அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தின் 'தமிழ் ஊக்குவிப்புப் போட்டி 2017' இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கடந்த நான்கைந்து வருடங்களாக இந்தப்போட்டிகளில் நடுவராகப் பணிபுரிந்துவந்துள்ளேன். நூற்றுக்கணக்கில் மாணவர்கள் கலந்துகொள்ளும் போட்டிகள் இவை. அவுஸ்திரேலியாவின் அத்தனை மாநிலங்களிலும் போட்டிகள் நடைபெறும். மாநில அளவில் வெற்றி பெறுபவர்கள் பின்னர் தேசியமட்டப் போட்டிகளிலும் தோற்றுவார்கள். சீரிய ஒழுங்கோடும் மிக நீண்ட தயார்படுத்தல்களோடும் நடத்தப்படும் போட்டி இது.
போட்டித்தினமன்று என் மனம் எப்போதுமே ஒரு கொண்டாட்ட நிலையை அடைவதுண்டு. அந்தச் சூழலை அணு அணுவாக ரசிக்கலாம். அலிஸ் அதிசய உலகத்துக்குள் நுழைந்ததுபோலவே சிறுவர்கள் போட்டி மண்டபத்துக்குள் நுழைவார்கள். பின்னேயே பயங்கரப் பதட்டத்துடன் பெற்றோர்கள். அப்பாமார்கள் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் அம்மாக்கள்தான் கடைசிக்கணத்திலும் அக்கம்பக்கம் இருக்கும் யூகலிப்டஸ் மரங்களுக்கடியில் மீண்டுமொருமுறை குழந்தையோடு ஒத்திகை பார்ப்பார்கள். போட்டியென்று வந்துவிட்டால் நம் குழந்தைகளுக்கு இயல்பாகவே ஒரு ஓர்மம் வந்துவிடுகிறது. அம்மாக்களின் பதட்டம் அவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும். தமக்குள்ளேயே ஒத்திகை பார்த்தபடி இருப்பார்கள். ஒருசில குழந்தைகள் ஒத்திகை பார்ப்பவர்களைச் சீண்டுவார்கள். ஒருசிலதுக்கு அப்போதுதான் வீடு என்பது எவ்வளவு பெரும்பேறு என்று விளங்க ஆரம்பிக்கும். "வீட்டுக்குப் போகவேண்டும்" என்று அழ ஆரம்பிக்கும்.
கவிதை, திருக்குறள், பேச்சு, தொடர்பாடல், பட்டிமன்றம் என்று பலவிதப் போட்டிகள் இடம்பெறுவதுண்டு. பல குழந்தைகளின் ஆற்றல் பிரமிக்கவைக்கும். புள்ளிகள் போடுவதில் மண்டை காய வைப்பார்கள். மூன்று நடுவர்கள் போதாதென்று இப்போது நான்காவது பார்வையாள நடுவரையும் ஒருங்கிணைப்பாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளார்கள் என்றால் யோசித்துப்பாருங்கள். தவிர காணொலிப்பதிவும் எடுத்து தேவையென்றால் போட்டுப்பார்ப்பதுண்டு.
போட்டிகளில் பல சிறுகதைக் கணங்களும் நிகழ்வதுண்டு. சென்றமுறை ஒரு மூன்றுவயதுக் குழந்தை “அம்மா இங்கே வா வா” சொல்லியது. பயங்கர அழுகை. ஆனாலும் ஏதோ ஒரு உந்துதலில் மேடை ஏறிவிட்டது. அழுதுகொண்டே “அம்மா இங்கே வா வா” என்றது. “ஆசை முத்தம் தா தா” வில் அழுகை இரட்டிப்பானது. “இலையில் சோறு போட்டு” என்னும்போது டெசிபல் எகிறியது. அதுவும் நம்மைப்பார்க்காமல் வானத்தைப்பார்த்து இறைஞ்சிக்கொண்டே அழுதது. எங்கே உமாதேவியார் ஞானப்பாலோடு வந்திறங்கிவிடுவாரோ என்று யோசனை வந்தது. எவ்வளவுதான் அழுதாலும் குழந்தை அந்தப்பாடலை முடிக்காமல் மேடையைவிட்டு அசையவேயில்லை.
தொடர்பாடல் போட்டியின்போது ஒரு சிறுவனிடம் அவுஸ்திரேலியாவின் விவசாயம் சம்பந்தமான கட்டுரை ஒன்றைக்கொடுத்து வாசிக்கச்சொன்னோம். இலகுவாக வாசித்தான். கட்டுரையிலிருந்து கேள்வி கேட்டோம். விளங்கிச் சரியாகப் பதில் சொன்னான். சரி, கெட்டிக்காரன், எவ்வளவு உயரம்தான் இவனால் பாயமுடியும் என்று அறியலாம் என முடிவு செய்தேன். அவனையே அந்தக்கட்டுரையிலிருந்து ஒரு கேள்வியை எடுத்து எம்மிடம் கேட்கச்சொன்னேன். எம்மை மடக்கவேண்டும் என்று அவன் முடிவெடுத்திருக்கவேண்டும். யோசித்துவிட்டு “தானியங்கள் என்பதன் வரைவிலக்கணம் என்ன?” என்றான். நான் சொன்னேன். “நல்ல கேள்வி தம்பி, இதற்கான பதிலை என் சக நடுவர் மணிவண்ணன் அண்ணா அவர்கள் கூறுவார்!”.
அதே தொடர்பாடல் போட்டிகளில் சிறுவர்களிடம் சின்ட்ரெல்லா கதையைத் தமிழில் கூறுமாறு கேட்டிருக்கிறோம். தங்கம்மா அப்பாக்குட்டி பற்றிப் பேசிய குழந்தைகள் இருக்கிறார்கள். எப்படிப் போட்டிக்கு வந்தீர்கள் என்றால் மகிழுந்து என்று பதில் சொல்லும் சிறுவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அப்பிள் தமிழ் வார்த்தையா ஆங்கில வார்த்தையா என்று குழம்பிப்போய் "இந்தப்பழத்தை இதற்கு முன்னர் நான் பார்க்கவேயில்லை" என்று அணுகுண்டைத் தூக்கிப்போடுவார்கள்.
இந்தவகைப்போட்டிகளின் மிகப்பெரிய பயன் எதுவென்று யோசிக்கிறேன். ஒரு போட்டிக்கு பாரதி பற்றிய பேச்சைக் குழந்தை தயார்படுத்தவேண்டும் என்று வைப்போம். குறைந்தது ஒருமாதமேனும் அவ்வப்போது அந்தப்பேச்சைக் குழந்தை ஒத்திகை பார்க்கவேண்டும். பெற்றோர் அக்குழந்தையோடு கூடவே உட்கார்ந்திருந்து சொல்லிக்கொடுக்கவேண்டும். இயலுமென்றால் சாட்டோடு சாட்டாக பாரதி பாடல்களின் அர்த்தத்தை. சுவையை. பாரதி வாழ்ந்த வாழ்க்கையை. அதிகம் இல்லாமல் சுவாரசியமாக வாழைப்பழத்தில் ஊசிபோலக் கோடிகாட்டவேண்டும். அப்படிச்செய்கையில் சில குழந்தைகளுக்கு ஆர்வம் தொற்றிக்கொள்ளலாம். இன்னமும் பாரதியைப்பற்றி அறிய முயலலாம். வீட்டில் இருக்கும் அடுத்த குழந்தைக்கு பாடல் தாமாக வாயில் நுழைய ஆரம்பிக்கும். நாள் பூராகப் பாடிக்கொண்டு திரியும். தவிரப் பெற்றோர்களுக்கும் அன்றாட அல்லல்களைப் புறந்தள்ளி இவ்வகை தேடல்களுக்குள் நுழைய இதுவொரு பெரும் சந்தர்ப்பம். திருக்குறள் மனனப்போட்டி நடத்துவதற்கான காரணமும் இதுதான். திருக்குறளைப் பாடமாக்கி குழந்தைக்கு என்ன பயன் என்று கேட்பவர்கள் உண்டு. பயன் பாடமாக்குவதில் இல்லை. பாடமாக்கும் தருணங்களில் உண்டு. ஒரு குறளைப் பிள்ளை பாடமாக்கும்போது நல்ல பெற்றோர் தாமும் சேர்ந்து குறளின் அர்த்தத்தை அறிய முயல்வர். அதனோடு அண்டிய குறள்களைத் தேடிப்பார்ப்பர். குழந்தைக்கு அப்பொருள் சொல்வர். கூடவே ஒரு நீதிக்கதை. ஒரு ஊரிலே ஒரு ராஜா இருந்தார் என்று ஆரம்பிக்கும் அம்புலிமாமாக் கதை. இப்படி ஒரு குறளின் வாலைப்பிடித்துத் தொங்கினால் அனைவருமே இந்திரலோகத்துக்குப் போகலாம். பத்துக்குறள்கள் என்றால்? இந்திரலோகம் இங்கே கொண்டுவரப்படும்.
மொழியும், மொழி சுமந்துவரும் பலநூற்றாண்டுப் பொக்கிஷங்கள் பற்றிய தேடலும் இப்படியான சந்தர்ப்பங்களில்தான் நம்முள் ஊற்றெடுக்கின்றன. ஆக இறுதிப்போட்டியின் தினம் என்பது சமுத்திரத்தின்மேல் தோன்றும் சிறு முகடுதான். பெரும் பனிமலை உள்ளே மிதந்துகொண்டிருக்கிறது. அதுதான் இப்போட்டிகள் உருவாக்கிக்கொடுக்கின்ற சந்தர்ப்பங்கள் என்று நான் நினைக்கிறேன். அதனைத்தான் பெற்றோர்களும் பயன்படுத்தவேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன்.
குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள்.
மொழியும், மொழி சுமந்துவரும் பலநூற்றாண்டுப் பொக்கிஷங்கள் பற்றிய தேடலும் இப்படியான சந்தர்ப்பங்களில்தான் நம்முள் ஊற்றெடுக்கின்றன. ஆக இறுதிப்போட்டியின் தினம் என்பது சமுத்திரத்தின்மேல் தோன்றும் சிறு முகடுதான். பெரும் பனிமலை உள்ளே மிதந்துகொண்டிருக்கிறது. அதுதான் இப்போட்டிகள் உருவாக்கிக்கொடுக்கின்ற சந்தர்ப்பங்கள் என்று நான் நினைக்கிறேன். அதனைத்தான் பெற்றோர்களும் பயன்படுத்தவேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன்.
குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள்.
போட்டிகள் பற்றிய மேலதிக தகவல்களை அமைப்பின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
http://www.tamilcompetition.org.au
http://www.tamilcompetition.org.au
நல்ல பதிவு.ஒரு புதுக்குறள்.
ReplyDeleteகாலத்தமையக் கருத்தாய்ந்து அஃதளித்தல் ஞாலப்பதிவினுயர்.
உரை:
காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடியதான கருத்துக்களைக் கண்டு பிடித்து அதை (சமூக வலைத்தளம் முதலானவற்றில்) பதிவேற்றல் மிகவும் பயன்தரும் நல்ல சிறந்த பதிவாகக் கொள்ளப்படும்.
சில சமயங்களில் இந்த பிள்ளைகள் திருக்குறளை புரிந்து தான் மனப்பாடம் செய்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்று தான் பதில் வருகிறது.போட்டி வரும் போது மட்டும் மனப்பாடம் செய்து விட்டு மறந்து விடுகிறார்கள். வகுப்பிலே ஒவ்வொரு பகுதியாக கதையுடன் சொல்வது மனதில் பதியும் என்பது தெரிந்தாலும் நேரம் இன்மை காரணத்தால் பட்டும் படாமல் திருக்குறள் நகர்கிறது.
ReplyDelete