Skip to main content

சதைகள்

 

sathaikal

“அழகியல் சார்ந்தும் அதன் அமைப்பு வடிவம் சார்ந்தும் நவீனத் தமிழ் இலக்கியப் பிரதிகளின் நீட்சியாகவே அனோஜன் பாலகிருஷ்ணனின் பிரதிகளைப் பார்க்கமுடிகிறது”

என்ற பதிப்பாளர் குறிப்போடு ஆரம்பிக்கிறது “சதைகள்” சிறுகதைத்தொகுப்பு. மொத்தமாகப் பத்து சிறுகதைகள். அநேகமானவை சமூகக்கதைகள். சிலது பாலியலைப் பற்றிச் சொல்லுகின்றன. சில நம் சமூகத்தின் உள்ளீடாக புரையோடிப்போயிருக்கும் சாதியச்சிக்கல்களைப் பேசுகின்றன. சிலது புலம்பெயர்ந்தவர் வருகையினை எதிர்கொள்ளும் உள்ளூர்க்காரர்களின் உணர்வுகளைப்பேசுகிறது. சிலது காதல். சிலது முன்னைய காதல். ஆங்காங்கே இயல்பான அரசியல். இப்படிப் பத்துக்கதைகளும் சுற்றுகின்றன.

“வேறையாக்கள்” சாதாரண பதின்ம வயதுக்காதலையும் அதற்குத் தடையாக வரும் சாதியத்தையும் சொல்லுகிறது. “அசங்க” சிறுகதையில் பாலியல் என்கின்ற ஆழ்மனது இச்சை படிமமாகிறது. “சதைகள்” சிறுகதை ஒரு பாலியல் தொழிலாளியை நாடும் திருமணமான ஆணினுடைய எண்ண ஓட்டங்களையும் குற்ற உணர்ச்சிகளையும் சொல்லுகிறது. “பேஸ்புக் காதலி” முன்னாள் காதலி பற்றியது. “அண்ணா” மற்றும் “சித்தப்பா பமிலி” வெளிநாட்டு உறவுகள் பற்றியது. கூடவே அரசியலும் எட்டிப்பார்க்கிறது. “ஆராதனா” புதுமணத்தம்பதிகளிடையே உள்ள புரிதல் சம்பந்தமானது. “இதம்” இன்னொரு ஈர்ப்பு சார்ந்த கதை. இவற்றுக்கு மத்தியில் திடீரென்று “சிவப்பு மழை” விஞ்ஞானச் சிறுகதை அமைப்புக்குள் வந்து விழுகிறது. “ஜூட்” ஒரு ஒழுங்கையில் வருபவர் போகிறவர்களைத் துரத்தும் “அவிட்டு விட்ட” நாயை மையமாக வைத்த கதை.

எனக்கு வாசிக்கும்போது உடனடியாகவே பிடித்துப்போன கதை ஜூட். கதை எந்த உறுத்தல்களும் இல்லாமல் ஆரம்பம் முதல் முடிவுவரை இயல்பாக நகருகிறது. ஜூட் என்ற ஒரு நாயை மையமாகவைத்து பலவிடயங்கள் நடக்கின்றன. சண்டை போட்டு உருளுகிறார்கள். ஆண்டுகள் கழிந்து எல்லோருமே எங்கோ ஒரு நாட்டில் ஒரு பல்பொருள் அங்காடியில் தற்செயலாக சந்திக்கிறார்கள். எந்த ஜூட்டுக்காக சண்டை போட்டார்களோ அது இறந்துவிட்டது. சண்டை பிடித்தவர்களும் நாலா திசையில் பிரிந்துவிட்டார்கள். அந்த ஜூட் வெறும் நாயல்ல என்று நாம் சிந்திக்கின்ற தளத்தில் சிறுகதை வேறு தளத்துக்கு விரிகிறது. “அசங்க” சிறுகதையிலும் அந்தப்படிமத்தைக் காணலாம். இம்முறை நாய் பூனையாகிறது. நிமினியின் பூனையை வாசிக்கும்போது எனக்கு “அசோகனின் வைத்தியசாலை”யில் வரும் கொலிங்க்வூட் என்கின்ற பூனையே ஞாபகம் வந்தது. தொகுப்பிலே எனக்குப்பிடித்த இன்னொரு சிறுகதை “சித்தப்பா பமிலி”. அச்சிறுகதையின் முடிவு சொல்லும் முரண்நகையே சிறுகதை வரைவிலக்கணங்களின் ஆதாரம்.

அனோஜனுக்கு நன்றாகக் கதை சொல்ல வருகிறது. அத்தனை கதைகளையுமே ஒரு புகையிரதப்பயணத்தில் வாசித்துமுடித்தேன். அநேகமான கதைகளின் கதைசொல்லி ஒருவித இன்றோவேர்ட்தனமாக எல்லாவற்றையும் அவதானிக்கிறான். அவனுடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் சின்னதாக ஒரு குற்றவுணர்ச்சி. ஒரு தாழ்வு மனப்பான்மை தெரிகிறது. அந்த சிந்தனையோட்டம் மொத்த வாசிப்பு மனநிலையிலும் தொற்றுகிறது. அந்த மனநிலையே முற்றிலும் வேறுபட்ட “சிவப்பு மழை” என்ற கதையின் வாசிப்பினை கொஞ்சம் பாதிக்கவும் செய்கிறது.

தொகுப்பினுடைய கதைக் கருக்களான பாலியலாகட்டும், சாதியமாகட்டும், பொதுவெளியில் அவை மறைபொருட்கள் என்றாலும் இலக்கிய உலகுக்கு இவை புதியவை அல்ல. எஸ்.பொ, டானியல் முதற்கொண்டு இன்றுவரை எல்லா இலக்கியவாதிகளாலும் இவை பிரித்து மேயப்பட்டுவிட்டன. இவற்றை எழுதினாற்றான் இலக்கியவாதிகளாக ஏற்றுக்கொள்வார்களோ என்கின்ற அளவுக்கு அவற்றுக்கு இலக்கிய உலகில் கிடைக்கும் அந்தஸ்தும் மிக அதிகம்.  அதனால் இனியும் இக்கூறுகள் மேலும் மேயப்படும். இதுகாலும் எழுதப்பட்டவையிலிருந்து விலகி புதிதாக எதையாவது அனோஜன் சொல்கிறார் என்றெனக்குத் தோன்றவில்லை. சொல்லும்முறையும் புதிதாகத் தெரியவில்லை. மொழியும் புதிதில்லை.

அப்படியானால் “சதைகள்” தொகுப்பின் இடம் எது? சதைகளின் கதைகள் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் வேறு நகரங்களிலும் இடம்பெறுகின்றன. தமிழர்களோடு சிங்களவர்களும் பாத்திரமாகிறார்கள். புலம்பெயர்ந்தவர்களும் வருகிறார்கள். இந்தப்பரம்பலே சதைகளின் தனித்துவம் என்று நான் கருதுகிறேன். போருக்குப்பின்னரான உள்நாட்டுத் தமிழ்ச்சமூகம் எதிர்கொள்ளும் மனிதர்களும் நிலங்களும் முன்னைய தலைமுறையிலிருந்து சற்றே வேறுபடுகின்றன. மனநிலைகளும் யுத்தம், இனத்துவேசம், பயம் போன்ற எண்ணங்களிலிருந்து விலகி  நிற்கின்றன. இது ஏற்கனவே ஓரளவுக்கு மலையக இலக்கியங்களில் முன்னர் தென்பட்டிருந்தாலும் ஒரு புதிய தலைமுறையின் பார்வை என்றளவில் “சதைகள்” முக்கியத்துவம் பெறுகிறது. இனிவரும் புதியதலைமுறை இலக்கியங்கள் இந்தப்பார்வையை உறுதி செய்யவோ நிராகரிக்கவோ முனையலாம். காத்திருப்போம்.

பல நிலத்தவரைக்கொண்ட கதைகளை எழுதுவதில் உள்ள பெரும் சிக்கல் வட்டார மொழி வழக்கு.  யாழ்ப்பாணத்தமிழும் நீர்கொழும்புத் தமிழும் கொட்டஹேனாத்தமிழும் வேறு வேறானவை. அவற்றை வேறுபிரித்துச் சொல்லுவது என்பது எப்போதுமே சவாலான விடயம். சதைகளில் பாத்திரங்களின் மொழிவழக்கு அலை பாய்கிறது. ஒரே பாத்திரமே ஒரே வார்த்தையை அடுத்தடுத்த பந்திகளில் இந்தியத் தமிழிலும் யாழ்ப்பாணத்தமிழிலும் பேசுகிறது. அனோஜன் உரை நடையிலும் தனக்கான மொழிவழக்கைத் தீர்மானிக்கவேண்டியது அவசியம். அது இந்தியத்தமிழோ, கொழும்புத்தமிழோ, மட்டக்களப்புத்தமிழோ, யாழ்ப்பாணத்தமிழோ, அல்லது எழுத்துத்தமிழோ, எதுவாகவும் இருக்கட்டும். ஆனால் அத்தமிழில் consistency அவசியம். சொல்லும்பொருளுக்கு நிகரான முக்கியத்துவம் மொழியாடலுக்கும் உள்ளது. “ஆதிரை”யில் மிகக்கவனமாக சயந்தன் இதனைக் கையாண்டிருப்பார். வன்னியில் வாழும் மலையக வம்சாவளித்தமிழரின் மொழி தலைமுறைகளுக்குப்பின்னரும் அதிகம் மாறாதிருப்பதை ஆதிரையின் பாத்திரங்கள் தெளிவாகச் சொல்லிநிற்கும். அது தற்செயல் அல்ல. அதீதமான உழைப்பின் விளைவு அது. அனோஜன் கவனிக்க.

சதைகள் வாசிப்பில் உறுத்துகிற இன்னொரு விடயம் சிறுகதைகளின் முடிபுகள். மிக இயல்பாக நகரும் பல சிறுகதைகள் முடிவில் ஏதாவது ஒரு அறத்தைச் சொல்லுவதற்காகத் தடுமாறுகின்றன. “அசங்க” சிறுகதையில் நிமினியின் மரணம் ஒட்டவில்லை. “வேறையாக்கள்” சிறுகதையில் மகிழினியின் மாற்றுத்திறனுள்ள குழந்தை என்பது அறத்தைச் சொல்கிறேன் பேர்வழி என்று அனோஜன் செய்த சத்திர சிகிச்சை. இப்படிப்பல இடங்கள். அறம் தேவையில்லை என்றில்லை. அறமோ, முரணோ, எதுவென்றாலும் இயல்பாக அமைதல் அவசியம். “சித்தப்பா பமிலி”யில் அது நிகழ்கிறது.

அனோஜன் இறுக்கமான விமர்சனப்பார்வைகளை அவ்வப்போது முகநூலில் முன்வைப்பதை அவதானித்திருக்கிறேன். “தட்டையான” என்ற வார்த்தை அவருக்குப்பிடித்தமான ஒன்று. பல சிறுகதைகளிலும் “தட்டை” வருகிறது. மனைவியின் மார்புகூடத் “தட்டையானது” என்றே விளிக்கப்படுகிறது. கறாரான விமர்சனப்பார்வைகள் வாசிப்பைச் செம்மைப்படுத்துமா என்பது பற்றி எனக்கு எப்போதுமே குழப்பம் இருக்கிறது. வாசிப்பை நிராகரிப்பு மனநிலை இல்லாமல் கொண்டாட்டத்தோடு அணுகவேண்டும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டவன். அதுவும் எழுத்தாளராக இருக்கும்பட்சத்தில் இறுக்கமான விமர்சனப்பார்வைகள் படைப்புவெளியைச் சிதைத்துவிடும். எழுதும்போது விமர்சனப்பார்வையும் கூடவே வந்தால், நிமினியின் பூனை வரிக்கு வரி கூடவே மடியிலிருந்து கத்திக்கொண்டிருந்தால் எழுத்து நகராது. அதனாலேயே தேர்ந்த விமர்சகர்களான கைலாசபதியோ சிவத்தம்பியோ படைப்புத்தளத்தில் அவ்வளவாக உச்சங்களைத் தொடவில்லை என்பது என் அபிப்பிராயம். தற்கால எழுத்தாளர்களான ஜெயமோகனோ, எஸ்.ராவோ முதலில் சிறந்த படைப்பாளிகள். அவர்களின் விமர்சனப்பார்வைகள் பின்னாள்களில் வெளிவந்தவையே. சொல்லவேண்டும்போலத் தோன்றியது. அவ்வளவே.

புறக்கோட்டையில் அந்த ஒல்லியான இளைஞன் சொன்னதையே நானும் சொல்கிறேன். சிறிய மாற்றத்துடன்.

“கோடாக் தியனவா, ஓய செலட்கரணப் புளுவன்!”

***********


பிற்குறிப்பு.
கோடாக் தியனவா, ஓய செலட்கரணப் புளுவன்! => நிறைய இருக்கின்றது. நீங்கள் தெரிவு செய்யமுடியும்.

சதைகள் தொகுப்பை மெல்பேர்னில் வாங்கவிரும்புபவர்கள் jkpadalai@gmail.com என்ற ஈமெயிலில் தொடர்புகொள்ளலாம். www.annogenonline.com தளத்திலும் இதனைப் பெற்றுக்கொள்ளலாம்.

Comments

  1. அனோஜனின் சிறுகதைகள் எனது பார்வைக்கும் வந்தன. நான் என்ன நினைத்தேனோ அதை நீங்கள் சொல்லியிருக்கின்றீர்கள். ஆனால் நான் அவருக்கு சொல்லவில்லை. காரணம் அவர் இளைய வயதினர். கடுமையான விமர்சனங்களை வைக்கும் பொழுது அவர் உளவியில் சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டிவரும். எந்தப்பெரிய கொம்பனாக இருந்தாலும் இந்த உளவியல் சிக்கல்களில் இருந்து தப்ப முடியாது . அதனால் அவரது எழுத்தாற்றல் குறையக்கூடிய வாய்புகள் உண்டு. என்னை பொறுத்தவரையில் படைப்பாளியானவன் இறுக்கமான விமர்சனக் கண்ணோட்டத்துடனும் போதகர் நிலையில் இருந்தும் படைப்பை உருவாக்குவதற்கு நான் எதிரானவன்.மாறாக எழுத்து என்பது அதன் இயல்பிலேயே இருக்கவேண்டும் என நம்புகின்றவன். உங்கள் பார்வைக்கு பாராட்டுக்கள் படலை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .