அன்றைக்கு அந்தப்பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்குத் துவாரகா சென்றபோது நேரம் ஏழைத்தாண்டியிருந்தது. கதையை ஆரம்பித்த தேவகி, சற்று நிறுத்திவிட்டு குரொப் பண்ணிவைத்திருந்த ஸ்கிரீன்ஷொட்டை மீண்டும் எடுத்துப்பார்த்தாள். சுதர்சன் இராஜேஸ்வரன். முதல் கொமெண்ட். அவள் ஸ்டேடஸ் போட்டு இரண்டே நிமிடங்களில் போட்டிருக்கிறான். எல்லாமே ஜனவரி எட்டிலிருந்தே ஆரம்பித்தது. இரட்டை முகமூடி. ஹிப்போகிரிட். இதை வெளிப்படையாக எழுதுவதால் அவளுக்கு என்ன அவமானம்? எதுவுமே இல்லை. அவள் என்ன தவறு செய்தாள்? என்ன மண்ணுக்காக அவள் துவாரகா என்ற பெயரில் எழுதவேண்டும் புனைவு என்று சொல்லிப் பிணைந்துகொண்டிருக்கவேண்டும்? ஒரு முடிவெடுத்தவளாய் குரொப் பண்ணிய படத்தை வேர்ட் டொக்கியுமெண்டில் பேஸ்ட் பண்ணிவிட்டுத் தேவகி மீண்டும் எழுத ஆரம்பித்தாள்.