கடந்த சிலவாரங்களாகவே எனக்கு மிகவும் பிடித்த ஒரு அண்ணரின் தந்தையார் சுகவீனமில்லாமல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சந்திக்கச் செல்லவில்லை. செல்லுபடியாகாத உப்புச்சப்பற்ற காரணங்களால் அடுத்த கிழமை, அடுத்த கிழமை என்று பிற்போட்டுக்கொண்டேயிருந்தேன். நமக்குத்தெரிந்தவர்களை மரணம் அண்டாது என்கின்ற ஒரு ஆழ்மனது நம்பிக்கை எப்போதுமே எம்முள் இருக்கிறதோ என்னவோ. அந்த நம்பிக்கை அண்மைக்காலத்தில் குறைய ஆரம்பித்திருக்கிறது. பத்து, இருபது வயதுகளில் எனக்குத்தெரியாத தாத்தா, பாட்டிமார்களே அதிகம் இறந்துகொண்டிருந்தார்கள். முப்பதுகளில் இப்போது அங்கிள்களும் அன்ரிகளும் பிரியத்தொடங்கி இருக்கிறார்கள். சிறுவயதில் நான் ரசித்து வளர்ந்த ஆளுமைகள் இப்போதெல்லாம் ஒவ்வொருவராய் மறையத் தொடங்கிவிட்டார்கள். இன்னும் பத்திருபது வருடங்களில் என் நண்பர்களும் பிரியத்தொடங்குவார்கள். ஆர்மிக்காரன் மூவ் பண்ணத்தொடங்கிவிட்டான். தூரத்தில் விழுந்துகொண்டிருந்த ஷெல்கள் நம்மூரையும் தாக்கி, அயலட்டத்தையும்தாக்கி இப்போது வீட்டுவாயிலிலும் விழுந்து வெடிக்க ஆரம்பிக்கின்றன. ஒருநாள் அது என் கட்டிலிலும் விழுந்துவெடிக்கவே செய்யும்...