Skip to main content

கந்தசாமியும் கலக்சியும் - ரோசி கஜன்

மனைவி மகன்களை கனடா அனுப்பிவிட்டு யாழில் தனிமையில் வாழும் கந்தசாமி எனும் வயோதிபர்!

ஒரு சில மணித்தியாலங்களில், பூமி பஸ்பமாகப் போவது தெரியாது நடைபெறும் நிகழ்வுகள்!

இப்படி, சுவாரஸ்சியமாக ஆரம்பிக்கின்றது ‘ஜேகே அவர்களின் கந்த சாமியும் கலக்சியும்’.

பூமியின் கதை அவ்வளவுதானா என்ற ஏக்கம் மறைய முன்னரே கமகம வாசத்தோடு(என்ன சாப்பாடா என்று கேட்க நினைப்பவர்கள் கதையை வாசித்து அனுபவிக்க வேண்டுமாக்கும்.) பிரபஞ்ச வெளியில் கைபிடித்து அழைத்துச் செல்கின்றது கதை.

சுமந்திரன் கந்தசாமியை அழைத்துக்கொண்டு எப்படிக் களவாக மகிந்தர்களின் ‘காற்று’க்குள் புகுந்தார்களோ, அப்படியே நானும் கைகாவலாக ஒரு துவாயை எடுத்துக்கொண்டு பயணபட்டுவிட்டு வந்தேன் .

பயணத்தில் சந்தித்தவை சில இடங்களில் புரியாத நிகழ்வுகள்.(நம்ம கொம்புயூட்டர் ஒழுங்காக அப்டேட் பண்ணப்படாதது) ‘ஆ!’ என்று பார்க்க மட்டும் செய்தேன். ஆனாலும் மிகவும் சுவாரஸ்சியம் குறையாது இருந்தது.

கதைக்குள் செல்ல முன்னரே, ‘இதைச் சொல்லியே ஆகவேண்டும்’ என்று ஆரம்பித்து, முழுக்க முழுக்க கற்பனையே என்று கண்டிக் கதிர்காமரில் கதாசிரியர் ஆணையிட்டிருந்தாலும் பூமி அழித்தல் படலம் கண்முன்னால் விரிகையில், என மனம், நிஜங்களோடு ஒப்பிட முனைந்ததையும் அடுத்தடுத்த படலங்களிலும் அப்படியே ஒப்பிட்டுப் பார்த்ததையும் மறுக்க முடியாது.

பூமியின் அறிமுகம்; மனித உயிரினத்தை எடை போட்டது; இருவகைப் புத்திசாலிகளின் விளக்கம் என்று ஆரம்பித்து லூசுக் கூட்டத்தில் ஒருவனாக கந்தசாமியை அறிமுகப்படுத்தி, அவரோடு சேர்ந்து எங்களையும் பிரபஞ்சத்தை சுற்றி வரவைத்து...

கந்தசாமி, பாடசாலையில் பிரதம விருந்தினர் உரைக்காக ஒத்திகை தொடங்க முகத்தில் பலமாக ஒட்டிக் கொண்ட முறுவல், அப்பப்போ பெரும் நகைப்பாகி, திடீரென்று அருகில் கரும்பொருள்வாசிகளின் நடமாட்டம் உணர்ந்து அவர்களுக்கு ஒரு ‘ஹாய்’ சொல்லி...

‘கணனி பற்றி உனக்கு அவ்வளவு தெரியாது என்ற கவலையே உனக்கு வேண்டாம். ஏனென்றால் நீயே ஒரு கணினியாக்கும்.’ என்று என்னை நானே தட்டிக் கொள்ளவும் வைத்து...

மைதிலிக்காக மனம் நொந்து, ‘காலைச் சாப்பாடு இப்படி சாப்பிட்டால் எப்படிப் படிப்பாய்?’ என்று ஆதங்கப்பட்டு, கண்ணிமைக்கும் பொழுதில் அவளோடு சேர்ந்து மொத்தமும் காணாமல் போனதும், என்ன காரணத்துக்காக அவள் வந்தாள், எதைச் சொல்ல முயன்றாள் என்று குழம்பி, கடைசியில் அவள் மீண்டும் வர ‘அடடா’ என்று இருந்தது .

“பிள்ள கொஞ்சம் பொறுமையாக கேள்வியைக் கண்டு பிடித்திருந்தால் பூமி இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்திருக்குமோ?” என்றும் எண்ண வைத்தது.

நம்ம சோதியரும் குமரனும் மிக்ஸரும்... ‘ஹா..ஹா.., ‘சபாஷ்’ போட வைத்தாலும் அதுவெல்லாம் நாம் கால்பதிக்க வேண்டிய இடமாக்கும் என்ற எண்ணமும் வந்தது. வருங்கால நிஜமாகட்டும்.

சுமந்திரன் வரவில் கற்பனை பறக்க ஆயத்தமானாலும் பறக்கவே செய்தாலும் ஏனோ நிஜத்தின் தொந்தரவு இருந்து கொண்டேதான் இருந்தது.

இதுவரை நான் வாசித்து, என் கருத்துகளோடு கதை முன்னோட்டம் சொன்ன கதைகள் அனைத்துமே கணனியில் வாசித்தவை.

அவற்றில் சிலதுகள் புத்தகமாக வாசிக்கக்கிடைக்கவில்லையே , எப்படியும் வாங்கி இன்னொரு முறை வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியும் இருக்கின்றது.

‘கந்தசாமியும் கலக்சியும்’ மிகுந்த ஆவலோடு காத்திருந்து, புத்தகம் கைக்கு வந்ததும் அத்தனை வேலைகளையும் ஓரம் தள்ளிவிட்டு வாசித்து முடித்த கதை.

வாசிக்க விரும்பியவர்கள் இணையத்தில் ‘படலை’ என்கின்ற ஆசிரியரின் ப்ளாக்கில் புத்தகம் வாங்கலாம்.

அதோடு, இரசித்து வாசிக்க பல சிறுகதைகளும் அங்கே கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்

                                          நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார். “பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”