Skip to main content

தமிழும் புலம்பெயர் இரண்டாம் தலைமுறையும்

 

Jantjes_sm

 

ஒரு சின்ன சந்தேகம்.

தமிழை ஏன் நம் குழந்தைகள் கற்கவேண்டும்? இந்த நாட்டில் தமிழ் கற்று என்ன பிரயோசனம்? தமிழ் படிப்பதால் என்ன வேலை கிடைத்துவிடப்போகிறது? லத்தீன் மொழி படித்தால்கூட மருத்துவப்படிப்பு வார்த்தைகளை புரிந்துகொள்வது இலகுவாகவிருக்கும். மாண்டரின் படித்தால் எதிர்காலத்தில் உத்தியோகங்களுக்கு பயன்படலாம். பிரெஞ்சு ஸ்பானிஷ் படித்தால்கூட வேறு நாடுகளுக்குச் செல்லும்போது சமாளிக்கலாம். தமிழை எதற்காகப் படிக்கவேண்டும்? பெற்றோர்களின் மொழி தமிழ் என்பதற்காக குழந்தைகளும் படிக்கவேண்டுமா? இரண்டாயிரம் ஆண்டு பழமையான மொழி என்பதால் படிக்கவேண்டுமா? வள்ளுவனும் பாரதியும் கம்பனும் தமிழில் இருப்பதால் தமிழைப் படிக்கவேண்டுமா? அற்புதமான இலக்கியங்கள் இருப்பதால் படிக்கவேண்டுமா? எந்த மொழியில்தான் இலக்கியங்கள் இல்லை? சமகாலத்தில் தமிழில் அப்படி என்னதான் சிறப்பு இருக்கிறது? யோசியுங்கள். பாரதிக்குப்பிறகு பள்ளியில் சொல்லிக்கொடுக்கிறமாதிரி எந்த அறிஞனுமே உருவாகாத, உருவானாலும் அப்படியான அறிஞர்களை பாடத்திடடங்களில் உள்வாங்காத, பழைமையிலே குளிர்காயும் ஒரு மொழியை எதற்கு எம் பிள்ளைகள் மெனக்கெட்டுப் படிக்கவேண்டும்? திருக்குறளைக்கூட தமிழில் பொழிப்புரையில்தானே படிக்கவேண்டியிருக்கிறது. அதற்குப்பதிலாக ஆங்கில மொழிபெயர்ப்பையே படிக்கலாமே? உலகின் எந்த நடைமுறைகளையும் மாற்றியமைக்கமுடியாத, செல்வாக்குச்செலுத்த முடியாத, தம்மினத்தின் விடுதலையைக்கூட பெற்றுக்கொள்ளமுடியாமல் தம்முள்ளேயே பிணக்குற்று நிற்கும் ஒரு சாதாரண, bogan என்று எள்ளி நகையாடப்படக்கூடிய ஒரு இனம் பேசக்கூடிய மொழியை, ஆஸ்திரேலியாவில் பிறந்து வளரும் இக்குழந்தைகள் ஏன் படிக்கவேண்டும்? தமிழ் எங்கள் மூச்சு, தமிழ் எங்கள் பேச்சு, உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு போன்றவை எல்லாம் வெறுமனே உணர்ச்சிவயமான வெற்றுக்கோசங்களேயொழிய, தமிழ் மொழியைப் படிப்பதற்கான காரணங்களாக அவை அமைய சந்தர்ப்பமில்லை.

அப்படியென்றால், தமிழை எதற்குத்தான் நாம் படிக்கவேண்டும்?

இந்தக்கேள்வி இப்போதில்லை, இருபது வருடங்களுக்கு முன்னமேயே இங்குள்ள மாணவர்களுடைய வயதில் நான் இருந்தபோது எனக்கு எழுந்தது. ஒரு மழைநாளில், மொத்த ஊரையுமே ஒரே இரவில் இடம்பெயரச்சொன்னபோது எழுந்தது. ஐந்து கிலொமீட்டர் தூரத்தை சாமான் சக்கட்டுகளை காரியரில் கட்டி ஒரு இரவு முழுதும் சைக்கிள் உருட்டியபடி நடந்து கடந்தபோது எழுந்தது. பின்னாலே சரிந்துவிழும் சூட்கேஸ் கட்டுகள். சைக்கிள் ஹாண்டிலில் இரண்டு பெரும் பைகள். மழை. மக்கள் கூட்டம். தாகம் எடுத்தாலும் சைக்கிளை எங்கேயும் நிறுத்திவிட்டு குடிக்கமுடியாது. மூக்கு வழியே ஒடிவரும் மழைத்துளிகளையே குடித்தபடி நகருவோம். தூரத்தே குண்டுச்சத்தங்கள் கேட்கும். குளிர். பயம். நடுக்கம்.

அப்போது எனக்கு அந்தச் சிந்தனைவந்தது.

எதற்காக தமிழனாய்ப் பிறந்து தொலைத்தேன்? நான் ஏன் ஈழத்திலே பிறந்தேன்? அதுவும் போயும்போயும் ஒரு யுத்தகாலத்தில் ஏன் பிறந்தேன்? ஏன் என் அம்மா அப்பாவுக்குப்போய்ப் பிறந்தேன். எங்கேயாவது யுத்தம் இடம்பெறாத நாட்டிலே நான் பிறந்திருக்கக்கூடாதா? இரவிலே, இடம்பெயராமல் மக்கள் நிம்மதியாக தூங்கக்கூடிய நாட்டிலே பிறந்திருக்கக்கூடாதா? அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ, பிரான்ஸிலோ, நியூசிலாந்திலோ, கனடாவிலோ, நோர்வேயிலோ பிறந்திருக்கக்கூடாதா? ஆங்கிலம் பேசி, அழகான பண்ணைவீட்டிலே குதிரை லாயம், டிசெம்பருக்கு கிறிஸ்மஸ், ஆண்டுக்கொருமுறை உலகச் சுற்றுலா, எனக்கேன் இப்படியொரு பிறப்பு அமையவில்லை? 

பதினைந்து வயதில் எழுந்த இக்கேள்வி பல ஆண்டுகளாகவே என்னை உறுத்திக்கொண்டிருந்தது. அது உறுத்திக்கொண்டிருந்தபோதெல்லாம் நான் என்னை விடுத்து இன்னொருவராக மாறவே முயன்றுகொண்டிருந்தேன். பில் கிளிண்டனாக, ஸ்டீவ் ஜொப்ஸாக, ஏ.ஆர்.ரகுமானாக, சச்சினாக, டேவிட் லெட்டர்மென்னாக, அமெரிக்கனாக, ஆங்கிலேயனாக, என் கனவுகள் எல்லாம் சிலிக்கன் வாலியிலும், மவுண்டின் வியூவிலும், நியூ யோர்க் ஓப்ராவிலும் சுற்றிக்கொண்டிருந்தன. நன்றாகப்படிப்பது, உழைப்பது, யுத்தபூமியை விட்டு தப்பியோடுவது. இவைதான் என்னுடைய முழுச்சிந்தனையும். சிங்கப்பூர் சென்றேன். நன்றாக உழைத்தேன். அமெரிக்கா செல்வது அடுத்த கட்டம். வாழ்வில் யாராகவெல்லாம் மாறவேண்டும் என்று நினைத்தேனோ அவர்களாக ஆவது இறுதிக்கட்டம். இதுவே வாழ்க்கையின் இலட்சியமானது. அலுவலகத்தில் என் பெயரை நாக்கில் இலகுவாக புரள்வதற்காக ஜேகே என்று அழைக்க ஆரம்பித்திருந்தார்கள். பிடித்திருந்தது. ஜெயக்குமரன் என்ற பெயர் மறந்துபோயிருந்தது. உடைகள் மாறின. உடல் மொழிகள் மாறின. நான் யார் என்பதையே மறக்க முயன்றுகொண்டிருந்தேன். என் நண்பர்கள் எவரும் தமிழர்களாக இருக்கவில்லை. தமிழ் மீது ஒரு ஏளனம் இருந்தது. தமிழ் படிச்சு என்னத்தைக் கிழிச்சம்? உயிரழிவையும் நாட்டை விட்டு துரத்தியதையும் தவிர தமிழ் எங்களுக்கு வேறு என்னத்தை செய்தது? தமிழை கெட்ட வார்த்தையால் திட்டினேன். தமிழரகளை கீழ்த்தரமானவர்களாக கருதினேன்.

ஆனால் ஒவ்வொருமுறையும் நான் என்னை மாற்ற முயன்றபோது முடியாமல் தோற்றுப்போனேன். சிங்கப்பூர் பூங்காக்களிலும் பேரூந்துகளிலும் விசரன் பேயன் மாதிரி அலைந்திருக்கிறேன். இரவு இரண்டு மணிக்கு பூங்காவிலே தனியே நடந்திருக்கிறேன். வீடு திரும்புதல் என்பதே விரும்பாமல், நான் யார், இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்கின்ற குழப்பத்தில் தினமும் காலையில் விழித்திருக்கிறேன். நல்ல வேலை. நிறையப்பணம். யுத்தமில்லாத, சூட்டுச்சத்தங்கள் இல்லாத வாழ்க்கை. ஆனால் நிம்மதியில்லை. ஒருநாள் சீனத்தோட்டம் ஒன்றில் நடந்துகொண்டிருந்தபோது என்னைத்தாண்டி பல்வேறுபட்ட மனிதர்கள் கடந்துபோனார்கள். சிங்கப்பூரர், மலேசியர். அமெரிக்கர். வியட்னாமியர். இந்தியர். பங்களாதேசி என்று ஒவ்வொரு இனத்தவர். இவர்கள் எவருமே என்னைக் கண்டுகொள்ளவில்லை. இவர்களில் ஒருவராக நான் இல்லை. அப்படியென்றால் என் இடம் எது என்ற குழப்பம் வந்தது. என் அடையாளம் என்ன? What is my identity? நான் யார்? நான் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறேன்? என்கின்ற குழப்பங்கள் கொடுத்த அலைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல.

இந்தக்குழப்பத்துக்கான பதிலை ஒரு நாவல் தந்தது. ஒரு இருநூறு பக்க நாவல் என்னுடைய பத்து வருட குழப்பத்துக்கு பதில் தந்தது. ஒரு நாவல் ஒருவருடைய வாழ்க்கையை மாற்றுமா என்றால், ஆம் மாற்றத்துக்காக தயாராக இருப்பவனை மாற்றும்.

அந்த நாவலின் கதையை இப்போது சொல்லப்போகிறேன். புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் ஜூஹும்பா லாகிரி எழுதிய “The Namesake” என்கின்ற நாவலின் கதை. இந்தக்கதை கிட்டத்தட்ட இந்த அரங்கில் இருக்கின்ற அனைவருக்குமே பரிச்சயமான கதையாகவிருக்கலாம். சொந்த வாழ்க்கையில் நடந்த கதையாக இருக்கலாம். நடக்கப்போகின்ற கதையாக இருக்கலாம்.

இந்த மாணவர்களின் வாழ்வில் நடந்துவிடக்கூடாது என்பதற்காக இன்றைக்கு உங்களோடு நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.

இந்தியாவின் கல்கத்தா நகரத்தில் பிறந்து வளர்ந்த அசோக், அமெரிக்கவின் புகழ்பெற்ற எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கவென புலம்பெயர்ந்து வருகிறான். சில வருடங்களுக்குப்பின்னர் கல்கத்தாவைச்சேர்ந்த ஆஷிமா என்கின்ற பெண்ணைத் திருமணம் முடித்து இருவரும் அமெரிக்காவில் வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். குழந்தை பிறக்கிறது. ஊரிலே என்றால் சொந்தக்காரர் புடைசூழ திருவிழாபோல நடக்கும் குழந்தைப்பேறு இங்கே யாருமேயில்லாமல் ஆஸ்பத்திரி வார்டிலே இடம்பெறுகிறது. குழந்தைக்கு கோகுல் என்று பெயர் வைக்கிறார்கள்.

கோகுல் வளர்கிறான். இங்கிருக்கும் மாணவர்களைப்போல. வீட்டிலே தாயும் தந்தையும் இந்தியர்களாக, இந்திய வாழ்க்கையே வாழ்கிறார்கள். விடுமுறை என்று ஒவ்வொரு வருடமும் அவர்கள் கல்கத்தாவுக்கே செல்கிறார்கள். வேறு எந்த நாடுகளுக்கும் செல்வதில்லை. வீட்டிலே ஒரு விருந்து என்றால் இந்தியர்களே வருவார்கள். இந்திய உணவுகள், இந்தியக்கதைகள், இந்தியப்பகிடிகள், இந்தியத்திரைப்படங்கள், அவர்களின் வீட்டுக்குள் நுழைந்தாலே அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்த உணர்வு ஏற்படும்.

கோகுல் வளர்ந்து பள்ளிக்குப்போகிறான். அப்போதுதான் தன் வீடும் பள்ளியும் வேறு வேறு என்பது அவனுக்கு புரிகிறது. முதல் சிக்கல் நிறம். அப்புறம் பெயர். அப்புறம் உணவு. பழக்க வழக்கங்கள். கோகுல் வெள்ளையின மாணவர்களால் மட்டம் தட்டப்படுகிறான். கோகுலுக்கு தான் ஒரு அமெரிக்கன் இல்லையோ என்கின்ற குழப்பம் வருகிறது. தான் மட்டும் ஏன் வெள்ளையனாக இருக்கவில்லை என்று கவலைப்படுகிறான். வீடும் தாய் தந்தையும் அந்த உணவும் அவர்கள் வைத்த பெயரும் அவனுடைய வெறுப்புக்கு உள்ளாகின்றன. குடும்பத்தோடும் வீட்டோடும் அவனுக்கு மிகப்பெரிய இடைவெளி உருவாகிறது. பதின்ம வயது கோகுல் குடும்பத்தை எள்ளி நகையாடுகிறான். தன் பெற்றோரை இந்தியர்கள் என்றும் தன்னை அமெரிக்கன் என்றும் சொல்லுகிறான். குடும்பத்தின் இந்தியக்கலாச்சாரத்திலிருந்து அமெரிக்காவின் கலாச்சாரத்துக்கு மாறுவதற்கு முயல்கிறான்.

இருபதுகளில் கோகுலின் இந்தக்குழப்பம் மேலும் அதிகமாகிறது. பதினெட்டு வயதில் கோகுல் தன் பெயரையே மாற்றிவிடுகிறான். அவனுக்கு அமெரிக்க வெள்ளையினப்பெண்களோடு தொடர்பு ஏற்படுகிறது. ஒரு வெள்ளைக்காரியின் வீட்டிலேயே அவளின் அம்மா அப்பாவோடுபோய்த் தங்கிவிடுகிறான். தன் தாய் தந்தையோடு தொடர்பே கொள்வதில்லை. ஏறத்தாள அவன் வெள்ளையனாகவே நினைத்து வாழத் தொடங்கிவிட்டான்..

அப்போதுதான் கோகுலின் தந்தை இறந்துவிடுகிறார். கோகுலும் அவனுடைய வெள்ளைக்காரக் காதலியும் அவன் வீட்டுக்கு வருகிறார்கள். வீட்டில் மீண்டும் இந்தியத்தனம். ஒப்பாரி. சோகம். அந்த வெள்ளைக்காரி முகத்தை சுழிக்கிறாள். இங்கே இருக்கவேண்டாம். எங்கேயாவது சுற்றுலா போவோம் என்கிறாள். அப்போதுதான் கோகுலுக்கு தான் யார் என்பது முகத்தில் அடிக்கிறது. பெற்ற தகப்பன் இறந்த துக்கத்தில்கூட பங்குகொள்ள முடியாமல் சுற்றுலா போவோம் என்கின்ற உறவு என்னத்துக்கு என்று அவளோடு முரண்படுகிறாள்.

கோகுல்போலவே அமெரிக்காவில் பிறந்து வளர்கின்ற இன்னொரு பெண் மௌஷ்மி. கோகுலுக்குள் இருக்கும் அடையாளப்பிரச்சனைதான் மௌஷ்மிக்கும். அவளும் பல ஆண் நண்பர்களோடு தொடர்பு வைத்தவள். தன்னை ஒரு இந்தியப்பெண்ணாக உணர்வதை நிராகரித்தவள். பெற்றோர்கள் வற்புறுத்தலால் கோகுலும் மௌஷ்மையும் திருமணம் முடிக்கிறார்கள். ஆனாலும் மௌஷ்மிக்கு அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை. அவளுக்கு ஒரு பிரெஞ்சுக்காரனோடு தொடர்பு ஏற்படுகிறது. கோகுலும் மௌஷ்மியும் பிரிகிறார்கள். இருபத்தாறு வயதில் கோகுல் மீண்டும் தனித்து விடப்படுகிறான். தன்னுடைய அடையாளம் எதுவென கொஞ்சம் கொஞ்சமாக தெரியவர, மீண்டும் தன் தாயோடும் தங்கையோடும் சேருகிறான்.

Identity Crisis எனப்படுகின்ற அடையாளச் சிக்கல் பதின்ம வயது மாணவர்களுக்கே வருகின்ற ஒரு பொதுவான பிரச்சனை. எல்லோருமே இதைக்கடந்தே வருவார்கள். ஆனால் இரண்டாம் தலைமுறை குடியேறிகளின் அடையாளச்சிக்கல் என்பது இலகுவில் கடந்துவிடக்கூடிய விடயம் அல்ல. எனக்கு ஏற்பட்ட அடையாளச்சிக்களை விட கோகுலுக்கும் மௌஷ்மிக்கும் ஏற்பட்ட அடையாளச்சிக்கல் இன்னமும் மோசமானது. கோகுலுக்காவது அவன் தெளிவானபின்னர் மீள்வதற்கு அவன் தாயும் தங்கையும் இருந்தார்கள். மௌஷ்மியின் வாழ்க்கையே தறிகெட்டுப்போய்விடுகிறது.

இந்த எல்லாக்கதைகளின் நபர்களுக்கும் ஒரு விடயம் நன்றாகப் புரிந்திருந்தால் எந்தச்சிக்கலும் வந்திருக்காது.

“End of the day you can’t change who you are. It’s just simple as that. You can’t change who you are. You better accept it and more importantly you better embrace it”

பெயரை மாற்றலாம். மொழி மாறலாம். துணையை மாற்றலாம். ஊரை மாற்றலாம். தோலின் நிறத்தைக்கூட மாற்றலாம். ஆனால் எங்கள் அடையாளத்தை மாற்றமுடியாது. Fortunately or unfortunately you can’t change it! எனக்கு அந்த அடையாளம் எது என்று யோசித்தபோது, அது வேறு எதுவுமில்லை தமிழ் என்பது விளங்கியது.

Tamil is my identity. Because I am a Tamil ... I am Tamil.

இங்கே தமிழ் என்பது வெறும் மொழியல்ல. தொடர்பாடல் ஊடகம் அல்ல. உத்தியோகம் பார்ப்பதற்காக படிக்கும் விடயம் அல்ல. Skill அல்ல. தமிழ் என்பது அடையாளம். தமிழ் என்பது ஒரு உள்ளுணர்வு. தமிழ் என்பது எமெக்கெல்லாம் வீடு. Feeling home என்பார்களே அது. Sweet home Tamil.

தமிழ் என்னுடைய அடையாளம் என்று அறிந்த கணத்தில் இருண்டுகிடந்த உலகம் உடனேயே வெளிக்கத்தொடங்கியது. நான் தனியாள் இல்லை என்பது புரிந்தது. நான் வாழ்ந்த உலகமும், என் அம்மா அப்பா வாழ்ந்த உலகமும் விளங்க ஆரம்பித்தன. என் முன்னாலே ஒரு பெரும் வாழ்க்கையும் வரலாறும் விரிந்தன. என் அப்பம்மாவும் அம்மம்மாவும் தமிழே பேசினார்கள். தமிழிலேயே கதைகள் சொன்னார்கள். அவர்கள் வாழ்வும் தமிழோடே இருந்தது. வயல்களில் விவசாயம் செய்தார்கள். மரக்கறிகள் நட்டார்கள். வண்டிகளில் நெல்லுமூட்டைகளை ஏற்றி சந்தைக்கு கொண்டுசென்று விற்றார்கள். புகையிலை வளர்த்து சுருட்டு சுற்றினார்கள். பனைகளில் ஏறி கள்ளு இறக்கினார்கள். கடல்களில் மீன் பிடித்தார்கள். கோயில்கள் கட்டினார்கள். ஏராளமான கடவுள்களைப் படைத்தார்கள். நிறைய இலக்கியம். நிறைய விஞ்ஞானம், நிறைய சமூகவியல் படைத்தார்கள். வீடு தேடி வந்தவனுக்கு சோறு போட்டார்கள். தம்மினத்துக்கு ஒரு அநீதி என்றவுடன் உயிரைக்கொடுத்து போராடினார்கள். உங்கள் பெற்றோரும் என் பெற்றோரும் நானும் நீங்களும் எம் அடுத்த சந்ததியும் நன்றாக இருக்கவேண்டும் என்று முகம்தெரியாத ரமேஷும் சுரேஷும் ராதாவும் பாமினியும் குண்டடிபட்டு இறந்துபோயிருக்கிறார்கள்.

“Can you believe it? They died for us.”

இவையெல்லாமே எமது அடையாளம்.

அவுஸ்திரேலியா என்பது பல்லினங்கள் வாழும் தேசம், அதுவே அவுஸ்திரேலியனின் அடையாளமும் கூட. இங்கே எல்லோருமே ஆங்கிலம்தான் பேசுகிறார்கள். ஆனால் ஆங்கிலம் அவர்களின் அடையாளம் அல்ல. ஒரு அவுஸ்திரேலியன் பூர்வீகக்குடியாக இருப்பான். ஒரு அவுஸ்திரேலியன் ஆங்கிலேயனாக இருப்பான். ஒரு அவுஸ்திரேலியன் மாசிடோனியனாக இருப்பான். ஒரு அவுஸ்திரேலியன் சைனீஸ்காரனாக இருப்பான். இத்தாலியனாக இருப்பான். பிரெஞ்சுக்காரனாக இருப்பான். வியட்னாமியாக இருப்பான். இந்தியனாக இருப்பான். ஒவ்வொரு அவுஸ்திரேலியனும் அவனுடைய பூர்வீக தேசத்தாலேயே அடையாளப்படுத்தபடுகிறான். இங்குள்ள மாணவர்கள் தங்களைத்தாங்களே கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி இது.

I am not an aborigine. I am not English. I am not Macedonian. I am not Italian. I am not French. I am not Vietnamese. I am not Indian.

Then who am I?

I am Tamil.

இது எம்முடைய இரண்டாம் தலைமுறை பிள்ளைகளுக்கு புரியவேண்டும். எம் அடையாளம் என்பது எமது இனம். எமது இனத்தின் அடையாளம் என்பது எம் மொழி. தமிழ். அது தெரியாமல் போனால் இருபதுகளில் நம் இரண்டாம் தலைமுறை, கோகுல் போன்றும் மௌஷ்மி போன்றும் திசைமாறிப்போகின்ற நிலை வந்துவிடும்.

ஹரிசா குவேர்சின் என்ற ஆராய்ச்சியாளர் இந்த அடையாளச்சிக்கலைப்பற்றி இப்படிச் சொல்கிறார்.

A child connects to his parents, family, relatives, culture, history, identity and religion through his mother tongue. Native language links the child with the culture of the society the child comes from and shapes his identity. A lot of children from immigrant families, who don’t know their native language well, are at a crossroads of identity crisis. When a child doesn’t know his language well we cannot say that he will be nurtured with his culture properly for the fact that the relationship between language and culture is deeply rooted. Mother tongue is one of the most powerful tools used to preserve and convey culture and cultural ties.

Children who are unaware of their culture, their language, and their history will lose confidence in themselves, the family, society and the nation to which they belong and will have no other option than seeking an alternate identity.

பள்ளி வாழ்விலும் பின்னரும் வரப்போகின்ற அடையாளச்சிக்கலை நம் பிள்ளைகள் எதிர்கொள்ள தமிழறிவு அவர்களுக்கு மிக அவசியம். மீண்டும் வலியுறுத்துகிறேன், புள்ளிகள் அதிகம் வரும் என்று இரண்டாம் மொழியாக லாட்டின் மொழியையோ பிரெஞ்சு மொழியையோ பயில்வதால் அவர்களுக்கு அந்த மொழிகளில் பரிச்சயம் மாத்திரமே கிடைக்கும். தமிழ் மொழியை பயில்வதால் இந்த மாணவர்களுக்கு தாம் யார், தம் வரலாறு என்ன, தம் பின்னணி என்கின்ற அடையாளம் கிடைக்கும். மாணவர்கள் தம் அடையாளத்தைக் கொண்டாடத்தொடங்குவார்கள். ஒரு இத்தாலியன் தன்னை இத்தாலியனாக உணர்வதுபோல நம் பிள்ளைகளும் தம்மை தமிழர்களாக உணரத்தொடங்குவார்கள்.

தமிழ் எங்கள் அடையாளம். தமிழ் உங்கள் அடையாளம். அதைத்தொலைத்தால் உங்களையே தொலைத்ததாகிவிடும் என்பதை உண்மையில் எம் பிள்ளைகளுக்கு சொல்லுவதைவிட பெற்றோர்களுக்கே சொல்ல வேண்டியிருக்கிறது. தன் பிள்ளைக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். புதிய உடுப்பு, ஐபாட், மொபைல் என்று எல்லாமே வாங்கிக்கொடுக்கிறார்கள். நீச்சலும் டெனிசும் பரதநாட்டியமும் பியானாவோம் சொல்லிக்கொடுக்கிறார்கள். பெண் குழந்தை பிறந்தவுடனேயே கூடவே இன்வெஸ்ட்மென்ட் புரப்பர்டி வாங்குகின்ற பெற்றோரைக்கூட கண்டிருக்கிறேன். இதையெல்லாம் செய்யும் பெற்றோர்கள் ஏன் நம் பிள்ளைகளோடு காலம்பூராகத் தொடரப்போகின்ற தமிழ் என்ற அடையாளத்தை கொடுக்கத்தவறுகிறார்கள்? எம் பிள்ளைகள் அடையாளச்சிக்கல்களில் அல்லல்படுவதற்கு நாமே காரணமாகலாமா? எப்படித்தூங்க முடிகிறது? என் பிள்ளைக்கு தமிழ் தெரியாது என்கின்ற எண்ணமே ஒரு பதைபதைப்பை ஏற்படுத்தவேண்டாமா? என் பிள்ளை தான் யார் என்று தெரியாமல் தறிகெட்டுப்போகப்போகிறதே என்பது உங்களுடைய முக்கிய கவலையாக இருக்கவேண்டாமா? முதலில் பெற்றோர்கள் தாம் தமிழர்களாக உணர்தல் வேண்டும். அவர்கள் முதலில் தம்முடைய அடையாளச்சிக்கல்களிலிருந்து மீள வேண்டும். தமிழ்மீதும் அளவு கடந்த காதலும் மதிப்பும் கொள்ளவேண்டும்.

If the parents embrace their identity, then the children also will follow the suit”

ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். தமிழை பிள்ளைகளுக்கு படிப்பிப்பது தமிழை வளர்ப்பதற்காகவல்ல. தமிழை யாரும் வளர்க்கத்தேவையில்லை. அது தன்னாலே வளருகின்ற மழைக்காடுபோல. தானே முகிலைக்கூட்டி தனக்குத்தானே மழை பொழிந்து காலமெல்லாம் நிலைத்து நிற்கும் மழைக்காடுபோல தமிழும் இலக்கியவாதிகளாலும் அறிவாளிகளாலும் எப்போதும் தன்னை உயிர்ப்பித்து வளர்த்தே வந்திருக்கிறது. இனிமேலும் வளரும்.

தமிழை நாங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்கவேண்டியது அவர்கள் வளர்வதற்கே. மொழியைக் கடத்துவது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியமுமல்ல. காடுகளிலும் பாலைகளிலும் உணவுக்காக அலைந்த நம் முன்னோர்களே தம் பரம்பரைகளுக்கு இந்தச் செழுமையான மொழியைக் கடத்தியிருக்கிறார்கள். ஒரு காட்டுவாசி செய்திருக்கிறான். படித்து, சொந்த வீடு, நிலம், சொத்து, மூன்று வேளையும் சாப்பாடு, சகல சுகபோகங்களும் இருக்கின்ற நாகரிக சமூகம் என்று சொல்லிக்கொள்கின்ற நாமே நம் குழந்தைகளுக்கு நம் மொழியை கொண்டுசெல்ல முடியாமல் இருக்கிறது என்றால் அது எந்தப்பெரிய அவமானம்? அதிகம் வேண்டாம். வீட்டிலே பிள்ளைகளோடு தமிழிலேயே பேசுங்கள். பிள்ளை பள்ளிக்குப்போனபின்னரும் தமிழிலேயே பேசுங்கள். ஆங்கிலத்தை அது தன்னாலே பயின்றுகொள்ளும். தமிழை, நீங்கள் ஆதரவு கொடுக்காவிட்டால் அதனால் பயில இயலாது. தமிழ் பயிலாவிட்டால் தன் அடையாளம் தொலைந்துவிடுமே என்கின்ற எண்ணம் சிறுபிள்ளையிடம் இருக்கப்போவதில்லை. நாம்தான் பொறுப்புடன் எடுத்துச் சொல்லவேண்டும். இதிலே குடும்ப நண்பர்களோடு கூட்டாக இணைந்து செயற்படவேண்டும். எல்லா நண்பர்களிடமும் இதை எடுத்துச்சொல்லுங்கள். உங்கள் வீட்டில் மாத்திரம் தமிழ் பேசினால் போதாது. நண்பர்களின் பிள்ளைகளும் தமிழ் பேசவேண்டும். பிள்ளை வளரும் பருவத்தில் உங்களோடு பேசும் நேரத்தைவிட உங்கள் நண்பர்களின் பிள்ளைகளோடே அதிகம் பேசிப்பழகப்போகிறது. அவர்கள் அப்போது பேசும் ஊடகம் தமிழாக இருப்பதை நீங்கள் உறுதிப்படுத்தவேண்டும்.

ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தாழ்மையான சில வேண்டுகோள்கள்.

தமிழை வெறுமனே ஒரு மொழியாக படிப்பிக்காதீர்கள். தமிழை பிள்ளைகள் ஒரு கொண்டாட்ட மனநிலையோடு படிப்பதை உறுதிசெய்யவேண்டும். திருக்குறள் கூட வேண்டாம். “கற்கக் கசடறக் கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்பதில் இருக்கின்ற இறுக்கமான மிரட்டலான மொழிநடை வேண்டாம். பல் உடைந்துவிடும். எளிமைப்படுத்துங்கள். கதைகளாகச் சொல்லுங்கள். ஒவ்வொரு திருக்குறளுக்கும் நூறு நீதிக்கதைகள் இருக்கின்றன. கதைகளினூடாக நீதியைச் சொல்லுங்கள். கதைகள் எப்போதுமே எம் மனதைவிட்டு அகலாது. கதைகள் சொல்லப்பட்ட மொழியும் அகலாது. சிறுவயதிலே படித்த முலாம்பழக்கதையும், அம்புலிமாமாக் கதைகளும் அவற்றின் மொழியோடு அப்படியே எம் ஞாபகத்தில் இருக்கிறது. என் அம்மா எனக்கும், என் அம்மாவுக்கு என் அம்மம்மாவும்,  அம்மம்மாவுக்கு பூட்டியும் என்று நம் மூதாதையினர் எல்லோருமே கதைகளினூடே எம் அடையாளங்களை மெருகேற்றி வந்திருக்கிறார்கள். கதை, சொல்லப்படும் மொழியிலேயே நம் மூளையில் தங்கி விடுகிறது. “கந்தன் ஒரு கமக்காரன்” என்று தொடங்கிய கதை இப்போது நான் ஆங்கில மொழியில் தொழில் புரிவதால் “Kanthan is a farmer”  என்று மாறப்போவதில்லை. பாடல்களை விட கதைகளுக்கு ஒரு பலம் உண்டு. பாடல்களை சமயத்தில் அர்த்தம் புரியாமலும் ஞாபகப்படுத்தமுடியும்.  கதைகள் அப்படியல்ல. அவற்றை சொல்லும்போது மொழியின் அர்த்தத்தோடு சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மொழிச்சொல்லின் அர்த்தங்களும் காட்சிகளோடு படிகிறது. அந்தக்கதையை ஞாபகப்படுத்தும்போதெல்லாம் மொழியும் விரிகிறது. நிறையக் கதைகள் சொல்லுங்கள்.

எம் தமிழ்க் கதைகள் அவுஸ்திரேலியா சூழலுக்கு ஏற்றபடி மாற்றப்படுவதும் முக்கியமாகிறது. “கந்தன் நல்ல கமக்காரன், காய்கறித்தோட்டம் செய்திடுவான்” என்பதை “பீட்டர் கிப்ஸ்லாண்டிலேயே மிகப்பெரிய சோளப்பண்ணை வைத்திருக்கிறான்” என்றுகூட மாற்றலாம். தப்பில்லை. அவுஸ்திரேலியாவிலேயே நிறைய ஆதிவாசிக்கதைகள் சிறுவர்களுக்காக இருக்கின்றன. மாத்தளை சோமு தமிழிலேயே எழுதியிருக்கிறார். கால் முளைத்த கதைகள் என்று எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். கங்காரு எப்படி குட்டியை மடியில் காவிக்கொண்டு திரிகிறது என்பதற்கு ஒரு கதை சொல்லலாம். கடல் ஏன் உப்பாகவிருக்கிறது, பூனை ஏன் எலியைத்துரத்துகிறது என்று ஏராளமான ஆதிவாசிக்கதைகள் இருக்கின்றன. தமிழில் சொல்லுங்கள். ஊர்பூராக கதையடிக்கத்தெரிந்த எமக்கு சொந்தப்பிள்ளைகளுக்கு கதை சொல்வதா கடினம்?

இன்னொன்று உங்கள் குடும்பக்கதைகளை குழந்தைகளுக்குச் சொல்லுங்கள். நீங்கள் சிறு வயதில் எந்தப்பாடசாலைக்குப் போனீர்கள். சைக்கிளில் சென்றீர்களா? நடந்து சென்றீர்களா? உங்கள் ஊரிலே மழை பெய்தால் காகிதக்கப்பல் விடுவீர்களா? உங்கள் பாட்டி என்ன கதை சொல்லுவார்? உங்கள் தாத்தா கடை வைத்திருந்தாரா? நாங்கள் சொல்ல வெட்கப்படுகின்ற, தேவையில்லை என்று நினைக்கின்ற சின்ன சின்ன விடயங்களில்கூட குழந்தைகளுக்கு ஆர்வமாகவிருக்கும். ஓரளவுக்கு பெரியவர்கள் என்றால் எங்கள் நாட்டில் நிகழ்ந்த யுத்தத்தைப் பற்றியும் அண்ணனும் அக்காளும் தம்பியும் தங்கையும் எப்படியெல்லாம் எமக்காக போராடினார்கள் என்பதையும் சொல்லுங்கள். சரியோ பிழையோ நம் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு சொல்லாமல் மறைப்பது தவறு. நம் பிள்ளைகள் அவர்களின் பூர்விகத்தினை தெரிந்து வைத்திருப்பது உரிமை.

உங்களுக்குத்தான் சொல்ல நேரம் இல்லையென்றால் மாணவர்களுக்கு வாசிக்கப்பழக்குங்கள். தமிழில் வாசிக்கப்பழக்குங்கள். அம்புலிமாமாவிலிருந்து ஆரம்பிக்கலாம். இன்றைக்கு ஏராளமான சிறுவர் நூல்கள் வந்துவிட்டன. தயவுசெய்து தொலைக்காட்சியோ ஐபாடோ யூடியூபோ வேண்டாம். வாசிப்பு சிறுவர்களுக்கு ஒரு உலகத்தை திறந்துவிடும். இரண்டு கதைகளை வாசித்துப்பழகிவிட்டால் மூன்றாவது கதையை அவர்களே ஆர்வத்தோடு வாசிக்கத்தொடங்கிவிடுவார்கள். என் அக்காவின் மகன், சிங்கப்பூரில் பிறந்தவன். பத்து வயது. நூலகத்தில் மகாபாரதம் எடுத்து வாசித்து, அண்ணர் தானே ஒரு மகாபாரதத்தை ஜெயமோகனுக்கு போட்டியாக எழுதிக்கொண்டிருக்கிறார். சிறுவர்களை நாங்கள் குறைத்து மதிப்பிடக்கூடாது. அப்படி குறைத்து மதிப்பிடுவது அவர்களுக்கு நாம் செய்யும் அநீதியும் கூட.

குழந்தைகளையும் தமிழில் கதை சொல்ல விடலாம். தமிழ்ப்போட்டிக்கு வந்த சிறுமி ஒருத்தியிடம் “சின்ரெல்லா” கதையை தமிழில் சொல்லச்சொன்னேன். ரசித்து அனுபவித்து குழந்தை சின்றெல்லா கதையை சொன்னாள். சித்தி என்ற தமிழ் வார்த்தை அதன் மூளைக்கு எட்டவில்லை. “சின்ரெல்லாவை அவவிண்ட அப்பாண்ட செக்கண்ட் பொண்டாண்டி கொடுமைப்படுத்தினா” என்கிறாள். எவ்வளவு அழகு. இதே மெல்பேர்னில் பாட்டி வடை சுட்ட கதையை மையமாக வைத்து பட்டிமண்டபம் செய்திருக்கிறோம். பேசியவர்கள் எல்லோருமே நம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்.

இன்னொன்று தமிழை அட்சரம் பிசகாத ஆஸ்பத்திரி சுத்தத்தோடு அணுகாதீர்கள். எந்த மொழியுமே காலத்தின் ஓட்டத்தில் வேறு மொழிகளோடு கலக்கவே செய்கிறது. நாம் அன்றாடம் பேசுகின்ற சப்பாத்து, கக்கூஸ், குசினி போன்றவை ஐரோப்பிய வார்த்தைகள். நாம் தமிழ் என்று எண்ணிக்கொண்டிருக்கின்ற பல சொற்கள் தமிழ் சொற்களே கிடையாது. அவற்றில் நிறைய சமஸ்கிருதமும் சிங்களமும் கலந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் சுவீகரித்துக்கொண்டே தமிழ் இத்தனை வளர்ந்திருக்கிறது. பிறகு ஆங்கிலக் கலப்புக்கு மட்டும் ஏன் தடை போடுகிறீர்கள்? மொபைலை மொபைல் என்றே சொல்ல விடுவோம். செல்லிடப்பேசி, தொலைக்காட்சி, மகிழூந்து என்று அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலவார்த்தைகளை தமிழ்ப்படுத்தி சாகடிக்கவேண்டாம். ஒரு குழந்தை நம்மோடு பெசும்போது தமிழ் தவறாகப் பேசிவிடுவேனோ என்கின்ற பயத்திலேயே பேசாமல் விட்டுவிடுகிறது. அதனை அளவுக்கேற்ற ஆங்கிலத்தை கலந்து பேசவிடுங்கள்.

முக்கியமான விடயம். என் நண்பரின் மகள் ஒருவர் VC வகுப்பில் லத்தீன் மொழியை இறுதியாண்டில் மாத்திரமே படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்தாள். இப்படி ஏராளமான மாணவர்கள் லத்தீனையும், சிங்களத்தையும், பிரெஞ்சையும் படித்து கூடுதல் மதிப்பெண்கள் பெறுகிறார்கள். ஆனால் வீட்டிலே தமிழ் படித்து, தமிழ் பள்ளிக்கு ஒழுங்காகச்சென்று பயின்று, தமிழிலே சிறந்த ஆளுமை கொண்ட மாணவர்களுக்கும் இங்கே ஐம்பது மதிப்பெண்கள் கிடைப்பதே அரிதாக இருக்கிறது. இதிலே மாணவர்களை குறை சொல்லமுடியவில்லை. காரணம் அதே இதே மாணவர்கள்தான் ஏனைய பாடங்களில் அதிக புள்ளிகளை பெறுகிறார்கள். ஆகவே VC வகுப்பிலே நாம் மாணவர்களை பரீட்சைக்கு தயார்செய்யும் முறையிலே எங்கேயோ தவறு இருக்கிறது. அல்லது பரீட்சையையும் திருத்துவதையும் நாங்கள் மிகக்கடினமாக மேற்கொள்கிறோம் என்பது அர்த்தமாகிறது. மாணவர்களை தமிழ் படிக்கவைப்பது அவர்கள் என்றென்றும் தமிழோடு தொடர்பில் இருக்கவேண்டும் என்பதற்காகத்தானே. ஆனால் நாமே அவர்கள் தமிழை விட்டு விலகுவதற்கு காரணமாக அமைந்துவிடக்கூடாது. பரீட்சைகளில் இனிமேல் சிறிது இலகுத்தன்மையை காட்டுங்கள்.

தமிழ்ப் போட்டிகளிலும் இதுவே நடக்கிறது. திருக்குறளை அப்படியே ஒப்புவிப்பதன்மூலம் என்ன பெரிதாக நிகழ்ந்துவிடப்போகிறது? பொழிப்பைக்கூட அப்படியே ஒப்புவிக்கவேண்டும். இல்லாவிட்டால் புள்ளியைக் குறைக்கிறார்கள். குழந்தையும் கிளிப்பிள்ளைமாதிரி ஒப்புவித்துவிட்டு லொலிபொப்பை வாங்கிக்கொண்டு அடுத்த கணமே திருக்குறளை மறந்துவிடுகிறது. ஒரு தொடர்பாடல் போட்டியிலே கம்பராமாயணப் பாடலைக் கொடுத்து வாசிக்கச்சொல்கிறார்கள். இது கிட்டத்தட்ட சிறுவர் துஷ்பிரயோகமாக எனக்குப்படுகிறது. பேச்சுப்போட்டிகளிலும் இன்னமும் பாரதி பிறந்த இடம் எட்டயபுரம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். இம்மாதிரியான முடிவுகளை எடுக்கும் நிலையில் இருப்பவர்கள் சென்ற நூற்றாண்டிலேயே இன்னமும் இருப்பதுவும், மாற்றங்கள் செய்ய முயல்பவர்களுக்கு முட்டுக்கட்டைகள் போடுவதுமே இப்படியான விடயங்கள் நடப்பதற்கான முக்கிய காரணங்கள்.

இறுதியாக ஒருவிடயத்தை சொல்லி அமர்கிறேன்.

எங்கள் வேலை குதிரைக்கு தண்ணி காட்டுவது. குடிநீரின் சுவையைக் சொல்லிக்கொடுப்பது. நீரின் குளிர்ச்சியையும் இதத்தையும் தெரியவைப்பது. அதைச்சரியாகச் செய்யவேண்டும். பின்னர் நீர் குடிப்பதுவும், நீச்சல் அடிப்பதுவும் குதிரை தானாகே செய்யவேண்டிய வேலை. ஆனால் நாங்களோ குதிரைக்கு நீச்சல் சொல்லிக்கொடுக்கிறோம் என்று தலையை உள்ளே போட்டு அழுத்துகிறோம். குதிரையோ மூச்சுத்திணறி திமிறிக்கொண்டு பயத்தில் பாய்ந்தோடிவிடுகிறது. அதற்குப்பிறகு குளத்தைக் கண்டாலே அது மிரள்கிறது.

வேண்டாமே.

நன்றி வணக்கம்.


Photo :
http://www.franklin.uga.edu/sites/franklin.uga.edu.chronicles/files/Jantjes_sm.jpg

Comments

  1. உங்கட முதல் மூண்டு பத்தியும் அப்பிடியே அட்சரம் பிசகாமல் எனக்குள்ளயும் இருக்கிற கேள்வியள். ஆறு கோடி தமிழன் எழு கோடி தமிழன் எண்டு கணக்குக்கு மட்டும் இருந்து ஒற்றுமையா இல்லாம உலகத்தில ஒண்டுக்கும் உதவாத, உதாரணமா அமையாத சமூகமா இருக்கமே கவலைப்பட்டு எண்டு இதில இருந்து தப்பிச்சு ஓடவும் முடியாம ஒட்டவும் முடியாம ஒரு திரிசங்கு நிலை...

    ஆனா உங்கட கருத்துப்படி பாத்தா, ஆபிரிக்காவில இருந்து அந்த பாலைவனத்த கடந்து வந்த அந்த மூதாதையண்ட மொழியையும் அடையாளத்தயுமா நாம இப்ப கொண்டுதிரியிறம்.. பழயன கழிதல் எண்டு கழுவிட்டு தமிழ கையில எடுக்கேல்லையா? அதே குழுவில இருந்த சிலர் மலையாளம் தெலுங்கு எண்டு மாறேல்லையா? அப்பிடிப்பாத்தா சைவன் எண்டதும் ஒரு அடையாளம் தானே? வெள்ளக்காரன் வந்து கிறிஸ்தவத்துக்கு மாற்றினபோதும் எதாலும் மாற்றம் ஏற்பட்டதா? இல்லையே? அந்த புத்தகத்த ஆதாரமா வச்ச உங்கட கருத்துக்கள் ரெண்டு மூண்டு பரம்பரைக்கு ஒரு பிரச்சனையா இருந்தாலும் காலப்போக்கில் இந்த மாற்றம் ஒரு நன்மைய தராது எண்டு ஏன் நினைக்கிறியள்? நான் தமிழ கதைக்கிறத பிழை எண்டு சொல்ல வரல.. அத பற்றி புலம்பெயர் சமூகம் கவலைப்படுறத, அதுக்காக பிள்ளையளோட கஷ்டப்ப்டுறத விட்டுடலாம்.

    ReplyDelete
    Replies
    1. இயல்பான மாற்றம் என்பது நிகழட்டும். அப்படிமாறும்போது வரலாறு இயல்பாக கடத்தப்படும். கலாச்சாரமும் பண்பாடும் தேவைக்கும் காலத்துக்குமேற்ற மாறுபடும். பழையன கழிதலும் புதியன புகுதலும் ஒழியவே அன்றி அது கழித்தலும் புகுவித்தலும் அல்ல. என்னுடைய கட்டுரை இரண்டாம் தலைமுறை குழந்தைகளுக்குரியது. அவர்களுக்கு தமிழினூடாகவே அடையாளத்தை கொண்டுசெல்ல முடியும். அவர்கள் வளர்ந்தபின் அவர்களின் பிள்ளைகளின் அடையாளம் என்பது இந்த சூழலில் இருந்து மாறுபட்டது. நீங்கள் அடையாளச் சிக்கலைப்பற்றி கதைத்ததை கருத்திலேயே எடுக்கவில்லை என்று தெரிகிறது. தன் பிள்ளைகளின் அடையாளச்சிக்கல் பற்றி பெற்றோர் கவலைப்படுவது அவசியம். ஒருவகையில் கடமையும் கூட. புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

      Delete
    2. உண்மை.. தெளிவான விளக்கம்... ஏற்றுகொள்கிறேன்.

      Delete
  2. எத்தனை பிள்ளைகள் கர்நாடக சங்கீதமும் நடனமும் வாத்திய இசையும் தாங்களாக விரும்பிப் படிக்கின்றன? பெற்றோர்களின் ஆக்கினைக்காக படிப்பவர்களில் சிலபேர் அரங்கேற்றம் மட்டும் படிப்பார்கள். அதுவே அவர்களுக்கும் அரங்கிறக்கமாகிறது. தொடர்பவர்கள் மிகமிகச் சிலரே. தமிழை தொழிற்பாட்டு மொழியாக தமிழர்களே ஆக்கிக் கொள்ளாதவரை இதற்கு தீர்வு இல்லை என்பது எனது கருத்து.
    ஆசி கந்தராஜா

    ReplyDelete
  3. கட்டுரை நன்றாக இருக்கிறது ... முயற்சி செய்து தான் பார்ப்போமே ....

    ReplyDelete
  4. உங்கள் பதிவு ரொம்ப அருமையா , உணர்வுபூர்வமாயிருந்தது

    ReplyDelete
  5. Nee yarr enru kaddal thamillan enru kuruvai allava unathu moliyai ealuthu enro pasu enru kaddal enna kuruvirkal atharka vathu padithu thamilan enru kuru.thamilan enpathi marra mudiyathu unarnthal mudium.

    ReplyDelete
  6. இந்த நிலை அவுஸ்திரேலியா, இலண்டன், கனடாவில மட்டும் இல்லை இப்ப யாழ்ப்பாணத்திலயும் வந்திட்டிது. இங்கயும் இப்ப பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆங்கில மொழிமூல வகுப்புக்கு அனுப்புவதில்தான் குறியாக இருக்கின்றார்கள். கேட்டால் தமிழை அவர்கள் தானாகவே கற்றுக்கொள்வார்கள் தானே என்று அலட்சியமாக சொல்கின்றார்கள். விளைவு நிலா என்றால் 'மயிலிறகே பாட்டுக்கு டான்ஸ் ஆடுவாங்களே அந்த ஆன்டியா?' என்று பிள்ளை கேட்கிறது moon என்று சொன்னால்தான் புரிகிறது அதுக்கு. கிட்ட்தட்ட இதே போல ஒரு நிலையை தான் மைந்தன் சிவாவும் Facebook இல் சில காலத்துக்கு முதலத சொல்லி இருந்தார்

    ReplyDelete
  7. i can relate to the issues raised here in this good article but i also want to say something.. Although i was born and bred in Colombo and living abroad from age 23, I am a proud Tamil, and have children who are proud of their heritage, they do not have an identity crisis and are not shy about the fact they're Tamils..but i can relate to this article somewhat for many reasons: My children can't speak Tamil fluently..which i regret very much. They're married to non-Tamils which i don't regret, because they are happily married to and that's their destiny.. In my case i am criticised and have to take the flack from many Tamils who ask me why i can't speak in Tamil.. i have been humiliated, have my speeches stopped before i could finish and humiliated many times for speaking in English! I want to speak and articulate better in Tamil than i do in English but i can't and i want to speak and write in Tamil perfectly and i can't as well as i did in school..i truly admire those who can speak well in both languages! When i speak in Tamil, i am trying to translate the English words retained in my brain and sometimes vice versa and it all goes wrong ..has that happened to anyone of you?

    ReplyDelete
    Replies
    1. I feel, we only have to teach/preach them Tamil up and until twenty. Afterwards, its children's choice whether to continue or not. But denying their right to be taught in their teen is something unethical.

      BTW I am very much surprised you read the whole article even with such difficulties in speaking Tamil. Cheers.

      Delete
    2. Usha,I was born and bred in Jaffna then in 1974 I moved to Colombo.I came to UK and lived there during my stay I got married to a Malaysian born Sri lankan who cannot speak Tamil due the political problems during her education.I had helped a lot unknown Tamil peoples to find a job without any expectation.After my marriage my wife,kids and myself was humiliated,insulted as well as outcast by even by our own relatives but when they need some help they will come for it.My kids were going to the Tamil Classes during their younger age but the class was not properly held and it became a political problem so I took them out of it later my kids were very annoyed by our own communities and their behavior towards them did not want to study Tamil.People can talk what ever they want to talk but when your own community alienate you or your own kids does anyone know the psychological problem they face?. In my opinion There is no point of talking in Tamil when the Tamil community at large do not know the culture and the civilization of it.I had gone through and suffered a lot financially and mentally.Now people who want to make this as a big issue majority of them are seeking fame for them and I have seen a lot of their indecent behaviors,Ignorance, Discriminatory mentality,jealousy, no compassion,no respect very introverts further more no humanity at all. Any one who is talking about Tamil can say where is this in our culture and civilization?. When a problem comes to them is a big issue but when another Tamil person has the similar problem they cannot accept it.Tamils mentality have to change.If any one wants challenge my arguments I am ready to support my arguments with evidences provided bring the National TV.For your information.We all came abroad mainly for discrimination ,standardization and un employment etc.When Immigrated from UK to Canada I faced a lot of similar issues.When i questioned the Government of Canada Immigration and got my Immigration file the Canadian Government had fabricated my personal Immigration file as well as the whole process was by misrepresentation by the Canada Immigration Minister so I challenged the Government for my rights but the calls I received from Our own Community including a priest from a Church was Un acceptable and inhuman.In my opinion I was as Tamil I will speak and whatever i have to do but i am not willing to force my kids to learn for our own uncivilized community at ll.In my view they can talk about freedom but are they really free from it even in the western world we are living in?. The real answer is no.We are still slaves but not united to fight for our right in the country where we are living at present too.This is my personal opinion and the truth.

      Delete
  8. i can relate to the issues raised here in this good article but i also want to say something.. Although i was born and bred in Colombo and living abroad from age 23, I am a proud Tamil, and have children who are proud of their heritage, they do not have an identity crisis and are not shy about the fact they're Tamils..but i can relate to this article somewhat for many reasons: My children can't speak Tamil fluently..which i regret very much. They're married to non-Tamils which i don't regret, because they are happily married to and that's their destiny.. In my case i am criticised and have to take the flack from many Tamils who ask me why i can't speak in Tamil.. i have been humiliated, have my speeches stopped before i could finish and humiliated many times for speaking in English! I want to speak and articulate better in Tamil than i do in English but i can't and i want to speak and write in Tamil perfectly and i can't as well as i did in school..i truly admire those who can speak well in both languages! When i speak in Tamil, i am trying to translate the English words retained in my brain and sometimes vice versa and it all goes wrong ..has that happened to anyone of you?

    ReplyDelete
    Replies
    1. Most of our Tamils (Gen X and some Gen Y crowd) think in Tamil and then translate them in English. I used to do that too. It is very normal :) After seeing others mistakes, I have changed a lot and I try my best to not think in Tamil. Haha.

      Screw those, who humiliate you. You are trying. That is what important.

      Best Regards
      Naadodi

      Delete
  9. இது ஒரு சபையில் பேசியதா? நல்ல கருத்துக்கள், ஆனால் இதை எத்தனை பெற்றோர் கேட்டோ, வாசித்தோ இருப்பார்கள்.பார்க்கும் (திரைப்படம், நாடகம்) பழக்கம் தவிர வாசிக்கும் கேட்கும் பழக்கம் நம்மவர்கள் மத்தியில் அருகிவிட்டது.
    நம் பிள்ளைகள் இசை, நடனம் கற்கிறார்கள், சிலர் அரங்கேறுகிறார்கள், அதன் பின் அதை மறந்தே விடுகிறார்கள் பலர்.
    காரணம் அவர்கள் கற்றது- பெற்றோருக்காக!

    ReplyDelete
    Replies
    1. இது இங்குள்ள தமிழ்ப்பாடசாலை ஒன்றில் சிரேட்ட மாணவர்கள், பெற்றோர்கள் இரவு விருந்தின்போது பேசப்பட்டது.

      முதலில் பிள்ளைகளுக்கு தமிழை படிப்பிப்பம். இருபதுக்குப்பிறகு அதைத்தொடர்வதா வேண்டாமென்று ஒதுக்குவதா என்பது அந்தந்த இளைஞர்களின் இஷ்டம்.

      Delete
  10. http://tamilvu.org/ THIS WEBSITE IS USEFUL TO ALL WHO WANT TO LEARN TAMIL AT ANY AGE! THANKS TO TAMILNAADU GOVT!

    ReplyDelete
  11. americavilooo,austrialiaviloo......

    idhil

    'INDIA' kaanoomey??

    ReplyDelete
  12. இவ்வளவு தெளிவாகவும், உண்மையாகவும், நேர்மையாகவும் எங்கட சனத்துக்கு முன்னால பேச ஒரு தில் வேணும் பாஸ்!!!, அருமை, எமது மக்களும் உங்கள் பேச்சை முழுமையாக உள்வாங்கி இருப்பார்கள் என நம்புவோம்...

    ReplyDelete
  13. சென்ற மாதத்தில் (08.12.15) உங்களின் இந்தப் பதிவை தற்செயலாகப் பார்த்தேன் ஆச்சரியம். ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் வேண்டுகோள் விடுத்து எழுதியிருந்த அத்தனையும்-நான் சொல்ல நினைத்து சொல்லாமல் சில காலமாக ஆதங்கப் பட்டு மறுகி கொண்டிருந்ததை,அச்சொட்டாக அப்படியே பிரதிபலித்தது.
    இங்கே UK இலும் இதே நிலைதான். துரதிர்ஷ்டவசமாக பேராசிரியர்களும் முனைவர்களும் பண்டிதர்களும் எமதுகுழதலைஎழுத்தை நிர்ணயிப்பவர்கள்ஆகஅவதாரம்எடுத்துவிட்டார்கள்.தமிழர்களின் சாபக்கேடு, வைக்கற் பட்டறைநாய்களைப்போல இப்படிக் குந்தியிருந்து கூத்துப் பார்க்கிற கோமாளிகள்தான்.
    நமது பிள்ளைகள் இதைத்தான் படிக்க வேண்டும் என நிர்ணயம் செய்ய இவர்கள் யாரையா? தமிழுக்குத்தாங்கள்தான்'கொந்துறாதுக்காறர்'எண்ட மாதிரி ஒரு மிதப்போட, தலைக்கனமும் எவரது கருத்துக்கும் மதிப்புக் கொடுக்காத பிடிச்சிராவித்தனமும் மற்றவர்கள் தமக்கீடாகப் படித்து முன்னேறி விடக் கூடாதென்ற அடிமன அவசங்களும் அருக்காணியும் கொண்ட இவர்களா வெளிநாடுகளில் வளர்கின்ற புலம்பெயர் தமிழ்ப் பிள்ளைகள் அதிக புள்ளிகளைப் பெற்று வெற்றி பெற விட்டுவிடுவார்கள்?
    இந்த விஷச் சுழலில் இருந்து விடுபடாத வரை எமது பிள்ளைகளுக்கு விமோசனமில்லஏதோ ஒரு காலத்தில் சிறிலங்காக் கலைச் சொல்லாக்கக் குழுவில் குந்தியிருந்து சூட்டைக் கிளப்பியவர்களோ என்னவோ ஏறிய ' மகிழுந்தை' விட்டு இறங்க மாட்டோம் எனக் கிடந்து உலைகிறார்கள்.
    தங்களது மிதிஉந்திலயும் பேருந்திலயும் பிள்ளயள ஏத்திக் குப்புற விளுத்தாட்டிறம் எண்டெல்லே நாண்டுகொண்டு நிக்கினம். முதலாம் இரண்டாம் வகுப்புப் பிள்ளைகளுக்கு ஒரு நாள் தன்னும் பாடம் எடுக்காதபேராசிரியர்களுக்கும் கலைமாணிகளுக்கும் பண்டிதர்களுக்கும் குழந்தை உளவியலோ அவர்களது சொற்கள்ஞ்சியமோ எப்படித் தெரியும்? இரும்படிக்கிற இடத்தில் ஈக்கென்ன வேலை என்று பேசாமல் ஒதுங்கிக் கொள்ள வேண்டாமோ? அவயளிட அகராதியில சாப்பிடுவது, கூப்பிடுவது, படுப்பது எல்லாமே இழிசனர் வழக்குகள் போலும்.வீட்டில மனிசிமார் உண்ண வாருங்கள்-உறங்க வாருங்கள்-எண்டுதான் அழைப்பு விடுப்பினமாக்கும். பிள்ளைகள் அறிந்த,அவர்கள் கேட்டுப் பழகிய எத்தனையோ சொற்கள் இருக்கத் தக்கதாக, ' தமிழ் என்றால் தலையிடி' என மிரண்டு ஓட வைக்கும் பண்டிதத்தனமான சொற்களை , ஏனையா அவசரமாக அவர்களது சின்ன மண்டைக்குள் திணித்து விட முந்துகிறீர்கள்?
    ஆரம்ப வகுப்புகளில் கற்பித்து அனுபவம் பெற்ற ஆசிரியர்களினால்
    மட்டுமே புலம்பெயர் தமிழ் மாணவர்களின் பிரச்சனைகளை விளங்கிக் கொண்டு, அவர்களுக்கான பாட நூல்களை ஆக்க முடியும்.அதற்கான வழி பிறக்குமா? வழிவிட்டுக் கொடுப்பார்களா ஆண்டு அனுபவித்த பரம்பரையினர்?


    ReplyDelete
    Replies
    1. I just posted a comment about these Tamil Shakespeare(s). I hate those guys

      Delete
  14. JK, one dad working on teaching kids tamil. Do you have online sources for tamil books kids can read - say like grade 4/5 level?

    ReplyDelete
  15. I skimmed through the article. முழுசாக வாசிக்க முடியவில்லை. நேரம் போகுது. திருப்ப வந்து வாசிக்கிறேன். எனக்குத் தெரிஞ்சு நல்லாத் தமிழ் படம் பாக்கிறார்கள் எங்களவர்கள். நிறைய தமிழ் பாட்டும் கேக்கிறார்கள். ஆனால் விளங்கிக் கேட்கிறார்களா என்று தெரியவில்லை. கொஞ்சையான ஆங்கிலப் பாடல்களை விரும்பிக்கேட்டும் சிறுவர்களைப் பாத்திருக்கிறேன். வார்த்தைகளைக் கேட்கும் பொது, . அதே போலத் தான் தமிழும் என்று நினைக்கிறேன். தமிழ் பாடசாலைகள் (சிட்னி) பலதில் படிப்பிப்பவர்களுக்கே அடிப்படைத் தமிழ் அவ்வளவாகத் தெரியாது. நாய் பூனை என்று மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதாதே. அதற்காக இலக்கியத் தமிழ் படிப்பிக்க வேணும் என்றில்லை. நேற்று தமிழ் கவிதை எழுதும் பெண் கட்டப்போற பையனுக்கு அனுப்பிய கவிதையை வாசித்து விளக்கச் சொல்லி என்னிடம் கேட்டார். இத்தனைக்கும் தமிழுக்கு டிஸ்டிங்க்சன் வாங்கி இருக்கிறேன். இலக்கியம் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனாலும், ஒரு கோதாரியும் விளங்கவில்லை. பாரதி கவிதைகள் என்று விரும்பி வாசிக்கத் தொடங்கிய போது பலதும் புரியவில்லை. அதுக்கே விளக்கம் எழுதிய ஒரு சைட்டில் போய் வாசிச்சுத் தான் நானே விளங்கிக் கொள்கிறேன். அவர்கள் எழுதியது போல இப்பவும் எழுதுபவர்களால் எரிச்சலாகவே இருக்கு. ஆங்கிலத்தில சேக்ஷ்பியரை விரும்புபவர்கள் இருக்கிறார்கள். இல்லை என்றில்லை. ஆனால் அவர் எழுதுவது போல இப்ப எழுதினால் யார் வாசிப்பான். அதே பிரச்சினை தான் தமிழுக்கும். ஆஸ்ரேலிய தமிழ்ப் புத்தகங்களைப் பார்த்ததில்லை. ஆனால் சில டியூசன் டீச்சர்களைச் சந்தித்து இருக்கிறேன். எழுத்தாளர்களும் ஆசிரியர்களுமே வாழ்த்துக்கள் என்று பிழையாக எழுதும் போது, I cringe. சின்னவர்களை எப்படித் திருத்துவது. ஊரிலும் தமிழுக்கு மார்க்ஸ் முழுதாகக் கிடைக்காது என்று தான் சொல்லுவார்கள். கணிதம் படிப்பது இலகு. தமிழ் படிப்பது கஷ்டம். தரமான ஆசிரியர்கள் வேணும். கடமைக்காகப் படிப்பிக்காத ஆசிரியர்கள் வேணும். தமிழை அதிகம் வாழ வைக்கும் சிட்னியினரால் முடியாது என்றில்லை. எங்கள் பங்கும் வேணும். பிழை என்று சொல்லாமல், அவர்களைத் தொடர்பு கொண்டு தமிழை எளிமையாக்க நாங்களும் உதவ வேண்டும். பூனைக்கு யார் மணிகட்டுவது என்பது தான் இப்ப இருக்கிற பிரச்சினை.

    ReplyDelete
  16. முதல் கருத்தில் நிறைய எழுத்துப்பிழை. மன்னிக்கவும்.


    முழுசாக வாசிக்க முடியவில்லை. நேரம் போகுது. திருப்ப வந்து வாசிக்கிறேன். எனக்குத் தெரிஞ்சு நல்லாத் தமிழ் படம் பாக்கிறார்கள் எங்கள் சிறுவர்கள். நிறைய தமிழ் பாட்டும் கேக்கிறார்கள். ஆனால் விளங்கிக் கேட்கிறார்களா என்று தெரியவில்லை. கொச்சையான ஆங்கிலப் பாடல்களை விரும்பிக்கேட்கும் சிறுவர்களைப் பாத்திருக்கிறேன். வார்த்தைகளைக் கேட்கும் போது, I cringe. ஆனால் அவர்கள் இசைக்காகவே கேட்கிறார்கள். வசனங்கள் புரியாத வயதினர் அவர்கள். அதே போலத் தான் தமிழும் என்று நினைக்கிறேன். தமிழ் பாடசாலைகள் (சிட்னி) பலதில் படிப்பிப்பவர்களுக்கே அடிப்படைத் தமிழ் அவ்வளவாகத் தெரியாது. நாய் பூனை என்று மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதாதே. அதற்காக இலக்கியத் தமிழ் படிப்பிக்க வேணும் என்றில்லை. நேற்று தமிழ் கவிதை எழுதும் பெண் கட்டப்போற பையனுக்கு அனுப்பிய கவிதையை வாசித்து விளக்கச் சொல்லி என்னிடம் கேட்டார். இத்தனைக்கும் தமிழுக்கு distinction வாங்கி இருக்கிறேன். இலக்கியம் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனாலும், ஒரு கோதாரியும் விளங்கவில்லை. பாரதி கவிதைகள் என்று விரும்பி வாசிக்கத் தொடங்கிய போது பலதும் புரியவில்லை. அதுக்கே விளக்கம் எழுதிய ஒரு சைட்டில் போய் வாசிச்சுத் தான் நானே விளங்கிக் கொள்கிறேன். அவர்கள் எழுதியது போல இப்பவும் எழுதுபவர்களால் எரிச்சலாகவே இருக்கு. ஆங்கிலத்தில சேக்ஸ்பியரை விரும்புபவர்கள் இருக்கிறார்கள். இல்லை என்றில்லை. ஆனால் அவர் எழுதுவது போல இப்ப எழுதினால் யார் வாசிப்பான். அதே பிரச்சினை தான் தமிழுக்கும். ஆஸ்ரேலிய தமிழ்ப் புத்தகங்களைப் பார்த்ததில்லை. ஆனால் சில டியூசன் டீச்சர்களைச் சந்தித்து இருக்கிறேன். எழுத்தாளர்களும் ஆசிரியர்களுமே வாழ்த்துக்கள் என்று பிழையாக எழுதும் போது, சின்னவர்களை எப்படித் திருத்துவது. ஊரிலும் தமிழுக்கு மார்க்ஸ் முழுதாகக் கிடைக்காது என்று தான் சொல்லுவார்கள். It is a universal issue. கணிதம் படிப்பது இலகு. தமிழ் படிப்பது கஷ்டம். தரமான ஆசிரியர்கள் வேணும். கடமைக்காகப் படிப்பிக்காத ஆசிரியர்கள் வேணும். தமிழை அதிகம் வாழ வைக்கும் சிட்னியினரால் முடியாது என்றில்லை. எங்கள் பங்கும் வேணும். பிழை என்று சொல்லாமல், அவர்களைத் தொடர்பு கொண்டு தமிழை எளிமையாக்க நாங்களும் உதவ வேண்டும். பூனைக்கு யார் மணிகட்டுவது என்பது தான் இப்ப இருக்கிற பிரச்சினை. இன்னும் ஒன்று ஆங்கிலம் பேசுவது தான் ஸ்டைல் என்று இன்னும் பலர் நினைக்கிறார்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...