Skip to main content

சோமப்பா சொன்ன கதை



விருத்தேஸ்வரம் தேசம் செல்வச்செழிப்பான தேசம் இல்லாவிட்டாலும் நல்லவர்களைக் கொண்ட தேசம். அந்த தேசத்தின் குடியானவர்கள் எல்லோரும் பரம்பரை பரம்பரையாகக் கமம் செய்து வருபவர்கள். பெரும்போகம் சிறுபோகம் என்று ஆண்டின் பெரும்பாலான நாட்களில் கமமும் கமம் சார்ந்த தொழில்களும்தான் அவர்கள் வாழ்வு. அத்தனை பெரும் உழைப்பார்கள். உழைத்தே ஆகவேண்டும். குடும்பத்தில் பத்துப்பேர் என்றால் பத்துபேரும் உழைப்பார்கள். பெண்கள் கால்நடைகள், வீட்டு சமையல், புழுங்கல் அவிப்பு என்று கவனிப்பார்கள். ஆண்கள் வயலுக்குப் போவார்கள். தென்னைக்கு அடி வெட்டுவார்கள். சிறுவர்கள் கிளி அடிப்பார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை. சில பருவங்களில் மழை பொய்த்துவிடும். சிலவேளைகளில் வெள்ளம் பயிரை மேவிவிடும். கொடிய பயிர்கொள்ளி நோய்களும் பரவுவதுண்டு. அவர்களின் வாழ்வாதாரம் நிலையற்றது. அடிக்கடி பஞ்சப்பாடு. ஆனாலும் மாசத்துக்கு ஒருமுறை தவறாமல் அரசனுக்கு திறை செலுத்துவார்கள். மிச்சம் உள்ளதை இல்லாதவர்களுக்கும் கொடுத்து தானும் உண்பார்கள். 

விருத்தேஸ்வரம் நல்லவர்களைக் கொண்ட தேசம்.

இந்த நாட்டு மக்களுக்கு இன்னொரு துன்பமும் இருக்கிறது. அங்கிருந்து எட்டு மலை தாண்டி ஒரு தொங்கு தோட்டத்து அரண்மனையில் பூதம் ஒன்று வசித்து வந்தது. அது தினமும் சுற்றுப்புறங்களில் உள்ள ஓவ்வொரு கிராமத்துக்கும் கிரமவரிசைப்படி புகுந்துவிடும். எங்காவது ஒரு வீட்டுப் புகைபோக்கியில் அடுப்புப்புகை வெளிவராமலிருந்தால் அதனூடாக அவ்வீட்டுக்குள் அது சட்டென்று புகுந்துவிடும். அந்தக்குடும்பத்தை மிரட்டும். “ஒரு பிள்ளையை தந்துவிடு, போகிறேன்” என்று சொல்லும். “கொடுக்கமாட்டேன் போ” என்று பூதத்துடன் சண்டை பிடித்தால், பூதம் வீட்டில் இருக்கும் எல்லாப் பிள்ளைகளையும் பிடித்துக்கொண்டு போய்விடும். "ஒரு பிள்ளையைத் தா" என்றால் எந்தப் பிள்ளையை கொடுப்பது? அநேகமான பொழுதுகளில் பெற்றோர்கள் ஒருவரையும் கொடுக்கமாட்டோம் என்று அடம் பிடித்து அழுவார்கள். பூதம் எல்லா பிள்ளைகளையும் தூக்கிப்போய்விடும்.

விருத்தேஸ்வரம் தேசத்தின் கிழக்கு கோடியில் இருக்கும் தாயாற்றுக்கு அருகே பல்லவபுரம் என்ற சிற்றூர் இருக்கிறது. கந்தனும் அவன் மனைவி காமாட்சியும், அவர்களின் ஐந்து பிள்ளைகளும் அங்கேதான் வசித்து வந்தார்கள். மற்றவர்களைப் போலவே கமம் செய்து பிழைத்து வந்தார்கள். ஐந்துமே சின்னதுகள். மூத்தவனுக்கு எட்டு வயது. ஐந்தாவது கடைக்குட்டி சாரதாதேவிக்கு மார்கழி கழிந்தால் ரெண்டு வயசு. வீட்டின் செல்லம். சொல்லப்போனால் சாரதாதேவி வெறும் குழந்தையே அல்ல. தேவதை. தூளியிலே அவள் அழும்போது கேட்கவேண்டுமே. அழுகை தேனாக காதிலே வந்துவிழும். அந்த அழுகை இசையில் மயங்கி காமாட்சி அவளுக்கு பால் ஊட்டக் கூட மறந்துவிடுவாளாம். அண்ணன்மார்களுக்கும் சாரதாதேவி என்றால் உயிர். குட்டி குட்டி என்று தூளி ஒரு கணம் ஓய்ந்திருக்க விடமாட்டார்கள். எங்கிருந்தோ இருந்தெல்லாம் மயிலிறகு எடுத்துக்கொண்டு வந்து கொடுப்பார்கள். கந்தனோ சாரதாதேவி ஒரு சின்ன அணுக்கம் காட்டினாலேயே எங்கிருந்தாலும் ஓடிவந்துவிடுவான். செல்லக்குட்டிக்கு கொஞ்சும்போது குத்தக்கூடாது என்று மீசை வழித்து சவரம் செய்திருந்தான். பாசம் அந்த வீட்டில் தாயாற்று நீர்மட்டத்தை மீறி பாய்ந்துகொண்டிருந்தது. 

கந்தன் வீட்டில் பாசத்துக்குத்தான் குறையில்லையே தவிர மீதி எல்லாவற்றுக்கும் குறை உண்டு. பருவம் தொடர்ந்து  பொய்த்ததால் அவர்கள் விதைக்கின்ற கீழைக்கரை வயற்பரப்புக்கு தண்ணீர் வரத்தே இல்லை. விதைப்பு இல்லை. வீட்டிலிருந்த விதை நெல்லையும் அவித்து சாப்பிட்டுவிட்டார்கள். வீட்டில் பஞ்சம். காமாட்சி அந்த வீட்டு அடுப்பில் நெருப்பு மூட்டியே நான்கு நாட்கள். தினப்படி சாப்பாட்டுக்கே குடும்பம் தத்தளிக்க ஆரம்பித்திருந்தது.   அயலவர்களும் எத்தனை நாட்களுக்குத்தான் உதவுவார்கள்?   

கந்தன் வீட்டுக்கு ஒருநாள் இரவு அந்த சனியன் பிடிச்ச பூதம் புகைக்கூண்டுக்குள்ளால் வந்துவிட்டது.

கந்தனுக்கும் காமாட்சிக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. எல்லாப் பெற்றோர்களைப்போல அழுது பார்த்தார்கள். மிரட்டிப்பார்த்தார்கள். சத்தகத்தாலும் அரிவாளாலும் குத்திப்பார்த்தார்கள். பிள்ளைகளை விட்டுவிட்டு தம்மைக் கொண்டுசெல்லுமாறு இறைஞ்சினார்கள். பூதம் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு மீண்டும் பழையபாட்டையே பாடியது.

"நீங்களாகத் தந்தால் ஒரு பிள்ளை. இல்லாவிட்டால் அத்தனை குழந்தைகளையும் கவர்ந்து கொண்டுபோய்விடுவேன் "

நிஜம் முகத்தில் அடித்தது. ஓரு பிள்ளையைப் பூதத்துக்கு விடிவதற்குள் தாரை வார்க்கவேண்டும். இல்லாவிட்டால் பூதம் அத்தனை பிள்ளைகளையும் தூக்கிக்கொண்டு போய்விடும். எல்லா பிள்ளைகளுமே சிறுவர்கள். யாரை என்று கொடுப்பது? கந்தன் இரவு முழுதும் தூக்கம் வராமல் தவித்தான். அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்னர் ஒரு முடிவுக்கு வந்தவனாய், தாயம் விளையாடுவோமே சோகி, அதில் ஐந்தை எடுத்து ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பிள்ளைகளின் பெயரை எழுதி எல்லாவற்றையும் ஒரு கிண்ணிக்குள் போட்டான். கிண்ணியைக் கொண்டுபோய் சாரதாதேவியிடம் கொடுத்து “ஒரு சொகியை எடுத்துத்தா கண்ணம்மா” என்று கண் கலங்கிக்கொண்டே சொன்னான். சாரதாதேவி “சரி அப்பா” என்று மழலை வழிய சிரித்துக்கொண்டே ஆர்வமாக ஒரு சோகியை எடுத்தாள். அந்த சோகியில் இருந்த பெயரை பார்த்தால்,

“சாரதாதேவி”..

பூதம் சாரதாதேவியைப் பிடித்துக்கொண்டு போய்விட்டது. கந்தன் அன்றைக்கு பைத்தியமானவன்தான். “எப்படிப்பட்ட ஒரு அப்பன் நான், என் பிள்ளையை பூதம் பிடித்துக்கொண்டு போக பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறேனே” என்ற குற்ற உணர்வு அவனை ஆட்டிப்படைக்கத் தொடங்கியது. நாட்கள் கழிந்தன. விசர் பிடித்தவன்போல கந்தன் அலைய ஆரம்பித்தான். மழை பொழிந்தாலும் அவனோ கமத்துக்கு போகிறான் இல்லை. வயல் முழுதும் உழுதுபடாமல் களை மெத்திப்போய் கிடக்கிறது. இவன் என்னடாவென்றால் வீட்டிலேயே கிடக்கிறான். ஊர் முழுக்க கந்தனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று சொல்லிக்கொண்டார்கள். கந்தன் இதை ஒன்றுமே கவனத்தில் எடுக்கவில்லை. தினமும் சாவு விழும் வீடுபோல ஆகியது கந்தனின் வீடு.

ஒருநாள் அதிகாலையில் திடீரென்று கந்தன் அந்தப் பூதத்தை தேடி புறப்பட்டு விட்டான். பூதத்தைக் கொன்று சாரதாதேவியை மீட்டுவருகிறேன் என்று வழியெல்லாம் சூழுரைத்தபடி சென்றான். கண்டவர்கள் எல்லாம் இவனை ஏளனம் செய்தார்கள். இரண்டு மலைகள் தாண்டும் முன்னரேயே காலணி தேய்ந்து அறுந்துவிட்டது. நான்கு மலைகள் தாண்டும்போது உடுத்த உடை கந்தலாகி உக்கி உதிர்ந்துவிட்டது. கந்தன் நடந்தான். பசியில் வயிறு காய்ந்து, தாகத்தில் நா வறண்டு, கால்கள் சோர்ந்து, கண்கள் சொருகி... கந்தன் நடந்துகொண்டேயிருந்தான். 

ஒருநாள் கந்தன் பூதம் இருக்கும் தொங்குதோட்டத்துக்கு போய்விட்டான்.

இப்போது தொங்குதோட்டத்தில் ஏறவேண்டும். எப்படி ஏறுவது? கள்ளப்பூதம் தோட்டத்தை சந்திரனில் கயிறு கட்டி தொங்கவிட்டிருந்தது. பூமியிலிருப்பவர்களால் அந்தத்தோட்டத்துக்கு எவ்வழியாகவேனும் செல்லமுடியாது. பூதமே அவர்களைத் தூக்கிவிட்டால்தான் உண்டு.

கந்தனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கத்தினான்.

“சனியன் பிடிச்ச பூதமே .. நீ உண்மையான வீரனாக இருந்தால் வந்து என்னோடு மோது பார்ப்போம்.. ”

இவன் சத்தம் கேட்டு பூதம் வெளியே வந்தது. இவ்வளவு காலத்தில் ஒரு அப்பன் துணிந்து தன்னை தேடி வந்திருக்கிறானே என்று பூதத்துக்கு ஆச்சர்யம்.

“உன்னோடு எதுக்கு நான் சண்டை பிடிக்க வேணும்?”

“நீ என் கடைக்குட்டி தேவதையை தூக்கிக்கொண்டு வந்துவிட்டாய். அதற்காக உன்னை நான் கொல்லப்போகிறேன்.”

“ஹ ஹா ஹ .. நான் இப்படி நிறைய பேரின் தேவதைகளை தூக்கிக்கொண்டு வந்திருக்கிறேனே”

“தெரியும் .. அவர்கள் எல்லோர் சார்பிலும் நான் உன்னைக் கொல்லப்போகிறேன்”

பூதத்துக்கு கந்தனின் துணிச்சலும் ஓர்மமும் பிடித்துவிட்டது. ஒரு நூலேணியை கீழே இறக்கியது. கந்தன் வேக வேகமாக ஆத்திரத்தோடு அந்த ஏணியில் ஏறினான். ஏறி தொங்குதோட்டத்தில் காலடி வைத்தகணமே சுற்றும் முற்றும் பார்க்காமல் பூதத்தை அடிக்க போனான். “பொறு பொறு .. அங்கே பார்” என்ற பூதம் ஒரு திக்குநோக்கிக் காட்டியது. கந்தன் திரும்பிப்பார்த்தான். 

அங்கே சாரதா தேவி. நிஜமாகவே தேவதை போல, அவளை ஒத்த குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருந்தாள். எந்நாளும் காணாத சந்தோஷ சிரிப்புடன் இருந்தாள். மற்ற ஊர்களில் பிடிக்கப்பட்ட குழந்தைகளும் அப்படியே. அவர்களுக்கு அங்கே எல்லாமே இருந்தது. உணவு, உடை, இருக்க இடம், கல்வி .. எல்லாவற்றுக்கும் மேலே பாசம். கிடைத்தது. தாம் கடத்தப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு அவர்களுக்கு இல்லை. பெற்றோர்களைப் பிரிந்துபோனேமே என்ற வருத்தம் இல்லை. தேகாரோக்கியத்தோடு மகிழ்ச்சியாக அங்கே தெரிந்தார்கள்.

பூதம் பேசியது.

“யோசிச்சு பார் கந்தா, இந்த குழந்தையை நீ திரும்ப கூட்டிக்கொண்டு போனால், மீண்டும் இங்கே திரும்பிவர முடியாது… இப்படி உன்னால் இந்த குழந்தையை பார்த்துக்கொள்ள முடியுமா .. சொல்லு? இப்படி ஒரு வாழ்க்கையை அந்த குழந்தைக்கு உன்னாலே கொடுக்கமுடியுமா சொல்லு? உன் வீட்டில் அடுப்புகூட எரிவதில்லை. ஒழுங்காக ஒருவேளை சாப்பாடு உங்களால் சாப்பிடமுடியாது. நீ எப்படி இந்த தேவதையை சிறப்பாக வளர்ப்பாய் சொல்லு?”

கந்தன் யோசித்தான்.

“ஆனா என்னால அவளை மறக்கவே முடியாதே .. அவள் என் குழந்தை ஆயிற்றே .. அவள் இல்லாம ஒவ்வொரு நாளும் உயிர் போகுதே .. ”

பூதம் சிரித்தது.

“பார்த்தியா பார்த்தியா .. அவளுடைய சந்தோசமான வாழ்க்கை உனக்கு முக்கியமா? இல்லை அவள் உன்னோடு இருக்கிறபோது கிடைக்கும் உன் சந்தோசம் உனக்கு முக்கியமா? நீயே முடிவு செய்துகொள்ளு”

 பூதம்  கந்தன் முன்னே ஒரு மணல் கடிகாரத்தை வைத்தது. மேல் பாதி மணல் கீழ் பாதிக்குள் கொட்டி முடியும் முன்னர் அவன் முடிவெடுக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு போய்விட்டது. கந்தன் தலையில் கைவைத்து யோசிக்க தொடங்கினான். 

மணல் கடிகாரத்தில் மண் சொட்டு சொட்டாக கீழ்ப்பாதிக்கு கொட்ட ஆரம்பித்தது.

&&&&&&&

Comments

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .