோர்க்கின் சுதந்திரமான வாழ்க்கை முறைக்கு பழகிவிட்ட ஜீன் லூயிசுக்கு மேகொம்பின் வாழ்க்கைமுறை ஒட்டவில்லை. எல்லாமே அபத்தமாகத் தோன்றியது. சேர்ச், சந்திப்புகள், மனிதர்களின் பேசும் விடயங்கள் என எதுவுமே அவள் இயல்புக்கு பொருந்தவில்லை. வயதான அத்திக்கஸோடும் பேசுவதற்கு பெரிதாக விடயங்கள் இல்லை. அலக்சாந்திராவோடு எதற்கெடுத்தாலும் சண்டை. ஹென்றி காதலன் என்றாலும் நிலைமையில் மாற்றமில்லை. ஊர் இரண்டாம் நாளே ஜீன் லூயிசுக்கு அலுப்படிக்கிறது.

ஒருநாள் கல்பூரினாவின் பேரன் ஒருவன் வெள்ளையின பாதசாரிமீது தவறுதலாக காரினை ஏற்றிக்கொன்றுவிட்டான் என்ற செய்தி வருகிறது. அவனை கைது செய்துவிட்டார்கள். கல்பூரினாவின் பேரன் சார்பாக வழக்கை எடுத்து வாதிடும்படி மேயர் அத்திக்கசை கேட்கிறார். ஹென்றி எதற்கு வீணாக கறுப்பினத்தவர் சார்பாக வாதிடவேண்டும் என்று சொல்ல அத்திக்கஸ் நாங்கள் கேஸை எடுக்காவிட்டால் NAACP எடுத்துவிடும் என்கிறார். NAACP என்பது கறுப்பினத்தவரின் உரிமைகளுக்காக போராடும் அமெரிக்கா தழுவிய அமைப்பு.

ஜீன் லூயிஸ் கறுப்பினத்தவர் குடியிருப்புக்கு கல்பூரினாவை சந்திக்க செல்கிறாள். அவர்களிடமிருந்த வெள்ளையினத்தவர்மீதான கோபத்தையும் எதிர்ப்பையும் அவளால் உணரமுடிகிறது. வளர்த்த கல்பூரினாகூட அவளோடு சரியாக முகம் கொடுத்து பேசவில்லை. அத்திக்கஸ் எப்படியும் நீதி வாங்கித்தருவார் என்று ஜீன் லூயிஸ் சொல்ல, யாரை நம்புவது என்று தெரியவில்லை என்கிறார் கல்பூரினா.

அடுத்தநாள் அத்திக்கசும் ஹென்றியும் நகர மண்டபத்தில் நடைபெற்ற கறுப்பினத்தவருக்கெதிரான கூட்டத்தில் பங்குபற்றுவது ஜீன் லூயிசுக்கு தெரியவருகிறது. கறுப்பினத்தவர்கள் இந்த ஊரிலே ஒரு பிளேக் நோய் போன்று பரவுகிறார்கள் என்று சாரப்பட்ட பேச்சை கேட்டு அவர்கள் கலந்துரையாடுகிறார்கள். அத்திக்கசும் ஹென்றியும் இப்படி கறுப்பினத்தவர்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள் என்று அறியவந்ததும் ஜீன் லூயிஸ் அதிர்ச்சி அடைகிறாள். தன் வாழ்வின் ஒரு ஹீரோ, தார்மீக நெறிகளை கடைப்பிடிப்பவர் என்று அவள் இதுவரை நம்பிக்கொண்டிருந்த அத்திக்கஸ் இப்படி ஒரு காரியம் ஆற்றுவார் என்பதை ஜீன் லூயிசால் சீரணிக்கமுடியவில்லை. அவள் இதுவரை காலமும் அத்திகசின் பேரில் கட்டிவைத்திருந்த பிம்பம் உடைகிறது. கோபம், கவலை, இயலாமை தாளாமல்  அவள் அங்கிள் ஜாக்கின் வீட்டுக்குச்செல்கிறாள். அவர் அமெரிக்காவின் உள்நாட்டு யுத்த வரலாறு, மக்களில் சிந்தனைகள் எல்லாவற்றையும் விலாவாரியாக விளக்கி நிற வேற்றுமை என்பதை மேலோட்டமாக பார்க்கக்கூடாது என்று அறிவுரை சொல்கிறார். அந்த பதிலில் திருப்தியடையாமல் கோபத்தோடு ஜீன் லூயிஸ் தந்தையின் அலுவலகத்துக்கு வருகிறாள். முதலில் ஹென்றி சிக்குகிறான். அவனைத் திட்டித்தீர்த்து, உன்னோடு திருமணம் என்கின்ற பேச்சுக்கே இடமில்லை நீ ஒரு ஹிப்போகிரிட் என்கிறாள்.

“எல்லா மனிதர்களும்போல ஹிப்போகிரிட்டுகளும் மனிதர்கள்தானே, அவர்களுக்கும் இந்த சமூகத்தில் சம உரிமை இருக்கிறது?”

என்று பின்னால் வந்த அத்திக்கஸ் நக்கலாக கூறவும் ஜீன் லூயிசுக்கும் தந்தைக்கும் சண்டை ஆரம்பிக்கிறது.

கறுப்பர்கள் சம அந்தஸ்துக்கு இன்னமும் தயாரில்லை. அவர்களின் வளர்ச்சி பத்தாது. இன்னமும் கீழ் நிலையிலேயே அவர்கள் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் கல்லூரிகளிலும் நகர கவுன்சில்களிலும் தேவாலயங்களிலும் நீதி மன்றங்களிலும் அவர்களை முடிவெடுக்கும் பதவிகளில் வைத்தால் நாங்கள் இவ்வளவுகாலமும் வளர்த்தெடுத்த சமுதாயக்கட்டமைப்பு குலைந்துவிடும் என்று தன் நடவடிக்கைகளுக்கு விளக்கம் கொடுக்கிறார் அத்திக்கஸ். சமஉரிமை கொடுத்தால் அவர்கள் வெள்ளையர்களை ஆதிக்கம் செய்யத்தொடங்கிவிடுவார்கள் என்கிறார்.

ஜீன் லூயிசுக்கு அந்த விளக்கத்தை கேட்க மேலும் கோபம் வருகிறது.

எப்படி வெள்ளையர்கள் அந்த முடிவை எடுக்கலாம்? இது எப்போது வெள்ளையர்களின் நாடானது? கறுப்பர்கள் அப்படி என்ன இந்த நாட்டுக்கு தீங்கு விளைவித்துவிட்டார்கள்? சந்தர்ப்பம் கொடுக்காமல் எப்படி ஒரு இனம் வளரும்? ஜீசஸ் எல்லோர்மீதும் சம அன்பைத்தான் கொடுக்கிறார் என்று சொல்லி, தேவை என்றால் ஜீசஸ் ஒரு கறுப்பன் என்றுகூடச் சொல்லி அவர்களை மதம் மாற்றுவீர்கள். எல்லா நிறத்தினரும் சமம் என்பீர்கள். ஆனால் ஒரு பெரிய வேலியைப்போட்டு உன் பகுதிக்குள் மட்டும் நீ நின்றுகொள்ளு, இதற்குள் வந்துவிடாதே என்கிறீர்கள். இது என்ன நியாயம்? வெளிக்கு நான் நல்லவன், நிற வெறி இல்லாதவன், கறுப்பரையும் ஆதரிக்கிறேன் என்று பெரிய மனுஷன் வேடம் போட்டுவிட்டு உள்ளே நிறவெறியோடு நீங்கள் இதுகாலும் அலைந்திருக்கிறீர்கள். நினைக்கவே அருவருப்பாக இருக்கிறது என்று தகப்பனை திட்டித்தீர்த்துவிட்டு ஜீன் லூயிஸ் வீட்டுக்கு வருகிறாள். சூட்கேஸை அடுக்கிக்கொண்டு நியூயோர்க் திரும்பவென விரைகிறாள்.

வாசலில் அவளை அங்கிள் ஜக் மறிக்கிறார். உன் அப்பாமீது நீ சிறுவயதிலிருந்தே கடவுளின் தூதர் போன்ற விம்பத்தை ஏற்படுத்திவிட்டாய். நீ சரியென்று நினைப்பதையே அவரும் சரியென்று நினைக்கேவேண்டும், உன் மனதிலிருக்கும் பதிலை அவர் சொல்லவேண்டும் என்று எதிர்பார்த்தாய். ஆனால் அவரும் ஒரு சாதாரண பலவீனங்களைக்கொண்ட மனிதன் என்பதை அறிவதற்கு இது ஒரு சந்தர்ப்பம். அவரை கடவுள் ஸ்டேடஸிலிருந்து கீழே இறக்கு. மனிதனாகப்பார். அப்போதுதான் முரண்பட்டாலும் உனக்கு இவ்வளவு கோபம் வராது என்கிறார். அவரோடு நீ முரண்படுவதால் நீயும் சுதந்திர மனுஷியாகிறாய் என்று மேலும் சொல்கிறார். ஜீன் லூயிஸ் இதைக்கேட்டு சிறிது ஆறுதல் அடைகிறாள். முடிவில் தந்தையும் மகளும் சமாதானமாகிறார்கள். ஜீன் லூயிஸ் அத்திக்கசை கடவுள் நிலையிலிருந்து மனிதனாக பார்க்கத்தொடங்குகிறாள்.

அண்மையில் வெளியான ஹார்ப்பர் லீ எழுதிய Go, Set A Watchman நாவல்.

642153-ce897060-2b6f-11e5-a439-5c856edaa69b

“Go, Set a watchman” என்பது பைபிளில் உள்ள வாசகமாகும். உலகத்தை, மனிதர்களை சரியான வழியில் நெறிப்படுத்த கடவுள் ஒரு காவல்காரனை நியமிக்கிறார். அப்படித்தான் இஸையாவை அவர் இஸ்ரேலுக்காக நியமித்தார். அத்திக்கசையும் ஜீன் லூயிஸ் அப்படித்தான் நினைக்கிறாள். தன் தகப்பனார் மேகொம்ப் கிராமத்தை நெறிப்படுத்த கடவுளால் அனுப்பப்பட்ட காவல்காரன் என்று நம்புகிறாள். இறுதியில் அவர் ஒரு சாதாரண பலவீனங்கள் நிறைந்த மனிதர் என்று அறிந்ததும் தன்னையே காவல்காரனாக உணர்கிறாள். நாவல் சொல்கின்ற ஆதாரமான செய்தியும் அதுவே.

ஐம்பது வருடங்களுக்குப் பின்னர் வெளிவந்திருக்கும் ஹார்ப்பர் லீயின் இரண்டாவது நாவல் இது. முதல் நாவலான “To Kill A Mocking Bird” ஒரு கிளாசிக்.   ஜீன் லூயிஸின் சிறுவயது பராயத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட தேர்ந்த நாவல் அது. அதிலே அத்திக்கஸ் நிஜமாக ஹீரோ. அந்த நாவலில் ஒரு பிற்போக்கான கிராமத்தில் நிறவெறிக்கு எதிராக மென்வலுக்கொண்டு போராடும் பாத்திரம் அத்திக்ஸினுடையது. நிரந்தரமான மாற்றம் ஒரேநாளில் உருவாவதில்லை. ஒரே புரட்சியிலும் உருவாவதில்லை. சமுதாய மாற்றத்துக்கு நிறைய சின்ன சின்னக் கற்களை நகர்த்தவேண்டும். சின்ன சின்ன புரட்சிகளை நிகழ்த்தவேண்டும். அத்திக்கஸ் அதை ஆத்திரப்படாமல் எல்லோரையும் அரவணைத்துகொண்டே செய்வார். பிள்ளைகளுக்கும் அதனையே சொல்லிக்கொடுப்பார். அந்த நாவலை தூக்கினால் வாசித்து முடிக்காமல் வைக்கமுடியாது.  To Kill A Mocking Bird உலகின் மிகச்சிறந்த நூறு நாவல்களில் மிக இலகுவாக போய் உட்காரக்கூடியது.

lee

Go, Set A Watchman நாவல் முதல் ஒரு மில்லியன் நாவல்களிலேயே அடங்குமோ தெரியாது. ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே வட்டத்துக்குள் சுற்றிவரும் மிக அயர்ச்சிதரும் நாவல் இது. ஒரு நாவல் என்றால் எதையாவது ஒரு கதையை சொல்லவேண்டும். இதிலோ வெறும் உரையாடல்கள்தான். ஜீன் லூயிஸ் ஊருக்கு வருகிறாள். ஹென்றியோடு பேசுகிறாள். அலக்சாந்திராவோடு பேசுகிறாள். இடையிடையே சிறுபிள்ளை வாழ்க்கையை நினைவுகூறுகிறாள். அங்கிள் ஜக்கோடு பேசுகிறாள். ஹென்றியோடு பேசுகிறாள். தந்தையோடு பேசுகிறாள். இதைத்தான் முந்நூறு பக்கங்களில் ஹார்ப்பர் லீ எழுதியிருக்கிறார்.

உண்மையில் இந்த நாவல்தான் ஹார்ப்பல் லீயின் முதல் நாவல். ஆனால் இது பதிப்புக்கு தகுந்ததில்லை. இதிலே வருகின்ற ஜீன் லூயிஸின் சிறு வயது அனுபவங்களை வைத்து ஒரு நாவலை எழுதுங்கள் என்று பதிப்பாளர் சொல்லியிருக்கிறார். அதன்பின்னர் எழுதியதுதான் “To Kill A Mocking Bird”. முதல் எழுதியதன் கையெழுத்துப்பிரதி பதிப்பாளர்களின் லொக்கர் அறையில் ஐம்பது வருடங்களாக கிடந்திருக்கிறது. இந்த ஐம்பது வருடங்களில் ஹார்ப்பர் லீ ஒரே புத்தகத்தின்மூலம் அமெரிக்காவின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகிவிட்டார். “To Kill A Mocking Bird” மில்லியன் கணக்கில் விற்பனையாகிவிட்டது. இந்த நிலையில் அவருடைய நிராகரிக்கப்பட்ட கையெழுத்துப்பிரதி சிக்குகிறது. பொன் முட்டையிடும் வாத்து. விடுவார்களா? முதுமையில் அல்லாடும் ஹார்ப்பர் லீயிடம் எப்படியோ சம்மதம் வாங்கி பதிப்பித்துவிட்டார்கள். வாழ்நாளில் ஒரேயொரு நாவலை எழுதி நன்மதிப்பை சம்பாதித்திருந்த பெண்மணியின் இறுதிக்காலத்தில் இப்படி ஒரு துன்பியல் நிகழ்வு.

download

இனிமேல் To Kill A Mocking Bird ஐ வாசிக்கும் ஒவ்வொருவரும் Go, Set A Watchman ஐயும் வாசிக்கப்போகிறார்கள். அத்திக்கஸ் இனிமேலும் நிறவெறிக்கெதிரான ஹீரோ கிடையாது. குழந்தைகளுக்கு யாரும் அத்திக்கஸ் என்று பெயர் வைக்கமாட்டார்கள். To Kill A Mocking Bird இன் முக்கியமான பாத்திரமான ஜீன் லூயிஸின் அண்ணனை இந்த நாவலில் கொன்றுவிட்டார்கள். பூ ராட்லி என்கின்ற அற்புதமான பாத்திரம் இதிலே இல்லை. நாவலில் சுவாரசியம் சுட்டும் இல்லை. முக்கியமாக இந்த நாவலில் கதை இல்லை. ஒரு நல்ல கதை, சம்பவங்கள் இல்லையென்றால் என்னதான் நல்ல விசயத்தை சொல்லவந்தாலும் நாவல் எடுபடாது என்பதற்கு Go, Set A Watchman ஒரு சிறந்த உதாரணம்.

இன்னொன்று இந்த நாவல் இன்றைய அமெரிக்காவுக்கு சற்று பொருத்தமில்லாதது. அமெரிக்காவில் இன்னமும் நிற வேறுபாடு இருந்தாலும் அதன் பரிமாணம் நாவல் சொல்லுகின்ற பரிமாணத்தோடு மாறுபட்டது. இன்றைக்கு அமெரிக்காவின் சனாதிபதியாக ஒரு கறுப்பர் இருக்கமுடிகிறது. தீவிர அடிப்படைவாதக் கட்சியான குடியரசுக்கட்சியின் சனாதிபதி வேட்புரிமைக்காக கார்சன் என்கின்ற கறுப்பர் போட்டியிடுகிறார்.  இரண்டாமிடத்திலும் இருக்கிறார். இந்தச்சூழலில் இந்தநாவல் இன்றைய திகதியில் வெளியாகியிருப்பது கொஞ்சம் காலம் கடந்த முயற்சி.  இது ஒரு காலத்தை வென்ற நாவல் என்றாலும் தப்பியிருக்கும். அதுவும் கிடையாது.

நாவலின் ஒரே நல்ல விசயம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ஹார்பர் லீ டச் வசனங்கள்தான்.

சில உதாரணங்கள்.

