Skip to main content

வட்டக்கச்சி மகா வித்தியாலயம்




காலை எழுந்தபோது மின்னஞ்சலில் ஒரு மகிழ்ச்சிதரும் தகவல் வந்திருந்தது. 

“வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வைரவிழா மலருக்காக க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அதிகூடிய பெறுபேறுகளைப் பெற்றவர்களது புகைப்படங்கள் தேவைப்படுவதால் வெகுவிரைவில் அவற்றைத் தந்துதவி ஆவண செய்யவும்”

லிஸ்டிலே என்னுடைய பெயரும் இருந்தது. நான் ஓ.எல் எடுத்தது தொண்ணூற்றாறாம் ஆண்டு. பரீட்சை இறுதித்தினத்திலிருந்து இன்றைக்கு இருபத்தொரு ஆண்டுகள் கழிந்து எனக்கும் வட்டக்கச்சி மகாவித்தியாலயத்துக்குமிடையில் ஏற்பட்டிருக்கும் முதல் தொடர்பு இது. பதின்மக்காதலிகளில் ஒருத்தி, ‘எப்படி இருக்கிறீங்கள் குமரன்?’ என்று மெசேஜ் அனுப்புவதுபோல. மகா வித்தியாலயத்தில் படித்த காலம் என்பது மிகக்கொஞ்சம்தான். ஆனாலும் அவற்றை மீட்டிப்பார்க்கையில் கால மீளிருவாக்கமும் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. எத்தனைதடவை எழுதினாலும் காரியமில்லை.

சிவிக் சென்டரில் விக்கிமாமாவின் வீட்டிலிருந்து மகாவித்தியாலயம் கூப்பிடு தூரத்தில்தான். நான் பதினொராம் வகுப்பில் போய் இணைந்தேன். இடம்பெயர்ந்த மாணவர்கள் அத்தனைபேரும் அங்குவந்து படித்துக்கொண்டிருந்தார்கள். ஆசிரியர்களில் பலர்கூட இடம்பெயர்ந்தவர்கள்தாம். அந்நாட்களில் சீருடை, சப்பாத்து எல்லாம் அணியவேண்டும் என்ற கட்டாயம் இருக்கவில்லை. அநேகமாக பாட்டா. கொஞ்சம் காசுள்ளவர்கள் சோலாப்புரி. ஆண்கள், பெண்கள் எல்லோரும் ஒரே வகுப்பில் படித்தோம். வருகை இடாப்பு என்று ஒன்று பெயருக்கு இருந்தது. ஆனால் தினமும் புதிதாகப் பலமுகங்கள் வந்துசேர, சில நாட்கள் பழகிய முகங்கள் காணாமல்போகும். ஆசிரியர்களும் அப்படித்தான். அடிக்கடி மாறிக்கொண்டிருப்பார்கள்.

