நான் ஒரு பாட்டு வெறியன் என்று சொல்லுவதே under statement. ஒரு பாட்டின் இஞ்சி இடுக்கு, சின்னச்சின்னச் சங்கதிகள், இசைக்கோர்வைகள் என்று வரிசையாக, ஒரு பாடலைக் கேட்காமல் வெறுமனே நினைத்துக்கொண்டே ரசிக்கக்கூடியவன். "பொத்திவச்ச மல்லிகை மொட்டு" என்று யோசித்தாலே போதும். ஆரம்ப வயலின்களிலிருந்து கீபோர்ட், புல்லாங்குழல், தபேலா, நாதஸ்வரம், தவில், எஸ்பிபி, ஜானகி, முன்னே நோட்டுகளுடன் இளையராஜா என்று மூளைக்குள்ளேயே கச்சேரி நிகழ்ந்து முடியும். ஒன்பது மணிநேர வேலையில் குறைந்தது அறுபது எழுபது பாடல்களேனும் தினம் கேட்பேன். இசை கேட்டுக்கொண்டிருந்தால் புரோகிராமிங் தானாக இயங்கும். இது எனக்குக்கிடைத்த வரம்.