அனைவருக்கும் வணக்கம்.
சிறுகதைகள்.
சிறுகதைகள் என்றால் என்னவென்று இப்போது ஒரு கேள்வி கேட்டால் இங்கிருந்து நூற்றைம்பது வரைவிலக்கணங்கள் வந்து சேரும். ஐம்பது பேர் உள்ள கூட்டத்தில் நூற்றைம்பது வரைவிலக்கணங்கள் வருகிறதென்றால், ஆளுக்கு மூன்று வரைவிலக்கணம் ரெடியாக வைத்திருக்கிறோம் என்று அர்த்தம். இப்போது இதுதான் சிறுகதை என்று தீர்மானமாக எல்லோரும் கூடி ஒரு அறிக்கை விட்டாலும் நாளைக்கும் இல்லை என்று வேறுவிதமாகத்தான் சிறுகதை எழுதப்படும். ஒருவன் ஒரு கதை எழுத உட்காரும்போது இந்த கட்டுரைகளையெல்லாம் வாசித்துவிட்டும் ஆரம்பிக்கப்போவதில்லை. அதனால் எது சிறுகதை என்கின்ற விவாதத்தினுள் நான் செல்லப்போவதில்லை. டைம் வேஸ்ட்.
என்னளவில் சிறுகதைக்கு ஒரு சில அடிப்படைகளை வரித்துக்கொண்டு பேசலாமென்று நினைக்கிறேன். சும்மா ஒரு பேஸ் லைனுக்கு.
சிறுகதை ஒரு குறிப்பிட்ட ஐடியாவுக்குள், களத்துக்குள் சுழல வேண்டும். கல்பனாவுக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்றால், எனக்கு சிறுகதை ஆஸ்பத்திரி வோர்டில் இடம்பெறவேண்டும். அல்லது வீட்டிலே அம்மாவுடன் ஸ்கைப்பில் கதைக்கையில் அவளுக்கு வலி எடுப்பதாக இருக்கவேண்டும். ஒரு காட்சிக்குள், சில பாத்திரங்களுக்குள் கதை சுற்ற வேண்டும். கல்பனாவுக்கு குழந்தை பிறக்கும் கதையில், அவளும் கணவனும் எப்போது உடலுறவு வைத்துக்கொண்டார்கள், கல்பனாவின் முன்னால் காதலன் ஊரில் என்ன செய்கிறான், நல்லூர் கோயில் சப்பறத்திருவிழா விவரணம் என்று களத்தை விட்டு காட்சி வெளியே போனால், அது சிறுகதை அல்ல. நாவல். ஐந்து பக்கமென்றாலும் நாவல்.
இரண்டாவது அம்சம். முரண்பாடு. பாத்திரங்களின் முரண்பாடு, காட்சிகளில் முரண்பாடு இரண்டில் ஏதாவதொன்று. கல்பனா அம்மாவுடன் ஸ்கைப்பில் பேசிக்கொண்டிருக்கும்போது அவளுக்கு வயிற்றுவலி எடுக்கிறது. சாய்ந்து படுத்துவிடுகிறாள். தாய் அந்தப்பக்கம் ஊரிலிருந்து பதைபதைக்கிறாள். ஸ்கைப்பில் எல்லாம் தெரிந்தாலும் எதுவும் செய்யமுடியவில்லை. ஸ்கைப் மூலம் அருகிலேயே இருக்கிறார்கள். ஆனால் தூர இருக்கிறார்கள். இது முரண்பாடு. காட்சி முரண்பாடு. முரண் நகை என்று சொல்லலாம்.
எனக்கு சிறுகதையில் இது இரண்டும் வேண்டும்.
அடுத்தது புலம்பெயர் சிறுகதை. புலம்பெயர்ந்தவர் எழுதுவது எல்லாமே புலம்பெயர் சிறுகதை ஆகிவிடாது. நான் ஒரு விஞ்ஞான சிறுகதை எழுதுகிறேன் என்றால் அது புலம்பெயர் படைப்பு ஆகிவிடாது. புலம்பெயர் எழுத்தாளர், ஈழத்து எழுத்தாளர், தமிழ்நாட்டு எழுத்தாளர் என்ற அடையாளங்களே அபத்தமானவை. புலம்பெயர் எழுத்து, ஈழத்து எழுத்து என்று வேண்டுமானால் வகைப்பிரிக்கலாம். மற்றும்படி எழுத்தாளர்கள் வெறும் எழுத்தாளர்கள்தான். அவர் வாழும் ஊர் சார்ந்து அவர் இனம் காணப்படுவது வாசிப்பின் கொடூரமான புரிதல்களில் ஒன்று.
இப்போது புலம்பெயர் சிறுகதையை எப்படி அடையாளம் காண்பது?
ஒரு புலம்பெயர் எழுத்தில் இரண்டு அடையாளங்களில் ஒன்றையேனும் எதிர்பார்க்கிறேன்.
ஒன்று நனைவிடை தோய்தல். மேலும் மேலும் உருகி உருகி, உனை எண்ணி, ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் என்று ஒரு காதல் பிரிவு பாட்டு இருக்கு. ஒரு எழுத்து, ஊரை எண்ணி எண்ணி ஏங்கிச் செத்துது என்றால் அது புலம்பெயர் எழுத்து. அந்த கன்றுக்குட்டியை எங்கு காண்பேன்? பனங்கிழங்கு வாசத்தை எப்படி மறப்பேன், காதலித்த காவியா இப்போது என்ன செய்துகொண்டிருப்பாள் என்ற வகையான சிந்தனைக் குவியல்கள். அவற்றுக்கு ஒரு உருவம் கொடுத்து, இரண்டு பாத்திரங்களை செட் பண்ணி எழுதப்படும் சிறுகதைகள். வாழ முடியாத வாழ்க்கையை எழுதுவதன் மூலம் வாழ்ந்து பார்க்கிறார்கள். மற்றவர்களும் வாசிப்பதன்மூலம் இழந்த வாழ்க்கையை அவ்வப்போது மீளப்பெற்றுக்கொள்கிறார்கள். இதன் ஆதாரமான விஷயம் வாழ்ந்த வாழ்க்கையை பதிவதாகவே இருக்கும். இங்கே புலம்பெயர்வு என்பது இடம் மட்டுமல்லாமல் காலப்பெயர்வாகவும் இருக்கும். நனைவிடை தோய்தல் கதைகளை யாழ்ப்பாணத்தில் வாழ்பவரும் எழுதலாம்.
இரண்டாவது அம்சம் புலம்பெயர் வாழ்வு கொடுக்கும் ஆச்சரியங்கள். சமயத்தில் அதிர்ச்சிகள். கலாச்சார அதிர்ச்சிகள், உறவு அதிர்ச்சிகள். சிந்தனை அதிர்ச்சிகள். கப்பலாலோ, விமானத்தாலோ வந்து இறங்கிய கணம்முதல் இந்த அதிர்ச்சிகளை சந்திக்க நேரும். ஆரம்பத்தில் புறத்தே ஏற்படும் அதிர்ச்சிகள், சில வருடங்களில் அகத்தே ஏற்படும். அதிர்ச்சிகள் என்பது முரண்பாடுகளால் ஏற்படுவது. ஒரு நல்ல சிறுகதைக்கு முரண்பாடு அவசியம் என்கின்ற விதிக்கமைய பார்த்தோமானால், புலம்பெயர் வாழ்க்கை முழுதும் நிறைய சிறுகதைகளால் நிரம்பப்பெற்றிருக்கிறது.
அதனால்தான் இந்தப்புத்தகமும் இவ்வளவு மொத்தமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். எண்பத்திரண்டு சிறுகதைகள் இருக்கின்றன. எல்லா சிறுகதைகளையும் வாசித்துவிட்டேன் என்று நான் பொய் சொல்லப்போவதில்லை. தேர்ந்தெடுத்து வாசித்தேன். தலைப்பில் சிறு சலனங்களை ஏற்படுத்தும் சிறுகதைகளை முதலில் தேர்ந்தெடுத்து வாசித்தேன். அப்புறம் ஆஸ்திரேலிய எழுத்தாளர்களின் சிறுகதைகள். நான் வாசித்த எந்த சிறுகதைகளும் நனைவிடை தோய்தல் என்ற வகைக்குள் அடங்கவில்லை. தொகுப்பாளர் அவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டார்போல தெரிகிறது. எல்லா புலம்பெயர் சிறுகதைகளும் புலம்பெயர் நாட்டிலேயே முதன்மையாக நடக்கின்றன. “பனிவிழும் தேசத்தில் வாழ்ந்தாலும் மனமோ இன்னமும் முற்றத்து பனிக்கே ஏங்குகிறது” என்கின்ற புதுவை சொன்ன முக்கிய புலம்பெயர் அகவுணர்வு இச்சிறுகதைகளில் ஆங்காங்கே தொட்டுக்கொள்ளப்பட்டாலும் முழுமையாக இல்லை.
