Skip to main content

நாச்சார் வீடு : கடிதங்கள்

நாச்சார் வீடு பற்றிய கட்டுரைக்கு வந்த கருத்துகள்.

ஜே.கே., பொய்யுக்குச் சொல்லவில்லை. மெய்யாலுமே நாச்சார் வீடுகளில் அபரிமிதமான காதல் உண்டு. பிடித்த வீடும் அதுதான். இங்கே அவுஸ்திரேலியாவில் கூட, வசதி இருந்திருந்தால் நான் சின்ன அளவிலான நாச்சார் வீடு கட்டிக் குடியிருந்திருப்பேன். படங்கள் ஏதாவது பார்க்கும் போது, நாச்சார் வீடு காட்டினால், பாத்திரங்களில் ஒன்றாமல், வீட்டை 'ஆவென்று' பார்ப்பது வழக்கம். நாச்சார் வீட்டு மோகம் உங்களுக்கும் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. வராந்தா வைத்த இங்குள்ள கிராமத்து வீடுகள் கூடப் பார்க்கும் போது ஒரு சந்தோசம் தரும். 

நாம் சின்ன வயதில் பள்ளி விடுமுறைக்குச் சண்டிலுப்பாயில் உள்ள அப்பாச்சி வீட்டுக்குப் போவோம். எங்கள் பொழுது முழுக்கப் பக்கத்து அன்ரி வீட்டுப் பிள்ளைகளோடு விளையாடுவதில் கழியும். அது நீங்கள் சொன்ன அதே குணமும், மணமும் கொண்ட நாச்சார் வீடு. ஜே.கே. நீங்கள் புதுசு, புதுசாக எழுதும் போது, அது எல்லோர் வாழ்விலும் எங்கோ தட்டுப்படுகிறது. 

நாம் இந்தியா போகும் போது இதற்காகவே பாலக்காடு கல்பாத்திக்குப் போனோம். திண்ணைகள் வைத்த, கட்டு வீடுகள் கொண்ட நாலு தெருவும், ஒவ்வொரு மூலையிலும் அமைந்த கோயில்களும் அபாரம். திண்ணைகளில் ஆற, அமர இருந்த தாத்தா, பாட்டிகளைக் கண்டு கதைக்க முடிந்தது. அந்தத் தெருக்களில் நடந்த ஆனந்தமே தனி. இந்தியா போனால், நேரம் கிடைப்பின் போய்ப் பார்க்கவும்.

-- சுபா அக்கா

பெரிய வளவில் பலா மரங்கள். எப்போதும் சுறுசுறுப்பாய் எதையோ கொத்தித்திரியும் பல கோழிகள். கீச்சிடும் குஞ்சுகள். மேற் பார்வைக்கு ஒரு சேவல். வேலியில்லா பக்கத்துக் காணியில் கள்ளன் போலிஸ் விளையாட்டு. 
ஒழுங்கை முடிவில் சின்னக் கடையில் வாங்கிய பல்லிமிட்டாய். 
வீட்டு மத்தியில் துளசி மரம். இன்னமும் இனிக்கும் கூழ், tin milk பாவித்து செய்த ரவா லட்டு.
மிகச் சின்ன வயதில், கொக்குவில் நாச்சார் வீடொன்றில் நானிருந்த இனிய சில நாட்கள் என்றும் மறக்கமுடியாதவை. 
ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி
-- ஜெய் ஸ்ரீகாந்தா

இடம்பெயர்த காலத்தில் பத்து குடும்பங்கள் ஒரு நாற்சார் வீட்டில் வாழ்ந்தோம்.1835 ம் ஆண்டு என்று ஓட்டில் எழுதியிருந்தது. மேல்தளத்தில் இரண்டு அறைகள் பலகைகளால் உறுதியாக கட்டப்பட்டு இருந்தது. படிக்க்ட்டுகூடபலகைகளால் ஆனது.எழதிய அனைத்தும் அங்கே காணப்படாது.ஆனால் அதன் கதை சொல்ல உரிமையாளர் எவரும் அங்கேயில்லை.எங்களுக்கு இன்னும் அது கோயில்.
- சசீலாதேவி 

வலிகாமம் மேற்கு பகுதிகளில் (சித்தங்கேணி, பண்ணாகம், சுழிபுரம், வட்டுக்கோட்டை) இரட்டை நாச்சார் அதாவது இரண்டு முற்றம் கொண்ட நாச்சார் வீடுகள் இருந்திருக்கின்றன என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் தற்போதும் அந்த வீடுகள் இருந்தாலும் பெரும்பாலும் ஆட்கள் இல்லாமையினால் ஒரு நாச்சார் வீட்டை இடித்துவிட்டு ஒற்றை நாச்சார் வீடு மட்டுமே மீதி இருக்கின்றன....

