“வரேக்க சிங்களப்பேப்பர் கொஞ்சம் எடுத்தாறீங்களா? மரக்கறி சுத்திவைக்க ஒண்டும் இல்லை”
தமிழ்க்கடை வாசலில் மெல்பேர்ன் நகரத்து இந்திய, இலங்கை இலவசப் பத்திரிகைகள் ஒருபக்கமாகச் சிதறிக்கிடந்தன. அநேகமானவை ஆங்கிலப் பத்திரிகைகள். சிலது சிங்களத்தில். பக்கத்திலேயே விளம்பரக்கட்டுகள். லைக்கா மொபைல் தொட்டுப் பரதநாட்டிய வகுப்புவரை அச்சடிக்கப்பட்ட விளம்பரங்கள். எல்லாவற்றிலும் பெண்கள் தெரிந்தார்கள். இந்தியப்பத்திரிகைகளில் பொட்டு வைத்திருந்தார்கள். லங்கா டைம்ஸ் முகப்புப்பக்கத்தில் திருமணவுடையில் ஒரு அழகான சிங்களத்துச் சின்னக்குயில் சிரித்துக்கொண்டிருந்தது. மெல்லிய தங்கநிறத்தில் ஸீத்ரூ சேலை அணிந்து, கழுத்தில் ஆரம், நெற்றிச்சுட்டி, நிறைந்த சிரிப்பு, சிங்களத்திகளுக்கேயுரிய மேல்நோக்கி எறியும் கண்கள் என்று, இன்னமும் சில நிமிடங்களில் புட்டவிக்கும் நீத்துப்பெட்டியைத் தலையில் அணிந்தபடி தோன்றப்போகும் கண்டிய இளவரசனுக்காகக் காத்திருக்கும் மணமகள். தூசி படிந்து, கட்டுக்குலைந்து, கால்களுக்குள் மிதிபட்டு.
&&&&&&&&&&&&
இப்போதெல்லாம் வீட்டில் அச்சுப்பத்திரிகைகளின் பயன்பாடு முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அதிகரித்துவிட்டது. தோட்டத்துத் தக்காளிப்பழங்களையோ, கத்திரிக்காய்களையோ, கீரையையோ, அப்பிள் பழங்களையோ பத்திரிகைளில் சுற்றிக் குளிர்சாதனப்பெட்டியினுள் வைத்தால் அவை வாடிப்போகாது என்று ஒரு ஐதீகம். தவிர, காய்கறி நறுக்குதல், இறைச்சி வெட்டுதல், புட்டுக் குழைத்தல், நகம் வெட்டுதல், சொந்தமாக மொட்டை அடித்தல் எனப்பல நானாவித செயற்பாடுகளுக்கும் அடியில் பத்திரிகை விரித்தல் என்பது அவசியமானதொன்று. சாமியறைத்தட்டு, அலுமாரி, பாத்திரங்கள் வைக்கும் பான்ரி போன்றவற்றுக்கும் கீழே விரிப்பதற்கு பத்திரிகைகளே பயன்படுகின்றன. கூழ் குடிக்கும்போது இரண்டு அடுக்கு பேப்பரை விரித்து அதன்மேல் கிண்ணியைப் பிடித்துக் குடித்தால், சிந்தினாலும் வெடுக்கு நிலத்தில் ஒட்டாது. அப்படியே மீன் முள்ளையும் நண்டுக்கோதையும் அதன்மேலேயே கொட்டிவிடலாம். வடை, மோர்மிளகாய், மரவள்ளிப் பொரியல் போன்றவற்றின் எண்ணையை டிஸ்யூ பேப்பர்கள் சரியாக உறிஞ்ச மாட்டா. விளம்பர துண்டுப்பிரசுரங்கள் எல்லாம் வழுவழுப்பான தாளில் அச்சிடப்படுவதால் அவையும் எண்ணையை உறிஞ்சுவதற்குப் பயன்படா. செய்திப்பத்திரிகைகளே எண்ணையை உறிஞ்சுவதற்கு அசல் சாமான்.
வீட்டில் அச்சுப்பத்திரிகைகளை காசு கொடுத்துவாங்கிப் பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டதால் பாவனைக்குத்தேவையான அளவுக்கு அவை கைவசம் இருப்பதில்லை. அவ்வப்போது அம்மா தான் வாங்கும் ஞாயிறு வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகளை ஆறேழு மாதங்கள் கழித்து வீட்டுப்பாவனைக்காகக் கொண்டுவந்து கொடுப்பார். விரிக்கும்போதோ, அடியில் விரித்து மரக்கறி வெட்டும்போதோ பொழுதுபோக்காக அவற்றிலிருக்கும் செய்திகளை வாசிக்கலாம். “இரண்டாயிரத்துப் பதினாறுக்குள் தீர்வு”, “ஐநா தீர்மானம்”, “ரிசாத் பதியுதீன்”, “சிகாப்தீன் கட்டுரை” போன்ற செய்திகள் எப்போதுமே பழசாவதில்லை. இப்போதும்கூட சம்பந்தன் “இரண்டாயிரத்துப் பதினாறுக்குள் தீர்வு நிச்சயம்” என்று பேட்டி கொடுத்தால் அதற்கு ஒப்பு ஊதுவதற்கு பலர் தயாராக இருப்பார்கள். எதிர்த்துப்பேசினால் இருக்கவே இருக்கிறது ஒரு கேள்வி.
“பெரிய விண்ணன் எண்டா நீ இரண்டாயிரத்துப் பதினாறுக்குள்ள தீர்வு எடுத்துக்காட்டோணும். ஏலாதா? கனக்க கதைக்காமப் பொத்திக்கொண்டு போ!”
பொத்திக்கொண்டு ஏனைய பக்கங்களைத் திருப்பலானேன்.
ஏதோ ஒரு ஞாயிறு வீரகேசரியில் “தொழிலாளர்களைப்...” என்ற தலைப்பில் முற்பக்கத் தொடர்ச்சியாக ஒரு கட்டுரை நீண்டது. “எல்லா தொழிற்சங்க அரசியல்வாதிகளையும் இணைத்துக்கொண்டே இராமநாதன் தொண்டமான் செயல்படுவார். அந்த அளவு மனித நேயம் அப்போது எல்லாரிடமும் இருந்தது. மலையக மக்களின் மேம்பாடு ஒன்றை மட்டுமே இலக்காகக்கொண்டு அவர்கள் செயற்பட்டார்கள். இன்று ஏன் அது இல்லை?” என்று கட்டுரை கேள்வி கேட்டது. தொண்டா காலத்தில் பத்திரிகை வாசித்தவர்கள் இப்பத்தியை வாசிக்கமாட்டார்கள் அல்லது அவர்கள் இப்போது இறந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அடித்துவிட்டிருக்கிறார்கள். வடக்கு, கிழக்கு, மலையகம், முஸ்லிம், சிங்களம் என்று எல்லா அரசியல்வாதிகளும் சுதந்திரத்துக்குப்பின்னர் ஒரேவகையான அரசியலையே செய்துவந்திருக்கிறார்கள். ஐம்பதுகளிலும் எண்பதுகளிலும் இன்றைக்கும் பெயர்கள் மாறினவே அன்றி செயற்பாடுகள் துளியும் மாறவில்லை. தொண்டா வாழ்ந்த காலத்தில் அவரைச் சந்தர்ப்பவாதி என்று கிழித்துத் தொங்கப்போட்டுக்கொண்டிருப்பார்கள். மரணமும் காலமும் அவரைப்புனிதராக்கிவிட்டது. யார் இந்தக்கட்டுரையை எழுதியது என்று தெரியவில்லை. முற்பக்கத்தில் இருக்கலாம் என்று தேடிப்பார்த்தேன். தாளைக் காணவில்லை. அது கோழி இறைச்சியைக் கட்டிப்பிடித்துக்கொண்டு உறைசாதனப்பெட்டியுள் குளிரில் நடுங்கிக்கொண்டிருக்கலாம்.
அதே வீரகேசரியில் “நான் சித்தன்” என்று கேள்வி பதில் பகுதி ஒன்று வெளியாகியிருந்தது. இரண்டே இரண்டு கேள்விகள். பலாங்கொடை நவீந்திராவுக்கு டிராகன் மிருகத்தைப்பற்றி அறிய ஆவல். சாம்பல் தீவு றேகனுக்கு விண்கலங்கள் பற்றிய தேடல். சித்தரும் விலாவாரியாக விளங்கப்படுத்துகிறார். பதில் எழுதுவதற்கு ஏதேனும் சரக்கு கிடைத்துவிட்டால் உடனேயே அதற்கான கேள்விகளை திக்குவெலவிலிருந்தோ மாவனல்லவிலிருந்தோ யாரேனும் எழுதி அனுப்பிவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். இதுவும் ஒருவித பதிலை வைத்துக்கொண்டு கேள்வியைத்தேடும் வீரகேசரிக் கைங்கரியம்தான். சொன்னாப்போல, வீரகேசரியில் இன்னமும் மோனா கேள்வி பதில்கள் வெளிவருகின்றது. ஒருகாலத்தில் இந்த மோனா கேள்வி பதில்களுக்காகவே வீரகேசரி வாங்கியது ஞாபகம் வருகிறது. அப்போது நிச்சயம் பிரசாந்த் பற்றி ஒரு கேள்வி பதிலேனும் படத்தோடு இருக்கும். ரம்பா தொடை, நக்மாவுக்கு எது கொடை போன்ற கிளுகிளுப்புக் கேள்விகளுக்கு பதில் எழுதப்பட்டிருக்கும். ஒருமுறை, வீரகேசரியில் பணிபுரிந்த முருகபூபதியிடம் “யாரந்த மோனா?” என்று கேட்டேன். சொன்னார். You are kidding!
பழைய பத்திரிகைகள் என்றாலும் அவற்றில் இராசி பலன்கள் தட்டுப்பட்டால் வாசிக்காமல் விடுவதில்லை. நற்பலன்கள் எப்போதும் காலாவதியாவதில்லை. ஒக்டோபர் முப்பதாம் திகதி முதல் நவம்பர் ஐந்து வரையான வீரகேசரி வாரப்பலனில் தனுசு ராசிக்காரருக்கு சிறப்பான நற்பலன்கள் என்றிருந்தது. குடும்பநிலையில் மகிழ்ச்சி, கொடுக்கல் வாங்கல் சுமூகம், மாணவர்களுக்கு சிறப்பு, பெண்களுக்கு நன்மை என்று எல்லாமே நற்பலன்கள்தாம். ஆனால் அதே பலன்களை அச்சொட்டாக வரிக்கு வரி கன்னி, கும்பம், மேஷ ராசிக்காரர்களுக்கும் போட்டிருந்தார்கள். வாரப்பலன்களை வாசிப்போர் தம்முடைய ராசியினுடைய பலனை மாத்திரமே வாசிப்பார்கள் என்ற அதீத நம்பிக்கை அதை எழுதிய “துன்னையூர் ராம். தேவலோகேஸ்வரக் குரு” க்களுக்கு இருந்திருக்கலாம். இந்தப்பலன்களை அந்த தேவலோகேஸ் வாரவாரம் கணித்து அனுப்புவாரா? அல்லது பொத்தாம்பொதுவாக சில டெம்ப்ளேட்டுகளை அவர் அனுப்பிவைக்க வீரகேசரி மாற்றிமாற்றிப் போடுகிறதா? தெரியவில்லை. தேவலோகேஸ் என்று உண்மையிலேயே ஒருவர் இருக்கிறாரா? அல்லது அவரும் வீரகேசரி பத்திரிகையாளர்களில் ஒருவரா? மோனாலிசாதான் தேவலோகேசுமா? இல்லை, அப்படியே ஒருவர் துன்னையூரில் இருந்தால், அவர் இந்நேரம் என்ன செய்துகொண்டிருப்பார்? முழுநேர சாத்திரியா? அர்ச்சனையும் செய்வாரா? அவருடைய வீடு எப்படியிருக்கும்? நாற்சார் வீடு, பகல் பன்னிரண்டு மணிக்கும் படர்ந்திருக்கும் மெல்லிய இருட்டு, வீடு முழுதும் பாண்டல் நெய் நாற்றம், சாய்வு நாற்காலி, பரந்துகிடக்கும் பஞ்சாங்கங்கள், இறக்கி வைத்த பலாப்பழங்கள், பலரின் திருமணக்குறிப்புகள், திவச வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்த மரக்கறிகள், மெதுவாக ஒருகாலை சற்றே இழுத்து இழுத்து நடக்கும் தேவலோகேசின் மனைவி என்று காட்சி விரிய விரிய தலைவெடித்துவிடும்போல இருந்தது. இந்த தேவலோகேசை வைத்து, அவர் வாரவாரம் வீரகேசரிக்கு வாரப்பலன் எழுதி அனுப்புவதை வைத்து அற்புதமாக ஒரு சிறுகதை எழுதலாம்போலத் தோன்றுகிறது.
அதேவேளை, மெல்பேர்னிலிருந்து எத்தனையோ மைல்கள் தொலைவில் வசிக்கும், முன்பின் அறிமுகமில்லாத இந்த தேவலோகேஸ்வரரை எப்படி எதேச்சையாக, உள்ளி உரிக்கும்போது, ஒரு பழைய பத்திரிகை என்னோடு இணைத்துவைக்கிறது என்பதை பிரபஞ்சத்தின் எண்ணற்ற வியப்புகளில் ஒன்று என்று வியக்காமல் வேறென்னென்பது?
&&&&&&&&&&&&
நான் முதன்முதலில் விடுமுறைக்கு அவுஸ்திரேலியா வந்தபோது மேல்பேர்னில் இரண்டு தமிழ்ப் பத்திரிகைகள் வெளிவந்துகொண்டிருந்தன. ஒன்று ஈழமுரசு. மற்றையது உதயம். வேறு பத்திரிகைகளும் வெளிவந்திருக்கலாம். ஞாபகம் இல்லை. இதில் ஈழமுரசு போராட்டத்துக்கு ஆதரவான பத்திரிகை. உதயம் புலிகளை விமர்சித்து வெளிவந்த பத்திரிகை. வேறு விடயங்களும் இரு பத்திரிகைளிலும் வெளிவந்தனதான். ஆனால் பொதுப்புத்தி இப்படித்தான் அப்பத்திரிகைகளை வரையறை செய்திருந்தது. புலி ஆதரவு. புலி எதிர்ப்பு. இரண்டுமே இலவசம் என்பதால் நம்மவர்கள் இரண்டையும் வாங்கி வாசித்துவிட்டு கொமெண்ட் அடித்துக்கொண்டிருந்தார்கள். இணையம் இப்போதுபோல அக்காலத்தில் செல்பேசிவரை வந்திராததால் பத்திரிகைகளும் வானொலிகளுமே மெல்பேர்ன் தமிழர்களுக்கான தாயகத்தொடர்பு ஊடகங்களாக இருந்தன. முகநூலில் கொமெண்ட் பண்ணுவதுபோல அப்போது வானொலிக்கு பலரும் அழைப்பு எடுத்துக் கருத்துச்சொல்லி சண்டை பிடித்துக்கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு சண்டைக்குமிடையில் ஒரு சினிமாப்பாடல் அல்லது புரட்சிப்பாடல் ஒலிக்கும். போராட்டத்துக்கு நிதி சேகரிப்பார்கள். அல்லது நடன அரங்கேற்றம், இலக்கிய விழாக்கள், கோயில் சங்காபிஷேகம், இன்னபிற நிகழ்வுகளின் அறிவுப்புகள் ஒலிக்கும். நட்சத்திர கலை விழாவுக்கு டிக்கற் விற்பார்கள். இவ்வளவும் எழுத்துருவில் பத்திரிகைகளிலும் வெளிவரும். கூடவே கட்டுரைகள், சிறுகதைகள், நனைவிடைதோய்தல்கள். பரஸ்பரம் ஆசிரியர்பீடங்கள் மிரட்டல் விடுவதுமுண்டு. ஆயுதப்போராட்டம் இருந்தவரையில் இவ்விரு பத்திரிகைகளும் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருந்தன. ஒன்று இன்னொன்றின் தேவையை ஏதோ ஒரு வகையில் உறுதிப்படுத்திக்கொண்டு இருந்தது என்று நினைக்கிறேன்.
இப்போது மெல்பேர்னில் வெளியான அந்த இரண்டு தமிழ் பத்திரிகைகளும் நின்றுபோய் விட்டன. முதலில் நின்றது உதயம். போர் முடிந்த கையோடு அதனைக் காணவில்லை. நோக்கம் நிறைவேறியது, அல்லது புலிகளை இனிமேலும் விமர்சித்து என்ன பயன்? என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஈழமுரசு கொஞ்சக்காலம் வெளிவந்துகொண்டிருந்தது. பின்னர் அதுவும் நின்றுவிட்டது. வெற்றிச்செய்திகள், சென்சேஷன்கள் இன்றி சோபையாக சோககீதங்களையும் எதிர்மறைச் செய்திகளையும் வாசிக்கச் சமூகம் தயாராக இருக்கவில்லை.
இலவசப்பத்திரிகைகளை பொறுக்கி வாசிக்கும் பலரும் வேடிக்கை பார்ப்பவர்கள்தான். காத்திருந்து, வெளிவரும் நாளில் முண்டியடித்து வாங்கி, மை வாசம் பிடித்து, ஆக்கங்களை வாசிக்கும் வாசகர் கூட்டம் எதுவும் மெல்பேர்னில் இல்லை. பலருக்கு பத்திரிகைகள் எந்தெந்த நாள்களில் வருமென்றுகூடத் தெரியாது. எப்போதாவது தமிழ்க்கடைக்கு இடியப்பம் வாங்கவோ, ஊருக்கு காசு அனுப்பவோ செல்லும்போது வாசலில் கிடந்தால் பொறுக்கிவந்து வீட்டில் போடுவார்கள். டீ குடிக்கும்போது மேலோட்டமாக வாசிப்பார்கள். இப்படியானவர்களுக்கு செய்திகளின் உண்மைத்தன்மை என்றைக்குமே முக்கியமில்லை. சென்சேஷன்தான் முக்கியம் அந்தச் சென்சேஷனை தமிழ்ப்பத்திரிகைகளால் தொடர்ந்து கொடுக்கமுடியவில்லை. ஒருகட்டத்தில் அனைவரும் ஓய்ந்துபோனார்கள். வேடிக்கைபார்த்தவர்கள் கலைந்துபோனார்கள். வித்தை காட்டுபவர்களும்தான். வானொலிகளுக்கும் அதுவே நிகழ்ந்தது. காலப்போக்கில் சொல்லாமல் கொள்ளாமல் தமிழ்பத்திரிகைகள் நின்று போனதில் ஆச்சரியமெதுவுமில்லை. அந்தப்பத்திரிகைகள் அப்படி நின்றுபோனதைக்கூட உணரும் மனநிலையில் மெல்பேர்ன் வாசகர் சமூகம் இருக்கவில்லை.
எல்லாவற்றுக்கும் முக்கிய காரணம் இணையம்தான். இணையம் கொடுக்காத, கொடுக்கமுடியாத உள்ளடக்கத்தை பத்திரிகைகளால் கொடுக்கமுடியவில்லை. உள்ளூர் செய்திகளை, மெல்பேர்ன்வாசிகளுக்கேயான விடயங்களைக் கொடுக்க பத்திரிகைகள் தயாராகவிருக்கவில்லை. தாயகச் செய்திகள், தாயகவிடுதலை, தாயகத் துயர்தீர்ப்பு, தாயகத்து செத்தவீடுகள் என்று சதா தாயகம் நினைவாகவே பத்திரிகைகள் இருந்தன. மெல்பேர்ன்வாசிகளின் மனநிலையும் அதுவாகவேயிருந்தது. தமிழ் விடயங்கள் என்றாலே அவை ஈழத்து விடயங்களாகவே இருக்கவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். அது லங்காசிறியிலும் சங்கதியிலும் சுடச்சுட கிடைக்க ஆரம்பித்ததும் அச்சுப்பத்திரிகைகள் அவர்களுக்குத் தேவையற்றுப்போயின. பத்திரிகைகளில் எழுதியவர்கள் பலரும் இணையத்திலும் செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் அதே புலி எதிர்ப்பு, புலி ஆதரவு பிரச்சாரங்கள் இடம்பெற்றன. ஒரு கட்டத்தில் வடிவேலுவின் மின்னல்போல பலர் அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்குமாக கங்காருபோலத் தாவி ஓடினார்கள். இப்போதெல்லாம் எனக்கு எவன் எதிர்க்கிறான், எவன் ஆதரிக்கிறான் என்றே தெரிவதில்லை. இந்த டிசைனும் புரிவதில்லை. அரியும் அரனும் ஒன்று. அதை அறியாதார் வாயில் மண்ணு.
&&&&&&&&&&&&
ஆனால் சிங்களப் பத்திரிகைகள் அப்படியல்ல. அவற்றின் வரத்து வரவர அதிகரித்துக்கொண்டே வருகிறது.
“பகன” என்கின்ற பத்திரிகை “First Sri Lankan community newspaper with Sinhala, English and Tamil” என்ற டக்லைனோடு சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் ஓரிரு தமிழ் ஆக்கங்களோடும் மாதமொரு இதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது. “B. S. Sarma” என்பவர் “இந்து சமயம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்” என்ற ஒரு தொடரைத் தமிழில் எழுதிவருகிறார். நான் புரட்டியபோது எட்டாவது அத்தியாயம் ஓடிக்கொண்டிருந்தது. மேலோட்டமாக ஒரு நோட்டம் விட்டேன். சாம, அதர்வண வேதங்கள் பற்றிய குறிப்புகள் அதில் இருந்தன. அதர்வண வேத மந்திரங்களைக்கொண்டு எதிரிக்கு பில்லி, சூனியம், துஷ்ட தேவதைகளால் பிணி ஏற்படுத்தலாமாம். இந்த “B. S. Sarma” யார் என்று தெரியவில்லை. எனக்குத்தெரிந்து மெல்பேர்ன் தமிழ் பேரிலக்கிய வட்டங்களில் இந்த B.S ஐக் கேள்விப்பட்டதில்லை. ஆர்வம் மீறியதால் இந்தத்தொடரின் இன்னொரு அத்தியாயத்தை வாசிக்கவென கொண்டுவந்திருந்த பத்திரிகைக் கட்டில் அடுத்த இதழைத் தேடி எடுத்தேன்.
“B.S” கட்டுரையின் ஒன்பதாம் அத்தியாயம் இப்படி ஆரம்பித்தது.
“நன்மகப்பேறு, காதலில் வெற்றியடைதல், மலடு நீங்கி குழந்தைப்பேற்றை கொடுத்தல், இன விருத்திக்குறையை ஆணிடம் நீக்கி, வீரியத்தைப் பெருக்கல் போன்ற நன்மை உள்ள உடன்பாடான காரியங்களுக்கும் “அபிசாரா” என்கின்ற தீமையை உண்டாக்கக்கூடிய கருமங்களுக்கும் உபயோகிக்கும் வசியம் முதலிய மந்திரங்களுக்கான காரியங்களுக்கும் பயன்படுகிறது. பேய், குட்டிச்சாத்தான், முனி போன்ற ..... எதிரிகள், பகைவர், ஒன்னார் போன்ற சமூக விரோதிகளை ...”
“B.S” பின்னிப் பெடல் எடுத்திருந்தார். இதே கட்டுரை ஆங்கிலத்திலும் சிங்களத்திலும்கூட வெளியாகியிருந்தது. கட்டுரையில், சற்றும் பொருந்தாத இலக்கண எழுத்துப்பிழைகளைப் பார்த்தால் எனக்கென்னவோ இந்த “B.S” ஒரு கூகிள் ட்ரான்சிலேட் சித்தர் போலவே தோன்றுகிறது. மூன்று மொழிகளில் ஆக்கங்கள் வெளிவந்தால் அரசாங்கம் ஐந்தோ, பத்தோ அதிகமாக நிதி அனுசரணை செய்யும் என்பதால் யாரேனும் வீரசிங்கவோ, பேரேராவோ இந்த மும்மல வித்தையைக் காட்டியிருக்கலாம்.
“B.S”க்குப் போட்டியாக எஸ்.பி.குலசிங்கம் என்பவர் ஆங்கிலத்தில் மகாபாரதம் எழுதுகிறார். இங்கேயும் எட்டாம்பாகம்தான். பாண்டவர்களின் அஞ்சாதவாசம். சின்ன டீசர்.
“While dancing classes was in progress one day, Urvasi immersed in love with Archchunan and approached him and invited him to the bed!”
“Maharani asked Sainthavi to go and meet Keesagan in his room and bring the bottle of wine for him”
வைன் சிவப்பா அல்லது வெள்ளையா என்று எஸ்.பி குலசிங்கம் குறிப்பிடவில்லை. ஊர்வசி அர்ச்சுனனைக் கட்டிலுக்கு அழைத்தபின்னர் என்னாயிற்று என்ற விபரங்ககளையும் காணவில்லை. “எஸ்.பி” யைத் திருப்பிப்போட்டால் “பி.ஸ்” என்று வருவது தற்செயலாகவும் தோன்றவில்லை.
இதைத்தவிர விக்டோரியா மாநில இலங்கைத் தூதரகம் அறுபத்தொன்பத்தாவது சுதந்திரதின நிகழ்வுக்கு அழைப்பிதழ் வெளியிட்டுள்ளது. பெப்ரவரி நான்காம் திகதி ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள். ஏனைய ஆங்கிலக்கட்டுரைகள் மதங்கள் பற்றியும் உடலாரோக்கியம் பற்றியும் அமைந்திருந்தன. அரசியலைக்காணவில்லை. “B.S” குரங்குக்கதை ஒன்றையும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். அதே பில்லி சூனியம் “B.S”தான். பத்திரிக்கை முழுவதும் இந்த விடாது கறுப்பு யாவுமாகி நிறைந்து நிற்கிறார். “B.S” உண்மையிலேயே ஒரு புல் ஷிட்தான்..
“பகன” தவிர்த்து “கடபாத”, “சியபாத”, “லங்கன் டைம்ஸ்” என்றும் பத்திரிகைகள் வருகின்றன. இவற்றுக்கு நிறைய விளம்பரங்கள் கிடைக்கின்றன என்று தெரிகிறது. அத்தனை பல் வைத்தியர்களும், கட்டட நிறுவனங்களும், கணக்காளர்களும் விளம்பரம் கொடுத்திருந்தார்கள். விசித்திரமாக ஒருவர் ஒன்பது, பத்து வயதுப்பிள்ளைகளுக்கு மென்பொருள் ப்ரோகிராமிங் வகுப்புக்கு விளம்பரம் செய்திருந்தார். கூட உட்கார்ந்து கோடிங் சொல்லிக்கொடுப்பாராம். அண்ணர், ஆர்தர் சி கிளார்க் மையத்திடம் ஒரு செர்டிபிகட்டும் வாங்கி வைத்திருக்கிறார். சரும அரிப்பு, மயிர் ஒப்பனை, கண்ணாடி கேர்ட்டின் விளம்பரங்களுக்கு மத்தியில் இது புதிதாக இருந்தது.
லங்கா டைம்ஸில் ஒரு வயோதிபத் தம்பதியின் அறுபதாவது திருமணநாள் பற்றிய கட்டுரை வெளிவந்திருந்தது. ஐம்பத்தெட்டாம் ஆண்டு அவர்கள் மெல்பேர்னுக்கு குடிவந்திருக்கிறார்கள். பேர்கர் இனத்தவர்களாக இருக்கலாம். அவர்களுடைய மகன் இளவயதில் ஒரு குதிரைப்பாகனாக இருந்திருக்கிறார். எண்பதுகளில் குதிரைப்பந்தயம் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் காயமுற்று நடக்கமுடியாமல் அன்றிலிருந்து இன்றுவரை அந்த வயோதிபப்பெற்றோரின் பராமரிப்பிலேயே சக்கர நாட்காலியில் வாழ்ந்துவருகிறார். படங்களோடு கூடிய அந்தக்கட்டுரையில் நாமறியாத மனிதர்களோடு உறவு கொண்டாடக்கூடியதாக இருந்தது. இப்படி ஆங்காங்கே இடம்பெற்ற குடும்ப BBQ நிகழ்வுகள், இசை நிகழ்வுகள், கிரிக்கட்போட்டி என்று லங்கா டைம்ஸ் இணையத்தில் பெறமுடியாத உள்ளூர் செய்திகளை நன்றாகவே தொகுத்துக்கொடுத்திருந்தது. ஆங்கிலத்திலும் நிறையக்கட்டுரைகள் எழுதி இரண்டாம் தலைமுறைகளைக் கவருகிறார்கள்.
&&&&&&&&&&&&
இந்தப்பத்திரிகைகளில் என்னை மிகவும் கவர்ந்தது எது என்றால், இந்த மணமக்கள் தேவை விளம்பரங்கள்தான்.
“Buddhist parents seek pretty daughter working or studying in Australia for son MBA qualified…”
என்று ஒரு விளம்பரம். மணமகன் ஐந்தடி நாலங்குலம். கொஞ்சம் குட்டையாக இருப்பார் என்று நினைக்கிறேன். 84ம் ஆண்டு பிறந்தவர் என்றால் முப்பத்து மூன்று வயதாகிறது. முடி சிறிது கொட்டி சற்று தொந்தியும் போட்டிருந்தால் இந்த ஐந்தடி நாலங்குலம் எதிர்பார்ப்பதுபோல படித்த அழகான மெல்பேர்ன் பெண் கிடைப்பது கடினம் என்றே தோன்றுகிறது. அதுவும் “B.S” கட்டுரைகள் வரும் பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்து... சுத்தம்.
நம்பவே முடியாத மணமகள் தேவை விளம்பரம் ஒன்று வந்திருந்தது. அமெரிக்காவில் வாழும் இருபத்துமூன்று வயது மகனுக்கு பெற்றோர் பெண் தேடுகிறார்கள். பெடியன் விமானப்பொறியியலில் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கிறான். ஐந்தடி ஆறங்குலம். G/B சாதி. படித்த, நற்பழக்கமுள்ள பெண்ணைத் தேடுகிறார்கள். வயது பதினெட்டுக்கும் இருபதுக்குமிடையில் இருக்கவேண்டுமாம். பழகிக் காதலித்துப் பின்னர் பிடித்துப்போனால் திருமணம் செய்யலாம் என்று வெளிப்படையாகவே குறிப்பிட்டிருந்தார்கள். யாரென்றும் தெரியாது. அமெரிக்காவில் இருக்கும் பெடியனோடு வைபரில் வருடக்கணக்கில் மொக்கை போட்டு பின்னர் பிடித்துப்போனால் கலியாணம் கட்ட எந்தப்பதினெட்டு சம்மதிக்கபோகிறது? இவனெல்லாம் இந்தக்காலத்தில் உருப்படுவான் என்று தோன்றவில்லை. இன்னமும் பத்து வருடத்தில் இந்த விளம்பரம் முப்பத்துமூன்று வயது மகனுக்கு முப்பது வயது மணமகள் தேடுவதாகவே தொடரும் சாத்தியம் உண்டு.
அநேகமான மணமக்கள் விளம்பரங்களில் “Caste Immaterial” என்று போட்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு சில விளம்பரங்கள் கடுமையாகச் சாதி பார்க்கின்றன. கோவி பௌத்த குடும்பம் ஒன்று இன்னொரு கோவி பௌத்த இளைஞனை தம் மகளுக்குத் தேடுகிறார்கள். இந்தப்பெண் ஐந்தடி ஆறங்குலம். இன்னொரு மணமகன் “Distinguished SGB” குலத்தைச் சேர்ந்தவர். SGP என்பதன் அர்த்தம் தெரியவில்லை. மாப்பிள்ளை நாற்பதைத் தாண்டிவிட்டார். சுத்த பௌத்தன். குடி இல்லை. புலால் மறுப்பர். பிலீசிங் பெர்சனாலிட்டி. ஏதோ ஒரு நிறுவனத்தில் சீனியர் மனேஜராக இருக்கிறார். ஒரு அக்கா தன் தங்கைக்கு மணமகன் தேடுகிறார். இன்னொரு நாற்பத்தேழு வயது மணமகன் விளையாட்டில் ஆர்வம் உள்ள மணமகளைத் தேடுகிறார். எந்த விளையாட்டு என்ற விவரங்கள் ஏதுமில்லை.
இந்த விளம்பரங்களில் எல்லாம் நான் ரசித்த விஷயம், மணமக்களின் பெற்றோர் தாம் தேடும் வரன்களையும் மகன், மகள் என்று விளிப்பதுதான். உதாரணத்துக்கு “Kandian, B/G parents seek a son for their daughter…”. இது சிங்களக்கலாச்சாரத்தின் அழகுகளில் ஒன்று. அவர்களுக்கு மருமகன், மருமகள் எல்லாம் கிடையாது. எல்லோருமே துவ(மகள்), புத்தா (மகன்)தான்.
அநேகமான மணமக்களின் சாதிப்பெயர்கள் S/Govi, B/G, Govi, G/B, B/CG, B/V என்று ஏதோ வைரஸ் கிருமிகளின் விஞ்ஞானப் பெயர்கள்போல இருக்கின்றன. சிலர் சாதகக்குறிப்பும் கேட்கிறார்கள். எல்லோருமே எக்கவுண்டன்ட், எஞ்சினியர், டொக்டர்கள்தாம். ஒரு மணப்பெண் இலங்கையில் உதவி ஆணையாளராகவும் இருந்திருக்கிறார். இன்னொரு பெண் இருபத்தெட்டு வயது டொக்டர். மெல்பேர்னில் பிறந்து வளர்ந்தாலும் இலங்கை விழுமியங்களை மதிப்பவர். ஐந்தடி நாலங்குலம். இந்த ஐந்தடி நாலாங்குலம் முதலாவதாகச் சொன்ன ஐந்தடி நாலங்குலத்துக்குப் பொருந்திவருவார்போலத் தோன்றுகிறது. ஐந்து வயது வித்தியாசம். இருவருமே பௌத்த கோவிகள்! இருவருமே அழகானவர்கள். வெள்ளைநிறம். இவர் வைத்தியம் பார்க்க அவர் கணக்குப் போடலாம். கண்டு கேட்டால் உண்டு உயிர்த்து உற்று அறியும் சந்தர்ப்பமும் உண்டு. பேசாமல் ஒருவர் ஈமெயிலை மற்றவருக்கு அனுப்பிவிட்டால் என்ன? அனுப்பித்தான் பார்ப்போமே? காசா பணமா?
முதலில் மணமகனின் பெற்றோருக்கு.
Dear Mr Upali Senanayaka,
I am writing the email w.r.t the advertisement you published in Pahana magazine, January, 2017 edition.
Sir, I believe ... உங்கள் நற்குணமுள்ள குடிபோதை எதுவுமற்ற புத்திரனுக்கு தகுந்த மணமகளைக் கண்டுபிடித்துள்ளேன். பெண் மெல்பேர்னில் வசிக்கிறார். வைத்தியர். வயது இருபத்தெட்டு. உயரம் ஐந்தடி நான்கங்குலம். அவர் தட்டையான காலணியும் உங்கள் மகன் குதிவைத்த சப்பாத்தும் அணிந்தால் பொருத்தமாக இருப்பார்கள். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஜோர்ஜ் குலூனியைவிட அவர் மனைவி அரை அடி உயரமானவர். சிவப்புக்கம்பளத்தில் இருவருமே அழகாகத்தோன்றுவார்கள்.
இந்தப்பெண் இங்கே மெல்பேர்னிலேயே பிறந்து வளர்ந்தவராயினும் கூடவே தாத்தா பாட்டியும் இருந்ததால் நன்றாகச் சிங்களம் பேசுவார். தாய் நாட்டின்மீது பற்று அதிகம். கிரிக்கட் போட்டிகளில் இலங்கை அணியின் டீசேர்ட் அணிவார். கொஸ்கறி நன்றாகச் சமைப்பார். சுத்தமான பௌத்தர். இலங்கை விழுமியங்கள் ஊட்டப்பட்டு வளர்க்கப்பட்டவர். என்ன ஒன்று, விருந்துபசாரங்களில் திராட்சை மது அருந்தும் பழக்கம் உண்டு. ஆனாலும் உங்கள் மகனுக்கு குடி பழக்கம் இல்லாததை குறையாகக் கருதமாட்டார்.
Please find her parents’ of contact details here with.
Regards,
Lasith Herath
தமிழாக்கத்தில்தான் நக்கல். மூலக்கடிதத்தை சீரியஸாகவே எழுதியிருந்தேன். அப்படியே சூட்டோடு சூட்டாக அந்த டொக்டரின் பெற்றோருக்கும் ஒரு ஈமெயிலைத் தட்டினேன்.
Dear Ms Sureni Weerasuriya,
I am writing ... [blah blah]
Mam, you mentioned you expect nothing but a kind hearted broom for your loving daughter.... கவலை வேண்டாம். உங்கள் மகளுக்காகவே ஒருவர் ஐந்து வருடங்கள் முன்னதாகப் பிறந்து, கணக்கியல் படித்து, அவுஸ்திரேலியாவுக்கு குடி வந்துள்ளார். குடிப்பழக்கம் இல்லாதவர். நல்லவர். மாமிசம் தொடமாட்டார். பெற்றோரைக் கனம் பண்ணுவார். ஐந்தடி நான்கங்குலம் என்றாலும் பார்த்தால் மிக உயரமாகத் தோன்றுவார். சிவந்த முகம். பௌத்த விழுமியங்கள் வழி வாழ்பவர். ஒரே ஒரு முறை பேசிப்பாருங்கள். பண்டிட் அமரதேவாவின் பின்னணி இசையில் நம் குழந்தைகள் இருவரும் மகாவலிக்கரையில் கால் நனைய உட்கார்ந்து காதல் கதைகள் பேசுவதை இப்போதே காண முடிகிறது. நம் குழந்தைகளின் எதிர்காலத்தை நாமே தீர்மானிக்கக்கிடைக்கும் சந்தர்ப்பத்தை எதற்காக புறந்தள்ளுவான்?
யோசியுங்கள்.
Please find … [blah blah]
Regards,
Lasith Herath
அனுப்பி அரைமணி நேரத்திலேயே மணமகன் தரப்பிலிருந்து நன்றி சொல்லிப் பதில் வந்திருந்தது. தாம் உடனேயே மணமகளின் பெற்றோரோடு தொடர்புகொள்ளப்போவதாகவும், உங்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி என்றும் சேனநாயக்கா நவின்றிருந்தார். அடுத்தநாள் அடுத்தநாளே அந்த இரண்டு ஐந்தடி நான்கங்குலங்களும் பேச ஆரம்பித்துவிட்டதாக சேனநாயக்கா அப்டேட் ஒன்றும் அனுப்பியிருந்தார். இறைவன் அருளால் எல்லாம் நன்றாக முடிந்தால் திருமணத்துக்கு நான் வருகை தரவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அந்த டொக்டர் பெண் ஒரு நன்றி கெட்டவர். பதிலே அனுப்பவில்லை. இரண்டு மூன்று நாட்களாக எந்தச் சுணக்கமும் இல்லாததால் நானும் மறந்துவிட்டேன். நேற்று மாலை சுரேனியிடமிருந்து ரிப்ளை வந்திருந்தது.
Hey B.S,
Here you go, your groom’s photo.
அவ்வளவுதான் ஈமெயில். ஒரு நன்றி இல்லை. ஒரு பண்பு இல்லை. என்னை "B.S" என்று விளித்து ஒரு தும்புக்கட்டை மட்டும் வந்திருந்தது. ஒரு தும்புக்கட்டை அனுப்புமளவுக்கு அப்படி என்னதான் தவறாக எழுதிவிட்டேன் என்று மீண்டும் நான் அனுப்பிய ஈமெயிலை அடியில் சென்று வாசித்துப்பார்த்தேன்.
“Mam, you mentioned you expect nothing but a kind hearted broom for your loving daughter”
அடக்கருமமே, groom என்பதற்குப்பதிலாக broom என்று சொல்லி அந்தத் தங்கத்தம்பியை தும்புக்கட்டையாக்கிவிட்டிருக்கிறேன். அவனும் இந்த இரண்டு நாளில் அப்பெண்ணுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து தான் ஒரு தும்புக்கட்டையேதான் என்பதை உறுதி செய்திருக்கவேண்டும். அதுதான் அந்த டொக்டருக்கு அவ்வளவு கோபம்.
ஒரு "BS” இன் பத்திரிகையை வாசித்ததில் நானும் ஒரு “BS” ஆகிவிட்டேன்.
&&&&&&&&&
வரிக்கு வரி நக்கல் நையாண்டி. இந்த பேப்பர் என்ன பாவம் செய்ததோ இவரின் கையில் மாட்டுப்பட்டு ..... சிரிக்க வைக்கிறது.
ReplyDelete