Skip to main content

இக்கரைகளும் பச்சை 2 – கொண்டாட்டங்களின் நகரம்

Credit : Shane Bell
மெல்பேர்னில் எனக்கு மிகப்பிடித்த விடயம், இந்நகர மையத்தின் இரவுகள்தான். இதன் இரவுகள் எப்போதுமே பன்முகப்பட்ட கலை அடையாளங்களால் நிரம்பியிருக்கும். நகரம் முழுதும் வரலாற்றின் பலவிதமான கலைவடிவங்களுக்காக மையங்களையும் நிலையங்களையும் திறந்துவைத்து உலகம் யாவிலுமிருந்து கலைஞர்களை வரவழைத்து அவர்களது திறமைகளை வருடம் முழுதும் காட்சிப்படுத்திக்கொண்டிருப்பார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம். எம்முடைய குட்சொட் பார்ட்டிகளையும், அரங்கேற்றங்களையும், வெறுப்பையும் சோர்வையும் உமிழும் தமிழ் விழாக்களையும் வாராவாரம் வெளியாகும் சிங்கம்3 வகையறாக்களையும் சற்றுப் புறந்தள்ளி, வெளியே எட்டிப்பார்த்தோமானால் மெல்பேர்னின் குளிர் இரவு அவ்வளவு அழகாகத் தெரியும்.

ஒருமுறை ACCA (Australian Centre for Contemporary Art) நிலையத்தில் ஒரு இம்பிரனிசக் கண்காட்சி இடம்பெறுகிறது. மூடிய ஒரு அறைக்குள் பெண் ஒருத்தி தனியே உட்கார்ந்து டிவியைப்பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள். கைகளை அசைத்தும் கண்களை விரித்தும் மகிழ்ச்சியில் கொண்டாடியும் சமயத்தில் அழுதும் என்று அவள் நாள் முழுதும் டிவி பார்த்து உணர்ச்சிகளைக் கொட்டிக்கொண்டிருந்தாள். அப்படி என்ன அந்த டிவியில் ஓடுகிறது என்று பார்த்தால் அது ஓன் செய்யப்படாமலிருந்தது.

சில கண்காட்சிகள் மண்டை காயவைப்பவை. 

ஒரு காட்சியகத்தினுள் மனிதர்கள் நிர்வாணமாக உலவிக்கொண்டிருந்தனர். நிறைய டோய்லட் கொமோடுகள் உள்ளே அமைக்கப்பட்டிருந்தன. அவையும் கண்ணறை (transparent) கொமோடுகள். அந்த மனிதர்கள் எல்லோரும் ஆள் மாறி ஆள் அவற்றில் உட்கார்ந்து மலம் கழித்துக்கொண்டிருந்தனர். மலம் விழுவதும் குவிவதும்கூட அந்த கண்ணறை கொமோடினூடே தெரியும். அவர்களுக்கு சங்கோஜமே இல்லையா என்றால், இல்லை. ஏனெனில் அவர்களின் தலைகள் தங்கத் துணிகளால் மூடப்பட்டிருந்தன. அதைப்பார்த்ததும் முதல் தோன்றிய எண்ணம், யார் என்று தெரியாதவரையிலும் செய்கின்ற எந்த அசிங்கமும் அசிங்கமில்லை என்பது. ஆனால் பின்னர் யோசித்துப் பார்க்கையில் மலம் கழிப்பது ஒன்றும் அசிங்கமான காரியமே இல்லை. ஆனால் அப்படி அபத்தமாக நினைக்கத் தலைப்பட்டுவிட்டோம். இதில் எதற்காக முகத்தை மறைக்கும் அபத்தம் வேண்டிக்கிடக்கிறது? அந்த வேளையில் வட்டக்கச்சியில் நாங்கள் கட்டிய மூன்றடி போறைப்பையால் வளைத்துக்கட்டப்பட்ட கக்கூஸ் ஞாபகம் வந்தது. உள்ளே போய்க் குந்தினால் போறை பாக் மறைப்பு கழுத்துவரைதான் காப்பாற்றும். முக்கும்போது முக லட்சணம் எல்லாம் ஊர்பூராகத் தெரியும். 

கோடைக்காலம் என்றால் மேல்பேர்ன் நகரத்து இரவுகள் ஒன்பது மணிக்கு மேலேயே ஆரம்பிக்கும். அதனால் நகரத்தில் கொண்டாட்டங்களுக்கும் குறைச்சல் இல்லை. தெருக்களில் எந்நேரமும் மனிதர்கள் இசைக்கச்சேரிகளையோ, வித்தைகளையோ காட்டிக்கொண்டிருப்பார்கள். சிலை மனிதர்கள் ஆடாமல் அசையாமல் மணிக்கணக்காக நின்று காட்டுவார்கள். நகைச்சுவைக் கொண்டாட்டங்கள் என்று ஒரு சீசன் இடம்பெறும். சிலே, சியாராலியோன், கோஸ்டரிக்கா முதற்கொண்டு மொங்கோலியா, வியற்நாம் என்று உலகின் அத்தனை நாட்டு உணவு விடுதிகளையும் திறந்து வைத்திருப்பார்கள். சென்ற சனிக்கிழமை “வெள்ளை இரவு மெல்பேர்ன்” என்று சொல்லி ஒரு இரவு முழுதும் நகரம் வெளிச்சக் காட்சிகளாலும் இசை நிகழ்வுகளாலும் கொண்டாட்டங்களாலும் நிரம்பியிருந்தது. ஐந்தாறு மனிதர்கள் பாண்டு வாத்தியங்களை முழங்கிக்கொண்டிருக்க, அவர்களருகே ஒரு கூட்டம் இரவு முழுதும் ஆடி ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது. அவர்கள் போகுமிடமெல்லாம் கூட்டம் இழுபட்டது. நம் முன்னால் நின்றுகொண்டிருந்த பெண்கள் சிலர், திடீரென்று குளிர் ஜக்கட்டுகளைக் கழட்டித் தரையில் வீசிவிட்டு அந்த இடத்திலேயே நடனமாட ஆரம்பித்தார்கள். அப்போது நேரம் அதிகாலை மூன்று மணி. 

“Alleyway” என்று சொல்லப்படும் சிறு ஒழுங்கைகள் மெல்பேர்னில் அதிகம் உண்டு. அவற்றுள் ஏராளம் பப்புகளும் கோப்பி, பேக்கரிகளும் இருக்கும். மெல்பேர்ன் நகரத்து ஆங்கில எழுத்தாளர்கள் குழுமம் ஒவ்வொரு புதன்கிழமையும் இங்கிருக்கும் ஏதாவது ஒரு பப்பிலே சந்திப்பார்கள். குழுமம் என்றால் ஐந்து அல்லது ஆறு பேர்கள்தான். ஆறுபேரும் ஒரு வட்ட மேசையில் உட்கார்ந்து ஒரு பைண்டு பியருடன் இலக்கியம் பேசுவார்கள். ஒருமுறை தென்னாபிரிக்க இளம் எழுத்தாளர் ஒருவர் வந்திருந்தார். “Disgrace” நாவல் பற்றிப் பேச்சுவந்தது. நவ தென்னாபிரிக்காவில் வெள்ளையினத்தவர் மற்றமை ஆவது பற்றிப் பேச்சுவந்தது. காரசாரமாக அந்த விவாதம் போய்க்கொண்டிருந்தது. சிலவேளைகளில் எல்லோரும் சேர்ந்து சிறுகதை எழுதுவார்கள். "ஒழுங்கை வாசலில் நின்ற சிலை மனிதர் ஒரு சிறுமியைப் பார்த்து சிரிக்கிறார்" என்ற புள்ளியை வைத்து எப்படி சிறுகதையை வடிவமைக்கலாம்? என்று விவாதித்தார்கள். எவருமே இரண்டு பைண்டுக்கு மேலே குடித்து வெறிக்கமாட்டார்கள். எட்டுமணிக்கு தனக்கு காதலியோடோ, மனைவியோடோ சமயத்தில் பெற்றோர் சகோதரர்களோடோ டேட் உள்ளது என்று சாப்பிடாமல் கிளம்பிவிடுவார்கள்.

இப்போது “ASIATOPA” என்று ஆசிய பசிபிக் கலைஞர்களின் நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இரண்டு வாரங்களில் ராஜஸ்தானின் மங்கனியர்கள் என்கின்ற பூர்வீகக்குடியினரின் இசை நிகழ்வு இடம்பெறப்போகிறது. மங்கனியர்களுடையது வெறும் இசை நிகழ்வு மாத்திரம் கிடையாது. ஒளிர்ந்துவரும் ‘வல்லரசு’ இந்தியாவில் இவ்வகை கலாச்சாரங்களும் மரபுகளும் எப்படி புறக்கணிக்கப்பட்டுவருகின்றன என்பதை எடுத்துக்காட்டும் ஒருவகை எதிர்ப்பும்தான் இவ்வகை நிகழ்வுகள். இதுபோல கம்போடியா, வியற்நாம், சீனா என்று பல்வேறு கலாச்சார மெயின் ஸ்ட்ரீம் அல்லாத கலை வடிவங்களையும் அரங்கேற்றுவார்கள்.



கடந்த வியாழக்கிழமை மெல்பேர்னின் ஒரு திறந்தவெளிக் கலையரங்கில் “ஏ. ஆர். ரகுமானின் இசை” என்ற ஒரு நிகழ்வு இடம்பெற்றது. ரகுமானின் பின்னணி இசையையும், பாடல்களையும் ஒருங்கிணைத்து கோர்ப்புச்செய்த சிம்பனி வடிவத்தை “மெல்பேர்ன் சிம்பனி ஒர்கஸ்ரா” குழு அரங்கேற்றினார்கள். கூடவே புல்லாங்குழலுக்கு நவீனும் சித்தாருக்கு அசாத்கானும் வந்தார்கள். ரகுமான் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். இவ்வகை நிகழ்வு ஏலவே ஜேர்மனி உட்பட்ட சில நாடுகளில் இடம்பெற்றிருக்கவேண்டும். அவுஸ்திரேலியாவில் முதன்முறை. 

ரகுமான் வருகிறார் என்ற எண்ணத்தில் வாரநாள் என்றும் பாராமல் ஏராளமான இந்தியர்கள் டிக்கட் வாங்கியிருக்கவேண்டும். இங்கே இந்தியர்கள் என்று தெற்காசியர்கள் அனைவரையுமே பொதுமைப்படுத்துவர். ஆறு மணிக்குத் திடலுக்குப்போனால் வரிசை இரண்டு கிலோமீட்டர் வளைந்து நெளிந்து நீண்டது. இந்தியர்கள் தவிர ஏனைய நாட்டவர்களும் பலர் வந்திருந்தது ரகுமானுடைய இசையின் பரம்பலைக் காட்டியது. 

இந்தியர்களுக்கும் வரிசைக்கும் பூர்வஜென்ம பந்தம் இருக்கவேண்டும். வரிசையை எந்த அளவுக்குக் குழப்பமுடியுமோ அப்படிக் குழப்பினார்கள். ஆளாளுக்கு வரிசையில் நின்று தமக்குத்தெரிந்த இருபது முப்பதுபேரை உள்ளே அனுமதித்துக்கொண்டிருந்தனர். திருமண நிகழ்வுக்கு வருவதுபோல உடையுடுத்தி வந்தனர். ஆண்கள் இரவு நிகழ்வு என்பதையும் மறந்து சன்கிளாஸ் அணிந்திருந்தார்கள். ஒரு தம்பதியினர் தாம் ஏதோ ஒரு இந்தியக் கழகத்தின் செயலாளர் என்று சொல்லி வரிசையில் நிற்காமல் முன்னே நுழைவதற்கு முயன்றனர். அலுவலர்கள் சிரித்த முகத்துடனேயே அவர்கள் வரிசையில் நின்றே வரவேண்டும் என்றார்கள். எல்லோரும் எப்போதும் சாப்பிட்டுக்கொண்டேயிருந்தார்கள். பஜ்ஜி, சமோசா என்று வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்தார்கள். இவ்வளவு களேபரத்திற்கு மத்தியிலும் வரிசை வேகமாகவே நகர்ந்துகொண்டிருந்தது. வாசலுக்கு அருகே நெருங்கும்போது ஒரு வெள்ளைக்கார இளம்பெண் என்னருகே வந்து சிரித்தாள். சிரித்தேன். அதுதான் சாட்டு என்று உள்ளே நுழைந்து விறுக்கென்று டிக்கட்டைக் காட்டிக் கிளி  பறந்துவிட்டது. யாவரும் கேளிர்.

நிகழ்வு நடந்த திடலில் பிரமாண்டமான சாய்ந்த புற்தரை இருந்தது. காலாற நீட்டி உட்கார்ந்து நிகழ்வை ரசிக்கலாம். பலர் பிக்னிக் தயார்படுத்தல்களோடு வந்திருந்தனர். ஒரு வயோதிபத் தம்பதி பெரிய தரை விரிப்பில் மூங்கில்கூடை, உள்ளே சான்ட்விச், அப்பிள், இரண்டு கிளாசுகளில் சிவப்பு வைன், மென்குளிருக்கு இருவருக்குமே ஒரு போர்வை என்று செட்டிலாக, “என்ன சொல்லி என்னைச் சொல்ல” என்ற சாதனாசர்க்கத்தின் குரல் ஸ்பீக்கரில் ஒலித்தது. ரொமாண்டிக். 

நிகழ்ச்சி சரியான நேரத்துக்கு ஆரம்பித்தது. முதலில் ஒரு கிட்டாரும் தபேலாவும் இணைந்து ஆங்கிலப்பாடல்களை இசைத்தார்கள். எட்டேகாலுக்கு சிம்பனி தொடங்கியது. ஒரு சிம்பனி ஒர்கேஸ்ராவை நேரில்பார்த்து ரசித்த அனுபவம் அலாதியானது. இருபது முப்பது வயலின்கள். ஐந்தாறு செல்லோக்கள். ட்ரம்ஸ், அக்கோர்டியன், டிறம்பற், கோரஸ் என்று நாங்கள் அபத்தமாக விளிக்கும் “Polyphonic Voices” , மையத்தில் ஒரு கண்டக்டர், எல்லோருமே கறுப்பு உடையில் என்று அரங்கமே கலக்கலாக இருந்தது. ஆரம்ப இசை ரகுமானுடைய “Warriors of Heaven” திரைப்படத்தினுடையது. பின்னர் லகான், மங்கள்பாண்டே, 127 Hours, Elizabeth என்று வரிசையாக அவருடைய படங்களின் இசையை சிம்பனியில் கேட்கும்போது கையிலைக்காட்சியை சிதம்பரத்தின் கண்ட நிலைதான். இடையில் நவீன் வந்து காதல் ரோஜாவின் ஹம்மிங்கை புல்லாங்குழலில் வாசிக்க, “காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே” என்று முப்பது வயலினும் முப்பது ஹார்மனியில் வாசிக்க, அந்தப்பாடல் நான் நினைத்துவைத்திருந்ததைவிட அறுபது மடங்கு ஆழம் என்பது புரிந்தது.

“தென்றல் என்னைத் தீண்டினால்” என்னும்போது என் பின்னே இருந்த சர்மாவோ, பட்டேலோ பக்கத்திலிருந்த வெள்ளைக்கு அளந்துகொண்டிருந்தான். ரகுமான் இருபது நாள்களிலேயே ஸ்லம்டோக் படத்து இசையமைத்து விட்டதாகவும், ரகுமான் சீனா முதல் சிலி வரை பிரபலம் என்றும் பெருமைப்பட்டுக்கொண்டிருந்தான். அந்த வெள்ளையோ இசையையும் ரசிக்க முடியாமல், இவனுடைய அலுப்பையும் தாங்கமுடியாமல் சங்கடத்தில் நெளிந்திருக்கவேண்டும். பெண்கள் அடிக்கடி எழுந்து நின்று கூட்டமாக செல்பி எடுத்துக்கொண்டிருந்தார்கள். நம் தமிழ் ரசிகர்களை அவ்வளவாகக் காணவில்லை. ஒரே ஒரு சிறு குழு சசிகலா பற்றிப் பேசிக்கொண்டிருந்தது. 

இடைவேளைக்குச் சற்று முதல் ரகுமான் மின்னல்போல உள்ளே நுழைந்தார். அதிகம் பேசவில்லை. பேசினாலும் கூட்டத்தின் விசில் அதைக் கேட்க விடவில்லை. “Hundred Foot Journey” யில் இருந்து ஒரு என்செம்பிலை பியானோவில் வாசித்து உருகவைத்துவிட்டு சுதாரிக்குமுன்னர் பறந்துவிட்டார். அந்தப்படமே ஒரு இனிமையான மெலடி. அதன் இசை அதனிலும் உயர்வு. ரகுமான் பியானோவில் ஒருபோதும் வித்தை காட்ட முயல்வதில்லை. எளிமையாக இனிமையாக மினிமல் இசையையே கொடுப்பார். அதிலும் நிறைய அமைதி பூத்துக்கிடக்கும். நேரில் பார்த்துக்கேட்கும்போது இதமாக இருந்தது. எல்லோரும் கைதட்டினார்கள். சிம்பனி வயலின்காரர்கள் ஏக சமயத்தில் தம்முடைய வயலின் அம்புகளை உதறினார்கள். அவர்கள் மொழியில் அது கைதட்டு. 

இடைவேளைக்குப்பின்னர் இந்திய இசையமைப்பாளர்களுக்கான மரியாதை என்று பிரபல இந்திய இசையமைப்பாளர்களின் இசைத் துணுக்குகள் இசைக்கப்பட்டன. ஆரம்பம் எம்.எஸ்வி. “மலர்ந்தும் மலராத பாதி மலர்போல” என்று வயலின்கள் ஹார்மனியில் உருகியபோது சும்மா சிலிர்த்தது. கொஞ்சநேரத்தில் தலைவரின் பாடல். “செந்தூரப்பூவே செந்தூரப்பூவே”. சிம்பனிக்கென்றே வடிவமைத்தபாடல்போல அப்படிப்பொருந்தியது. ரோஷன், ஆர்.டி.பர்மன், நௌஷாத், சங்கர் எஷான் லாய் போன்ற வட இந்திய இசையமைப்பாளர்களின் பாடல்களும் இசைக்கப்பட்டன. இறுதியில் ரகுமானின் “ஒருவன் ஒருவன் முதலாளியின்” ஆரம்ப இசையோடு அந்தக் கோர்வை முடிவடைந்தது.

வந்திருந்த கூட்டத்திற்கு சிம்பனி இசை பற்றிய குறைந்தபட்ச அறிவுகூட இருந்திருக்குமோ தெரியவில்லை. கொஞ்சநேரத்திலேயே பின்னாலிருந்த சர்மா தன்னுடைய பிரசங்கத்தை முடித்துவைத்து தூங்கிவிட்டது. இளைஞர்கள் பொறுமை இழந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்கு யாராவது பாடவேண்டும். சைய சையா என்று குதிக்கவேண்டும். அது இல்லை என்றதும் கொதித்துவிட்டார்கள். சிம்பனியில் ஒரு தெரிந்த பாடல் இசைக்கப்பட்டால் பெரிதாகக் கூவடித்து இசையைக் கேட்கமுடியாமல் சிதைத்தார்கள். “உந்தன் தேசத்தின் குரல்” ஷெனாய் இசை வந்ததுமே “கூ...” என்று சங்கூதினால் எப்படி ரசிப்பது? அடிக்கடி ரகுமான் மேடைக்கு வரவேண்டும் என்று தொல்லை பண்ணிக்கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் கொண்டக்டர், நீங்கள் ஒழுங்குமரியாதையாக இருந்து இசையைக் கேட்டால் மாத்திரமே ரகுமான் மேடைக்கு வருவார் என்று மிரட்டவேண்டிவந்தது. அப்படியும் கூட்டம் அடங்கவில்லை.

நான் அதுவரை காலமும் அவ்வளவாகக் கவனிக்காத ரகுமானின் பாடல்களை இந்த நிகழ்ச்சி கவனிக்கவைத்தது. குறிப்பாக கோச்சடையானின் “எங்கே போகுதோ வானம்”, எந்திரனின் “அரிமா அரிமா” பாடல்கள். சிம்பனியில் அவை அதி அற்புதமாக மிளிர்ந்தன. இறுதியில் ஜெய்ஹொவை சிம்பனியில் முயன்றார்கள். ரகுமானும் மேடைக்கு வந்தார். ஆனால் பாடல் அந்த நிகழ்ச்சிக்கு திருஷ்டிப்பொட்டு. சொதப்பிவிட்டார்கள்.

இவ்வகை நிகழ்ச்சியை ஒழுங்கமைப்பவர்களுக்கு சிக்கல் ஒன்றிருக்கிறது. நூறு, நூற்றைம்பது இசைக்கலைஞர்களைக்கொண்டு அமைக்கப்படும் நிகழ்வுக்கு நிதி வேண்டுமென்றால் டிக்கட் விற்கவேண்டும். சாத்திரிய சங்கீத ரசிகர்களுக்காக மாத்திரமே இதனைச் செய்தால் பணம் பெயராது. இந்திய மெல்லிசை ரசிகர்களை ஈர்ப்பது அவசியம். அப்படியெனின் ரகுமானைக் கூட்டிவரவேண்டும். விளம்பரம் செய்யவேண்டும். திறந்த வெளியரங்கில் நிகழ்ச்சிவைத்து டிக்கட்டைக் குறைத்து விற்கவேண்டும். அப்படிச் செய்யும்போது விசிலடிக்கும் குஞ்சுகள் வரத்தான் போகின்றன. நிகழ்ச்சியைக் குழப்பத்தான்போகின்றன. இவர்களும் வீங்கின வேலையாக, அவர்களைக் கவருவதற்காக திரையில் பாடலோடு சேர்ந்த காட்சிகளையும் போட்டார்கள். கூட்டம் அமீர்கானையும், ரஜனியையும், தீபிகா படுகோனையும் கண்டதும் கைதட்டி ஆர்ப்பரித்தது. அக்கணம் இசைக்கப்பட்ட அற்புதமான சிம்பனிக் கோர்வைகள் காற்று வெளியிடைக்குள்ளால் தப்பியோடிவிட்டன.

ரகுமானின் இசையை சிம்பனியில் இசைத்தல் என்ற நோக்கம் முக்கியமானது. அவருடைய இசையின் பல பரிமாணங்களை அறிய அது உதவும். கூடவே இசையின் ஆதாரமான விடயங்கள் இசைக் கலாச்சாரங்களையும் தாண்டி மிளிரக்கூடியது என்பதை அந்நிகழ்ச்சி உறுதிப்படுத்தியது. ரகுமான் கே.எம் இசைக்கல்லூரிமூலம் இந்தியாவிலிருந்தே ஒரு சிம்பனி ஒர்கஸ்ராவை உருவாக்கப் பாடுபடுவது நமக்கெல்லாம் தெரிந்ததே. அது சாத்தியப்படும்போது ஏனைய இந்திய இசை வடிவங்களையும் சிம்பனிப்படுத்தலாம். கர்நாடக இசையில் “சாமஜ வர கமனா”வையும் “நகுமோ மு கனலே” வையும் ஒருநாள் சிம்பனியில் கேட்க நான் கொடுத்துவைத்திருக்கிறேன் என்று நம்புகிறேன். 

என்றோ ஒருநாள், இதே கலையகத் திடலில், ஒரு பின்கோடைக்காலப் பனி இரவில், புற்தரையில் காலாற நீட்டி உட்கார்ந்து சிம்பனியில் கேட்பதற்கென்றே ஒரு பாடலை ராஜா இசையமைத்திருக்கிறார்.

“நாயகன் ஜாடை நூதனமே..
நாணமே பெண்ணின் சீதனமே..
மேக மழை நீராட..
தோகை மயில் வாராதோ.
தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது"

கொண்டக்டர் சடக்கென்று கைகளை அசைப்பதை நிறுத்த, 
அத்தனை வயலினும் அப்படியே ஸ்தம்பிக்க, 

"நநநந நந நநநந நா..”

Comments

  1. நீங்கள் பார்த்து ரசிக்க கொடுத்து வைத்தவர்.மெல்போன் அழகை ரசிக்கும் ஆசை எனக்கும் உண்டு காலம் வழிவிடட்டும்)))

    ReplyDelete
  2. உங்கள் பதிவை ரசித்துப் படித்தேன். அடிக்கடி எழுதுங்கள்.

    - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து

    ReplyDelete
  3. நாமும் இன்னும் ஒரு மாதத்தில் ராஜாவின்
    வளையோசை கல கல கல என ....
    புத்தம் புது காலை ....
    பருவமே ....
    சங்கத்தில் பாடாத கவிதைகள் ....
    வனிதா மணி....
    பூங்கதவே தாழ்திறவாய்.....
    என் இனிய பொன் நிலாவே....
    சிங்களத்து சின்ன குயிலே..... .......... முடிவிலி
    நேரடியாக கேட்போமே

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...