Skip to main content

நிலவு காயும் முற்றமே என் வீடு

 

1 

நிலவு வேகமாய் எங்கோ
நகர்ந்து கொண்டிருந்தது.
திமிங்கிலத்திடமிருந்து
திமிறியோடும்
சிறுமீன்போல,
முகில்களுக்குள் ஒளிந்து ஒளிந்து
நிலவும் விரைந்து கொண்டிருந்தது.

“நீயும் தொலைந்து விட்டாயா?”

ஒரு சிறுவனின் குரல்.

“எம்மோடு கூட வருகிறாயா?”

நிலவு குனிந்து பார்த்தது.

சமுத்திரக்காட்டினுள்
திக்குத்தெரியாமல்
தரித்து நின்றது ஒருபடகு.
பாதை தேடிய பயணம் ஒன்று
ஆழிநடுவே தத்தளித்தது.
முந்நூறு அகதிகள்.
மூவாயிரம் கனவுகள்.
நிறைமாதக் கர்ப்பிணியாய்
பரிதவித்தது படகு.
பல்லின தேசங்கள் பல
பத்தடிப் படகினுள்ளே
சத்தமின்றி முடங்கிக்கிடந்தன.
விடுதலைப் போராட்டங்கள்
கடுங்குளிர் தாளாமல்
விறைத்துக் கிடந்தன.

வறுமை துரத்திய வறுமை.
மனிதம் துரத்திய மனிதம்.
அதிகாரம் துப்பிய உயிர்கள்.
கூதல்காற்று தாளாமல்
போர்த்துக்கிடந்தன.

மண் நிராகரித்த மனிதர்களை
வாரிவிழுங்கி ஏப்பமிட
கோரப்பசியுடன்
கடல் காத்திருந்தது.

“எம்மோடு கூட வருகிறாயா?”

நிலவு தயங்கியது.

"அப்துல்லா.மதுமதி.
அலான், நுவேன்.
எல்லோரும் சேர்ந்து
விளையாடலாம்.
என் வீட்டுக்கு வருகிறாயா?"

நிலவு யோசித்தது.

"உன் வீடு எது?"
"இப்படகுதான்"
"நேற்று?"
"அது வேறு படகு"
"அதற்கு முதல்?"
"அகதி முகாம்"
"அதற்கும் முதல்?"
"இன்னொரு அகதிமுகாம்"
"நீ பிறந்தது எங்கே?"
"அதுவும் அகதிமுகாம்"

"நித்தம் ஒரு முகாமென
நிர்க்கதியாய் அலைகிறாயே?
வீடற்ற உன்னிடத்தில்
நான் எப்படி வருவது?”

நிலவது கேட்டது.

"இல்லையே.
என்றைக்கும் என் வீடு ஒன்றுதான்.
என் அன்னை சொல்லியுள்ளாள்.
நிலவு காயும் முற்றமே என் வீடு.
சமயத்தில் அது கொட்டிலாகும்.
குண்டு வெடித்தால் தட்டியாகும்.
திறந்தவெளி பதுங்குகுழி
பயந்தொதுங்கும் பற்றைக்காடு
பனி பொழிந்தால் தரப்பாள் போர்வை
பாலைவனத்துப் பாய் விரிப்பு.
நடுக்காட்டின் மரவுச்சி.
சமுத்திரத்தில் சிறுபடகு.
எங்கெலாம் போனாலும்
என் வீட்டு முற்றத்தில்
எப்போதும் நிலவிருக்கும்.
என்றைக்கும் என் வீடு ஒன்றுதான்.

நிலவு காயும் முற்றமே என் வீடு.
எம்மோடு வருவியா?”

ஆயுள் முழுதும் நிர்வாணியாய்
ஆளே அற்ற தனிமரமாய்
பொட்டவெளி வானத்தில்
வெட்டிக்கழித்தது போதும் இனி.
இறங்கிவந்த நிலவு
சிறுவனுக்கு அருகே
நெருங்கி விழுந்தது.

முகில்கள் பொழியும் மழை.
மழையும் உறையும் குளிர்.
குளிரில் நடுங்கியது நிலவு.
நிலவை அணைத்தனன் சிறுவன்.
குழந்தையின் வெதுவெதுப்பில்
முழுநிலவு
மூன்றாம்பிறையெனக் குறண்டிக்கொண்டது.

கரையறியா கடல்பயணம்.
காத்திருப்பில் நாழிகையும்
நாட்கணக்கில் நீண்டுபோனது.
ஆழ்கடலில் அற்புதம் நிகழ்த்தவரும்
மீட்பருக்கான காத்திருப்பு அது.

விண்ணிலிருந்து ஒரு அசரீரி.
இன்னுமொரு அவதாரம்.
இரவலாக ஒரு ரொட்டித்துண்டு.
கானல்நீராய் ஒரு கரையேனும்
காணக்கிடைக்காதா?

ஆழ்கடலில் அற்புதம் நிகழ்த்தவரும்
மீட்பருக்கான காத்திருப்பு அது.

அதிசயமாய்
சென்றவர்கள் வந்தார்கள்.
”வந்தவழியே திரும்பிச் செல்லு” - என
சொல்லிவிட்டு மறைந்தார்கள்.
வெட்டவெளி கடல்தனிலே
வந்தவழி ஏது?
சென்றவழி ஏது?”

திகைத்தது நிலவு.

"விடிவென்பதே இல்லையா நமக்கு?"

"நிலவுக்கு ஏது விடிவு?
விதித்தது இதுவே எமக்கு.
என்னோடு நீயிருந்தால்
இல்லை ஏதும் இல்லை எனக்கு.
நிலவு காயும் முற்றமே என்வீடு.

வெண்ணிலவும் சிறுவனோடு
நிர்மலமாய் தூங்கிப்போனது.

Alyan-Kurdiகரைகள் வெறுத்தாலும்
அலைகள் விடுவதில்லை.
அலைகள் எதிர்த்தாலும் – கரைசேரும்
கனவுகள் கலைவதில்லை.

கிழக்கு வெளித்தது.
மேற்கின் கரையில்
நிலவோடு ஒதுங்கியது
சிறுவனது சடலம்.

அப்போதும் எதிரொலித்துக்கொண்டிருந்தது
அவன் குரல்.

நிலவு காயும் முற்றமே என் வீடு.

 


இலங்கை – இந்தியா – பாக்கிஸ்தான் – பங்களாதேஷ் – நேபாளம் – பூட்டான் – மாலைதீவு – ஆப்கானிஸ்தான் முதலான எட்டு நாடுகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் SAPAC (South Asian Public Affairs) என்னும் தென்னாசிய விவகாரங்களுக்கான அமைப்பு நடத்திய அனைத்துமொழிக் கவிதை வாசிப்பில் சமர்ப்பிக்கப்பட்ட கவிதையில்  தமிழ் வடிவம்.

கவிதையின்  ஆங்கில வடிவம்.

Home Sweet Home.

படங்கள் (For Fair Use for non commerical Purpose)
Murat Sayin
Steve Dennis

Comments

  1. படித்தேன்...உணர்வுகளில் ழூழ்கிபோனேன்...😔

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்

                                          நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார். “பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”