அனேகமான விஞ்ஞானக் கதைகளைப்போலவே அன்றைக்கும் நாசாவின் விண்வெளி நிலையம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. விண்கல ஏவுதளத்துக்கான இறுதிநேர சரிபார்த்தல்கள், தயார்படுத்தல்கள் நடந்துகொண்டிருந்தன. விஞ்ஞானிகள் குறுக்கும் நெடுக்குமாக கைகளில் இருந்த டப்லட்டில் எதையெதையோ சுட்டிக்காட்டிப் பேசியபடி உடைகள் பறக்க நடந்து திரிந்தார்கள்.
கணனித்திரையில் ஏவுதளம் 40Bயிலே "சுண்டர்1" விண்கலம் சிறிய உருவில் தெரிந்தது. “சுண்டர்1” சந்திரனுக்கு மனிதர்களைக் கொண்டுசெல்லுகின்ற ஏழாவது விண்கலம். நாற்பது ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மனிதர் சந்திரனுக்குச் சென்று திரும்பப்போகும் பயணம். மூன்று விண்வெளி வீரர்கள், ஒன்பது பயணிகள் என்று மொத்தமாக பன்னிருவர் ஒரே சமயத்தில் பிரயாணம் செய்யும் முதல் பயணிகள் விண்கலம். அணுச்சக்தியில் இயங்கும் எஞ்சின், உள்ளக ஈர்ப்பு என்று பல நவீன தொழில்நுட்பங்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும் விண்கலம். இப்படி சுண்டர்1 விண்கலத்துக்குப் பல சிறப்புகள் இருக்கின்றன. இன்னமும் மூன்று மணித்தியாலங்களில் "டி மைனஸ்" கவுண்டவுன் ஆரம்பித்து ஒவ்வொன்றாக சரி பார்க்கப்பட்டு, வானிலையும் சீராக இருந்தால், கடைசி பத்து செக்கன்களும் ஒவ்வொன்றாகக் எண்ணப்பட்டு, அதிகம் சத்தமில்லாமல் புகையில்லாமல் ஸ்ஸ்ஸ் என்று சுண்டர்1 நெருப்பைக் கக்கிக்கொண்டு பறக்க ஆரம்பித்து, சரியாக முப்பத்தாறு மணிநேரங்களின் பின்னர் சந்திரனின் ஈர்ப்பு மண்டலத்துக்குள் நுழைந்து, வேகம் குறைத்து, தரையிரங்கி ...
சுந்தரேஸ்வரனின் நெற்றி கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டோமோ என்று சுருங்கியது.
பக்கத்து இருக்கையில் சுந்தரி ஐபாடில் கேம் விளையாடிக்கொண்டிருந்தாள். அவளருகே மனைவி கல்பனாவும் உறவுக்காரர்களும் எதையோ சிரித்துப்பேசியபடியிருந்தார்கள். எல்லோரும் குதூகலமாக இருக்க, தான் மட்டும் தேவையேயில்லாமல் பதட்டப்படுகிறோமோ என்று சுந்தரேஸ்வரன் நினைத்துக்கொண்டார். சுந்தரேஸ்வரன் தன்னுடைய மொத்த சொத்தையும் இந்தப்பயணத்துக்காக அடகு வைத்திருந்தார். எழுபத்தெட்டு பெட்ரோல் நிலையங்கள், முப்பத்துநான்கு சாராயக்கடைகள், செட்டித்தெருவில் மூன்று நகைக்கடைகள், வெளியில் தெரியாத பல வியாபாரங்கள், இது எல்லாவற்றையும் விட ஐந்தாறு உள்ளூர் விமானச் சேவைகள் என்று எல்லா சொத்தையும் எரித்தபடி பறப்பதற்கு சுண்டர்1 விண்கலம் தயாராக நின்றது.
சுந்தரேஸ்வரனுக்கு வியர்த்தது. இதுவரை சந்திரனுக்கென்று பயணம் செய்த விண்கலங்களில் இருபத்தெட்டு சதவீதமானவை இடைநடுவிலேயே வெடித்துச்சிதறியிருக்கின்றன அல்லது கட்டுப்பாடின்றி சந்திரத்தரையில் விழுந்து சிதறியிருக்கின்றன என்ற தகவல் அடிக்கடி அவர் மூளையில் எட்டிப்பார்த்தது. “மனுசன் சந்திரனில் காலடி வைக்கவேயில்லை. அமெரிக்காக்காரன் ஸ்டூடியோவுக்குள் செட் போட்டு படம் எடுத்து உலகையே ஏமாற்றிவிட்டான்” என்று இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் புண்ணியம் சொல்லியிருந்தான். நாற்பது வருடங்களாக ஏன் சந்திரனுக்கு மனிதன் மீண்டும் செல்ல முனையவில்லை? என்ற கேள்விக்கு நாசா இன்னமும் அவருக்கு முறையான பதிலைக் கொடுக்கவில்லை. இது மட்டும் வெற்றியளித்தால், விண்வெளிப்பயணச் சேவையிலே கோடிகளை உழைத்துத் தள்ளலாம். பிழைத்துவிட்டது என்றாலும் பரவாயில்லை, சுண்டங்காய். போனாப்போகிறது. வெறும் ஐந்து இலட்சம் அடைவுக்காசோடு கனடாவுக்கு வந்து தேடிய சொத்து. மீண்டும் தேடிக்கொள்ளலாம்.
ஆனால் உயிரே போனால்?
சுந்தரேஸ்வரன் கல்பனாவைப் பார்த்தார். சந்திரனுக்குப்போகிறோம் என்கின்ற குதூகலம் அவள் முகத்தில் தெரிந்தது. அல்வாயில் கிடுகு வேய்ந்துதான் தகப்பன் பிள்ளைகளை வளர்த்து விட்டிருந்தார். இன்றைக்கு கல்பனா சந்திரனுக்குப்போகிறாள். வழமைக்கு அதிகமாக லிப்ஸ்டிக் பூசியிருந்தாள். விழுந்து விழுந்து சிரித்தாள். எந்தநேரமும் தன்னை ஊடகங்கள் படம் பிடிக்கின்றனவோ என்கின்ற பிரக்ஞையில் அடிக்கடி மூக்குப்பக்கம் சுட்டுவிரலால் தடவிக்கொண்டாள். சுந்தரியின் பக்கம் திரும்பினார். பத்து வயதுச் சிறுமி. வயதுக்கு மீறிய அறிவு. “ஈர்ப்பு விசையால்தான் அப்பிள் நிலத்தில் விழுகிறது என்றால், அதிக ஈர்ப்பு உள்ள சூரியனை நோக்கியல்லவா அப்பிள் ஓடவேண்டும்? ஏன் பூமியை நோக்கி அப்பிள் விழுகிறது?” என்று சுந்தரி ஒருமுறை அவரைக்கேட்டபோது உடனேயே விடை சொல்லமுடியாமல் திக்குமுக்காடிப்போனார். என்னை நிலாவுக்கு கூட்டிப்போ என்று சுந்தரி கேட்டதை சுந்தரேஸ்வரன் சீரியஸாகவே எடுத்துக்கொண்டுவிட்டார். இப்போது யோசித்தால் தாம் கொஞ்சம் அகலக்கால் வைத்துவிட்டதாகவே சுந்தரேஸ்வரனுக்குத் தோன்றியது. தப்பித்தவறி ஏதும் நிகழ்ந்துவிட்டால்...
"ஆர் யூ ஓல்ரைட் சுண்டரிஸ்வரான்? யு லுக் லிட்டில் நேர்வஸ்"
வெள்ளைக் கோர்ட்காரி அனுமதி பெறாமலேயே இரத்த அழுத்தம் பரிசோதித்தாள். அவரின் நெற்றியைத்தடவிப்பார்த்து, தோள்களைக் குலுக்கி, கண்களை விரித்து...
"திஸ் இஸ் நோர்மல். இட் வில் பி லைக் எ சப்வே டிரவல். டோண்ட் வொரி""யியா... ஐ நோ""டு யூ வோன்ன ட்ரை த சிமியுலேட்டர் எகெயின்?""நோ.. ஐ தின்ங் ஐயாம் ரெடி டு கோ"
கடந்த ஒருமாதமாகவே சுந்தரேஸ்வரனும் குடும்பத்தினரும் சிமியுலேட்டர் என்கின்ற விண்கல மாதிரியில் சந்திரனுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தார்கள். திரைப்படங்களில் பார்த்ததுபோல அந்த விண்கல மாதிரியின் பயணம் திரில்லாக இருக்கவில்லை. பயணிகள் விண்கலத்துக்கென பல புதுத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திருந்தார்கள். விண்கலத்திற்கு கீழ்ப்பகுதி மேற்பகுதி என்று நிர்ணயித்து செயற்கை ஈர்ப்புசக்தி கொடுத்திருந்தார்கள். மிதக்க வேண்டியதில்லை. கால்களை தளத்தில் ஊன்றி நடக்கலாம். பேனாவை எறிந்தால் கீழே விழுந்தது. டுத் பிரஷ்சைப் போட்டால் விழுந்தது. ஆகாய விமானம்போல பாத்ரூம் சரிக்கட்டியிருந்தார்கள். உள்ளேபோய் உட்கார்ந்தால் அதுவும் கீழே விழுந்தது.
"யூ ஹாவ் எ பிரெஸ் மீட்டிங். தென் ஸ்டெர்ய்ட் டு லோஞ்சிங் பாட்"
பத்திரிகையாளர் சந்திப்பு என்றவுடன் கல்பனா பளிச்சானார். சுந்தரேஸ்வரனும் கல்பனாவும் நடுவில் சுந்தரியைக் கைப்பிடித்தவாறு மைக்குகளுக்கு முன்னால் போய் நின்றனர்.
சம்பிரதாயமான கேள்விகள் கேட்டார்கள்.
"சந்திரனுக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?""நிலாவைத் தொட்டுப்பார்க்கவேண்டும் என்ற ஆசை, பாட்டி நிலாச்சோறு ஊட்டியபோதே தொற்றிவிட்டது. ""சந்திரனில் காலடி வைக்கும் முதல் ஈழத்தமிழர் என்பதை நினைக்கையில் என்ன உணர்வு வருகிறது?"
தினக்குரல் கேட்ட கேள்விக்கு கல்பனா மைக் பிடித்தாள்.
"பெருமையாக இருக்கிறது. தமிழரை சொந்த ஊரிலிருந்து அடித்துத் துரத்தினார்கள். இன்று அவர்கள் சந்திரனுக்கே பயணிக்கிறார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே"
சுந்தரியையும் கேள்வி கேட்டார்கள்.
"சந்திரனுக்கு போனதும் என்ன செய்வாய்?""பூமியைப் முழுசாகப் பார்க்கப்போகிறேன்""சந்திரனில் காலடி வைக்கப்போகும் முதல் பெண். வயதில் குறைந்தவர். இது பற்றி என்ன நினைக்கிறாய்?"
சுந்தரி சிறிது யோசித்துப்பார்த்துவிட்டுச் சொன்னாள்..
"தெரியேல்லையே"
கை தட்டினார்கள். டான் டிவி மொத்த நிகழ்வையும் நேரடி வர்ணனை செய்துகொண்டிருந்தது. பத்திரிகைகள், டுவிட்டர், பேஸ்புக் என்று சுந்தரேஸ்வரன் குடும்பத்தினருக்கு பாராட்டுதல்களும் வாழ்த்துகளும் குவிந்துகொண்டிருந்தன. #சுந்தரிtoசந்திரன் ஹாஷ்டாக் வைரலாக பரவிக்கொண்டிருந்தது. ஆளாளுக்கு ஸ்டேடஸ் போட்டார்கள். புதிதாக நிலாக்கவிதைகள் எழுதப்பட்டன. பலரின் புரபைல் பிக்சராக சுந்தரி விண்வெளி உடையில் சிரித்துக்கொண்டிருந்தாள். சுந்தரி நம் சிறுவர்கள் காண்கின்ற கனவுகளின் விடியல் என்று பலரும் புகழ்ந்தார்கள். “ஈழத்தமிழரின் அறிவியல் பயணத்தில் இது ஒரு மைல்கல்” என்று வடக்கு முதலமைச்சர் அறிக்கை விட்டிருந்தார். முதலமைச்சரின் கருத்து அவருடைய சொந்தக் கருத்து என்றும், “ஶ்ரீலங்கா மக்களின் அறிவியல் பாதையில் இது ஒரு மைல் கல்” என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடு என்றும் சுமந்திரன் பேட்டி கொடுத்திருந்தார். புதிய தலைமுறையில் சாருவும் மனுஷ்யபுத்ரனும் விண்வெளித் தொழில்நுட்பம் பற்றி மக்களுக்கு தெளிவு படுத்திக்கொண்டிருந்தார்கள். ஜெயமோகன் விண்வெளிப்பயணம் என்பது அக எழுச்சி சார்ந்தது, சந்திரன் என்பது வெறும் படிமக்கூறு என்று வாசகர் கேள்வி ஒன்றுக்கு பதில் எழுதினார். சில சமூகவலைத்தளப் புரட்சியாளர்கள், இந்தப்பயணம் ஒரு நவ முதலாளித்துவத்தின் தூண்டில் என்றும், மத்திய தர வர்க்கத்தின் சேமிப்பைச் சுரண்டுவதற்காக ஆதிக்கச் சக்திகள் விண்வெளிப்பயணம் என்கின்ற ஆசையை உழைக்கும் வர்க்கத்திடம் விதைக்கிறார்கள் என்றும் மொத்தமாக நிகழ்வைப் புறக்கணித்தார்கள்.
"Inside the Sundar1, feeling excited! #சுந்தரிtoசந்திரன்"
என்ற ஸ்டேடசோடு சுந்தரியின் செல்பி ஆயிரத்துநூறாவது தடவை பகிரப்படும்போது விண்கலம் பூமியின் வளிமண்டலத்திலிருந்து வெளியேறி விண்வெளிக்குச் சென்றுவிட்டிருந்தது. பயணம் செய்த எல்லோரும் பாதுகாப்பு பட்டிகளையும் தலைக்கவசங்களையும் அகற்றிவிட்டு அவசர அவசரமாக யன்னல்வழியே எட்டிப்பார்த்தார்கள். பாதி இருட்டு, பாதி நீலமான பூமி. முகில்களுக்குப் பின்னே ஆபிரிக்கா தெரிந்தது. சுந்தரி "பூமி அழகாய் இருக்கிறது" என்று இன்னொரு படத்தை அப்லோட் பண்ணினாள். சுந்தரேஸ்வரன் இரண்டாம் முறையாக பாத்ரூம் போனார். கல்பனா பதட்டத்தை மறைக்க அடிக்கடி பகிடி விட்டார். சுந்தரி யன்னலூடாக விண்வெளியை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
முப்பது மணிநேரப் பயணம். சந்திரனின் ஈர்ப்பு விசை வரம்புக்குள் நுழையும்வரையிலும் நேரத்தை எப்படியோ தின்னவேண்டும். அவ்வப்போது விண்வெளிவீரர் ஒருவர் வந்து நட்சத்திரங்களைப் பற்றி விளக்கம் கொடுத்தார். பூமியின் தற்போதைய நிலை, தூரம், சுழற்சி என்று பல்வேறு தகவல்கள் சொன்னார். விண்கலத்தின் பயணப்பாதை, அது எப்படி சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழைந்து தரையிரங்கப்போகிறது என்கின்ற அறிவுறுத்தல்களை நூறாவது தடவையாக திருப்பிச் சொன்னார்கள்.
விண்கலத்தில் நடப்பவற்றை உலகம்பூராக ஒளிபரப்பு செய்தார்கள். நீயா நானா சுந்தரி ஸ்பெஷல் நிகழ்ச்சியில் சுந்தரியை நேரடி விண் அலையோடு இணைத்திருந்தார்கள். குழந்தைகள் கேள்வி கேட்டார்கள்.
"சுந்தரி அக்கா, நீங்க எனக்கு நிலாவை பிடிச்சுக்கொண்டு வருவீங்களா"“பிடிச்சுக்கொண்டுவந்தா அத நீ எங்கே வைப்பே?”
எல்லோரும் சொல்லிவைத்தாற்போல் கை தட்டினார்கள்.
"ஸ்பேஸ்ல எப்பிடி மூச்சு விடுவீக?""நமக்குன்னு ஸ்பெஷலா ராக்கட்பூரா ஆக்சிஜன் ரொப்பி வச்சிருக்காக""விண்வெளில வெளிச்சமா இருக்குமா? இருட்டா இருக்குமா?""டார்க்கா இருக்கு. சண் பெரிசா தெர்யுது""சுந்தரி அக்கா, உங்களுக்கு அஜித் மாமாவை பிடிக்குமா, விஜய் மாமாவை பிடிக்குமா?""யெனக்கு சிம்பு மாமாவைத்தான் ரொம்பப் பிடிக்கும்"
கரகோசம் எழுந்தது. கோபி மைக்கை வேறு யாரிடமோ கொடுக்கச்சொன்னார். யார் யாரோ கேள்வி கேட்டார்கள். சுந்தரி எல்லாக் கேள்விகளுக்குமான பதில்களை தயார்படுத்தியிருந்தபடி ஒப்புவித்தாள். கேள்விகளையும் கூடவே அதற்கான பதில்களையும் சேர்த்து விஜய் டிவி சென்றவாரமே அனுப்பியிருந்தது. ஆளாளுக்கு மாறி மாறிப் பேசிக்கொண்டார்கள். நிலவைப்பற்றி கவிதை சொன்னார்கள். சுந்தரிக்கு போரடித்தது. நிகழ்ச்சி முடிந்ததும் விண்கலத்தில் எல்லோரும் சாப்பிட்டு தூங்கப்போனார்கள். சுந்தரி மீண்டும் யன்னலருகே வந்து பூமியை வேடிக்கை பார்த்தாள். பூமி பாதி விழித்தும் பாதி தூங்கிக்கொண்டுமிருந்தது. அமெரிக்காவை நன்றாக இரவு மூடிவிட்டிருந்தது. சுந்தரிக்கும் தூக்கம் வந்தது. யன்னலோரமாக அப்படியே அயர்ந்துவிட்டாள்.
"டைம் ஆயிட்டு.. எழும்பி வெளிக்கிடு"
கல்பனா சுந்தரியை தட்டி எழுப்பவும் சுந்தரி கண்ணைக் கசக்கிக்கொண்டு எழுந்தாள்.
"எங்கே டைம் ஆயிட்டுது? இங்கேயா? அமெரிக்காவிலா? சந்திரனிலா?"
சுந்தரேஸ்வரனைப் பார்த்து கல்பனா கோபமாக முறைத்தார். சுந்தரிக்கு தாய் நின்ற கோலத்தைப் பார்க்கச் சிரிப்பாக இருந்தது.
"என்னம்மா கோலம்? இப்பிடி வெளிக்கிட்டிருக்கிறிங்கள்?""நீயும்தான் வெளிக்கிடோணும். இன்னமும் ஐந்து மணித்தியாலத்தில் தரையிரங்கப்போகிறோம். குவிக்"
சுந்தரி பூமியைப் பார்த்துக்கொண்டே பாத்ரூம் போனாள். குளிப்பதற்கு ஷவர்போன்று ஒன்றிருந்தது. தண்ணீர் பீய்ச்சாமல் வெறும் காற்றோடு ஈரம் மாத்திரம் உடலோடு ஒத்தி உறிஞ்சப்பட்டது. குளிக்கும்போது கூரைக் கண்ணாடியில் சந்திரன் பிரமாண்டமாகத் தெரிந்தது. இவ்வளவு பெரிதா? இன்னும் சில மணி நேரங்களில் தான் நிஜமாகவே நிலாவில் காலடி வைக்கப்போகிறோம் என்கின்ற பரபரப்பு சுந்தரிக்கு கொஞ்சம் கொஞ்சமாக தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது. அவசர அவசரமாத் தயாரானாள். கல்பனாவோடு, உடைமாற்றும்போது சண்டை பிடித்தாள். சுந்தரேஸ்வரன் டென்சனின் உச்சத்துக்கே போய்க் கத்திக்கொண்டிருந்தார்.
"தாயும் மகளும் ஆக்கினை பண்ணாம கெதியா வெளிக்கிட்டு வரோணும். ஆரிண்ட சத்தமாவது வெளிய கேக்கட்டும், தூக்கிப் போட்டிடுவன். அப்பிடியே சந்திரனைச் சுத்திக்கொண்டு கிடப்பியள்"
சுந்தரி விசும்பிக்கொண்டே உடுப்பு மாற்றினாள். விண்கலம் சந்திரனின் ஈர்ப்பு எல்லைக்குள் நுழைந்து தள்ளாட்டம் கண்டது. எல்லோரிடத்திலும் ஒரு பதட்டம் வந்து சேர்ந்தது. அவர்களை நேரடியலையில் தொலைக்காட்சியில் காட்டிக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் கண்ணாடி இழையாலான நவீன ரக விண்வெளி உடைக்குள் புகுந்துகொண்டார்கள். இருக்கைகளில் அமர்ந்து ஹெல்மெட் மாட்டி பெல்டுகளை அணிந்துகொண்டார்கள். விண்கலம் சந்திரனைநோக்கிப் பதிந்துகொண்டிருந்தது. பலர் கண்களை இறுக்க மூடினார்கள். கல்பனா கந்தசஷ்டி கவசம் பாடினார்.
சுண்டர்1 கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைத்து, சந்திரத்தரையின் மேலே சில கிலோமீட்டர்கள் உயரத்தில் பறந்து, தரையிறங்கத் தகுந்த இடத்துக்காக தேடித்திரிந்து இறுதியில் இஸ்ஸென்ற இரைச்சலோடு சந்திரனை முத்தமிட்டது. பூமி முழுதும் கைதட்டினார்கள். முதலில் நாஸா விஞ்ஞானிகள் வெளியே போய்ச் சுற்று வட்டாரத்தை நோட்டம் விட்டார்கள். கொடி நட்டார்கள். பின்னர் சுந்தரேஸ்வரனும் சுந்தரியும் ஏனையவர்களும் இறங்கினார்கள். கல்பனா தயங்கித் தயங்கியே இறங்கினார். எல்லோரும் சந்திரனிலிருந்து பூமியைப்பார்த்து வியந்தார்கள். வந்திருந்த விண்வெளி வீரர்கள் சிலர் சந்திரனில் துளை போட்டு ஏதேதோ ஆராய்ச்சிகள் செய்ய ஆரம்பித்திருந்தார்கள்.
சுந்தரி சந்திரனில் தன் முதல் அடியை எடுத்து வைத்தாள். பாய்ந்தாள். மீண்டுமொரு அடி. பாய்ந்தாள். விண்வெளியுடை பூமியில் இருந்தளவுக்கு கனமாக இருக்கவில்லை. சுந்தரி சந்திரத்தரையில் தாண்டித் தாண்டி நடக்க ஆரம்பித்தாள். பூமியைப்பின்புலத்தில் வைத்து செல்பி எடுத்தாள்.
சுந்தரேஸ்வரன் அவசரப்படுத்தினார்.
"எல்லாரும் வாங்கோ. நல்லநேரம் முடியப்போகுது"
கூடினார்கள். தாண்டித்தாண்டித் திரிந்த சுந்தரியை கல்பனா இழுத்து வந்தார். ஒருவர் வீடியோவைக் கையிலெடுத்தார். சுந்தரியை பின்புறத்தில் பூமி இருக்குமாறு பார்த்து நிற்கச்சொன்னார். சுந்தரேஸ்வரனும் கல்பனாவும் சுந்தரிக்கு இரண்டு பக்கமும் வந்து நின்றார்கள். ஒருவர் சிறிய பன்னீர்ச் செம்பு ஒன்றைக் கொண்டுவந்து சுந்தரியின் கைகளில் வைத்தார்.
"ஆரத்தியைக் கொண்டுவாங்கோ...குவிக்"
ஆரத்தித் தட்டு ஒக்சிஜன் குமிழால் மூடியிருக்க உள்ளே வாழைப்பழத்தில் குத்தியிருந்த திரியில் நெருப்பு ஏற்றினார்கள். கூடவந்த சுந்தரியின் பெரியம்மாவும் மாமியும் ஆரத்தி எடுக்கத்தொடங்கினார்கள். எல்லோருடைய காதுகளிலுமிருந்த ஹெட்போனிலும் பாடல் ஒலித்தது.
"அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெற்றியிலே,ஒரு அழகுப்பெட்டகம், புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலேமுழுச் சந்திரன் வந்ததுபோல் ஒரு சுந்தரி வந்ததென்ன?"
உலகம் முழுதும் மக்கள் ஆச்சரியத்தோடு நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தார்கள். கூடவந்த விண்வெளி வீரர்களும் மண்ணைத் தோண்டுவதை நிறுத்திவிட்டு நடப்பதை வேடிக்கை பார்த்தார்கள். காஞ்சிபுரம் சேலை, ஒட்டியாணம், பதக்கம் சங்கிலி, மணி ஆரம், கனகாம்பரச்செண்டு, சடைநாகம் என்று சுந்தரி கண்ணாடி உடைக்குள்ளால் வியர்த்து வழிந்தபடி நின்றாள்.
"எங்க எல்லாரும் சிரியுங்கோ பாப்பம்"
மனிதகுல வரலாற்றிலேயே முதன்முதலில் சந்திரனில் பொண்ணுக்கு சாமத்தியவீடு செய்த பெருமிதத்தில் சுந்தரேஸ்வரனும் கல்பனாவும் சிரித்தார்கள். சுந்தரிக்கு எப்படி சிரிப்பது என்று தெரியவில்லை. ஈ என்றாள்.
"தங்கச்சி... இனி நீர் பெரிய பிள்ளை. கொஞ்சம் வெக்கப்பட்டு மெல்லமாச் சிரியும் பார்ப்பம்"
சுந்தரி அபத்தமாகச் சிரித்து வைக்க, ஐந்தே நிமிடங்களில் சந்திரனில் நடந்த சுந்தரியின் சாமத்தியவீட்டுப் படங்கள் பூமியில் வைரலாகப் பரவத்தொடங்கியது.
******************************
ஓவியங்கள்: http://pics-about-space.com/
எப்பிடி தலைவா? சந்திரன் என்பது ஒரு படிமம், விண்வெளிப்பயணம் என்பது ஒரு அக எழுச்சி அட்ரா சக்கை.
ReplyDeleteநன்றி கேதா. சின்ன இடைவெளிக்குப் பிறகு எழுதின கதை. எழுதேக்க சந்தோசமா இருந்துது. உன் கருத்து அறிந்ததும் மேலும் சந்தோசம்.
Deleteசப்பா... முடிவு!!! இத எதிர்பார்க்கவே இல்லை! எங்களால தான் இப்பிடி செய்ய முடியும், அத உங்களால தான் இப்படி எதிர்வு கூற முடியும்!!!
ReplyDeleteஹி ஹி .. தாங்க்யூ தாங்க்யூ
Deleteபரிசில ஹெலில வந்து செய்த சாமத்தியவீட்ட பாத்திட்டியள் போல :) இம்முறை 'அதுவும் கீழே விழுந்தது' தவிர வேறு ஒன்றும் சிரிக்க இல்லை :( Uthayan
ReplyDelete:) நன்றி அண்ணை.
DeleteSuperb Anna! Really Enjoyed! Thanks
ReplyDeleteThanks Gowri.
Deleteவாழ்த்துக்கள். நம்மவர் சிலரின் மூடத்தனத்தை விஞ்ஞானப்புனைகதையாய் செதுக்கி விளிப்பூட்ட முனைந்ததற்கு.....
ReplyDeleteநன்றி. (Y)
Deleteஇப்பெல்லாம் பெண்ணியவாதிங்க எதுக்கு பொங்குவாங்க எதுக்கு புளிச்சாதம் கிண்டுவாங்க எண்டு தெரியுதில்ல எதுக்கும் பாத்து சூதானமா நடந்துக்குங்க
ReplyDeleteநன்றி உங்கட கருத்துக்கு. இதில பொங்கிறமாதிரி என்ன எழுதியிருக்கு என்று தெரியேல்ல.(y)
Deleteநன்றி உங்கட கருத்துக்கு. இதில பொங்கிறமாதிரி என்ன எழுதியிருக்கு என்று தெரியேல்ல.(y)
Deleteமுதலமைச்சரினதும் சுமந்திரனினதும் மனவோட்டத்தை இதை விட சிறப்பாக யாராலும் சொல்ல முடியாது. கதை சிறப்பு.
ReplyDeleteயாழிலிருந்து மகிந்தன்
நன்றி மகிந்தன்.
Deleteஅதுக்குப் பிறகு அப்படி அறிக்கை விடும்படி யாரும் சுமந்திரனைக் கோரவில்லை என்று சுரேஷ் பிரேமச் சந்திரன் அறிக்கை விட்டது பற்றிச் சொல்ல மறந்து விட்டுட்டீங்களே!
Deleteஎன்னைப் பொறுத்தவரை அந்தப்பகுதி கதையை அநாவசியமாகத் திசை திருப்புகின்றது.
ஒரு சுஜாதாவின் படைப்பைப் போல் தொடங்கி இப்படி முடித்து விட்டீர்களே! ஒரு பெண்னின் biological changeஐ அவளது பெற்றோர் தமது பிரபல்யத்திற்காக பயன்படுத்துவது வருத்ததிற்கு உரியது, அதை நீங்கள் ஒரு கருவாக பாவித்தது.......
ReplyDeleteதமது மகளை மகாராணி போல் பார்க்க வேறு சந்தர்ப்பங்களை உபயோகிக்கலாம்.....
உண்மைதான். இந்தக்கதை ஹெலிகப்டரில் நிகழ்ந்த சாமத்தியவீடு ஒன்றை அறிந்தபோது தோன்றிய கற்பனை. நன்றி.
Deleteஇப்ப தான் படித்தேன் அண்ணா... சூப்பார்..
ReplyDeleteபோனிலிருந்து அதிகம் தட்டச்சிட முடியவில்லை
அருமை........ நீண்ட நாட்களாக உங்கள் பக்கம் வரவில்லை,மன்னிக்க.....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநான் உங்கள் நெடுநாள் வாசகன் உங்கள் படைப்புக்கள் என்றுமே சோடை போனது இல்லை மிக அருமை
ReplyDeleteஎதோ கந்தசாமியும் கலக்சியும் போல புதிதாக ஒன்று தொடங்க போகுது என்று நினைத்தால் .......ஆல்ப்ஸ் மலையில் வந்து முடித்த விதம் ... பளார் என்று ஒரு அறை. யாருக்கு என்பது தான் கேள்வி
ReplyDelete