ஏன் என் அடிவயிற்றை
எப்போதுமே பிறாண்டிக்கொண்டிருக்கிறீர்கள்?
தூக்கு விறகின் அடியிலே நாய் பள்ளம் தோண்டுவதுபோல
ஏன் எப்போதும் என்னையே கிளறிக்கொண்டிருக்கிறீர்கள்?
நான், என் மனம், என் விசித்திரங்கள் என்று
என்னோடு நான் பேசும் பொழுதுகளில் மட்டும்
எதற்காக ஒலிபெருக்கிகள் பூட்டிக் கடவுளைத் தேடுகிறீர்கள்?
நான் கூரையைப்பிரித்துவைத்து
வானில் நட்சத்திரங்களை எண்ணுகையில்
எதற்காக உள்ளே எட்டிப் பூராயம் பார்க்கிறீர்கள்?
தண்ணீர்த் தொட்டியை ஏன் உங்களது ஆவுரஞ்சிக்கல் ஆக்குகிறீர்கள்?
கிளியோபற்றாவின் ஊசிகளோடு எதற்காக என்னையே சுற்றிச் சுற்றி நீங்கள் அலையவேண்டும்?
ஈக்களைத் துரத்தக்கூட எதற்காக வாளைச் சுழற்றவேண்டும்?
எப்பொழுதுமே யாரையேனும் நிராகரித்துக்கொண்டேஇருக்கிறீர்களே, ஏன்?
நான் என்று நினைத்து எதற்காக யாரோ ஒருவரைத் திட்டுகிறீர்கள்?
நிற்க.
எனக்கெங்கே மதி போனது?
நான் ஏன் இங்கேயே இன்னமும் சுற்றிக்கொண்டிருக்கிறேன்?
உலகம் முழுதும் எனக்காகத் திறந்து கிடக்கையில்
ஒரு கண்ணாடிக்குவளைக்குள் நான் ஏன் முடங்கிக்கிடக்கவேண்டும்?
உங்களுக்கும் எனக்கும் அப்படி என்னதான் உறவு?
என் மரண வீட்டுக்குக்கூட நீங்கள் வரப்போவதில்லை.
சொட்டுக்கண்ணீர் விடப்போவதில்லை.
கல்வெட்டைக்கூடத் திறக்கப்போவதில்லை.
என் மகிழ்ச்சி, என் துக்கம், என் உறவு, என் பகை
எதுவுமே உங்களை உறுத்தப்போவதில்லை.
நான் ஏன் உங்களையே நினைத்து அழுங்க வேண்டும்?
உங்களோடே சுற்றி அலையவேண்டும்?
யார் நீங்கள் எனக்கு?
உங்களைவிட்டு ஓடித்தப்பி
ஒலிபெருக்கிகளின் வீச்செல்லைக்கு அப்பால்
கிளியோப்பற்றாவின் பொறாமைக்கு வெளியே
நாய்கள் தாண்டாத ஆற்றுக்கு அப்பால்
பாரிய நீர்நிலைக்கு அருகில் ஒரு தண்ணீர்த்தொட்டியாய்
நான் மாறிவிட மாட்டேனா?
யாருமே எட்டமுடியாத
கூரையே முற்றுமில்லாத
அடர்ந்த காட்டுக்குள்
ஒளிந்துகொள்ளக்கூடாதா?
மழை காட்டில் பெய்தாற் போதாதா?
இங்கு கிடந்து மாரடிக்க என்ன வினை எனக்கு?
உங்களோடு எதற்கு முட்டிமோதிக்கொண்டிருக்கிறேன்?
காதலியின் கடைக்கண் பார்வைக்காய் ஏங்கும் நிலை எதற்கு?
உங்களைப்பார்த்து எதற்காகப் பொறாமை கொள்கிறேன்?
ஒரு கவிதை, ஒரு கதை, ஒரு நிலைத்தகவல்,
ஒரு புகைப்படம், ஒரு காணொலி
ஒரு திருமணம், ஒரு மரணம், ஒரு பிறந்தநாள்,
கிடைத்த விருப்பு, கிடைக்காத விருப்பு
கிடைத்த கருத்து, கிடைக்காத கருத்து
கிடைத்த வாழ்த்து, கிடைக்காத வாழ்த்து
ஒரு நட்பு விண்ணப்பம், ஒரு நட்புத் தடை
மற்றவரின் நட்பு, மற்றவரின் விருப்பு
அறியாதவரின் நட்பு, அறியாதவரின் விருப்பு
எல்லாமே
எதற்காக எனக்குப் பதட்டத்தைக் கொடுக்கவேண்டும்?
எனக்குப்பிடிக்காதவர்களுக்கு கிடைக்கும் இகழ்ச்சி
எதற்காக என்னை மகிழ்விக்கவேண்டும்?
என்னோடு இருப்பவரின் உயர்வு
எப்படி என்னை அசூயைப்படுத்துகிறது?
அத்தனைபேரும் இழுக்கும் வடத்தை
எப்போது என் கையும் பற்றிக்கொண்டது?
எல்லாக் கண்களும் என்னையே பார்க்கின்றன
என்று எப்போது எண்ண ஆரம்பித்தேன்?
எல்லாக் கண்களும் என்னையே பார்க்கவேண்டும்
என்று எப்போது எண்ண ஆரம்பித்தேன்?
என்னை அழகனாக்க எத்தனைபேரை
அரியண்டப்படுத்தவேண்டியிருக்கிறது?
என்னை அறிஞன் ஆக்க எத்தனை பேரை
முட்டாளாக்கவேண்டியிருக்கிறது?
என்னை இலக்கியவாதியாக்க எத்தனைபேரை
நிராகரிக்கவேண்டியிருக்கிறது?
நான் மட்டும் தனித்திருக்க எத்தனைபேரை
கொலைசெய்யவேண்டியிருக்கிறது?
என்னுள் உறைந்திருந்த அரக்கனுக்கு
எப்படி நீங்கள் உயிர் கொடுத்தீர்கள்?
ஒரு சாகசக்காரனுக்குரிய இச்சையை
என்னுள் ஏன் தூண்டிவிட்டீர்கள்?
இத்தனைக்குப் பிறகும்
இவ்வளவு அகோரத்துக்குப் பின்னரும்
இமயமளவு விசனத்துக்குப் பிறகும்
ஏன் என் வால் என் சொல் கேளாமல்
சுழன்றுகொண்டே கிடக்கிறது?
ச்சி போ.
**************
படம் : Sayuri Ito
//ஏன் என் வால் என் சொல் கேளாமல்
ReplyDeleteசுழன்றுகொண்டே கிடக்கிறது?//
நிமிர்த்த முடியாது என்பதாலோ
ReplyDeleteவாசகர்கள் நாங்கள் மிகவும் சுயநலம் பிடித்தவர்கள். எங்களுக்கு வேண்டும் என்றால் கட்டாயம் வேண்டும் இல்லையா ச்சீ போ என்று தூக்கி போட்டுவிட்டு அடுத்ததற்கு போய் விடுவோம். எழுத்தாளனும் நம்மை போன்ற சக மனிதன் என்பதை பல சமயங்களில் மறந்துவிடுகிறோம். அவனுக்கென்றொரு மனம்,வாழக்கை,வேலை, சூழல் இருப்பதை மறந்து விடுகின்றோம்.பல சமயங்களில் இவர்களுக்காகவே எழுதவேண்டும் என்றும் உற்சாகத்தையும் சில சமயங்களில் எழுதாவிட்டால் பெரிதாக என்ன தான் நடந்துவிட போகிறது என்ற சலிப்பு தன்மையையும் இந்த வாசகர்களே உருவாக்கிவிடுகிறார்கள். இந்த வாசகர் வட்டத்திற்குள் தன் எழுத்துக்கள் அடைக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதை ஒரு எழுத்தாளன் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர மற்றவர்கள் அல்ல.
மனதை திடப்படுத்தி கொள்ளுங்கள்.எப்போதாவது ஒரு நாள் அட இதை இவர்களுடன் பகிர்ந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணும் போது எழுதுங்கள்.மற்றவர்களுக்காக அல்ல உங்களுக்காக.காத்திருக்கின்றோம்.