Skip to main content

இக்கரைகளும் பச்சை 3 : மினோஸா



“அடுத்த திங்கள்கிழமை முதல் எங்களுடைய அலுவலக நண்பர் மினோஸ் ஹென்றிக்பெண்ணாக அறியப்படுவார்”
மனிதவள முகாமையாளரிடமிருந்து வந்திருந்த அந்த மின்னஞ்சலை நம்பமாட்டாமல் திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டிருந்தேன். வெள்ளி மாலை அலுவலக நாள் முடிவடையும் சமயத்தில் அந்த மின்னஞ்சல் வந்திருந்தது. நம்மோடு கூட வேலை செய்பவன் ஒருவன் பெண்ணாக மாறுகிறான் என்ற செய்தியை எப்படி சீரணம் செய்வது என்று தெரியவில்லை. ஒருவனை இனி ஒருத்தி என்று விளிக்கவேண்டும். அவன் இனிமேல் அவள். எப்படி முடியும்? இதெல்லாம் சாத்தியந்தானா? ஒரு மின்னஞ்சலிலேயே செய்து முடித்துவிடலாமா? 


நான் அவுஸ்திரேலியாவுக்குக் குடிபுகுந்து ஆறு மாதங்களே ஆகியிருந்தன. வேலையில் இணைந்து ஒரு ஐந்துமாதங்கள் இருக்கலாம். அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக, எனக்கு முன்னாலே அமர்ந்திருப்பவன் பெயர் பட்டேல், பட்டேலுக்குப் பக்கத்தில் பிரேன்சன், அருகில் சொங், அடுத்தது அமெலியா, கீதா, தசெவ்ஸ்கி, மார்வன் என்று ஒவ்வொரு பெயராக மனனம் செய்து அந்தந்த மனிதர்களின் முகங்களில் ஓட்டிக்கொண்டிருந்தேன். சில பெயர்களை நான் முயற்சி செய்வதேயில்லை. கெரின், கரின், தன்சன், தென்சன் என்ற பல்வேறு குழப்பங்களால் வெறும் “ஹாய்” கொண்டு அவர்களை விளிப்பதோடு சரி. இந்த மினோசின் பெயரும் அதே ரகம்தான். அவனை மினோஸ் என்பதா மைனோஸ் என்பதா என்ற குழப்பம் ஆரம்பம்முதலே இருந்து வந்தது. கூடவே இனி அவனை அவன் என்பதா அவள் என்பதா என்ற பிரச்சனையும் சேர்ந்துவிடும்.

உண்மையில் பெயர்களை உச்சரிக்கும் பிரச்சனை என்பது வெறும் சிறு எறும்புதான். அடிப்படையில் ஆங்கில மொழியே ஆபிரிக்க யானையளவு பிரச்சனை கொடுத்தது. அவுஸ்திரேலியாவுக்கு வந்த புதிதில், கிறவல் ரோட்டில் செயின்புளக் ஊர்வதுபோல என்னுடைய ஆங்கிலம் ரோடு முழுதையும் உழுதுகொண்டு எல்லாவிடமும் சென்றுகொண்டிருந்தது. ஊரிலே நான் காட்டிய “ஆங்கில பாச்சா” இங்கே பலிக்கவில்லை. அதுவரைக்காலமும் நான் சரியாகப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று நினைத்த மிகச்சாதாரண ஆங்கில வார்த்தைகளே எனக்குத் தண்ணிகாட்டின. “நாளை” என்கின்ற வார்த்தை “டுமாரோ”வுக்கும் “டுமோரோ”வுக்குமிடையில் சிக்கித்தவித்தது. கங்காரு என்று தமிழில் சொல்லிப்பழகியதால் “கங்கரூ” வாயினுள் நுழையாமல் தத்தியோடியது. ஒருமுறை ஒரு நண்பரோடு பேசிக்கொண்டிருக்கையில் “Unaccustomed” என்ற வார்த்தையில் செயின் புளக் கிளைமோரில் சிக்கிவிட, வாக்கியத்தை முடிக்கப் பெரும்பாடாகிவிட்டது. 

இதுவே தொலைப்பேசி உரையாடல் என்றால் நிலைமை இன்னமும் மோசமாகிவிடும். முகம் பார்க்காமல், உடல்மொழி இல்லாமல் ஆங்கிலத்தில் எதிர்த்தரப்போடு உரையாடுவது கொலைக்களத்தில் கழுத்தைக் கிடத்துவதற்குச் சமானமானது. என் பெயரை எழுத்துக்கூட்டி உச்சரிப்பதே பிரயத்தனமாக இருந்தது. ‘U’வை ‘யூ’ என்பதா ‘ஜூ’ என்பதா என்றெல்லாம் சந்தேகம் வந்தது. நான் சொன்ன “டபிள்யூ” இவர்களுக்கு விளங்குவதாயில்லை. ‘A’ ஐ “ஏய்” என்றார்கள். சரி, என்னுடையது பிரிட்டிஷ் ஆங்கிலம், அதுதான் அவுஸ்திரேலியர்கள் திணறுகிறார்கள் என்று மனதைச் சாந்தப்படுத்திக்கொண்டேன். மன்செஸ்டரைப் பிறப்பிடமாகக்கொண்ட ஆங்கிலேயரான மட் பிரவுண் என்னோடு ஒருமுறை இரவு விருந்தில் பக்கத்து இருக்கையில் தெரியாத்தனமாக உட்கார்ந்துவிட்டார். பேசியே ஆகவேண்டும். காலநிலையில் ஆரம்பித்து கிரிக்கட், உதைபந்து என்று தொடர்ந்து, விடுமுறையில் நான் யாழ்ப்பாணம் சென்றது பற்றியெல்லாம் பேசும்போது, என்னுடைய ஆங்கிலம் விளங்காமல் “பெக் யூ எ பார்டன்” என்று அவர் வரிக்கு வரி பிச்சை எடுத்தபோதுதான் நிலைமையின் விபரீதம் விளங்கத்தொடங்கியது. என்னுடைய ஆங்கிலம் பிரிட்டிஷும் கிடையாது.

நான் பேசுவது அவர்களுக்கு விளங்கவில்லை என்பது ஒருபுறம் கிடக்கட்டும். அவர்கள் பேசுவதும் எனக்குச் சுத்தமாக விளங்குவதாயில்லை. ஸ்கைடைவிங்போல அவர்களுடைய பேச்சுமொழி. சர் சர்ரென்று காற்றைக் கிழித்துக்கொண்டு வந்து விழும். சதத்துக்கும் ஏறவில்லை. ஓரிரு உக்கிய எலும்புகளைக்கொண்டு அழிந்துபோன டைனோசரை உருவகிப்பதுபோல, அவர்கள் பேச்சுக்களுக்கிடையே விளங்குகின்ற ஓரிரு வார்த்தைகளை அடையாளம் கண்டு மொத்த வாக்கியத்தையும் ஊகித்துப் பதிலளித்துக்கொண்டிருந்தேன். அவர்கள் நான்காவது வாக்கியத்தில் நிற்கும்போதுதான் எனக்கு முதல்வாக்கியம் ஓரளவுக்கு வெளித்திருக்கும். சிலபேரின் பேச்சுகளில் எலும்புத்துண்டுகள் எதுவுமே சிக்காது என்று தெரிந்தால், அவர்களைத் தூரத்தில் கண்டதுமே ஏதோ தீவிர யோசனையுடன் குனிந்தபடி தாண்டிவிடுவேன். இதைவிட சில மொழிவழக்குகள் பிரதேசத்துக்கே உரியவை. “Pie in the sky” என்றால் பை எப்படி வானத்துக்குப் போகும் என்று தேடல் எழுந்தது. அவர்கள் “Bugger me dead” என்றால் முழித்தேன். “Cool as cucumber” என்பார்கள். முதலில் கியூகம்பரும் கப்சிகமும் எதுவெது என்பதே பெரிய பிரச்சனை. இரண்டாவது “கியூகம்பரா” “கூகம்பரா” என்றொரு பிரச்சனை. அதுக்கு மேலே “Cool as cucumber” என்றால்...

ஆங்கிலம் தெரியாதவர்களையும் தவறாகப் பேசுபவர்களையும் மட்டம் தட்டியும், ஐந்து வார்த்தை இலக்கணச்சுத்தமாகப் பேசுபவரைக் கடவுளாகக் கொண்டாடியும் பழக்கப்பட்ட காலனித்துவச் சிந்தனை காரணமாக அவுஸ்திரேலியா வந்து சில மாதங்கள் இப்படி தொடர்பாடல் திறன் குடி மூழ்கிப்போய்க் கிடந்தது. மொழி என்பது ஒரு தொடர்பு ஊடகம். நான் இந்த ஊருக்குப் புதியவன். ஆங்கிலம் என்னுடைய முதன்மொழி கிடையாது. அது இரண்டாம் மொழி என்ற அளவிலே ஆஸ்திரேலியர்களுடைய இரண்டாம் மொழிகளை விட நான் என்னுடைய இரண்டாம் மொழியை நன்றாகவே பேசுவேன் என்ற தன்னம்பிக்கை உருவாகக் கொஞ்சக்காலம் பிடித்தது. நாங்கள் தவறாகப் பேசினாலும் அவர்கள் கணக்கிலெடுப்பதில்லை. நாம் என்ன சொல்லவருகிறோம் என்பதையே கவனிக்கிறார்கள் என்பது தெரிந்ததும் தயக்கங்கள் பறந்துவிட்டன. முன்னாலிருப்பவர் நான் இலக்கணப்பிழை எல்லாம் விடுகிறேனா என்று கவனிக்காதவரைக்கும் எனக்கு என்ன பிரச்சனை? மொழியறிவுக்கும் தொடர்பாடலுக்கும் சிறு சம்பந்தமே உண்டு. தன்னம்பிக்கையும் உடல் மொழியும் இருந்தால் மொழிப்பிரச்சனையை இலகுவாகச் சமாளிக்கலாம் என்பது புரிந்தது. நிற்க.

மொழியின் திணறல்கள் ஒருபுறமிருக்க அவுஸ்திரேலிய நாட்டுப் பண்பாடுகளும் அவ்வப்போது விரல் நிலம் கிளைந்திடவைத்தது. இங்கே அறிமுகமான இருவர் சந்திக்கும்போதும் விடைபெறும்போதும் கன்னத்தோடு கன்னம் வைத்து முத்தம் கொடுப்பார்கள். ஆனால் அந்த முத்தத்தைக் கன்னத்திலல்லாது காற்றிலேயே கொடுக்கவேண்டும். கொடுக்கும்போது கன்னமும் கன்னமும் உரசவேண்டுமே ஒழிய அழுத்தக்கூடாது. இடதுபக்கமாக நெருங்கி வலது கன்னத்தையே உரசவேண்டும். இந்த இழவு எதுவும் எனக்கு ஆரம்பத்தில் ஒழுங்காகத் தெரியாது. எங்கள் ஊரில் ஆச்சிமார்கள் கட்டிக்கொஞ்சுவார்கள். ஆனால் அவர்கள் நன்றாக மூச்சை எடுத்து பொச்சு பொச்சென்று கொஞ்சுவார்கள். கொழும்பர்மாமி கொஞ்சும்போது கன்னத்தில் வெற்றிலைக்கறை ஒழுகும். “அப்பன் நல்லா இருக்கிறியாடா?” என்பார். கட்டிப்பிடித்துக் கொஞ்சுவதிலும் செத்தவீட்டுக்கு இரண்டு கன்னம், நல்லநாள், திருநாள் என்றால் ஒரு கன்னம் என்றும் பல விதிமுறைகள் இருக்கின்றன என்று நினைக்கிறேன். அவுஸ்திரேலிய விதிகள் வித்தியாசமானவை.

அலுவலகத்தில் இணைந்த இரண்டாவது மாதம். அந்த வருடத்து கிறிஸ்மஸ் கொண்டாட்டம் நகர மதுச்சாலை ஒன்றிலே இடம்பெற்றது. எல்லோரும் தளுக்கி மினுக்கி உடை அணிந்துவந்திருந்தார்கள். எல்லோரும் எல்லா அலுவலக நண்பர்களோடும், நீண்ட நாள்களுக்குப்பின்னர் சந்திப்பவர்கள்போல நட்புப் பாராட்டி கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார்கள். அப்போதுதான் வயிற்றில் புளி கரைய ஆரம்பித்தது. என்னுடைய முறை வரும்போது நானும் கட்டி அணைத்து முத்தம் கொடுக்கவேண்டும். பயம் பிடித்துவிட்டது. கொண்டாட்டத்தில் வேறு பெண்கள் எல்லோருடைய உடைகளும் கவர்ச்சிகரமாக இருந்தது. கைகள் அற்ற, கழுத்து இரண்டு பனை ஆழம் இறங்கிய சட்டைகளை அவர்கள் அணிந்துவந்திருந்தார்கள். கட்டிப்பிடிக்கும்போது கொஞ்சமே மார்பில் பட்டுவிட்டால், கைகளால் வளைத்து அணைக்கும்போது முதுகில் அப்படி இப்படிப் பட்டுவிட்டால், தப்பாக நினைப்பார்களோ? யாழ்ப்பாணத்தில் இருந்தவரை ஆச்சிகள் தவிர்த்து வேறு எந்தப் பெண்களும் ஐந்தடி அருகில்கூட அண்டியதில்லை. பேருந்தில்கூட அருகிலே ஒரு பெண் நின்றால் கவனமாகவே நிற்பதுண்டு. ஓட்டுனர் ப்ரேக் அடித்தாலும் இயலுமான அளவு உடல் படாதவாறு பார்த்துக்கொள்வதுண்டு. பட்டால் தப்பாக நினைத்துக்கொள்வார்கள். ஆண்கள் எல்லோருமே “கொசப்பங்கள்” என்ற எண்ணம் நம்மூர்ப்பெண்கள் எல்லோருக்குமே இருக்கிறது என்றே நினைத்து வளர்ந்துவிட்டேன். இப்போது திடீரென்று பெண்களோடு விகற்பமில்லாமல் பழகவேண்டும் என்றால் எப்படி? மார்பு தெரிந்தாலும், முதுகின் முக்கால்வாசி தெரிந்தாலும் முழங்கால் மேலே சட்டை போனாலும், தனித்தனியாக ரசிக்காமல் மொத்தமாக அந்தப்பெண்ணின் அழகைக் கொண்டாடவேண்டும். முழுதாய்ப்பார்த்து, “யூ லுக் வொண்டர்புல்” என்று சொல்லுவதோடு கடையை மூடிவிடவேண்டும். அப்புறம் கண்ணைப்பார்த்து எந்நேரமும் பேசுபவனே கண்ணியவான். இந்த சங்கதிகள் எதுவும் எனக்கு அறவே தெரியாது. அறிவுக்குத் தெரிந்திருந்தாலும் உள்ளே வாழைப்பழம் உரித்துத்தின்னும் சிம்பன்ஸிக்கும் இதெல்லாம் ஏறவேயில்லை. இந்த வள்ளலில் கட்டிப்பிடித்து கிஸ் அடிக்கவும் வேண்டுமென்றால்? சிம்பன்ஸி இளநிக்கோம்பைக்குள் கையை ஓட்டிவிட்டு வெளியே எடுக்கமுடியாமல் திணற ஆரம்பித்தது. இந்தச் சில்லுப்பாடு முதலிலேயே தெரிந்திருந்தால் யூடியூபில் பார்த்து தலையணையோடு ரிகர்சல் செய்துவிட்டுப் போயிருப்பேன். நிலைமை கட்டுமீறிவிட்டது. 

முதலில் மாட்டியது கத்ரீனிடம். பதட்டம் என்றால் அப்படி ஒரு பதட்டம். வைங் என்று உடல் சரிந்து முகம் மாத்திரம் அவளை நெருங்க கால் புங்குடுதீவிலேயே நின்றுகொண்டது. உடல் கிட்டத்தட்ட நாற்பத்தைந்து பாகை அவளை நோக்கிச் சரிந்தது. ஐந்து பாகை கூடியிருந்தால் சமநிலை குலைந்து விழுந்து தொலைத்திருப்பேன். அவளுடைய கன்னத்தில் கன்னம் உரசும்போது, முகத்தினுடைய அரும்பு முடி மாத்திரம் முட்டியது. டென்சன் டென்சன் டென்சன். முத்தம் ஒன்றும் கொடுக்கவில்லை. கத்ரீன் அலட்டிக்கொண்டதாகவே தெரியவில்லை. நான் இதுபற்றியெல்லாம் யோசித்து முடித்து நிமிரும்போது அவள் பக்கத்தில் நின்றிருந்த பீட்டரைக் கட்டிப்பிடித்து கொஞ்சி முடித்துமிருந்தாள். கதிரீனுக்கு அடுத்ததாக எலிசா தன்னுடைய பெருத்த சரீரத்தோடு திருதராட்டிரன் பீமனுடைய இரும்புச்சிலையை கட்டிப்பிடித்ததுபோல என்னை சிக்கெனப் பிடித்து, “ம்மா” என்றாள். பதட்டத்தில், அவள் என் கன்னத்தில்தான் அப்படி முத்தம் கொடுக்கிறாள் என்று நினைத்துவிட்டேன். அடுத்ததாக ஆர்வக்கோளாறில் பச்சென்று அமெலியாவுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டேன். அவள் நிறைவெறியில் இருந்ததால் “ஸ்வீட் டார்ல்ஸ்” என்றாள். பெண்கள் எல்லோரும் “டார்ல்ஸ்” என்று அழைப்பதை இங்கே வழக்கமாக வைத்திருந்தார்கள். அதுவும் குழந்தைகள் உள்ளவர்கள் எல்லோரையும் டார்ல்ஸ் என்பர். ஆரம்பத்தில் அவர்கள் அப்படிக் கூப்பிடும்போதெல்லாம் நான் சிலிர்ப்பதுண்டு. பின்னாளில் டார்ல்ஸ் என்று அழைப்பவர்கள் எல்லாம் இந்த அப்புவுக்கு "அபூர்வ சகோதரர்கள்" ரூபிணியாகவே தெரியத்தொடங்கினார்கள்.

நான்கு ஐந்து ரவுண்ட் கடந்தபிறகுதான் இந்த முத்த வித்தை வசப்பட ஆரம்பித்தது.  ஒன்றும் அவ்வளவு கடினமான வேலையல்ல.

பெண்களைச் சந்திக்கையில், நட்போடு, தன்னம்பிக்கையுடன், கண்கள் விரிய, சிரித்தபடி, நேசமாக, முகத்தை மாத்திரம் முன்நீட்டி, கையை மிருதுவாக அவர்களுடைய மேல்முதுகிலோ, கை மேல்மூட்டிலே அழுத்தி, உடல் இறுக்கமாகப் படாமல், கன்னத்தை மாத்திரம் கன்னத்தோடு ஓட்டி, காற்றுக்கு “ம்ம்மா” என்று சற்றுச் சத்தமாக முத்தம் கொடுத்து, “யூ லுக் கிரேட்” என்றால் போதும். அதுதான் சூத்திரம். இந்தச் சிறிய உடல்மொழி ஏற்படுத்திக்கொடுக்கும் நட்பும் நெருக்கமும் அதீதமானது. கூடவே நமக்கு அது தரும் தன்னம்பிக்கையும். இவர் இயல்பாகப் பழகக்கூடியவர், சங்கோஜம் இல்லாதவர், எம் வட்டத்துக்குள் இணைக்கலாம் என்று மற்றவருக்கு உணர்த்தும் சக்தி இந்த உடல்மொழிக்கு உண்டு. 



இப்படி இடம் புதிது, மொழி புதிது, மனிதர் புதிது, கலாச்சாரம் பண்பு புதிது. வேலை புதிது என்ற எல்லாவகைப் புதிதுகளையும் ஒவ்வொன்றாகச் சமாளித்துக்கொண்டிருக்கையில், திடீரென்று கூட வேலை செய்யும் ஆண் ஒருவன் பெண்ணாக மாறுவதையும் எதிர்கொள்ளவேண்டி வந்தது என்பது பங்கருக்குள் போனவனை புடையன் பாம்பு கடித்த கதைதான்.

மினோஸ் என்னுடைய இருக்கையிலிருந்து இரண்டு மேசைகள் தாண்டி இருப்பவன். வெப் புரோகிராம்மர். வயது இருபத்தைந்து இருக்கலாம். பூர்வீகம் போலந்து. இனிமையாகப் பழகுவான். தானும் தன்பாடுமாக இருப்பான். எந்நேரமும் காதில் ஹெட்போன் போட்டபடி, இசைக்குத் தகுந்தபடி சன்னமான உடலசைவுகளுடன் வேலையில் கவனமாக இருப்பான். அவன் பாட்டுக்கேட்டுக்கொண்டிருக்கையில் பின்னால் சென்று “ஹாய் மினோஸ்” என்று இரண்டாம் முறை சத்தமாகக் கூப்பிட்டால் அதிர்ந்துபோய் திடுக்கிட்டுத் திரும்புவான். சாதாரணமாக மீட்டிங்கின்போது அவன் பெயரைச் சொல்லி அழைக்கையிலும் மெல்லிய பதட்டம் ஒன்று அவனிடம் பரவுவதுண்டு. ஒருவருக்குத் தன்னுடைய பெயர் அழைக்கப்படுவதே ஏன் பதட்டத்தை ஏற்படுத்தவேண்டும்?

நான் வேலைக்குச் சேர்ந்த புதிதில், மினோசின் நடை உடை பாவனைகளில் இருந்த வித்தியாசங்களை அவதானித்திருந்தாலும், பெரிதாகக் கணக்கிலெடுக்கவில்லை. அதுவும் இந்தநாட்டுக் கலாச்சாரம் என்று விட்டுவிட்டேன். ஆனால் போகப்போக மினோஸ் ஒரு வித்தியாசமான ஆண் என்று யாழ்ப்பாணப் பனங்கொட்டைக்குப் பட்சி சொல்லத்தொடங்கியது. பிறகென்ன? பனங்கொட்டையிலிருந்து விடுப்பு முளைவிட்டு, பூரானாகி, பனங்கிழங்காக உருவெடுத்து பாத்தி களை கட்டியது.

மினோஸ் எப்போதுமே கால்மேல் ஒடுக்கிக் கால்போட்டுத் தாடையை கையில் ஊன்றியபடி நளினமாகவே உட்கார்ந்து கணினித்திரையைப் பார்த்துக்கொண்டிருப்பான். அவனுடைய ஜீன்ஸ் எந்தக்காலத்திலும் பாதத்தை எட்டாது. அவன் அணியும் சப்பாத்து எப்போதுமே பிங்க், இளம்பச்சை அல்லது ஒரேஜ் நிறத்திலிருக்கும். அவன் சேர்ட்கூட வித்தியாசமாக, தோப்பிளாசாக இருக்கும். வெயில்காலம் என்றால் கமர்கட்டு தெரிய கையில்லாத சேர்ட் போடுவான். கை இருக்குதோ இல்லையோ, அவன் சேர்ட்டு எப்போதுமே இடுப்புக்கு மேலே இரண்டு இஞ்சி உயரத்தில் முடிவடைந்துவிடும். மீதி குஷி ஜோதிகா. தொப்புளில் அவன் பியேர்சிங் அணிந்திருந்ததை, ஒரு வேர்க்சொப்பில் வெண்பலகை உச்சியில் எட்டி ஏதோ எழுதிக்கொண்டிருக்கும்போது கவனித்தேன். காதிலும் கலர் கலராக ஏதோ மாட்டியிருந்தான். அவன் நடக்கும்போதுகூட ஒரே கோட்டில் கால்களை மாறி மாறி வைத்து நடக்கும் பெண்கள்போலவே நைஸாக நடப்பான். 

அவன் அவனில்லை என்கின்ற சந்தேகம் வலுத்ததும் பனங்கிழங்கு காய்ந்து, ஒடியலாகி, மாவாகி, கூழாக மாறிவிட்டது. அவன் பேசுவதிலிருந்து, உணவு அருந்துவதிலிருந்து என்று எல்லாவற்றையும் அவ்வப்போது அவதானிக்க ஆரம்பித்தேன். அவன் குரல் சங்கர் மகாதேவனுடையதுபோல கரகரப்பாக இருக்கும். குரல் உயர்த்திப்பேசமாட்டான். இரண்டு வசனத்துக்கொருமுறை கலகலவென்று சிரிப்பான். அன்றைக்கு ஒருநாள் கோப்பி மெசின் ஸ்டக் ஆகிவிட்டது. முழுசிக்கொண்டு நின்றான். ரீசெட் பண்ணிக்கொடுத்தேன். “தாங்க்யூ சோ மச்” என்றான். நளினமாக. “அவ்வாறு நோக்கினால், எவ்வாறு நாணுவேன்? கண்ணாடி முன்னின்று பார்த்துக்கொண்டேன்.”

எப்போதாவது அவனை ஆண்கள் கழிப்பறையில் எதிர்கொள்ளும்போது திடுக்கென்று இருக்கும். ஆனால் அவன் அலட்டிக்கொள்ளாமல் “ஹவ் ஆர் யூ?” சொல்வான். அலுவலகத்தில் மினோஸ் எந்தப் பேதமுமில்லாமல் எல்லோரோடும் பழகிக்கொண்டிருந்தான். கண்டால் ஒரு “ஹாய்”, “வார இறுதிநாள் எப்படிப்போனது?” என்ற கேள்விகள். டீம் மீட்டிங்கில் சந்தேகங்கள், புரோகிராமில் ஏதாவது சிக்கல் எனில் உதவி செய்வது, சாப்பிடும்போது டீவியில் மாஸ்டர் செப் பற்றிய பேச்சு என்று அவன் நம்மோடு பழகுவதில் எந்த விகற்பமும் இருந்ததில்லை. அலுவலகத்திலிருந்த ஏனையோருக்கும் ஏதும் குழப்பங்கள் இருந்ததாகத் தெரியவில்லை. எனக்குத்தான் விடுப்பு. என்னோடு சேர்த்து ஒரு பஞ்சாபிக்காரனும் மூக்கைக்குடைந்தபடியே அவனை நோட்டம் விடுவான். ஒரு பாகிஸ்தானி எதையோ கண்டுபிடித்துவிட்டதுபோல தலையை ஆட்டியபடி தனக்குள் உறுதிசெய்துகொள்வான். அடிப்படையில் ஆசியர்களும் இந்தியர்களும் மினோசை “வாய்” பார்த்தார்கள். அவன் அவனா? அவனில்லை எனின் எப்படி அவன் அவனானான்? அவனாயிருக்கிறானா? அவனாகவே பிறந்தானா? நடுவிலே மாறினானா? அவன் என்பது எது? அவனியல்பு எது? அவனுக்கு அவளைப்பிடிக்குமா? அவனைப்பிடிக்குமா? அவனுக்கென்று ஒரு அவள் இருக்குமா? அல்லது அவன் இருக்குமா? அவனோடு அவன் மட்டுமே சேருமா? மண்டை வெடித்துவிடும்போல இருந்தது.

இவ்வளவு குழப்பங்களுக்கு மத்தியில்தான் அந்த மின்னஞ்சல் வந்திருந்தது. அதில் மினோஸினுடைய சொந்தக்குறிப்பு ஒன்றும் அட்டாச் பண்ணப்பட்டு இருந்தது. மினோஸ் தானே அந்தக்குறிப்பை எழுதியிருந்தான்.

அதில் அவன் தான் ஒரு திருநங்கை என்றான். தன்னுடைய உடல்நிலையை “Gender Identity Disorder” என்று குறிப்பிட்டிருந்தான். தன்னை எல்லோரும் இனிமேல் “மினோஸா ஹென்றிக்” என்று அழைப்பதையே விரும்புவதாகத் தெரிவித்திருந்தான். தான் சிறுவயதுமுதலேயே பெண்ணாகவே தன்னை உணர்ந்துவந்திருந்தாலும் இப்போதுதான் அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் தன்னம்பிக்கையும் துணிச்சலும் தனக்கு வந்துள்ளதாகச் சொன்னான். நண்பர்கள், குடும்பத்தினரின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தான். தன்னுடைய அன்றாட அலுவலக நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இராது என்பதோடு, தான் முன்னதைவிட உற்சாகத்துடன் வேலை செய்யவுங்கூடும் என்றும் குறிப்பிட்டிருந்தான். தான் இனிமேல் தனக்குப் பிடித்த, வசதியான பெண்களுடைகளையே அணிவான் என்றும், அலுவலகத்தில் பெண்களுக்கான மலசலகூடத்தைப் பயன்படுத்தப்போவதாகவும் கூறினான். இனிவரும் காலத்தில் தன்னை அவள் என்று விளிக்கும்படியும் சொல்லியிருந்தாள். 



மின்னஞ்சலில் வேறும் பல திருநங்கைகள் சம்பந்தமான இணைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன. செக்ஸ் என்ற வார்த்தைக்கும் ஜெண்டர் என்ற வார்த்தைக்கும் உள்ள வித்தியாசம் விளக்கப்பட்டிருந்தது. திருநங்கைகளும் வேலைத்தளமும் என்ற ஒரு கட்டுரை இணைப்பில் அவர்களுடைய அலுவலக உரிமைகள், எப்படிப் பழகுவது என்றெல்லாம் விளக்கியிருந்தார்கள். இறுதியாகத் திங்கள் காலை இதுபற்றிய கவுன்சிலிங் கூட்டம் ஒன்று அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் இடம்பெறும் என்றும் சந்தேகங்கள் இருந்தால் தெளிவுபடுத்திக்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

பிறப்பால் ஒருவரின் பாலினம் (sex) என்பது அவருடைய பால் அடையாளமாக (gender) இருக்கவேண்டிய அவசியம் ஏதுமில்லை. பால் அடையாளம் என்பது ஒருவர் தன்னை யாராக உணருகிறார் என்பதைப்பொறுத்தது. மனிதர்கள் தம்மை ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது இரண்டுமேயில்லாமலும்கூட உணரமுடியும். அதற்கு பல காரணங்கள் உண்டு. ஹோர்மோன்களின் சுரப்பு, சமூகச்சூழல், வளர்ந்த சூழல், குடும்ப அமைப்பு, தனிப்பட்ட விருப்பு என்று இந்த லிஸ்ட் நீளும். பிறப்பால் ஆணாக இருப்பவரின் பால் அடையாளம் பெண்ணாகவும் இருக்கலாம். பிறப்பால் பெண்ணாக இருப்பவரின் பால் அடையாளம் ஆணாகவும் இருக்கலாம். தம்மை ஆணாகவோ, பெண்ணாகவோ அடையாளப்படுத்திக்கொள்ள விருப்பாதவர்கள் கூட உண்டு. இந்தக் குழப்பம் உள்ளவர்கள் “psychotherapy” ஆலோசனைகளைக் கேட்டறிந்து அதற்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகளைச் செய்யலாம். மினோஸா இந்த சிகிச்சை நிரலினூடாக, ஆரம்பத்தில் சில ஹோர்மோன் மருத்துவங்கள் (Hormone Replacement Therapy) செய்துவிட்டுப் பின்னர் “Gender Reassignment Surgery” என்கின்ற பாலுறுப்பு மாற்றல் அறுவை சிகிச்சையும் செய்திருக்கிறாள். இச்சிகிச்சை முறைகள் ஆளாளுக்கு மாற்றம் பெறும். வைத்தியர்கள் ஆலோசனை கொடுப்பார்கள்.

அத்தனை இணைப்புகளையும் கட்டுரைகளையும் வாசித்து முடித்தபின்னர் ஓரளவுக்கு தெளிவு ஏற்பட்டது. நாம் ஆண், பெண் என்ற பெரும்பான்மை மையங்களுக்கு இடையே சிக்கிக் கிடப்பதாலேயே மற்றவர்களை எதிர்கொள்ளச் சிரமப்படுகிறோம். இந்தப்பொதுமைப்பாடுகள்தான் ஓரினச்சேர்க்கையாளர்களையும் மற்றமைகளாய்ப் பார்க்க நம்மைத் தூண்டுகிறது. ஆனால் சோ.ப எழுதியதுபோல “அவரவர் செய்யிறது அவையோட”. எனக்கும் மினோஸாவுக்குமுள்ள வித்தியாசம் எனக்கும் அமெலியாவுக்குமிடையில் உள்ளதைப்போன்றதே. மற்றும்படி எல்லோரும் மனிதர்கள். அவரவருடைய பாலினமும் பால் அடையாளமும் அவரவரோடது. எல்லோருக்குமான பொது அறத்தை பின்பற்றும்போது, அவரவர் தனியுரிமைகளை மற்றவர் மதித்துப் பழகும்போது எதற்குக் குழப்பம் வரப்போகிறது? எதற்கு விடுப்பு? மனது தெளிவானது. எல்லோரும் மனிதர்களே.

இவ்வளவு நாளும் மினோஸாவை ஒரு வேற்றுக்கிரகவாசிபோல நோட்டம் விட்டுக்கொண்டிருந்ததை எண்ணி சங்கடமாகவும் இருந்தது. அவள் கவனித்திருப்பாளோ? அவள் தொப்புள் பியேர்சிங்கை, ஆச்சி மீன் அரியும்போது நாய் நாக்கைத் தொங்கபோட்டபடி பார்ப்பதுபோல நான் பார்த்ததை அவள் கவனித்திருப்பாளோ? என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பாள்? ஷாவனிஸ்ட் என்று எண்ணியிருப்பாளா? வக்கிரப்புத்தி, பிற்போக்காளன், கொசப்பன், காட்டான் என்று நினைத்திருப்பாளா? அவமானமாயிருந்தது. என்னால் ஏன் அவளோடு ஒரு சகமனிதனாய் சங்கடமில்லாமல் பழக இயலாமலிருந்தது? எது என்னைத்தடுத்தது? 

வெள்ளி இரவு முழுதும் அதுவே யோசனையாக இருந்தது. இது நான் வளர்ந்த கலாச்சாரம் என்று தோன்றியது. பெண்கள் உட்பட்ட மற்றப் பாலினத்தவரை நான் எப்போதுமே ஒருவித விடுப்புக்குணத்தோடே அவதானித்து வந்திருக்கிறேன். அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களின் உலகம் எப்படி இருக்கிறது? அவர்களின் உடை ஏன் வித்தியாசமாயிருக்கிறது? மேக்அப் போடுவதிலும், முடியை நீளமாய் வளர்ப்பதிலும், சேலை அணிவதிலும், காலணிகளை டிசைனாக அணிவதிலும் அவர்களுக்கு ஏன் ஆர்வம் வருகிறது? எப்போது இந்தப் பிரிவினை ஆரம்பிக்கிறது? இது சமூகம் ஏற்படுத்துவதா? அல்லது இயற்கையா? இரண்டுமா? சிறுவயதுமுதலே இந்தக்கேள்விகளுக்கான பதில்களை நான் தேடிக்கொண்டே வந்திருக்கவேண்டும். இதில் திருநங்கையான மினோஸா மேலும் புதிய கேள்விகளை என்னுள் உருவாக்கியது ஆச்சரியமானதொன்றல்ல. மனது ஓரளவுக்குத் தெளிவாகத்தொடங்கியது. அந்த வார இறுதி முழுதும் மினோஸா பற்றிய சிந்தனை எதுவும் வரவில்லை. மறந்தேபோய்விட்டேன்.

திங்கள் காலை அலுவலகத்துள் நுழைந்து என் டெஸ்கில் மடிக்கணினிப்பையை வைத்துவிட்டு, குளிர் கோர்ட்டை எடுத்து கதிரையில் கொழுவியபோதுதான், எதேச்சையாக மினோஸாவைக் கவனித்தேன். அவளுடைய வழமையான தோற்றம்தான். கமர்கட்டுத் தெரிய ஒரு பிளவுஸ். முக்கால் காற்சட்டை. பெண்கள் காலனி. அவள் வழமையாக அணிவதுதான். லிப்ஸ்டிக் சற்று அதிகமாக அணிந்திருந்தாள். அல்லது பேசியல் செய்திருக்கலாம். தெரியவில்லை. 

நான் பார்ப்பதை உணர்ந்தோ என்னவோ, மினோஸா என்னைத் திரும்பிப்பார்த்தாள். சிரித்தாள். நான் சிநேகமாய்ச் சிரித்தபடி “ஹாய் மினோஸா” என்றேன். அவள் கண்கள் விரிய “வாவ், தட்ஸ் மை போய். தாங்க்ஸ் டார்ல்ஸ்” என்றாள். 

எனக்கு "அபூர்வ சகோதரர்கள்" ரூபிணியே ஞாபகத்துக்கு வந்தார். என்ன தோன்றியதோ, விடுக்கென்று மினோஸா அருகில் நெருங்கிச் சென்றேன். அவளும் எதிர்பார்த்தவளாய் உடனே இருக்கையிலிருந்து எழுந்தாள்.

நட்போடு, தன்னம்பிக்கையுடன், கண்கள் விரிய, சிரித்தபடி, நேசமாக, முகத்தை மாத்திரம் முன்நீட்டி, கையை மிருதுவாக அவளுடைய மேல்முதுகில் கை வைத்து, உடல் படாமல், கன்னத்தை மாத்திரம் கன்னத்தோடு ஓட்டி, காற்றுக்கு “ம்ம்மா” என்று சற்றுச் சத்தமாக முத்தம் கொடுத்து, 

“யூ லுக் கிரேட் மினோஸா”  என்றேன்.

&&&&&&&&&&&&&&


Photos:
http://www.lpassociation.com/upload/images/112114-055216_7.jpg
http://urbandoggs.blogspot.com.au/2010/03/art-of-social-kiss.html
https://broadly.vice.com/en_us/article/a-guide-to-the-social-factors-that-put-transgender-lives-at-risk

Comments

  1. மிக அருமை ஜேகே!
    பழம் நழுவி பாலில் இயல்பாய் விழும் லாவன்யம் எழுத்தில்!!

    பொருளைக் கையாண்ட விதத்தில் மனிதம் தோய்ந்த பேரழகு!

    என்ன சொல்ல....
    Hat's off to you man...

    ReplyDelete
  2. அருமை.அற்புதம். சொல்ல வந்த விஷயமும் இயல்பாக எடுத்தாளும் உதாரணங்களும். இதற்கு மேலே சொல்ல வார்த்தையின்றித் தவிக்கிறேன்.

    ReplyDelete
  3. நன்றி என்ற சொல்லை முதலில் சொல்ல விரும்புகின்றேன். உங்கள் பாணியில் சிரிக்கவும் வைத்தீர்கள், சிந்திக்கவும் வைத்தீர்கள்.

    பெற்றோல் தாங்கியுள் தீப்பந்தத்தை விட்டெறிதல் போல என்பது ஒரு நொஷ்க் சொற்றொடர். நம்மில் பலருக்கும் உங்களதைப் போன்ற கருத்துக்கள் ஏதோ சில சந்தர்ப்பங்களில் அவரவர் மனச்சாட்சிகளைப் போட்டு உலுப்பினாலும் வெளிவெளியாகக் கதைக்க பெரும் தயக்கம். அப்படிக் கதைக்கப் போனால் மற்றவர்கள் நம்மையும் திருநங்கை அல்லது திருநம்பியாக நினைப்பார்களோ? அல்லாவிட்டால் அவர்களை பிழையான நோக்கத்தோடு நெருங்க விரும்புபவர்களாக படம் விழுந்து விடுமோ என்ற பயம் தயக்கம். சொந்தச் சகோதரனையே பொண்டுகள் சங்கரி என்று பிறத்தியாருடன் சேர்ந்து பழிப்பவர்கள் நாங்கள். ஊரூருக்கு அக்காத்தை, பொண்டுகள் என்ற அடைமொழிகளோடு பல ஆண்கள் இருந்தார்கள், இருக்கின்றார்கள், எதிர்காலத்திலும் இருப்பார்கள். அவர்கள் ஐந்தாறு பிள்ளைகளுக்கு அப்பனானாலும் அடைமொழிகளுடனேயே சீவிக்க வேண்டிய கட்டாயம். அவர்களுக்கும் இந்த அடைமொழி எல்லாம் கேட்டுக் கேட்டு ஒரு கட்டத்திலே சுணைக்கெட்டுப் போய்விடும். நல்ல வண்ணமாக பத்தி பரவசமாக திருமாலை மோகினியாக்கி சிவனோடு கலக்க வைத்து புராணக்கதை கேட்பதில் எங்களை மிஞ்சியவர் எவருண்டு?
    ஆனால் அப்படி ஒரு திருமாலை திருமாலா என்று எம்மருகே வாழவிட்ட பழக்கம் எமக்கில்லை.
    ஒரு நாற்பது வாரியங்களின் முன்னே ஆனந்தவிகடன் கவர்ஸ்ரோரியாக ஒரு சங்கதியை விவரித்தது.
    சென்னை அருகே உள்ள கூத்தாண்டவர் கோயில் திருவிழா மற்றும் திருநங்கைகள் பற்றியது.
    பாரதப்போரில் களப்பலியாகப் போகும் அரவானுக்கு பிரமச்சரியம் கழிக்க
    கிருஷ்ணன் பெண்ணாகி அரவானை மணமுடிப்பது கதை. அந்த பெண்ணாக மாறிய கிருஷ்ணனாகத்
    தங்களைப் பாவனை செய்யும் திருநங்கையர்கள் திருவிழாக் கடைசியில் மணப்பெண்ணான தங்கள் கோலத்தை அழித்து
    தாலியறுத்து ஒப்பாரி வைத்து அழுவார்கள். அந்த ஒப்பாரியில் தங்களுக்கு வந்தமைந்த இந்தப் பிறவியின் துயரத்தை எல்லாம் கொட்டி
    அழுவது போல உணர்ந்ததாகவும், கனத்துப் போன நெஞ்சுடன் அவ்விடங்களில் விட்டு அகன்றதாகவுமாக அந்த விவரணம் அமைந்திருந்தது. இப்படியான கருத்துக்கள் இடைசுகம் எம்மை எட்டினாலும் இன்றும் இது குளவிக் கூட்டுக்குள் கைவிட்ட மாதிரிதான்.

    அரிதரிது மானிடர் ஆதல் அரிது
    மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
    பேடு நீங்கிப் பிறத்தல் அரிது......
    என்றார் ஒளவையார்.
    அப்படி இல்லாமல் பிறக்கும் பிள்ளைகளை என்ன கழுத்தைத் திருகிக் கொல்லுவதோ?
    இன்றைக்கு பலர் மாற்றுத் திறனாளிகள் என பண்புடன் அழைக்கப்பட்டது படுகின்றோம்.
    இப்படியாகவே ஆணாகப் பிறந்தாலும் பெண்ணாக தன்னை உணர்பவர்களும்,
    பெண்பாலுறுப்புடன் பிறந்தும் ஆணாகவே தன்னை உணர்பவர்களும்
    பண்புடன் மனிதத் தன்மையுடன் நடத்தப்பட வேண்டும்.
    முக்கியமாக அவரவர் குடும்பத்தினரின் ஆதரவு அவர்களின் வாழ்க்கைப்பாதை சீர்கெடாமல் அமைய அத்தியாவசியம் தேவை.
    பிறத்தியாரால் பழிக்கப் படவும், சொந்தத் தாய் தகப்பன் சகோதரர்களால் வெறுக்கப் படவும்
    எவருமே வரங்கேட்டு இந்தப்பூமியில் வந்து பிறப்பதில்லை.

    அருமையான கருத்துக்கும், எழுத்துக்கும் பாராட்டுக்கள் ஜெயக்குமரன்!

    ReplyDelete
  4. அருமை

    ReplyDelete
  5. மிகவும் அருமையாக ஒரு அமைதியான நதியில் ஓடத்தை செலுத்தியிருக்கிறீர்கள். சரியாக பதினைந்து வருடங்களின் முன் பல்கலைக்கழகத்தில் நானும் பனங்கிழங்காக பாத்தி கட்டியது ஞாபகம் வருகிறது. இப்போது சாதாரணமாகி வாக்களிக்கும் நிலைக்கே முன்னேறியிருக்கிறோம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...