ஒரு சிறுகதை கொடுக்கும் ஆரம்ப அதிர்ச்சிகளையும் தாண்டி மேலும் மேலும் பல அதிர்வுகளை ஏற்படுத்திய சிறுகதை “தாவோவின் கதை”. இதன் கதைசொல்லியை ராஜா என்று வைப்போம். ராஜா பணிபுரியும் தொழிற்சாலையில் வேலை செய்யும் சக தொழிலாளி தாவோ. தாவோவுக்கு ஆங்கிலம் அவ்வளவாக வராது. ஆனாலும் எல்லோரோடும் நட்பாக பழகுவான். ராஜாவும் தாவாவும் நல்ல நண்பர்கள். ஒருமுறை ராஜா தாவோவோடு அவன் வீட்டுக்குச் செல்கிறான். அங்கே அவனின் இள மனைவி இவர்களை உபசரிக்கிறாள். தாவோவின் மகள் அப்போது வீட்டில் இல்லை. சில காலங்களில் தன் மனைவி பிரிந்துபோய்விட்டாள் என்று தாவோ சொல்கிறான். மீண்டும் தாவோவோடு ராஜா அவன் வீட்டுக்குப்போகிறான். அங்கே தாய்போலவே அச்சொட்டாக இருக்கும் மகளை பார்க்கிறான். குழப்பம் வருகிறது. தாயும் மனைவியும் உருவத்தில் ஒத்திருப்பதால் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த தாவோ தவறாக ஏதும் நடந்துவிட்டானோ என்று சந்தேகப்படுகிறான். ராஜாவின் மனைவிக்கு இதனை சொல்ல, அவளோ, தாவோவுக்கு ஆங்கிலம் சரியாக தெரியாது, அவன் சொன்னதை ராஜா சரியாக புரிந்துகொள்ளவில்லை என்கிறாள். இரண்டு கதை சொல்லிகள். இருவருமே போதையில் கதை சொல்கிறார்கள். வாசகருக்கு இதில் எதை நம்புவது, எந்தளவு நம்புவது என்கின்ற குழப்பம் வருகிறது. யோசிக்கையில் நமக்கு எல்லா சீனர்களும் ஒரேமாதிரித்தான் தெரிகிறார்கள். ஆனால் தாவோவுக்கு தன் மகள், மனைவியை அடையாளம் காண்பது கடினமாக இருந்திருக்காது. ஆக கதை சொல்லிதான் கதை தனக்கேற்ற மாதிரி திரித்துவிட்டான் என்று தோன்றுகிறது.
இவ்வளவையும் யோசிக்க வைத்த இந்தக்கதையை எழுதியது தேவகாந்தன். வாசித்தவற்றுள் எனக்கு பிடித்த கதை.
