Skip to main content

ஏகன் அநேகன்

 

image

விடியக்காலமை மூன்று மணி.

அது ஒரு தனி உலகம். படிப்பதற்கு என்று எலார்ம் வைத்து எழுந்து, தூங்கித் தூங்கிக் கொல்லைக்குப் போய், தூங்கித் தூங்கி முகம் கழுவி, அம்மா தரும் தேத்தண்ணிக்கு வெயிட் பண்ணி, புத்தகம் கொப்பி திறக்கவே நான்கு மணியாகிவிடும். அந்த அதிகாலை அமைதியில் ஒரு மலர்ச்சி கிடைக்கும். நடுங்கும் குளிர். வீட்டு செல்லநாய் கூட குரண்டிக்கொண்டு சாக்குத் துணிக்குள் அயர்ந்து தூங்கும் நேரம். மொத்த ஊருமே தூங்கும்போது நாம் மட்டும் விழித்திருக்கிறோம் என்ற எண்ணமே அலாதியானது. வெளியே மழை சொட்டினால் அனுபவம் மேலும் இரட்டிப்பாகும்.

விழித்திருப்பவனின் இரவு அது.

பெட்ஷீட்டை போர்த்தியபடி முன் ஹோல் கதிரையில் ப்ளேன்டீயும் கையுமாய் வந்தமர்கிறேன். வரவேற்பறைக் கதிரையின் குறுக்கே அகலமான கட்டில் பலகை ஒன்றை வைத்து பிசிக்ஸ் பாஸ்பேப்பர்ஸ் புத்தகத்தைத் திறக்கிறேன். ஒரு போர்முக்கு வரவேண்டுமென்று ஏற்கனவே செய்துமுடித்த எம்ஸிகியூ பேப்பரை செய்தால் அறுபது கேள்விக்கு ஐம்பத்தெட்டு சரிவருகிறது!

இனியொரு ஐந்து நிமிடம் ரெஸ்ட். பக்கத்தில் மொனோ ரேடியோ ஒன்று. கூடவே ஒரு கார் பட்டறி. ஒன்றிரண்டு வயர்கள். இணைத்துவிட்டு, யாரையும் எழுப்பாதவாறு மெல்லிய ஓசையில் கசட்டை போடுகிறேன். அதிகாலை நான்கு மணி. வெளியே மழை. காதுக்குள் கூசும் குளிர். மிருதுவாக தழுவுகிறது இசை. தயார்படுத்திக்கொள்ளுங்கள்.

“நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே”

“தேனினை தீண்டாத பூ இல்லையே”

இப்போது ஜானகி கவுண்டர் பொயிண்டில் ‘லலலா’” என்று பாட, ராஜா குரல் மீண்டும்.

“நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே”

ஜானகி ‘என்னை உனக்கென்று கொடுத்தேன்’ என்று கீழே பாட ராஜா தொடருகிறார்.

“தேனினை தீண்டாத பூ இல்லையே”

ஜானகி ‘ஏங்கும் இளம் காதல் மயில் நான்’

“தேன்துளி பூவாயில்” ... “லலலா” ... “பூவிழி மான் சாயல்”

கண்மூடி கேட்டுக்கொண்டிருக்க குளிர் இன்னமும் அதிகமாகும். போர்வையை இறுக்கிப்போர்த்தியபடி சாய்ந்தேன்.

“நாளும் பிரியாமல் காலம் தெரியாமல்

கலையெலாம் பழகுவோம் அனுதினம்”

கண்கள் கூர்மையாகி வாய் அனிச்சையாகச் சிரிக்க பல்லவி ஆரம்பிக்கும். ராஜாவின் ஈர்ப்புக்குரலில்.

“பூ மாலையே தோள் சேரவா”

இளையராஜா.

இவரைப்பற்றி நான் என்ன எழுதிவிடப்போகிறேன்? என்னதான் எழுதமுடியும்? முடிவிலி இலக்கத்தை ஒன்று இரண்டு மூன்று என்று எண்ணிக்கொண்டே இருந்தால் எட்டிவிட இயலுமா? இவரின் இசையும் அத்தகையது. எங்க ஊரு மாப்பிள்ள திரைப்படத்தில் வரும் ‘வானத்தில வெள்ளிரதம்’ என்ற பாடல். ஒரு உயிர்கொல்லி. ‘நெடுநாள் உள்ள சொந்தமோ நிலையாய் வநத பந்தமோ’ என்று சித்ரா பாடும்போது மனம் கேட்டு மாளாது.

இது ராஜாவைப் பற்றிய கட்டுரை அல்ல. ராஜா எனக்கு யார் என்கின்ற ஒரு பகிர்வு. அதுவும் என் பதின்மவயது ஞாபகங்களில் இருக்கும் ராஜா. அந்த வயதில் வருமே ஒரு காதல் அதை பின்னால் இருந்து இயக்கிய ராஜா. அந்த அனுபவங்களைத் தொகுக்கும் ஒரு மியூசிகல் டிராமா. என் வயோதிப நாட்களில் காதுகளில் ராஜா இசையை கேட்டுக்கொண்டு படிப்பதற்கு நானே எழுதும் டயரி. இங்கே பகிரப்படும் பாடல்கள் எழுதும்போது மனதில் உதித்த ராஜாவின் பாடல்கள் மட்டுமே. இதையே நாளை எழுதினால் இந்த வரிசை மாறலாம். வாசிக்கும் உங்களுக்கும் ராஜா ஞாபகம் வரும், வயிற்றைப் பிசையும். அந்த வலியை அனுபவியுங்கள். ராஜா பாடல் கேட்பதுபோலவே அவர் பாடல்கள் பற்றி வாசிப்பதும் பேசுவதும் தனி சுகமே.
   

பத்து வயது. யாழ் இந்து ஆரம்பப்பாடசாலை மேல்மாடியில் ஆண்டிறுதி வகுப்பு நடக்கிறது. குழந்தைவேல் மாஸ்டர் ‘குமரன் வந்து பாடு’ என்கிறார். குரல் நடுங்குகிறது. கால்கள் எல்லாம் உதறல் எடுக்கின்றன. தட்டுத்தடுமாறி பாடினேன்.

“நாள் தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன். காவல்கள் எனக்கில்லையே.”

“சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும். சிரிக்காத நாள் இல்லையே.”

அந்த இடத்தில் எஸ்பிபிபோலவே நானும் சிரித்து சொதப்ப, குழந்தைவேல் மாஸ்டர், ‘போதுமடா போய் இரு’ என்றார். ஆனால் அன்றைக்குத் தொடங்கியது. இந்த இருபத்தைந்து வருடங்களாக என்வீட்டு குளியலறையில் நானே ராஜா. நானே எஸ்பிபி. நானே ஜேசுதாஸ்.

‘இஞ்சி இடுப்பழகா’.

யசோ அக்கா எனக்கு அறிமுகப்படுத்திய பாடல். ‘வெறும் காத்துதான் வருது’ என்று ஜானகி பாடுவதை பாடியும் காட்டுவார். அந்த வருஷம்தான் ரோஜா திரைப்படம் வெளிவந்தது. அது ஒரு புயல். அப்போது ரகுமானை பலரால் இலகுவில் அங்கீகரிக்கமுடியவில்லை. அதற்கு காரணம் ரகுமான் மீதான வெறுப்பு கிடையாது. நம்ம ராஜாக்கு மேலாக எவனாவது வரமுடியுமா? என்ற தலைப்பிள்ளை பாசம். ராஜா அப்படி ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருந்தார். தளபதி திரைப்படத்திற்கு அப்புறம் ராஜாவும் மணிரத்னமும் பிரிந்தபோது மணிரத்னம் படமே இனி பார்க்கமாட்டேன் என்று மணிரத்னத்தை வெறுத்தவர்கள் கூட இருந்தார்கள்.

மச்சாள் ஒருவரின் திருமணம். இரண்டு வாரமாக மாமி வீட்டில் டேரா. அங்கே கொஞ்ச அண்ணன்மார் சேர்ந்து பாடுவார்கள். குசினியில் இருந்த சரவச்சட்டிகளை மேசையில் கவிழ்த்து அடுக்கி வைத்து டிக் டிடிக் டிக்… டிடிடிடிக்டிக் ... ‘ராஜா ராஜாதிராஜனிந்த ராஜா’ என்று மியூசிக் போடுவோம். மேல் சுருதியில் ஆர்வக்கோளாறில் ஸ்டார்ட் பண்ணி ‘விழியில் தெரியும் அழகு. எதுவும் இனிமேல் நமது. விடியும்வரையில் கொண்டாட்டம்தான்’ என்ற இடம் வரும்போது மூக்கு பிய்ந்து விடும்.

நிலவும் மலரும் செடியும் கொடியும்

கடலும் நதியும் கவிதை சொல்லும்

ராஜா.

வயதுக்கு வந்த பருவம்.

அவள் டியூஷனுக்கு சைக்கிளில்தான் போவாள். பெயர்; மேகலா என்று வைப்போம். கொஞ்சமே குண்டுப்பெண். லேடீஸ் சைக்கிளில் போகும்போது பாவாடை காற்றில் பொங்காமல் இருக்க ஒரு கையால் அடக்கிக்கொண்டே மற்ற கையால் ஹாண்டில் பிடித்து பக்கத்தில் நண்பியுடன் சிரித்து சிரித்து பேசிக்கொண்டு போவாள். நான் ஒரு பத்து மீட்டர் பின்னால் போவேன். என் சைக்கிளின் ஒரு பக்கத்து பெடல் கழன்று போய் மிதிக்கும்போது கிறீச் கிறீச் என்று சத்தம் போடும். என் சைக்கிளின் ரிங்டோன் அது. கண்டுபிடித்துவிடுவாள். பின்னாலே நான் வருகிறேன் என்றால் அவள் குரல் பெரிதாகும். கைகள் அடிக்கடி தலைமுடியை கோதிவிடும். சத்தமாக நண்பியுடன் பேசுவாள். சொல்லாத பகிடிக்குக்கூட பெரிதாகச் சிரிப்பாள். வீதியில் திரும்பும்போது ‘கை’ சிக்னல் காட்டிக்கொண்டே பின்னாலே சடக்கென்று பார்ப்பாள். எனக்கு அதுபோதும்.

“தென்றல் தேரில் நான்தான்

போகும் நேரம் பார்த்து

தேவர் கூட்டம் பூ தூவி

பாடும் நல்ல வாழ்த்து”

என் லுமாலா தேர். பக்கத்தில் பெட்டி மீன்காரனின் பீம் பீம் ஹோர்ன். பல்கலைக்கழகத்து லைட் போஸ்டில் கட்டியிருந்த ஸ்பீக்கரில் அழுதுகொண்டிருந்த ‘சோககீதம்’. ஆனாலும் அவள் நண்பியோடு பேசுவது எனக்கு ராஜா பாட்டாகவே கேட்டது.

“கண்கள் மூடி நான் தூங்க

திங்கள் வந்து தாலாட்டும்

காலை நேரம் ஆனாலே

கங்கை வந்து நீராட்டும்”

அவள் எசப்பாட்டு பாடியிருப்பாள்.

“நினைத்தால் இதுபோல் ஆகாததேது”
“அணைத்தால் உனைத்தான் ஏங்காது பூமாது”
“நெடுநாள் திருத்தோள் எங்குமே கொஞ்ச”

அன்பே நீயே, அழகின் அமுதே என்று கைகள் இரண்டையில் விரித்தபடி ஹாண்டிலை பிடிக்காமல் சைக்கிள் ஓடும் சுகம் இருக்கிறதே.

செம்பருத்தி; ரோஜா வெளிவந்த அதே ஆண்டில் வெளியான படம். ராஜா மகாராஜாவான படங்களில் அதுவும் ஒன்று. அந்தப்படத்தில் ‘பட்டுப்பூவே மெட்டுப்பாடு’ ‘செம்பருத்திப் பூவு’ என்று பல சிக்ஸர்கள். ஆனால் ஒரு சிக்ஸர் ஸ்டேடியம் தாண்டிப்போய் விழுந்தது. அதுதான்

“நிலாக்காயும் நேரம்”

அது தொண்ணூறு நான்காம் ஆண்டு என்று நினைக்கறேன். ராஜா இந்த நேரங்களில் கொஞ்சம் அண்டர் பிரஷர். ராஜகுமாரன், செந்தமிழ்பாட்டு, சின்னத்தம்பி எல்லாம் வந்து ஒரு கலக்கு கலக்கியது என்றாலும் ராஜா தன் பாணியை விட்டு வெளியே வருவதில்லை என்று ஒரு விமர்சனம் அப்போது இருந்தது. ஏன் அவர் வரவேண்டும்? என்று எவரும் திருப்பிக்கேட்டதாய் ஞாபகம் இல்லை. ரகுமானின் ஜென்டில்மேன், திருடா திருடா, கிழக்குச் சீமையிலே பாடல்கள் அடுத்தடுத்து சக்கைப்போடு போடவும் ராஜா எப்போது தன்னுடைய அதிரடி அட்டாக்கை செய்யப்போகிறார் என்று ஒவ்வொரு திரைப்படமாக எதிர்பார்த்திருப்போம். ‘எந்தன் நெஞ்சில் நீங்காத’ என்று கலைஞன் வந்தது. சிங்காரவேலன், என் ராசாவின் மனசிலே, மகாநதி, பொன்னுமணி என்று வரிசையாய் படங்கள் வந்தனவ. ஆனாலும் அந்த அதிசயம் நிகழவேயில்லை போன்ற உணர்வு. நாமெல்லாம் ரகுமானுக்கு தலைவர் ரகுமான் பாணியிலேயே கவுண்டர் கொடுக்கவேண்டும் என்று அந்த வயதில் அபத்தமாக எதிர்பார்த்தோம்.

அந்த நாளும் வந்தது.

கலாபாணி. ஆரம்பத்தில் சும்மா ட்ரைலர்போல வெளிவந்து தமிழில் ‘சிறைச்சாலை’ ஆனது. ப்ரியதர்ஷன் இயக்கம். ராஜா ரீரெகார்டிங் மற்றும் கம்போசிஷனில் அதகளம் பண்ணியிருப்பார். அதிலும் அந்த ‘செம்பூவே’ பாடல். பிரதி ஞாயிறுதோறும் ஒலிபரப்பாகும் ஆல் இந்திய ரேடியோ விவிதபாரதி ஒனிடா டீவி நிகழ்ச்சியில் இந்தப் பாடல் இரண்டு நிமிடம் போடுவார்கள். இரண்டே நிமிடம்தான். அதற்காகவே ரேடியோ முன்னால் தவம் கிடந்து கேட்பேன். அப்புறம் ‘ஆலோலங்கிழி தோப்பிலே’ பாடல். ‘வீணை புது வீணை, சுதி சேர்த்தவன் நானே. நாம் காதலின் கீதங்களில் வானம் வளைப்பேனே’ என்ற மெட்டை கேட்கும்போது என்னவோ செய்யும். ‘சுற்றும் சுடர்விழி’ என இன்னொரு பாடல். நிச்சயமாக சிறைச்சாலை ஒரு ராஜாவின் கம்-பாக் அல்பம்.

அடுத்த சில மாதங்களில் இன்னொரு சிக்ஸ் விழுகிறது.

எஜமான், மன்னன், உழைப்பாளி என ரஜனி படங்களுக்கு ராஜா தொடர்ந்து இசையமைத்துக்கொண்டிருந்தாலும் அந்த ‘அட’ மிஸ் ஆகிக்கொண்டே இருந்தது. அன்னக்கிளியில் இருந்து சிந்து பைரவி, மௌனராகம், தளபதிவரை ராஜா ஆண்டுக்கு மினிமம் ஐந்தாறேனும் சர்ப்பரைஸ் பக்கேஜூகள் கொடுப்பார். தேவர் மகன் மற்றும் செம்பருத்திக்கு பிறகு அது கொஞ்சம் மிஸ் ஆனது. என்னடா இது என்று எண்ணிக்கொண்டிருக்கையில்தான் வட்டியும் முதலுமாய் ரஜனியின் ஒரு படம் வெளிவருகிறது. இசை ராஜா.

image

படம் வீரா.

படத்தில் ‘கொஞ்சி கொஞ்சி’ பாடல் அமோக ஹிட். ‘மலைக்கோயில் வாசலிலே’ பாடலில் ராஜாவின் ‘வா வா மஞ்சள் மலரே’ ஸ்டைல் ஹார்மொனிக் ஸ்டீரியோ ரெகார்டிங். ‘மாடத்திலே கன்னி மாடத்திலே’ பாட்டில் அய்யராத்து எஸ்பிபி மிரட்டல். கொஞ்சி கொஞ்சி பாடல் ஒருநாளைக்கு குறைந்தது ஐந்து தடைவையாவது இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும். ‘காலைப்பனியில் ரோஜா, புது கவிதை பாடி ஆட, இயற்கையின் அதிசயம்’ என்றுவிட்டு ‘சக ரிம கப மத பநி தச நிரி நிநி’ என்று அநாயசமாக எஸ்பிபி பாடுவார். அப்போது ‘வீரா’ பாடல்கள் ரகுமானின் ‘டூயட்’டுடன் கடும் போட்டி போட்டன. ‘பவர் தரும் ஒளிச்சுடர்’ என்று இலங்கை வானொலியில் நடராஜசிவமும் இராஜேஸ்வரி சண்முகமும் இணைந்து வழங்கிய நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக ‘கொஞ்சி கொஞ்சி’ முதலிடத்திலும் ‘அஞ்சலி அஞ்சலி’ இரண்டாம் இடத்திலும் இருந்தன. அப்புறம் அதை வெல்ல ‘ஊர்வசி ஊர்வசி’ வரவேண்டியிருந்தது. அதற்குபிறகு அந்த நிகழ்ச்சியில் மெலடி பாடல்கள் முன்னுக்கு வரவில்லை என்பது சோகமான சங்கதி.

சின்னத்தம்பி படம். இந்தப்படத்து பாடல்களை யாழ்ப்பாணத்து கடவுள்களிடமும் கேட்டுப்பாருங்கள். ‘போவோமா ஊர்கோலத்தை’ நாதஸ்வரத்தில் பாடிக்காட்டுவார்கள். யாழ்ப்பாணத்துக் கோயில்களில் நாதஸ்வரக் கச்சேரி என்றால் அதில் ‘போவோமா ஊர்கோலம்’ பாட்டை வாசித்தே கொல்லுவார்கள். எங்கள் வீட்டுக்கு அண்மையில் சிவனுக்கும் அம்மனுக்குமாக இரண்டு கோயில்கள் பக்கம் பக்கமாக இருக்கும். கோயில்களுக்கு நடுவே ரோட்டுப் போகும். சிவனும் அம்மனும் அந்த ரோட்டால் ‘போவோமா ஊர்கோலம்’ பாடிக்கொண்டு உலாத்துவதாக கற்பனை செய்திருக்கிறேன். அந்தக்காலத்தில் அக்காமாரின் சாமத்தியவீட்டு வீடியோ காஸட் போட்டுப்பார்த்தால் ‘அரைச்ச சந்தனம், மணக்கும் குங்குமம்’ பாட்டு இருந்தே தீரும்.
   
வயது பதினாறு. வன்னி வாழ்க்கை. அந்த வயல் வெளி, டிரக்டர்கள், இரணைமடுக் குளக்கட்டு, மாடுகள், பட்டிகள், கிறவல் வீதிகள், அந்த ஊர்ப் பெண்கள், பின் தொடரும் என் சைக்கிள், கூடவே இளையராஜா இசை.

அது சுசீலா, எஸ்பிபி பாடிய சின்னக்கவுண்டர் படத்து ‘முத்து மணி மாலை’ பாடல் வெளியான டைம்.

வன்னியில் விதைப்பு நேரம். அந்தச் சமயத்தில் எங்கள் வயதினருக்கு ஒரு வேலை இருந்தது. அதிகாலை ஐந்து மணிக்கு எழுப்பி விடுவார்கள். சுத்தமான பசுப்பாலில் டீ. குடித்தவுடன் பனிக்காக தலைக்கு துவாயை சுற்றிக்கட்டிக்கொண்டு கறுப்பிக்குளத்து வயல் காணிகளுக்குப் போகவேண்டும். ஐந்தரை மணியளவில் மெதுவாக சூரியன் உதிக்கும்போது ஆயிரக்கணக்கில் கிளிப்பிள்ளைமார் விதைப்பு நெல்லை பதம் பார்க்கவென வருவினம். சாரை சாரையாக திருவிழாவுக்கு சேலை கட்டிவரும் பெண்கள் கூட்டம்போல அள்ளு கொள்ளையாக வந்து வயலில் இறங்கி விதை நெல்லை பிடுங்கித் தின்னுவினம். நாங்கள் சாரத்தை விசுக்கிக்கொண்டு ‘கூ’ என்று கத்தியபடி ஓடுவோம். உடனே அதுகள் கூட்டமாக அப்படியே எம்பி இன்னொரு பாத்திக்குள் நுழையும், அங்கே இருந்து மேகலா கத்திக்கொண்டு ஓடிவருவாள். நான்காம் வாய்க்காலில் இன்னொருத்தன், ரமேஷ் என்று வையுங்களேன். ஓடி வருவான்.

ஒருநாள் வெறும் ‘கூ’ வுக்குப் பதிலாக ஏதாவது சினிமாப்பாட்டு பாடலாம் என்று ஐடியா கொடுக்கிறேன்.

அவள் ஆரம்பிக்கிறாள்.

“கொலுசுதான் மெளனமாகுமா

மனசுதான் பேசுமா?”

அவளால் ஓடிக்கொண்டே பாட முடியாது. மூச்சு இரைக்க இரைக்க விட்டு விட்டுப் பாடுவாள். அதுவே தனி அழகு.

“மேகந்தான் நெலவ மூடுமா

மவுசுதான் கொறயுமா?”

எனக்கும் மூச்சிரைக்கும். அந்த பாலாய்ப்போன எஸ்பிபி சிரிப்பில் கொஞ்சம் நஞ்சம் இருந்த மவுசும் குறையும்.

“நேசப்பட்டு வந்த பாசக்குடிக்கு

காசிப்பட்டு தந்த ராசாவே”

அவள் பாடும்போது கிளிகள் ஏன் நாள் முழுக்க வயலுக்கு வந்து நெல்லு சாப்பிடக்கூடாது? என்று ஏங்குவேன். இது, இந்தக்கணம் ஏன் அப்படியே உறையக்கூடாது?

“வாக்கப்பட்டு வந்த வாசமலரே

வண்ணம் கலையாத ரோசாவே”

அவளின் தலையில் கட்டியிருந்த துவாய் நழுவி விழுந்தது. அந்தப் பனியிலும் முத்துமணி மாலையாய் முகத்தில் வியர்வைத் துளிகள். கிளிகள் விதை நெற்களை பதம் பார்க்க ஆரம்பித்துவிட்டன. இப்போது அவள் முறை. பாடவேண்டும். கொஞ்சம் தயங்கினாள். எங்கேயோ பார்த்தாள். வரிகளை மறந்து விட்டாளா? இல்லை இப்போது ஞாபகம் வந்துவிட்டது. ஆனால் அவள் பார்வையோ என்மேல் இல்லை. எங்கே?

“தாழம்பூவுல வீசும் காத்துல

வாசம் தேடி மாமா வா...”

சின்னதாய் சிரித்துக்கொண்டே அவள் பார்வை பதிந்த திசை நோக்கி திரும்பினேன். அங்கே ‘கூ’ என்று கத்தியபடி கிளிகளை துரத்திக்கொண்டிருந்தான் ரமேஷ்…அவளின் மாமா.

இளையராஜா வயலின் அழ ஆரம்பிக்கிறது.

நான் உயர்தரப் பரீட்சை எடுத்துவிட்டு கொஞ்சக்காலாமாய் கணிதம் படிப்பித்துக்கொண்டு திரிந்த சமயம். முதல் மாச டியூஷன் பீஸில் யாருக்குமே ட்ரீட் வாங்கிக் கொடுக்கவில்லை. ஆறு பாட்டு கசட்டுகள் வாங்கி ராஜா ரகுமான் என விதம் விதமான பாடல்களை ரெகோர்ட் பண்ணினேன். முதல் கசட்டில் அடித்த பாடல் ராஜகுமாரன் படத்து ‘சித்தகத்திப் பூக்களே’. ஏனோ தெரியாது. இந்தப்பாட்டில் அப்படி ஒரு அலாதிப் பிரியம். தூத்துக்குடி வானொலி நிலையத்தில் இந்தப்பாட்டு அடிக்கடி ஒலிபரப்பாவதுண்டு. ‘பூந்தேரில் ஏறி ஏழேழு லோகம் ஊர்கோலமாக நாமும் போவோமா’ என்று எஸ்பிபி பாடும் அழகே தனி. ஒருமுறை இலங்கை வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் நிகழ்ச்சியில் ‘அது என்ன சித்தகத்தி பூ?’ என்று கேட்கவே ஒரு நேயர் சித்தகத்தி பூவையே மடித்து தபாலில் அனுப்பியிருந்தார்.

தொண்ணூற்றேழாம் ஆண்டு. மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிவிட்டோம். ராஜா பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக வேறு தளத்துக்குப் போய்க்கொண்டிருந்த காலம். ஒருவித ஸ்டீரியோடைப் தாள நடைக்கும் இசைக்கும் ராஜா போய்விட்டாரோ என்று நாமெல்லாம் எண்ணத்தலைப்பட்ட காலம். அப்போது பாசில் படமான ‘காதலுக்கு மரியாதை’ வெளிவருகிறது. பாசில் ராஜா கூட்டணி எப்போதுமே சொதப்புவதில்லை. இந்த படமும் அப்படித்தான். ஹரிகரன் முதன்முதலில் ராஜாவுக்கு பாடிய படம். ‘தாலாட்ட வருவாளா’ பாடலை மேடையில் பாடாத எவனும் அந்தக் காலத்தில் இருந்திருக்கமுடியாது. அந்தப்பாட்டைக் கேட்டாலே முன்னுக்கு நிற்கும் எந்தப் பெட்டையும் எங்களுக்கு ஷாலினியாகவே தெரிவாள்.

‘ஹவ் டு நேம் இட்’ என்று ஒரு அல்பம். கூடவே ‘நத்திங் பட் விண்ட்’ என்று இன்னொரு அல்பம். இரண்டு இசையையும் கேட்டால் அது எம் அருகில் வந்து தலை தடவி உச்சி மோர்ந்து முத்தமிடும். நீண்ட காலமாக அந்த ஹவ் டு நேம் இட் வயலின் இசைதான் என் ரிங் டோன். அலுவலக மீட்டிங்குகளில் செல்போனை மறந்துபோய் மியூட் பண்ணாமல் போகும் சமயங்களில் எவனாவது கோல் பண்ணிவிட்டால் அந்த வயலின் உச்சஸ்தாயியில் எல்லோர் முன்னிலையிலும் அழும். அதைப் புதினமாக அனைவரும் கேட்பார்கள். அவர்கள் எக்ஸ்பிரஷனை பார்க்கையில் ஒரு பெருமை வரும்.

அதே அல்பத்தில் ‘I met Bach at my house’ என்று ஒரு இசைக் கோர்வை இருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு இசை. காதலி தலை கோதும் உணர்வைத்தரும். அது பாஷ். பின்னர் அப்படியே வயலின் அரேஞ்ச்மென்ட் தியாகராஜருக்குத் தாவும். மிருதங்கம் சேரும். அது தலை கோதும் காதலியை இழுத்து அணைத்து கொடுக்கும் முத்தத்துக்குச் சமானம். இறுதியில் இரண்டுமே ஒரு புள்ளியில் இணையும். பாஷ் தியாரகராஜர் இருவரும் மாறி மாறி. மாறி மாறி முத்தம் கொடுக்க அது ஒரு காதல் கலந்த தெய்வீக நிலை. தெய்வங்கள் தமக்குள்ளே முத்தங்கள் கொடுக்கும் நிலை. ஒரு கட்டத்திலே இசைக்கலவை உச்சத்துக்குப் போய் இரண்டுமே பிணைந்துகொள்ளும். அது நிஷாதம். கூடல். அது முடிய ஒரு அமைதி ஒலிக்கும் பாருங்கள். சொக்கித்துப்போய் நிற்பீர்கள்.

இளையராஜாவால் மாத்திரமே இது சாத்தியமாகும்.

திருமணத்துக்கு வருபவர்களுக்கு ‘How to name it?’ சிடி கொடுப்போமா என்று மனைவியிடம் கேட்டேன். இரண்டு நாட்கள் ‘I met Bach at my house’ இசையை கேட்டுவிட்டுச் சொன்னாள். ‘வேண்டாமப்பா, இதற்கான தகுதி எமக்கில்லை. இந்த இசையைத் தேடிப்போய் ரசிக்கவேண்டும். எல்லோராலும் முடியாது’ என்றாள். அதன்பின்னரேயே புத்தகங்கள் கொடுப்பதாக முடிவானது.

 

திருவாசகம்.

வெளிவந்த முதல் நாளே கஜன் சிடி வாங்கிக்கொண்டு வந்து வீட்டில் போட்டான். கேட்டுப்பார்த்தோம். பிடிபடவில்லை. திரும்பியும் கேட்டுப்பார்த்தோம். ம்ஹூம். சுஜாதா ‘கற்றதும் பெற்றதும்’ பத்தியில் தனியறையில் இருந்து திருவாசகத்தை ஐபொடில் கேட்கச்சொன்னார். கேட்டோம். அது புரியவில்லை. எனக்கு திருவாசகம் சிவன் கோயிலில் யாராவது பூசைக்குப்பின் பாடும்போது கேட்டுத்தான் பழக்கம். அல்லது வெள்ளிக்கிழமையானால் ஆரம்பப் பாடசாலையில் காலை வெயிலில் கால் கடுக்க நின்று, ‘நமச்சிவாய வாழ்க’ மேடையில் நாலு பேர் பாடும்போது ரிப்பீட் பண்ணியே பழக்கம். ஓரடேறியோவில் கோத்தும்பி அலைவது புரியவில்லை. புரியாது என்று விட்டுவிட்டேன். ஆனால் அது புரியும் நாளும் வந்தது.

‘கடவுள்’ பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். ஏதாவது தெய்வீக இசையை கேட்டுக்கொண்டே எழுதினால் நன்றாக இருக்குமே என்று நினைக்க மனைவி தந்த திருவாசக சிடி ஞாபகம் வந்தது. அதை மெதுவான இசையில் தவழவிட்டு எழுத ஆரம்பிக்கிறேன்.

சிறுவன் ஒருவன் அதிகாலையில் இறைவனுக்கு படைக்கவென பூ ஆய்ந்துகொண்டிருக்கிறான்.

"நித்தியகல்யாணியில் தேடித்தேடி ஆயும்போது காலை ஆறு மணி இருக்கும். மதிலுக்கு மேலாக வளர்ந்து நிற்கும் மரத்துக் கொப்பை, ஆட்டுக்கு குழை குத்தும் கம்பியால் எட்டிக் கொளுவி வளைக்கும்போது சொட்டு சொட்டாக கொஞ்சம் பனித்துளி, தலை, முகம், கழுத்தடி என்று விழுந்து சில்லிடும். திருவிழாவில் வாங்கிய ஒரு சின்ன பனை ஒலைப்பெட்டியில் மொட்டு தவிர்த்து பூக்களை எல்லாம் பிடுங்கி போட்டவாறு செம்பரத்தைக்கு தாவுகிறேன்"

இதை எழுதிக்கொண்டிருக்கும்போது இளையராஜா குரல் ஒலிக்கிறது.

"நமச்சிவாய வாழ்க ... நாதன் தாழ் வாழ்க

இமைப்பொழுதும் என்நெஞ்சில்

நீங்காதான் தாழ் வாழ்க"

அந்த கோரஸ் கேட்கும்போது மனது எங்கே போகிறது தெரியுமா?

"காதல் ஓவியம் காணும் காவியம்"

தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்"

காதல்தான். கடவுள் என்றால் என்ன? காதலி என்றால் என்ன?

தெய்வீகக் குரல் தொடர்கிறது.

"ஏகன் அநேகன் ... இறைவனடி வாழ்க"

என்னும்போது ‘அவன் வாய் குழலில் அழகாக...’ என்று யாரோ பிடறிக்குள் இருந்து இசைக்க, ‘ஜகத்தாரிணி நீ பரிபூரணி நீ’ என்று இன்னொரு குரல் உச்சி மண்டையிலிருந்து இறங்குகிறது. இது எல்லாமே கல்யாணி என்று பேதை நெஞ்சங்களுக்கு புரியத் தேவையில்லை. அதுவாக நிகழும்.

இசை ஒருவித தெய்வீக மனோபாவத்துக்குள் இட்டுச்செல்ல பின்வரும் வரிகள் எழுதுவிக்கப்படுகின்றன.

“காலையில் அணில் பிள்ளைகள் வரும் முன்னரேயே தோட்டத்துக்குப் போய் பொத்திகளில் உதிராமல் இருக்கும் பூ இதழ்களை ஒவ்வொன்றாகக் கொய்து அதில் சொட்டு சொட்டாய் ஒட்டியிருக்கும் தேனை குடிக்கவேண்டுமே. சாதுவாக வாழைக் கயரும் சேர்ந்துகொடுக்கும் அந்த தேனின் சுவை, “தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே” என்ற மாணிக்கவாசகர் வரிகளை ஞாபகப்படுத்தும். கோத்தும்பி இப்போது தேனினை சொரிந்து புறம்புறத் திரிந்த செல்வத்தைத் தேடி சுவாமி அறைக்குள் நுழைகிறது.”

அட! திருவாசகம் வந்து விழுகிறது. எங்கிருந்தோ கோத்தும்பி திடீரென்று ரீங்காரிக்கிறது. எப்படி? யோசித்துக்கொண்டிருக்கும்போது ‘சிறு பொன்மணி’யை ஞாபகப்படுத்தியபடியே மாணிக்கவாசகரின் கோத்தும்பி பாடல். பவதாரிணியின் குரலில்.

“தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே”

இது எப்படி? திரும்பி ‘மயில்போல பொண்ணு வந்து என்வீட்டு யன்னல் எட்டி ஏன் பார்க்கிறே’ என்று கேட்கத்தோன்றுகிறது. இதுதானோ சங்கமம்? காதல் கவிதை என்று இளையராஜா படம். அதிலே ஒரு பாடல். அர்த்தம் கூட கொஞ்சம் கோத்தும்பி பாணியிலேயே இருக்கும்.

“அலைமீது விளையாடும் இளம் தென்றலே

அலை பாயும் இள நெஞ்சை கரை சேர்த்து வா”

இறை அனுபவம் எமக்குள் இருப்பது. அதை அடைய இறைவன் தேவையில்லை. இளையராஜா இசையே போதும்.

“நானார் என்உள்ளமார் ஞானங்களாரென்னை யாரறிவார்?”

புரூனாய் நாட்டுக்கு அடிக்கடி வேலை நிமித்தமாக போக வேண்டி இருக்கும். அந்தநாடு ஒரு தனிமையான நாடு. அதிவேக கார்கள், அகன்ற வீதிகள், பரந்த இடங்கள் என்று இருந்தாலும் எப்போதுமே ஒரு வெறுமை நிறைந்திருக்கும் நாடு. அந்த நாட்டில் எனக்குத் துணையாக இருந்தது இளையராஜா பாடல்கள்தான். அதுவும் அப்போதெல்லாம் நான் அதிகம் கேட்கும் பாடல் சொல்ல மறந்த கதை படத்து ‘குண்டு மல்லி குண்டு மல்லி’ பாடல். ஸ்ரேயா கோஷல் குரல் வேறு உயிரை குத்திக்கீறும்.

“காற்று குழலின் ஓசையிலே கண்டபடி உன் கை படுதே

மூடி திறக்கும் மாயையிலே மெல்ல என் மூச்சைத்தான் தொடுதே”

மிகவும் வீக்காக உணரும் தருணங்களில் ஏனோ தெரியாது இந்த பாட்டையே அடிக்கடி கேட்பேன். ஒரு முறை மனது மிக கனமாக இருந்த சமயம். இந்தப்பாடலை கேட்டுக்கொண்டு இருந்தவன், கிடு கிடுவென கிளம்பி நடக்க ஆரம்பித்துவிட்டேன். காதில் பாடல் திரும்ப திரும்ப ஒலிக்கிறது. எவ்வளவு தூரம் நடந்திருப்பேனோ தெரியாது. மாலை ஆறுமணிக்கு ஆரம்பித்தது இரவு பத்துமணி ஆகிவிட்டது. இப்போது மீண்டும் வீடு திரும்ப வேண்டும். திரும்பிப்பார்த்தேன். தனிமையும் பயமும் வெறிச்சோடிய வீதிகளும். அதே வெறுமை. பாட்டின் சவுண்டை கூட்டிவிட்டு நடக்க ஆரம்பித்தேன். எனக்கு எப்போதுமே இளையராஜா பக்கத்தில் இருந்தார். இருப்பார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நானும் இரண்டு நண்பர்களும் சேர்ந்து நேபாளத்து இமயமலை அடிவாரங்களை சுற்றிப்பார்க்கக் கிளம்பினோம். போக்ரா எனும் நகரத்திலே ஒரு ஏரி இருக்கிறது. மர ஓடம் ஒன்றை வாடகைக்கு பிடித்து அந்த ஏரியின் மையத்தே போய் எழுந்து நின்று சுற்றிச் சுற்றிப் பார்த்தால் பார்க்குமிடமெல்லாம் பனிமலைக் குன்றுகளாக இருக்கும். எங்குமே பனிமலைச்சாரல்கள். நடுவே ஏரி. ஏரியின் மையத்தில் நான். ராஜா பாட்டு. ‘நேபாள மலையோரம் ஒரு குளிர் காற்று வீசுதடி’. கூடவந்த வழிகாட்டி கிருஷ்ணா இந்தப்பாட்டைக் கேட்டுவிட்டு ‘அட இது எங்கள் ஊர் இசை’ என்றான். அந்தப் பெண் என்ன பாடுகின்றாள் என்று அர்த்தம் கேட்டேன். பெண் நேபாளத்தின் பெருமைகளை பாடுகிறாளாம். அந்த இசைக்குள்ளும் ஒரு காதல் ஒரு நயம்.

எப்படி இந்த இராட்சசனுக்கு இது முடிகிறது?

கடந்த சில வருடங்களாக ராஜா பற்றிய புரிதல் அதிகரித்திருக்கிறது என்று நினைக்கிறேன். ராஜாவின் நுணுக்கங்களை என்னைப்போன்ற இசைபடிக்காதவர்கள் மேலும் மேலும் புரிந்துகொள்கிறோம். வெறுமனே ‘நன்றாக இருக்கிறது’ என்பதைத்தாண்டி ராஜா செய்த ஆச்சரியங்களை விளங்க முற்படுகிறோம். இந்தத் தலைமுறை பத்திருபது வருஷங்களுக்கு முன்னைய ராஜாவின் பெட்டகங்களை கிண்டி எடுக்கிறது. இசை என்பது என்ன? என்ற ஒரு வித அண்டர்ஸ்டாண்டிங் எல்லோருக்கும் வருகிறது. அந்த அண்டர்ஸ்டாண்டிங்தான் யார் இசையமைத்தார்கள் என்பதைத் தாண்டி இசையை கேட்கும் பக்குவத்தை நமக்கு அளிக்கிறது. சிலநேரங்களில் country, westerners வகை மெலோ ரொமாண்டிக் இசைகளை கேட்டுவிட்டு மீண்டும் ராஜாவுக்கு வரும்போது ராஜாவை இன்னமுமே அதிகம் புரிகிறது. தெரிந்து செய்கிறாரா இல்லையா என்று தெரியாது. நாங்கள் மெதுவாகத்தான் வருவோம் என்று கொஞ்சம் கொஞ்சமாக புதுமைகளை அறிமுகப்படுத்தியவர் ராஜா. எங்களை கூடவே கை பிடித்து கூட்டிச்சென்றபடி இசைப்பயணம் செய்பவர். இசையை ரசிக்க வைத்தவர்.

அலுவலக நண்பன் பீட்டர். ‘அதெப்படி வேலை செய்யும்போது ஒருவித புன்னகையோடு இசையை ரசித்தபடியே இருக்கிறாய்?’ என்று கேட்டான். ‘இளையராஜா’ என்றேன். எங்கே எனக்கு ஒரு பாட்டு ப்ளே பண்ணேன் என்றான். யோசித்துவிட்டு ப்ளே பண்ணிக்காட்டிய பாட்டு மௌனராகம் படத்தின் ‘பனிவிழும் இரவு’. கேட்கும்போது அவன் கண்கள் அகல விரிந்தன. அசத்தலான இசை. முதலாம் இன்டர்லூட் கேட்டுக்கொண்டிருக்கும்போது திடீரென்று இசை பிரேக்காகி ஒரு கணம் நிசப்தமாக இருக்கும். பின் வயலின் கோரஸ் ஆரம்பிக்கும். இந்த இசையை ஒரு ஹோம் தியேட்டரில் ப்ளே பண்ணி கேட்பதே ஒரு தனி அனுபவம்.

ஆச்சரியங்கள் நிகழ்த்துவதில் ராஜாவுக்கு நிகர் ராஜாவேதான். ராஜாவின் சில பாடல்கள் எதிர்பார்க்காத திருப்பங்களைத்தரும். மிகச் சாதாரணமாகத்தான் அவை ஆரம்பிக்கும். அட அடுத்த பாடலுக்கு தாவுவோம் என்று நினைக்கும்போது மனசை போட்டு தாக்கும் மெலடி ஒன்று சரணத்தில் வந்து இறங்கும். அப்படியான ஒரு பாடல்தான் ‘ஏ ஐயா சாமி’. எப்படித் தொடங்குகிறது இந்த பாடல்? இந்த பாடலின் சரணத்தில் அப்படி ஒரு மெலடியான மெட்டு வரும் என்று கனவில் கூட நினைக்க மாட்டோம். இன்டர்லூடில் நேர்த்தியான தெம்மாங்குக்கு தாவி சரணம் வரும்போது மெலடி நம்மை அள்ளும். ‘நாணல் கூத்தாடும் நதியின் ஓரம், நானும் உன்னோடு நடக்கும் நேரம்’ என்று சித்ரா பாடும்போது நாணலோடு சேர்ந்து பெண்ணின் நாணமும் கூத்தாடும். இப்படி உருக்கிக்கொண்டு இருக்கும்போதே பல்லவி இணையும் இடத்தில் பாடல் பழைய இடத்துக்குப் போய்விடும். அதுதான் ராஜாவின் ஆச்சரியம்.

அதனால்தான் ராஜாவும் ஆச்சரியம்.

இன்னொரு ஆச்சரியம் புது புது அர்த்தங்கள் படத்தில். பாலச்சந்தர் சிந்துபைரவிக்கு பின்னர் இளையராஜா இருக்கும் தைரியத்தில் இசைக்கலைஞர் சார்ந்த ‘புது புது அர்த்தங்கள்’, ‘புன்னகை மன்னன்’ என்று அடுத்தடுத்து படங்களை எடுத்தார். அப்புறம் ரகுமானை வைத்து டூயட் கூட எடுத்தார். ஆனால் கதை என்னவோ அவரின் ஒரே டெம்ப்ளேட்தான். ஒரு ஆணுக்கு இரு பெண்கள். அல்லது ஒரு பெண்ணுக்கு இரு ஆண்கள். இரு கோடுகளில் ஆரம்பித்தது. ஆசாமி நிறுத்தவேயில்லை. அவ்வப்போது ‘உன்னால் முடியும் தம்பி’, ‘வறுமையின் நிறம் சிகப்பு’ போன்ற பாரதி இன்ஸ்பிரேஷன்ஸ் படங்கள் வருவதும் உண்டு.

புது புது அர்த்தங்களில் தலைவரும் எஸ்பிபியும் இணைந்து கலக்கும் ஒரு பாடல் ‘எடுத்து நான் விடவா?’ சாதாரணமான தாளம் போடவைக்கும் பாட்டாக ஆரம்பிக்கும். எஸ்பிபி ராஜா சேரும்போதே ஏதோ இருக்கவேண்டும் இல்லையா? அது சரணத்தில் புரியும். கவனமாக கேட்டுப்பாருங்கள்.

முதலில் ராஜா ஆரம்பிக்கிறார்.

“ஏ நான் பாட பிறந்தது ஷோ..ஷோ..ஷோ..ஷோக்கு

ஆனாலும் தடுக்குது நா.. நா.. நாக்கு

என் பாடல் இனித்திடும் தேன் தேன் தேன்

அட தென் பாண்டி குயிலினம் நான்... தான்”

எஸ்பிபி தொடர்கிறார்.

“நான் பாடவே ஏழு ஸ்வரங்களூம் தான் தாவிடும் மேவிடும்..”

அடுத்தது இளையராஜா. நக்கலைக் கவனியுங்கள்.

“ஒ ஹோ”

எஸ்பிபி விடமாட்டார்.

“ஊர்கோடியே மாலை அணிந்திட தான் தாவிடும் ஆடிடும்”

இளையராஜா. Again.

“ஓ.ஓ”

எஸ்பிபி விடவில்லை. அடுத்த வரியில் பாவத்தையும் மெலடியையும் கவனியுங்கள்

“என்னிசையை கேட்டாலே வெண்ணிலா வாராதா?”

இளையராஜா அதற்கு ‘அடடாடா...’ என்பார். இது தனக்குத் தானே சொல்லுவது. மெட்டு அவரோடது அல்லவா. இப்படி இருவரும் மாறி மாறி நக்கல் அடித்து பாடும் பாடல் இது. பாருங்கள். இந்தப் பாடலில்தான் எத்தனை நயம், இசை, நேசம். ஓதெண்டிக் ராஜா இசை. எஸ்பிபி குரல். இராட்சசர்கள். அதே சமயம் இரட்சகர்கள்.

சிலநேரங்களில் இந்த மனிதர்களைச் சந்திக்காமல் விட்டிருந்தால் என் வாழ்க்கை முழுக்க முழுக்க சந்தோஷமாகவே போயிருக்குமே என்று ஆயாசப்பட்டதுண்டு. சில ராஜா பாடல்களும் அப்படித்தான். கேட்க கேட்க துன்பத்தை ஏற்படுத்தும் பாடல்கள். இராட்சசன் இப்படி பாடல்களை எல்லாம் போட்டு நம் தூக்கத்தைத் தொலைப்பார். ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ படத்தில் ஒரு பாட்டு. ஒரு தாய் பிள்ளையை பார்த்து பாடுகிறாள்.

“நல்லோர்கள் உன்னைப் பாராட்ட வேண்டும்

நலமாக நூறாண்டு நீ வாழவேண்டும்

காவியம் பேசும் பூ முகம் பார்த்தால்

ஓவியம் கூட நாணுமே”

படத்தில் அந்தப்பிள்ளை பின்னர் இறந்துபோய்விடும். தாய் அழும் காட்சி. இதே வரிகளை சோகமாக்குவார். சித்ராவின் குரலில் தாங்கமாட்டாமல் இருக்கும். ஏனடா இதை கேட்டுத்தொலைத்தோம் என்று தோன்றும்.

உன்னால் முடியும் தம்பி திரைப்படம். நாயகன் கர்னாடக சங்கீத கலைஞனின் மகன். அவன் பாமர மக்களோடு மக்களாக வாழ விரும்புவன். சங்கீதம் தெரியும். ஆனால் அந்த சங்கீதம் ஏழை எளியவர்களையும் போய் சேரவேண்டும் என்று நினைக்கின்ற ‘பாடறியேன்’ சுகாசினி ரகம். அப்படி அவன் பாடும் பாட்டு ‘புஞ்சை உண்டு நஞ்சை உண்டு’. எப்போதாவது மனதளவில் இயலாமை அதிகரித்து எனக்கு மட்டுமே ஏன் இப்படி நடக்கிறது என்று அங்கலாய்க்கும்போது இந்த வரிகள் ஞாபகம் வரும்.

“எத்தனை காலம் இப்படிப்போகும்?

என்றொரு கேள்வி நாளை வரும்.

உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்

என்றிங்கு வாழும் வேளை வரும்.”

ராஜாவின் அண்மைக்கால மெட்டுகள் ஒருவித ஸ்டேல்மேட்டுக்குள் சென்றுவிட்டதாக ஒரு அபிப்பிராயம். பால்கியின் படங்களில் அது இல்லை. தமிழில் இருக்கிறது. ஏன் அப்படி நடக்கிறது என்றால் இயக்குனர்கள்தான் காரணம் என்பேன். ‘தோணி’ என்ற படத்தின் இசை வெளியீட்டில் நாசர், பிரகாஷ்ராஜின் பேச்சுக்களைக் கேட்டுப்பாருங்கள். ராஜாவை கடவுளாகவும் கேள்வி கேட்கப்பட முடியாதவராயும் சித்தரித்து நடுங்கி நடுங்கி பேசிக்கொண்டிருந்தார்கள். இப்படி இருந்தால் எப்படி இவர்கள் நல்ல பாடல்களை ராஜாவிடம் இருந்து வாங்க முடியும்? பாரதிராஜாவும் பாலச்சந்தரும் ராஜாவை நீ, நான் என் ஒருமையில் அழைக்கக்கூடியவர்கள். ஒன்று பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்லுபவர்கள். அப்படித்தான் பாரதிராஜா ‘தம் தன நம் தன தாளம் வரும்’ பாடல் வாங்கியதாக ராஜாவே கூறியிருக்கிறார்.

இயக்குனர்கள் ராஜாவை முதலில் பயமின்றி எதிர்கொள்ளவேண்டும். கௌதம்மேனன் அணுகினார். எங்களுக்கு ஒரு ‘நீ தானே என் பொன் வசந்தம்’ கிடைத்தது. ஒன்றா இரண்டா? ‘காற்றைக்கொஞ்சம் நிற்கச் சொன்னேன்’, ‘என்னோடு வா வா’, ‘வானம் மெல்ல கீழிறங்கி’, ‘சாய்ந்து சாய்ந்து’, ‘முதல் முறை’, ‘சற்று முன்பு’ என்று அத்தனை பாடல்களும் ஸ்ட்ரெயிட் சிக்ஸர்கள். இளையராஜாவின் தேடல் தணலாய் அப்படியே இருக்கிறது. அதற்குத் தூபம் போட்டு எரிய வைக்கவேண்டிய வேலை இயக்குனர்களுடையது.

இசை ரசனை என்பது மிகவும் பெர்சனலானது. அதுவும் ராஜாவோடு கொண்டிருக்கும் பந்தம் இன்னமும் பெர்சனல். அதை எழுதி சொல்லி புரியவைக்க முடியாது. இந்தப்பாட்டு அந்தப்பாட்டு என்று வகைப்படுத்த முடியாது. இராகம், சிம்பனி, யுக்தி என்றெல்லாம் பிரித்து ரசிக்க முடியாது. ஒருபாட்டை ஆரம்பித்தால் அதை நாள் பூராக கேட்டுக்கொண்டே இருக்கலாம். சில சமயம் வரிகளைக்கூட அப்படிக்கேட்கலாம்.

‘பூமரக்காற்று சாமரந்தான்.

வீசுது இங்கே வாசனதான்.

மாநிறப்பூவே யோசனை ஏனோ.

மாமனைத்தானே சேரனும் நீயே’

என்று ஆலாப்பு பாடும் சித்ராவையும் மலேசியா வாசுதேவனையும் நாட்கணக்காய் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ‘தென்றலே என்னைத்தொடு’ பாடல்களையெல்லாம் தனியே ஒரு கசட்டில் அடித்துக்கொண்டு தனித்தீவுக்கு போனால் திரும்பவே மனம் வராது. ‘அன்னைக்கொரு எழுத்த எனக்கெழுதிப்புட்டான், இன்னைக்கத அழிச்சா அவன் எழுதப்போறான்’ என்று பாடும் சித்ராவை கேட்காத நாளே கிடையாது.

இங்கிவனை நாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம்?

ஒவ்வொரு முறையும் ராஜாவின் பாட்டு கேட்கும்போது அடடா இந்த இசை எனக்காகவே அமைக்கப்பட்டிருப்பதுபோலத்தோன்றும். எனக்காகவே பூமியில் பிறந்து வளர்ந்த காதலி. ராஜாவின் வெற்றி எதுவென்றால் அந்த உணர்வை கோடிக்கணக்கான மக்களுக்கு ஏற்படுத்தியதுதான். வாழ்க்கையின் மகிழ்ச்சி, துன்பம் என்று அத்தனை ஏற்ற இறக்கங்களிலும் எம்மோடு கூட இருந்ததுதான். அதனாலேயே அவர் எங்கள் ராஜா. இளையராஜா.

“பாட்டாலே புத்தி சொன்னார்.

பாட்டாலே பக்தி சொன்னார்.

பாட்டுக்கு அவர் பாடுபட்டார்

அவர் பாட்டுகள் பலவிதம்தான்.

காளையர்கள் காதல் கன்னியரை

கவர்ந்திட பாடல் கேட்டார்கள்.

ஏழைகளும் ஏவல் அடிமைகளாய்

இருப்பதை பாட சொன்னார்கள்.

கதவோரம் கேட்டிடும் கட்டில் பாடலின்

மெட்டு போட சொன்னார்கள்.

தெருவோரம் சேர்ந்திட திருவாசகம்

தேவாரம் கேட்டார்கள்.

அவர் பாடும் பாடல்கள் அந்த ஏடுகள்

அதை எழுதினாலும் முடிந்திடாது”

 


என் கொல்லைப்புறத்துக் காதலிகள்” புத்தகத்திலிருந்து.

ஓவியங்கள் வரைந்தவர் ஜனகன்.

Comments

  1. எம்மாம் பெரிய பதிவு. என்ன சொல்ல வார்றீக, அத ஒத்த வரில சொன்னா மிச்சத்தயெல்லாம் நாங்க பாத்துக்குவோம்ல.

    ReplyDelete
  2. காலம் உள்ளவரை வாழும் இந்தக்காதல் இசைதேவன் இசை எனலாம்.அழகான அலசல் ராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. //ஒவ்வொரு முறையும் ராஜாவின் பாட்டு கேட்கும்போது அடடா இந்த இசை எனக்காகவே அமைக்கப்பட்டிருப்பதுபோலத்தோன்றும். எனக்காகவே பூமியில் பிறந்து வளர்ந்த காதலி. ராஜாவின் வெற்றி எதுவென்றால் அந்த உணர்வை கோடிக்கணக்கான மக்களுக்கு ஏற்படுத்தியதுதான். வாழ்க்கையின் மகிழ்ச்சி, துன்பம் என்று அத்தனை ஏற்ற இறக்கங்களிலும் எம்மோடு கூட இருந்ததுதான். அதனாலேயே அவர் எங்கள் ராஜா. இளையராஜா.//

    ஒரே ஒரு வார்த்தை .....பிறவிப்பயன் அடைந்தோம் ।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .