Skip to main content

BOX கதைப்புத்தகம்

 

box-new

 

கார்த்திகை என்ற அந்தச் சிறுவன் தனது கண்களில் நீர் படரப் பார்த்துக்கொண்டிருந்தான். பின்பு அவன் தனது கைகளை உயர்த்தியவாறு ப ப ப ப பஎனக் கத்திக் குழறியவாறே அந்த விளையாட்டை நிறுத்துமாறு சிறுவர்களிடம் சைகைகளால் மன்றாடினான்.

ஆனால் சிறுவர்கள் விளையாட்டை இலேசில் நிறுத்துவதாகயில்லை. அவர்கள் உண்மையிலேயே இராணுவமாகவும் புலிகளாகவும் சனங்களாகவும் காயம் பட்டவர்களாகவும் செத்தவர்களாகவும் உடல்களாகவும் இரத்தமாகவும் தசையாகவும் அந்தப் பெட்டிக்குள் சந்நதத்தில் இயங்கிக்கொண்டிருந்தனர்.

-- BOX கதைப் புத்தகம்

வன்னியில், விசுவமடுவுக்கு சற்றுத் தொலைவாக அமைந்திருக்கும் பெரிய பள்ளன் குளம் என்கின்ற குக்கிராமத்தின் போருக்குப் பின்னரான மக்களின் வாழ்க்கையே BOX கதைப்புத்தகத்தின் மையக்களம். அதிலிருந்து காலத்தாலும் தூரத்தாலும் அகத்தாலும் புறத்தாலும் பல கதைக்கிளைகளை பரப்பி விரிகிறது இந்நாவல். தேசியப்போராட்டம், கொள்கைவாதம், சர்வதேச அரசியல் என்கின்ற விஷயங்களை எல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு சாதாரண மனிதம் எப்படி சித்திரவதைக்குள்ளாகிறது என்பதை சொல்வதுதான் இந்நாவல். நாற்பது கதைகள், பத்து உப பிரதிகள், உரைமொழிப் பதிவுகள் என்று உண்மைச்சம்பவங்கள் என்று சொல்லப்படுவனவற்றை ஒரு நாவல் அமைப்புக்குள் கொண்டுவந்த முயற்சி இது. வன்னியிலிருந்து நண்பரொருவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலும் ஷோபா சக்தி தானே சென்று பார்த்த அனுபவங்களின் அடிப்படையிலும் எழுதிய நாவல் என்று சொல்லப்படுகிறது.  ஆனால் இவையாவும் புனைவுக்குள்ளேயே அடக்கம் என்றே முடிவு பண்ணுதல் வேண்டும்.

அமையாள் கிழவி பெரிய பள்ளன் குளத்தில் நிர்வாணமாக மிதப்பதோடு ஆரம்பிக்கிறது கதை. அப்போது அம்மா என்ற ஓலத்தோடு சாவு பிறக்கிறது. அதே குளத்தில் அமையாள் கிழவி செத்து மிதப்பதோடு நாவல் முடிகிறது. இடையே உள்ள இருநூற்றைம்பது பக்கங்கள் முழுதும் சாவுகள்தான். நிறைய உயிர்கள், நிறைய உளங்கள், நிறைய மனிதம் என எல்லாமே ஏதோ ஒரு வடிவத்தில் வதைப்பட்டு சாகடிக்கப்படுகின்றன.

கார்த்திகை என்கின்ற சிறுவன் பெரிய பள்ளன் குளத்துக்கு வருகிறான். அவன் கண்களினூடாக அந்த ஊரின் நிலை காட்டப்படுகிறது. அந்த ஊர் மனிதர்களிடம் இருப்பதை விட இல்லாததே அதிகம். கைகள், கால்கள், உறுப்புகள், உணர்வுகள் எல்லாமே சிதைக்கப்பட்ட நிலையிலேயே அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களின் நாளாந்த வாழ்க்கையும் வதைகளுக்கூடாகவே நகருகிறது. ஒரு சின்ன அசைவே அவர்களின் மனப் பிறழ்வுகளை வெளிக்காட்ட போதுமானதாகவிருக்கிறது. உரை மொழிப்பதிவுகள் பலவும் போர் வதைகளையும் பாலியல் வல்லுறவுகளையும் சொல்லுகின்றன. உப பிரதிகள் பெரிய பள்ளன் குளத்துக்கும் வெளியுலகத்துக்குமுள்ள ஏதோவொரு இணைப்பை சொல்லிநிற்கிறது. அது பிரான்சு தேசத்தின் டைடஸ் சாமுவெலின் தொடர்பாக இருக்கட்டும். அல்லைப்பிட்டி அந்தோணியின் தொடர்பாகவிருக்கட்டும். பண்டாரவன்னியனின் தொடர்பாகவிருக்கட்டும். பெரிய பள்ளன் குளத்துக்கும் வெளியுலகத்துக்கும் நீண்ட நெடிய தொடர்பிருக்கிறது. அந்தக் கிராமத்தின் கையிழந்த ஐந்து வயது சிறுவனின் நிலைமைக்கு முழு உலகமும் வரலாறும் ஏதோவொரு விதத்தில் பொறுப்பாளிகளாகின்றனர்.

நாவலின் வதைகள் பலவும் பெட்டி அடிக்கப்பட்டே நடத்தப்படுகின்றன. முதலாம் அத்தியாயத்திலேயே வதை முகாமில் ஒரு சிறிய பெட்டி வடிவ கோடு கீறி அதைவிட்டு வெளியே கால் கை நீளும்போதெல்லாம் இளைஞர்கள் வதைக்கப்படுகின்றனர். அனந்தபுரம் யுத்தத்திலும் பொக்ஸ் அடிக்கப்பட்டே புலிகளின் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. முள்ளிவாய்க்காலிலும் பொக்ஸ் அடித்தே மக்களை நசுக்கி கொன்று குவித்தனர். யுத்தம் முடிந்த பின்னரும் பொக்ஸ் அடிப்பது தொடர்கிறது. சிறுவர்கள் எல்லோரும் இணைந்து இறுதி யுத்தத்தை புலிகளாகவும் இராணுவமாகவும் மக்களாகவும் யுத்த விமானங்களாகவும் பிரிந்து விளையாடியே காட்டிவிடுகிறார்கள். பின்னர் பெரிய பள்ளன் குளத்து மக்கள் அனைவருமே சிறுவர்களின் பொக்ஸ் விளையாட்டை ஆட ஆரம்பிக்கிறார்கள். கொலை, பாலியல் வல்லுறவு, காணாமல் போதல் என்று எல்லாவற்றையும் மக்கள் நடித்து விளையாடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அது விளையாட்டு என்பதே அம்மக்களுக்கு மறந்து போய்விடுகிறது. யோசித்துப்பார்த்தால் முள்ளிவாய்க்காலைக்கூட உலகம் ஒரு விளையாட்டு நிகழ்வாக பார்த்துவிட்டதோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. மக்களும் உணர்வுகளும் எந்த விடுதலையும் பெற முடியாதவாறு அவர்களைச் சுற்றி எப்போதுமே ஒரு பொக்ஸ் அடிக்கப்படுகிறது. ஈழத்தில் பொக்ஸ் என்பது ஆயுத யுத்தத்துக்கு மட்டுமன்றி ஒடுக்குமுறைக்கும் பயன்படுத்தபடும் இலகு யுக்தியாக ஆதிக்கக்காரர்களால் கையாளப்படும் ஒன்றாகிவிட்டிருக்கிறது.

பெரியபள்ளன் குளத்திலிருந்து விடுதலைப்போராட்டத்துக்குப்போய் உயிரை நீத்த முதல் போராளி கார்த்திகை. கார்த்திகை எதற்குமே வெட்கப்படும் சுபாவம் கொண்டவன். கைது செய்யப்படும்போதும் வெட்கப்படுகிறான். தன் முன்னே ஒருவன் கொடூரமாக இராணுவத்தால் கொல்லப்படும்போதும் கார்த்திகை வெட்கப்படுகிறான். பெருவிரலில் கட்டி தலைகீழாக கட்டித்தொங்கவிடப்படும்போதும் வெட்கப்படுகிறான். பிரான்சுக்கு தப்பியோடிச்சென்று நண்பர்களோடு பேசும்போதும் வெட்கப்படுகிறான். அரசியல் பேசும்போதும் வெட்கப்படுகிறான். வெளிநாட்டிலிருந்து அரசியல் பேசக்கூடாது என்று சொல்லி எண்பதுகளில் மீண்டும் நாடு திரும்பி போராட்டத்தில் கார்த்திகை தன்னை இணைத்துக்கொள்கிறான். தமிழ்நாட்டில் பயிற்சி எடுக்கிறான். மீண்டும் யாழ்ப்பாணம் சென்று விடுதலைப்போராட்டம் செய்யலாம் என்றால் அங்கே அவன் சார்ந்த இயக்கம் சாதாரண பொதுமக்களை துன்புறுத்துகிறது என்பதை அறிந்து அதிலிருந்து பிரிந்து தாயிடம் செல்கிறான். ஆனாலும் இராணுவத்துக்கு அவன் போராளி என்று தெரியவந்து கைது செய்யப்படுகிறான். கைது செய்கையில் இராணுவம் “கோமத?” என்று நக்கலாக அவனைப்பார்த்து கேட்கிறது. வெட்கப்படுகிறான். கார்த்திகை கொல்லப்பட்டு மூன்று மாதங்களின் பின்னர் இயக்கப்பத்திரிகை ஒன்றில் அவன் படம் ஒன்று வெளியாகிறது. துப்பாக்கியை ஏந்தியபடி அவன் நிற்கும் அந்த கறுப்பு வெள்ளைப்படத்திலும் மெல்லிய வெட்கப்புன்னகையே முகத்தில் தெரிகிறது. வெட்கம் கெட்ட ஜென்மங்கள் நிறைந்த யுத்த தேசத்தில் நிர்வாணமாகும் ஒரு நேர்மையான போராளியின் வெட்கமது.

இலங்கையின் தென்பகுதி நகரான காலியில் “அடிமைப்புலி” என்கின்ற ஒரு இரகசிய பாலியல்தொழில் விடுதி ஒன்று இயங்குகிறதாம். அங்கே பணிபுரியும் பெண்களை விடுதியின் பொறுப்பாளர்கள் முன்னால் புலி உறுப்பினர்கள் என்றே அறிமுகப்படுத்துவார்களாம். அந்தப்பெண்களும் இராணுவ சீருடைத்துணியில் தைத்த அரைகுடை ஆடைகளிலேயே வாடிக்கையாளர்கள் முன்பு தோன்றுவார்களாம். இடையில் பொம்மைத்துப்பாக்கி செருகப்பட்டிருக்கும். கழுத்தில் கிடக்கும் சயனைட் குப்பி போன்ற கண்ணாடிக்குப்பி தொங்கும். குப்பியை வாயில் வைத்தபடியே அந்தப்பெண்கள் வந்திருக்கும் வாடிக்கையாளரை சுற்றி பொக்ஸ் அடிப்பார்களாம். இத்தனைக்கும் அந்தப்பெண்களுக்கும் புலிகள் அமைக்கும் எந்தச்சம்பந்தமுமில்லை. இவர்கள் மலைநாட்டிலிருந்தும் வன்னியிலிருந்தும் சிங்கள நாட்டுப்புறங்களிலிருந்தும் வீட்டுவேலைக்கென ஏமாற்றிக் கூட்டிவரப்பட்ட, கடத்திவரப்பட்ட பெண்கள். ஆனால் அடிமைப்புலிகள் என்று அவர்களை அறிமுகப்படுததுவதன்மூலம் வாடிக்கையாளர்கள் பரவசப்படுவார்களாம். தாமும் எதனையோ சாதித்துவிட்டோம், வென்றுவிட்டோம் என்கின்ற வெற்றிக்களிப்பு வாடிக்கையாளர்களுக்கு இதனால் ஏற்படுகிறது. தென் மாகாண அமைச்சர் ஒருவரால் நடத்தப்படும் விடுதி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பணக்கார வாடிக்கையாளர் மத்தியில் வெகு பிரபலம் என்கிறது இந்நாவல். இது உண்மைத்தகவல் என்ற தோற்றத்தை ஏற்படுத்தினாலும் அதற்குரிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. வெற்றிக்களிப்பு என்பது எத்தகைய மனித விகாரம் என்பதை கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத அளவுக்கு அந்தக்காட்சிகள் அரங்கேறுகின்றன. பாலியல் வதை என்பது இலங்கை இராணுவத்தின் படுமோசமான நாசகர ஆயுதம். இதெல்லாவற்றையும் வாசிக்கும்போது இந்த இராணுவம் எத்தனை கொடுரமும் கேவலமுமான இராணுவம் என்பது புலப்படும். எத்தனை கோரமான …. அமையாள் கிழவி கொட்டுகின்ற அத்தனை பச்சைத்தூசணங்களும் வரிசை கட்டுகின்றன.  Reconciliation? Go to hell.

ஒரு ஷோபாசக்தி படைப்பு ஒன்றில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாமோ அதுவெல்லாமே இந்த நாவலில் இருக்கிறது. இராணுவம், புலிகள் என்ற பேதமின்றி, போர் புரியும் தரப்புகளின் அட்டூழியங்கள் பட்டவர்த்தனமாக படம் பிடிக்கப்படுகிறது. நியாயங்களைவிட அநியாயங்களே பதியப்படுகிறது. சிங்களத்தரப்பிலும் நேர்மையானவர்கள் இருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. இனப்பிரச்சனைக்கு சமானமாக சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதியப்பிரச்சனையும் அச்சொட்டாகப் காட்டப்படுகிறது. இந்தப்பிரச்சனைகள் இன்று நேற்று நடப்பது அல்ல, காலம் காலமாக நடப்பது என்பது மேற்கோள்காட்டப்படுகிறது. பிரச்னைக்கு ஒரு சர்வதேச கூறு கொடுக்கப்படுகிறது. சார்பு நிலைகள் எடுக்கப்படாமல் எல்லா நிலைகளும் விமர்சிக்கப்படுகிறது. அதிலே எந்த பாரபட்சமும் இல்லை. சமுதாயத்தின் அபத்தங்கள் மீது அடிக்கப்படும் மல்டி பரல்கள் அவை. சாதாரண மனிதர்களின் மன விகாரங்கள், முரண்பாடுகள் எந்தவிதமான சரி, பிழை என்கின்ற தீர்ப்பு நிலையுமில்லாமல் எழுதப்படும். தனிமனிதனின் இருத்தல், சிந்தனை சார்ந்த Existentialismதான் நாவலின் அடிப்படை. அவருடைய முன்னைய நாவலான “ம்” இலும் அது இருக்கிறது. இந்த நாவலிலும் அது நிறையவே இருக்கிறது.

என்னவொன்று, இது புலிகளின் காலத்துக்குப் பின்னரான, போருக்கு பின்னரான காலப்பகுதியில் நடக்கும் நாவலாததால் புலிகளின் தலை எதிர்பார்த்ததைவிட குறைவாகவே உருளுகிறது. சைனீஸ் திலகர் பற்றிய உபபிரதியில் ஷோபாசக்தியின் இந்த மாற்றம் சற்றே தெரிகிறது. முள்ளிவாய்க்கால் கொலைகளை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டம் ஒன்று பாரிஸிலே நடக்கிறது. ஒரு முப்பது பேரளவில் கொடி பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள். அப்போது ஒருவர் வந்து “கொலைகளை அரசாங்கம் செய்கிறதென்றால், புலிகள் மக்களையும் பணயக் கைதிகளாகவல்லோ பிடித்து வைத்திருக்கிறார்கள், இரண்டு தரப்பையும் கண்டிக்கவேண்டாமோ” என்கிறார். வாக்குவாதம் முற்றுகிறது. வந்தவரும் விடாக்கொண்டனாக நிற்கிறார். அப்போது திலகர் சொல்கிறார்.

இஞ்ச அண்ணே உந்த விழல் கதை கதையாதேங்கோ .. உது தெரியாமலே நாப்பது வரியமா அரசியல் செய்யிறன். புலி சனத்தை பிடிச்சு வச்சிருக்கிறான் எண்டதுக்காவண்டி சனத்தை அரசாங்கம் கொல்லலாமே? புலி அரைப் பாசிஸ்டு எண்டது எங்களுக்கும் தெரியும் கண்டீங்களோ .. ஆனால் இது சனங்களின்ர வரியில இயங்குற பொறுப்புச் சொல்ல வேண்டிய அரசாங்கம், சட்டப்படி நடக்கவேண்டிய அரசாங்கம். அரசாங்கத்தத்தான் சண்டையை நிறுத்தச்சொல்லி முதலிலே கேக்கவேண்டும். சனங்கள் செத்துக்கொண்டிருக்குதுகள் அண்ணே!

திலகரோடு தர்க்கப்பட்டவர் என்னத்த அரைப்பாஸிஸ்டோ, என்னத்த முழுப் பாஸிஸ்டோஎன்று முனகியவாறே என்னிடம் தம்பி எனக்கும் ஒண்டைத் தாடாப்பாஎன்று கேட்டு ஒரு பதாகையை வாங்கிக் கைகளில் உயர்த்திப்பிடித்துக் கொண்டார். அந்தப்பதாகையில் இராணுவமே நான் என் வீட்டிற்குப் போவதற்கு, நீ உன் வீட்டுக்குப் போ!என எழுதப்பட்டிருந்தது.

இதுதான் ஷோபாசக்தி எழுத்தில் தெரிகின்ற சிறு மாற்றம்! இன்னோரிடத்தில் ஷோபாசக்தியின் இந்த மாற்றம் அடுத்த பகடையை ஆடுகிறது. கப்டன் டிறிபேக் கற்சிலைமடுவில் பண்டாரவன்னியனின் படைகளை பொக்ஸ் அடித்து சுற்றி வளைத்ததாகவும், பண்டாரவன்னியன் உருவத்தை ஒத்த ஒரு உடலைப்புதைத்து “இங்கே பண்டாரவன்னியன் கப்டன் டிறிபெக்கால் தோற்கடிக்கப்பட்டான்” என்று நினைவுக்கல் பாதித்ததாகவும், ஆனால் பண்டாரவன்னியன் பொக்சை உடைத்து வெளியேறி எப்போதோ தப்பி வெளியேறியிருந்ததாகவும் ஒரு உப்பிரதி கதை சொல்கிறது. இப்படியொரு நாவலுக்கு இந்த அரசியல் படிமமுள்ள கதை, நிஜமேயாயினும் எந்தளவுக்கு தேவை என்று யோசிக்கவைக்கிறது. Is he playing to masses? உண்மை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டு புனைவை வரைந்ததும் அரசியலும் நேர்மையும் யோசிக்கவைக்கிறது.

BOX கதைப்புத்தகம் நாவலை பெரும்பாலும் படிமங்களே ஆக்கிரமிக்கின்றன. நிலவு, நிர்வாணம், வெட்கம், கல்லறை வீடு, கிளியின் மரணம், ஏன், கார்த்திகை கூட ஒரு படிமம்தான். இப்படி படிமங்களால் சொல்லப்படும் கதையால் சமயத்தில் பெரிய பள்ளன் குளத்திலேயே உலாவுகின்ற அனுபவம் அவ்வப்போது தடைப்படுகிறது. விவரணங்களிலும் வசனங்களிலும்கூட ஒருவித இடைவெளிகள் தெரியுமாப்போல. இறுதிவரை பெரிய பள்ளன் குளம் என்ற கிராமத்தை என்னால் முழுமையாக மண், மரங்கள், மனிதரோடு சிருஷ்டிக்கமுடியாமல் போனதுக்கும் கொஞ்சம் அதீதிமான படிமங்கள் காரணமோ என்று எண்ணத்தோன்றுகிறது. அல்லைப்பிட்டியில் கதை உலாவும்போது கிடைக்கின்ற அன்னியோன்னியம் பெரிய பள்ளன் குளத்தில் உலாவுகையில் கிடைக்காதமைக்கு அக்களம் எழுத்தாளருக்கு அந்நியமான களமாக இருந்தமையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

சில வருடங்களுக்கு முன்னர் பத்திரிகையாளர் பிரான்ஸிஸ் ஹரிசன் எழுதிய “Still Counting the Dead” என்ற நூல் வெளியானது. யுத்தசாட்சியங்களை கண்டறிந்து அவர்களுடைய சொந்த அனுபவத்தை அப்படியே கொடுத்த நூல் அது. யுத்தத்தின்போதும், பின்னருமான மக்களின் அவலங்களை, இழைக்கப்பட்ட கொடுமைகளை எவ்வித பூச்சு மெழுக்குமில்லாமல் முகத்திலறையும்படி சொல்லிய நூலது. அப்படிப்பட்ட அனுபவங்களுக்கு கொஞ்சம் இலக்கிய நயம் சேர்த்து, படிமம் சேர்த்து ஒரு நாவலின் கட்டுக்குள் கொண்டுவந்த முயற்சிதான் BOX கதைப்புத்தகம். இந்நாவல் ஆங்கிலத்திலோ பிரெஞ்சிலோ வெளியானால் ஒரு முக்கிய படைப்பாக கவனிக்கப்படும். அதுவும் ஷோபாசக்திக்கு இப்போதிருக்கும் வெளிச்சத்தை பயன்படுத்தி பலரிடம் இந்நாவலை கொண்டுசெல்ல முடியும். அவருடைய “ம்” “Traitor” ஆனது. BOX உம் ஏனைய மொழிகளில் வெளிவருவது அவசியமானது.

நிர்வாணம் இந்த நாவலின் ஆதாரம். நாவலின் பாத்திரங்கள் அநேகமானவை நிர்வாணமாகவே திரிகின்றன. நிர்வாணப்படுத்தப்படுகின்றன. அகம், புறம் என அனைத்துமே நிர்வாணமாகின்றன. நிர்வாணங்களை பின்தொடர்ந்து கதை சொல்லும் நிலவு கூட நிர்வாணமாகத்தான் அலைகிறது என்பது வாசித்து முடித்தபின்னரேயே நமக்கு உறைக்கிறது. இதிலே கதை சொல்லியும் நிர்வாணிதான். ஈற்றில் நாமும் நிர்வாணியாகிறோம்.

நாவலின் இரண்டாவது உபபிரதியிலே டுகோபோர் நிர்வாணச்சங்கம் பற்றிய பகுதி வருகிறது. பரிதி, காற்று, நீர் மற்றும் நிர்வாணம் என்பது அந்த சங்கத்தினுடைய அடிப்படைக்கொள்கை ஆகும். அந்த அமைப்பின் ஒரு நிர்வாணி டைடஸ் சாமுவேல். அவர் முதலாம் உலக யுத்தத்தின்போது பிரான்சிலிருந்து வெளியேறி, மெதடிஸ்த திருச்சபை ஊழியனாகி, பின்னர் தன் வாழ்நாளின் கணிசமான காலத்தை பெரிய பள்ளன் குளத்திலேயே கழித்தார். டைடஸ் சாமுவேல்தான் அந்தக்கிராமத்துக்கு நிர்வாணத்தைக் கொண்டுவந்தவர். கூடவே கிராமத்தின் நிர்வாணத்தையும் வெளிக்கொணர்ந்தவர். அப்போது ஆரம்பித்த நிர்வாணம். இன்னமும் காலம் காலமாக தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. நூற்றாண்டு கழித்து சிறுவன் கார்த்திகையும் டைடஸ் சாமுவேலின் கல்லறை வீட்டருகேயே தன்னுடைய பெரிய பள்ளன் குளத்து நாட்களை கழிக்கிறான். பட்டயம் எழுதப்பட்டவன் என்று ரேமன் பக்ததஸாசால் பாதிரியாரால் நேசிக்கப்படுபவன். நிர்வாணம் அவன் மூலமாக தொடர்கிறது. பரிதி காற்று நீர் போல இயற்கை நிர்வாணத்தையும் அக்கிராமத்தில் சுவீகரிக்கிறது. சில சமயங்களில் மென்மையாக. பல சமயங்களின் பலாத்காரத்தோடு.

நாவலில் இப்படி ஒரு குறிப்பு இருக்கிறது.

நிர்வாணம் விடுதலை! நிர்வாணம் அடக்குமுறை! நிர்வாணம் ஆயுதம்! நிர்வாணம் தியாகம்! நிர்வாணம் அவமானம்! நிர்வாணம் இயற்கை! நிர்வாணம் பேரழிவு! நிர்வாணம் பிறப்பு! நிர்வாணம் சாவு! நிர்வாணம் காதல்! நிர்வாணம் வெட்கம்! நிர்வாணம் வசியம்! நிர்வாணம் கருணை! நிர்வாணம் அருவெறுப்பு! நிர்வாணம் அழகு! நிர்வாணம் ஞானம்! நிர்வாணம் போர்! நிர்வாணம் சமாதானம்!

நிர்வாணம் BOX கதைப்புத்தகம்!

************************

பிற்குறிப்பு

நாவல் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது என்று சொல்லப்பட்டாலும் பல முக்கியமான அதிர்ச்சியான சித்திரங்கள் முற்றிலும் புனையப்பட்டவை என்று தெரியவருகிறது. நாவலை புனைவு என்ற அடிப்படையிலேயே அணுகி அதன் அரசியலையும் பார்வையையும் ஆராயவேண்டும் என்ற இந்தக் பிற்குறிப்பு கட்டுரை வெளியிடப்பட்டு சில மணி நேரங்களுக்குப்பின்னர் கூடுதலாகச் சேர்க்கப்படுகிறது.

Comments

  1. வாசித்து முடித்ததும் பெரிய பள்ளன் குளத்தை நாங்கள் தேடிச் செல்லும் அளவிற்கு மிகச்சிறப்பாக ஷோபா சக்தி எழுதியிருந்தார்."பிறந்ததில இருந்து நான் இங்கதான் இருக்கிறன் அப்பிடி ஒரு ஊரே இல்ல" என்று அந்த சைக்கிள் கடைக்காரர் சொன்னது தான் தாங்க முடியல

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...