உரிமை கோரவே ஆட்கள் இல்லாமல் யாரோ.... எங்கிருந்தோ... வந்து குடியேறி அந்த வீட்டுக்கு உரிமை கோரும் சம்மந்தமே இல்லாத புதிய தலைமுறை வாழும் நாச்சார் வீடுகளும் இங்கு உண்டு... 

எனக்கும் நாச்சார் வீடுகள் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. ஒரு இனிய வசந்தத்தை விழுங்கிய அமைதியும் ஏப்பமும் அவைகளில் எப்பொழுதும் உண்டு.....
-- சிவசங்கர் 

எமது அம்மா பிறந்து வளர்ந்தது நாச்சார் வீட்டில்தான். நான்கூட 5 வயது வரை வளர்ந்தது அதே வீட்டில் தான். புது வீடு கட்டி குடிபுகுத்தாலும் குழந்தைப் பராயம் முழுவதுமே அதே வீட்டில்தான் கழிந்தது. நண்பிகளுடன் கூடியிருந்து கொக்கான் வெட்டியதும் புளியங்கொட்டையில் சுண்டிவிளையாடியதும் இன்னும் பசுமையான நினைவுகளாக. சுற்றியுள்ள வளவிலே பிடுங்கிய கறுத்தக் கொழும்பான், அம்பலவி மாம்பழங்கள் ஒரு அறையிலே வைக்கோலில் ஒளிந்திருக்க, பழுத்து மஞ்சளானவற்றைப் பொறுக்கியெடுத்து ருசி பார்த்ததும் பலாப்பழத்தை ஆச்சி கீறித்தர தேங்காய் எண்ணெயை கையில் பூசி சுளையை சுவை பார்த்ததும் இன்றும் நாவில் நீரூறுகின்றது. இன்னும்பல. அந்த வீட்டிலே மாமா குடும்பம் வசிக்கிறார்கள். யாழ்ப்பாணம் வரும்போது மாமாவுடன் நடுமுற்றத்தில் இருந்து "scrabble" விளையாட வேண்டும். மழை பெய்யும் அழகை விறாந்தையில் இருந்து இரசிக்க வேண்டும். இப்படி இன்னும்பல ஆசைகள். இன்னும் அந்த வீடு உயிரோட்டத்தோடு இருப்பது எனக்குப்பெருமைதான். நாச்சார் வீட்டை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி சகோதரன்
-சுகந்தினி 

பல நாற்சார் வீடுகளில் நடுவிலுள்ள முற்றத்திலிருந்து தண்ணீர் வெளியேற ஒரு வழி இருக்கும். பல வீடுகளில் அது எங்கே என்று கூடத் தெரியாது. அது பெரும்பாலும் அடைபட்டிருக்கும். ஒரு நீண்ட கம்பியால் குத்தி அந்த வழியை மீண்டும் உண்டாக்கி மழை நீரை வெளியேற்றுவதே ஒரு பெரும் பாடு.
பெரும்பாலான நாற்சார் வீடுகள் உயரமாக இருக்கும் மழைத் தண்ணீர் கசியாமல் இருக்க.
-ப்ரீத்தி 

நாற்சார் வீடு பசுமை நினைவை மீட்கிறது! ஈழத்தில் இரண்டுமாடி நாற்சார், மொட்டை மாடி நாற்சார் சுற்று அல்லு பகுதிச் சுற்று உள்ள வீடுகளும் நிறைய இருந்தன. இரண்டு உள்முற்ற அமைப்பைக் கண்ட அனுபவம் எனக்கும் இல்லை!
--கமலாபாலன் 


Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...