Skip to main content

கொட்டக் கொட்ட விழித்திருத்தல்


மழை, தந்தையிடம் ஏச்சு வாங்கிய மகளைப்போல இடைவெளி விட்டு இரவு முழுதும் விம்மிக்கொண்டிருந்தது. 

இப்போதெல்லாம் எலார்ம் அடிக்கமுதலேயே காலையில் எனக்கு நித்திரை கலைந்துவிடுகிறது. இன்றும் அப்படித்தான். ஐந்துமணி எலார்முக்கு நான்கே முக்காலுக்கே எழுந்துவிட்டேன். ஒரு சூடான தேநீரை ஊற்றிக்கொண்டு வரவேற்பறையில் வந்து அமர்ந்தேன். வெளியே அந்தச்சிறுமியின் அழுகை இன்னமும் நின்றபாடில்லை. நேற்று எழுதிமுடித்த சிறுகதையின் பிழைகளைத் திருத்தலாம் என்று அதனைத் திறந்தால், முதல் அடிக்குமேலே வாசிப்பு நகர்வதாக இல்லை. இதே சிறுகதையோடு அணு அணுவாக கடந்த இரண்டு வாரங்களின் காலைப்பொழுதுகளைக் கழித்திருக்கிறேன். ஆனால் எழுதி முடித்ததும் அதற்கு நான் ஒவ்வாமையாகிவிட்டேன். “சந்திரா என்றொருத்தி இருந்தாள்” கதையின் வரிகள்தாம் ஞாபகம் வருகின்றன.
“சொல்லியபின்னர் பருவமெய்திய பறவைகள்போல கதைகள் என்னை விட்டுப் பிரிந்துபோகின்றன. அவை திரும்பி வருவதேயில்லை. அவ்வப்போது கடந்து செல்கையிலும் ஒரு வழிப்போக்கர்போலக்கூட அவை என்னை இனம்கண்டு சிரித்துவைப்பதில்லை. கதைகளை எழுதாமல் இனி நம்மோடேயே கூட வைத்திருக்கலாம் என்று...” 
என் கண் முன்னாலேயே என் கதை, மழையையும் பொருட்படுத்தாமல் விட்டு விலகிப் பறந்துபோய்விட்டது. 

பாலோ கொயேல்லோவின் சாகிர் நாவல் வாசித்து அரைவாசியில் நிற்கிறது. எடுத்து இரண்டு பக்கங்கள் வாசித்தேன். மனம் ஒருநிலைப்படுவதாயில்லை. நாவல்களை எதற்காக வாசிக்கவேண்டும்? என்று தோன்றியது. நாமே பாத்திரங்களை சிருட்டித்து, நாமே முரண்களை நிர்மாணித்து, நாமே அவற்றோடு விளையாடி, உறவாடி, சில்லுப்படும் அனுபவத்தை எழுதும் எழுத்து கொடுக்கும்போது எதற்காக வாசிக்கவேண்டும்? எழுதுவதே மிகச்சிறந்த வாசிப்பு என்று தோன்றுகிறது. மனம் வெளியே இன்னமும் அழுதுகொண்டிருக்கும் சிறுமியின்மீதே கவனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தது. அவளைவிட கோயேல்லோவின் எஸ்தர் ஒன்றும் அவ்வளவு முக்கியம் கிடையாது. மூடிவைத்துவிட்டேன்.

யன்னல் திரையைத் திறந்துவைத்து அழுதுகொண்டுநின்ற அந்தச் சிறுமியையே கவனிக்கலானேன். என்னைக்கண்டதோ என்னவோ விம்மல் இன்னமும் கூடிவிட்டது. இரவிரவாக ஊர் முழுதும் அழுது தீர்த்திருக்கிறாள். வாகனங்கள், மரங்கள், வீட்டுத்தபால்பெட்டி, செருப்புகள், செவ்வரத்தைச் செடி, கள்ளிமரம் என ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. இவள் அழுகையை எப்படி நிறுத்தலாம் என்று விளங்கவில்லை. எழுதிப்பார்க்கலாம்.

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு மழை. மழையும் மனிதர்களைப்போலத்தான். ஊரொச்சம் வைக்கும் மனிதர்களைப்போல 

சிறுவயதிலிருந்தே மழையைத் தனியாகக் கொட்ட கொட்ட இருந்து விழித்துப்பார்ப்பது பழக்கமாகிவிட்டது. எனக்கு மழையில் நனையப்பிடிக்காது. ஆனால் பார்க்கப்பிடிக்கும். அதுவும் யாரும் பக்கத்தில் இருக்கக்கூடாது. மழை எப்போதுமே நமக்குக் கதைகளைச் சுமந்துகொண்டுவருகின்றது. சமயத்தில் நாம் தொலைத்த, காணாமல்போன கதைகளை அவை மீள எடுத்துவரும். பெயர்களை ஞாபகப்படுத்தும். அதேபோல எம்மையும் அது கதைகளாகச் சுமந்துசென்று யாருக்கோ பொழிந்தும் தள்ளும்.  என் கதைகள் பலவற்றை மழையே எழுதியிருக்கிறது. 

எங்கள் ஊர் வீட்டின் மூலையில் ஒரு பெரிய பாழடைந்த கோழிக்கொட்டில் இருக்கிறது. அதன் செழிப்பானகாலத்தில் அம்பது அறுபது கோழிகள் அதற்குள் அடைபட்டிருந்தன. பிற்காலத்தில் ஒன்றிரண்டு ஊர்க்கோழிகள் மாத்திரம் அவையாகவே உள்ளே ஒதுங்கிக்கொண்டிருந்தன. மற்றும்படி பழைய சைக்கிள், மதில் கட்டவென எப்போதோ வாங்கிக்குவித்த குறுமணல், பழைய கட்டில், கறல் பிடித்த சில கம்பிகள் என்று கொட்டில் நிரம்பியிருக்கும். ஏதோ ஒரு காரணத்தால் பழைய பொருட்களை நாம் எறிந்துவிட மறுக்கிறோம். அவை எப்போதாவது பயன்படும் என்று நம்புகிறோம். 

அந்தக்கொட்டிலுக்குள் அமர்ந்திருந்து, கம்பிவலையினூடாக மழையை ரசிப்பது எனக்குப்பிடிக்கும். பக்கத்திலேயே வீட்டுநாய் ஹீரோ பழைய கழிசான், சோட்டி எல்லாவற்றையும் எங்கிருந்தோ கொண்டுவந்து குவித்துப்போட்டு அதற்குள் குளிருக்குக் குறண்டிப்போய்க்கிடக்கும். என்னைக்கண்டதும் சிவனே என்று வாலை ஒருமுறை ஆட்டிவிட்டு மீண்டும் குறண்டிவிடும். மழை அடித்து ஊற்ற ஆரம்பிக்கும். யாழ்ப்பாணத்து மழையில் ஒரு சீர் இருக்கும். கணவனோடு சண்டை பிடித்து அழும் மனைவிபோல. ஒரே சீராக பொழிந்து, ஓய்ந்ததும் வானம் வெளித்துச் சிரிக்கும்,  கணவனோடு சண்டை பிடித்து அழும் மனைவிபோல.

யாழ்ப்பாணத்து மழைகளைப்போல கொழும்புமழைகளை என்றைக்கும் நான் ரசித்ததில்லை. காரணம் அந்த மழையில் அடிக்கடி நனையவேண்டியிருக்கும். கொழும்புமழை மரணவீட்டு ஒப்பாரிபோல. பேயாட்டம் அடித்து ஊற்றும். யன்னலை இழுத்து மூடினாலும் எப்படியோ மழை உள்ளே ஓடிவந்துவிடும். அந்த ஊரின் பேருந்து யன்னல்களுக்கும் கட்டட யன்னல்களுக்கும் மழை என்றால் அவ்வளவு பிரியம். உள்ளே அனுமதித்துவிடும். மழை பெய்தால் தரை கசியும். கசகசக்கும். அதன் வெள்ளமும் கூளத்தோடு சேர்வதால், எக்காலத்திலும் கொழும்பு மழையை என்னால் ரசிக்கமுடிந்ததில்லை.

சிங்கப்பூரில் மழை அருமைக்குப் பெய்யாது. கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அங்கே மழைதான். அந்த நாட்டின் குணத்தைப்போல மழையும் வச்சுச்செய்ததைப்போலப் பெய்யும். மாலை மூன்று மணியானால் இருட்டிக்கொண்டுவந்து, தேவைக்கில்லாமல் இடி முழங்கி, மின்னலடித்து, குளத்தைக் கவிழ்த்து ஊற்றியதுபோல கொட்டித்தீர்ந்து, பத்தே நிமிடங்களில் பெய்த தடமில்லாமால் கால்வாய்களுக்குள்ளாள் ஓடி ஒளிந்துவிடும். ஒரு ரசனையோடு அந்த மழை பெய்ததாக நான் அறியேன். அப்படிப்பெய்தாலும் அதை ரசிக்க அந்த ஊரில் மனிதர் இல்லை. வேலை, பிள்ளைக்குப் படிப்பு, மறுபடி வேலை என்று ஓடித்திரிபவர்களுக்கு நின்று நிதானித்து மழையை ரசிக்கவா நேரம் கிடைக்கும்? கிளிசரின்போட்டுக் கதறி அழும் நடிகையைப்போல மழையும் அதன் கடமையைச் செய்துவிட்டுப் பறந்துவிடும்.

மெல்பேர்ன் மழை சற்று விசித்திரமானது. இங்கே மழை நான்கு பருவத்துக்கும் பெய்யும். எப்போது, எந்நேரம் பெய்யும் என்று ஊகிப்பது கடினம். ஆனால் என்றைக்குமே இங்கே மழை அடித்து ஊற்றியது கிடையாது. நான் அறிந்து எல்லா மெல்பேர்ன் மழையும் தந்தையிடம் திட்டு வாங்கிய சிறுமியைப்போலவே அழுதிருக்கிறது. அது அழுகையில் நமக்கு முள்ளந்தண்டு சில்லிடும். அது அழுகையை இலேசில் நிறுத்தவும் மாட்டுது. ஆனால் யாரையும் தொந்தரவு பண்ணாமல் தன்பாட்டுக்கு வீட்டுக்கு வெளியே நின்று அழுது தீர்க்கும். விக்கி விக்கி அது அப்படி அழும்போது பாவமாய் இருக்கும். “யாரடித்து நீ அழுதாய், கண்மணியே கண்ணுறங்கு” என்று மழையைத் தாலாட்டிப் பார்த்தால்தான் என்ன? 

வெளியே விம்மல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து சொட்ட ஆரம்பித்தது. இலையிலிருந்து ஒரு துளி கீழே விழ நேரம் பிடித்தது. இனி அழுகை நின்றுவிடும். அழுகை நின்றாலும் இந்தச் சிறுமி அழுங்கு பிடித்தவள். இலேசில் வெளிக்கப்போவதில்லை. இப்போது மழையின் சத்தம் மிகவும் குறைந்துவிட்டிருந்தது. எழுதுவதை நிறுத்திவிட்டு அலுவகத்துக்குத் தயாராகலாம் என்று எழுந்தேன்.

மழை மீண்டும் விம்ம ஆரம்பித்தது.

Comments

  1. தந்தையிடம் திட்டு வாங்கிய மகளைப்போல... நல்ல உதாரணம்

    ReplyDelete
  2. Now a days unfortunately Jaffna does not feel rainy,notonly Jaffna but also us.Jaffna become Singapore because children haven't time for spent with the rain. Yonger generatons have lost more happiness which I spend.

    ReplyDelete
  3. அழகு தமிழ் அண்ணா. அப்படியே வட்டார மழைகளை வட்டமிட்ட உணர்வு. யாழ்ப்பாண மழையை நான் பார்த்ததில்லை. எனக்கு மழையில் குளித்திடவே பிடிக்கும். சிறுவயதில் செய்தவை மனக்கண்ணில் தோன்றின. பதுளை மழைப்பற்றியும் எழுதி இருக்கலாம்...

    ReplyDelete

  4. ////தந்தையிடம் ஏச்சு வாங்கிய மகளைப்போல இடைவெளி விட்டு இரவு முழுதும் விம்மிக்கொண்டிருந்தது//

    விம்மல் ஒரு கூரிய ஆயுதம் என்பது மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும்

    /// எழுதுவதே மிகச்சிறந்த வாசிப்பு என்று தோன்றுகிறது///

    மாற்றம் ஒன்றே மாறாதது..... அப்படியா

    ///யாரடித்து நீ அழுதாய், கண்மணியே கண்ணுறங்கு” என்று மழையைத் தாலாட்டிப் பார்த்தால்தான் என்ன? ///

    ஒரு கதை சொல்லி பார்த்தால் தான் என்ன?


    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...