Skip to main content

ஆதிரை

 

aathirai

 

 

ஐநூற்றுத்தொண்ணூற்றிரண்டாம் பக்கம்.

24 – 04 – 2009 முள்ளிவாய்க்கால்

சந்திராவுடைய வாய் மெல்லத் திறந்திருந்தது. உதடுகளில் மண்பருக்கைகள். நான் கேக்கிற நிறையக் கேள்வியளுக்கு நீங்கள் ஏன் பதில் சொல்லுறேல்லை…” அத்தார் சந்திராவைக் கட்டிக்கொண்டு வெடித்து அழத்தொடங்கினான்.

அண்ணை வெளிக்கிடுங்கோ…” வெள்ளையன் கையை ஆறுதலாகப் பற்றினான்.

என்னை விடு. நீ போ

ஷெல்லடி கூடுதண்ணவாங்க போவம்

டேய்நாயேஒருக்காச் சொன்னா கேக்க மாட்டியே…. நீ போநான் வரேல்லஅத்தார் சந்திராவின் கன்னங்களை வருடினான். குருதி தோய்ந்த விரல்கள் சிவப்புக்கோடுகளை வரைந்தன. குடும்பத்தில ஆரும் வேண்டாமெண்டிட்டு என்னை மட்டுமே நம்பி வந்தவளடாஎன்ர சுகதுக்கம் எல்லாத்திலயும் பக்கத்தில நிண்டவளை ஒரு அநாதையா விட்டிட்டு வரச்சொல்லுறியே…”

அத்தார் சந்திராவின் தலையைத் தூக்கித் தன் மடியில் கிடத்தினான். என்னையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாமெல்லே…” அவளுடைய கழுத்தில் தலையைச் காய்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதான். ஷெல் சத்தங்கள் மறுபடியும் கூவின.

மறுநாள் காலை, இயக்கத்தின் தமிழர் புனர்வாழ்வுகழகத்தைச் சேர்ந்தவர்கள் உருக்குலைந்த கூடாரத்தின் சிதைவுகளை அப்புறப்படுத்திவிட்டு மனிதத் துண்டங்களைக் கூட்டி அள்ளினார்கள். அவர்கள்தான் இப்போது சவங்களைப் புதைக்கின்ற கடமையை மேற்கொண்டார்கள்.

உடல் சிதைந்து வலதுகண் மட்டும் திறந்திருந்த ஒரு தலையை நீண்ட நேரமாக யாராலும் அடையாளம் காண முடியவில்லை. புதைப்பதற்குச் சற்று முன்பாகவே ஒரு நடுத்தர வயதுக்காரன் அடையாளம் காட்டினான்.

இந்த அம்பட்டக் கிழவனை எனக்குத் தெரியும். அத்தார் எண்டு கூப்பிடுறவை. ஒரு வெள்ளாளப் பொம்பிளையைக் கட்டியிருந்தவர். இவருக்குப் பிள்ளையள் இல்லை…”

 

நாமெல்லாம் ஒரு வண்ணாத்திப்பூச்சியின் கனவு என்கிறது சீனத்துப் பழமொழி. ஒருநாள் நான் வண்ணாத்திப்பூச்சியாகத் தோட்டத்தில் இறக்கை அடித்துப் பறக்கிறேன். ஒவ்வொரு பூக்களாக, இலைகளாக, கிளைகளாகத் தொட்டுத்தரித்துப் பறந்து திரிகிறேன். வண்ணமயமான என்னிரு இறக்கைகளும் படக்படக்கென்று விசிறித் தள்ளுகின்ற காற்றிலே சிறு பூக்களின் இதழ்கள் அசைவது இதமாகவிருக்கிறது. அப்படி ஒரு பூவிலே தரித்து நிற்கும் தருணத்தில் என்னைப்போலவே இன்னொரு வண்ணாத்தியைக் காண்கிறேன். திடீரென்று கனவு கலைகிறது. நான் அந்த வண்ணாத்தி இல்லை, வெறுமனே மனுசன், இதுவரையும் கனவுதான் கண்டிருக்கிறேன் என்று உணர்கிறேன். கூடவே குழப்பமும் சேர்கிறது. இந்த மனித உருவம் கண்ட கனவுதான் அந்த வண்ணாத்திப்பூச்சியின் பறப்பா? அல்லது அந்த வண்ணாத்திப்பூச்சி காண்கின்ற கனவுதான் இந்த மனித வாழ்க்கையா? “போனதெலாம் கனவினைப்போல் புதைந்தொழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ?” என்கிறது பாரதி கவிதை.

சயந்தனின் ஆதிரை நாவலும் ஒரு கனவுதான். துர்கனவு. ஏறத்தாழ நாற்பது ஆண்டுகால வன்முறையும் யுத்தமும் அதன் நீட்சியும் சேர்ந்த ஈழத்துப் போரியல் வாழ்க்கையின் அவலங்களின் ஒரு பகுதியைச் சொல்லும் நாவல் ஆதிரை. இயல்பான இரத்தமும் சதையுமுள்ள சாதாரண மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல். நாளாந்த வாழ்க்கை கொடுக்கின்ற சுகங்களோடும் துக்கங்களோடும் வாழ்ந்து கழிக்கின்ற எளிமை மனிதர்களின் கதை. ஆனால் வன்முறையும் யுத்தமும் அவர்களை ஒரு துர்நாற்றம்போலத் துரத்துகிறது. அந்தத் துர்நாற்றம் ஊர் ஊராகப் பரவுகிறது. அந்த மனிதர்கள் முதலில் மூக்கைப்பொத்துகிறார்கள். பரவுகின்ற துர்நாற்றத்தை கைகளால் விசிறிக் கலைத்துப் பார்க்கிறார்கள். அது முடியாமல் பின்னர் ஓடித்தப்புகிறார்கள். நாற்றம் தொடர்ந்து துரத்துகிறது. ஓட ஓட அது மேலும் பரவுகிறது. ஈற்றில் அவர்கள் அந்த துர்நாற்றத்தினுள்ளேயே வாழத் தலைப்படுகிறார்கள். மெல்ல மெல்ல அதற்கு இசைவாக்கப்படுகிறார்கள். அவர்களைப் பகடைக்காய்களாக்கி அரசியல் விளையாடப்படுகிறது. பகடைகள் உருட்டப்படுவதுபோலவே அவர்களின் வாழ்க்கையும் உருட்டப்படுகிறது. ஈற்றில் அந்த மக்கள் இரத்தமும் சதைப்பிண்டங்களுமாகப் பிய்த்து எறியப்படுகிறார்கள். துர்நாற்றம் மேலும் பரவுகிறது. யுத்தம் முடிந்து ஆண்டுகள் பல சென்றாலும் அந்த துர்நாற்றம் இன்னமும் எஞ்சிய மனிதர்களைத் துரத்திக்கொண்டேயிருக்கிறது.

ஆதிரையை வாசித்துமுடித்தபின்னர் நமக்கும் அந்த நாற்றம் பரவிக்கொள்கிறது. ஒரு துர்கனவைக்கண்டு பதட்டத்தில் விழித்தவனுக்கு வியர்வை கசகசக்கிறது. இது வெறுங்கனவேயன்றி நிஜமில்லை என்று ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் அடுத்த கணமே உடல் நடுங்கத் தொடங்குகிறது. கடவுளே, நான்தான் அத்தாரோ? அவன் கனவினுள் விழித்திருப்பவனோ? இது கலைந்தால் அத்தாராய் மாறி நானும் அரற்றுவேனா? என் மடியில் இறந்துபோன சந்திரா கிடப்பாளா? சந்திரா இறந்துவிட்டாளா? என்னோடு அத்தனை சுக துக்கங்களிலும் பங்கெடுத்து, கூடவே வந்து, கூடி, உறவாடி, சிரித்து, அழுத சந்திரா என் மடியிலேயே இறந்து கிடக்கிறாளா? துர்நாற்றம் பெரும் பயமாக உருமாறி உடலெங்கும் பரவத்தொடங்குகிறது.

ஆதிரை வன்னிப்பெருநிலத்து மாந்தர்களின் வாழ்க்கையைச் சொல்லும் கதை. வன்னியிலேயே தலைமுறைகளாக வாழ்ந்துவரும் மக்கள். மலையகத்திலிருந்து வன்முறை காரணமாக இடம்பெயர்ந்து வன்னியில் தம் வாழ்க்கையைக் கட்டியமைக்கும் மக்கள். யுத்தத்தின் காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னியில் தஞ்சமடையும் மக்கள். இப்படி பல்வேறு பின்புலங்களையுடைய மக்களைக்கொண்ட பகைப்புலத்தை மையமாக வைத்து அந்த மாந்தரின் நாளாந்த வாழ்க்கையை சிறிது சிறிதாக விவரிகிறது நாவல். அவர்களுடைய தொழில், குடும்பம், உறவு, சின்னச்சின்ன சலனங்கள், சம்பவங்கள், எண்ணங்கள் என்று விரிவுபடுத்தி வன்னியினுடைய மூன்று தசாப்த வாழ்க்கைமுறையை நாவல் கட்டமைக்கிறது. அந்த வாழ்க்கையிலிருந்தே தேர்ந்தெடுத்த படிமங்களினூடாக அந்தப் புழுதி மண்ணோடும் மனிதர்களோடும் நாம் உறவாட நாவல் வழி சமைக்கிறது. காடும் வானும் மண்ணும் முகிலும் சந்திரா வீட்டுப் பரணில் கிடந்த பழைய புத்தகங்களும்கூட படிமங்களாக விரிகின்றன. நம் கனவும் விரிந்து வண்ணாத்திப்பூச்சியாக சிறகடித்துப் பறக்கிறது. இந்த வாழ்க்கை இப்படியே இருந்துவிடக்கூடாதா என்கின்ற பரவசப் பறப்பு அது. அந்த மாந்தர்களோடு சேர்ந்து நாமும் இத்திமரக்காரியை வணங்குகிறோம்.

ஆனால் சீக்கிரமாகவே வண்ணாத்தியின் நிறங்கள் ஒவ்வொன்றாக அகன்று போகத்தொடங்குகிறது. இறக்கைகள் தூர்ந்துபோகின்றன. வன்னிப்பெருநிலத்தின் வாழ்க்கை சீட்டுக்கட்டுப்போல குலையத்தொடங்குகிறது. கனவு துர்கனவாகிறது. படிமங்களின் நிறங்களும் மாற்றமடைகின்றன. முகில்களுக்குள் அலைந்த படிமம் குண்டித்தசைக்குள் புரையேறிப்போன குண்டுச் சிதறலாக உருமாறி உறுத்துகிறது. அடர்த்தியாக நுழைந்துகொண்டிருந்த இருளிடம் விளக்கின் சுடர் தோற்றுப்போகிறது. தென்னை மரங்களுக்கு தண்ணீருக்குப் பதில் இரத்தம் பாய்கிறது. மூத்திரவாடையில் ஆரம்பித்த துர்நாற்றம் இரத்தவாடையில் முடிவடைகிறது.

நாவல் முழுதுமே ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி உறுத்திக்கொண்டேயிருக்கிறது. தோற்றுப்போன வாழ்க்கையின் காலக்கோட்டைப் திரும்பிப்பார்க்கையில் வருகின்ற குற்ற உணர்ச்சி. அவசரப்பட்டுவிட்டோமோ? அதை ஏன் செய்தோம்? நாமும் காரணமோ? இப்படிச் செய்திருந்தால் நிலைமை வேறு விதமாகப் போயிருக்குமோ? என்கின்ற தோற்றுப்போனவரின் அங்கலாய்ப்பு நாவல் முழுதும் பாத்திரங்களோடு ஊடு கடத்தப்படுகிறது. சம்பவங்கள் அத்தனையுமே அந்தரிப்பையே உருவாக்குகின்றன. கனவிலே எமக்கேற்படும் இயலாமை அது. நாவலின் ஆரம்பத்தில் யுத்த மேகங்கள் சூழ்கொள்ளுகின்ற தருணத்தில் சங்கிலி இப்படி இறைஞ்சுவான்.

அங்கொண்டும் இங்கொண்டுமான உரசலை மூட்டி மூட்டி யாரும் நெருப்பு வைச்சுவிடக் கூடாது. பிறகு காடே எரிஞ்சு சாம்பராயிடும். அவ்வளவுதான். வெளிக்கிடு. சுணங்குது. இன்னும் நடக்கவேணும்

அடி வாங்குகின்றவரிடம் திருப்பி அடிக்காதே, அமைதியாக இரு, இல்லாவிட்டால் மேலும் அழியவேண்டிவரும் என்று சொல்கின்ற இயலாமை. செவ்விந்தியத் தலைவர் அமெரிக்கர்களிடம் மண்டியிட்டபோது கூறியதும் இதுவே. “நாங்கள் ஒன்றுமே செய்யப்போவதில்லை. ஆனால் இந்த மண்ணில் நம் மூதாதையர் வாழ்ந்திருக்கிறார்கள். என் அப்பனும் பாட்டனும் உண்டு உறவாடிய நிலம் இது. இதன் ஒவ்வொரு மரம் செடி கொடியோடும் நமக்கு உறவு இருக்கிறது. இதனை தயவுசெய்து சிதைக்காமல் காக்கவேண்டும்” என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டனுக்கு செவ்விந்தியத்தலைவர் சீயாட்டில் இறைஞ்சி ஒரு கடிதம் எழுதியிருப்பார். காட்டில் வேட்டையாடும் சங்கிலியின் வார்த்தைகள் அந்தச் செவ்விந்தியத் தலைவனுடைய வார்த்தைகளாகவே ஒலிக்கின்றன. வேட்டைக்காரனுக்கு ஆபத்தைக் கணிக்கும் புத்தி இருந்திருக்கிறது. ஆனால் அதைக்கேட்கிற நிலையில் அப்போது அத்தார் இருக்கவில்லை. லெட்சுமணன் இருக்கவில்லை. எவருமே இருக்கவில்லை. அதை உணர்கின்ற நிலை வரும்சமயத்தில் எவருமே உயிரோடு இருக்கவில்லை. அனுபவம் சொல்லிக்கொடுக்கும் தத்துவம்போல வேறு எதுவுமில்லை. “வாழ்க்கை எனது தத்துவாசிரியன்”, “வரலாறு என் வழிகாட்டி” போன்ற பிரபாகரனுடைய வாக்கியங்கள் நாவலின் அத்தியாயங்களாகவே வருகின்றன. ஓரிடத்தில் மயில்குஞ்சன் புழுத்துப்போன உடலைப்பார்த்துக்கொண்டே சொல்வார்.

எனக்கு எல்லாமே விட்டுப்போச்சு. இனிமேல் இந்த மண்ணில் சாவு ஒரு குழந்தைப்பிள்ளை மாதிரி எங்கட கையைப் பிடிச்சுக்கொண்டு திரியப்போகுது அத்தார்

முப்பதே வருடத்தில் அந்தச்சாவு இளைஞராகி பெரியவராகி ஒரு தந்தையைப்போல எல்லா மக்களையும் தோளில் தூக்கிக்கொண்டு முள்ளிவாய்க்கால்வரைக்கும் கூட்டிக்கொண்டுபோய் ஊழிக்கூத்தாடியது.

ஆதிரையை வாசிக்கும்போது நாம் வாழ்ந்த வாழ்க்கையை பின்னாலிருந்து யாரோ ஒருவர் புகைப்படம் எடுத்த உணர்வு அவ்வப்போது வந்துபோகும். அதுவும் சாரகனோடு நம் ‘மூஞ்சி' நன்றாகவே பொருந்துகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னிக்குச் சென்று தங்கியிருந்தநேரம். யாழ்ப்பாணத்தை இழந்ததோடு புலிகளின் கதை இனி முடிந்தது என்ற நிலையில் கொழும்புத்துறைமுகத்தில் ஒரு தாக்குதல் நடக்கிறது. தாக்குதல் வெற்றியைக் கொண்டாடும் முகமாக அடுத்தநாளே “குனியாது கடல் வேங்கை ஒருநாளும்” என்ற சிட்டு குழுவினர் பாடிய பாடல் ஒன்று வெளியாகிறது. “கூட்டைக் கலைத்த கொடியர் இருக்கும் குகையில் விழுந்த ஒரு அடி” என்று அந்தப்பாடலை முணுமுணுத்துக்கொண்டே வட்டக்கச்சி மண் முழுதும் சைக்கிள் ஓடிய நாள்கள் ஞாபகம் வருகிறது. மாவீரர் படிப்பகத்தில் வெளிச்சம் சஞ்சிகையும் கறுப்பு மையினால் தணிக்கை செய்யப்பட்ட ஆனந்த விகடன் பக்கங்களையும் புரட்டிய காட்சிகள் ஞாபகம் வருகிறது. ஹட்சன் ரோட்டில் தங்கியிருந்த ‘நாமகள்’கூட ஞாபகம் வருகிறாள். ஓயாத அலைகள் தாக்குதலின்போது டிராக்டர் டிராக்டராக இராணுவத்தின் உடல்கள் சென்றுகொண்டிருந்ததை வேடிக்கை பார்த்ததும் ஞாபகம் வருகிறது. இயக்கத்துக்குப் போகாமலேயே இவ்வளவும் செய்துகொண்டிருந்த சாரகனை வாசிக்கையில் நாவலின் பக்கங்கள் நிலைக் கண்ணாடிகளாக உருமாறி நம் முகத்தில் காறி உமிழ்கின்றன. நாவல் முழுதும் சயந்தனிடம் இருக்கும் குற்ற உணர்ச்சி நம்மிலும் தொற்றிக்கொள்கிறது. குறிப்பாக இந்தப் பகுதி.

அன்று முழுவதும் வகுப்புகள் ஏனோதானோவென்றுதான் நடந்தன. எல்லோரும் முல்லைத்தீவுப் போரைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். சாரகன் ஒரு கவிதை எழுதலாமா என்று யோசித்தான்.

ஆதிரை சொல்கின்ற சமூகப்பிரிவினைகள் முக்கியமானவை. மலையக மக்களிடையே இருக்கின்ற சாதியப்பிரிவுகள். வடக்கு சமூகத்தரிடையே இருக்கின்ற சாதியம். பிரதேசப் பிரிவினைகள். வர்க்கப் பிரிவினைகள். இப்படிப் பிரிவினைகள் நாவலின் கடைக்கூறு வரைக்கும் தொடர்கின்றன. பல்வேறு பரிமாணங்கள் எடுக்கின்றன. போராட்டத்துக்கு ஆள் சேர்ப்பதிலும் ஆட்சேர்ப்பதை எதிர்ப்பதிலும் உள்ள நைச்சியமான அரசியல் சொல்லப்படுகிறது. போர் முடிந்தபின்னும் அந்த மக்கள் படுகின்ற வேதனைகளைக்கூட ஒரு பிரிவினைக்குள்ளே அடக்கக்கூடியதாக இருக்கிறது. அந்த மக்கள் திரும்பத் திரும்ப அடிவாங்கிக்கொண்டே இருக்கிறார்கள். நம் சமூகத்தையும் பிரிவினைகளையும் எப்போதுமே பிரிக்கமுடியாதோ என்ற எண்ணம் வருகிறது. எப்போதுமே ஏதோ ஒரு குழுவினர் தம் பிழைப்புக்காக ஏதோ ஒரு பிரிவினைவாதத்தை முன் எடுக்கவே செய்கின்றனர். பின்னர் அதுவே அக்குழு சார்ந்தவர்களின் இயல்பாகிவிடுகிறது. மாதுளம்பழத்தின் விதைகளைச் சுற்றியிருக்கும் தோலைப்போல நம்மனைவரையும் பிரிவினைவாதம் சூழ்ந்தே கிடக்கிறது. அத்தாரும் சந்திராவும் விதிவிலக்குகள். வெள்ளையனும் முத்துவும் காலத்தின் கட்டாயங்கள். ஆனால் சாதாரண நிலையில் அனைத்தும் சாரங்கன் நாமகளாகப்போகவே சாத்தியம் அதிகம் என்பதே யதார்த்தம். இந்தப்பிரிவினைவாதங்களின் நீட்சியாகவே புலம்பெயர் உள்நாட்டு கொழும்பு பிரதேசவாதங்களையும் பார்க்கவேண்டியதாக இருக்கிறது. எல்லாத்தரப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கும் ஆதிரை புலம்பெயர் தமிழர்களையும் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் தனியனாக விட்டுவிடுவதோடு மாத்திரமன்றி கிடைக்குமிடங்களிலெல்லாம் அவர்களின் குதத்தில் அமிலம் பாய்ச்சவும் தவறவில்லை. யுத்தத்தின்பின்னர் கோழிகளை வாங்கிக்கொடுத்து ‘நடப்புக்காட்டும்’ புலம்பெயர் தமிழரை ஏளனம் செய்வதிலிருக்கும் முனைப்பு சத்தமே போடாமல் தம் மக்களுக்குத் தோள் கொடுக்கும் எத்தனையோயாயிரம் பேரை இனங்காட்டுவதில் இருக்கவில்லை. சயந்தனும் புலம்பெயர் தமிழராக இருப்பதன் குற்ற உணர்ச்சி அதற்குக் காரணாமாகவும் இருக்கலாம். அல்லது கைக்கு வசமாகக் கிடைப்பதால் எறிந்த கல்லாகவும் இருக்கலாம். பிரிவினைவாதம் ரப்பர் பந்தைப்போன்றது. ஒருபக்கம் அழுத்தினால் மறுபக்கம் விரிகிறது, மறுபக்கம் அழுத்தினால் இன்னொரு பக்கத்தால் நீள்கிறது. இப்படி ரப்பர் பந்து உருமாறுகிறதே ஒழிய உள்ளிருக்கும் ரப்பர் என்கின்ற பிரிவினை வலுக்குறையாமல் அப்படியே இருக்கிறது.

sayanthan

நாவலில் சயந்தன் செய்கின்ற அரசியல் மிக எளிமையானது. நாற்பது வருட போராட்டத்தில் எல்லாத்தரப்பு வாதங்களையும் நேர்மையாகச் சொல்ல விழைகிறார். சாதாரண மக்களின் எண்ணங்களூடு சொல்கிறார். ஒவ்வொரு தரப்புக்கும் பாத்திரங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. மலையக மக்களின் ஏதிலி நிலைமையைப் பேசுவதற்குச் சில பாத்திரங்கள். சாதாரண சிங்கள மக்களின் சிந்தனைகளை வெளிப்படுத்த சிலர். புலிகளுக்கு ஆதரவாகச் சில பாத்திரங்கள். எதிர்த்துப்பேச சில பாத்திரங்கள். நடுவுநிலைமைக்குச் சில. இந்தியாவைத் திட்ட சில. வல்லரசுகளைத் திட்ட சில. இப்படியான கதை சொல்லல்களின் நிகர அரசியல் என்பது பூச்சியம்தான். இத்தனை வருட அரசியலின் பின்னர் ஒன்றுமே வேண்டாம், மக்களை நிம்மதியாக வாழவிட்டாலே போதும் என்கின்ற அந்த முடிபுதான் ஆதிரையின் ஆதார அரசியல். அதுவே போராட்டங்களின் ஆரம்பப்புள்ளி என்பது அதிலுள்ள முரண்நகை. நாவல் முழுதும் அரசியல் பேசப்பட்டாலும் ஆதிரையின் உச்சப்புள்ளி அரசியல் அல்ல. இது அரசியல் நாவலும் அல்ல. அரசியல் இந்த நாவலில் ஒரு பதிவு. அவ்வளவே.

நாவலின் அழகியல் அதன் பகைப்புலத்திலும் படிமங்களிலும் உயர்ந்து நிற்கிறது. வன்னி மண்ணும் அதன் புழுதியும் காடுகளும் வயல் நிலங்களும் தென்னந்தோப்புகளும் கடற்கரைகளும் தனித்துவமான போரியல் வாழ்க்கைமுறையும் நாவல் முழுதும் மூன்று தசாப்தங்களுக்கு அவற்றினுடைய பரிணாமங்களுடனேயே விரிந்து கிடக்கிறது. படிமங்களைப் பாத்திரமாக்கி அவற்றினூடு கதை சொல்லும் தமிழ் நாவல்களில் எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி உச்சங்கண்ட ஒன்று. அதில் சிறுவர்கள் தவளைகளோடு பேசுவார்கள். நாவல் முழுதும் வாசிக்கும்போது நமக்கும் முகத்தில் வெயிலடிக்கும். எறும்புகளும் பரதேசிகளும் நாவலை நகர்த்திச் செல்லுவர். நெடுங்குருதியில் மிக இயல்பாகத் திரியும் அந்தப் படிமங்கள் எஸ்.ராவின் பின்னைய நாவலான யாமத்தில் சற்றே வலிந்து திணிக்கப்பட்டதுபோலத் தோன்றும். படிமத்தை எப்படி எங்கே புகுத்தவேண்டும் என்கின்ற உத்தி தெரிந்து எழுதப்பட்ட நாவல் யாமம். வாசிக்கையில் அது வெளிப்படையாகவே தெரியும். ஆதிரையில் படிமங்களின் இயல்பும் திணிப்பும் ஒன்றாகவே வெளிப்படுகிறது. ஆரம்பத்தில் வருகின்ற மூத்திரமாகட்டும். ஈரம் உறிஞ்சிய காடாகட்டும். அறுகோண வெடிப்பில் மென்சவ்வுகளோடு மேற்கிளர்ந்த முட்டையாகட்டும். எல்லாமே சயந்தன் தெரிந்து செய்த அழகியல்கள். சில இடங்களில் பொருந்துகிறது. சில இடங்களில் உறுத்துகிறது. இப்படி அழகியலோடு எழுதினாலேயே அது இலக்கியம் என்ற புத்தியின்பாற்பட்ட எழுத்து அது. ஆனால் நாவலுக்குள் நுழைய நுழைய படிமங்கள் கதை சொல்லிகளாகவே மாற்றம் பெறுகின்றன. அதுநாள் வரைக்கும் புலிகளை ஆதரித்துப் பேசிக்கொண்டிருந்த அத்தார் கடைசிக்கட்டத்தில் அந்தப்புலிகளே மக்களின்மீது வன்முறையை ஏவி விட்டார்கள் என்று அறிகின்ற கணத்தில் அத்தாருடைய காதுகளைத் தடித்த தோல் ஒன்று வளர்ந்து மூடிக்கொள்கிறது. படிமம் நம் இதயத்தைக் கூறுபோடும் இடம் அது. அங்கே படிமம் தானாகவே எழுத்தில் வந்தமர்ந்துகொள்கிறது. நாவலின் இறுதியில் வெள்ளையன் மிதிவெடிகளைப் புதைப்பதாக ஒரு துர்கனவு கண்டு விழித்தெழுவான். கனவைப்போலவே வெளியே துளிக் காற்றும் இல்லை என்று ஒரு வசனம் வரும். வாசிக்கும் நமக்கும் அப்போது மூச்சு முட்டும்.

ஆதிரை அரசியலைச் சொல்லலாம். படிமங்களிலும் அழகியலிலும் ஒரு எட்டுப் பாய்ந்திருக்கலாம். ஈழத்து வாழ்க்கையைப் படம் பிடித்திருக்கலாம். பல தலைமுறை மாந்தர்களை அறிமுகப்படுத்தியிருக்கலாம். கதை சொல்லலில் புதுமை நிகழ்த்தியிருக்கலாம். ஆனால் ஈற்றில் அற்புதமான நாவல்களுக்கான அடையாளம் நம் ஆழ்மனத்தில் அவை ஏற்படுத்தும் சிறு சலனங்களே. ஜெயமோகன் சொல்கின்ற அகவுணர்ச்சியும் அதுவே. அந்தத் தருணம் முள்ளிவாய்க்காலில் அத்தார் தன் மனைவி சந்திராவின் உடலை மடியில் கிடத்தி அழுகின்ற கணத்திலே நிகழ்கின்றது. ஒரு கணம், ஒரே கணம் அத்தாரின் இடத்தில் நம்மை வைத்துப்பார்க்கையில் உடல் குலுங்கி நடுக்கம் எடுக்கிறது. பயத்தில் உள்ளங்கை வியர்க்கிறது. “குடும்பத்தில் யாரும் வேண்டாமென்று என்னை மட்டும் நம்பி வந்தவளடா” என்று அத்தார் அரற்றும்போது இதற்காகவே காத்திருந்ததுபோல அழுகை உடைப்பெடுக்கிறது. இப்படித்தானே ஒவ்வொரு இழப்புக்குப்பின்னாலும் ஒரு சரித்திரம் இருக்கும். அத்தாரையும் சந்திராவையும் அநியாயமாகக் கொன்றுவிட்டோமோ என்று தோன்றுகிறது. மயில்குஞ்சரும் நடராசனும் ஆதிரையும் சாவதற்கு நாமே காரணமாகிவிட்டோமோ? இப்போது உயிரோடு வாழுகின்ற வெள்ளையனையும் ரூபியையுங்கூட நாங்கள் வாழவிடவில்லையோ? துர்நாற்றம் மேலும் கடுமையாகிறது. அது வேறு எங்கிருந்துமில்லை, நம்மிலிருந்தே உருவாகிறதோ என்கின்ற நினைப்பும் கூடவே வந்து சேர்க்கிறது.

இரவுவானின் வடகீழ்த்திசையில் மினுக் மினுக்கென்று ஒளிரும் வேட்டைக்கார நட்சத்திரக்கூட்டத்திலேயே பிரகாசமானது ஆதிரை. அதைப் பார்க்கையிலேயே ஒரு பரவசம் வரும். அதன் ஒளிக்குப்பின்னாலே ஒரு உலகம் இருக்குமோ? அங்கும் நம்மைப்போல மனிதர்கள் இருப்பார்களோ? சின்னதாக நம்பிக்கையும் உருவாவதுண்டு. இனிமேல் அதனைப்பார்க்கும்போது அம்பாறையில் யோன் தமிழரசியாகப் பிறந்து முகமாலை முன்னரணில் எலும்புக்கூடுகளாக மீட்கப்பட்ட ஆதிரையே கண்ணுக்குள் தெரிவாள்.

ஆதிரை. நாம் தொலைத்த வாழ்வின் பட்டயம்.

 

 


ஆறா வடு

நாவல் கிடைக்குமிடங்கள்

தமிழினி கடை
http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%28-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%29

Comments

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .