Skip to main content

ஊரோச்சம் : வட்டக்கச்சி 2

 

vicky-mama

முற்றத்தில் மூன்று பரப்பு நிலத்துக்கு நிழல் பரப்பி நிற்கும் ஒரு மிகப்பிரமாண்டமான மாமரம். அதிலே இரண்டு ஊஞ்சல்கள். மரத்தடியில் “ட” வடிவ பங்கர். ஒன்றிரண்டு கதிரைகள். கயிற்றுக்கட்டில். பேப்பர் படிக்கும் இரண்டு முதியவர்கள்.  மணல் அளையும் சிறுவர்கள்.  ஒருபுறம் செவ்வரத்தைகள். ஜாம்பழ மரம். தூர்ந்த மணற்கிணறு ஒன்று. ஒரு வைக்கோல் கும்பி.  தனியாய் தரித்து நிற்கும் டிரக்டர் பெட்டி. மாட்டுவண்டில். வேப்பமரத்தில் கட்டப்பட்டிருந்த இரண்டு காளை மாடுகள். குறுக்கும் நெடுக்குமாக கேறிக்கொண்டிருக்கும் கோழிக்கூட்டம். பிறவுன் கலரில் ராமு.

வீடு சிறியது. ஒரு படுக்கையறை. ஒரு குட்டி ஹோல். UNHCR தறப்பாள்போட்டு பெரிதாக்கப்பட்ட திண்ணை. தனியாகக் குசினிக்கு புகைக்கூண்டோடு ஒரு சின்னக் கொட்டில். அவ்வளவும்தான் வீடு.  

சிவிக் சென்டர் என்பது அறுபதுகளில் படித்த வாலிபர் திட்டத்தில் இளைஞர்களுக்கு வீடும் காணியும் கொடுத்து உருவாக்கப்பட்ட ஒரு சிறிய கிராமம். படித்த இளைஞர்களை கிராமங்களுக்கு வரவழைத்து விவசாயத்தில் ஈடுபடுத்தும் நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டது. சிவிக்சென்டரின் குடும்பங்கள் அத்தனையுமே விவசாயம் செய்பவை. எல்லோருமே இரு போகமும் வயல் விதைப்பார்கள். அது பள்ளிக்கூட அதிபராக இருந்தாலென்ன, மணிக்கூடு திருத்துபவராகவிருந்தாலென்ன, வைத்தியர், சங்கக்கடை முதலாளி,  விதானையார், தபால்காரர் என்று யாராக இருந்தாலும் விதைப்பார்கள். பலரின் பூர்வீகம் யாழ்ப்பாணமாகவிருந்தது. நிறைய யாழ்ப்பாணத்துவாசிகளும் அந்தத்திட்டத்தில் வீடுகளைப்பெற்று பிறருக்கு குத்தகைக்கு விட்டிருந்தார்கள்.

மலையகத்தமிழர்களும் அந்தக்கிராமத்தில் இருக்கிறார்கள். சிங்களவர்கள்கூட. அனேகமானோர் வயல்களில் தினக்கூலி செய்பவர்கள். மாதச்சம்பளத்துக்கு வேலை செய்பவர்களுமுண்டு. ஜெயமணி அண்ணா அந்தரகம். மாதம் ஆயிரத்து ஐநூறு ரூபா சம்பளம். மூன்று வேளையும் முதலாளியின் வீட்டிலேயே சாப்பாடு. கூடவே தீபாவளி, பொங்கல், வருடப்பிறப்புக்கு புதுச்சாரம், புதுச்சேர்ட் கிடைக்கும். அவர்களும் ஒரு ஏக்கரோ இரண்டு ஏக்கரோ குத்தகைக்காணி வைத்திருப்பார்கள். முதலாளியின் மிஷின், ஆளணிகளையே பயன்படுத்தி தம்முடைய வயலிலும் விதைத்து அறுவடை செய்வார்கள். 

நாம் இடம்பெயர்ந்து போனபோது அந்த வீட்டிலே நாற்பது பேர்கள் தங்கியிருந்தார்கள். நம்மோடு சேர்த்து  நாற்பத்துமூன்று. மறுநாள் அது நாற்பத்தைந்தானது. வீட்டுக்கு வருபவரெல்லாம் வீட்டிலேயே தங்கிவிடுவதாலோ என்னவோ, யார் விருந்தினர், யாரைப்பார்த்து குரைக்கவேண்டும் என்கின்ற குழப்பத்தில், ராமுகூட வாலையாட்டிக்கொண்டே நம்மை வரவேற்றது. கிட்டத்தட்ட சிவிக் சென்டர் வீடுகள் அத்தனையிலும் அதுதான் அப்போதைய நிலைமை.

எத்தனை பேர்கள் இடம்பெயர்ந்து வந்தாலும் அந்த வீடு சமாளித்தது. அந்தக்குட்டிக் குசினியில் எப்போதுமே அடுப்பு எரிந்துகொண்டிருந்தது. புகைக்கூடுவழியே புகை வந்துகொண்டேயிருக்கும். எப்போதுமே யாராவது ஒருவர் குசினித் திண்ணையில் சாப்பிட்டுக்கொண்டிருப்பார். தேத்தண்ணி குடித்துக்கொண்டிருப்பார். அந்தக் குசினி ஒரு அட்சயபாத்திரம். இரவு மாமி சாப்பிட்டு கோப்பையைக் கழுவி வைக்கும்வரை அட்சயபாத்திரம் உணவு கொடுத்துக்கொண்டேயிருக்கும். 

மாமியைப்பற்றிய சிந்தனை வந்தாலே கூடவே மாமி சமைக்கும் நாட்டுக்கோழியிறைச்சிக்கறியும் ஞாபகம் வந்துவிடுகிறது. குத்தரிசிச்சோறும் மீசை வியர்க்கும் உறைப்பில் கோழிக்கறியும் சமைத்தாரென்றால் குனிந்த தலை நிமிராமல் சாப்பாட்டுக்கொண்டேயிருப்போம். ஒருநாளும் நாம் சாப்பிடும்போது மாமி அருகில் நிற்கமாட்டார். “வடிவாச்சாப்பிடும்” என்று சொல்லிவிட்டு குசினிக்குள் போய்விடுவார். ஆனால் எப்போது கோப்பையில் கோழிக்கறி குறைகிறதோ, அடுத்தகணமே ஒரு கரண்டி கறி தேடிவரும். அப்போதுதான் குசினிக்குள்ளிருந்து மாமி நம்மையே கவனித்துக்கொண்டிருந்திருக்கிறார் என்பது தெரியவரும். மாமி உணவும் பரிமாறும்பாங்கு விருந்தோம்பலின் உச்சங்களில் ஒன்று.

அன்றைக்கு எனக்கு ஓ.எல் பரீட்சை முதல்நாள். அப்போது வீட்டின் பின்பக்கத்தாவாரத்தில் அம்மா சின்னதாக இரண்டு அடுப்பு வைத்து சமைக்க ஆரம்பித்திருந்தார். அன்று காலை புட்டும் சம்பலும். கோப்பையில் போட்டு முதல்வாய் உள்ளே போகமுதல் மாமி தேடிவந்துவிட்டார். 

“சோதினை எடுக்கிற பிள்ளை, சம்பலையே சாப்பிடுறீர்? இந்த முட்டைப்பொரியலை சாப்பிடும்”

அது வெறும் முட்டைப்பொரியல் அல்ல. நிறைந்த பாசமும், ஆசீர்வாதமும் நான் நல்லா வரவேண்டுமே என்கின்ற வேண்டுதலும் சேர்த்துப்பொரித்த பொரியல். அந்த ஆசீர்வாதம் இத்தனை வருடங்கள் கழித்தும் நீடிக்கிறது. எப்போது வீட்டில் முட்டை பொரித்தாலும் வட்டக்கச்சி மாமி தந்த முட்டைப்பொரியல் ஞாபகம் வந்து புரைக்கேறும்.

**********************

"வாங்கோ. ஏன் லேட்டாயிட்டுது? பஸ்ஸை விட்டிட்டீங்களா?" 

போயிறங்கும்போது மாமி படலைக்கே வந்துவிட்டார். இருபது வருடங்களுக்கு முன்னர் நாங்கள் இடம்பெயர்ந்து போயிறங்கியபோதும் இதே வரவேற்புத்தான். அப்போது நாற்பதுபேர் வரவேற்றார்கள். இப்போது நான்கு பேர்.

இந்த இருபது வருடங்களில் மாமி நிறையவே இளைத்துவிட்டிருந்தார். முகம் களைத்துபோயிருந்தது. போரும் ஓயாத இடப்பெயர்வுகளும், பின்னர் பிள்ளையைப் பார்க்கவென தடுப்பு முகாம்களுக்கு அலைந்த அலைச்சல்களும் அவரின் முகமெங்கும் சுருக்கங்களாக வியாபித்திருந்தன. 

மாமியின் பேத்தியும் பின்னாலேயே ஓடிவந்தாள். ஆறு வயதுச்சிறுமி. ஆரணி. அவள் பிறக்கும்போது இறுதி சண்டை உச்சத்தில் இருந்தது. அப்போது இவர்கள் குடும்பம் புதுமாத்தளன் பகுதியில் இடம்பெயர்ந்து இருந்திருக்கவேண்டும். கர்ப்பிணித்தாய்க்கு புரத உணவு வேண்டுமென்று மைசூர்பருப்புத் தேடி அலைந்த கதையை மாமி சொல்லுவதைக்கேட்டால் முள்ளந்தண்டு சில்லிடும். இடம்பெயரும்போது எப்போதுமே கவனமாக அரிசிமூட்டையை கூடவே வைத்திருந்திருக்கிறார்கள். தேங்காய், செத்தல்மிளகாய் மாதிரிப் பொருட்கள் எல்லாம் காணவே கிடைக்காது. வெறும் உப்புச்சோறுதான் சாப்பாடு. பருப்பும் கிடைத்தால் அது அதிர்ஷ்டம். இறுதிநாட்களில் கஞ்சித்தொட்டிகள் ஆங்காங்கே இயங்கிக்கொண்டிருந்திருக்கின்றன. இந்தச்சூழலில் குடும்பத்தில் ஒரு கைக்குழந்தையிருந்தால் எப்படியிருக்கும்? மாமாவை, ஏற்கனவே காயப்பட்டதால் ஐஸிஆர்ஸிமூலம் வவுனியாவுக்கு கொண்டுபோய்விட்டார்கள். இவர்கள் மூன்று பெண்களும் குழந்தையும் தனியே. ஒருபக்கம் எந்தக்குண்டு எந்தப்பக்கம் விழுந்து எவர் உயிர் போகப்போகிறதோ என்கின்ற கவலை. இன்னொருபக்கம் கூடவிருக்கும் பிள்ளைகளையும் பிடித்துக்கொண்டுபோய்விடுவாங்களோ என்கின்ற கவலை. பிள்ளை என்னானான் என்கின்ற கவலை. அடுத்தவேளை சாப்பாடு பற்றிய கவலை. அடுத்து எங்கே ஓடுவது என்கின்ற கவலை. உயிரோடு இருத்தல் என்பது எவ்வளவு கடினமான ஒன்று என்பதை ஒவ்வொரு கணமும் அருகாமையில் விழுந்த மரணங்கள் உணர்த்திக்கொண்டிருந்திருக்கின்றன. மனிதம் மிக மோசமாக மலினப்படுத்தப்பட்ட நாட்கள் அவை. யோசித்தாலே மண்டை விறைக்கிறது. அனுபவப்பட்டிருந்தால்?