“இந்த ஊரைவிட்டு வெளியே வாழ்ந்தபோதுதான் எனக்கிந்த ஊரின் அருமை தெரிந்தது. நிரந்தரமாக திரும்பிவிட்டேன்”

“அப்பிடி என்ன சிறப்பு? மேகோம்ப் ஒன்றும் வானத்திலிருந்து குதித்த ஊர் கிடையாது. இதுவும் எல்லா ஊர்களையும்போல ஒரு சாதாரண ஊர்தானே”

“சொந்த ஊர் என்பது அப்படியானதல்ல ஜீன். நீ பிறந்து வளர்ந்ததால் மட்டும் அது சொந்த ஊர் இல்லை. பல நூற்றாண்டுகளாக உன் முன்னோர்கள் பிறந்து இறந்து பிறந்து இறந்து இந்த ஊரை வளர்த்து விட்டதன் பலன்தான் நீ இந்த ஊரில் இப்படிப்பிறந்து வளர்ந்து பேசிக்கொண்டிருக்கிறாய். அத மறந்துவிடாதே!”

**************

“ஒரு மனிதன் வெளித்தோற்றத்துக்கு தவறு செய்பவன்போன்று இருக்கலாம். ஆனால் அவனுடைய உண்மையான நோக்கத்தை அறிய முற்படவேண்டும். சில விசயங்களை சமூகத்துக்காக அவன் செய்யவேண்டியிருக்கிறது”

“அதாவது கூட்டத்தோடு கோவிந்தாவாகப்போய் அவர்களுக்கு எது பிடிக்குமோ அதை செய்யிறதுதானே. ஹைப்போகிரிட்!”

**************

“நீங்கள் ஏன் எனக்கு நீதிக்கும் நீதிக்குமான வித்தியாசத்தை சொல்லித்தரவில்லை? சரிக்கும் சரிக்குமிடையேயான வித்தியாசத்தை சொல்லித்தரவில்லை?”

**************

“ஜீசஸ் உங்களை நேசிக்கிறார் என்று அவர்களுக்கு சொல்கிறீர்கள். ஆனால் எங்களை நேசிக்குமளவுக்கு உங்களை அவர் நேசிக்கவில்லை என்றும் சொல்கிறீர்கள்!”

atticus_scout

நாவலை வாசித்து முடித்தபின்னர் வேண்டிக்கொண்டேன். “கடவுளே, ஹார்ப்பர் லீயின் வேறெந்த கையெழுத்துப்பிரதி ஏதும் தப்பித்தவறி எஞ்சியிருந்தால் கறையான்கொண்டு அரித்துவிடு. ஜீன் லூயிசாவது தப்பிப் பிழைக்கட்டும்!”

To kill a mocking bird, go, set a watchman!

Comments

  1. நூல் அறிமுகத்துக்கு நன்றி ஜே.கே. Go, Set a Watchmanல் கறுப்பின மக்களின் நிலையாக என்ன சொல்லப்பட்டிருக்கு என்று எனக்கு தெரியாது. அதே சமயத்தில் கறுப்பினத்தவர் ஜனாதிபதி ஆனதால் கறுப்பின மக்களின் நிலை அமெரிக்காவில் பெரிதாக ஏற்றம் பெற்றுள்ளது என்று ஏற்று கொள்ளமுடியாது. இன்றும் blacklivesmatter போன்ற இயக்கங்கள் தோன்றி கொண்டிருப்பது அவர்களின் இன்றைய அவல நிலையினை காட்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மோகன். அமெரிக்காவின் நிற வேறுபாடு இப்போது வேறு பரிமாணம் எடுத்திருக்கிறது. இப்போதுள்ள நிலைமை நுண்ணிய நிற அடிமைக்கூறுகளால் நிரம்பப்பெற்றது. ஆனால் அரசியலமைப்பு ரீதியாகவோ, அமைப்பு ரீதியாகவோ கறுப்பர்கள் ஒடுக்கப்படும் நிலைமை தற்போது இல்லை. நூல் கூறுகின்ற விடயம் அமைப்பு கட்டுமானங்கள் மூலம் கறுப்பர்களை அடக்கி ஆள்வது. அது கொஞ்சம் காலம் கடந்த சிக்கல். நாவல் அறுபதுகளிலேயே வெளியாகி இப்போது வாசிக்கப்படுவதற்கும் இப்போதே வெளியாகி வாசிக்கப்படுவதற்குள் உள்ள வேறுபாட்டு சிக்கலை வாசிக்கும்போது உணர்ந்தேன்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .