Skip to main content

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி விக்கி விக்னேஷ்.



தூக்கத்தை தொலைத்த ஒரு இராப் பொழுதை, என் குழந்தையின் அழுகையோடு கழிக்க நேர்ந்தது.

குழந்தையை ஒரு பக்க மார்பில் சாய்த்தவாறு, குறுகிய அறைக்குள் நடந்துக் கொண்டிருந்தேன்.

நீண்ட தினங்களுக்கு முன்னர் வாங்கி சில அத்தியாயங்களை மாத்திரமே வசித்துவிட்டு வைத்த ஜே.கே. அண்ணாவின்; நூல் நினைவுக்கு வந்தது.

புத்தகத்தை எடுத்து நடந்து கொண்டே வாசித்தேன்…

நான் தொலைத்துவிட்டு வந்த என் கடந்தகாலங்களை ஏதோ ஒரு மாயாஜாலம் இழுத்துப் போர்த்தி திரையில் காட்டுவதாய் ஒரு நினைப்பு….

“என் கொல்லைப்புறத்துக் காதலிகள்…”

முன்னிளமை காலத்தின் முற்றங்களில் நடந்த அன்றாட சம்பவங்களின் தொகுப்பு… 

இதனை கடந்து வராதவர்கள் வெகு சிலராகத்தான் இருந்திருக்க வேண்டும். 

அவர்களும் அதனை மறந்தவர்களே தவிர, கடக்காதவர்கள் என்றில்லை…

அவரவர் வாழ்வியல் சூழல்களின் படி, இந்த சம்வங்கள் அரங்கேறிய தளங்கள் மாறுபட்டதாய் இருந்திருக்கலாம்…

அனுபவங்களும், அடைவுநிலையும் ஒன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும்… 

இந்த நூலை வாங்கிய போதே ஆரம்ப அத்தியாயங்களை வாசித்துவிட்டு, ஜே.கே. அண்ணாவிடம் கூறி இருக்கிறேன்…

இந்த நூல் முடிந்துவிடவே கூடாது என்று… 

பின்னர் ஏனோ இந்த நூல் என் சிறிய நூல் அடுக்குக்கு இடையில் சிக்கிக் கொண்டு வெளியே வரவே இல்லை.

பொதுவாக நான் வாசிப்பு சோம்பேறி… 

முதல் முதலில் ஓன்லைனில் ஓடர் செய்து வாங்கிய நூல்கூட இதுவேதான்.. 

ஜே கே. அண்ணாவின் “சப்புமல்குமாரயாவின் புதையல்” சிறுகதையை வாசித்த தாக்கம் சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒன்று என்றாலும், அந்த தாக்கம் ஏற்பட்ட அந்த தருணத்தின் உணர்வை இப்போதும் என்னால் அனுபவித்து சிலாகிக்க முடியும்… 

அதுவரையில் நான் வாசித்த விடயங்கள் குறைவாகவே இருந்துவிட்ட போதும், என்னையும், என் எழுத்தையும் செம்மைப்படுத்திய சிறுகதை அது…

அவ்வளவு அற்புதமானது…

அந்த சிறுகதைதான் அண்ணாவை தொடர்பு கொள்ள வைத்ததுடன், பின்னர் அவரது படலை இணையத்தளத்தில் பரப்பிவிடப்பட்ட அனைத்தையும் திரட்டிக் கொள்ளவும் வைத்தது…

ஒன்லைனில் கொல்லைப்புறத்துக் காதலிகளை ஓடர்செய்யவும் வைத்தது…

எப்போதும் நான் சிறுவயதில் அனுபவித்த விடயங்களை பெருமையாக நினைத்துக் கொள்வதுண்டு… 

குறிப்பிட்டு சொல்லும் படிக்கு நான் குறைகள், துன்பங்கள் எதனையும் அனுபவித்ததில்லை… 

என் நினைவில் நிற்பவை அனைத்தும் மகிழ்ச்சியான தருணங்கள் மாத்திரமே.. 

என்னிலும் சில வயதுகள் மூத்தவர் என்ற வகையில், அவர் அனுபவித்துவிட்டுச் சென்ற காலத்தை நானும் கடந்து வந்திருக்கிறேன்… 

என் வாழ்க்கைச் சூழல் யுத்த சூழலுக்கு அப்பால் பட்டது…. 

கடுமையான யுத்த சூழ்நிலையில், பங்கருக்குள் ஒழிந்துக் கொண்டு எப்போது குண்டு விழும் என்ற அச்சத்தை தாண்டி, அதற்குள் மறைபொருளாய் இருந்த மகிழ்ச்சியையும், பாசத்தையும் அவரால் மட்டுந்தான் காண முடிந்ததா? தெரியவில்லை…

அவர் கண்டு சொன்ன மகிழ்வுக் குறிப்புகளை அந்த நூலும், எழுத்தும் கண்முன் கொண்டு சேர்த்தமை அதன் வெற்றி…. 

சிறுவயதில் சந்தித்த மனிதர்களுடன் மட்டும் இன்றி, சந்தித்த பொருட்களுடனும், ரசித்த கலைகளுடனும் அவர் எவ்வளவு பேசி இருக்கிறார்…?

சில விடயங்கள் எனக்கு அப்பாற்பட்டவையாக இருந்தாலும், அந்த இடத்தில் நானும் இருந்திருக்கலாம் என்ற ஒரு ஏக்கத்தையும் தந்துவிட மறக்கவில்லை… 

சம்பவங்கள், சந்திப்புகள், பழைய நண்பர்கள், பாடசாலைகள் இவை எல்லாம் அவரது தனிப்பட்ட அனுபவங்கள் ஆனாலும், இதே அனுபவங்கள் எம்மில் யாவருக்கும் இருக்கும்… 

இவற்றைத் தாண்டி, சில அத்தியாயங்களில் பொதுவாக அனைவரும் ரசித்த மற்றும் வெறுத்தவர்கள் குறித்த அவரது இரசனைப் பார்வையை குறிப்பிட்டிருப்பார்…

இளையராஜா, மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், சுஜாதா……. இப்படி… 

நான் எந்தெந்த வழிகளில் அவர்களை ரசித்தேனோ, அதே வகையில்… 

இளையராஜாவை குறித்த அவரின் பாடல் தெரிவுகள் வித்தியாசமானை… 

இளையராஜா குறித்தும், மணிரத்னம் குறித்தும் அவர் சிலாகிக்கும் போது எடுத்துக் காட்டும் சில பாடல்கள், சம்பவங்களின் போது, “ஐயோ… இந்த பாட்டையும் சேர்த்திருக்கலாமே” என்று எண்ணத் தோன்றும்… 

ஆனால் அவர் அந்த பாடலையும் தாண்டிதான் வேறொரு பாடலை சுட்டிக்காட்டி இருப்பார் என்பது வாசித்து முடிக்க புரியும்… 

சுஜதா என்ற ஒருவரின் சில நூல்களை நான் வாசித்திருக்கிறேன்… 

அவர் எழுத்துகள் அற்புதமானவை… 

என்னை அஞ்ச வைத்தவை… 

ஜே.கே. அண்ணாவின் ஒரு காதலியாக சுஜாதாவை பார்க்கும் வரைக்கும் அப்படித்தான் தோன்றியது…. 

“சுஜாதாவை எப்படியெல்லாம் ரசித்திருக்கிறார் இவர்… நாம் விட்டுவிட்டோமே” என்று எனக்குள் ஒரு ஆதங்கம் வந்துவிட்டது…

இதோ, எனது சிறிய நூல் அடுக்கில் சுஜாதா தற்போது நிறைந்துவிட்டார்… எனது அறைக்கே கலைவந்தது போல் ஒரு மெய்சிலிருப்பு இப்போது…

இந்த மாற்றம் ஜே.கே. அண்ணாவையே சாரும்..

ஏ.ஆர். ரெஹ்மான் பற்றிய அவரது கட்டுரையின் ஒரு பக்கத்தைதான் நான் வாசித்தேன்… 

அதோடு நிறுத்திவிட்டேன்…

ஏ.ஆர். ரஹ்மான் என்ற என் காதலியை அவர் அப்படியே ரசித்திருக்கிறார்… அதனை என்னால் உண்மையில் பொறுத்துக் கொள்ள முடியவில்லை…. 

இந்த பொறாமையை ஏற்படுத்தும் அளவுக்கு அவரது எழுத்து அமைந்திருக்கிறது… 

முதல் கூறிய விடயமேதான் மீண்டும், 

“சப்புமல்குமாரயாவின் புதையல்” சிறுகதை எந்த அளவுக்கு எனக்குள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துவிட்டதோ, அதே மாற்றத்தை “என் கொல்லைப்புறத்துக் காதலிகளும்” கொண்டு வந்தனர்…

இந்த நூலின் முன்னுரை முதல், இறுதி வரையில் அவர் வாசிப்பில் கொண்டிருந்த மோகம், நேரடியாகவும், மறைபொருளாகம் வந்து போய்கொண்டே இருக்கும்… 

இந்த நூலை வாசித்த பிறகே எனக்கு வாசிப்பு மீதான அதீத ஆர்வம் வந்துவிட்டது…

இதுவரையில் வாசிப்பு சோம்பேறியாக இருந்தநான், இப்போது நாளுக்கு ஒரு சுஜாத்தாவையும், டோல்ஸ்டோயையும் வாசிக்க பழகிவிட்டேன்… 

இலவசமாக கடந்த காலத்தின் மகிழ்ச்சிகளை தரிசித்துவிட்டு வர “என் கொல்லைப்புறத்துக் காதலிகள்” ஒரு “டைம்மெசின்…”

விலைக்கொடுத்து வாங்கினால் இந்த காதலிகளை நாமும் சொந்தமாகிக் கொள்ளலாம்….

-- விக்கி விக்னேஷ்
https://www.facebook.com/vikey.wignesh?fref=ts

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...