ஆரணி படலைக்குப்பின்னாலே ஒளிந்துநின்று வெட்கப்பட்டபடி, நாங்கள் எப்போது கூப்பிடுவோம் என்று காத்திருந்தாள். நெற்றியும், இரண்டு கண்களும் நம்மை எட்டிப்பார்த்தன.

"இது ஆரணிதானே, என்னடி நல்லா வளந்திட்டாய்?" 

பதில் வரவில்லை. ஆமை தலையை உள்ளே இழுத்துக்கொண்டுவிட்டது.

"இஞ்ச ஒராள் வெள்ளனையே குமரன் மாமாவும் மாமியும் வாறினம் எண்டு டியூஷனுக்குகூட போகேல்ல" 

மாமி சொல்ல, சடக்கென்று ஆமை தலையை வெளியே நீட்டி அம்மம்மாக்காரியை முறைத்துவிட்டு கூடவே ஒரு சிரிப்பும் சிரித்தது. சிறுமி வெட்கப்பட்டு சிரிக்கையில் எத்தனை பாற்பற்கள் என்று எண்ண ஆரம்பிக்கலாம். அவள் சிரிப்பது ஒன்றுதான் எம் எல்லோருக்கும் இப்போதைய தேவை. வேறெதுவுமே வேண்டாம் என்று தோன்றியது. 

IMG_4372“எங்கயடி தம்பி?”

ஆரணியின் தம்பி பிறந்து ஒருவருடமே ஆகியிருந்தது. 

“ஏணைக்குள்ள .. ஆள் . நித்திரை”

“தம்பிக்கு என்ன பெயர்?”

“கலியுகன்”

கலியுகன். இப்படியொரு பெயரே குழந்தைகளுக்கு வைத்துக்கேள்விப்பட்டதில்லை. எம்முடைய யோசனை மாமிக்கு விளங்கியிருக்கவேண்டும். 

“கலியுகத்தில பிறந்த செல்லம் எண்டதால கலியுகன் எண்டு வச்சிருக்கிறம்”

சிரித்துக்கொண்டே சொன்னார். அந்தப்பெயருக்குப்பின்னால்தான் எத்தனை அர்த்தங்கள். எத்தனை கதைகள். உள்ளேபோய் ஏணைக்குள் எட்டிப்பார்த்தோம். கலியுகன் சப்புக்கொட்டிக்கொண்டே பகல் நித்திரை அடித்துக்கொண்டிருந்தார். ஆறுதலாக எழும்பட்டும் என்று மீண்டும் முற்றத்துக்கு வந்தோம். 

"பெரிய மாமரம் இருந்தது எண்டியல், எங்க போட்டுது?"

மனைவிக்கு நான் கதை விட்டேனோ என்கின்ற சந்தேகம். 

"அதுவா … அது சண்டை நடக்கேக்கையே பட்டிட்டுது"

மாமி சாதரணமாகச் சொன்னார்.

மாமரம் இருந்தவிடம் வெட்ட வெளியாகிப்போயிருந்தது. ஊருக்கே நிழல்பரப்பிநின்ற மாமரம். அந்த மாமரத்துக்கு எப்படியும் அறுபது வயது இருந்திருக்கும். அந்த அறுபதுவருடங்களில் அது எத்தனையைக் கண்டிருக்கும்?  எத்தனைபேரின் கதைகளை விடுப்புக் கேட்டிருக்கும்? எத்தனைபேரின் தனிமைப்புலம்பல்களுக்குக் காது கொடுத்திருக்கும். எத்தனை சுப்பர்சொனிக் அடிகளைத் தாங்கியிருக்கும். அந்தவீட்டுக்கு யார் வந்தாலும் முதலில் அந்த மாமரத்தடியிலேயே அமருவார்கள். வன்னி வெக்கைக்கு ஏஸிபோட்டது போன்ற குளுமை கொடுக்கும். அதன் மாங்காய் பச்சைப்புளி. யாருமே சாப்பிடுவதில்லை. அணில்களும் குரங்குகளுமே அந்த மாங்காய்களைக் கொறித்துப்பார்க்கும்.  இப்போது மரம் பட்டுப்போனபின்னர் அவை வேறு மரங்களைத் தேடிப்போகத்தொடங்கியிருக்கும். இதில் ஒரு மாமரம் நின்றது என்பதை அந்தக்குரங்குகளும் அணில்களும் மறந்தே போயிருக்கும்.

குரங்குகளில் இரண்டுவகைகள் அங்கே வருவதுண்டு. ஒருவித மண்ணிறக் குரங்குகள். மற்றையது சாம்பல் நிறத்தினாலான கொஞ்சம் எடுப்பான குரங்குகள். குரங்குக்கூட்டம் படையெடுக்கிறது என்றால் அக்கம்பக்கத்து மரங்கள் எல்லாம் சலசலக்கத்தொடங்கிவிடும். நாய்கள் குரைக்கும். மாமரங்களென்றாலும் பரவாயில்லை. தென்னைமரங்களில் ஏறிவிட்டால் அத்தனை இளனிகளையும் குரும்பைகளையும் அவை நாசம் செய்துவிடும். சமயத்தில் குரங்குகளை துரத்தவென ஒல்லித்தேங்காய்களில் ஓட்டைகளைப்போட்டு குவித்துவைப்பார்கள். அண்ணைமார் வந்து வழுக்கைக்காக எப்படியும் ஓட்டைக்குள் கையை நுழைத்துவிடுவினம். ஆனால் உள் நுழைத்த கையை வெளியே எடுக்கமுடியாமல் திணறிக்கொண்டு மிரட்சியில் ஒல்லித்தேங்காயோடு இழுபட்டு ஓடிப்போயிடுவினம். ஒரு குரங்கு ஓடினால் ஏனைய குரங்குகளும் ஏன் எதற்கென்ற கேள்வியில்லாமல் கூடவே ஓடிவிடும்.

குரங்குகளுக்கு ஒரு விசித்திர குணம் உண்டு. பெண்கள் துரத்தினால் அவை ஒருபோதும் பயந்து ஓடாது. சூ சூ என்று சத்தம்போட்டால் முதலில் அட்டென்ஷன் என்று கூவியபடியே கிட்டே வந்து கூர்ந்துபார்க்கும். பொம்பிளைதான் என்று உறுதிப்படுத்தியவுடன் அட் ஈஸ் என்றபடி பல்லிளித்து நெக் காட்டிவிட்டு அததுகள் தம் சோலியைப்பார்க்கும். இதுகளின் இந்த சேட்டைக்கு விக்கி மாமியின் தாயாரிடம் ஒரு மருந்து இருந்தது. குரங்குகள் படையெடுத்ததுமே மனிசி, சாரத்தைக்கட்டிக்கொண்டு ஒரு  முழுக்கை சேர்ட்டோடு துரத்தவந்துவிடும். சாறம் சேர்ட் போட்டால் குரங்குகளைப்பொறுத்தவரையில் அது ஆம்பிளை. ஆச்சியைக் கண்டதுமே ஓடிவிடும்.

**********************

ஜாம் மரத்தடியில் கதிரையைப்போட்டு உட்கார்ந்தோம். வீட்டை இப்போது திருத்தியிருந்தார்கள்.  குசினிக்கொட்டிலும் சீமெந்துக்கு மாறிவிட்டிருந்தது. அக்கம் பக்கங்களிலும் கல் வீடுகள் எழ ஆரம்பித்திருந்தன. சொந்த உழைப்பு, இந்திய வீட்டுத்திட்டம், தெரிந்தவர் உதவி என்று சிவிக் சென்டர் வீடுகள் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக தலைநிமிரத் தொடங்குகின்ற காலமிது.

திருத்திக்கட்டின வீட்டையே இப்போது பார்க்கையில்  சின்னதாகத் தெரிந்தது. எப்படி அந்தக்காலத்தில் அந்தச் சின்னவீட்டில் நாற்பது ஐம்பது வாழ்ந்தோம் என்பது யோசித்துப்பார்கையில் ஆச்சரியமாகவிருந்தது.

முதன்முதல் சாமான் சக்கட்டுகளோடு வந்திறங்கியவுடன் அந்த வீட்டைப்பார்க்கையில் அவநம்பிக்கையே தோன்றியது. ஒரு மழை பெஞ்சா எப்பிடி எல்லோரும் இந்த வீட்டுக்குள்ளே ஒதுங்கமுடியும் என்கின்ற சந்தேகம். நிச்சயமாக இங்கே நமக்கு தங்குவதற்கு இடம் கிடைக்கப்போவதில்லை, இனி எங்கே போவது என்கின்ற கவலை. ஒலிமடுவில் தெரிந்தவர்களுக்கு தெரிந்தவர்களின் தெரிந்தவர்கள் இடம்பெயர்ந்திருந்தார்கள். அங்கே போகலாமோ என்கின்ற யோசனையும் இருந்தது. ஆனால் எல்லாமே ஒரு சில நாட்கள்தான். உண்மையில் அங்கே நாற்பதல்ல நானூறுபேர்கூடத்  தங்கமுடியும் என்பது சீக்கிரமே விளங்கியது. அதற்கு இரண்டு விசாலமான காரணங்கள். நல்ல மனிதர்களின் விசாலமான மனம் ஒன்று.

மற்றையது அங்கிருந்த விசாலமான “மிஷின் கொட்டில்”.

அந்த வீட்டுக்குப்பின்னே பிறிதொரு உலகமே இருந்தது. பெரிய வளவு. அதில் நான்கைந்து திறந்த மாட்டுப்பட்டிகள். நூறு நூற்றைம்பது மாடுகள். ஒரு பக்கம் சணல் விதைத்திருந்தார்கள். தென்னம்பிள்ளைகள் நட்டிருந்தார்கள். மாட்டெரு அள்ளிக் குவிக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் வைக்கோல் கும்பி. இன்னொருபக்கம் விறகு மரங்கள்.

டிரக்டரை அந்தவூரில் மிஷின் என்று அழைப்பார்கள். பெரிய மிஷின் கொட்டில் ஒன்று அங்கே போடப்பட்டிருந்தது. இரவில் அங்கேதான் மிஷின்கள் பெட்டியோடு தரித்துவிடப்படும். மாட்டுவண்டிலும் அதற்குள்ளேதான். கொட்டில்கரைகளிலே சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருக்கும்.  கொட்டிலுக்குள்ளே கொழும்பு பஞ்சிகாவத்தை போன்று தொகை இரும்புச்சாமான்கள் இரைந்து கிடக்கும். கூடவே பழுதான ஒரு மிஷின் கொங்கிரீட் கற்களிலே படுத்திருந்தது. நெல்லுமூட்டைகள். ஒரு கப்பல் வாழைக்குலை. ஐந்தாறு இரும்புக்கட்டில்கள். பாய்கள். காய்ந்து தொங்கும் மார்ட்டின்கள், சாரங்கள், கிழிந்த பெண்டர்கள். கிறீஸும் சுண்ணாம்புக்கறையும் தோய்ந்த நிலைமரங்களில் தொங்கும் உடைந்த முகம்பார்க்கும் கண்ணாடிகள்.  இளந்தாரி ஆண்கள் எல்லோருக்கும் அந்த மிஷின் கொட்டில்தான் ஹொஸ்டல்.

பெண்கள் எல்லோரும் வீட்டினுள் படுத்தார்கள். வயது முதிந்தவர்கள் திண்ணையில் படுத்தார்கள். பலர் மாமரத்தடியில் கயிற்றுக்கட்டிலில் படுத்தார்கள். எனக்கு மிஷின் கொட்டிலில் ஒரு சாக்குக்கட்டில் கிடைத்தது. பலர் மிஷின் பெட்டியிலும் மாட்டு வண்டிலிலும்கூட படுப்பார்கள். பகலில் பொதுவாக மிஷின்கொட்டில் வெறிச்சோடிப்போய்க்கிடக்கும். ஏதாவது திருத்த வேலைகள் இருந்தால் மாத்திரமே ஆட்கள் நிற்பார்கள். மாலை ஐந்துமணிக்கு கூட்டம் சேரத்தொடங்கும். மிஷின் வந்துவிட்டால், அதன் பட்டரியில் கொழுவி கஸட் ரேடியோ கேட்கலாம்.

மாமியிடமும் ஒரு பனசொனிக் ரேடியோ ஒன்றிருந்தது. நாள் பூராக அது வேலை செய்யும். காலையில் தூத்துக்குடி வானொலி நிலையத்தோடு ஆரம்பிக்கும். பிறகு இலங்கை வானொலி சர்வதேச ஒலிபரப்பு. பின்னர் வானவில் பரீட்சார்த்த ஒலிபரப்பு. அதற்குப்பின்னர் இலங்கை வர்த்தசேவை. மாலையில் மீண்டும் சர்வதேச ஒலிபரப்பு. சரியாக இரவு பழையநேரம் ஏழு ஐம்பதுக்கு வெரித்தாஸில் ஜெகத் கஸ்பார் அழாக்குறையாக ஈழத்து உறவுகளுக்காக ஜெபம் செய்வார். வெரித்தாஸ் முடியவிட்டு புலிகளின் குரல். "குனியாது கடல்வேங்கை ஒருநாளும், வைத்த குறியேதும் தவறாது" என்று கொழும்புத்துறைமுகத் தாக்குதலுக்காக இயற்றப்பட்ட பாடல் அப்போது வெகு பிரபலம். எட்டரைக்கு புலிகளின் குரல் செய்திகள். எட்டே முக்காலுக்கு தூத்துக்குடி வானொலி நிலையத்தின் திரைத்தென்றல். ஒன்பதே காலுக்கு பிபிஸி தமிழ்ச்சேவை என்று அந்த பனசொனிக் ரேடியோ எப்போதுமே குசினியிலிருந்து ஒலிபரப்பாகிக்கொண்டேயிருக்கும்.  

அப்போது சுபாகரன் அண்ணாவிடம் ஒரு பழைய 12 இஞ்சி கறுப்பு வெள்ளை டிவி இருந்தது. மிஷின் பட்டரியில் இயங்கக்கூடியது. ஒருநாள் அண்டனா உயர்த்தி, டிவியை மிஷினுக்குமேலே வைத்து ஒளியும் ஒளியும் பார்த்தோம். உலகக்கோப்பை அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் பார்த்தோம். அதிகமாக பட்டரியை தின்றுவிட்டால் அடுத்தநாள் மிஷினை தள்ளியே ஸ்டார்ட் பண்ணவேண்டியிருக்கும். பனிக்காலத்தில் மாத்திரமே அந்த டீவி வேலைசெய்யும். பாஷா படம் வெளியான சமயம், ரஜனியின் பேட்டிகூட ஒருமுறை தூர்தர்ஷனில் போனது ஞாபகம் வருகிறது.

இரவு பத்துமணிக்கு அக்குச்சி அண்ணை தலைமையில் தாள் ஆட்டம் ஆரம்பிக்கும். நாலு பேர் ஆடும் முன்னூத்துநாலு “கார்ட்ஸ்” ஆட்டம் மட்டுமே  எனக்குத் தெரிந்திருந்தது. இதுவோ ஆறுபேர்கொண்ட “தாள்” ஆட்டம். பன்னிரண்டு துரும்புகள், அடுக்கி விளையாடுவது, ஆடித்தன், மணல், எட்டாம்கண் என்று தமிழ் வார்த்தைகள், கம்மாஸ் அடிக்காவிட்டால் கிடைக்கும் தூஷண அர்ச்சனைகள் என்று எல்லாமே ஆரம்பத்தில் மிரட்டியது. வாழ்க்கையில் ஆறு துரும்பும் அசத்தலான புறத்தியும் வந்தால் மாத்திரமே இருநூற்றைம்பது கேட்டுப் பழக்கப்பட்ட எனக்கு, எட்டாங்கண்ணையும் ஒன்பதாம் கண்ணையும் வைத்துக்கொண்டு முந்நூறு கேட்கும் மாயமும் மிரட்டியது.

தினமும் ஆட்டம், யாராவது சண்டைபிடித்துக்கொண்டு, அவிழ்ந்துபோன சாறத்தைக் கட்டியவாறே, தாள்களை விசிறி எறியும்வரை இரவிரவாகப் தொடர்ந்து நடைபெறும். 

**********************

அந்நாட்களில் திரைப்படங்கள் பார்க்கும் சந்தர்ப்பங்கள் மிக அரிதாகவே கிடைக்கும். சுபாகரன் அண்ணா ஒருநாள் இரவு ஹட்சன் ரோட்டில் எங்கேயோ படம் போடுகிறார்கள் என்று போய்விட்டார். எனக்கு பரீட்சை நேரம். படலைக்கு வெளியே போனால் “கால முறிச்சு அடுப்புக்க வச்சிடுவன்” என்று அம்மா ஓர்டர் ஓட்டுவிட்டார். என் அம்மா அதைச் செய்யவும் கூடியவர். அன்றிரவு சுபாகரன் அண்ணா என்ன படம் பார்க்கிறாரோ என்ற அவஸ்தையில் எனக்கு படிப்பு ஓடவில்லை.  படம் பார்த்து முடித்துவிட்டுவிட்டு மறுநாள் காலையில் நேரே மிஷின் கொட்டிலுக்கு வந்தார்.

"போம் ஐசே .. நீர் அநியாயமா மிஸ் பண்ணீட்டீர்"

"என்ன படம் பார்த்தனீங்கள் அண்ணை?"

"கமலி ஊட்டியில. சூர்யா ஜெய்பூர்ல. இரண்டுபேரும் பார்க்காமலேயே லவ் பண்ணுறினம். கமலி சூர்யாவைத்தேடி வாறாள். ஆனா அவளுக்கு அவன் இருக்கிற இடம் தெரியேல்ல. அவன் முகமும் தெரியாது"

"பிறகு"

"ஒரு கட்டத்தில சூரியாவிண்ட ஓட்டோலேயே ஏறி சூர்யாவை தேடி அலையிறாள்"

"அடடா, ஓட்டோ ஓடுறது சூர்யா எண்டு அவள் கண்டுபிடிக்கேலையா?"

"அவளுக்குத்தான் அவனிண்ட முகம் தெரியாதே. சூரியா தங்கியிருக்கிற இடத்துக்குப்போய், குளித்து, உடுப்பு மாற்றி..."

"கண்டுபிடிச்சிட்டினமா?"

"இல்லையே… வீட்டிலகூட கண்டுபிடிக்கேல்ல … விசர் பிடிக்கும் … உவன்தாண்டி சூர்யா எண்டு கத்தோணும்போல இருக்கும்"

எனக்கு இருப்புக்கொள்ளவில்லை.

"பிறகு எப்பிடி ரெண்டுபேரும் சேருகினம்?"

"அது சொல்லி விளங்கப்படுத்தேலாது தம்பி. படம் பார்க்கோணும்"

சுபாகரன் அண்ணா கிளைமக்ஸ் சொல்லாத சினிமா விமர்சனம்மாதிரி உரு ஏற்றிவிட எனக்கு அன்று முழுதும் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. அடுத்தநாள் இரவே இன்னொரு இடத்தில் படங்கள் போடப்படுவதாக ரெக்கி வருகிறது. அம்மாவிடம் கறாராகச் சொல்லிவிட்டேன்.

"கமலியும் சூர்யாவும் எப்பிடி சேரினம் எண்டு தெரியாம ஒரு கூட்டல் கழித்தல்கூடச் செய்யமாட்டன்"

அன்றிரவு மாயவனூரில் படம்போட்டார்கள். சின்ன டிவி. எனக்கு ஹோலின் ஓரத்தில்தான் இடம் கிடைத்தது. அப்போது திரைப்படம் பார்ப்பது என்பது தடைசெய்யப்பட்டிருந்த ஒரு விடயம். படம் பார்ப்பது தெரிந்தால் வீடியோ கொப்பிகளை கொண்டுபோய்விடுவார்கள். எனினும் இப்போது யோசித்தால் அது வெறும் பெயரளவிலான தடையே தவிர, அவர்கள் அந்த விடயத்தில் அவ்வளவு கறாராக இருக்கவில்லை என்பது புரிகிறது. விட்டுப்பிடித்திருக்கிறார்கள்.

முதலில் ஆசை படம் போட்டார்கள். அடுத்ததாக காதல்கோட்டை. பதினாறு வயதுப்பெடியனின் நாடி, நரம்பு, மூளை, முடுக்கு எல்லாம் தேவயானியை கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறிந்தது. கிளைமக்ஸில் சந்தோசம் தாளாமல் பக்கத்திலிருந்தவரை கட்டிப்பிடித்துவிட்டுத்தான் முகத்தைப்பார்த்தேன். அது இரண்டாம் தடவையாக பார்க்க வந்திருந்த சுபாகரன் அண்ணா. அடுத்த இரண்டு வருடங்களுக்கு, விஐபியில் சிம்ரன் பாஸ்கட்போல் விளையாடும்வரைக்கும் தேவயானியே என்னுடைய ஆதர்ச நாயகி. அதே தேவயானி தொட்டாச்சிணுங்கியில் உடுப்பு மாற்றும்போது பின்னாலிருந்து என்னால் பெரிதாக ரசிக்கமுடியவில்லை. தேவாயானி என்றால் சிம்பிளாக சேலை கட்டி, மெல்லிதாக தலை சாய்த்து, அளவாக சிரிக்கவேண்டும்.

வயதுப்பிரச்சனையா, திரைக்கதையா, கமலியா என்று தெரியாது, இன்றைய தேதிவரைக்கும் காதல்கோட்டைமாதிரி ஒரு காதல் படத்தை நான் தமிழில் பார்த்ததேயில்லை. 

**********************

காலை நான்கு மணிக்கெல்லாம் வட்டக்கச்சி துயிலெழும்பிவிடும். 

முதலாவதாக மாமி எழுந்து அட்சயபாத்திரத்தை ஸ்டார்ட் பண்ணுவார். ஒரு பசுவில் பால் கறந்து எல்லோரும் டீ ஊற்றிக்கொடுக்கப்படும். உடனேயே பெட்ரோல் அடித்ததுமாதிரி எல்லோரும் உற்சாகமாகி மாட்டுப்பட்டிக்கு படையெடுப்பார்கள். ஐந்தரைவரைக்கும் பால் கறப்பு. பின்னர் விநியோகம். விதைப்பு நேரம் என்றால் கிளி கலைக்கவென என்னைமாதிரி பொடிப்பயல்கள் தலையில் துவாயைச் சுற்றியவாறு புறப்பட்டுவிடுவோம். ஏழரை மணிக்கு தம்பிராசா அண்ணை “அள்ளி எறிவார்”. அவர் சாப்பிட்டதும் பட்டி மேய்ச்சலுக்கு புறப்படும். கடைசிமாடு படலையைவிட்டு அகன்றபின்னரே வட்டக்கச்சியின் அதிகாலை செஷன் முடிவுக்கு வரும். 

IMG_4378

அங்கிருந்த படிக்கிற பிள்ளைகள், அக்கம்பக்கத்து மாணவர்கள் என்று ஒரு குட்டி பள்ளிக்கூடம் சுந்தரம்பிள்ளை அங்கிளின் தலைமையில் அவர்கள் வீட்டுத்திண்ணையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஓ.எல், ஏ.எல் படிப்பவர்களுக்கு மாட்டுப்பட்டிக்கு அருகிலிருந்த கன்றுக்குட்டிகளை கட்டிவைக்கும் சிறு கொட்டிலை ஒதுக்கித் தந்திருந்தார்கள். ஒரு மேசை, நாலு கதிரை. சின்னக் கரும்பலகை என்று எல்லாம் நாமே சரிக்கட்டின அருமையான படிப்புக்கொட்டில் அது. நாங்களும் நான்கு மணிக்கே எழும்பி விடியும்வரை படிப்போம். பட்டியெல்லாம் வெளிக்கிட்டாப்பிறகு, மிஷின் கொட்டில் வெறிச்சோடியதும் ஒன்பது மணியளவில் மீண்டும் வந்து படுத்து விடுவோம்.

வட்டக்கச்சி வீட்டு வாழ்க்கை என்பதே  மிஷினும் மிஷின் சார்ந்த வாழ்க்கையும் எனலாம். அந்தவீட்டில் மிஷின் இன்றி அணுவும் அசையாது. உழவுக்கு மிஷின். விதைப்புக்கு மிஷின். சூடு மிதிக்க மிஷின். எரு அள்ள மிஷின். காட்டில் விறகு எடுக்க மிஷின். கிறவல் ரோட்டுப்போட மிஷின். குப்பை அள்ள மிஷின். புளியம்பொக்கனைத் திருவிழாவுக்குப் போக மிஷின். இடம்பெயர்ந்து போக மிஷின் என்று மிஷினின்றி எதுவுமில்லை. வேலை வெட்டியேதும் இல்லாமல் இருந்தமையால் மிஷின் எங்கு புறப்பட்டுப்போனாலும் மட்கார்டில் ஏறிக்குந்திவிடுவோம். எங்கே, எதுக்கெல்லாம் என்று கேட்டு ஏறுவதில்லை. அப்படி திரியும்போது எம்மையறியாமலேயே வேலை பழகத்தோடங்குவோம். அவர்களாகவே கொஞ்சம் கொஞ்சமாக மிஷின் ஓட்டவும் பழக்குவார்கள். அப்போதைய நிலையில் எனக்கு மோட்டர்சைக்கிள் மட்டுமே ஓடத்தெரிந்திருந்தது. மிஷின் ஸ்டியரிங்கைப் பிடித்தால் அது அங்கேயும் இங்கேயும் ஓடியது. பயத்தில் வேண்டாமென்று சொல்லிவிட்டேன். மிஷின் சரிவராவிட்டால் அடுத்த வாகனம் இருக்கவே இருக்கிறது. மாட்டுவண்டில். அங்குவேலைசெய்த ஜெயமணி அண்ணா, நாம்பன்களைப்பூட்டி, ஒரு விறகுலோட் வண்டிலை வட்டக்கச்சிக்குள்ளேயே தனியே கொண்டுபோய் பறித்துவிட்டு திரும்புமளவுக்கு எனக்குப் பழக்கிவிட்டிருந்தார். கொஞ்சம் சுதி பிறந்தால், மாட்டின் அடிமுதுகும் வாலும் இணையும் இடத்தில் சாதுவாகக்கிள்ளி, நாக்கை மடித்து டொக்கடித்தவாறே வேகம் பிடிப்பதுமுண்டு.  சந்தியில் திரும்பும்போது ஸ்லோப்பண்ணி, ஒரு பக்க மாட்டின் கயிற்றைப்பிடித்து இழுத்துக்கொண்டு மற்றையதை லூஸ் பண்ணித் திருப்பவேண்டும். 

மனைவி, நான் மாட்டு வண்டில் ஓட்டிய கதையை நம்பத்தயாராகவில்லை.

"உண்மையாவே நீங்கள் மாட்டுவண்டில் ஓடுவீங்களா?"

"அம்மானை. இப்ப உன்னை ஏத்திக்கொண்டு மகாவித்தியாலயம் வரைக்கும் போய்ட்டுவரட்டா?"

"ஆணியே வேண்டாம்"

மாமி சரியான சமயத்தில் காலை வாரினார்.

"குமரன் அப்ப விடப்பழகின வண்டிலைத்தான் இப்பவும் படலைக்குள்ள விட்டுக்கொண்டிருக்கிறார்"

பேசிக்கொண்டிருக்கும்போது படலையடியில் மிஷின் சத்தம் கேட்டது.

**********************

மாமா வந்துவிட்டார்.

விக்னராசா, விக்கியர், விக்கி, விக்கி அண்ணை, விக்கி மாமா, வட்டக்கச்சி மாமா என்று பல பெயர்களால் அழைக்கப்படுகின்ற விக்கி மாமாதான் இந்தக்கட்டுரையின் நாயகன். பருத்த உருவம். சாறம், மேல் இரண்டு பட்டின் போடாத சேர்ட். சாப்பிடேக்கையும் டீ குடிக்கேக்கையும் தவிர்த்து மீதி எல்லா நேரமும் வெற்றிலை குதப்பிக்கொண்டிருக்கும் வாய். அவர் பேசும்போதும் வெற்றிலையுடன் கூடவே  ஏகத்துக்கு நக்கலும் சேர்ந்து பேசும்.

படித்தது என்னவோ க.பொ.த சாதாரணதரம்தான். ஆனால் விக்கி மாமா ஒரு பயங்கர மண்டைக்காய். “வட்டக்கச்சியில் ஒரு குட்டி விஞ்ஞானி” என்ற தலைப்பில் தொண்ணூறுகளில் வெளிச்சம் பத்திரிகை விக்கி மாமாவைப்பற்றிய ஒரு முழு நீளக் கட்டுரையே வெளியிட்டிருந்தது. 

வன்னியில் டீசல் மண்ணெண்ணெய் வரத்து மிகத்தட்டுப்பாடாக இருந்த சமயம் அது. நெல் அறுப்புக் காலங்களில் சூடு மிதிப்பது என்பது பெரும்பாடு. மிஷினால் மிதிப்பதற்கு மண்ணெண்ணெய் ஊற்றிக் கட்டுப்படியாகாது.

மாமா இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டுபிடித்தார். மாடுகள் இழுப்பதற்கு ஏதுவாக ஒரு சூடு மிதிக்கும் கருவியை உருவாக்கினார். அதன் தொழில்நுட்பம் மிகவும் எளிமையானது. மர உருளைகளை மாடுகளைக்கொண்டு இழுத்து சூடுமிதிக்கும் புராதன தொழில்நுட்பம்தான் அது. உருளை எவ்வளவுக்கு எவ்வளவு பாரமோ அந்தளவுக்கு சூடு மிதிப்பதும் எளிதாகும். ஆனால் பாரம் கூடினால் மாடுகளால் உருளையை இலகுவாக இழுக்கமுடியாது. இதை பலன்ஸ் பண்ணவேண்டும். மாமா பழங்கால நுட்பத்துக்கு வினைத்திறன் சேர்த்தார். மர உருளையின் நடு அச்சை உராய்வு நீக்கிகளைக் கொண்டு உருவாக்கினார். உருளை வெளிப்புறத்தில் மிஷின் சில்லுப்போலவே பல்லு பல்லாக அரிந்துவிட்டார். அதனால் சூடு மிதிக்கும்போது குறைந்த பாரத்தில் அதிக வலுவில் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. விளைவு எதிர்பார்த்ததைவிட பல மடங்கு பயனைத் தந்தது. அது பெரும்போக விளைச்சல் நேரம். அக்கம் பக்கத்து விவசாயிகள் எல்லாம் சூடு மிதிக்க வழியில்லாமல் திணறிக்கொண்டிருந்தவர்கள், மாமா இந்தக் கருவியை உருவாக்கியதும், தமக்கும் வேண்டும் என்று ஓர்டர் கொடுக்க ஆரம்பித்தார்கள். கருவிகள் தயாரிக்கப்பட்டு இப்படி “மார்க்கட்டுக்குப்” போயின. பொருண்மியக்காரர் விசயம் கேள்விப்பட்டு வந்து கருவியைப் பார்த்துவிட்டுப் போனார்கள். “வெளிச்சம்” பத்திரிகையின் கட்டுரையோடு  மாமா பேமஸாகிவிட்டார்.

இது சும்மா ஒரு சோறு பதம்தான். அந்த மிஷின் கொட்டில் மாமாவின் ஆய்வுகூடம்மாதிரி. நிறைய கருவிகள் “ஆய்வு”நிலையில் அங்குமிங்குமாய் சிதறிக்கிடக்கும். அப்படியான மாமாவின் ஆய்வு ஒன்றுக்கு எனக்கும் அப்பிரசிண்டாக வேலை செய்யும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.

இதுதான் ப்ரோப்ளம் ஸ்டேட்மெண்ட்.

பட்டியிலே நூற்றைம்பது இருநூறு மாடுகள் நின்றன. தினமும் இருநூறு முந்நூறு லீட்டர் என பால் கறக்கப்படும். அப்போது பால் கொள்வனவு நடைமுறையில் இருக்கவில்லை. தெரிந்தவர்களுக்கு விற்றது, வீட்டுப்பாவனைபோக எப்படியும் தினமும் நாற்பது ஐம்பது லீட்டர் பால் எஞ்சிவிடும். அதை சேமித்து, உறைவிட்டு, தயிராக்கி, மத்தினால் கடைந்து வெண்ணெய் எடுக்கவேண்டும். தயிர் சேர்ந்துவிட்டால் பிறகு கடைவது கடினம். நாள்பட்டாலும் கெட்டுவிடும். இது ஒரு பெரிய சிக்கலாக ஒவ்வொருநாளும் உருவெடுத்தது..

மாமா இந்தப்பிரச்சனையை தீர்க்க ஒரு ஐடியா போட்டார். நான் ரிசர்ச் அசிஸ்டெண்ட். பேசிக்கலி எடுபிடி.

தீர்வு இதுதான். கலன் கலனாகத் தேங்கிக்கிடக்கும் தயிரைக் கடைவதற்கு ஒரு தானியங்கி இயந்திரத்தைச் சரிக்கட்டுவது. அதற்குத் தண்ணி இறைக்கும் பம்பைப் பாவிப்பது.

தண்ணீர்ப்பம்பின் ஒருபக்கம் ஒரு விசிறிச்சில்லு இருக்கும். அதில் கயிற்றைச் சுற்றி ஒரு இழு இழுத்தால், மற்றப் பக்கத்தாலே இருக்கும் பைப்பில் தண்ணீர் கிணற்றிலிருந்து இறைக்கப்பட்டு தோட்டத்துக்குள் பாயும். இழுப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் மற்றப்பக்கம் எப்படி தண்ணீர் பாய்ந்தோடுகிறது? அதற்குக் காரணம் அமுக்க வித்தியாசம். அதை ஏற்படுத்துவது உள்ளே இருக்கும் இன்னொரு விசிறிச்சில்லு. அது சுற்றும் சுற்றிலே வேகமாக கீழிருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு மேலே பாய்கிறது. அந்த விஞ்ஞான விளக்கம் இங்கே முக்கியமில்லை. ஆனால் அந்த விசிறிச்சில்லுதான் எங்களுடைய டார்கட்.

மாமா அந்த விசிறிச்சில்லின் வெளிப்புற மூடியைக் கழற்றி அகற்றிவிட்டு, அந்த விசிறிச்சில்லு உள்ளே நுழையக் கூடியவாறு ஒரு சின்ன எண்ணெய் பரலில் (தேங்காய் என்னை டின்) ஓட்டை போட்டார். பரலுக்குள்ளே விசிறிச் சில்லை நுழைத்துவிட்டு, நீக்கலை லீக் ஆகாவண்ணம் சொலிசன்போட்டு ஒட்டினார். இப்போது சில்லு மட்டும் பரலுக்குள் எட்டிப்பார்த்துக்கொண்டு நிற்கிறது. மீதி மோட்டர் பம்ப் வெளியே இருக்கிறது. பரலுக்குள் தண்ணீரை நிரப்பிவிட்டு மோட்டரை ஸ்டார்ட் பண்ணினால், சில்லு மிகவேகமாகச் சுற்றி, பரலிலிருந்த தண்ணீர் சலசலத்தது. எலிக்கு பரிசோதித்ததில் வெற்றி.

அடுத்ததாகத் தயிரைக் கொண்டு டெஸ்ட் பண்ணவேண்டும்.

“களவாப்போய் தயிர் பாத்திரங்களை எடுத்துவா” என்று மாமா சொன்னார். யாரும் பார்க்காத சமயம் ஐந்தாறு தயிர்ச்சட்டிகளை எங்கள் குசினிக்குள்ளிருந்து மிஷின் கொட்டிலுக்குள் கொத்திக்கொண்டு வந்துவிட்டேன். தயிரை பரலுக்குள் ஊற்றிவிட்டு மோட்டரை ஸ்டார்ட் பண்ணினோம். தயிரின் கனம் தாங்காமல் மோட்டர் திணறியது. தயிரைக் குறைத்துவிட்டு ஸ்டார்ட் பண்ணினால் மூஞ்சி முழுக்க தயிர்! மோட்டர் சுத்தின வேகத்தில் தயிர் தெறித்துப் பறந்தது. வெண்ணெய் வருவதற்கான எந்தச் சிலமனும் இல்லை.

ப்ளான் பி.

சில்லைக் கழட்டி, அந்த இடத்தில் கனம் குறைந்த ஷெல்லினுடைய பின் செட்டையை, அதன் நாக்கை ஒருவிதமாக வளைத்துவிட்டுக் கொழுவினோம். இப்போது மோட்டரை ஸ்டார்ட் பண்ணினால் தயிர் தெறிக்கவில்லை. கொஞ்சம் நம்பிக்கை வந்தது. பத்து செக்கனில் ஏதோ நுரைக்குமாப்போல. “தொட்டுப்பாரும்” என்றார் மாமா. கை வைத்தேன். கசகசத்தது. வாயில் வைத்தேன்.

சுத்தமான பசும்பால் வெண்ணெய்!

பரிசோதனை வெற்றி. தயிர் கடைகின்ற மிஷினை தண்ணிப்பம்புகொண்டு சரிக்கட்டிய கதை அக்கம் பக்கமெல்லாம் பரவிவிட்டது. எனக்கோ ஒரு விஞ்ஞானக்கண்டுபிடிப்புக்கு உதவியாளராக பணியாற்றிய புளுகம். அடுத்தநாள் காலை டெமோ என்று அறிவித்துவிட்டோம்.

நான் காலையிலேயே எழுந்து தயாராகிவிட்டேன். தண்ணிப்பம்பு கடைசிநேரத்தில் காலை வாரிவிடக்கூடாது என்று, இரண்டுமுறை டின்னர் விட்டு ஸ்டார்ட் பண்ணி சூட்டோடு ரெடியாக வைத்திருந்தேன். காலை சாப்பாடு முடிந்து தம்பிராசா அண்ணை பட்டியைக்கொண்டுபோனபின்னர் கண்டுபிடிப்பு குசினியடிக்கு வந்தது. ஓரளவுக்கு கூட்டம் கூடிவிட்டது. எல்லோரும் ஆர்வமாக இருந்தார்கள். ஆனால் மாமி மட்டும் மாமாவைப் பற்றித் தெரிந்ததாலோ என்னவோ குசினிக்குள் இருந்தபடி கூப்பாடு வைத்துக்கொண்டிருந்தார்.

“இது தயிருக்குப் பிடிச்ச சனியனே ஒழிய வேறொண்டுமில்லை”

தயிரை பரலுக்குள் விட்டுவிட்டு மோட்டரை ஸ்டார்ட் பண்ணினோம். வேகம் ஒன்றிலே நிற்க, புளுக், புளுக்கென்று மெதுவாக வெண்ணெய் திரள ஆரம்பித்தது. மாமாவுக்குப் பெருமை பிடிபடவில்லை. உற்சாகத்தில் “மிச்சமிருக்கிற எல்லாத் தயிரையும் எடுத்தொண்டு வாரும்” என்றார். குசினிக்குள் நுழையும்பொது மாமி பயங்கரமாகத் திட்டித்தீர்த்தார்.

“அந்த மனுஷனுக்குத்தான் வேலையில்லை எண்டா உமக்கென்ன மதி? போய் புத்தகத்தை எடுத்துப் படியுமென்!"

ஒவ்வொரு விஞ்ஞானியின் மனைவியும் இப்படித்தான் இருப்பார்கள் என்று மனதுக்குள் நினைத்தபடி, சத்தம் போடாமல் தயிர் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு வந்தேன். பரல் முழுக்க தயிரை விட்டு நிரப்பி, வேகத்தை இரண்டுக்கு மாற்றினோம். பின்னர் ஒன்றுக்கும் இரண்டுக்குமாய் சடுதியாக வேகத்தைக் கூட்டிக்குறைத்தோம். வெண்ணெய் திரண்டுவந்ததை ஊரே ஆவேன்று பார்த்தது. மாமிகூட வந்து எட்டிப்பார்த்தார். “பொருண்மியத்துக்கு சொல்லியனுப்பி வெளிச்சத்தில வரவைக்கோணும்” என்று யாரோ முணுமுணுத்தார்கள். என் பெயரையும் “உதவியாளர்” என்று போடச்சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

கொஞ்ச நேரத்திலேயே திரண்ட வெண்ணெய் உருகி மீண்டும் தயிரோடு குழையத்தொடங்கியது.

மோட்டரின் வெப்பம் பரலில் ஏறி வெண்ணையைப் பதம் பார்க்கத் தொடங்கியதுதான் வெண்ணெய் உருகக் காரணம். என்ன செய்யலாம் என்று மாமா கேட்க, என் பத்தாம் வகுப்பு விஞ்ஞானம் ஞாபகத்துக்கு வந்தது. மோட்டருக்கும் பரலுக்குமிடையில் ஒரு பலகையை வைப்போம். பலகை வெப்பத்தைக் கடத்தாது என்றேன். மாமா நம்பிக்கையில்லாமலேயே பலகையை வைத்தார். ம்ஹூம். பலனில்லை. விசிறியில் லிவரைப் நீளமாக்கி பரலை மோட்டரிலிருந்து தள்ளி வைக்கவேண்டும் என்று மாமா சொன்னார்.

பரலை தள்ளி வைப்பதற்குள் நாங்கள் மீண்டும் இடம்பெயர்ந்துவிட்டோம். 

**********************

இப்போது மீண்டும் நான் அந்த சம்பவத்தை நினைவு கூற "அதெல்லாம் ஒரு காலம்" என்றார் விக்கிமாமா.

"வேற எதுவும் அதுக்குப்பிறகு கண்டுபிடிச்சனிங்களா மாமா?"

"உமக்கு காட்டத்தான் பார்த்துக்கொண்டிருந்தன், வாரும்   ".

பின்வளவுக்குப் கூட்டிப்போனார். நாங்கள் இருந்த மிஷின் கொட்டிலை ஆர்மி எரித்துவிட்டதாம். மிஷின் கொட்டில் என்றில்லை, எல்லா கொட்டில்களையும் எரித்துவிட்டார்கள். மாட்டுப்பட்டியும் சுருங்கி பத்துப்பதினைந்து மாடுகளே இப்போது நிற்கின்றன. ஆனாலும் மாமாவின் ஆராய்ச்சிகளுக்கு குறைவில்லை. புதுபுது ஐடியாக்கள். மெஷின்கள். மாட்டுவண்டிலில் ட்ராக்டர் சில்லுப் பூட்டப்பட்டிருந்தது. நாற்று நடும் இயந்திரம் கூட முயன்றிருக்கிறார். நெல்லு தூர்த்துவதற்கு ஒரு சின்ன செட்டப். வயலிலே கதிர் அறுத்தபின்னர், கூட்டிக்குவிக்கவென இன்னொரு கருவி என தொடர்ந்து விஞ்ஞானி அக்டிவ்வாகத்தான் இருக்கிறார்.

"இதுகளை உந்த பேஸ்புக்கில போடுங்கடி எண்டு பெட்டைகளுக்கு சொன்னனான். அதுகள் வெக்கத்தில போடமாட்டன் எண்டுட்டுகள். குமரன் அண்ணைக்கு அனுப்பினால் போடுவார் எண்டும் சொன்னனான். இதுகள் கேக்காதுகள்"

சிரித்துக்கொண்டே ஒவ்வொரு கருவிகளாக பார்த்துக்கொண்டுவந்தேன். வயலில் நெற்கதிர்களை அறுத்தபின்னர் ஒதுக்கி குவிக்கும் கருவிமூலம் அவருக்கு நல்ல வருமானமும் வருகிறது. அக்கம்பக்கத்து வயல்களுக்கும் இதனைக்கொண்டுபோய் ஒதுக்கிக்கொடுக்கிறார். 

"இது ஒண்டை சரிக்கட்ட எவ்வளவு முடியும்?"

"ஒரு பதினையாயிரம், இருபதாயிரம் ரூவா வரும்"

"செய்து விக்கிற ஐடியா ஏதும் இருக்கா?"

"ஆரும் கேட்டால் செய்துகொடுக்கலாம்"

கிளிநொச்சி பொறியியல்பீடத்துக்கு புல்லுவெட்டும் கொன்றாக்டை மாமாவும் அவர் மகன் விபிதனும் எடுத்துவைத்திருக்கிறார்கள். பெருங்காணிகளில் புல்லுவெட்டவென மிஷினில் பூட்டி இழுக்கும் புல்லு வெட்டும் கருவியையும் வாங்கிவைத்திருக்கிறார்கள்.  எப்போதாவது ஒருமுறை புல்லு வெட்டக்கொண்டுபோவதைத் தவிர்த்து ஏனைய காலங்களில் அந்தக்கருவி வீட்டு வளவிற்குள்ளேயே சும்மா கிடக்கப்போகிறது.

அப்படி அது கிடக்க மாமா விடுவாரா என்ன?

அவர்கள், மாடுகளுக்கு சாப்பிடப்போட்டால் அதிகம் பால் கறக்கும் என்று அரை ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் (Sugar Graze) என்கின்ற கரும்புமாதிரியான ஒருவகைப் புல்லை வளர்க்கிறார்கள். அது உயர்ந்து வளருகின்ற புல்லுச்செடி. அதை அப்படியே வெட்டி மாடுகளுக்குப் போடமுடியாது. சிறு சிறு துண்டுகளாக நறுக்கவேண்டும். ஒன்றிரண்டு என்றால் நறுக்கலாம். ஆனால் நூற்றுக்கணக்கில் எப்படி நறுக்குவது? மணிக்கணக்காகும். கூலியும் அதிகம்.

மாஸ்டர் மைண்ட் வேலை செய்ய ஆரம்பித்தது.

அந்தப்புல்லு வெட்டும் கருவியில் பெட்டிவடிவ துளை இருந்தது. அதனை ஒரு தற்காலிக மரப்பலகைகொண்டு அடைத்து, துளையை சிறிதாக்கி, இந்த மக்காச்சோளப் புல்லை அந்தக்கருவியால நறுக்கக்கூடியவாறு  செட்டப்செய்துவிட்டார். விளைவு, ஒருநாள் வேலை, அரைமணியில் இப்போது முடிந்துவிடுகிறது.

ஒரு டெமோ காட்டுங்களேன் என்றவுடன், உடனேயே மக்காச்சோளம் சிலதை வெட்டிக்கொண்டுவந்து அந்தக்கருவியால் நறுக்கிக்காட்டினார்கள்.

 

இவை எல்லாமே இலங்கை முழுதுமுள்ள விவசாயிகளுக்கு பயன்படக்கூடியவை. ஆனால் சரியான சந்தைப்படுத்தல்கள் இல்லாமல் தேங்கிக்கிடக்கிறது. மாமாவின் கண்டுபிடிப்புகள் விவசாயக் கண்காட்சிகளில் இடம்பேறவேண்டியவை. சின்ன சின்ன ஐடியாக்கள். சிம்பிளான விசயங்கள். ஆனால் தேவையை சரியாக நிறைவேற்றும் கருவிகள். வழமைபோல மாமாவை எந்த ஊடகங்களும் ஏனோ கண்டுகொள்ளவில்லை.

யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த நண்பர்கள் ஓரிருவருக்கு வட்டக்கச்சி மாமாவை மையமாகவைத்து ஒரு ஆவணப்படம் செய்யலாம் என்று ஐடியா கொடுத்தேன். பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. பக்காவாக செய்தால் ஆவணப்படம் வைரலாகும். நம்மூர் விவசாயிகளின் நுணுக்கங்கள் வெளியில் தெரியவரும். போரும் இடப்பெயர்வும் எத்தனை அழிவுகளைக்கொண்டுவந்தாலும் மனிதர்களின் தேடல் என்றென்றைக்கும் குறைவதில்லை என்பதற்கு வட்டக்கச்சிக் குடும்பம் ஒரு தெள்ளிய உதாரணம்.

மாமாவின் மகனும் இப்போது விவசாயத்தை கையில் எடுத்திருக்கிறான். அதிகமான பால் கறவைக்கென பசுக்களுக்கு கொடுக்க தனியாக ஒருவித நீர்ப்பாசியை வளர்க்கிறான். விவசாயத்தை அதிக வினைத்திறனோடு செய்யவேண்டும் என்றும் யோசிக்கிறான். அவனும் பெரிய ஆளாக வருவான் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது. புத்திசாலித்தனமான பீனிக்ஸ் பறவைகள். இழந்ததுக்கு மேலாக மீட்டு முன்னேறிவிடுவார்கள்.

முன்னேறவேண்டும். 

**********************

சாப்பாடு டைம்.

நான் ஆவலோடு எதிர்பார்த்ததுபோலவே நாட்டுக்கோழி ஒன்று சட்டிக்குள் போயிருந்தது. உறைப்பில் மின் விசிறிக்காற்றிலும் மீசை வியர்த்தது. மாமி வழமைபோலவே சாப்பாட்டைத் தந்துவிட்டு எட்ட நின்றார். கோப்பையில் கறி குறைகையில் வந்து போட்டுவிட்டார். அதுவும் குழம்பில் அகப்படும் நாட்டுக்கோழி முட்டையின் சுவை, அம்மாடி.

வட்டக்கச்சி இறைச்சிக்கு பேர்போன ஊர். அங்கேயிருந்த காலத்தில் மான், மரை, காட்டுக்கோழி, காட்டுப்பன்றி என்று நடப்பது, பறப்பது, தாவுவது, ஓடுவது, ஓடுவது போடுவது என்று எல்லாவற்றையும் ஒரு கை பார்த்ததுண்டு. அப்போது இரண்டு கிழமைகளுக்கொருமுறை இராமநாதபுரத்திலிருந்து முயல் இறைச்சி வரும். அது பூனையில்லை, முயல் என்பதை புரூவ் பண்ணவென முயலின் வாலை மாத்திரம் வெட்டாமல் அப்படியே விட்டுவிட்டு பனையோலையில் சுற்றித்தருவார்கள். முயல் பொரியல்கறி பயங்கர டேஸ்ட். உடும்பு அடுத்தது. அதைப்பிடிப்பது மகா கடினமான வேலை. அதன் வேகத்துக்கு ஈடுகொடுத்து கலைக்கவேண்டும். நாயும் நன்றாக உடும்பு துரத்தும். துரத்தையில் உடும்பு ஓடிப்போய் எங்காவது மரக்கொட்டுக்குள் ஒளிந்துவிடும். உள்ளே ஒளிந்து உடும்புப்பிடி பிடித்துவிட்டார் என்றால் பின்னர் பிடிப்பது இலகு. கொட்டினை கோடாலியால் கொத்திப் பிரித்து உள்ளே கெட்டியாகப்பிடித்துக்கொண்டிருக்கும் உடும்பை பிடித்து எடுப்பார்கள். பின்னர் மிஷின்கொட்டிலில், அதன் முதுகுத்தோலை உரித்து அதிலேயே தலைகீழாக கட்டித்தொங்கப்போட்டு, பின்னர் ஏனைய பாகங்களை உரிப்பார்கள். எல்லாம் கிளீன் பண்ணியபிறகு எப்பன் இறைச்சிதான் மிஞ்சும். கறிவைத்தால், கால்கரண்டிகூட தேறாது. கலைத்துப் பிடித்தவனுக்கும் கறி போகாது. ஆனால் உடும்பிறைச்சிக்கறி ருசி என்றால் அப்படியொரு ருசி.

சாப்பிட்டு முடித்ததும் நானும் மனைவியும் இரணைமடு அணைக்கட்டுக்கு மோட்டர்சைக்கிளில் சென்றோம். சனசந்தடியில்லாத பாதையது. கட்டிலே ஏறும்வழியில் பற்றைக்குள் ஒரு ஜோடி பேப்பர் கிளாஸ் செய்துகொண்டிருந்தது. அணைக்கட்டிலிருந்து பார்க்கையில் தூரத்தே ஆர்மி வாகனம் ஒன்று காட்டுப்பாதையால் போய்க்கொண்டிருந்தது. காட்டுக்குள் விறகு எடுக்க அந்தப்பாதையால்தான் முந்தி மிஷினில் நாங்கள் போவதுண்டு. இப்போது எவரும் விறகெடுக்கப்போவதில்லையாம். அணைக்கட்டால் வான்கதவுகள்வரைக்கும் போய்ப்பார்த்தோம். அங்கே நிறைய சிங்களவர்களும் வந்திருந்தார்கள். அந்தப்பக்கம ஆர்மி செக் பொயின்டும் ஒரு புத்தர் சிலையும் முளைத்திருந்தது. கனகாம்பிகை அம்மன் கோயிலடியிலும் ஆர்மி இன்னமும் நிலைகொள்வதாக கூறினார்கள்.

எதையும், எதையுமே ரசிக்கமுடியவில்லை.

இரணைமடுவில் தண்ணீர் மட்டம் மிகக்குறைவாகவேயிருந்தது. ஆனால் மாரிகாலத்தில் குளம் வான்பாயும். அந்தக்குளத்தில் முப்பது அடிகளுக்கே தண்ணீரை தேக்கிவைக்கலாம். அணைக்கட்டைத்திருத்தி, யாழ்பாணத்துக்கு நீர் வழங்கும் திட்டம் ஒன்று தற்போது பலத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

“இதில எல்லாரும் அரசியல் பண்ணுறாங்கள் அண்ணை, இஞ்ச விவசாயிகளுக்கே தண்ணி இல்லை, சிறுபோகம் எல்லாம் கனக்க வயல்வழிய செய்ய ஏலாமக் கிடக்கு. இதுக்குள்ள யாழ்ப்பாணத்துக்கு எப்பிடித் தண்ணி குடுக்கிறது?”

மாமாவின் மகன் கேட்டான். நியாயம் தெரிந்தது. அதேசமயம் யாழ்ப்பாணத்துக்கும் கூடியவிரைவிலேயே குடிநீர்ப் பிரச்சனை வரப்போகிறது. தண்ணீரில் எண்ணெய் கலப்பது ஒருபுறம். காலம் காலமாக கக்கூஸ் கிடங்குகளினூடாக மனிதக்கழிவுகளின் கூறுகள் நிலக்கீழ் நீரில் கலப்பது அதைவிடப்பெரிய பிரச்சனை. முக்கால்வாசி யாழ்ப்பாணமுமே இப்போது காசு கொடுத்து போத்தல்களில் தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கிறது. கூடியவிரைவில் விவசாயத்துக்கு நிலக்கீழ் நீரை பயன்படுத்தமுடியாத அளவுக்கு அது மாசுபட்டுவிடும். ஏதாவது செய்யவேண்டும். ஆனையிறவு நீரேரியை அல்லது தொண்டமானாறு நீரேரியை நன்னீர்த்தேக்கமாக்கும் பழைய திட்டம் ஒன்றும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. நீர்ப்பிரச்சனை இன்னமும் சில வருடங்களிலேயே அந்தப்பிரதேசங்களில் பெரும் சமூகச்சிக்களாக உருவெடுக்கப்போவதற்கான அறிகுறிகளை எங்கேயும் காணக்கூடியதாக இருந்தது. இந்தத்தேசியம், தேசம், தேசிக்காய், தீர்வு என்று விடயங்களை அரசியல்வாதிகளின் முதுகில் மூட்டைகட்டி வைத்துவிட்டு, ஏனைய துறைசார்ந்தவர்கள் அத்தனைபேரும், அவர்கள் எந்த ஊரில் இருந்தாலும், நம்மூர்களின் அன்றாடத்தேவைகளையும் அபிவிருத்திகளையும் மாத்திரமே கருத்திற்கொண்டு செயற்படுவது நல்லதும் அவசியமானதுமாகத் தோன்றுகிறது.

**********************

இருளத்தொடங்கியது.

விடைபெறும்போது மிச்சக்கறியையும் மாமி பார்சல் பண்ணித் தந்துவிட்டார். சந்தியில் நின்ற ஓட்டோக்கார அண்ணா கூட்டிப்போகவந்தார். நல்ல மனிதர். பெயர் சபேசன் என்றார். எப்படி சண்டையில் சிக்கிச்சீரழிந்தது, இப்போது எப்படி நிம்மதியாகவிருக்கிறேன், அன்றாட வாழ்க்கை எப்படி ஓடுகிறது என்று நிறையக்கதைகளை வழியில் சொல்லிக்கொண்டுவந்தார்.

வட்டக்கச்சியிலிருந்து மனமில்லாமல் கிளிநொச்சி திரும்பினோம். ஆச்சரியமாக இடம்பெயர்ந்து தங்கிவிட்டு பின்னர் பாஸ் எடுத்து வவுனியா செல்லும்போதும் வட்டக்கச்சியை விட்டுப்பிரிய மனமில்லாமல்தான் பிரிந்தோம். அன்பாலும் நல்ல மனிதர்களாலும் நிறைந்த ஊர் அது. பிரிவது என்பது இயலாதது. அதிகம் அவர்களோடு பழகியறியாத என் மனைவிகூட திரும்பிச்செல்லும்போது  மனது பாரமாக உணர்வதாகச் சொன்னாள்.

சபேசன் அண்ணை, கிளிநொச்சியில் பஸ் ஸ்டாண்ட்வரைக்கும் கொண்டுவந்து விட்டார். தூரத்தில் யாழ்ப்பாண பஸ் வருவது தெரிந்தது. அவசர அவசரமாக பைகளை எடுத்தோம்.

“எவ்வளவு அண்ணை?”

சபேசன் அண்ணை சிரித்தார்.

“அண்ணை .. பஸ் .. வருது .. கெதியாச் சொல்லுங்கோ..”

“உங்களிட்ட காசு வாங்க மாட்டன் அண்ணை”

எனக்கு தூக்கி வாரிப்போட்டது. அவருக்கு என்னை முன்னப்பின்னவும் தெரியாது.

“அண்ணை விளையாடாதீங்கள்… எவ்வளவெண்டு சொல்லுங்கோ”

“எப்பவாச்சும் இருந்திட்டு வாற ஆக்கள் .. காசு வாங்கமாட்டன் .. வடிவாப்போயிட்டு வாங்கோ”

பஸ் நெருங்கிவிட்டது. வலுக்கட்டாயமாக அவருடைய பொக்கட்டினுள் பணத்தை திணித்துவிட்டு பஸ் ஏறினோம். எனக்கு இந்த மனிதர்களின் வெள்ளந்தித்தனத்தை எப்போதும் புரிந்துக்கொள்ளமுடிந்ததில்லை. யாரென்று தெரியாது. இவர் திரும்பிப்போய் விக்கிமாமாவிடமும் பணம் வாங்கியிருக்கப்போவதில்லை. அவர் பணம் கேட்காத விடயம் எங்கள் மூன்றுபேருடன் மாத்திரமே முடிந்திருக்கக்கூடிய ஒன்று. ஏன் வாங்க மறுத்தார்? சபேசன் அண்ணை என்றில்லை. வட்டக்கச்சியின் பெரும்பாலான மனிதர்களின் குணமும் இதுவே. மனிதர்களுக்கு முன் பணம் அவர்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது. அது முன்பின் தெரியாத மனிதரேயானாலும்.

இன்னொன்றையும் இங்கு சொல்லியே ஆகவேண்டும்.

சபேசன் அண்ணையும் இறுதிப்போரில் தம் காலை இழந்த பல்லாயிரக்கணக்கானவர்களில் ஒருவர்.

*********************

வட்டக்கச்சி 1

ஊரோச்சம்

Comments

  1. எழுதும் போது எங்கே இருந்தீர்கள் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டேன். அட நம்ம விக்கி அண்ணை. அவர் சண்டையில் தப்பி வந்ததே பெரிய வரம் எங்களுக்கு. நானும் சிவிக் சென்ட்டர் தான். இப்போது வெளிநாட்டில் இருந்தாலும் அடிக்கடி போய் வரும் ஒரு கனவு பூமி. அங்கு வாழ்ந்தவர்களுக்கு தான் அதன் உயிர்ரோட்டம் தெரியும். உங்கள் எழுத்துக்கு ஆயிரம் நன்றிகள்.

    ReplyDelete
  2. சிலவற்றை 'கொ.பு.கா - விறகு' மற்றும் 'வியாழ மாற்றம்' மூலமாக முன்னரே அறிந்திருந்தாலும், பாட்டி சொல்லும் கதை போல திரும்ப திரும்ப உங்கள் எழுத்தில் படிப்பதில் ஒரு திருப்தி. மீண்டுமொருமுறை வட்டக்கச்சி சென்று வசித்துவந்த உணர்வு :) Uthayan

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணை . கொ.பு.கா வில் சொன்னதை ஒரு தொடர்ச்சிக்காக கோடி காட்டவேண்டி வந்துவிட்டது. வியாழமாற்றங்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு முழுமையில்லாமல் எழுதினது. இப்போது வட்டக்கச்சி பற்றி ஒரு முழு கவரேஜ் கொடுத்த பீலிங் வருது.

      Delete
  3. அழகான ஒரு மலர் மீண்டும் உங்கள் பேனாவில் பூத்திருக்கிறது. குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்க்ககவாவது இதன் வாசனை நெஞ்சில் ஒட்டியிருக்கும். ஒவ்வொரு பதிவிலும் இறுதியில் மனதை தொடுவதுமாதிரி ஏதாவது சொல்லிவிடுகிறீர்கள். அதில் வரும் உண்மையான கதாபாத்திரங்களை நாமும் சந்திக்க வேண்டும் என்கிற நினைப்பை
    ஏற்படுத்தி விட்டீர்களே ..... உங்கள் எழுத்திற்கு என்ன வலிமை? இதுமாதிரிப் பதிவுகள்தான் உங்களை உயர்த்தி,உணர்த்தி இனம் காட்டும். வாழ்த்துக்கள்---சிவபாலன் -நியூயோர்க்.

    ReplyDelete
  4. ஜே.கே,

    இது மாதிரியான அனுபவங்கள் எனக்குமுண்டு:
    //அது வெறும் முட்டைப்பொரியல் அல்ல. நிறைந்த பாசமும், ஆசீர்வாதமும் நான் நல்லா வரவேண்டுமே என்கின்ற வேண்டுதலும் சேர்த்துப்பொரித்த பொரியல். அந்த ஆசீர்வாதம் இத்தனை வருடங்கள் கழித்தும் நீடிக்கிறது. எப்போது வீட்டில் முட்டை பொரித்தாலும் வட்டக்கச்சி மாமி தந்த முட்டைப்பொரியல் ஞாபகம் வந்து புரைக்கேறும்.//
    //ஒருநாளும் நாம் சாப்பிடும்போது மாமி அருகில் நிற்கமாட்டார். “வடிவாச்சாப்பிடும்” என்று சொல்லிவிட்டு குசினிக்குள் போய்விடுவார். ஆனால் எப்போது கோப்பையில் கோழிக்கறி குறைகிறதோ, அடுத்தகணமே ஒரு கரண்டி கறி தேடிவரும். அப்போதுதான் குசினிக்குள்ளிருந்து மாமி நம்மையே கவனித்துக்கொண்டிருந்திருக்கிறார் என்பது தெரியவரும்.//

    இந்த மாதிரி கவனித்து கொள்ளும் மாமிகளை சமாளிக்க நான் தட்டில் இருக்கும் எந்த பதார்தத்தையும் (கூட்டு, பொரியல் etc) காலி செய்யாமல், கொஞ்சம் மீதி வைத்து எல்லா சாதமும் (பருப்பு, சாம்பார், ரசம், தயிர்) ழுடித்த பின்னர் அவற்றை ழுடிப்பேன்.இல்லாவிட்டால் side dish சாப்பிட்டே வயிறு நிரம்பிவிடும்.

    குரங்குகளை பற்றிய ஒரு சுவாரசியமான தகவலை சொல்லியிருக்கிறீர்கள். எனக்கும் புரியவேண்டும் என்று கூடுதல் விவரங்களை சேர்த்து இருப்பது போல் தெரிகிறது. நன்றி.

    ReplyDelete
  5. ஜே.கே,

    இது மாதிரியான அனுபவங்கள் எனக்குமுண்டு:
    //அது வெறும் முட்டைப்பொரியல் அல்ல. நிறைந்த பாசமும், ஆசீர்வாதமும் நான் நல்லா வரவேண்டுமே என்கின்ற வேண்டுதலும் சேர்த்துப்பொரித்த பொரியல். அந்த ஆசீர்வாதம் இத்தனை வருடங்கள் கழித்தும் நீடிக்கிறது. எப்போது வீட்டில் முட்டை பொரித்தாலும் வட்டக்கச்சி மாமி தந்த முட்டைப்பொரியல் ஞாபகம் வந்து புரைக்கேறும்.//
    //ஒருநாளும் நாம் சாப்பிடும்போது மாமி அருகில் நிற்கமாட்டார். “வடிவாச்சாப்பிடும்” என்று சொல்லிவிட்டு குசினிக்குள் போய்விடுவார். ஆனால் எப்போது கோப்பையில் கோழிக்கறி குறைகிறதோ, அடுத்தகணமே ஒரு கரண்டி கறி தேடிவரும். அப்போதுதான் குசினிக்குள்ளிருந்து மாமி நம்மையே கவனித்துக்கொண்டிருந்திருக்கிறார் என்பது தெரியவரும்.//

    இந்த மாதிரி கவனித்து கொள்ளும் மாமிகளை சமாளிக்க நான் தட்டில் இருக்கும் எந்த பதார்தத்தையும் (கூட்டு, பொரியல் etc) காலி செய்யாமல், கொஞ்சம் மீதி வைத்து எல்லா சாதமும் (பருப்பு, சாம்பார், ரசம், தயிர்) ழுடித்த பின்னர் அவற்றை ழுடிப்பேன்.இல்லாவிட்டால் side dish சாப்பிட்டே வயிறு நிரம்பிவிடும்.

    குரங்குகளை பற்றிய ஒரு சுவாரசியமான தகவலை சொல்லியிருக்கிறீர்கள். எனக்கும் புரியவேண்டும் என்று கூடுதல் விவரங்களை சேர்த்து இருப்பது போல் தெரிகிறது. நன்றி.

    ReplyDelete
  6. ஜே.கே,

    இது மாதிரியான அனுபவங்கள் எனக்குமுண்டு:
    //அது வெறும் முட்டைப்பொரியல் அல்ல. நிறைந்த பாசமும், ஆசீர்வாதமும் நான் நல்லா வரவேண்டுமே என்கின்ற வேண்டுதலும் சேர்த்துப்பொரித்த பொரியல். அந்த ஆசீர்வாதம் இத்தனை வருடங்கள் கழித்தும் நீடிக்கிறது. எப்போது வீட்டில் முட்டை பொரித்தாலும் வட்டக்கச்சி மாமி தந்த முட்டைப்பொரியல் ஞாபகம் வந்து புரைக்கேறும்.//
    //ஒருநாளும் நாம் சாப்பிடும்போது மாமி அருகில் நிற்கமாட்டார். “வடிவாச்சாப்பிடும்” என்று சொல்லிவிட்டு குசினிக்குள் போய்விடுவார். ஆனால் எப்போது கோப்பையில் கோழிக்கறி குறைகிறதோ, அடுத்தகணமே ஒரு கரண்டி கறி தேடிவரும். அப்போதுதான் குசினிக்குள்ளிருந்து மாமி நம்மையே கவனித்துக்கொண்டிருந்திருக்கிறார் என்பது தெரியவரும்.//

    இந்த மாதிரி கவனித்து கொள்ளும் மாமிகளை சமாளிக்க நான் தட்டில் இருக்கும் எந்த பதார்தத்தையும் (கூட்டு, பொரியல் etc) காலி செய்யாமல், கொஞ்சம் மீதி வைத்து எல்லா சாதமும் (பருப்பு, சாம்பார், ரசம், தயிர்) ழுடித்த பின்னர் அவற்றை ழுடிப்பேன்.இல்லாவிட்டால் side dish சாப்பிட்டே வயிறு நிரம்பிவிடும்.

    குரங்குகளை பற்றிய ஒரு சுவாரசியமான தகவலை சொல்லியிருக்கிறீர்கள். எனக்கும் புரியவேண்டும் என்று கூடுதல் விவரங்களை சேர்த்து இருப்பது போல் தெரிகிறது. நன்றி.

    ReplyDelete
  7. சமீபத்தில் படித்த மிக‌ நல்லதொரு பதிவு. நானும் வட்டகச்சிக்கு உங்களோடு வந்ததுபோன்ற‌ உணர்வினைத் தந்தது.

    ReplyDelete
  8. உங்களுடன வட்டகச்சிக்கு என்னையும் அழைத்துச் சென்றதற்கு மிக்க நன்றி. சைவமானதால் உணவை மட்டும் சுவைக்கமுடியவில்லை. கதையின் உயிரோட்டம பாராட்டப்படவேண்டியது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. நன்றி நண்பரே .
    எங் களின் வாழ்க்கை பழைய நினைவுகளிலும் ,,ஞபகங்களில் தானே இப்பொது ஓடிக்கொண்டிருக்கிறது .உண்மையில்
    வன்னி வாழ்கையினை யுத்தகாலங்களில் அனுபவிக்க முடியாமல் இருந்தாலும் அதற்கு முற்பட்ட காலங்களில்
    அனுபவித்தவன் .அந்த மக்களின் வெள்ளந்தியான மனதுகளை அறிந்தவன் என்ற வகையில் உங்கள் பதிவினை படிக்கப்படிக்க கண்களில் கண்ணீர் .உங்களுக்கு இந்தவகையில் எழுத நன்கு வருகிறது .மிகவும் அருமையான படைப்பு .உங்கள் மற்ற படைப்புகளைப்போல .தண்ணீர் விடையத்தில் மண்ணின் மக்களுக்கே முன்னுரிமை வேண்டும் நான் யாழை சேர்ந்தவனாக இருந்தாலும் இதை எங்கும் உரத்து சொல்வேன் .
    நன்றி

    ReplyDelete
  10. I know your uncle.
    - Naadodi

    ReplyDelete
  11. இந்த பதிவை வாசிக்கும் போது மனது மிகவும் கனக்கிறது. இங்கு ஒரு விருந்தாளி வரப்போகின்றார் என்றால் எத்தனை பாடு படுகின்றோம் . அவர்களிடம் கற்று கொள்ள நிறைய விடயங்கள் இருக்கிறது .அந்த வாழ்க்கையை பற்றி சொல்வதென்றால் இதே ஒரு பதிவாக வந்துவிடும். இது உண்மையாக உங்களுக்கா அல்லது எங்களுக்கு நடந்த நிகழ்வை பார்த்த மாதிரி சொல்கிறீர்களோ பயந்துவிட்டேன் ।
    //வயதுப்பிரச்சனையா, திரைக்கதையா, கமலியா என்று தெரியாது, இன்றைய தேதிவரைக்கும் காதல்கோட்டைமாதிரி ஒரு காதல் படத்தை நான் தமிழில் பார்த்ததேயில்லை. //
    same pinch
    //"குமரன் அப்ப விடப்பழகின வண்டிலைத்தான் இப்பவும் படலைக்குள்ள விட்டுக்கொண்டிருக்கிறார்//-
    Too much

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .