Skip to main content

ஆடை நீக்கு

 

அழுதுவிட்டு அகல்யா “சொறி அண்ணா” என்கிறாள். அண்ணருக்கு இப்படி எதிர்பாக்காமல் காதல் தோல்வி வரும் என்று தெரியாது. தண்ணி அடிச்சா தெம்பாக இருக்கும் என்று தவறணைக்குப் போகிறார். மப்பு பிடிபடுகிறது. அடுத்தநாளும் போகிறார். இரண்டு பிழா கேக்கிறது. மூன்றாம் நாள் கலன். ஐந்தாம் நாள் தவறணை திறக்கமுதலே அண்ணர் வாசலில் நிக்கிறார். ஆறுமாதம் கழித்து கோயிலடியில் கோமதியைக் காண்கிறார். கண்ட கணமே அவர் வீட்டு கனகாம்பரப் பூக்கள் எல்லாம் அவளுக்கு மாலை கட்ட நூலைத் தேடின. அண்ணர் அவசர அவசரமாக கோமதிக்கு நூலு விட்டுப்பார்த்தார். அவளோ “ஒரு சொப்ட்வேர்காரனுக்கு கழுத்தை நீட்டிச் சீரழிந்தாலும் சீரழிவேனேயொழிய உன்னைப்போல குடிகாரனுக்கு தலையை நீட்டமாட்டேன்” என்றுவிட்டாள். மீண்டும் காதல் தோல்வி. கனகாம்பரப் பூக்கள் வாடிப்போயின.

மொழிப்பயன்பாடும் அப்படித்தான் என்கிறார் ஜோர்ஜ் ஒர்வல். எழுபது வருடங்களுக்கு முன்னர் “Politics and the English Language” என்று அவர் எழுதிய கட்டுரையின் சில குறிப்புகள். இப்போதும் தமிழுக்கு நன்றாகவே பொருந்துகிறது.

A man may take to drink because he feels himself to be a failure, and then fail all the more completely because he drinks. It is rather the same thing that is happening to the English language. It becomes ugly and inaccurate because our thoughts are foolish, but the slovenliness of our language makes it easier for us to have foolish thoughts. The point is that the process is reversible. Modern English, especially written English, is full of bad habits which spread by imitation and which can be avoided if one is willing to take the necessary trouble.

அதே அண்ணரின் கதைதான் இங்கும். எங்களுடைய எண்ணங்களும் சிந்தனைகளும் பிற்போக்குத்தனமாக இருந்ததால் மொழிப்பாவனையிலும் அது எதிரொலித்தது. பிறகு பரந்த மொழிப்பாவனையினால் அந்தப் பிற்போக்குத்தனம் தலைமுறைதாண்டியும் கடத்தப்படுகிறது. எவனாவது ஒரு “பைத்தியக்காரன்”தான் இடையில் புகுந்து இந்த சங்கிலியை உடைக்க முயலவேண்டும். பாரதி அந்த டைப் என்று நினைக்கிறேன். மனுதர்மமாக இருக்கட்டும், நம் இலக்கியங்களில் பெண்களாக இருக்கட்டும், அரசன் அடிமைப் பண்புகளாக இருக்கட்டும், ‘நான் சொல்கிறேன் நீ கேள்’ என்கின்ற மையவாத அதிகாரங்களாக இருக்கட்டும் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் கடத்தப்பட்டு பின்னர் கடத்தப்பட்டதாலேயே சப்பை விளக்கங்களுடன் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அவல நிலைதான். அதனாலேயே இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் நம் மூதாதையருக்கு அகல்யா கிடைக்கவில்லை. இன்று நம்மை கோமதி குடிகாரன் என்கிறாள்.

எழுதும்போதும் சில விதிகளைத் தவிர்க்க முயலுங்கள் என்கிறார் ஜோர்ஜ். அவற்றைத் தமிழ்ப்படுத்த முயல்கிறேன்.

1 தெரிந்த உவமானத்தையோ சொல்வடையையோ பயன்படுத்துவதை தவிருங்கள்.

“மேகலா சிரிக்கும்போது நட்சத்திரங்கள் கலகலவென தரையில் சிந்தின” என்று மொக்கை போடாதே என்கிறார். மேகலா புன்னகைத்தா்ள் என்றாலே போதும். அவனவன் தன் மேகலாவின் சிரிப்பை யோசித்துக்கொள்வான். “கப்பல் கவிழ்ந்ததுபோல கவலையில் ஆழ்ந்தா்ள்” என்பதெல்லாம் தப்பாட்டம். வேண்டாம். “கோமதிக்கு நூலு விட்டுப்பார்த்தார்” என்று எழுதியதும் அயர்ச்சிதரும் உவமானமே! கோமதிக்கு ஸீபிளேன் விட்டுப்பார்த்தார் என்று எழுதியிருக்கலாம். ஆனால் கனகாம்பரக் கதை தொடர்ச்சியில்லாமல் போயிருக்கும்!

2 சிறிய வசனங்களை எழுதமுடியுமென்றால் நீளமான வசனங்களைத் தவிருங்கள்.

சொல்ல எடுத்துக்கொண்ட விடயத்தை சிறிய வசனங்கள் மூலம் தெளிவாகச் சொல்லமுடியுமென்றால் அதனை நீண்ட சிக்கலான நடையிலே எதற்கு எழுதுகிறாய் என்கிறார். உதாரணத்துக்கு.

“நடு இரவு மேகமூட்டமில்லாத தெளிவான நட்சத்திர வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில் பிரபஞ்சம் எத்தனை பிருமாண்டமானது என்பதை உணர்வதோடு அதனை உள்வாங்கையில் பிரபஞ்சம் வேறு எங்குமே இல்லை எனக்குள்ளேயே இருப்பதுவும் என் ஒவ்வொரு உடல் அங்கங்களின் ஒவ்வொரு கலங்களின் ஒவ்வொரு மூலக்கூறுகளின் ஒவ்வொரு அணுக்களின் ஒவ்வொரு புரோட்டோன்களும் இலத்திரன்களுக்கும் குவார்க்குகளும் பொசன்களும் வெற்றிடங்களும்தான் பிரபஞ்சமாக வெளிப்பட்டு நிற்கிறதோ, நான்தான் இந்தப் பிரபஞ்சமோ என்ற எண்ண அலைகளையும் இது என்னுள் ஏற்படுத்துகிறது”

இதை சற்று ‘ஒர்வல்’படுத்திப்பார்ப்போம்.

“நடு இரவு. மேகமூட்டம் எதுவும் இல்லாத தெளிவான வானம். நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டேயிருக்கிறேன். இந்தப்பிரபஞ்சம்தான் எத்தனை பிருமாண்டமானது. தொடர்ந்து பார்த்துக்கொண்டேயிருக்கையில் இந்தப்பிரபஞ்சம் ஒன்றும் வெளியேயில்லை, எனக்குள்ளேயே இருக்கும் ஒன்று என்றே தோன்றுகிறது. நானேதான் பிரபஞ்சமாக விரிந்து நிற்கிறேனோ? என் உள்ளே இருக்கின்ற கோடிக்கணக்கான அணுக்களின் கூறுகள்தான் பிரபஞ்சமாக சிதறிக்கிடக்கின்றனவோ? என் புரோட்டன்களும் இலத்திரன்களும் குவார்க்குகளும் பொசன்களும் ஏன் வெற்றிடமும்கூட இந்தப் பிரபஞ்சமாக விரிந்து காட்சியளிக்கிறதோ? வியக்கிறேன்.”

அவ்வளவுதான் மாட்டர்!

3 ஒரு வார்த்தை தேவையற்றது என்றால் தூக்கிவிடுவது நன்று

மேலே உள்ள வாக்கியத்தின் “மேகமூட்டம் எதுவும் இல்லாத தெளிவான வானம்” என்ற வசனதை வெறும் “தெளிவான வானம்” என்றே எழுதியிருக்கலாம். அதுகூடத்தேவையில்லை. தூக்கிவிடலாம். நட்சத்திரங்களைப் பார்க்கிறேன் என்றால் வானம் தெளிவாக இருக்கிறது என்றுதானே அர்த்தம்.

4 நாளாந்த பாவனையில் ஒரு வார்த்தைப் பிரயோகம் இருக்குமென்றால் தேவையில்லாமல் வேற்றுமொழி வார்த்தையையோ, விஞ்ஞானக் கலைச்சொற்களையோ பிரதியிடுவதைத் தவிர்ப்பது நன்று.

இயலுமானவரை எளிமையான தமிழ்வார்த்தைகளைப் பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு கீழே மூன்று வசனங்கள் இருக்கின்றன. எது உங்களின் தெரிவு?

கனகலிங்கம் காலையில் எழுந்து தனக்கு டீயும் மனைவிக்கு கோப்பியும் ஊற்றினார்.

கனகலிங்கம் காலையில் எழுந்து தனக்கு தேநீரும் தாரத்துக்கு குளம்பியும் தயாரித்தார்.

கனகலிங்கம் காலையில் எழுந்து தனக்கு தேநீரும் மனைவிக்கு கோப்பியும் ஊற்றினார்.

5 கருத்து சொல்லும்போது “இதை நீ செய்யாதே”, “ஒருபோதும் இப்படிச் செய்யாதே”, “சொல்லுறது விளங்காதா? மடையா, செய்யாதே” என்று பலகைக்கட்டையில் நின்றுகொண்டு மற்றவர்களை இருத்திவைத்து அறிவுரை சொல்லுவதும் எந்தப் பயனையும் கொடுக்காது

உதாரணத்துக்கு மூன்றாவது புள்ளியில் “ஒருவார்த்தை தேவையற்றது என்றால் ஒருபோதும் அதனை எழுதாதே” என்றுதான் முதலில் குறிப்பிட்டேன். பின்னர் “தூக்கிவிடுவது நன்று” என்று மாற்றினேன்.

அதிகாரம் சத்துரு.


Sources
http://www.economist.com/blogs/prospero/2013/07/george-orwell-writing?fsrc=scn/fb/te/bl/ed/georgeorwellonwritingthosesixlittlerules
https://www.mtholyoke.edu/acad/intrel/orwell46.htm

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...