Skip to main content

தமிழ் ஆங்கிலேயர்கள்

எனக்கு நீண்டகாலமாகவே ஒரு பிரச்சனை இருந்துவருகிறது. நான் ஓரளவுக்கு ஆங்கிலத்தைச் சரளமாகத் தொடர்பாடல் செய்யக்கூடியவன். ஆங்கிலத்தை முதன்மை மொழியாகக்கொண்டுள்ளவர்களோடு ஒரு உரையாடலையோ அல்லது பிரசெண்டேஷனையோ செய்வது அவ்வளவு சிக்கல் கிடையாது. 

ஆனால் யாரேனும் தமிழ் தெரிந்தவர் என்னோடு ஆங்கிலத்தில் உரையாடத்தொடங்கினால் என்னுடைய ஆங்கிலம் திக்கித்திணற ஆரம்பித்துவிடுகிறது. எதிரிலே பேசுபவருக்கு நன்றாகத் தமிழ் தெரியும் என்று அறிகின்ற பட்சத்தில் குஷ்புவைகண்ட அண்ணாமலை ரஜனிக்காந்த்மாதிரி "பே பே" என்று திணற ஆரம்பித்துவிடுகிறேன். இது ஏன் என்று தெரியவில்லை.

பாடசாலை நாட்களில் மகாலிங்கம் சேர் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் பதில் தெரிந்தாலும் பேசாமல் இருப்போம். எங்கேயாவது பிழையாகக்கதைத்துவிட்டால் முழு வகுப்புமே நோண்டியாக்கும் என்ற நினைப்பே மிரட்டிக்கொண்டிருக்கும். தட்டுத்தடுமாறி சரியாகத்தான் யோசித்திருக்கிறோம், கை எழுப்புவோம் என்று முடிவெடுக்கும் சமயத்தில் இன்னொரு நாதாறி எழுந்து தப்புத்தப்பாகப் பதில் சொல்ல மொத்த வகுப்போடு நானும் சிரித்துவிட்டு அமைதியாக இருந்துவிடுவேன். ஆங்கில வகுப்பில் ஆங்கிலத்தில் மாத்திரமே என்று பேசவேண்டும் என்று ரூல் போட்டால் பாத்ரூம் போகவேண்டும் என்றாலும் காற்சட்டை நனைஞ்சாலும் பரவாயில்லை என்று வகுப்பு பெல் அடிக்கும்வரையும் காத்திருப்போம். 

ஆங்கிலத்தை இலக்கணச்சுத்தமாகப் பேசவேண்டும் என்ற மனநிலை. அதை ஒரு தொடர்பாடல் ஊடகமாகக் கருதாது பாடமாக, சமூக அந்தஸ்தாக உருமாற்றியதன் விளைவே யாழ்ப்பாணத்தில் இருக்கும்வரையிலும் நன்றாக எழுத வாசிக்கத்தெரிந்தாலும் பேச்சறிவு என்பது அதிகம் படிக்காத ஹவுஸ் ஒப் பாஷன் செக்கியுரிட்டியின் பேச்சுத்திறமையைவிட மோசமாக இருந்தது. பிற்காலத்தில் பிறமொழிக்காரருடன் வாயைத்திறந்தேயாகவேண்டிய நிலையில்தான் ஆங்கிலப்பேச்சு வசத்துக்குள் வந்தது. 

ஆனால் இன்றைக்கும் யாரேனும் தமிழ் தெரிந்தவர்கள் ஆங்கிலத்தில் உரையாடினால் எனக்கு மகாலிங்கம் சேரின் வகுப்பே ஞாபகம் வந்து தொலைக்கிறது. அவுஸ்திரேலியாவில் பொலீஸ்காரரைக் கண்டால் ஸ்ரீலங்கா பொலிஸ் ஞாபகத்தில் தலை தன்னிச்சையாக பயத்தில் குனிவதுபோலத்தான் இதுவும். அதுவும் நான் படித்தது சென்ஜோன்ஸ் கல்லூரியாததால் மெல்பேர்னில நிறைய யாழ்ப்பாணத்து அந்தக்கால பழைய மாணவர்களைச் சந்திக்க நேருகிறது. "ஹாய் ஐ ஆம் சோ அண்ட் சோ" என்று அவர்கள் ஆரம்பிக்க, சபை குழப்பக்கூடாது என்று "ஹாய் , ஜேகே , நைஸ் டு மீட் யு" என்பேன். பேச்சு ஆங்கிலத்திலேயே தொடர எனக்கு ஆர்மிச் சென்றியில் ஐஸியை மறந்துபோய் நிற்கின்ற நிலை. ஒவ்வொரு வார்த்தையையும் வசனத்தையும் சரியாக உச்சரிக்கிறோமோ என்கின்ற பிரக்ஞை வந்துவிடும். தவறாகப் பேசினால் இவர் என்னை மட்டமாக நினைப்பார் என்ற எண்ணம் எட்டிப்பார்க்கும். தமிழ் அல்லாதவர்களோடு இந்தப்பிரச்சனை வருவதில்லை. அவர்கள் மொழியை ஊடகமாகப் பயன்படுத்துவதால் நான் என்ன சொல்லவருகிறேன் என்பதையே கவனிப்பார்கள். நான் சரியாகப் பேசுகிறேனா இல்லையா என்பதைப்பற்றி கணக்கே எடுக்கமாட்டார்கள். இதனாலேயோ என்னவோ நமக்கும் மொழி சரளமாக வாயுள் நுழைந்துவிடும்.

முன்னரும் ஒருமுறை சொன்னதுதான்.பார்ட்டிகளில் தெரியாத்தனமாக யாரேனும் தமிழ் ஆங்கிலேய ஆர்மிக்காரனுக்கு ஐஸி காட்டிக்கொண்டு நிற்கையில் அந்தநேரம் பார்த்து ஒரு அவ்ரோ வரும். "ஹி இஸ் எ பேமஸ் ரைட்டர்" என்று ஒரு பீக்குண்டைப்போட்டுவிட்டு அதுபாட்டுக்கு எஸ்கேப்பாகிவிடும். அப்புறம் நம் நிலைமை நாற்றமெடுக்கும்.
"Oh that's great. What do you write?"
"Errrr.... pretty much anything."
"Oh, where do you write? Have you published any?"
"Just in my website. Padalay."
"Oh Padalay, Tamil word .. So you just write in Tamil. Is Padalay a fence or a gate?"
"Neither, its just a bloody website!"
அவருக்கு ஜோக் விளங்காது. ரம்பத்தைத் தொடருவார்.
"Is that folk Jeyakanthan still writing? He was good in our time. His Ponniyin Selvan was excellent. What is he writing these days?"
"He is writing a novel called Ven Murasu .. you know, a white drum!"
"Sounds like Donald Trump!"
தான் அடித்த மொக்கை ஜோக்குக்கு, வாழ்க்கையில் முதன்முதலாக பிழையில்லாமல் கம்மாஸ் அடித்ததுபோல அவர் பெருமையாகச் சிரிக்க நான் சாம் ஏவுகணையுடன் அந்த கோர்த்துவிட்ட அவ்ரோவை கூட்டத்தினுள் தேடஆரம்பிப்பேன்.

Comments

  1. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  2. என் அப்பா ஆங்கிலத்தில் படித்து பிறகு அதிலேயே படிப்பித்து, பிறகு தமிழ் மொழியில் படிப்பித்தவர். இது அம்மா சொல்லித்தான் தெரியும். என்றாலும் எனக்குத் ஞாபகம் இருப்பது இதுதான். இங்கிலீஸுப் பாட்டிகள் மாட்டிய ஓரு சம்பவம், நான் அரைக்காற்சட்டைப் பெடியன்.

    "Sathiyamoorthy, how are you?"
    "'ஹி ஹி நல்லா இருக்கிறன்'

    'It looks like it is going to rain, no?"
    "ஒம், நல்ல இருட்டாக் கிடக்கு..'

    'OK, why are you here?' (இது அச்சுவேலிச் சந்தையில் நடக்கிறது)
    "ஓருக்கா ரவுண் போவமெண்டு...'

    மனிசன் மறந்தும் இங்கிலிசைத் தொடாது..

    அப்பா இறந்தது 1986 இல். இப்பவும் சிலவேளைகளில் இங்கிலிஸ் பார்ட்டிகளிடம் மாட்டுப்பட்டால் மனதுக்குள் கத்துவேன் 'அப்பா காப்பாத்து!'.

    ReplyDelete
  3. இப்படியான சில சந்தர்ப்பங்களை நான் யுனிவர்சிட்டி காலத்தில் எதிர்கொண்டிருக்கிறேன். நீங்களும் எதிர்கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...