வட்டக்கச்சிப் பண்ணையில் கிபிர் அடிக்கும் நாள்கள், ‘ஓயாத அலைகள்’, ‘கிளிநொச்சி இராணுவ நடவடிக்கை’ போன்ற சண்டைக்காலங்களைத் தவிர்த்து ஏனைய நாட்களில் பாடசாலை நடைபெறும். அந்நாட்களில் பாடசாலைக்குப் போவது என்பது மிகுந்த உற்சாகத்தைக்கொடுக்கும் செயற்பாடாக இருந்தது. அடுத்தநாள் பாடசாலை இயங்குமா, இல்லையா என்று தெரியாத நிலையிலும்கூட ஆசிரியர்கள் மிகுந்த சிரத்தை எடுத்துப் படிப்பித்தார்கள். யுத்தச் செய்திகளும், உலர் உணவு அட்டை, நிவாரணம் பற்றியக் கதைகளும், கொட்டில் போடுதல், கிடுகுவிலை, பொருள்தட்டுப்பாடு பற்றிய செய்திகளுமே நாள்களை ஆக்கிரமித்து வைத்திருந்த காலங்களில் கற்பதும் கற்பிப்பதும் அனைவருக்கும் ஒரு வடிகாலாக இருந்திருக்கவேண்டும். எனக்கோ, வகுப்பில் முதன்மை மாணவனாக இருந்ததால் ஆசிரியர்களின் கவனிப்பு தனியாக இருந்தது. கிட்டத்தட்ட முதல்மரியாதை ராதாவைச் சந்திக்கப்போகும் சிவாஜியின் மனநிலை அது. இன்னொருகாரணம் நிஜத்திலும் ஒரு ராதா வகுப்புக்கு வந்துகொண்டிருந்தாள். அந்த ராதாவும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவள். இடம்பெயர்ந்து ஹட்சன்ரோட்டில் சொந்தக்காரர் வீட்டில் வசித்துவந்தாள். யாழ்ப்பாணத்தில் என்னைக் காணும்போதெல்லாம் ராதா முன்வீட்டு ஜிம்மி உறுமுவதுபோல நறு நறு என்பாள். ஆனால் வட்டக்கச்சியிலோ கூழான் பிலாக்காயைக் கண்ட குட்டிநாய்போல இளித்துவைப்பாள். வாழ்க்கையில் முதன்முதலாக ராதா நேரில்வந்து என்னோடு பேசியதும் அந்தப்பாடசாலையில்தான். ஐந்தொகை, இலாபநட்டக்கணக்குவரை இணைந்து படித்திருந்தோம். சிலபஸ் முடிவதற்குள் ஆர்மி கிளிநொச்சி வந்துவிடவும் ராதா ஒலுமடுப்பக்கம் போய்விட்டாள். இப்போது ராதா எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை. தெரியவும் வேண்டாம். ராதா என்றால், பெரிய வெள்ளைப்பொட்டு போன்ற முகத்தில் சின்னதாக ஒரு கறுப்புப்பொட்டு, மேலே தீற்றலாய்த் திருநீறு, இரட்டைப்பின்னல், மிக நீட்டாக அயர்ன்பண்ணப்பட்ட பாடசாலைச் சீருடை, சீருடை முடியும் இடத்தில் ஆரம்பிக்கும் வெள்ளை சொக்ஸ். டெனிஸ் சப்பாத்து, லுமாலா லேடிஸ் சைக்கிள், மிக மிக மெதுவாக சைக்கிள் உழக்கியபடி, தூரத்தில் என்னைக்கண்டதுமே சிரிப்போமா விடுவோமா என்று யோசிக்க ஆரம்பித்து, நெருங்கிய பிற்பாடு இரண்டுக்கும் நடுவாய் வெங்கலாந்தித்தனமாக ஒரு சிரிப்பு உதிர்த்து, “எப்பிடிப் படிப்பு போகுது குமரன்?” என்று கேட்கவேண்டும். அது அழகு. மூன்றாவது பிள்ளையின் ஐந்தாவது பேர்த்டே படத்தைப்போட்டு “ஹப்பி பேர்த்டே மை கியூட்டி பாப்பா” என்று மரண மொக்கைபோடுபவளை எல்லாம் ராதா என்று ஏற்றுக்கொள்ளமுடியாது. வேண்டாம்.

மகாவித்தியாலத்துக்கு அருகே மிகப்பெரிய கிளிமூக்கு மாமரம் இருந்தது. கிளிமூக்கன்கள் பழுத்தாலும் சுவை. காய் என்றாலும் சுவை. சும்மாவும் சாப்பிடலாம். உப்போடும் சாப்பிடலாம். உப்போடு மிளகாய்த்தூள் சேர்த்தும் சாப்பிடலாம். உப்பு, மிளகாய்த்தூளோடு, சீனி கரைத்தும் சாப்பிடலாம். அந்த மாங்காய்க்கு அப்படி ஒரு சிறப்பு. பாடசாலை முடிந்ததும் அந்த மாமரத்துக்கு கல்லெறிவதே நம்முடைய முக்கிய வேலையாக இருந்தது. நான் கல்லெறிந்து எந்த மாங்காயும் விழுந்ததாகச் சரித்திரமில்லை. அவ்வளவு ஏன், மாங்காய்க்கு கிட்டவே கல்லுப் போவதில்லை. ஆனால் சில மாணவர்கள் சொல்லி அடித்து மாங்காயை விழுத்துவார்கள். அவர்களுடைய யுக்தி பின்னர்தான் புரிந்தது. அவர்கள் எப்போதுமே ஒரே ஒரு மாங்காயையே குறிவைத்து அடிப்பார்கள். அது விழும்வரைக்கும் வேறு மாங்காய்மீது அவர்கள் கண் போகாது. நான் அப்படியில்லை. ஒரு மாங்காய்க்கு எறிந்துபார்ப்பேன். படவில்லை என்றால் அடுத்த மாங்காய். சமயத்தில் எறியாமலேயே இந்தமாங்காய் நமக்கு விழாது என்று நகர்ந்துபோயிருக்கிறேன். 

ஓ.எல் பரீட்சை எடுக்கும் அந்த ஒருமாதமும் பதட்டமான காலப்பகுதி. பரீட்சைச் சமயம் ஒரு அடிபாடு நடந்தாலும் பரீட்சை தள்ளிவைக்கப்படும் அபாயம் இருந்தது. ஆனாலும் எந்த இடையூறும் இல்லாமல் பரீட்சை நடந்து முடிந்தது. பரீட்சை முடிந்ததும் நாம் மீண்டும் ஓமந்தை, நெலுக்குளம் அகதிமுகாம், கோழிக்கூடு வழியாக யாழ்ப்பாணம் திரும்பிவிட்டோம். என்னுடைய பெறுபேறுகளைப் பின்னர் தபாலில் அனுப்பியிருந்தார்கள். அதிபர் செல்வராஜா கையெழுத்து வைத்திருந்தார். பிசிக்ஸ் குமரன் மாஸ்டரிடம் ரிசல்டைப் போய்ச்சொன்னபோது அவரின் பதில்.

“இப்பெல்லாம் நிண்டவன் இருந்தவன்கூட செவன் டி எடுக்கிறான்.”

இந்த இருபது வருடங்களில் எப்போது யாழ்ப்பாணம் போனாலும் வட்டக்கச்சி போகாமல் திரும்புவதில்லை. வட்டக்கச்சிக்குப் போகும்போது மகாவித்தியாலயத்தை ஒரு சுற்று சுற்றாமல் திரும்புவதில்லை. யார்? என்ன? இவர் படிப்பாரா மாட்டாரா? திறமை இருக்கா? இல்லையா? என எதையுமே விசாரிக்காமல், வடிகட்டாமல், இடம்பெயர்ந்து வந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் அள்ளி அரவணைத்து, பரீட்சை எழுதவும் சந்தர்ப்பம் கொடுத்த பாடசாலை. கட்டணமாக ஐந்து சதம்கூட வாங்கவில்லை. 

படித்த பாடசாலையின் புகழையும் பெருமையையும் நான் சட்டைபோல அணிந்துகொள்வதை விரும்புவதில்லை. நாம் பாடசாலைக்குப் புகழ் தேடிக்கொடுக்கவேண்டுமே ஒழிய பாடசாலையின் புகழில் நாம் குளிர்காயக்கூடாது என்பது என்னுடைய எண்ணம். அதனாலேயே நான் படித்த பாடசாலைகளைப்பற்றிப் பெரிதாகக் கூவிப்பாடுவதில்லை.ஆனால் வட்டக்கச்சி மகாவித்தியாலயம் எனக்குச் செய்தது காலத்தினால் செய்த நன்றி. 

அது ஞாலத்தின் மாணப்பெரிது எனக்கு.

நன்றி.

Comments

  1. எல்லோருக்கும் பதின்ம வயதில் ஒரு ராதா வந்து போயிருக்கின்றாள் .
    இவ்வளவு இடர்பாடுகளிலும் கல்வியை தொடர்ந்தமை பாரட்டப்பட வேண்டிய ஒன்று.

    ReplyDelete
  2. வட்டக்கச்சி மகாவித்யாலயத்தை மறக்கவே முடியாது . கிளிநொச்சியில் இருந்து சில மாணவர்கள் கிளாலி ஊடாக சயின்ஸ் ஹாலுக்கு படிக்க வரும் போது யாழ் மாணவர்கள் பார்த்த பார்வைக்கும் ,இடம்பெயர்ந்து நாம் சென்ற போது அவர்கள் எங்களை அரவணைத்த பார்வைக்கும் ..... அது அந்த மண்ணில் ஊறியது போல. வேறு ஒரு பதிவில் நிறைய சொல்லிவிட்டேன்

    //மூன்றாவது பிள்ளையின் ஐந்தாவது பேர்த்டே படத்தைப்போட்டு “ஹப்பி பேர்த்டே மை கியூட்டி பாப்பா” என்று மரண மொக்கைபோடுபவளை எல்லாம் ராதா என்று ஏற்றுக்கொள்ளமுடியாது. வேண்டாம்.//
    ஆனைக்கு ஒரு காலம் வந்தால் .......

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...