Skip to main content

பொண்டிங்




பொண்டிங் இன்னமும் வந்துசேரவில்லை.

மழைத்தூறலும் குளிருமாய் இருந்தது. அருண் பொறுமை இழந்துகொண்டிருந்தான். “Where are you?”, மயூரிக்கு மெசேஜ் பண்ணினான். “On the way” என்று ரிப்ளை வந்தது. டிரைவ் பண்ணிக்கொண்டிருந்தால் எப்படி டெக்ஸ்ட் பண்ணுவாள்? பொய். வாய் திறந்தால் பொய். சட் பண்ணினால் பொய். எஸ்.எம்.எஸ் எல்லாம் பொய். மயூரி பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யாகி நிற்பவள். இன்னமும் அவள் கட்டிலிலேயே கிடக்கலாம். அருகிலேயே அந்தச் சூடானியன்… ச்சிக், பொண்டிங்கை நினைக்கத்தான் கவலையாக இருந்தது. அவனை எப்படி நடத்துகிறார்களோ. பாவம். பிள்ளைக்கு வாய் திறந்து சொல்லவுந் தெரியாது. அந்த சூடானியன் பொண்டிங் முன்னாலேயே மயூரியை… Stop it Arun, அப்படி எல்லாம் நடக்காது. தாம் ஏன் அவ்வாறெல்லாம் தேவையில்லாமல் யோசித்து விசனப்படுகிறோம் என்று அருண் தன்னையே நொந்துகொண்டான். மயூரி எக்கேடு கெட்டால் அவனுக்கென்ன? அவன் எண்ணம், சிந்தனை, கவலை எல்லாம் பொண்டிங்மீதே. மயூரி பொண்டிங்கைச் சரியாகக் கவனிப்பாளா? பொண்டிங் என்ற பெயரை வைத்ததே மயூரிதானே.
“ஏன் கடவுள் பெயர் வைக்கலாமே? ராம், சிவாஸ், கண்பத் என்று எத்தனை பெயர்கள் இருக்கின்றன? பிள்ளைக்குப்போய் கிரிக்கட் பிளேயர் பெயர் வைப்பார்களா? அப்படியே கிரிக்கட் பிளேயர் என்றாலும் சச்சின், சனத் என்று வைக்கலாமே? எதுக்குப் பொண்டிங்? I don’t like it. Let’s call him… Shivas”

அருண் படித்து படித்துச் சொன்னதை மயூரி கேட்கவில்லை. அது நானூற்றி ஐம்பத்தாறாவது சண்டையாக இருக்கலாம். கணக்கு மறந்துபோய்விட்டது. ப்ரெஸ்டனில் தீப்பெட்டி சைஸ் வீட்டிலே வாழ்ந்தபோது நடந்த சண்டை அது. ஒரு கட்டத்தில் சண்டை பலத்து ஆளுக்கு ஆள் மாறி மாறி “!@#$ you” என்று கத்தவும், பக்கத்துவீட்டு எரிச்சலில் மாசிடோனியன்காரி உயர் டெசிபலில் “!@#$ you both” என்று கத்தியதும் இன்னமும் அருணுக்கு ஞாபகம் இருக்கிறது. மயூரி அன்று முழுதும் அழுதாள். சாப்பிடவில்லை. விடாப்பிடியாகப் பொண்டிங் என்ற பெயர்தான் வேண்டும் என்றாள். பொண்டிங், பொண்டிங், பொண்டிங். பொண்டிங்.

அருண் நேரத்தைப் பார்த்தான். காலை ஏழு மணி தாண்டியிருந்தது. எட்டு மணிக்கு அலுவலகத்துக்குக் கிளம்பவேண்டும். திங்கள்கிழமையே லேட்டாகப் போகமுடியாது. ஒரு மணி நேரத்துக்குள் பொண்டிங்கைக் குளிப்பாட்டி, உணவு கொடுத்து, வெளிக்கிடுத்தி, தானும் தயாராகி என்று ஆயிரம் வேலைகள் இருக்கின்றன. அவளுக்கென்ன ஹாயாக வருவாள். இந்தாப்பிடி என்று கையிலே கொடுத்துவிட்டுப் போயிடுவாள். பிளடி மயூரி. பிளடி சூடானியன். பிளடி…

வாசலில் ஹோர்ன் அடித்தது. மயூரி வந்துவிட்டாள்.

“Hay Arun, how are you mate?”

அந்தச் சூடானியன்தான் இறங்கிவந்தான். காருக்குள் மயூரி கண்ணாடி பார்த்து லிப்ஸ்டிக் சரிபார்ப்பது தெரிந்தது. அருணைக் கணக்கெடுக்கவேயில்லை.

“You alright mate?”

சூடானியனுக்கு வாயைச் சும்மா வைத்துக்கொண்டிருக்கமுடியாது. அருண் பதில் சொல்லவில்லை. அருண் என்றைக்குமே அவனுக்குப் பதில் சொல்லியதில்லை. ஆனாலும் அவன் ஒவ்வொரு திங்கள் காலையும், வெள்ளி மாலையும் தவறாமல் அருணைக் குசலம் விசாரிப்பான்.

“வெட்கம் ரோசம் கெட்ட தடித்த ஆபிரிக்கத் தோல். போ. உன்னுடைய தடிப்புக்கு அவன்தான் சரி. காலில் விழுந்து கிடப்பான். போடி. போ.”

அருணுக்கு சூடானியனைப் பார்க்கும்பொழுதெல்லாம் பற்றிக்கொண்டுவரும். இனிமேல் மயூரி தனியாகத்தான் பொண்டிங்கை அழைத்துவரவேண்டும் என்று ஒருமுறை அவளுக்கு மெசேஜ் பண்ணிக்கூடப்பார்த்தான். அவள் “Mind your business” என்று ரிப்ளை பண்ணினாள். சூடானியனைக் கொன்றுவிட்டால் என்னவென்று தோன்றும். ஏன் மயூரியைப்பற்றி தேவையேயில்லாமல் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்? அவள் சூடானியனோடு இருந்தாலோ, பிறேசிலியானோடு இருந்தாலோ நமக்கென்ன? நாம்தானே அவள் வேண்டாமென்று தலைமுழுகிவிட்டோம். அவள் போய்த்தொலைந்ததுதான் எவ்வளவு நல்லது.

அருணுக்கு அவளும் அவனும் பிடித்த இறுதிச்சண்டை ஞாபகம் வந்தது.

அது பத்தாயிரத்து முந்நூற்று நாற்பதாவது சண்டையாக இருக்கலாம். நகரத்தின் இத்தாலிய உணவுவிடுதி ஒன்றில் அவன் அலெக்சாந்திராவோடு உணவருந்திக்கொண்டிருந்தவேளையில் தற்செயலாக மயூரி அவர்களைக் கண்டதிலிருந்து முளைவிட்ட சண்டை. மாலை அருண் வீடு திரும்பியதும் சண்டை வலுப்பட்டது. மயூரி அருணின் ஐபோனை சுத்தியலால் உடைத்து நொறுக்கியதிலிருந்து சண்டை அடுத்த கட்டத்தை எட்டியது. மிகப்பெரிதாக வெடித்து அக்கம்பக்கம் எல்லாம் எட்டிப்பார்த்த சண்டை அது. முன்வீட்டு நாய்கள்கூட இவர்களின் சச்சரவால் குரைக்கத்தொடங்கிவிட்டன. எல்லா வார்த்தைகளுக்கும் “!@#$ing” அடைமொழியானது. மாறிமாறித் திட்டிக்கொண்டேயிருந்தார்கள். சண்டையின் ஒரு கட்டத்தில் அருண் மயூரியின் முடியைப்பற்றி முகத்தில் பளாரென்று அறைந்தான். அவள் அசரவில்லை. கையில் கிடைத்த பூச்சாடியால் ஓங்கி ஒரே அடி. அருணின் மூக்கு உடைந்து இரத்தம் சொட்டியது. இவர்கள் சண்டையைப்பார்த்ததில் பொண்டிங் பயத்திலே ஓடிப்போய் பக்கத்துவீட்டுக்குழந்தைகளுடன் ஒட்டிக்கொண்டுவிட்டான். இறுதியில் பொலிஸ் வந்தபின்னரேயே சத்தம் ஓய்ந்தது. பக்கத்துவீட்டுக்காரர்களே பொலிசை அழைத்திருந்தார்கள். பொலிஸ் பெரிதாக ஒன்றுமே செய்யவில்லை. “வன்முறை செய்தால் கேஸ் போடுவோம்” என்றார்கள். “தகாதவார்த்தைகளைப் பேசக்கூடாது. அதுவும் அக்கம்பக்கங்களில் குழந்தைகள் வசிக்கிறார்கள்” என்றனர். இருவருக்கும் குடும்பநல கவுன்சிலிங் ஹோட்லைன் நம்பரைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள்.

அதுதான் அருண் மயூரிக்கிடையிலான இறுதிச் சண்டை. அதற்குப்பின்னரெல்லாம் அருணும் மயூரியும் சண்டை பிடிக்கவேயில்லை. அன்றைக்கே மயூரி வீட்டிலிருந்து வெளியேறிவிட்டாள். கூடவே பொண்டிங்கையும் அழைத்துக்கொண்டு. அருண் விவாகரத்து நோட்டிஸ் அனுப்பும்போதுங்கூட மயூரி அலட்டிக்கொள்ளாமல் நிதானம் காட்டினாள். பின்னர் எல்லாவற்றையும் அவரவரது வழக்கறிஞர்களுக்கூடாகவே அணுகிக்கொண்டார்கள். எல்லா உடன்படிக்கைகளும் ஓரளவுக்கு சுமூகமாகவே நிகழ்ந்தன. அருணின் வக்கீல். அருண். மயூரியின் வக்கீல். மயூரி. நால்வரும் சந்தித்து, ஹாய் சொல்லி, காலநிலையை நொந்து, கோப்பி குடித்தபடியே விவாகரத்தைப் பேசித்தீர்த்தார்கள். வீட்டை விற்பது என்று முடிவானது. எல்லாமே இரண்டாகப் பிரிந்தன. கோப்பி மெஷின், பிரிட்ஜ், வோஷிங்மெஷின் எல்லாம் அருணுக்குப் போனது. சோபா, டிவி, கட்டில்கள் எல்லாம் மயூரிக்குத் தீர்த்தார்கள். அவளுக்கு அவை எதுவும் தேவையாய் இருக்கவில்லை. மயூரி தனக்குத் தீர்க்கப்பட்ட பொருட்கள் எல்லாவற்றையும் நான்காயிரம் டொலர்களுக்கு அருணுக்கே திரும்பவும் விற்றாள். சாமியறைப் படங்களை இலவசமாகக் கொடுப்பதாகச் சொல்லிவிட்டாள். ஒரு பென்சும், டொயோட்டாவும் வீட்டில் நின்றது. மயூரி பென்ஸ் தராவிட்டால் விவாகரத்தை இழுத்தடிப்பேன் என்று அடம்பிடித்தாள். நம்பர் பிளேட்டில்கூட “MAYURI3” என்று இருந்தது. அருணுக்கு அவள் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வைத்தாலேபோதும் என்ற நிலை. பென்ஸ் மயூரிக்குப்போனது. வங்கி வைப்பில் எழுபதுவீதம் தனக்கு வேண்டும் என்றும் அவள் கேட்டாள். அருணின் அவசரத்துக்கு எல்லாவற்றுக்கும் சம்மதம் சொன்னான். கிரெடிட்கார்ட் மீதியைக்கூட அவனே கட்டுவதாக உறுதியளித்தான். விவாகரத்து உடன்பாடு சுமூகமாகத்தான் போய்க்கொண்டிருந்தது.

பொண்டிங் யாருக்கு என்ற குழப்பம் வரும்வரையில்.

சூடானியன் பொண்டிங்கைக் கையில் கொடுத்துவிட்டுக் “ஸீ யூ” சொன்னான். இரண்டு நாட்கள்தாம். இரண்டே இரண்டு நாட்கள். ஆனால் அருணால் பொண்டிங்கை விட்டுப் பிரிந்திருக்கவே முடிவதில்லை. என்னவோ தெரியாது. அவனுக்கு இப்போதெல்லாம் பொண்டிங்கை விட்டால் தனக்கு வேறு யாரும் இல்லையோ என்ற எண்ணம் வாட்டத்தொடங்கியிருந்தது. பொண்டிங் மீது அருணுக்கு அப்படி ஒரு பாசம். காலை எழுந்ததும் கை தன்னிச்சையாக அருகில் கிடக்கும் பொண்டிங்கைத்தான் தேடும். அவன் இல்லை என்றதும் சடக்கென்று ஒரு பதட்டம் தொற்றிக்கொள்ளும். ஆரம்பத்தில் மயூரிதான் பொண்டிங்மீது மிகவும் பாசமாக இருந்தவள். அவன் குழந்தையாக இருக்கும்போது குளிப்பாட்டி பாலூட்டுவது முதல் எங்குபோனாலும் அவனையும் கொண்டுசெல்வதுவரை மயூரி பொண்டிங்மீது அபரிமிதமான பாசத்தைப் பொழிந்தாள். பொண்டிங் வந்து முதல் மூன்று மாதங்களுக்கு அவர்களுக்கிடையேயான சண்டைகளின் எண்ணிக்கை நானூற்றி ஐம்பத்தாறிலிருந்து வெறுமனே ஐந்துதான் கூடியிருந்தது. இருவரும் பொண்டிங்கை அழைத்துக்கொண்டு பூங்காவுக்கு நடையெல்லாம் போயிருக்கிறார்கள். குழந்தை என்றாலும் பெயருக்குத் தகுந்தமாதிரி பொண்டிங் நன்றாக பந்து விளையாடுவான். “கட்ச் இட்” என்று சொல்லி பந்தை வீசுகையில் குழந்தை ஆர்வத்தோடு பந்தை நோக்கிப் பாய்கையில் நிஜ ரிக்கி பொண்டிங் போய்ண்டில் கட்ச் பிடிப்பதுபோலவே இருக்கும். ஆனால் குளிர்காலம் வந்ததும் எல்லாமே மாற ஆரம்பித்துவிட்டது. இருவருமே பிசியானார்கள். அருணும் மயூரியும் பேசிக்கொள்வதே குறைந்தது. காலையில் அருண் எழும்புவதற்கு முன்னமேயே மயூரி கிளினிக்குக்கு கிளம்பிச் சென்றுவிடுவாள். இரவு அவள் வீடு திரும்புவதற்குள் அருண் தூங்கிவிடுவான். ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரமே இருவரும் முகம் கொடுத்துப் பேசுவார்கள். பொண்டிங்கைக் கவனிக்கும் பொறுப்பும் அருண் தலையிலேயே விழுந்தது. பாலூட்டுவதிலிருந்து சாப்பாடு கொடுப்பது, பொண்டிங்குக்கு ஏதும் சுகவீனம் என்றால் வைத்தியரிடம் கொண்டுபோவது என்று அருணின் வாழ்க்கை வேலை, வேலை முடிந்து வந்தால் பொண்டிங் என்று மாற ஆரம்பித்தது. கூடவே அருணுக்கும் பொண்டிங்குக்கும் இடையில் இன்னதென்று விளக்கமுடியாத பாசம். அருணாலும் பொண்டிங்கை விட்டு இருக்கமுடியாது. பொண்டிங்காலும் அருணை விட்டுக் கணமேனும் இருக்கமுடியாது.

அருண் பொண்டிங்கை அலேக்காகத் தூக்கிக்கொண்டான். இரண்டு நாட்களுக்குப்பின்னர் அப்பாவைக் கண்ட சந்தோசத்தில் பொண்டிங்கின் உடல்பூராவும் சிலிர்த்தது.

“என்னடா கண்ணா, அப்பாவை விட்டிட்டு எப்பிடி இரண்டு நாள் சமாளிச்சாய்?”

பொண்டிங் சந்தோசத்தில் அருணின் கன்னம், நெற்றி, தாடை, கழுத்து என்று முத்தங்களைப் பொழிந்தான். அவன் உடல் அதிர்ந்துகொண்டிருந்தது. சூடானியன் காரை ஸ்டார்ட் பண்ணி, புறப்படுவதற்கு முன்னர் அருகில் இருந்த மயூரிக்கு எட்டி முத்தம் கொடுத்தான். வேண்டுமென்றே செய்கிறார்கள். அருணுக்குத் தெரிந்ததுதான். கடைசிவரை மயூரி அருணைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. பார்க்கமாட்டாள். அவளுக்கு அருணின் ஒவ்வொரு அசைவும் விளங்கும். அருண் எப்போதெல்லாம் அவளைக் கவனிப்பான் என்று அவள் தெரிந்தே வைத்திருந்தாள். வெறுப்பேற்றுவதற்காகவே முத்தம் கொடுத்தார்கள். வெறுப்பேற்றுவதற்காகவே இருவரும் ஒன்றாக வருகிறார்கள். அதில் என்ன சந்தோசம் அவர்களுக்கு? அருணுக்குக் கோபம் வந்தது. பொண்டிங் அருணின் தோளில் தலைவைத்துத் தூங்கிவிட்டான். அருண் மயூரியையும் சூடானியனையுமே நினைத்துக்கொண்டிருந்தான். இப்பொழுது இருவருமே அவனைப்பற்றி ஏதாவது புரளிபேசிச் சிரித்துக்கொண்டிருக்கலாம். “He is such a loser” என்று மயூரி அருணைப்பற்றி எள்ளி நகையாடக்கூடும். அந்த சூடானியன் காவிப்பல் தெரியச் சிரிக்கலாம். கார் முழுதும் அவன் வாய் நாறலாம். அந்த சூடானியனின் காவி பிடித்த பல்லில் அப்படி என்னத்தைத்தான் மயூரி கண்டாள்? எப்போது இருவரும் சந்தித்துக்கொண்டார்கள்? நேற்று வந்த கறுப்பனுக்கு முன்னே எப்படி மயூரி அருணை அவமானப்படுத்தலாம்? அருண் ஆபிரிக்கர்களை கிண்டலடிப்பதை மயூரி என்றைக்கும் ரசித்ததில்லை. ஆ, ஊ என்றவுடன் அருணை ரெசிஸ்ட் என்பாள்.

பொண்டிங் இப்போது அருணின் காதைக்கடிக்க ஆரம்பித்தான். கூசியது.

அவர்களின் நானூற்றி அறுபத்தியிரண்டாவது சண்டை அருணுக்கு நன்றாகவே ஞாபகம் இருந்தது. குடும்பப் புகைப்படம் எடுக்கும்போது ஆரம்பித்து மூன்று நாட்கள் இரவு பகலாக நீடித்த சண்டை அது. சாதாரண குடும்பப்படம் அது. அருண், மயூரி, நடுவில் பொண்டிங். பொண்டிங் சிரிக்காமல் உர்ர்ரெண்டு முறைத்துக்கொண்டிருக்க இருவரும் அவனைத் தாங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். படம் கன்வாஸ் செய்யப்பட்டு வீட்டுக்கு வந்தது. மயூரியின் படத்துக்குக் கீழே “மயூரி ரட்ணம்”, அருணுக்குக் கீழே “அருண் இளையதம்பி”, பொண்டிங்குக் கீழே “பொண்டிங் மயூரி” என்று எழுதிக்கிடந்தது. அருணுக்குக் கோபமோ கோபம். “பொண்டிங் அருண்” என்று எழுதியிருக்கவேண்டும் என்றான். மயூரி அவனை ஷாவனிஸ்ட் என்று திட்டினாள். “ஏன் குழந்தைக்கு அப்பா பெயர்மாத்திரம் வைக்கவேண்டும்?” என்று வாதம் செய்தாள். சரி, அப்படியென்றால் “பொண்டிங் அருண் மயூரி” என்றாவது இருந்திருக்கவேண்டும் என்றான் இவன். அதுவும் ஆணாதிக்கம் என்றாள் மயூரி. வேண்டுமானால் “பொண்டிங் மயூரி அருண்” என்று மாற்றலாம் என்றாள். சண்டை வெடித்தது. முடிவில் “வெறும் பொண்டிங்கே போதும், முழுப்பெயரே போடவேண்டாம்” என்று அருண் சொன்னான். “குடும்பமே குலைந்துகொண்டிருக்கிறது, இதில என்ன மண்ணுக்கு குடும்பப்படம்” என்று மயூரி கன்வாசை உடைத்துக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டாள். அன்றிலிருந்து மயூரி எப்போது பார்த்தாலும் பொண்டிங்கை “பொண்டிங் மயூரி” என்றே அழைக்க ஆரம்பித்தாள். வைத்தியசாலைகளில் விண்ணப்பம் நிரப்பும்போது “மாஸ்டர் மயூரி” என்று பொண்டிங்கைப் பதிந்தாள். அருண் எதுக்கு வீண்வேலை என்று இந்த விவகாரத்தை அப்படியே தூக்கிப்போட்டுவிட்டான். ஆனால் அதுவே அவனுக்கு ஈற்றில் எமனாக வந்தமைந்தது.

விவாகரத்தின்போது பொண்டிங் யாருக்கென்ற விவகாரம் பூதாகரமாக வெடித்தது. பொண்டிங் தனக்குத்தான் வேண்டும் என்று மயூரி அடம் பிடித்தாள். அருண் எவ்வளவோ வாதாடிப்பார்த்தான். ஆனால் மயூரியிடம் அத்தனை சான்றுகளும் இருந்தன. அவன் உடைத்துப்போட்டதாகச் சொன்ன புகைப்படம் புதிதாக மீள அவதாரம் எடுத்தது. “பொண்டிங் மயூரி” என்று எழுதியிருந்த பெயரே போதுமானதாக இருந்தது. கன்வாஸ் கொம்பனியில் ஆதாரம் கொடுத்தார்கள். வைத்தியசாலைப்பதிவுகளில் எல்லாம் மாஸ்டர் மயூரி என்றிருந்ததும் அவளுக்கு வசதியாகப்போனது. அருணின் நிலைமை கௌரவர்களிடம் நாடு கேட்ட தருமனின் நிலையானது. கெஞ்சிப்பார்த்தான். ஐந்துநாள் கேட்டான். மூன்று நாள் கேட்டான். இரண்டு நாள் கேட்டான். கடைசியில் ஒரு உடன்பாட்டுக்கு வந்தார்கள்.

வாரநாள்கள் முழுதும் பொண்டிங்கை அருணே பராமரிக்கவேண்டும். வார இறுதி நாட்களில் அவனை மயூரியிடம் ஒப்படைத்துவிடவேண்டும். அவனுடைய இன்சூரன்ஸ், வைத்தியச்செலவுகள், மயூரி விடுமுறையில் போனால் அவனைக் கவனிப்பது, காப்பகச் செலவு என்று எல்லாவற்றையும் அருணே கவனித்துக்கொள்ளவேண்டும். மயூரிக்கு எப்போது பொண்டிங் வேண்டுமென்று தோன்றினாலும் கொடுத்துவிடவேண்டும். தவிரவும் வாரநாட்களில் பொண்டிங்கை மயூரி பிரிந்திருக்கவேண்டியிருப்பதற்கான இழப்பீடாக நாளுக்கு ஐம்பது டொலர்வீதம் அருண் அவளுக்கு வாரம் இருநூற்றைம்பது டொலர்கள் கொடுக்கவேண்டும். அருணுக்குக் கெட்ட கோபம் வந்தது. முடியவே முடியாது என்று மறுத்தான். மயூரி கேட்கவில்லை. நாளுக்கு முப்பது டொலர் கொடுக்கலாமா என்று அருணின் வழக்கறிஞர் பேரம் பேசிப்பார்த்தார். அவள் மசியவில்லை. ஈற்றில் நாளுக்கு நாற்பத்தேழு டொலர்களுக்கு இணங்கினார்கள்.

அருண் பொண்டிங்கின் முகத்தில் முத்தம்கொடுத்தான். பொண்டிங் உற்சாகம் தாளாமல் மீண்டும் அருணின் முகமெங்கும் முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். இந்தப் பிள்ளைக்காகச் சொத்தையே எழுதிக்கொடுத்தாலும் தகும் என்று அருணுக்குத் தோன்றியது. மயூரி ஏன் இப்படி மாறிப்போனாள் என்றுதான் தெரியவில்லை. ஏன் அருண்மீது அவளுக்கு அவ்வளவு வன்மம்? அருணின் ஒவ்வொரு டொலரையும் குறிவைத்துத் தாக்கிக்கொண்டேயிருந்தாள். அருணுடைய பலவீனங்கள் அத்தனையையும் நுணுக்கமாகப் பயன்படுத்தினாள். இத்தனைக்கும் மயூரி ஒரு டென்டிஸ்ட். பணத்துக்குப் பஞ்சமில்லை. பிரேஸ்டனில் அவளுடைய கிளினிக்கில் நாளுக்கு நூறு பேராவது பல்லைக்காட்ட வருகிறார்கள். அப்புறம் எதற்கு அவள் அருணை இம்மி இம்மியாக வறுத்தெடுத்தாள்? அருணைப் பிச்சைக்காரனாக நடுரோட்டில் நிறுத்தவேண்டும் என்று எதற்காகக் கங்கணம் கட்டினாள்? அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தகாலத்தில் மயூரியிடம் அப்படியான குணம் எதனையும் அருண் கண்டானில்லை. பிறகெப்படி? அருணுக்கு மயூரி அப்படி ஏன் செயற்பட்டாள் என்று இறுதிவரைக்கும் புரியவேயில்லை.

மழை பலத்துப்பெய்ய ஆரம்பித்தது. அருண் பெருமூச்சுடன் பொண்டிங்கை அணைத்தபடியே வீட்டுக்கதவைத் திறந்துகொண்டு மெதுவாக உள்ளே நுழைய…

“அந்தநாயை நடுவீட்டுக்குள் கூட்டிவரக்கூடாது என்று உனக்கு எவ்வளவுதரம்தான் நான் சொல்லுவது? இனியொருமுறை அது உள்ளுக்குள்ளே வந்துது என்றால் இரண்டு பேருடைய காலையும் முறிக்கவேண்டிவரும். Get out you idiots…”

வீட்டுக்குள்ளிருந்து அலெக்சாந்தராவின் சத்தம் கேட்கவும் பொண்டிங் துணுக்குற்றவனாய் அருணின் பிடியிலிருந்து விலகி ஓடி வீட்டுக்குப் பின்பக்கம் இருந்த கூண்டினுள் சென்று ஒளிந்துகொண்டான்.

*********************

படம் : Jen Lyn
http://unreliablenarratorink.tumblr.com/

Comments

  1. //நகரத்தின் இத்தாலிய உணவுவிடுதி ஒன்றில் அவன் அலெக்சாந்திராவோடு உணவருந்திக்கொண்டிருந்தவேளையில் தற்செயலாக மயூரி அவர்களைக் கண்டதிலிருந்து முளைவிட்ட சண்டை//

    அதுவாக தான் இருக்கும் என்ற முடிவுடனே வாசிக்கப்பட்ட்து

    உங்கட நாய் கதையெல்லாம் இங்கயே ஆரம்பித்து விட்டதா ?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...