இந்தத்தொகுப்பில பல அனுபவக்கதைகள் இருக்கின்றன. சுய சரிதப் புனைவுகளும் இருக்கின்றன. “கடன்” அப்படிப்பட்டது. கனடாவுக்கு மகன் மகளோடு வந்து குடியேறியிருக்கும் வயோதிபரின் அனுபவக்கதை. போலியான புனைவுகள் சேர்க்காத அனுபவம். எந்தவித ஆர்ப்பாட்டமுமில்லாமல் ஒரு வயோதிப வேகத்தில் செல்லும் கதை கொடுக்கும் அதிர்ச்சிகள் அடிவயிற்றை கலக்குபவை. ஒரு வயோதிபர் தனித்துவிடப்படும்போது அவர் நாள்களை கடத்தப்படும்பாடும் விரக்தி கொடுப்பது. சுப்பர் மார்கட்டிலே எப்போதுமே மிக நீளமாக வரிசையை தேர்ந்தெடுத்து, காலம் கடத்தி வீடு போகும் முதியவரின் அவதானிப்புகள் இக்கதை. பச்சை அட்டைக்கான காத்திருப்போடு, ஒரு குளிர்நாள் இரவிலே, தனியே, மகனின் வீட்டு நில அறையில், சலனமில்லாமல் இறந்துபோகிறார். Haiku Happens. ஹைக்கூ கவிதை நிகழ்வது, நிகழ்த்தப்படுவதில்லை என்பார்கள். முத்துலிங்கத்தின் இச்சிறுகதை வாசிக்கும்போது நிகழ்கிறது. வாசித்து முடித்தபின் அப்பாவின் படுக்கையை போய் செக் பண்ணுகின்ற சலனத்தை வாசகருக்கு ஏற்படுத்தும் சிறுகதை இது.
மாவை நித்தியானந்தனின் சுப்பர் மார்கட், முருகபூபதியின் ஏலம் போன்றவையும் அனுபவக்கதைகளே. ஒரு சுப்பர் மார்கட்டிலே இலாபமான பொருட்களை தேடி வாங்கும் கணவன், யாரோ சொன்னதை நம்பி பிராண்டுகளே சிறந்தது என்று எகிறும் மனைவி, காலப்போக்கில் இந்த மிச்சம் பிடிக்கும் வேலையை செய்யக்கூட நேரமில்லாமல் ஓடும் வாழ்க்கை என்கின்றமாதிரியான ஒரு கதை. கார்களை ஏலம் எடுத்து வாங்குவதை திருமணத்துக்கு பெண் எடுப்பதோடு ஒப்பிடும் கதை முருகபூபதியோடது. இரண்டுமே நல்ல சிறுகதைகளை எழுதக்கூடிய கருவைக்கொண்டவை.
Engineering a story என்று ஒரு விஷயத்தை இங்கே பேச விரும்புகிறேன்.
ஒரு கதையை ஒரு இயந்திரப்பொறிபோல உருவாக்குவது. இது இப்படி இயங்க இங்கே இந்த பார்ட்ஸ் போடுவோம். இங்கே உராய்வு இருக்கிறது. ஒயில் வேண்டும். இவ்வளவு ஆர்.பி.எம் என்றால் எவ்வளவு வலு கிடைக்கும்? எவ்வளவு வெப்பம் வெளியேறும் என்றெல்லாம் யோசித்து இயந்திரத்தை வடிவமைப்பதுபோல எழுதுவதுதான் engineering a story. ஒரு தேர்ந்த எஞ்சினியர் எதிர்பார்க்கும் வேலையை செய்யக்கூடிய இயந்திரத்தை வடிவமைப்பதுபோல ஒரு தேர்ந்த Writing Engineer எதிர்பார்க்கும் வாசிப்பை கொடுக்கும் கதை எழுதும் ஆற்றல் கொண்டவர். கதை மேலோட்டமாக வாசிக்கும்போது நன்றாக இருக்கும். எழுத்தாளர் சொல்ல வருகின்ற கருத்தை கடத்தி நிற்கும். ஆனால் Engineering is not an art. கலை என்பது சிற்பம் செதுக்குவதுபோல. கல்லுக்குள்ளே என்ன இருக்கென்று கல்லுக்கும் தெரியாது. சிற்பிக்கும் தெரியாது. ஒரு ஐடியாவை வைத்துக்கொண்டு செதுக்கத்தொடங்குவது. ஒரு உருவத்தை வெளிக்கொண்டுவருவது. பின்னர் அதை நேர்த்தியாக்குவது. முதலே இப்படித்தான் சிற்பம் செதுக்கப்போகிறேன், கல்லில் இரண்டு இஞ்சி இறக்கி, ஒரு இஞ்சி ஆழமாக அடித்தால் அங்கே நெற்றி வரும், பின்னே நான்காம் இலக்க உளியைக்கொண்டு சின்ன தட்டு தட்டினால் வாய் வெடிக்கும் என்ற மாதிரி ஒரு நல்ல சிற்பியால் சிற்பம் வடிக்க முடியாது. அப்படி வடிக்கப்படும் சிற்பத்திலும் பல சமயம் ஜீவன் தவறிவிடும். Storing telling is an art, not an engineering.
“தலைமுறை தாண்டிய காயங்கள்” என்று ஆசி. கந்தராஜா எழுதிய ஒரு சிறுகதை. ஆர்மேனிய இனத்தவர் பிரச்சனை, ஆர்மேனியர்கள் எப்படி இனப்பற்றோடு இன்னமும் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள், ஆனால் நம்மவர்கள் அடையாளத்தை தொலைத்துவிட்டு வாழ்கிறார்கள் என்ற செய்தியை சொல்ல எழுதப்பட்ட கதைதான் “தலை முறை தாண்டிய காயங்கள்”. வாசித்துமுடித்தவுடன், "ஓ, அப்பிடியா, ஒகே தாங்க்ஸ்" என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் சிறுகதை. அவ்வளவுதான்.
இந்த நாட்டில் வாழ்ந்தாலும் சொந்தநாடடை மறக்காமல் வாழுகின்ற நூஜ்ஜனின் கதையை விவரிக்கும் சுதாகரின் “கற்றுக்கொள்வதற்கு” கூட ஒருவித பிரச்சார சிறுகதைதான். தாய்லாந்தில் சந்திக்கின்ற விலைமாதுவின் வாழ்க்கைப்பின்னணியை ஈழத்து நிலையோடு இணைக்கும் ஷோபாசக்தியின் சிறுகதையும் கொஞ்சம் அப்பிடித்தான். எஸ்.பொவின் "அடியு" சிறுகதைகூட கொஞ்சம் யோசித்தால் இந்தவகைதான். ஆலகால விஷமா, அமிர்தமா என்கின்ற யோகா பாலச்சந்திரனின் கதைகூட இப்படித்தான். இப்போது சிறுகதையில் பிரசாரம் கூடாதா என்றால் இல்லை. பிரசாரம் செய்யலாம். ஆனால் சமயத்தில் பிரசார நோக்கத்தை மையப்படுத்தி அந்த கதை பயணிக்கும்பொது சிறுகதையின் அனுபவம் தவறிவிடுகிறது. ஒரு எஞ்சினியர் வடிவமைத்த மெசின்போல. நோக்கத்தை நிறைவேற்றும். ஆனால் மெஷின் உயிருள்ள மனுஷன் ஆகமுடியாது.
நானும் ஒகஸ்டினாவும் பந்தயக்குதிரையும் என்று சக்கரவர்த்தி எழுதிய சிறுகதை, அதன் பெயருக்காகவே தேர்ந்தெடுத்து வாசித்தேன். குதிரை லாயத்தில் பணிபுரிபவனின் காதல் கதை. அங்கு கணவனிடம் சிறைப்பட்டிருக்கும் ஓகஸ்டினா, புராதன பிரிதிவிராஜன் கதையில் வரும் சம்யுக்தை. குதிரை வைட் லக்கி. பிரிதிவிராஜன் கதைசொல்லி. நல்லொதொரு வாசிப்பனுபவத்தை கொடுக்கும் இலகுவில் அனுமானிக்ககூடிய சம்பவங்களைக்கொண்ட கதையிது. கி. செ துரையின் இன்டர்நெட் சாமியும் ரிப்லெக்டர் சாமியும் என்று கதை ஒரு தூக்குப்போட்டு தோற்று நாறும் மனிதரைப்பற்றியது. கிருஷ்ணமூர்த்தியின் சாப்பாடு ஒரு எளிமையான சிறுகதை. எல்லோருக்கும் நன்றாக சமைத்துப்போடும், சமையலில் ஆர்வமுள்ள, தினம் மாஸ்டர் செப் பார்க்கும் குடும்பத்தலைவனால், அவன் விரும்பிச்சுவைக்கும் உணவை உண்ணமுடியவில்லை என்கின்ற மெல்லிய முரண்நகையை சொல்லும் சிறுகதை.
ஓய்வுநாள் என்கின்ற யாழ் பாஸ்கரின் சிறுகதை, விடுமுறை சனிக்கிழமை ஒன்றில் பாச்சிலர்ஸ் வீட்டில் நடக்கும் விசயங்களை சொல்லும் சிறுகதை. அதில் சாந்தன் சொல்லும் ஒரு வாக்கியம் எனக்கு முதலில் விளங்கவில்லை.
"வெள்ளைக்காரங்களிண்ட ஊத்தையளை எல்லாம் ஸ்டையில் எண்டு நினைச்சு கொப்பி அடிப்பினம். மத்த விஷயங்களில மூதேசிகள் பாத்தில போட்ட பனங்கொட்டைகள்"
அதென்ன "பாத்தில போட்ட பனங்கொட்டைகள்"? விளங்காமல் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டேன். பாத்தியில் போட்ட பனங்கொட்டைக்குள் ஒன்றுமே இருக்காதாம். பூரான் பிடிச்சு, பனங்கிழங்கு வளர்ந்தபின் அவை ஊமல் கோட்டைகள் ஆகிவிடும். அதுபோலத்தான் இவர்களும் என்று விளக்கம் சொன்னார்கள்.
ஈழத்துப்புலம்பெயர் இலக்கியம் என்று ஞானம் தொகுத்த இந்த நூல் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி எனலாம். சில நல்ல சிறுகதைகள், ஏராளமான அயர்ச்சிதரும் சிறுகதைகளுக்கு மத்தியில் கிடைக்கின்றன. பல சிறுகதைகள் பாத்தியிலே போட்ட பனங்கொட்டை ரகம். சமயத்தில் நல்ல கதைகளும் நாலு கதைகள் தொடர்ச்சியாக கொடுத்த டார்ச்சரில் காணாமல் போய்விடுகின்றன.
தொகுப்பு முக்கியம். ஆனால் தொகுக்கும்போது எதை தொகுக்கிறோம் என்பது இன்னமும் முக்கியம். இதைத்தான் ஈழத்து புலம்பெயர் இலக்கியம் என்று இந்தியர்களும் எதிர்கால தலைமுறையும் வாசிக்கப்போகிறது என்று நினைக்கையில் பீதி வருகிறது. கிடைத்த கதைகளை எல்லாம் பதிப்பித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. எஸ்.பொவும்,ஷோபாசக்தியும், ஆ.சி. கந்தராஜாவும் இதைவிட சிறந்த சிறுகதைகள் ஏராளம் எழுதியிருக்கிறார்கள். பல நல்ல புலம்பெயர் சிறுகதைகள் இந்த தொகுப்பில் இடம்பெறவில்லை.
தொகுப்பு என்னும்போது நாங்கள் இன்னமும் சங்க இலக்கிய தொகை நூல்களிலிருந்து பாடம் படிக்கவேண்டியிருக்கிறது. குறுந்தொகையின் ஒவ்வொரு பாடலும் அகவுணர்வில் ஒரு எழுச்சியையே ஏற்படுத்தும். அகநானூறு என்றால் அங்கே அகத்திணைக்கே இடமுண்டு. தலைவன், தலைவி, பரத்தை, செவிலித்தாய், தோழி, பாங்கன் என்று அகத்திணை பாத்திரங்கள்தான் அங்கே. வேறு பெயர்களே இருக்காது. மிகக்கறாராக தொகைப்படுத்தப்பட்ட பாடல்கள் அவை. எல்லாமே அற்புதமான கவிதைகள். அதற்காக சங்ககாலத்தில் மோசமான கவிதைகள் எழுதப்படவில்லையா என்றால், இல்லை, நிச்சயம் எழுதப்பட்டிருக்கும். ஆனால் தொகை நூல்களை தொகுத்தவர் அவற்றை எல்லாம் தூக்கிப்போட்டிருப்பார். அதனால்தான் பல நூற்றாண்டு கழிந்தும் எங்களுக்கு சங்க இலக்கியம் கனமாக தெரிகிறது.
தூக்கும்போது மிகக்கனமாக இருக்கும் “ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்” வாசிப்பின்போது அதனைக்கொடுத்திருந்தால் எதிர்காலத்தில் ஒருசிறந்த தொகை நூலாக அமைந்திருக்கும்.
நன்றி!
அருமை..
ReplyDelete