"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" வெளியாகி ஒருவருடம் ஆகிவிட்டது.
இந்த நூல் நிறைய வாசகர்களையும் சில நண்பர்களையும் கொண்டுவந்து சேர்த்தது. வெள்ளி, அமுதவாயன் போன்ற நாவல்களை எழுதும் தைரியத்தையும் கொடுத்தது. தொடர்ந்து எழுத்தாகிக்கிடக்க ஊக்கம் தந்தது. அவ்வப்போது என்னத்துக்கு எழுதுவான் என்று தோன்றுகின்ற எண்ணங்களையும் வரவேற்பறையில் சிரித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தின் அட்டைப்படச்சிறுவன் அடித்துத் துரத்திவிடுவான். என்னளவில் கொல்லைப்புறத்துக் காதலிகள் அடிக்கடி "மரணம் மீளும் ஜனனம்".
இதனை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றிகள்.
விமர்சனங்களும் வராமலில்லை. எப்போதுமே விமர்சனங்கள் மனதை நோகடிப்பவை. மறைப்பதற்கில்லை. திறந்த மனதுடன் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் என்பது இன்னமும் வந்துசேரவில்லை. ஆனால் சில நாள் கழிந்து அட சொன்னது உண்மைதானே என்று எண்ணம் வரும். அடுத்த பதிவில் அத்தவறு வராமல் பார்த்துக்கொள்ள முயல்வேன். இதுவொரு முடிவுறா தொடர்ச்சி. தவறுகளும் திருத்தங்களும் எழுத்திருக்கும்வரை தொடரும்.
இயலுமானவரை தனித்திருக்கவே விரும்புகிறேன். அதேசமயம் எழுத்து பலரிடம் போய்ச்சேரும்போது பயங்கர சந்தோசமாகவிருக்கும். இவ்விரண்டு முரண்களுக்கிடையில் சிக்குப்பட்டு சீரழிவதுண்டு. அனுபவம் எதிர்காலத்தில் உதவலாம்.
ஜூட் அண்ணா, அண்மையில் பாராட்டிப் பதிவொன்று போட்டிருந்தார். மகிழ்ச்சியும் நன்றியும். ஆனால் அந்தப்பதிவின் இறுதிப் பந்திகள் கடும் மன உளைச்சல்களையே கொடுத்தது. அடக்கி வாசிக்கிறேன் என்ற எண்ணம் வேண்டாம். மெய்யாலுமே சமூகத்தை நெறிப்படுத்தும் எண்ணமோ, அதற்காக தீவிரமாக தொழிற்படும் துணிச்சலோ, ஆளுமையோ எனக்கு கிடையாது. என் புத்தகத்தையே முறையாக சந்தைப்படுத்தாதவன் நான். எனக்கு முயல்கொம்புகூட இல்லை. Fight Club என்கின்ற அதி அற்புதமான திரைப்படத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகளில் எனக்கு பூரண நம்பிக்கை இருக்கிறது.
"Listen up, maggots. You are not special. You are not a beautiful or unique snowflake. You're the same decaying organic matter as everything else."
என் ஆர்வம் எல்லாம் எழுதுவது. அது ஒரு போதை. எழுதும்போது எதுவுமே தெரியாது. சரியா பிழையா வாசிப்பானா மாட்டானா எதுவுமே தோணாது. விரல்கள் ஒருவரியிலும் மனம் ஐந்து வரி முன்னேயும் ஓடும் ஓட்டம்தான் எழுத்து. "வெள்ளி" ஐடியா எப்பிடி வந்தது என்று நண்பர் கேட்டார். எப்பிடி வந்தது? அதிகாலையில் கூவும் சேவலை தலைவனோடு கூடித்திளைக்கும் தலைவி திட்டுகின்ற குறுந்தொகை பாடல் மொத்த வெள்ளிக்கும் அடித்தளம் போட்டது என்றால் நானே நம்பமாட்டேன்.
Writing happens.
எழுத்தின்வழி அவ்வப்போது கருத்துக்கள் வந்து விழுவதுண்டு. அவற்றையும் நேர்மையாகக்கொடுக்கவே முயல்கிறேன். எல்லாம் தெரிந்தவன் என்று நினைத்தெல்லாம் நான் எழுத வரவில்லை. எழுதப்பிடிக்கும் என்பதாலேயே எழுதுகிறேன். அதனால் தவறான கருத்துகள் வெளிவந்தால் அது என்னுடைய ignorance மற்றும் அறிவற்றதன்மையால் விளைந்தவை. கடுமையாக விமர்சிக்கப்படவேண்டியவை. ஆனால் கத்தியை எடுத்து வயிற்றில் செருகாதீர்கள். எழுத்தாளர்களின் வகுப்பில் கடைசி பெஞ்சுப் பெடியன் நான். Show some mercy smile emoticon
இந்தச்சந்தர்ப்பத்தில் சஞ்சிகைகள் வெளியிடும் நண்பர்களுக்கு சிறு அன்பு வேண்டுகோள். ஆக்கங்கள் கேட்கும்போது "வேறு எங்கும் வெளியிடப்படாதவை" என்று வேர்ஜின்களாகவே கேட்கிறீர்கள். படலையில் ஒரு குறிப்பிட்ட வாசகர்களிடம் மாத்திரம் போய்ச்சேர்ந்த ஆக்கங்களை வேண்டாம் என்கிறீர்கள். எனக்கு படலையில் எழுதுவதற்கே நேரம் போதாமல் இருக்கிறது.அத்தோடு ஒரு சஞ்சிகைக்கு எழுதி, கட்டுரை வெளியாகுமா இல்லையா என்று மூன்று மாதம் பொறுத்திருந்து, மீண்டும் பலோ அப் செய்து, வெளியானால் அது எப்படி வாசிக்கப்பட்டது என்பதுகூடத் தெரியாமல், இறுதியில் படலையில் போடும்போது எனக்கே எழுதினது மறந்துபோய் விடுகிறது. இணையத்தில் வந்ததை அச்சிலும் கொண்டுவருவதில் என்ன சிக்கல்? புத்தக வாசிப்பனுபவம் வேறல்லவா? விதிகளை கொஞ்சம் தளர்த்தினாலென்ன? படலை போன்ற எழுதுபவர்களின் சொந்த தளங்களுக்கு இவ்வகை விதிகளிலிருந்து விலக்களிக்கலாமே.
இறுதியாக,
"கந்தசாமியும் கலக்ஸியும்" எழுதப்பட்டுகொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் தொண்ணூறு பக்கமாகவிருந்த நாவல் இப்போது நூற்றைம்பது பக்கம். இன்னமும் பத்து அத்தியாயங்கள் எடிட் செய்ய இருக்கு. ஒரு மாசத்துக்குள் ஒப்பேற்ற கண்டிக் கதிர்காமக் கந்தன் துணை புரியவேண்டும்.
என் கொல்லைப்புறத்துக் காதலிகளுக்கு கொடுத்த ஆதரவை இங்கும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அன்புடன்
ஜேகே.
வாழ்த்துக்கள் !!அடுத்த நூல் கந்தசாமியும் .முன்னர் வெளியான கொல்லைப்புற காதலியும் சேர்ந்தே பாரிஸ் பக்கம் வரட்டும் வாசிக்க ஆசையுடன்!வாழ்த்துக்கள் தொடரட்டும் நூல்கள் அச்சில்.
ReplyDeleteஉங்கள் பனி தொடரட்டும் பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteJoshva