Skip to main content

ஜல்லிக்கட்டு - கடிதம்



ஜேகே,

அதிக பணிச்சுமையில் இருப்பது போல் தெரிகிறது, அப்படியென்றால் இந்த ஈமெயிலுக்கு பதிலெழுத வேண்டாம். கீழே நீங்கள் எழுதியது:

"ஒரு இனம் அடிமைப்பட்டுக் கிடந்தால் உடனே "புறப்படு, பொங்கியெழு, புரட்சி" என்று கோபாவேசத்தோடு முகநூல் எனும் பூமியில் குப்பைகள் போடுவதற்காக அமைக்கப்பட்ட தொட்டியில் போடுவார்கள். ...............ஒரு கட்டத்தில் வேறொரு புத்திசாலி புதிதாக இன்னொரு குப்பையைப் போடவும், ரோட்டிலே சிதறிக்கிடக்கும் பழைய குப்பைகளை எல்லோரும் மறந்துவிடுவார்கள். .............................கேட்டால் சமூக வலைத்தளம் என்பார்கள். குப்பை தொட்டிகளிலேயே பூமிக்கிரகத்தின் அத்தனை புரட்சிகளும் எழுச்சியும் வீழ்ச்சியும் இடம்பெறுகின்றன."

இப்படியெழுதிட்டு, தமிழ்நாட்டில் நடந்த தன்னெழுச்சி போராட்டத்தை பற்றி (ஆதரித்தோ/எதிர்த்தோ) எதுவும் சொல்லாமல் விட்டது ஏன்? கேட்கனும் நினைச்சேன் கேட்டுவிட்டேன்.

மோகன்

வணக்கம் மோகன்,

என் நல்லகாலம், பணி இதுவரைகாலமும் சுமையின்றி சுகமானதாகவே இருந்து வந்திருக்கின்றது. வாசிப்புக்கான நேரம் இரயில் பயணங்கள் இல்லாமையால் குறைந்துபோனாலும் ஒவ்வொரு காலையும் ஏதோவொன்றை எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். ஓரிரு சஞ்சிகைக் குளங்களுக்குள் கல் எறிந்திருக்கிறேன். விரைவிலேயே படலையில் அவை வரும்.

நிற்க. இரு விடயங்களைப்பற்றி இணைத்துக் கேட்டிருக்கிறீர்கள். ஒன்று ஜல்லிக்கட்டு பற்றியது. மற்றையது சமூக வலைத்தளம் சம்பந்தப்பட்டது. 

ஜல்லிக்கட்டை ஆதரிப்பதற்கு ஒன்றல்ல, பல காரணங்கள் உண்டு. ஒரு ஒடுக்கப்பட்ட, இன்னமும் நைச்சியமான அடையாள அழிப்பை எதிர்கொண்டிருக்கின்ற இனம் என்ற வகையிலே தமிழர்களது குறுந்தேசியவாதத்தை, உருப்படியான மாற்றீடுகள் இல்லாதவரைக்கும், அதன் குறைகளை விமர்சித்துக்கொண்டே ஆதரிக்கவேண்டும் என்பது என்னுடைய அடிப்படை அறம். அந்த இனத்தின் மத்தியிலிருந்து அடையாள அழிப்புக்கு எதிராக எழும் குரல்களுக்கு எப்போதுமே என்னுடைய தார்மீக ஆதரவு உண்டு. ஜல்லிக்கட்டு என்பது தமிழகத்தின் சில பகுதிகளில் மாத்திரம் நிகழும் ஒரு விளையாட்டு என்றாலும் அதன் காரண காரியங்கள் தமிழர்களின் மரபோடும் வாழ்வியலோடும் பின்னிப்பிணைந்தவை. கோபுர உச்சிக்கலசத்தில் விதைத் தானியங்களை பாதுகாப்பாக சேமிப்பதும் பன்னிரு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோயிலில் கும்பாபிஷேகம் நிகழ்த்துவதும் (நன்றி கறுத்தக்கொழும்பான் தொகுப்பு) எப்படி எம்முடைய விவசாயப் பாரம்பரியத்துடன் சம்பந்தப்பட்டதோ அதுபோலவே ஜல்லிக்கட்டும். மத எதிர்ப்பையும் பகுத்தறிவுவாதத்தையும் முன் வைக்கும்போது மதத்தோடு ஒன்றிக் கட்டமைக்கப்பட்ட, தற்காலத்துக்கு இயைபான மரபினைக் காப்பற்றத்தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டும். அதேபோலவே மிருகவதைகளை எதிர்க்கும் செயற்பாடுகளின்போதும் மரபுரிமைகளைப் பேணுதல் என்ற நிகழ்வு முக்கியமாகிறது. அந்தப் புரிதல் மிருகவதை எதிர்ப்பாளர்களுக்கும் இருத்தல்வேண்டும். 

மாட்டிறைச்சியை முக்கிய ஏற்றுமதிப்பொருளாகக் கொண்டுள்ள ஒரு நாட்டில், குழந்தைபோல சீவிச் சிங்காரிச்சு வளர்க்கப்பட்டு, விளையாட்டுத் திடலிலும் ஒப்பீட்டளவில் அதிக கொடுமைகளை எதிர்கொள்ளாத ஒரு பிராணிக்கான நிகழ்வைத் தடை செய்ய ஏன் உச்சமன்று மட்டும் போகவேண்டும் என்பதற்கு hypocrisy என்ற பதிலைவிட வேறெதையும் எண்ணமுடியவில்லை. எங்கள் ஊரிலே ஆலயங்களில் வேள்விக்கு ஆடு, கோழிகளை அறுப்பார்கள். சில இடங்களில் இது பெரிய அளவில் இடம்பெறும். “அகில இலங்கை சைவ மகாசபை” இதற்கு எதிராக வழக்குப்போட்டு தடையுத்தரவு வாங்கியது. இதன்பின்னாலுள்ள அரசியலும் ஜல்லிக்கட்டுக்குப் பின்னாலுள்ள அரசியலும் வேறுவேறு முகமூடிகள் அணிந்த ஒரே அதிகார மையங்களுடையவை. வேள்விகளை யார் செய்கிறார்கள் என்பது வேள்விக்கெதிராக இயங்குபவர்களைக்கொண்டே இலகுவாக அறிந்துகொள்ளமுடியும். இங்கே கரிசனை மிருகங்கள்மீதா? மதம் மீதா? சாதிகள் மீதா? அடிப்படை மையம் அதிகாரம்தான்.

ஜல்லிக்கட்டுக்கான ஆதரவுக்கு இன்னொரு காரணம், அது இன்றைய இளைஞர்களை லட்சக்கணக்கில் இலவச பஸ், புரியாணிப்பொட்டலங்கள், பதவி எதிர்பார்ப்புகள் ஏதுமின்றித் திரட்டியதுதான். நானறிந்து இவ்வகை மக்கள் எழுச்சி இதற்கு முன்னர் திலீபன் உண்ணாவிரதத்தின்போது இடம்பெற்றது. எனக்கு அப்போது ஏழெட்டு வயது. அப்பாவுடன் உண்ணாவிரதத் திடலைச் சுற்றிவந்தது ஞாபகம் இருக்கிறது. ஆனால் அப்போராட்டத்தில்கூட மக்களின் பங்களிப்பு உணர்ச்சிமயமான ஆதரவு என்ற அளவில் மாத்திரம் நின்றுகொண்டது. பொதுமக்கள் இரண்டு சொட்டுக் கண்ணீரோடு வீடு திரும்பி இரவுக்கான உணவைத் தயார்செய்தார்கள். மாணவர்கள் வீதி முன்றல்களில் சைக்கிள்களில் கூடி அதுபற்றிப் பேசிக்கொண்டார்கள். விமர்சகர்கள் திலீபன் நீரருந்துகிறார், அவருக்கு ஏலவே மீளாவியாதி என்று இயலாமையால் புரளி சொன்னார்கள். இளைஞர்கள் புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டார்கள். ஆனால் அடுத்தது என்ன என்று அவர்களுக்குத் தெரியாது. முடிவுகளையும் அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் தலைமையே எடுத்துக்கொண்டது. அது மக்கள் பங்கெடுத்த போராட்டம். ஆனால் மக்களால் முன்னெடுக்கப்பட்டதல்ல. இறுதியில் திலீபனின் உடல் யாழ் மருத்துவப் பீடத்துக்கு கையளிக்கப்பட்டது. 

இந்த ஜல்லிக்கட்டுப்போராட்டம் பெரிதான அரசியல் பின்னணி இல்லாத சாதாரண இளைஞர் குழுக்களால் ஒருங்கிணைக்கப்பட்டு பின்னர் பிருமாண்டமாக விரிந்ததொன்று. இங்கே முடிவுகள் அவ்வவ் சிறு குழுக்களாலேயே எடுக்கப்பட்டன. போராட்டத்தில் ஒருவித உணர்ச்சிமயமான மட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகமும் ஒழுக்கமும் பேணப்பட்டது. மட்டுப்படுத்தப்பட்ட என்று நான் குறிப்பிட்டமைக்கு காரணம் பீட்டாவை எதிர்த்தவிதம். அறிவியல், தர்க்கம், வரலாற்று ரீதியாக காரணங்கள்கொண்டு (எஸ்.ரா அறிமுகப்படுத்திய ஆவணப்படம் ஒரு சிறந்த மூலம்) பீட்டாவை எதிர்க்காமல் பீட்டாமீதும் அதன் உறுப்பினர்கள்மீதும் ஒருவித வன்முறை பிரயோகிக்கப்பட்டது. எனினும் இளைஞர்களால் தன்னிச்சையாக ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டம் என்றளவிலே இது பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. 

ஜல்லிக்கட்டு மீதும் மரபுரிமைகளைப் பேணுதல்மீதும் சமரசமின்றிய ஆதரவு எனக்கு இருந்தாலும், முன்னெடுக்கப்பட்ட போராட்டம் மீது ஒருவித அயர்ச்சிகலந்த விமர்சனப்பார்வை உண்டு. சமூக ஊடகங்களின் துணைகொண்டு ஒருங்கிணைக்கப்படும் இவ்வகை போராட்டங்கள் அண்மைக்காலமாக உலகின் பல மூலைகளிலுமே இடம்பெறுகின்றன. தாய்லாந்து, தென்கொரிய ஆகிய நாடுகளில் இடம்பெற்ற ஆட்சிக்கெதிரான போராட்டங்கள் தொடங்கி புதிய அமெரிக்க ஜனாதிபதிக்கெதிராக பெண்கள் அமைப்புகள் முன்னெடுத்தபோராட்டம்வரை பலவகைப் போராட்டங்கள் சமூக ஊடகங்களினூடாகவே முன்னெடுக்கப்பட்டன. சில போராட்டங்கள் உலகம் முழுதும் ஒருங்கிணைக்கப்படுவதற்கும் சமூக ஊடகங்கள் உதவி செய்கின்றன. நியாயமான நோக்கத்துக்கான ஆதரவு உணர்ச்சியே இப்போராட்டங்களுக்கு இளைஞர்கள் தன்னிச்சையாகக் கூடியமைக்கான மையக்காரணம் என்றாலும் பல மற்றமைகளும் இங்கே இருக்கின்றன. இவ்வகை நடவடிக்கைகள் கொடுக்கின்ற ஒருவகை கிளுகிளுப்பு, நம்மீது கிடைக்கின்ற உடனடிக் கவனிப்பும் வெளிச்சமும், கூட்டம் கூடுதலில் கிடைக்கின்ற கொண்டாட்ட உணர்வுகள், ஒரு நல்லகாரியத்துக்கு துணை நிற்கிறோம் என்கின்ற அறவுணர்ச்சியின் அருட்டல் என எல்லாமே நம்மைப் போராடத்தூண்டுகின்றன. அதேசமயம் எந்தப்போராட்டம் மீது இந்தக்காரணிகள் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துமோ அதன்மீது நாமும் கவனத்தைத் திசை திருப்புகிறோம். நீங்கள்கூட வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரை மீளக்கொண்டுவரும் கோரிக்கையை முன்வைத்து நிகழ்த்தப்படும் போராட்டத்துக்கான என் ஆதரவு பற்றிக் கேள்வி எழுப்பவில்லை. இப்போது கேப்பாபுலவு எனும் கிராமத்திலே ஸ்ரீலங்கா இராணுவத்தினர் அபகரித்துள்ள காணிகளை விடுவிக்க சிறு மக்கள் போராட்டம் ஒன்று இடம்பெறுகிறது. இந்தப்போராட்டங்களுக்கான ஆதரவு அலை ஈழத்தமிழர் மத்தியில் ஜல்லிக்கட்டுக்குக் கிடைத்த ஆதரவு அலையோடு ஒப்பிடுகையில் மிகச்சிறிதே. அதிலும் சில அலைகள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளித்தமையால் இதற்கும் ஆதரவளிக்கவேண்டும் என்கின்ற எண்கணித சிந்தனையாலும் உருவானவை. 

அதாவது, ஜனரஞ்சகப் போராட்டங்களே நம்மை அதிகம் பாதிக்கின்றன. பாதிக்க நாங்கள் அனுமதிக்கிறோம். இன்னுமொன்று நாங்கள் அதிகம் அச்சுறுத்தல் இல்லாத போராட்டங்களை இலகுவாக செய்துவிடுகிறோமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. அதிகாரம், வன்முறை துணைகொண்டு ஒரு போராட்டத்தை தயவு தாட்சண்யம் இன்றி அடக்கும் என்றால் அதனை முன்னின்று நிகழ்த்த எத்தனை இளைஞர்கள் வருவார்கள் என்பது சந்தேகமே. அதற்காக அவ்வகை போராட்டங்களை மாத்திரம்தான் நிகழ்த்தவேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால் எல்லாமே எம் வசதி நிமித்தம், சௌகர்யம் நிமித்தம் செய்யப்படுகிறது என்று எண்ணத்தோன்றுகிறது. இவ்வகைப்போராட்டங்களுக்கு ஒருவித “follow-up” இருக்காது. உணர்ச்சிவேகத்தில் செய்துவிட்டு, ஒருகட்டத்தில் வெற்றி முழக்கத்துடன் கலைந்துபோய்விடுவார்கள். யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் நிலத்தடி நீரில் எண்ணெய் கலப்பது சம்பந்தமான போராட்டத்திற்கும் இதுவே நிகழ்ந்தது. இந்தப்போராட்ட உணர்வை நம்பி ஒரு மாபெரும் சமூகப்பிரச்சனைக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தால் ஏமாற்றமே எஞ்சும். 

இன்னொரு விமர்சனம் தலைமைத்துவம் சார்ந்தது. தலைமைகளே இல்லாமல் நிகழ்த்தப்பட்ட போராட்டம் என்று பலர் பெருமைப்பட்டார்கள். ஆனால் அதில் எனக்கு வேறு கருத்து உண்டு. அரேபிய வசந்தத்தின் இன்றைய கீழ்நிலைக்கு சரியான தலைமைத்துவம் இன்றி அப்போராட்டம் நிகழ்த்தப்பட்டதே மிக முக்கிய காரணம். மேய்ப்பர் இல்லாத மந்தை புல்லும் நீரும் இருக்கும்வரையிலும் மகிழ்ச்சியோடு கூட்டமாய் இருக்கும். தீர்ந்தபின் தம்பாட்டுக்கு விலகிச் செல்லும். அப்போது அவற்றை நரிகளிடமிருந்தும் ஓநாய்களிடமிருந்தும் காப்பாற்ற சிறந்த மேய்ப்பர் ஒருவர் வேண்டும். ஜல்லிக்கட்டு பிரச்சனையின் ஈற்றில் இடம்பெற்ற குழப்பங்கள் அதன் மேய்ப்பர் இல்லாத குறையை துல்லியமாக இனங்காட்டியது. மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தது சிறப்பு. ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் தம் மேய்ப்பர்களை அடையாளம் காணுதல் வேண்டும். அது இங்கே இடம்பெறாமலேயே போய்விட்டதாலேயே கடைசியில் ஓநாய்களிடம் சிக்கிச் சீரழியவேண்டிவந்தது..

“டீலா, நோ டீலா” நிகழ்ச்சியில் விளையாடுபவர்களுக்கு அவ்வப்போது வங்கியாளர் ஒரு ஓபர் கொடுத்து அதனை வாங்கிக்கொண்டு வெளியேறலாம் என்பார். சில புத்திசாலிகள் நிகழ்தகவைக் கணித்து சரியான சமயத்தில் ஓபரை வாங்கிக்கொண்டு வீடு செல்வர். ஒரு சிலர் பேராசையால் இறுதிமட்டும் விளையாடி ஒரு ரூபாயோடு வீடு செல்வதும் உண்டு. “When to call it quits” என்பது ஒரு தலைமைத்துவப் பண்பு. ஒரு கலை. உணர்ச்சி மிகுதியாயிருக்கையில், மக்கள் பேரலை இருக்கும்போது நடக்கும் போராட்டத்தை முடித்துவைக்க மனமே வராது. முடித்துவைக்க முனைந்தாலும் எதிர்ப்பும் துரோகிப்பட்டமும் கிட்டும். ஆனால் தாமதிக்க தாமதிக்க அதுவே நம் தலைக்குச் சத்துருவாக மாறிவிடும். போராட்டத்துக்கான ஆதார காரணங்கள், வளங்களை சீர்தூக்கிப்பார்க்கத் தவறுவதன் விளைவே அது. ஒரு சில தலைவர்களே இந்த முடித்துவைக்கும் கலையில் சிறந்து விளங்கியிருப்பர். காந்திக்கு அது இருந்தது. அண்மைக்காலத்தில் யாசிர் அரபாத்துக்கும் அது இருந்தது. ஆனால் இங்கே போராட்டங்கள் சிறு சிறு குமிழ்கள் சார்ந்து முன்னெடுக்கப்பட்டதால் அவர்களுக்கு கிடைத்த தற்காலிக வெளிச்சத்தை அவர்கள் இழக்கத் தயாராகவிருக்கவில்லை. விளைவு, அமைதியாக, சச்சரவின்றி முடித்து வைக்கப்பட்டிருக்கவேண்டிய பிரச்சனை களேபரத்தில் சென்று முடிந்தது. 

இவற்றை எல்லாம் ஏன் நான் எழுதவில்லை என்று கேட்டிருக்கிறீர்கள்? நான் “ஏன் எழுதவேண்டும்?” என்று கேட்டுப்பார்த்தேன். அவ்வளவுதான். கேள்வியைக் நீங்கள் கேட்டும்கூட மூன்று வாரங்களாகிவிட்டன. பதிலை எழுதாமல் தாமதித்தே வந்தேன். இன்னொரு சமூகக்குப்பையை போட்டுவிடக்கூடாது என்கின்ற கவனம். என்னுடைய எண்ணத்தையும் எழுத்தையும் இப்படியான பிரச்சனைகளே ஆக்கிரமித்து தீர்மானிக்கின்றனவோ என்கின்ற விசனம். இரண்டுமே உடனடியாக எழுதாமைக்கான காரணங்கள்.

எழுதாமைக்கான மிகமுக்கிய காரணம் தனித்திருத்தலே. இப்போது குட்டிச்சுவரில் உட்கார்ந்து வீதியால் போய்வருபவர்களை வேடிக்கை பார்த்து கருத்துச்சொல்லும் விடுப்புக்குணம் அகன்றுகொண்டிருக்கிறது. கூடவே நான் பேசுவது யாரோடு என்ற குழப்பமும் சேர்ந்துகொள்கிறது. அன்றைக்கு சும்மா “கந்தசாமியும் கலக்சியும்” என்று டுவிட்டரில் தேடினேன். ஒருவர் புத்தகத்தோடு செல்பிபோட்டு வாசித்துக்கொண்டிருப்பதாக தகவல் போட்டிருந்தார். இன்னொரு சிறு குழு வெள்ளி பற்றி மாறி மாறி தமக்குள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார் என்று எனக்குத்தெரியாது. எந்த ஊர், நிறம், குணம் எதுவும் தெரியாது. அவர்களோடு நேரடித் தொடர்பேதுமில்லை. ஆனால் அவர்களோடு எனக்குத்தெரியாமலேயே பேசிக்கொண்டிருக்கிறேன். இக்கணமும் மறைந்தபின்னர், நானும் மறைந்தபின்னர், இந்தப்போராட்டங்களின் நினைவுகளும் ஒழிந்தபின்னர் கந்தசாமியும் கலக்சியும், வெள்ளியும், காதலிகளும் எஞ்சியிருப்பர். மனிதர்களும் என்னோடன்றி அவற்றோடு பேசிக்கொள்வர். எப்போதாவது ஒரு போராட்டம் உருபெறுகையில் யாரேனும் ஒருவர் இந்த “குப்பை போடும்” சங்கதியை நினைவுகூர்ந்து தன்னிலை அறியக்கூடும். என்னுடைய சிறுபங்களிப்பு அவற்றை உருவாக்குவதாகவே இருக்கவேண்டும் என்று நினைக்கத்தோன்றுகிறது. அதனாலேயே முகநூல் பிரசன்னங்களை வெகுவாகக் குறைத்துக்கொண்டுவிட்டேன். எழுத்துச் செயற்பாடு மெதுவாகத்தான் என்றாலும் மகிழ்வோடு நகர்ந்துகொண்டிருக்கிறது. 

நான் ஒரு செயற்பாட்டாளன் இல்லை என்றளவில், நான் தொலைந்துபோய் அலைபவன் என்றளவில் என் குரல் அவ்வளவு முக்கியமானதுமல்ல. செயற்படாமல் குரல் கொடுப்பது என்பது பாலைவனத்தில் தண்ணீர்தாகம் ஏற்பட்டவன் கத்துவதுபோன்றது. அடையாளத்துக்காக, கவன ஈர்ப்புக்காக உளறுவது அது. எனக்கு வேண்டாம். ஒன்று, ஒரு சமூகப்பிரச்சனையில் முன்னின்று பங்களிக்கவேண்டும். அல்லது வாளாவிருத்தல் வேண்டும். சென்சேசனைப் பயன்படுத்தி குளிர்காயும் எண்ணம் இல்லை. அதனாலேயே எல்லாமே ஓய்ந்து, புல்லும் முளைத்தபின் இதனை எழுதுகிறேன். 

இதுவும் இன்னொரு குப்பை இல்லை என்றே எண்ணுகிறேன். குப்பை போடும் ஒவ்வொருவரும் அங்கனமே எண்ணுவதால் பதட்டமும் ஏற்படுகிறது. இது வெறும் காட்டு வழித் தொட்டியில் போடும் குப்பை என்பதால் கனமில்லை என்று நம்பிக்கையில் வெளியிடுகிறேன்.

அன்புடன்,

ஜேகே

Comments

  1. நீங்கள் எழுதுபவற்றை எல்லாம் உண்மையிலேயே mean பண்ணுகிறீர்களா? உங்கள் கடைசி பராவுக்கும் உங்கள் எழுத்துக்கும் நிறையவே வேறுபாடு இருக்கிறதே.

    ReplyDelete
    Replies
    1. எழுதுவதை அந்தக்கணத்தில் mean பண்ணித்தான் எழுதுவது (புனைவுகள் வேறு). அப்படியில்லாவிட்டால் எதற்கு எழுதப்போகிறேன்? மனவழி.

      Delete

Post a Comment

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .