Skip to main content

தீண்டாய் மெய் தீண்டாய் : கண்டேன் கண்டேன்

 

14

 

இரண்டு நாட்களாக கோடை மழை. இன்றைக்கும் விடிந்தும் விடியாததுமாக மழைச் சிதறல்கள் கூரையில் தாளம் போட்டுக்கொண்டிருந்தன.  சுடச்சுட தேநீரும் கையுமாக யன்னலைத்திறந்தால் கூதல் முகத்தில் அறைந்தது. தோட்டத்து அகத்தியில் தனியனாக ஒரு பறவை குறண்டிக்கொண்டு தூங்கியது. இன்னொரு பறவை பறந்துவந்து மேற்கிளையில் அமர்கிறது. அது வந்தமர்ந்த அசைவில் தண்ணீர் தெறித்து கீழே இருந்த பறவையின் தூக்கம் கலைகிறது. இப்போது தூக்கம் கலைந்த பறவை மேற்கிளைக்குத் தாவுகிறது. தண்ணீர் மீண்டும் சிதறுகின்றது. இப்போது இரண்டு பறவைகளுமே செட்டை அடித்து கிளைக்குக் கிளை தாவி குரங்குச் சேட்டை புரிய ஆரம்பிக்கின்றன. அகத்தி மரமே அதிர ஆரம்பிக்கிறது.  நான்கடி தள்ளி யன்னலினூடே நானிருந்து பார்க்கிறேன் என்ற விவஸ்தையே இல்லாமல் பறவைகள் இரண்டும் காதல் செய்கின்றன.  

தேநீர் சுட்டது.

“புரிதலில் காதல் இல்லையடி. பிரிதலில் காதல் சொல்லுமடி” என்று ஒரு பாட்டே இருக்கிறது. சங்க இலக்கியங்களில் முல்லைத் திணைக்கு எப்போதுமே சிறப்பு உண்டு. “மழை பெய்கின்றது.  கொன்றை பூத்துவிட்டது. மாரிக்காலத்தில் வீடு வருவேன் என்றாரே, வரவில்லையே” என்று புலம்பும் தலைவிக்கு தோழி சொல்வாள், “அடியே இது கோடை மழையான வம்பமாரி. கொன்றையும்  உன்னைப்போலவே ஏமாந்து பூத்துவிட்டது. மாரிக்கு இன்னமும் மாதமிருக்கிறது” என்று. “கொம்புசேர் கொடியிணரூழ்த்த, வம்ப மாரியைக் காரென மதித்தே” என்பார் கோவர்த்தனார். இப்படி ஏராளமான அகத்திணை முல்லைப்பாடல்கள் பிரிவித்துயரில் உச்சம் கண்டிருக்கின்றன. அவற்றின் வழி வந்த வள்ளுவரும் பல சங்கப்பாடல்களை இரண்டு வரிகளாக்கினார். “ஆயன் குழல்போலும் கொல்லும் படை” என்பார் வள்ளுவர். இடையனின் புல்லாங்குழல் இசை ஷெல் கூவும் சத்தம்போல நாராசமாய் ஒலிக்கிறதாம் தலைவிக்கு!

அகத்திணை, திருக்குறள் வரிசையில் கம்பர் இல்லாமல் என்ன பிரிவுத்துயர்? கமபராமாயாணத்திலேயே அற்புதமான காண்டங்கள் இரண்டு. ஒருபக்கம் பகலையும் இரவாக்கும் கிஷ்கிந்தா மலைக்காடுகள். நிறைய மழை. இராமனின் புலம்பல். கிஷ்கிந்தா காண்டம். மறுபுறம் அசோகவனத்தில் சீதை. சுந்தரகாண்டம். அதுவரைக்கும் ஆற அமர காதலைப்பாட கம்பனுக்கு அதிகம் நேரம் கிடைக்கவில்லை. இரண்டு காண்டங்களிலும் முல்லைத்திணை வசமாக வாய்த்தது. பிறகென்ன?

மழை வாடையோடு ஆடி, வலிந்து, உயிர்மேல்
நுழைவாய்; மலர்வாய் நொடியாய் - கொடியே! -
இழைவாள் நுதலாள் இடைபோல் இடையே
குழைவாய்; எனது ஆவி குழைக்குதியோ?

அருவியில் சிக்கி அசைந்து ஆடி நெளியும் காட்டுக்கொடி சீதையின் அழகை நினைவூட்டுகிறது இராமனுக்கு. இப்படியேன் என்னைக் கொல்கிறாய் என்கிறான் இராமன். சொல்லாத அர்த்தமும் உண்டு. இந்தக்கொடிபோலவே சீதையும் அவ்விடம் துன்புறுகிறாளோ என்கின்ற ஏக்கமும் அதனுள் அடக்கம்.

சுந்தரகாண்டத்தில் சீதை விருத்தம் விருத்தமாக பிரிவுத்துயர் ஏங்குவாள். அதிலே சீதை சினத்தில் பாடும் பாடல் ஒன்று மிகவும் பிடிக்கும்.

'கல்லா மதியே! கதிர் வாள் நிலவே!
செல்லா இரவே! சிறுகா இருளே!
எல்லாம் எனையே முனிவீர்; நினையா
வில்லாளனை, யாதும் விளித்திலிரோ?

எல்லாரும் என்னையே கொடுமைப்படுத்துவீர். அவனைப்போய் ஒண்டும் செய்யமாட்டீங்களா? அப்படிச்செய்தால் இவ்வளவுநாளும் என்னை மீட்க வராமல் இருப்பானா? எத்தனை அற்புதமான வார்த்தைகள். கல்லா மதியே முழு நிலவுக்கு. கதிர்வாள் நிலவே பிறை நிலவுக்கு. பிரிவுத்துயர் நிலவழிந்து வளரும்போதெல்லாம் தொடர்ந்திருக்கிறது அவளுக்கு!

பின்னர் சீதையை அனுமன் கண்டு கணையாழி பெற்று மீள்வது தெரிந்தகதை. அனுமன் இராமனை திரும்பவும் காணும்போது பாடிய “கண்டனன் கற்பினுக்கணியை கண்களால்” என்பதும் அனைவருக்கும் தெரிந்த பாடல். அதென்ன கண்டனன் என்று சொல்லிவிட்டு கண்களால் என்கிறார். கண்களால்தானே காண்பது? கேள்வி வருகிறதல்லவா? அதன் அர்த்தம், அவளை நான் கண்டேன். ஆனால் அவள் கற்பினுக்கு அணி என்பதை அவள் கண்களாலேயே கண்டேன் என்பது. எனக்கு கம்பனில் முரண்பாடு ஏற்படும் பல இடங்களில் இதுவும் ஒன்று. அதென்ன கற்பு? சீதையை கண்டதல்லவா பெரியவிடயம்? கற்பு என்பதே தேவையற்ற வார்த்தை என்று கம்பர் மறுதலித்திருக்கவேண்டாமா? பாடல் பாடிய காலத்தைப் பொருட்டில் கொண்டாலும்கூட அனுமனுக்கு அது தேவையற்ற வேலை என்றே தோன்றுகிறது.

இந்தப் படலத்தை அருணாச்சலக் கவிராயர் இராமநாட கீர்த்தனையில் மிகச் சுவையாகச் சொல்லியிருப்பார். அந்தப்பாடல் இதுவரை எழுதப்பட்ட இராமயணப் பாடல்களிலேயே அதி உச்ச வரிசையில் சேரக்கூடிய ஒன்று. காட்சி  ஒன்றுதான். கணையாழியோடு அனுமன் இராமனைச் சேரும் இடம்.  அனுமனுக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. பரவசத்தில் மூன்றுமுறை கண்டேன் என்பான்.

“கண்டேன் கண்டேன் கண்டேன்”

அவ்வளவுதான். அந்தக் காட்சிப்படிமத்தை யோசித்துப்பாருங்கள். அதிகம் வெளிச்சமில்லாத அடர்ந்த வனப்பகுதி. மெலிதாக மழை தூறுகிறது. இராமன் ஒரு மரத்தடியில் சீதையைப்பிரிந்த துயரத்தில் சோர்ந்திருக்கிறான். கூடவே இலக்குவன். இப்போது அனுமன் வருகிறான். பாடல் ஆரம்பிக்கிறது. மிக மெதுவாக, நிதானமாக சூழலை குழப்பாத இசையோடு அனுமன் பாடுவான்.

கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை
கண்டேன் ராகவா நான் (கண்டேன்)
அண்டரும் காணாத இலங்காபுரியில்
அரவிந்த வேதாவை தரவந்த மாதாவை (கண்டேன்)

பனிகால வாரிஜம் போல நிறம் பூசி
பகலோடு யுகமாக கழித்தாலே பிரயாசி
நினைதங்கி ராவணன் அந்நாள் வர
ச்சிச்சி நில்லடா என்றே ஏசி
தனித்துதன் உயிர் தன்னை தான்விட மகராசி
சாரும் போதே நானும் சமயமிதே வாசி
இனி தாமதம் செயல் ஆகாதேன்றிடர் வீசி
ராம ராம ராம என்றெதிர் பேசி

கவிராயர் எழுதியது நாட்டிய அரங்கத்துக்கு. சும்மா சொல்லக்கூடாது, கவிராயர் காரியத்திலும் கண்ணாயிருக்கிறார். “அண்டரும் காணாத இலங்காபுரியில் அரவிந்த வேதாவை தரவந்த மாதாவை” வரிகள் அனுபல்லவியில் வந்தது தற்செயல் அல்ல!

இந்தப்பாடலுக்கு மிக இயல்பான நாட்டிய அரங்கை கற்பனை செய்யுங்கள். அனுமன் விவரிக்க விவரிக்க ஒருபுறம் அசோகவனக் காட்சிகள் விரிகின்றன. இராமன் கதைகேட்க அருகில் நிற்கும் இலக்குவனின் நிலையை யோசியுங்கள். அவன் கோவக்காரன். இதோ இப்போதே சீதையை மீட்கலாம் என்று வில்லை ஏற்றியிருக்கவும் கூடும். அல்லது ஊர்மிளை என் செய்வாளோ என்று அவள் ஞாபகம் வந்து புலம்பவும் கூடும். இதனை மேடையில் அரங்கேற்றினால் சொத்தையே கொடுக்கலாம். இந்தப்பாடலில் இசையும் அதி அற்புதம்.

பாம்பே ஜெயஸ்ரீ பாடிய வேர்ஷன் ஒன்று இருக்கிறது. டிவைன்.

 

இதுக்குமேலே என்னத்த எழுதுறது?

Comments

  1. /* 'கல்லா மதியே! கதிர் வாள் நிலவே!
    செல்லா இரவே! சிறுகா இருளே!
    எல்லாம் எனையே முனிவீர்; நினையா
    வில்லாளனை, யாதும் விளித்திலிரோ?*/
    அருமை. simply excellent.

    /* இதுக்கு மேல என்னத்த எழுதிறது?*/
    இன்னும் இது போல இலக்கிய சுவையை எங்களைப் பேபாமர வாசகர்களுக்கு அறிமுகப் படுத்த வேணும்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. கண்டேன் கண்டேன் பாடலில் 'அரவிந்த வேதாவை தர வந்த மாதாவை' என்பதின் பொருள் என்ன என்று கூற முடியுமா please

    ReplyDelete
  4. கம்ப ராமாயணத்தை சிறு சிறு பதிவுகளாக உங்கள் பார்வையில் உங்கள் நடையில் எழுதினால் நன்றாக வரும் என்பது என் கருத்து. கம்பராமாயணம் மட்டுமல்ல பல பிடித்த இலக்கியங்களையும் உங்கள் எழுத்துக்களில் கொண்டுவருவது ஒரு சேவையாகும் .நிச்சயமாக இது ஒரு சுயநல சிந்தனை தான் நாம் ரசித்ததை இனொருவருடன் பகிர்ந்து அவர்களும் ரசிக்கும் போது வரும் சந்தோசம் இருக்கே சொல்லி மாளாது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...