Skip to main content

இடியட்





கடந்த இருவாரங்களாக தாஸ்தாயேவ்ஸ்கியின் “இடியட்” என்ற நாவலை ஒலிப்புத்தகமாகக் கேட்டுவருகிறேன். ரயில் யன்னலோரமாக உட்கார்ந்து, அதன் மிதமான தள்ளாட்டத்தோடு கதைகளை வாசித்து வந்தவனுக்கு மகிழூந்திலே பயணம் செய்யும்போது ஒலிப்புத்தகத்தைக் கேட்பது என்பது புது அனுபவம். முன்னால் செல்லும் வாகனம் பாதை மாறும்போதும், சிக்னல் நிறம்மாறும்போதும், பின்னால் வரும் வாகனத்திலுள்ள பெண் மூக்கு குடையும்போதும் புத்தகத்திலிருந்தான நம்முடைய கவனம் தவறும். 

புத்தகத்தை வாசிப்பதற்கும் ஒலிப்புத்தகத்தைக் கேட்பதற்கும் பாரிய வித்தியாசம் உண்டு. ஒலிப்புத்தகத்தில் நமக்கும் புத்தகத்துக்குமிடையே வாசிப்பவர் எப்போதுமே விளக்குப்பிடித்துக்கொண்டு நிற்பார். அது வாசகருக்கும் புத்தகத்துக்குமான நெருக்கத்தையும் ஆழமான அமைதியையும் குலைக்கிறது. கூடவே வாசிப்பவரின் வேகத்துக்கும் குரல்மொழிக்கும் நம்முடைய மனவேகம் இயைவாக்கப்படவேண்டும். நாமே வாசிக்கும்போது எங்கோ ஒரு ஆழத்தில் ஒலிக்கின்ற நம்முடைய தனித்த குரல் இங்கே ஒலிக்காது. எழுத்துநடை போன்று ஒவ்வொரு வாசகருக்கும் ஒரு தனித்த நடை உண்டு. வாசகருக்கேயுரிய எள்ளல், சிரிப்பு, ஆண், பெண் முதியவர், சிறுவர் என்ற பலவித பாத்திரக்குரல்கள் உண்டு. ஆனால் ஒலிப்புத்தகத்தில் அவை எல்லாமே இன்னொருவருக்கு சொந்தமாகி அவர் குரலிலேயே வாசிக்கவேண்டிய நிலை நமக்கு ஏற்பட்டுவிடுகிறது. திடீரென்று பெர்டின்செங்கோ யாரென்ற குழப்பம் வருகையில் முன்னே இரண்டு பக்கங்கள் சென்று பார்த்துவிட்டும் வரமுடியாது. சில வசனங்களை வாசித்தபின்னர் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு யன்னல்வெளியே வெறித்துப்பார்க்கும் அனுபவமும் இதில் இல்லை. வேண்டுமானால் சற்று நிறுத்திவிட்டுப் பின்னர் தொடரமுடியும். இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் வாகனத்தில் பயணிக்கின்ற அந்த இரண்டுமணி நேரத்தைப் பயனுள்ளவகையில் பயன்படுத்த இதைவிட வேறுவழி தெரியவில்லை.

“இடியட்” நாவலில் பிரதான பாத்திரம் பிரின்ஸ் மிஸ்கின். நேர்மையான அப்பாவி. அந்த அப்பாவியைக் கொண்டே சென்பீட்டர்ஸ்பேர்க் சமூகத்தின் அபத்தங்களை தாஸ்தாயேவ்ஸ்கி(வழமைபோல) புட்டுப்புட்டு வைப்பார். தாஸ்தாயேவ்ஸ்கியின் பெண் பாத்திரங்கள் ஆண் பாத்திரங்களைவிட எப்போதுமே விசித்திரங்களாக, புரியாத புதிர்களாக இருக்கும். அதில் ஒருவித மிகையும் இருக்கும். சூதாடியில் வரும் பலீனா, சூதாட்டக் கிழவி. இடியட்டில் வரும் நட்டாசியா பிலிப்போவ்னா என எல்லோருமே மிகைத்தன்மை வாய்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். கரீனாவைக்கூட அவ்வளவு குழப்பமான சஞ்சலம் நிறைந்த பெண்ணாக dramatize பண்ணி தோல்ஸ்தாய் காட்டியிருக்கத்தேவையில்லை. பெண்கள் புரிந்துகொள்ளப்பட முடியாதவர்கள், புதிரானவர்கள் என்கின்ற பொதுப்படையான ஆண்பார்வையின் விளைவே அது என்று நினைக்கிறேன். சமகாலப் படைப்பாளிகளான லாகிரி(Interpreter of Maladies), கோர்ட்சே (Disgrace) போன்றவர்கள் பெண்களை விசித்திரம் நிறைந்தவர்களாகக் காட்டுவதில்லை. மனச்சிதைவுகள் எல்லோருக்குமே பொதுவானவை. அவை இயல்பு. அதில் ஆண் பெண் வேறுபாடுகள் இல்லை. மனச்சிதைவுகளை அதீத மிகையோடு காட்டவேண்டிய எந்தத்தேவையுமில்லை. ஆனால் அப்படிக்காட்டும்போது ஒருவித கிளர்ச்சி ஏற்படுகிறது. வசதியான அடித்து ஆடக்கூடிய படைப்பு வெளி கிடைக்கிறது. எழுதும்போதும், வாசிக்கும்போதும். அதை வசதியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவ்வளவே. அட்டைப்படக் கவர்ச்சியின் செவ்வியல் வடிவம் இது. லோலாண்ட் என்கின்ற லாகிரியின் சமீபத்திய நாவலில் வருகின்ற கௌரி பாத்திரம் ஒரு மனச்சிதைவு நிறைந்த பெண் பாத்திரத்தை எவ்வளவு இயல்புத்தன்மையோடு சப்டிலாகக் காட்டலாம் என்பதற்கு பாலபாடம். 

இடியட்டில் பிரின்ஸ் மிஸ்கின் பேசுகின்ற ஒரு வசனம் இரண்டுநாட்களாக மனதைப்போட்டு அலைக்கழித்துக்கொண்டிருக்கிறது.
Colia : “Hippolyte is an extremely clever boy, but so prejudiced. He is really a slave to his opinions.’ 
Prince : ‘Do you say he is consumptive?’
நம்மில் பலர் முன்முடிபுகளால் நிறைந்திருக்கிறோம். நம்முடைய கருத்துகளின் அடிமைகளாக இருக்கிறோம். அவை சரியாக அமைவதற்காக எந்த எல்லைக்கும் போகத்தயாராகவிருக்கிறோம். ஒருவரை எடைபோட்டுவிட்டே அவருடன் பழகத்தொடங்குகிறோம். நாம் போட்ட எடைக்கு அமையவே அவரை உருவகிக்கிறோம். கல்லுக்குள்ளே சிலை ஏலவே இருக்கிறது, அதை செதுக்கி வெளியே எடுக்கும் வேலையை மாத்திரமே சிற்பி செய்கிறார் என்பது கவித்துவத்துக்கு வேண்டுமானால் உதவலாம். ஆனால் நிஜத்தில் சிற்பத்தை, கல்லைக் காணும்போதே (சமயத்தில் அதற்கு முதலே) சிற்பி உருவகித்துவிடுகிறார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தன் மனபிம்பத்திற்கேற்ப கல்லைச் செதுக்க ஆரம்பித்துவிடுகிறார். அதனாலேயே எல்லா சிற்பங்களும் நமக்கு ஏலவே தெரிந்த காந்தியாகவோ பாரதியாகவோ அப்துல்கலாமாகவோ சிவபெருமானாகவோ இருக்கிறார்கள். ஒரு குப்பனோ, சுப்பனோ, நமசிவாயமோ, நாகமுத்துவோ சிலையில் தெரிவதில்லை. தாஸ்தாயேவ்ஸ்கி சொல்லும் விஷயம் “கல்லை ஏன் செதுக்குவான்?” என்பது. அப்படியே விட்டுவிடவேண்டும். அது ஆவுரஞ்சியாகட்டும். தோய்க்கப்பயன்படட்டும். தான்தோன்றி என்றால் கோயில் கட்டி கும்பிடவும் முடியும். ஆனால் நீ செதுக்கி அதன் இயல்பைக் கெடுக்காதே. 

ஒரு இடத்திலே கார்னியா மிஸ்கினைப்பார்த்து "நீ ஒரு முட்டாள்" என்பான். பிரின்ஸ் எந்தச் சலனமுமில்லாமல் இப்படிப் பதில் சொல்லுவான்.

‘I think I ought to tell you, Gavrila Ardalionovitch, that though I once was so ill that I really was little better than an idiot, yet now I am almost recovered, and that, therefore, it is not altogether pleasant to be called an idiot to my face. Of course your anger is excusable, considering the treatment you have just experienced; but I must remind you that you have twice abused me rather rudely. I do not like this sort of thing, and especially so at the first time of meeting a man, and, therefore, as we happen to be at this moment standing at a crossroad, don’t you think we had better part, you to the left, homewards, and I to the right, here? I have twentyfive roubles, and I shall easily find a lodging.’

இன்னுமொரு இடத்தில் மீண்டும் இந்த முட்டாள் பேச்சு வருகையில் பிரின்ஸ் இப்படிச் சொல்லுவான்.

“I am often called an idiot, and at one time I certainly was so ill that I was nearly as bad as an idiot; but I am not an idiot now. How can I possibly be so when I know myself that I am considered one?”

திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டேயிருக்கலாம்.

How can I possibly be so when I know myself that I am considered one?

Comments

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .