Skip to main content

Yarl Geek Challenge – Season 5



கி.பி 1600. 

நெதர்லாந்து நாட்டு மிடில்பேர்க் நகரத்தில் கண்ணாடிக்கடை ஒன்றை நடத்திவருகிறார் லிப்பர்ஷி. பூதக்கண்ணாடி, பார்வைக்குறைப்பாடு உள்ளவர்கள் பயன்படுத்தும் கண்ணாடிவில்லை என்று பல்வேறுவகைக் கண்ணாடிகளும் வில்லைவகைகளும் அவருடைய கடையில் விற்பனைக்குக் கிடைக்கும். லிப்பர்ஷியின் கடையில் அவருக்குத் துணையாக ஒரு உதவியாளரும் வேலைசெய்து வருகிறார். 

ஒருநாள் லிப்பர்ஷியின் உதவியாளர், இரண்டு வில்லைகளை ஓரடி இடைவெளியில் வைத்து அவற்றினூடாக வெகுதொலைவில் இருக்கும் பொருட்களைத் தற்செயலாகப் பார்க்குஞ்சமயத்தில் அந்தச்சம்பவம் இடம்பெறுகிறது. ஆரம்பத்தில் மங்கலாகத் தெரிந்த தூரப்போருட்கள் வில்லைகளுக்கிடையேயான தூரத்தை தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கையில் ஒரு கட்டத்தில் தெளிவாகத் தெரிய ஆரம்பிகின்றன. மிக எட்டத்திலிருந்த தேவாலயம் ஒன்று அருகிலிருப்பதுபோல அவருக்குப் புலப்பட ஆரம்பிக்கிறது. உடனேயே அந்த உதவியாளர் லிப்பர்ஷியிடம் ஓடிச்சென்று தான் கண்டறிந்ததைச் சொல்லியிருக்கிறார். வெகுதொலைவில் இருக்கின்ற பொருளினை, இரண்டு வில்லைகளைக் குறிப்பிட்ட இடைவெளியில் நிறுத்தி, அவற்றினூடு பார்க்கும்போது, அது மிகவும் அண்மித்துத் தெரிகிறது. இதனைக் கண்ணுற்ற லிப்பர்ஷிக்கு அன்றிரவு முழுதும் தூங்கமுடியவில்லை. அடுத்தநாளே மரக்குழாய் ஒன்றினைச் சரிக்கட்டி அதனுள் இரண்டு வில்லைகளை சரியான இடைவெளியில் நிலைநிறுத்திப்பூட்டி எல்லாவிடமும் கொண்டுசென்று தூர இடங்களைப் பார்க்க ஆரம்பிக்கிறார். சாதாரண கண்களுக்குத் தெரியும் எட்டத்துப் பொருட்கள் எல்லாம் அக்குழாயினூடாகப் பார்க்கும்போது மூன்று மடங்கு கிட்டத்தே தெரிந்தன. அடுத்தநாளே லிப்பர்ஷி அக்கண்டுபிடிப்புக்குரிய காப்புரிமையைப் பெற்றுக்கொள்கிறார். காப்புரிமையின் பெயர்,

“For seeing things far away as if they were nearby”.

இந்தக்காப்புரிமை பற்றிய விபரம் விரைவிலேயே ஐரோப்பா எங்கும் பரவ ஆரம்பிக்கிறது. விரைவிலேயே இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவரும் வில்லைகளையும் தூரங்களையும் துல்லியமாக இனங்கண்டு பத்து மடங்கு அண்மித்துக் காட்டக்கூடிய கருவியைக் கண்டறிகிறார். வேறு பலரும் இவ்வேலையில் களமிறங்குகிறார்கள்.

இந்தநிலையில், வில்லைகளைப் பாவித்துத் தொலைகாட்டிகளை உருவாக்கும் இந்த உத்திபற்றி வெனிஸ் நகரத்துக் கலிலியோவும் கேட்டறிகிறார். லிப்பர்ஷியின் ஆரம்ப டிசைனில் பல திருத்தங்களைச் செய்ததன்மூலம் அறுபது மடங்கு அண்மித்துக் காட்டக்கூடிய தொலைகாட்டியைக் கலிலியோ கண்டறிகிறார். அக்காலத்தில் வடிவமைக்கப்பட்ட தொலைகாட்டிகளிலேயே அதிக தொலைவெல்லை கொண்டது கலிலியோவினுடையது.

கலிலியோ ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பின் வினைத்திறனை அதிகரித்ததோடு மாத்திரம் நின்றுவிடவில்லை. அதன் பயன்பாடுகளையும் புதிதாகக் கண்டறிந்தார். தன்னுடைய தொலைகாட்டி சமகாலத்தில் ஐரோப்பாவில் இருக்கும் தொலைகாட்டிகளைவிடப் பலமடங்கு அதிகம் என்று தெரிந்ததும், கலிலியோ அதனையே முன்வைத்துச் சந்தைப்படுத்த ஆரம்பிக்கிறார். உதாரணமாகக் கலிலியோவின் தொலைகாட்டியை வைத்திருக்கும் கப்பல்கள் எதிரிக்கப்பல்களை, அவை இவற்றைப் பார்ப்பதற்கு முன்னமேயே கண்ணுற்றுவிடமுடியும். இதன்மூலம் எதிர்க்கப்பலின் கண்களுக்குள் அகப்படாமல் தப்புவதோ, அல்லது தாக்குதலுக்குத் தயாராவதோ இலகுவாகும். இதனைச் சொல்லிக் காட்டி வெனிஸ் நகரத்தின் தலைவரிடம் தன்னுடைய தொலைகாட்டியை கலிலியோ அதிக விலைக்கு விற்கிறார். 

இது போதாதென்று வணிகர்களிடமும்கூட தொலைகாட்டியை கலிலியோவால் விற்க முடிந்தது. வணிகர்களுக்கு எதற்குத் தொலைகாட்டி என்ற கேள்வி எழுகிறது அல்லவா? கலிலியோவின் தொலைகாட்டியை வைத்திருக்கும் வணிகர்கள், தூரத்தில் வருகின்ற சரக்குக் கப்பல்களை ஏனையவர்களுக்கு முன்னமேயே அறிந்திடமுடியும். அதுவும் ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்னமேயே. ஆக அவர்கள் மற்றவர்களுக்கு முதலேயே தங்கள் கடைகளில் பொருட்களின் விலையைச் சற்றுக்குறைத்து விற்பதன்மூலம், கப்பல்கள் கரைசேர்ந்தபின்னர் இடம்பெறக்கூடிய விலைச்சரிவு நட்டத்தைச் சமாளிக்கமுடியும். 

இப்படி ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியது மாத்திரமல்லாமல் எப்படி அதனை வணிகரீதியாகப் பயன்படுத்தமுடியும் என்பதையும் கலிலியோ அறிந்திருந்தார். செய்துங் காட்டினார். அதே சமயம் தொலைகாட்டியை வானைநோக்கித் திருப்பியதன்மூலம் பிரபஞ்சவியலின் போக்கையே கலிலியோ பின்னாளில் மாற்றிக்காட்டியதும் மத அடிப்படைக் கட்டமைப்புடன் முரண்பட்டதும் நாமெல்லாம் அறிந்தவிடயம்.

ஒரு கண்டுபிடிப்பு என்பது எப்போதுமே புதிதான ஒன்றை உருவாக்குவதாக இருக்கவேண்டியதில்லை. அது ஏலவே இருக்குமொன்றை இனம் காணுதலாகவும் இருக்கலாம். ஏலவே இருக்குமொன்றின் வடிவத்தையோ இயல்பையோ பாவனையையோ சற்று மாற்றுவதாகவும் இருக்கலாம். கண்டுபிடிப்பை நிகழத்துவது என்பது ஒன்று. அதனை முறையாகச் சந்தைப்படுத்துவது என்பது இன்னொன்று. கண்டுபிடித்ததை வைத்துக்கொண்டு மனிதவாழ்வின் போக்கை முன்னகர்த்திச் செல்வது என்பது வேறொன்று. கலிலியோ இந்த மூன்றையும் நிகழ்த்தி, ஒரு விஞ்ஞானியாக, தொழில் முனைஞராக, பிரபஞ்ச அறிவியலின் முன்னோடியாக நினைவுகூறப்படுகிறார்.

கலிலியோ, டெஸ்லா, எடிசன் போன்றவர்கள் நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை நம்மிடையே அரிதாக இடம்பெறும் அதிசயங்கள். அவர்களை விட்டுவிடுவோம். கண்டுபிடிப்புகள் எல்லாம் எப்போதுமே மனிதகுலத்தையே மாற்றியமைப்பதாகவோ, வரலாற்றையே புரட்டிப்போடுவபையாகவே இருக்கவேண்டியது அவசியமானதல்ல. அது மிகக் கடினமானதொன்றாக இருக்கவேண்டிய தேவைகூட இல்லை. மிகச் சாதாரணமான, நாம் அன்றாடம் பார்க்கும், உணரும், சந்திக்கும் விடயங்களிலிருந்தே ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தமுடியும். ஒரு சிறுமாற்றமே பெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்திக்காட்டக்கூடும். அவை சிறிதாக, ஏதாவது ஒரு தேவையை நிவர்த்தி செய்வதாக, ஒரு சிறு அடியை முன்னோக்கி நகர்த்த உதவுவதாக இருந்தாலே போதுமானது. சமயத்தில் அது வலிந்து யோசித்து நிகழ்த்தப்பட்டதாகவும் இருக்கலாம். பலநேரங்களில் தற்செயலாகவும் அமைந்துவிடுவதுண்டு. எதுவெனினும் அடிப்படையாகத் தேவைப்படுவது ஒரு ஐடியா.

அந்தவகையில் எங்கள் அருகாமையில், எங்கள் மத்தியிலிருந்து உருவான ஒரு கண்டுபிடிப்பைப் பற்றிக் குறிப்பிடுவது பொருத்தமானது. 

இது “Yarl IT Hub” வருடாந்தம் நிகழ்த்திவரும் “Yarl Geek Challenge” போட்டியின் மூன்றாவது பருவத்தின்போது இடம்பெற்றது. 

குறிப்பிட்ட அந்த போட்டியிலே ஆர்வமுள்ள இரண்டு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள். விவசாயப்பாசனத்திற்குத் தண்ணீரைப் பாய்ச்சுவதற்கு உதவுகின்ற தானியங்கி இலத்திரனியல் இயந்திரம் ஒன்றின் வடிவமைப்பை முன்மொழிகிறார்கள். மண்ணின், வளியின் ஈரப்பதனைக் கண்காணித்து, மழை வீழ்ச்சி, காற்றின் வேகம் போன்றவற்றைக் கணித்து, ஏனைய வானிலை மாற்றங்களைக் கருத்திற்கொண்டு இந்த இயந்திரம் தண்ணீரைத் தேவையான அளவில் தேவையான சமயத்தில் பாய்ச்சக்கூடியது அக்கருவி. அதுதான் ஐடியா.



Drip Irrigation Automation (DIA) என்றழைக்கப்பட்ட இந்த ஐடியா, Yarl Geek Challenge போட்டியின் மூன்றாவது பருவத்தின்போது பலரது கவனத்தையும் ஈர்த்தது. போட்டி முடிவின்பின்னர் Yarl IT Hub அமைப்பின் அனுசரணையுடன் இதனை அந்த மாணவர்கள் சொந்தத் தொழில் முயற்சியாக ஆரம்பித்தார்கள். ஆரம்பித்து சிறிது காலத்திலேயே, விவசாய நீர்ப்பாசனத்துக்கு என்று ஆரம்பித்த அந்த ஐடியாவின் அடிப்படை, ஏனைய பல தேவைகளுக்கும் பயன்படலாம் என்று கண்டறிகிறார்கள். விளைவு, முன்னணி உல்லாச விடுதிகளில் குளிர்பதனப்படுத்தலைக் கண்காணிப்பது முதற்கொண்டு, தேநீர் இயந்திரங்களை மையக்கட்டுப்பாடு மூலம் ஒருங்கிணைப்பதுவரை பல்வேறுவகைத்தேவைகளுக்கு DIA இன் ஆதாரவடிவம் இப்போது பயன்படுத்தப்படுகிறது. இன்று மொரட்டுவைப் பல்கலைக்கழகம் நடத்தும் ஆழ்கடல் சார்ந்த ஆய்வு ஒன்றுக்கும் இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாகத் தெரியவருகிறது. இலங்கை தாண்டி ஏனைய நாடுகளுக்கும் இதனைச் சந்தைப்படுத்தும் சாத்தியங்களும் இப்போது ஆராயப்படுகின்றன.

ஒரு கண்டுபிடிப்பு. அதனை பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தல். வேறு விஞ்ஞான ஆய்வுகளுக்கும் அது பிரயோசனமாதல் என்கின்ற அத்தனை முக்கிய புள்ளிகளையும் “DIA” என்ற இக்கண்டுபிடிப்பு தன்னளவில் நிகழ்த்தியே காட்டியிருக்கிறது. #திருப்தி. #நம்பிக்கை. 

DIA (www.senzmate.com), Busseat (www.busseat.lk) என்று இன்றைக்குப் பல தொழில்முயற்சி நிறுவனங்கள் “Yarl IT Hub” இனுடைய இந்த “Yarl Geek Challenge” போட்டி ஊடாகப் பரிணமித்து வந்திருக்கின்றன. ஐடியா அவரவருடையது. அதனை வடிவமைத்ததும் அவர்களே. ஆனால் ஒரு ஐடியாவை சந்தைப்பொருளாக மாற்றுவதற்கான ஆலோசனைமுதல், அவற்றைக் காட்சிப்படுத்துவதற்கான தளத்தைக் கொடுத்தது, முதலீட்டாளர்களை அவற்றோடு இணைத்துவிட்டது, பயனாளர்களையும் ஒருங்கிணைத்தது, எல்லாவற்றுக்கும் மேலாக நாமும் ஒன்றைக் கண்டுபிடித்து சந்தைப்படுத்தி தொழில் முயற்சியாளர் ஆகலாம், அதில் வெற்றியும் பெறலாம் என்ற நம்பிக்கையையும் சாத்தியத்தையும் கொடுத்தது என்று பல்வேறு வழிகளில் இளையவர்களை ஊக்கப்படுத்தியதில் “Yarl IT Hub” க்கும் அதன் “Yarl Geek Challenge” க்கும் நிறையவே பங்குண்டு. தொழில் முயற்சி என்பதைத்தாண்டி, பல்வேறு தகவல் தொழில்நுட்பம்சார் நிபுணர்கள் கூடுமிடத்தில் இவ்வாறான அனுபவங்களையும் அறிவினையும் தொடர்புகளையும் பெற்றுக்கொள்வதே மிகவும் பயனுள்ளவிடயம் அல்லவா?

அந்த “Yarl Geek Challenge” இன் ஐந்தாவது பருவம் இப்போது ஆரம்பிக்க இருக்கிறது.



இம்முறையும் “Yarl Geek Challenge” போட்டி, முதலீட்டாளர்கள், கணினி நிறுவனங்கள், நிபுணர்கள், ஆலோசகர்கள், ஆர்வலர்கள் என்று எல்லோரையும் ஒன்றிணைக்கும் நிகழ்வாக இடம்பெற இருக்கிறது. இலங்கை நிறுவனங்கள் மாத்திரமன்றி சில வெளிநாட்டு நிறுவனங்களும்கூட இம்முறை இதில் பங்கெடுக்கின்றன. GIZ (www.giz.de) என்கின்ற ஜேர்மனிய நிறுவனம் Jay Cousins (jaycousins.wordpress.com) போன்ற தொழில் விருத்தியாளர்களை அனுப்புவதாக உறுதியளித்திருக்கிறது.

நீங்கள் இந்தப்போட்டியில் இணையவிரும்பினால், உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு அணியை ஆரம்பித்து, பல்வேறு ஐடியாக்களைக் கலந்தாலோசித்து, ஒரு ஐடியாவை இறுதிசெய்து மெருகூட்டுங்கள். ஏலவே அதற்கொத்த ஒரு ஐடியா வேறெங்கேனும் உருவாக்கப்பட்டிருந்தால், அதிலிருந்து உங்களது எத்தனை வித்தியாசமானது, தனித்துவமானது என்று கண்டறிந்து, அதனை மேலும் சீர்திருத்துங்கள். பின்னர் அதன் மென்பொருளையும் வன்பொருள் ஏதேனும் இருந்தால் அதனையும் சந்தைப்படுத்துவதற்கு ஏதுவான ஆகக்குறைந்த சாத்தியமுள்ள பொருளாக (Minimum Marketable Product) மாற்றியமையுங்கள். பின்னர் மீள்பார்வை செய்யுங்கள். திருத்துங்கள். மீள்பார்வை செய்யுங்கள். திருத்துங்கள்.... செய்நேர்த்தி என்பதற்கு முடிவே இல்லை. இறுதிநாள்வரை அது தொடர்ந்துகொண்டே இருக்கட்டும்.

அதற்கிடையில், 

வரும் செப்டம்பர் முப்பதாம் திகதி விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதிநாள் என்பதால் அதற்குள் உங்கள் அணியைப் பதிவு செய்யுங்கள். தாமாதிக்கவேண்டாம். 

The best way to accomplish something is to start it!

Yarl Geek Challenge - பருவம் ஐந்தின் விபரங்கள் மற்றும் விதிமுறைகள் அனைத்தும் www.yarlithub.org/ygc/ எனும் இணையத்தள முகவரியில் அறிந்துகொள்ள முடியும். மேலும் ஆர்வமுள்ளோர் www.yarlithub.org/ygc/timeline.html எனும் முகவரியில் போட்டிக்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும். போட்டியில் பங்குபெற விரும்புவோர், எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன் தங்கள் விண்ணப்பங்களை event@yarlithub.org எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.



உசாத்துணைகள்
The Big Bang – Simon Singh
www.scienceclarified.com/scitech/Telescopes/The-First-Telescope.html

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...