Skip to main content

நாச்சார் வீடு


dscn0970

நாச்சார் வீடுகள். நடுவிலே செவ்வக வடிவிலே முற்றம் அமைத்து, சுற்றிவரத்' திண்ணை அமைத்துப் பின்னர் அதனைச் சுற்றி அறைகளை அமைத்திருப்பார்கள். திண்ணையின் உள்புற சுவர்கள் பூராக ரயில் டிக்கட் எடுத்தவர்களின் படங்கள் தோற்றம் மறைவோடு உக்கிப்போய் காட்சியளிக்கும். திண்ணை மாடங்களில் உக்கிய நிலையில் ஒரு கந்தபுராணம், அந்திரட்டிக் கல்வெட்டு, பழைய பஞ்சாங்கங்கள் என அடுக்கியிருக்கும். பஞ்சாங்கத்தின் உள்ளே ஒரு பக்கத்தில் குட்டி குட்டிப் கட்டங்களால் நிரம்பிய பக்கம் ஒன்று இருப்பதுண்டு. ஒவ்வொரு கட்டத்துள்ளும் ஒரு இலக்கம் இருக்கும். கண்ணை மூடிக்கொண்டு சுட்டுவிரலை ஒரு கட்டத்தின்மேலே வைத்துப் பின்னர் அந்தப் கட்டத்தின் இலக்கத்துக்குரிய பலனை அடுத்த பக்கத்தில் அறிந்துகொள்ளலாம். “பணம் வரவு”, “வீண் அலைச்சல்”, “காரியம் சித்தம்” என்று ஏதோ ஒன்று இருக்கும்.
நாற்சார் வீடுகள் யாழ்ப்பாணம் முழுதுமே பரவலாக இருப்பினும் மானிப்பாய், மருதனார்மடம் உட்பட்ட வலி மேற்கு, வலி வடக்கு பகுதிகளிலேயே அதிகம் என்று ஒரு அநுமானம். கோட்டைப் பிரச்சனை மூட்டம் நாம் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மானிப்பாய் வீடும் ஒரு நாச்சார் வீடுதான். சிறுவயதிலிருந்தே யாழ்ப்பாணத்துப் பழைய நாச்சார் வீடுகளின்மீது ஒருவித வசீகரம் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. நான் எழுதும் கதைகளிலும் அது எட்டிப்பார்க்கும். “கந்தசாமியும் கலக்சியிலும்” நாவலில் செல்வராணியின் சீதன வீடும் நாச்சார் வீடுதான். “சப்புமல் குமாரயாவின் புதையல்”  சிறுகதையில் பிகே வாத்தியின் வீடும் நாச்சார் வீடுதான். குறிப்பாக இவை நாச்சார் வீடு என்று குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
நாச்சார் வீடு என்பது வெறுமனே சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்ட சாயம் பூசிய கட்டடம் அல்ல. அதற்கென்று ஒரு ambient இருக்கிறது. அதற்கென்று இயல்பான குணம் உண்டு. உயிர்கூட இருக்கெனலாம். நாச்சார் வீடு என்று குறிப்பிட்டாலே போதும். மிகுதி விபரிப்புகளை வாசகர் பார்த்துக்கொள்வார். அந்த வீட்டுக்குள்ளே நுழையும்போதே ஒருவித இருள் எம்மைச் சூழுந்துகொள்ளும்.  நட்ட நடு வெயிலிலும் நாச்சார் வீட்டுத்திண்ணை குளிரும். சாதுவான மழைத் தூறலுக்கும் அதன் நிலம் கசியும். விட்டத்தில் தூசி படர்ந்திருக்கும். நடு முற்றத்தின் கரைகளில் கறுப்பெறும்புகள் எப்போதுமே வேகமாக ஊர்ந்துகொண்டு திரியும். ஒரு வேட்டியோ, சால்வையோ கொடியில் காயும். யார் வந்தாலும் குரைக்காத நாய் ஒன்று நடு முற்றத்தில் தூங்கிக்கொண்டிருக்கும். ஒரு சாய்மனைக் கதிரை இருக்கும். பல அறைகள் பயன்பாட்டில் இல்லாமல் பழைய இரும்புக்கட்டிலும், பாய்களும், அரிசி மூட்டைகளும் எலிகளும் “செனி” நாற்றமும் நிரம்பிக் கிடக்கும். சுவர்களில் சுண்ணாம்புப் பூச்சுகள் உரிந்து கொட்டும். தரை குண்டும் குழியுமாக எப்போதே விளையாடிய தாயக் கோடுகளோடு இருக்கும்.

பத்து பன்னிரண்டு அறைகள் உள்ள நாச்சார் வீட்டிலே ஓரிருவர்தான் இருப்பார்கள். எண்பது தொண்ணூறு வயதில் ஒரு பாட்டியோ தாத்தாவோ நிச்சயம் இருப்பார்.  “ஆரு கதிரேசு வாத்தியாரிண்ட பூட்டனா? ராசாத்தி எப்பிடியிருக்கிறா?” என்று கேள்வி வரும். ராசாத்தி என்பது பாட்டியில் இறந்துபோன மகளாக இருக்கலாம். பதில் அவ்வளவு முக்கியமில்லை. அறுபது வயது சோட்டி ஒன்று பேணியில் நாலு கரண்டி சீனி போட்ட தேத்தண்ணியைத் தரும். மூக்குப்பேணியில் குடித்த அனுபவமும் உண்டு.

இன்றைக்கும் ஒரு நாச்சார் வீட்டுக்குள் நுழையும்போது அந்தவீடு ஒருகாலத்தில் எப்படி இருந்திருக்கும் என்ற எண்ணம் வராமற்போகாது.

நாச்சார் வீடு என்பது சிதைந்துவிட்ட ஒரு வாழ்க்கை அமைப்பின் எச்சம். கூட்டுக் குடும்பங்களுக்காக கட்டப்பட்ட வீடுகள். ஒரு காலத்தில் அந்த வீட்டிலே பத்து அறைகளிலும் பத்துக் குடும்பங்கள் இருந்திருக்கலாம். திண்ணை முழுதும் கந்தபுராணப் படிப்பு இடம்பெற்றிருக்கும். வேலைக்காரர்கள் சுற்றித்திரிந்திருக்கலாம். எப்போதுமே அடுப்பெரிந்துகொண்டிருக்கும். ஆட்கள் வந்து போய்க்கொண்டிருப்பார்கள். வீட்டுக்கு வெளியேயிருந்த திண்ணையிலும் கூட்டம் நிறைந்திருக்கலாம். ஒரு சிறுமி புதிதாகப் பிறந்த கன்றுக்குட்டியை நடுமுற்றத்துக்கு கூட்டிவந்து தடவிக்கொண்டிருந்திருப்பாள். யோசிக்கவே சிலிர்க்கிறது.

ஆனால் கால ஓட்டத்தில் எல்லாமே சிதைய ஆரம்பித்திருக்கும். ஒரு மகன் கொழும்பில் கடை போடலாம் என்று போயிருப்பான். இன்னொருவருக்கு அரச உத்தியோகம் கிடைத்திருக்கலாம். காதல் திருமணங்கள் நடந்திருக்கலாம். வெளிநாடு போயிருக்கலாம். சண்டையில் இறந்திருக்கலாம். பாகப் பிரிவினைகள். காரணங்களா இல்லை.

தமிழ்நாட்டில் காரைக்குடி, நாகர்கோவில் பக்கங்களில் இந்தவகை வீடுகள் அதிகம் இருப்பதாக நம்முடைய ஈரோடு நண்பர் ஆனந்து சொன்னார். கேரளாவில் இதனை நாலுகட்டு என்கிறார்கள். ஈழத்தவருக்கும் கேரளாவுக்குமான தொடர்புகள் ஒன்றும் புதிதில்லை. தாய்வழி முதுசம்,  சாப்பாட்டு முறைகள், மொழிப்பாவனைகள் என்று ஏராளமான விடயங்களில் ஒற்றுமை இருக்கிறது. நாகர்கோவில், கன்னியாகுமரித் தமிழ்களிலும் இதே மலையாள வாடை இருக்கிறது. “எங்கட”, “நம்மட”, “நிக்கிறீங்களா?”, “என்ர குஞ்சல்லோ” எல்லாமே ஈழத்து, நாகர்கோவில், மலையாள மொழியடைகள். சுந்தர ராமசாமியின் எழுத்துகள் சமயத்தில் மலையாள மொழிபெயர்ப்பா என்ற சந்தேகத்தைக்கூட வரவழைக்கும். ஜெயமோகனின் எழுத்துகளிலும் அது நிறையவே இருக்கும். நாகர்கோவில்காரர்கள். 

கடந்தவாரம் எம். டி. வாசுதேவன் நாயரின் “நாலு கட்டு” நாவலை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அறுபத்துநாலு பேரைக் கொண்ட ஒரு நாலு கட்டு வீட்டுக் குடும்பம் எப்படி சிதைந்து ஒழிந்து இறுதியில் அந்த வீடே இடிக்கப்படும் நிலைக்கு வருகிறது என்பதை விவரிக்கும் நாவல். கேரளாவில் நாலுகட்டு வீடுகள் எம்மூர் நாச்சார் வீடுகளிலும் பெரிதுபோலத் தெரிகிறது. அங்கே இரண்டு முற்றம் வைத்துக்கூட நாலு கட்டு வீடு கட்டுவார்களாம். அதில் மாடியறைகள் கூட இருக்குமாம்.

“நாலு கட்டு” நாவலை தமிழில் சி. ஏ. பாலன் என்பவர் நாவலின் மலையாள உணர்ச்சி குன்றாமல் அற்புதமாக மொழி பெயர்த்திருக்கிறார். மலையாள எழுத்துகளில் எப்போதுமே ஒரு குளிர்ச்சியான, அதிகம் இரைச்சல் இல்லாத,  குருவிச் சத்தங்களும் சரசரப்புகளும் மாத்திரமே கேட்கின்ற பாலுமகேந்திரா படத்து பின்னணி இசையுடன் கூடிய ஒரு உணர்ச்சி இருக்கும். “நாலு கட்டு” நாவலிலும் அது கிடைக்கிறது. “நீ சொல்லுறது சரிதானப்பா”, “படைச்சவனே, நீ இன்னும் மய்யத்தாகலையா?”, “பாருக்குட்டிக்கு என் மீது நம்பிக்கையுண்டா?” என்று வசனங்களின் மலையாள வாடையும் வாசிப்பின் சுகானுபவம். நாவல் போகிற போக்கிலே நாலு கட்டு நாயர் வீட்டின் வாழ்க்கை முறை, பண்பாடு, அதன் கொண்டாட்டங்கள் போன்றவற்றையும் விமர்சனங்கள் எதையும் வைக்காமல் அப்படியே பதிவு செய்கிறது. எம்.டி.வாசுதேவன் நாயர் ஏன் கேரள இலக்கியத்தில் இன்றைக்கும் கொண்டாடப்படுகிறார் என்பதற்கு நாவலின் ஒவ்வொரு வார்த்தைகளும் விளக்கம் கொடுக்கின்றன. Amazing.

நாலுகட்டு

யோசிக்கையில் நாச்சார் வீடுகளின் வீழ்ச்சி என்பது கால ஓட்டத்தின் இயல்பான மாற்றங்களின் பகுதியே என்று தோன்றுகிறது. கூட்டுக் குடும்பங்கள் என்ற அமைப்பே இன்றைய வாழ்க்கைக்கு சற்றும் பொருந்தாத விடயம். எம்.டியும் நாவலின் இறுதி வார்த்தைகளில் அதனையே கோடிகாட்டுகிறார்.
“அப்புண்ணி என்ன குற்றிருட்டு! இந்த வீட்டுக்குள்ளே?”
“பகல் வேளைகளிலும் இதற்குள் இருள்தானம்மா. பண்டைய குடும்பத் தலைவன்மாரின் ஆவிகள் பிசாசு வடிவத்தில் பகல் வேளையில்கூட இதற்குள் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்”
தாயார் திகிலுடன் அப்புண்ணியின் முகத்தைப் பார்த்தாள்.
“பயப்படாதீர்கள், அம்மா. இந்த நாலு கட்டு வீட்டினை உடைத்தெறிய ஏற்பாடு செய்யவேண்டியிருக்கிறது. இங்கே காற்றும் வெளிச்சமும் புகக்கூடிய ஒரு சிறு வீடே போதும்.”
“என்னடா சொல்லறே? உடைத்தெறியவா? பகவதி வாழ்ந்தருளும் இடம் இது! தெரியுமா?”
அப்புண்ணி கலகலவென்று சிரித்தான். அந்தச் சிரிப்பின் ஒலி, தகர்ந்து விட்ட சுவர்கள்மீது, கரையான் அரித்துத் தின்கின்ற மரத்தூண்கள்மீது, சூழ்ந்து தூசு படிந்து கிடைக்கின்ற மூலைகளில் மோதிவிட்டுத் திரும்பி வந்தது.

********************

Comments

  1. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே - நன்னூல் பாயிரம்.

    ReplyDelete
  2. கால மாற்றத்தில் மறைந்து போய்விட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. மகாபலிபுரம் அருகில் (http://dakshinachitra.net) இது மாதிரியான வீடுகளை வெவ்வேறு இடங்களிலிருந்து கொண்டு வந்து மீண்டும் கட்டி வைத்திருக்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் போய் பாருங்கள்.

    ReplyDelete
  3. I think Endamoori Veerendranath is a telugu writer, not from Kerala... Your writing brought the memories of nattier veedukal, Thanks...

    ReplyDelete
  4. My bad and ignorance. Thank you. I will fix it.

    ReplyDelete
  5. அண்ணா... பிந்திய கருத்துரைதான்... மன்னிக்கவும்...

    பருத்தித்துறையிலும் நாற்சார் வீடுகள் நிறையவே இருக்கின்றன... இன்னமும் மூன்று முற்ற ää நான்கு முற்ற வீடுகள் இருக்கின்றன... அதே போலை வட்டுக்கோட்டையில் 100 ஆண்டுகள் பழமையான மண்ணாலான நாற்சார்வீடு இருக்கின்றது... 2012 அளவில் நான் அங்கு சென்றிருக்கிறேன்..

    கேரளாவின் கான்கு கட்டு வீடுகள் மட்டுமல்ல.. கேரளாவிற்கு போனாலே யாழ்ப்பாணம் சென்ற ஒணர்வு எனக்கு..

    ReplyDelete
  6. அண்ணா... பிந்திய கருத்துரைதான்... மன்னிக்கவும்...

    பருத்தித்துறையிலும் நாற்சார் வீடுகள் நிறையவே இருக்கின்றன... இன்னமும் மூன்று முற்ற ää நான்கு முற்ற வீடுகள் இருக்கின்றன... அதே போலை வட்டுக்கோட்டையில் 100 ஆண்டுகள் பழமையான மண்ணாலான நாற்சார்வீடு இருக்கின்றது... 2012 அளவில் நான் அங்கு சென்றிருக்கிறேன்..

    கேரளாவின் கான்கு கட்டு வீடுகள் மட்டுமல்ல.. கேரளாவிற்கு போனாலே யாழ்ப்பாணம் சென்ற ஒணர்வு எனக்கு..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .